இயேசுவை பின்பற்றுவதற்காக அழைப்பு

(English Version: The Call To Follow Jesus)
“18 இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்து போகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு: 19.என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். 20. உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள். 21. அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார். 22. உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்.”
மத்தேயு 4:18-22
மத்தேயு 4: 18-22 ஆகிய வசன பகுதியில், 18 மற்றும் 21 ஆம் வசனங்கள் சுட்டிக்காட்டுவதுப்போன்று, அன்றாட வாழ்வில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தவர்களை தமது சீடர்களாக இயேசு ஒன்றுச் சேர்ப்பதை நமக்குத் தொகுத்தளிக்கிறது. இந்த நால்வருக்கு கொடுக்கப்பட்ட அழைப்பும், மற்ற அப்போஸ்தலர்களுக்கு பின்னர் கொடுக்கப்பட்ட அழைப்பும் நம்முடைய காலத்தில் மறுபடியும் கொடுக்கப்படாத தனித்துவமான அழைப்பாக இருக்கிறது. இயேசுவின் அழைப்பு மற்றும் அவர்களின் மறுமொழி ஆகியவற்றிலிருந்து 3 பாடங்களை நாம் இன்றும் கற்றுக்கொள்ளலாம்.
முதலாவதாக அழைப்பை துவக்குபவர் இயேசு என்பதை கவனிக்கவும்.
பொதுவாக, இயேசுவின் காலத்தில் வாழ்ந்த ரபீமார்கள் அவர்களைப் பின்தொடர மக்களை அழைக்க மாட்டார்கள். ஆர்வமுள்ள எவரும் தங்கள் சொந்த முயற்சியால் ஒரு ரபீயைப் பின்பற்ற தொடங்குவார்கள். இயேசு ஒரு ரபீ மட்டுமல்ல. அவர் மாம்சத்தில் இருந்த சர்வ வல்லமையுள்ள தேவன். எனவே, “என்னை பின்பற்றி வாருங்கள்” [வ.19] என்று அவர் அவர்களை அழைக்கிறார். இது ஒரு பரிந்துரை அல்ல, மாறாக ஒரு கட்டளை. பின்தொடர், தொடருங்கள், என் பின்னே வாருங்கள் என்பது ஒரு அழைப்பு.
ஆனால் எதற்காக அவர் அவர்களை அழைக்கிறார்? ஊழியத்திற்கான இந்த அழைப்பின் நோக்கமென்ன? இதற்கான பதில் இந்த வசனத்திலேயே உள்ளது, “உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்”. இது நாள் வரை நீங்கள் மீன்களைப் பிடித்து அவைகளை உணவிற்காக கொன்றீர்கள். இன்றிலிருந்து நீங்கள் என்னுடைய தூதர்களாக, சுவிசேஷத்தை அறிவித்து ஆவிக்குரிய வாழ்வில் மரித்தவர்களுக்கு ஆவிக்குரிய ஜீவனை கொடுக்கும் விதமாக மனிதர்களை பிடிக்க வேண்டும். இது தான் அழைப்பு! எளிமையான மற்றும் படிப்பறிவற்ற மீனவர்கள் அவருடைய முதல் தூதர்களாக –ஒரு பெரும் பணியை எடுத்துச் செல்ல அழைக்கப்பட்டனர்!
இயேசு தம்முடைய பிரதிநிதிகளாக தெரிந்துக்கொண்ட இந்த வகையான மக்களை பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆனால் அதிலே தான் தேவனுடைய ஞானம் அடங்கியிருக்கிறது. அவருடைய சிந்தனைகள் உலகத்தின் சிந்தனைகள் அல்ல. எவர்களுக்காக தம்முடைய நோக்கத்தை வைத்திருக்கிறாரோ அவர்களை தெரிந்துக்கொண்டு அழைக்கிறார். எனவே, இதுவே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடம்: இயேசுவுக்கு சாட்சியாக இருக்கும் அழைப்பானது நம்மிலே தொடங்குவதல்ல. இது அவரிலே தொடங்குகிறது. அவருடைய சாட்சியாக இருப்பதற்கு அவரே நம்மை அழைக்கிறார் (அப் 1:8). அந்த அழைப்பிற்கு கீழ்படியாமல் இருப்பது ஒரு பாவம்.
இயேசுவுக்கு சாட்சியாக இருக்கும் அழைப்பானது நம்மிலே தொடங்குவதல்ல. இது அவரிலே தொடங்குகிறது.
இரண்டாவதாக, அந்த அழைப்பை நிறைவேற்றுவதற்கு அவர் தம்முடைய வல்லமையை அளிக்கிறார் என்பதை கவனிக்கவும்.
“உங்களை பிடிக்கிறவர்களாக்குவேன்” என்ற சொற்றொடரானது வல்லமையளிக்கும் யோசனையாக இருக்கிறது. சில ஆங்கில மொழிபெயர்ப்புகளில் நான் உங்களை அனுப்புவேன் என்றும் கூறப்பட்டுள்ளது. இவை இரண்டும் ஒரே சிந்தைனையாக இருக்கிறது. நீங்கள் வெறுமையாக செயல்பட மாட்டீர்கள், நான் எதற்காக உங்களை அழைத்தேனோ அதற்கு வல்லமையை தருவேன் என்பதே இயேசுவின் வாக்குத்தத்தமாக இருக்கிறது.
அந்த தொடக்கக் கால சீஷர்கள் அவருடைய தூதர்களாக வல்லமை பெற்றதுபோன்று, அவருடைய தூதர்களாக இருப்பதற்கு நமக்கும் அதே வல்லமையை தருகிறார். ஆவியானவரின் வல்லமையால், தேவனை விட்டு விலகிப்போன இந்த உலகத்திற்கு நாம் அவருடைய சாட்சிகளாக இருப்பதற்கு அனுப்பப்பட்டவர்களாக இருக்கிறோம் (அப் 1:8). எனவே அந்த அழைப்பை நிறைவேற்றுவதற்கு நாம் பயப்பட வேண்டியதில்லை. நாம் கற்க வேண்டிய இரண்டவது பாடம் இது தான்.
மூன்றாவதாக சீஷர்களின் மறுமொழியானது இயேசுவின் அழைப்பிற்கு அவர்கள் கொஞ்சமும் தாமதமில்லாமல் உடனடியாக கீழ்படிந்தனர் என்று குறிப்பிட்டிருப்பதை கவனிக்கவும்.
அவர்களுடைய கீழ்படிதலில் எந்த ஒரு சிறிய தயக்கமும் காணப்படவில்லை. இயேசுவை பின்பற்றும் வழியில் தங்கள் ஆஸ்திகள் குறுக்கிட அவர்கள் அனுமதிக்கவில்லை. மத்தேயு 4:20 இவ்வாறு கூறுகிறது “உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டு அவருக்கு பின் சென்றார்கள்”. இயேசுவை பின்பற்றுவதில் உறவுகள் தங்கள் வழியில் வருவதை அவர்கள் அனுமதிக்கவில்லை. மத்தேயு 4:22 இவ்வாறு கூறுகிறது “உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்”.
நாமும் இதைப்போன்ற மறுமொழியை வெளிப்படுத்தும்படியாக அழைக்கப்பட்டிருக்கிறோம். உடனடியான மற்றும் எவ்வித தாமதமும் இல்லாத முழு இருதயத்துடனான கீழ்படிதல் அவசியமாக இருக்கிறது. இயேசு தமக்கு சாட்சிகளாக இருக்கும்படி அழைத்த அழைப்பில் ஆஸ்திகளோ அல்லது உறவுகளோ நம்முடைய கீழ்படிதலை தடை செய்துவிட நாம் அனுமதிக்க கூடாது. அவரை பின்பற்ற நாம் நம்முடைய குடும்பங்களை மற்றும் நம்முடைய வேலைகளை கைவிட வேண்டும் என்பது இதன் பொருளல்ல என்பதை தயவு செய்து புரிந்துக்கொள்ளுங்கள். நம்முடைய குடும்பங்களை நேசிக்கவும் மற்றும் அதை போஷிக்கவும் புதிய ஏற்பாடு நமக்கு தெளிவாக அழைப்பு விடுக்கிறது. இதே பேதுரு பின் நாளில் ஊழியத்தில் தன்னுடைய மனைவியுடன் இருந்தார், அவருடைய மாமியையும் இயேசு குணமாக்கினார் என்று நாம் வேதத்தில் காண்கிறோம். இயேசுவை பின்பற்றும் நம்முடைய வழியில் எதுவும் தடையாக வந்துவிடக் கூடாது என்பதே இங்கு சொல்லபட்டிருக்கிற சிந்தனையாகும்.
ஒரு நல்ல வேலைக்காரர்களாக இருக்கும்படிக்கு புதிய ஏற்பாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம்மில் சிலர் நாம் பணி புரியும் தலங்களில் சுவிசேஷ ஒளியை பிரகாசிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம் என்று வெளிப்படையாக பொருள்படுத்துகிறது. இயேசுவை பின்பற்றும் பாதையில் நம்முடைய பணிகள்ஒரு தடையாக வந்துவிடக் கூடாது என்பதே இங்கு கூறப்படும் சிந்தனையாகும். சில சந்தர்ப்பங்களில், இயேசு தம்மை பின்பற்றுகிறவர்களை அவர்களுடைய தற்போதைய பணியை தொடர்ந்து செய்துக் கொண்டே தமக்கு சாட்சியாக இருக்க அழைக்கக் கூடும். மற்ற சந்தர்ப்பங்களில் அங்கு பணிபுரியம் பணிகளில் மாற்றமிருந்தாலும், தொடர்ந்து அவருக்கு சாட்சியாக இருக்கக் கூடும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் நம்முடைய வேலைகளை விட்டு அவருக்கு செயல் தாக்கமுள்ள சாட்சியாக இருக்க விரும்புவார். இயேசுவுக்கான நம்முடைய கீழ்படிதலானது முழு இருதயத்தோடு இருக்க வேண்டும், நம்முடைய பணிகளோ, நம்முடைய குடும்பங்களோ அல்லது வேறு எதுவோ பாதையில் தடையாக வந்துவிடக் கூடாது என்பதே இங்கு கூறப்படும் கருத்து. இதுவே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மூன்றாம் பாடம்.
வில்லியம் கேரி, ஹட்சன் டெய்லர் போன்ற முன்னோடி மிஷனெரிகள் தங்கள் ஜீவனையும், தங்கள் குடுபங்களின் ஜீவனையும் பணயம் வைத்தனர், ஏனெனில் அவர்கள் இயேசுவின் தூதர்களாக இருக்கும் அழைப்பை தீவிரமாக எடுத்துக்கொண்டனர். நம்முடைய ஆஸ்திகளிலும் அதே போன்ற ஒரு அணுகுமுறையிருக்க வேண்டும். ஆஸ்திகள் நமக்கு இன்பத்தைத் தரும் வழியாக கருதாமல் அவருக்கு சாட்சியாக இருக்கும்படியான சுவிசேஷத்தை தொடருகிற வழியாக பார்க்கும்படிக்கு இயேசு தம்முடைய அழைப்பை நமக்கு விடுக்கிறார்.
வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், ஆஸ்திகள் நம்மை ஆண்டுக்கொள்ளக் கூடாது. நாம் அதனை தளர்வாக பிடித்துக்கொள்ளும்படிக்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய ஆஸ்திகளை நாம் தேவனுடைய வார்த்தையின் பிரஸ்தாபத்திற்காக பயன்படுத்த வேண்டும். மற்ற இடங்களுக்கு சுவிஷேத்தை கொண்டுச் செல்வதற்கும் அல்லது மற்றவர்களை அனுப்புவதற்கும் அல்லது நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு சுவிசேஷத்தை கொண்டுச் சேர்ப்பதற்காக கொடுக்கப்பட வேண்டும். முக்கியமான பிரச்சனை இது தான்: இயேசு நம்மை எங்கு அழைத்தாலும் அவருடைய சாட்சியாக இருக்க வேண்டும் என்ற அவருடைய அழைப்பை நாம் எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும்!
இயேசு நம்மை எங்கு அழைத்தாலும் அவருடைய சாட்சியாக இருக்க வேண்டும் என்ற அவருடைய அழைப்பை நாம் எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும்!
இந்த சீஷர்கள் தங்கள் வாழ்வு எப்படி முடிவுறும் என்று அறிந்திருந்தார்களா? .இந்த கட்டம் வரை அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை. இருந்தாலும் விசுவாசத்தினால் அவர்கள் எல்லாவற்றையும் விட்டு இயேசுவை பின்பற்றினார்கள். சபை வரலாற்றின்படி பேதுருவும், அந்திரேயாவும் சிலுவையிலறையப்பட்டனர்; அப்போஸ்தல நடபடிகளின் பிரகாரம், யாக்கோபு ஏரோதுவினால் கொல்லப்பட்டார்; வெளிப்படுத்தின விசேஷத்தின்படி யோவான் பத்மூ தீவில் சிறையிலடைக்கப்பட்டாா். உலக தர அளவின்படி அவர்கள் ஒரு மகிமையான முடிவை அடையவில்லை. ஆனால், பரலோக தர அளவின்படி, அவர்கள் வெற்றியுள்ள வாழ்வை வாழ்ந்தனர். அதன் பின்னர் இதே சுவிசேஷ புத்தக்கத்தில் இயேசுவானவர் தாமே இப்படி சொல்லியிருக்கிறார், “தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்து போவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்” (மத்தேயு 10:39). அவர் இதை வேறு விதமாகவும் கூறுகிறார் “தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்” (மாற்கு 8:35).
எதிர் வரும் உலகத்தை பெற சீஷர்கள் இந்த உலகத்தில் தங்கள் ஜீவனை இழந்தார்கள். இறுதி ஆய்வின்படி, அவர்கள் பெரும் பாடுகளுக்கிடையே சென்றாலும், இயேசுவின் அழைப்பிற்கு உண்மையான கீழ்படிதலோடு- இந்த உலகத்தில் ஒரு சிறந்த வாழ்வை வாழ்ந்தனர்! இப்பொழுது நிச்சயமாக அவர்கள் நித்திய வாழ்வில் – இயேசுவின் பாதத்தில் – முழு சமாதானத்தையும் ஆறுதலையும் பெற்று ஒரு சிறந்த வாழ்வை வாழ்கின்றனர். இனி கண்ணீர் இல்லை. இனி சஞ்சலம் இல்லை. நித்திய காலமாய் மகிழ்ச்சி மட்டுமே தங்கியிருக்கும். ஆனால் மகிமைக்கு முன்னால் சிலுவையே முதலில் வந்தது! இந்த அம்சத்தில் வேதம் தெளிவாக உள்ளது. சிலுவையில்லாமல் கிறிஸ்துவை பின்பற்றுதல் கிடையாது. கிறிஸ்துவை பின்பற்றாமல் வாழ்வே கிடையாது. “த காஸ்ட் ஆஃப் டிசைப்பில்ஷிப்” (“The Cost of Discipleship”, Dietrich Bonhoeffer) என்ற புத்தகத்தில் டேய்ட்ரிச் போன்ஹொபர் என்ற ஜெர்மனியிலுள்ள ஒரு போதகர், கிறிஸ்துவின் மீதான தன்னுடைய அர்ப்பணிப்பிற்காக இரண்டாம் உலகப்போரின்போது (WWII) மரித்தார். அவர் இவ்வாறு எழுதினார்:
நாம் சீஷராக்கும் பணியில் இறங்கும்போது மரணத்திற்கு நம்மை நாமே அர்ப்பணித்துக்கொள்கிறோம். இது இப்படி தான் தொடங்குகிறது; சிலுவை என்பது ஒரு பயங்கரமான முடிவல்ல மாறாக அது தேவனுக்கு பயப்படுகிற பயமும், மகிழ்ச்சியான வாழ்க்கையுமாக இருக்கிறது, ஆனால் அது கிறிஸ்துவுடனான ஐக்கியத்தின் தொடக்கத்தில் நம்மைச் சந்திக்கிறது.
கிறிஸ்து ஒரு மனிதனை அழைக்கும்போது, வந்து மரிக்கும்படிக்கு கட்டளையிடுகிறார். அநேகமாக இது சீஷர்கள் தங்கள் வீட்டையும் வேலையையும் விட்டு வந்த பிரிவு மரணத்தைப் போன்றதாகும், அல்லது மார்ட்டின் லூதர் துறவு மடத்தை விட்டு பிரிந்து உலகத்திற்கு செல்ல வேண்டியிருந்த மரணத்தைப்போன்றதாகும். வேத்தில் கூறப்பட்டுள்ள ஐசுவரியவானான வாலிபனுக்கு இயேசுவின் அழைப்பானது மரணத்தைப் போன்றிருந்தது, ஏனெனில், தன் சொந்த சித்தத்திற்கு மரித்த ஒருவர் மட்டுமே கிறிஸ்துவை பின்பற்ற முடியும். உண்மையில் இயேசுவின் ஒவ்வொரு கட்டளையும் நம்முடைய பாசம் மற்றும் இச்சைகள் ஆகியவற்றிற்கு மரிப்பதற்கான ஒர் அழைப்பாகும்.
கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு நாளும் புதிய சோதனைகளை சந்திக்கிறார்கள், மேலும் ஒவ்வொரு நாளும் அவர்கள் இயேசு கிறிஸ்துவிற்காக புதிய பாடுகளைப்பட வேண்டும், அவர்கள் சோதனை களத்தில் பெறுகிற காயங்களும் தழும்புகளும் தங்கள் கர்த்தருடைய சிலுவையில் பங்குப்பெற்றதன் ஜீவனுள்ள அடையாளங்களாகும். ஆம், சிலுவையில் மரிப்பதானது கொஞ்சம் கொஞ்சமாக மரிப்பதாகும், ஆனால் அது நிச்சயமான ஒன்று: சுய- திருப்தி, சுய- மதிப்பீடு, சுய- மேம்பாடு, சுய- சார்பு, சுயத்தின் மீது ஆர்வம் ஆகிய சுயத்திற்கு மரிப்பது முக்கியமானது. இவையெல்லாம் எதற்காக? ஏனெனில் நாம் கிறிஸ்துவை சேவிக்கிறோம். மொராவியன் ஐக்கியத்தின் (Moravian fellowships) நிறுவனர் கவுண்ட் சிங்சென்டார்ஃப் (Count Zinzendorf) அவர்கள் சிலுவையை எப்படி பார்த்தார் மற்றும் சிலுவையின் தாக்கங்கள் ஆகியவற்றை ஆர்வமிக்க ஒரு நிகழ்வின் மூலம் சொன்ன கதை இது:
ஐரோப்பாவிலுள்ள அவருடைய பண்ணையின் அருகிலிருந்த ஒரு சிறிய சிற்றாலயத்தில், ஒரு கிறிஸ்தவரால் வண்ணந்தீட்டப்பட்ட இயேசு கிறிஸ்துவின் படமொன்று இருந்தது. அதன் கீழே “இவையெல்லாம் நான் உனக்காக செய்தேன்; ஆனால் நீ எனக்காக என்ன செய்தாய்?” என்ற வார்த்தைகள் இருந்தது. சிங்சென்டார்ஃப் அந்த சித்திரத்தையும் அந்த வார்த்தைகளையும் பார்த்தப்போது, பேச்சற்று போனார். குத்தப்பட்ட அந்த கரங்களையும், இரத்தம் வழியும் நெற்றியையும், காயம்பட்ட பக்கங்களையும் அவர் பார்த்தார். அவர் அந்த படத்தையும் அந்த வார்த்தைகளையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார். மணிகள் கடந்தது, அங்கிருந்து அவரால் நகர முடியவில்லை. நாட்கள் கடந்துப்போகையில், தன்னுடைய இருதயத்தை முற்றிலும் தம்முடைய அன்பினால் கைப்பற்றிக்கொண்டவருக்கு தன்னுடைய அர்ப்பணிப்போடு அழுதுக்கொண்டே மண்டியிட்டார். அந்த நாளில் தானே அவர் மாற்றப்பட்டவராக அந்த சிற்றாலயத்தை விட்டுச்சென்றார். அவர் தன்னுடைய பணத்தை மொராவியார்கள் நடுவில் பணிப்புரிய பயன்படுத்தினார், அவருடைய மிஷனெரி ஆர்வமும் சேவையும் முழு உலகத்தையும் தாக்கமடைய செய்தது.
கிறிஸ்துவின் அன்பினால் ஒரு நபரின் இதயம் கவர்ந்திழுக்கப்படும்போது நிகழ்வது இதுதான் என்பதை நீங்கள் காண்கிறீர்கள். அந்த வகையான அன்புதான் ஒரு நபரை முதன்முதலில் ஒரு விசவாசமுள்ள கிறிஸ்தவானாக மாற்றுகிறது, மேலும் மாற்றப்பட்ட அன்றிலிருந்து அவருக்கு அன்பாக கீழ்ப்படிய உதவுகிறது. கிறிஸ்துவின் அன்பினால் இருதயங்களை வென்றவர்கள் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய தொடருவதை ஒரு நாளும் விட்டுவிட மாட்டார்கள். அவர்கள் மகிழ்ச்சியுடன் குறுகிய பாதையில் நடப்பார்கள், ஏனென்றால் அதுதான் பரலோகத்திலுள்ள தங்கள் வீட்டிற்கு அவர்களை அழைத்துச் செல்லும் ஒரே பாதை என்று அவர்களுக்குத் தெரியும். அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள இருண்ட உலகிற்கு சுவிசேஷத்தின் ஒளியைச் பிரகாசிக்க அழைக்கப்பட்ட ஒளி தாங்கிகள் என்பதை புரிந்துகொள்கிறார்கள். ஆனால், இயேசுவின் ஒளி தங்கள் இருதயங்களில் பிரகாசிப்பதன் மூலம் இது தொடங்குகிறது என்பதே முதன்மையானது மற்றும் பிரதானமானது என்று அவர்கள் அறிவார்கள். அப்படி உங்களுக்கு வாழ்வில் நடந்திருக்கிறதா? உங்கள் சொந்த பாவத்தை தனிப்பட்ட முறையில் அறிக்கையிடும் அனுபவித்தை பெற்றிருக்கிறீர்களா?, பாவத்தின் கிரயத்தை செலுத்த தம்முடைய பெரும் அன்பினால் இரத்தத்தை சிந்திய மேசியாவாகிய இயேசுவிடம் திரும்பியிருக்கிறீர்களா? கிறிஸ்துவின் அன்பினால் உங்கள் இருதயம் வெல்லப்பட்டிருக்கிறதா? அப்படியானால், இரட்சிப்புக்கான அவரது அன்பின் அழைப்புக்கு உங்கள் பதில் என்ன? இது ஒரு “ஆம்!” என்று இருக்க வேண்டுமென்று நான் நம்புகிறேன். அப்படி “ஆம்” என்றால், இயேசு அதே அன்பான சேவை செய்யும் அழைப்பை உங்களுக்கு விடுக்கிறார் என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், “என்னைப் பின்பற்றுங்கள், நான் உங்களை மனிதர்களாகிய மீன்களை பிடிக்க அனுப்புவேன்.”
இயேசுவை சேவிப்பத்தர்கான அவரது அன்பின் அழைப்புக்கு உங்கள் மறுமொழி என்ன? இயேசு முழுமையான மற்றும் எல்லையற்ற கீழ்ப்படிதலுக்கு தகுதியானவர் என்பதை அறிந்திருந்ததால், ஆஸ்திகளையோ குடும்பத்தினரையோ கூட வர அனுமதிக்காத இந்த சீஷர்களின் கீழ்படிதலைப் போல உடனடியான மற்றும் தொடர்ச்சியான கீழ்ப்படிதலாக உ ங்கள் கீழ்படிதல் இருக்கிறதா? அல்லது இயேசுவுக்கு ஒரு சிறந்த சாட்சியாக இருப்பதற்கு உங்களைத் தடுக்கும் உங்கள் ஆஸ்திகள், உங்கள் நிலை மற்றும் உங்கள் உறவுகள் ஆகியவற்றில் நீங்களும் சிக்கிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால், இன்றே மனந்திரும்பி, உங்கள் பாவங்களை மன்னித்து, உண்மையுள்ள சாட்சியாக வாழ உதவும்படி அவரிடம் கேளுங்கள். சுவிசேஷத்தை திறம்பட பரப்புவதற்கு உங்கள் தகுதிகளை அல்லது தாலந்துகளை எவ்வாறு பயன்படுத்துவது, உங்கள் ஆஸ்திகளை எவ்வாறு பயன்படுத்துவது என்று உங்களுக்குக் கற்பிக்கும்படி அவரிடம் கேளுங்கள். உங்கள் உறவுகளுக்கு மேலே அவரை வைக்க உதவுமாறு அவரிடம் கேளுங்கள். அவர் உங்கள் சிருஷ்டிதவர் என்பதை நினைவில் வையுங்கள். அவர் உங்கள் மீட்பர். அவர் உங்களுக்காக மட்டுமே மரித்தார். அவர் உங்கள் வாழ்க்கையில் முதன்மையான இடத்திற்கு மட்டுமே தகுதியானவர்!