மறுரூபமாக்கப்பட்ட வாழ்க்கை—பகுதி 1 நம் சரீரத்தை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தல்

Posted byTamil Editor April 2, 2024 Comments:0

(English version: “The Transformed Life – Offering Our Bodies To Christ”)

உங்கள் அன்றாட வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவைப் போல இருக்க நீங்கள் விரும்பினால், ரோமர் 12 ஆம் அதிகாரத்தின் வழியாக ஒரு பயணத்திற்கு உங்களை அழைக்கிறேன். இந்த அதிகாரம் வேதத்தின் மிக முக்கியமான அதிகாரங்களில் ஒன்றாகும், ஏனெனில் இது கிறிஸ்துவால் மறுரூபமாக்கப்பட்ட வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

எனவே, “மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு” என்ற தொடரில் ரோமர் 12:1 ஐ அடிப்படையாகக் கொண்டு “கிறிஸ்துவுக்கு நமது சரீரத்தை அர்ப்பணித்தல்” என்ற தலைப்பில்  இந்த பகுதி # 1  தொகுக்கப்பட்டுள்ளது.

[குறிப்பு: இந்த மறுரூபத்தின் பயணத்தில் நாம் செல்லும்போது ஒவ்வொரு தொகுப்பும் குறிப்பிடும் வசனங்களை மனப்பாடம் செய்வதையும், தியானிப்பதையும், ஜெபிப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்]

***********

ஒரு விசுவாசியாகிய பெண், ஒரு ஊழியரிடம், “அர்ப்பணிப்பு என்றால் என்ன  என்பதை பற்றிய உங்கள் கருத்து என்ன? தயவுசெய்து ஒரு வார்த்தையில் சொல்லுவீர்களா,” என்று கேட்டாள்.  அதற்கு ஒரு வெற்றுத் தாளை நீட்டிய அந்த ஊழியர், “இந்த வெற்றுத் தாளின் அடியில் உங்கள் பெயரைக் கையொப்பமிட்டு, தேவன் விரும்பியபடி அதை நிரப்பட்டும்” என்று பதிலளித்தார். சரியாக கூறுவதென்றால் அதுதான் அர்ப்பணிப்பு! எந்தக் கேள்வியும் கேட்காமல் நம் வாழ்க்கையை அவரிடம் ஒப்படைப்பது! எல்லா நேரங்களிலும் தேவனுக்கும், அவருடைய நோக்கங்களுக்கும் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டிருத்தல்! நிபந்தனையற்ற சரணாகதி வாழ்க்கை!

பழைய ஏற்பாட்டு காலத்தில் தேவன் தம்முடைய மக்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மிருக பலிகளைச் செலுத்தும்படி கட்டளையிட்டார். இருப்பினும், இயேசுகிறிஸ்து சிலுவையில் ஒரேதரம் பலியிடப்பட்டப் பிறகு, அவர் இனியும் மிருக பலிகளைக் கோரவில்லை, ஆனால் தம்முடைய மக்கள் தங்கள் சரீரத்தையும் மனதையும்- குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமல்ல-எல்லா நேரங்களிலும்-ஜீவனுள்ள பலிகளாக அளிக்க வேண்டும் என்று கோருகிறார். ரோமர் 12:1-2-ன் கருத்து இதுதான்.

ரோமர் 12:1-2 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.”

247 மணிநேரமும் ஒரு ஜீவனுள்ள தியாக பலியாக இருப்பதன் மூலம் முழு அர்ப்பணத்திற்கும், தேவனிடம் முழுமையாக சரணடைவதற்கும் நாம் அழைக்கப்படுகிறோம்! மேலும் இது 2 விஷயங்களைச் செய்வதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது:

(1) நம் சரீரத்தை தேவனுக்கு ஒப்புக்கொடுப்பதன் மூலம் [வசனம் 1]

(2) நம் மனதை தேவனுக்கு ஒப்புக்கொடுப்பதன் மூலம் [வசனம் 2]

ரோமர் 12:1-ன் அடிப்படையில் நம் சரீரத்தை தேவனுக்கு அர்ப்பணிப்பது பற்றிய முதல் குறிப்பை  மட்டும் இந்த தொகுப்பில் பார்ப்போம்.

முதலாவதாக, வசனம் 1-ன் முதல் பகுதியில், நம் சரீரத்தை ஜீவனுள்ள பலியாகச் செலுத்தும்படி பவுல் நம்மை அழைக்கும் போது என்ன ஒரு உந்துதலான வார்த்தையை பயன்படுத்துகிறார் என்பதைக் கவனியுங்கள்: “அப்படியிருக்க, சகோதரரே, சகோதரிகளே நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” தேவனுடைய இரக்கம்அதுதான் நோக்கம்!

“அப்படியிருக்க” என்ற வார்த்தையானது முந்தைய 11 அதிகாரங்களுடன் தொடர்புடையது, அங்கு பவுல் நமது பாவ நிலையையும், நம்மை எதிர்கொள்ளும் நியாயத்தீர்ப்பையும், தேவன் எவ்வாறு கிறிஸ்துவின் மூலம் தமது “இரக்கத்தில்” இரட்சிப்பை வழங்கினார் என்பதையும் எடுத்துக்காட்டினார். அதுமட்டுமல்லாமல், நம்மை சுவிகாரப் புத்திரராக்கி, எதிர்கால மகிமைக்காக நம்மைப் பாதுகாக்கும் பரிசுத்த ஆவியானவரை நமக்குக் கொடுப்பதில் தேவனுடைய இரக்கத்தையும் பவுல் விவரித்தார். இவைகள் கர்த்தருடைய இரக்கத்தின் விளைவாக கிடைத்த அளப்பரிய ஆசீர்வாதங்கள்!

இங்குதான் வேதாகம கிறிஸ்தவம் மற்ற மதங்களிலிருந்து வேறுபடுகிறது. உலகில் உள்ள மதங்கள் இரக்கத்தைப் பெற தங்கள் கடவுள்களைப் பிரியப்படுத்த முயற்சி செய்கின்றன. அதற்கு மாறாக, நாம் இரக்கத்தைப் பெற்றிருப்பதால் தேவனைப் பிரியப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் இரக்கத்திற்காக வேலை செய்கிறார்கள்; நாம் இரக்கத்திலிருந்து வேலை செய்கிறோம்!

தேவனுடைய இரக்கத்தால் ஏற்கனவே நம் இருதயங்களில் பயன்படுத்தப்பட்ட சிலுவையின் பலி, தேவனுக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ அழைக்கிறது. அதனால்தான், பவுல் விசுவாசிகளை ஊக்குவிப்பதற்காக இரக்கத்தை உந்துதலாகப் பயன்படுத்துகிறார்-அவர் கட்டளையிடவில்லை என்பதைக் கவனியுங்கள்-ஆனால் “சகோதரரே, சகோதரிகளே, நான் உங்களை வற்புறுத்துகிறேன்” என்று கூறுகிறார். “ஊக்குவித்தல்” என்ற வார்த்தையின் அர்த்தம் ஊக்குவிப்பதற்காக அல்லது உபதேசிக்க உடன் வருவது என்பதாகும். விசுவாசிகளாகிய—ஆண்கள் [“சகோதரர்கள்”] மற்றும் பெண்கள் [“சகோதரிகள்”] இருவரையும் அவர் வலியுறுத்துகிறார், ஏனெனில் இது அனைவருக்கும் பொருந்தும்: “உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுங்கள்.” 

சரீரம் தீயது, ஆவி மட்டுமே நல்லது என்ற கருத்துக்கு மாறாக, சரீரத்தை நன்மைக்கும் தீமைக்கும் பயன்படுத்தலாம் என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது. நாம் சரீரத்தை ஒருபோதும் நன்மைக்காகப் பயன்படுத்த முடியாது என்றால், அதை ஒரு ஜீவனுள்ள பலியாக, பரிசுத்தமான மற்றும் தேவனுக்குப் பிரியமானதாக ஒப்புவிப்பதற்கான இந்த அழைப்பு அர்த்தமற்ற கட்டளையாக இருக்கும்!

எனவே, அழைப்பு தெளிவாக உள்ளது. நம் சரீரத்தின் ஒவ்வொரு உறுப்பும்: கண்கள், காதுகள், நாக்கு, கைகள், கால்கள் ஆகியவை தொடர்ந்து தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும். “ஜீவனுள்ள பலி” என்ற வார்த்தையின் அர்த்தம் அதுதான். நாம் உயிருடன் இருக்கும் வரை, நம் சரீரத்தைப் பரிசுத்தமான முறையில் அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். அத்தகைய பலியால் மட்டுமே தேவன் மகிழ்ச்சியடைகிறார்!

பழைய ஏற்பாட்டில் கூட, மல்கியா 1:8 ல் காணப்படுவது போல், மக்கள் குறைபாடுள்ள விலங்குகளை பலியாகக் கொண்டுவந்தபோது தேவன் மகிழ்ச்சியடையவில்லை, “நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக்கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல, நீங்கள் காலூனமானதையும், நசல் பிடித்ததையும் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே; அதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார்.” பழைய ஏற்பாட்டில் அப்படி இருந்திருந்தால், புதிய உடன்படிக்கையின் கீழ் தேவன் தமது தரத்தை குறிப்பாக அவருடைய குமாரன் சிலுவையில் தம்மைக் கொடுக்க வந்த பிறகு குறைத்துக்கொள்வாரா? நிச்சயமாக இல்லை! அதனால்தான் நாம் நம்முடைய சரீரத்தை  “தேவனுக்கு பிரியமானதாக” வழங்க வேண்டும் என்று பவுல் கூறுகிறார்.

“இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை” என்று பவுல் கூறுகிறார். அவர் சொல்வது எளிமையானது: தேவனுடைய இரக்கத்தின் வெளிச்சத்தில், நம் சரீரங்களை அர்ப்பணிப்பது தர்க்கரீதியாகவும், உண்மையாகவும், சரியான வழியிலும், அவரை ஆராதிப்பதில் நாம் தேவனுக்கு பதிலளிப்பதாகும். எனவே, பவுலின் கூற்றுப்படி, ஆராதனை என்பது ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு சில மணிநேரங்களுக்கு மட்டும் அல்ல. மாறாக, அது நம் சரீரத்தின் ஒவ்வொரு பாகத்தையும் அவருக்கு 247 மணிநேரமும் அளிப்பதாகும்! இதுதான் உண்மையான ஆராதனை!

நாம் எங்கிருந்தாலும், நம் சரீரத்தின் ஒவ்வொரு பாகத்தையும் தேவனுக்கு அடிபணியச் செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள். உதாரணமாக, ஒருவர் அதிக நேரம் செலவிடும் பணியிடம் ஆராதிக்கும்  தலமாக மாறுகிறது. இது எப்படி சாத்தியம்? எபேசியர் 6:7-8 இவ்வாறு  கூறுகிறது, அடிமையானவனானாலும், சுயாதீனமுள்ளவனானாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவானென்று அறிந்து, மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள்.”  நம்முடைய தலைமை உரிமையாளர் இயேசு கிறிஸ்து என்பதை நாம் உணரும்போது, மனித உரிமையாளர்கள் நம்மை அடையாளம் கண்டுகொள்ளாதபோதும், நம்மால் முடிந்ததைச் செய்ய முயற்சிப்போம், நாம் கிறிஸ்துவுக்கு முன்பாக நிற்கும்போது நமக்குத் தகுந்த வெகுமதி அளிப்பார், அவர் எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கிறார், அவருக்கு நம்முடைய சிறந்ததை கொடுப்பதற்கு நாம் எப்போதும் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். பணியிடத்தில் அவருக்கு நாம் செய்யும் ஆராதனை அதுதான்!

1 கொரிந்தியர் 10:31 ம் வசனம், நம் வாழ்க்கை முழுவதும் ஒரு ஆராதனைச் செயல் என்பதை மிகுதியாக தெளிவுபடுத்துகிறது: “ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.” இதன் பொருள், நமது சரீரத்தின் ஒவ்வொரு உறுப்பும் எல்லா நேரங்களிலும் தேவனைப் பிரியப்படுத்தும் விதத்தில் செயல்பட வேண்டும் என்பதாகும். நம் சரீரத்தின் உறுப்புகளை பாவ இன்பங்களில் ஈடுபடுத்திக் கொண்டே, நமது ஆராதனையில் தேவன் மகிழ்ச்சியடைகிறார் என்று கருதவும் முடியாது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,  கீழ் காண்பவைகளை செய்துக்கொண்டே நாம் உண்மையான மற்றும் சரியான ஆராதனையைச் செய்வதாகக் கூற முடியாது:

  • பாவமான விஷயங்களைப் பார்க்க நம் கண்களைப் பயன்படுத்துதல் [அது சரீரம் அல்லது பொருளாக இருந்தலும்]
  • வதந்திகள், பொய்கள், கிண்டல்கள் அல்லது வெளிப்படையாக புண்படுத்தும் பேச்சுக்கு நம் நாக்கைப் பயன்படுத்துதல்.
  • பாவமான பேச்சைக் கேட்க நம் காதுகளைப் பயன்படுத்துதல் [உதாரணம், வதந்திகள்]
  • நம் கைகளைப் பயன்படுத்தி: பாவ வழிகளில் பணம் சம்பாதித்தல்; மற்றவர்களை உடல் ரீதியாக
    காயப்படுத்துதல்.
  • எழுதப்பட்ட வார்த்தைகள் மூலம் மற்றவர்களைக் காயப்படுத்துதல் [மின்னஞ்சல், சமூக ஊடகங்கள்
    உட்பட]
  • பாலியல் பாவங்களில் ஈடுபடுதல்.
  • தடை செய்யப்பட்ட இடங்களுக்குச் செல்ல நமது கால்களைப்    பயன்படுத்துதல்.
  • பெருந்தீனிக்கு அடிபணிய நம் வயிற்றைப் பயன்படுத்துதல்
  • தீய எண்ணங்களுக்கு நம் மனதைப் பயன்படுத்துதல்

அசுத்தமான சரீரத்திலிருந்து வரும் ஆராதனை ஏற்றுக்கொள்ள முடியாத ஆராதனை. மல்கியா 1:8 ஆம் வசனம் நினைவிருக்கிறதா? தேவனைப் பிரியப்படுத்தும் ஆராதனை என்பது பரிசுத்தமான சரீரங்களிலிருந்து வரும் ஆராதனை. நமது சரீரத்தின் ஒவ்வொரு உறுப்பும் தேவனை மதிக்கவும் மற்றவர்களை ஆசீர்வதிக்கவும் கொடுக்கப்பட்டுள்ளது. நமது உடலின் பெரும்பான்மையான உறுப்புகளை பரிசுத்தத்திற்காகப் பயன்படுத்துவதன் மூலம், சரீரத்தின் ஒரு பாகம் இங்கும் இங்கும் பாவம் செய்தாலும் பரவாயில்லை, என் நாக்கு மட்டுமே பாவம் செய்கிறது, அல்லது என் கண்கள் மட்டுமே பாவம் செய்கிறது, அதுவும் சில நிமிடங்களுக்கு மட்டும்தான்” என்ற எண்ணமே இதிலுள்ள ஆபத்து. இத்தகைய சிந்தனை மிகவும் முட்டாள்தனமானது, நமது முழு உடலையும்-சில பாகங்களை மட்டும் அல்ல-எல்லா நேரங்களிலும் ஜீவ பலியாக ஒப்புவிக்க வேண்டும் என்பதே கட்டளை!

ஆம், எல்லா நேரங்களிலும் நம்மை முழுவதுமாக தேவனுக்கு அர்ப்பணிப்பது விலைக்கிரயமிக்கது—“பலி” என்ற வார்த்தை ஒரு விலைக்கிரயத்தைக் குறிக்கிறது! எனவே, சில தீவிரமான கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொள்ளலாம்: தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதற்கு விலைக்கிரயம் கொடுக்க வேண்டியிருக்கையில் நம்முடைய வழக்கமான பதில் என்ன? நாம் முன்னோக்கி செல்கிறோமா அல்லது பின்வாங்குகிறோமா? நாம் பின்வாங்க முனைந்தால், இந்த விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்: (அ) நம்முடைய பாவங்களுக்காக இயேசுகிறிஸ்து செலுத்திய விலைக்கிரயத்தின் வெளிச்சத்தில் நாம் செலுத்த வேண்டிய விலைக்கிரயத்தின் காரணமாக நம்மை முழுவதுமாக அவருக்கு ஒப்புக்கொடுப்பதில் இருந்து பின்வாங்குவது சரியா? (ஆ) அவருடைய தியாகச் செயல், அவரை முழுவதுமாக பின்பற்றி செல்ல நம்மைத் தூண்ட வேண்டாமா?

2 கொரிந்தியர் 5:15-ல் உள்ள இந்த வார்த்தைகளை தொடர்ந்து சிந்திப்போம், “பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.”  கிறிஸ்துவின் இரத்தத்தால் கொள்ளப்பட்டவர்கள் என்ற முறையில், சிலுவையில் தம்மையே முழுவதுமாக கொடுத்து நம்மை வாங்கியவருக்காக நாம் வாழ்வதே பொருத்தமானது. நாம் அவருடையவர்கள், நம்முடையவர்கள் அல்ல. அவருடைய இரக்கத்தை நாம் ருசிப்பார்த்தோம். மேலும் அவருடைய இரக்கங்கள் நம்மை தினசரி ஜீவனுள்ள பலிகளாகவும், பரிசுத்தமாகவும், தேவனுக்குப் பிரியமாகவும் இருக்கத் தூண்ட வேண்டும். சோதனையை முறியடிப்பதில் நாம் பெலனற்றவர்களாக உணரும்போது, சிலுவையிலிருந்து பாயும் அவருடைய இரக்கங்களைப் பற்றி சிந்திப்போம். சோதனைக்கு “இல்லை” என்று சொல்லவும், நம் சரீரத்தையும், மனதையும் ஒப்புக்கொடுப்பதன் மூலம் ஜீவபலி என்ற அழைப்பிற்கு “ஆம்” என்று சொல்லவும் அது நமக்கு உதவும்.

ஒரு போதகர் நம் “எல்லாவற்றையும்” கொடுக்க வேண்டியதன் அவசியத்திற்கு மிகவும் குறிப்பிடத்தக்க விளக்கத்தை இவ்வாறு அளித்தார்:

“உங்களிடம் ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள், யாரோ ஒருவர் உங்களை அணுகி உங்கள் பண்ணையை வாங்க முன்வந்தார். மையத்தில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தைத் தவிர, வழி உரிமைக்கான ஏற்பாடுகளுடன் நிலத்தை விற்க ஒப்புக்கொள்கிறீர்கள்.” அதை வாங்கும் அந்த மனிதன், “அந்த ஆயிரம் ஏக்கருக்கு நடுவில் உள்ள அந்த ஒரு தனியான இடத்தை நீங்கள் அணுக சட்டம் அனுமதிக்குமா? அந்த சிறிய நிலத்திற்குச் செல்ல அந்த பண்ணையின் எஞ்சிய பகுதி முழுவதும் நீங்கள் சாலையை அமைக்க வேண்டியிருக்கும்” என்று கூறினார்.

“நூறு சதவீதத்திற்கும் குறைவாக தேவனிடம் சரணடையும் விசுவாசிகளும் அப்படித்தான். சரணடையாத பகுதியை அடைவதற்கு அந்த மனிதனின் வாழ்க்கையில் பிசாசு ஊடுருவிச் செல்வான் என்பதையும், அதன் விளைவாக, அவனது சாட்சியும் ஊழியமும் சிதைந்து, மற்றவர்கள் மீது சிறிதளவும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதையும் நீங்கள் உறுதியாக நம்பலாம்.”

பின்னர் அவர் தொடர்ந்து கூறுகையில்,

விசுவாசியே உங்கள் சரீரம் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு இருக்கிறதா? நீங்கள் எப்போதாவது, மனமுவந்து திட்டவட்டமான செயலின் மூலம், அவருடைய ஆளுகை, அவரது பயன்பாடு மற்றும் அவரது மகிமைக்காக அதை அவருக்கு கொடுத்துள்ளீர்களா? இல்லையென்றால், நீங்கள் ஏன் இப்போது செய்யக்கூடாது? “ஆண்டவரே, நான் ஏற்கனவே என் இருதயத்தை உமக்குக் கொடுத்துள்ளேன், ஆனால் இப்போது, இதோ, என் சரீரத்தைத் தருகிறேன்! அதைச் சுத்தமாகவும், தூய்மையாகவும், மாசில்லாமல் வைத்திருக்கவும் எனக்கு உதவி செய்யும். உமது மகிமைக்காக, உமக்குத் தகுந்தவாறு என்னைப் பயன்படுத்தும். நான் உங்கள் கட்டளைக்கு காத்திருக்கிறேன்!”

காலம் இன்னமும் சென்றுவிடவில்லை. நீங்கள் இப்போது கூட ஆரம்பிக்கலாம். நித்திய தண்டனை கிடையாது, தேவனிடம் முழுமையாக சரணடைந்தால் மட்டுமே நித்திய ஆசீர்வாதம் கிட்டும்! நாம் முன்னர் படித்தது போன்று அந்த வெற்று பேப்பரில் கையெழுத்து போட்டு தேவனிடம் கொடுப்போம். அதை அவர் தம் விருப்பப்படி நிரப்பட்டும்! அதுதான் உண்மையான அர்ப்பணம். தம் இரக்கத்தால், நமக்காகப் பலவற்றைச் செய்தவரிடம் நிபந்தனையற்ற சரணாகதியின் வாழ்க்கை அது!

Category
Subscribe
Notify of
guest
0 கருத்துக்கள்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments