இயேசு சிலுவையில் சந்தித்த 3 உபத்திரவங்கள்

(English version: 3 Cross-Related Sufferings of Jesus – Physical, Spiritual and Emotional)
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பூமிக்குரிய வாழ்க்கை முழுவதும் உபத்திரவம் நிறைந்ததாக இருந்தது. இருப்பினும், இந்த கட்டுரையானது அவர் தமது இரத்தத்தை சிந்தியதன் மூலம் நாம் பெற்ற மீட்பிற்காக, சிலுவையில் அவர் அனுபவித்த சரீர, ஆவிக்குரிய, மற்றும் உணர்ச்சி ரீதியான 3 வகை உபத்திரவங்களை மையமாகக் கொண்டுள்ளதை விவரிக்கிறது.
1. சரீரரீதியான உபத்திரவம்
இயேசுவின் சரீரரீதியான உபத்திரவங்களைப் பற்றி அதிகம் பேசாத ஒரு போக்கு விசுவாசிகளிடையே காணப்படுகிறது. இது ஏன் இப்படி காணப்படுகிறது என்பதற்கு 2 காரணங்களை என்னால் சிந்திக்க முடிகிறது.
காரணம் # 1. “அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்” [மாற்கு 15:24] என்று வெறுமனே கூறுவதைத் தவிர, சிலுவையில் அறையப்படும் முறையைப் பற்றிய பல விவரங்கள் வேதத்தில் கூறப்படவில்லை. தேவனே இந்த வகையான மரணதண்டனையைப் பற்றி வேதத்தில் அதிக விவரங்களைக் கொடுக்காததால், நாம் அதை சிந்திக்க மறுக்கிறோம்.
காரணம் # 2. நிச்சயமாக, இயேசுவின் சரீரரீதியான உபத்திரவம் பயங்கரமானது என்றாலும், அந்த நேரத்தில் மற்ற மனிதர்களும் அதே அனுபவத்தை பெற்றிருந்ததால் அது தனித்துவமானது அல்ல என எண்ணுகிறோம். எனவே, சிலுவையில் அறையப்படுவதைப் பற்றிய விவரங்களை சற்று சிந்திப்போம்.
எனவே சிலுவையில் அறையப்பட்டதன் கொடூரமான தன்மையைப் பற்றிய விவரங்களைப் புரிந்துகொள்வதற்கு சில நிமிடங்கள் எடுத்துக்கொள்வது நல்லது என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் இயேசு கிறிஸ்து அப்படித்தான் கொல்லப்பட்டார்.
சிலுவையில் அறையப்பட்டு மரண தண்டனை அளிப்பது என்பது இயேசுவின் காலத்திற்கு சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பே பெர்சியர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. பிற்காலத்தில் கிரேக்கர்களும் இதைப் பின்பற்றினர். ஆனால் ரோமானியர்கள் அதை முற்றிலும் புதிய நிலைக்கு கொண்டு சென்றனர். மிகவும் கடினமான குற்றவாளிகளுக்கு தண்டனையளிக்க சிலுவையில் அறையப்படும் முறையை அவர்கள் தெரிவுச் செய்தனர். நீங்கள் ரோமுக்கு எதிராக நடந்தால் இதுதான் நடக்கும்! என்ற செய்தியை மக்களுக்கு இதன் மூலம் அவர்கள் அறிவித்தனர். அதனால்தான் ரோம அரசாங்கம் பலர் பயணிக்கும் பொதுவான இடத்தில் மக்களை சிலுவையில் அறைந்தது. குற்றவாளிகள் அவதிப்படுவதைப் பார்த்த பயணிகள், பல நேரங்களில் ரோமை எதிர்க்கத் துணியாதீர்கள்! என்ற வெளிப்படையான எச்சரிக்கையைப் பெற்றார்கள்.
சிலுவையில் அறையப்படும் செயல்முறை.
தேவையான முதன்மை பொருட்கள் 2 தனித்தனி மர துண்டுகள் மற்றும் 3 ஆணிகள். 2 மரத் துண்டுகள் ஒரு குறுக்கு [+ படங்கள் அடிக்கடி குறிப்பிடுவது போல அல்லாமல்] T போல உருவாக்கப்படும். குறுக்குக் கற்றை [Patibulum பாடிபுலம்] என்று அழைக்கப்பட்டது. செங்குத்து கற்றை அல்லது இடுகை [Stipes ஸ்டைப்ஸ்] என்று அழைக்கப்பட்டது.
இந்த செயல்முறை முதலில் குற்றஞ்சாட்டப்பட்டவரை உலோகத் துண்டுகளால் அல்லது எலும்புகளின் துண்டுகளால் ஒரு திடமான மரக் கைப்பிடியுடன் இணைக்கப்பட்ட குறுகிய பட்டையான சாட்டையால் அடிக்கப்படுவதாகும். இப்படி சாட்டையால் அடிப்பதால் ஒரு மனிதனைக் கொல்லலாம் அல்லது நிரந்தரமாக ஊனமாக்கிவிடலாம், ஏனெனில் அது முதுகு மற்றும் பக்கவாட்டில் உள்ள சதையைக் கிழித்துவிடும். குற்றவாளி பின்னர் குறுக்குக் கற்றையை நகரத்தின் வழியாக சிலுவையில் அறையப்படும் இடத்திற்கு கொண்டு செல்லும்படி கட்டாயப்படுத்தப்படுவார். ஒருவர் தன்னுடைய சிலுவையைச் சுமந்து செல்வது என்பது—மரிப்பதற்குத் தயாராக இருக்கிறேன். அது ஒரு வழிப் பயணம்—மறுபடியும் திரும்ப வாய்ப்பில்லை என்பதை வெளிப்படுத்துகிறதாக இருக்கிறது! கிறிஸ்துவின் விஷயத்தில், கசையடி மிகவும் மோசமாக இருந்தது, அது அவருடைய சிலுவையை முழு பாதையிலும் சுமக்க முடியாமல் போனது [மாற்கு 15:21].
குற்றவாளி சிலுவையில் அறையப்படும் இடத்திற்கு வந்தவுடன், குறுக்குக் கற்றை செங்குத்து கற்றையின் மேற்புறத்தில் இணைக்கப்படும். பீம்களில் ஒன்றில் துளை இருக்கும், மற்றொன்று ஒரு சதுர ஆப்பு கொண்டதாக இருக்கும், எனவே அவற்றை எளிதாக இணைக்கவும், அடுத்தடுத்த பயன்பாட்டிற்கு பிரிக்கவும் கூடும். ஒன்றாக இணைக்கப்பட்ட சிலுவை பின்னர் தரையில் மட்டமாக போடப்படும். குற்றவாளி பின்னர் தன் அனைத்து ஆடைகளையும் கழற்றுவார், இதனால் அதிக அவமானத்திற்கு ஆளாவார்.
சில சமயங்களில், வலியின் விளைவுகளைத் தடுக்க, குற்றவாளிகளுக்கு சில போதை பானங்கள் கொடுக்கப்படும். இது குற்றாவளியின் மீதான கருணையால் செய்யப்படாமல், அவர்கள் அதிகமாக எதிர்த்து வீரர்களுக்கு வேலையை கடினமாக்காதபடிக்கு கொடுக்கப்பட்டது. குற்றவாளி பின்னர் சிலுவையின் மரத்தில் இரத்தம் தோய்ந்த வெற்று முதுகுடன் சிலுவையில் வைக்கப்படுவார். அதுவே மிகவும் வேதனையாக இருக்கும்.
எவ்வளவு நேரம் உபத்திரவத்தை நீடிக்க வீரர்கள் விரும்புவார்கள் என்பதைப் பொறுத்து, குற்றவாளி கயிறுகளால் கட்டப்படுவார் அல்லது ஆணிகளால் அடிக்கப்படுவார். வெளிப்படையாக, இயேசுவின் விஷயத்தில், அவர் ஆணிகளால் அறையப்பட்டார் [யோவான் 20:24-27]. குற்றவாளியின் கைகள் நீட்டப்பட்டு ஒவ்வொரு கையிலும் ஒரு ஆணியாக குறுக்குக் கற்றையின் மீது அடிக்கப்படும். ஆணிகள் மணிக்கட்டில் அடிக்கப்படும், [படங்கள் பெரும்பாலும் தவறாக சித்தரிக்கப்படுவது போல] உள்ளங்கையில் அல்ல. அந்த வகையில், ஆணிகள் சதையிலிருந்து கிழிக்கப்படாது மற்றும் பாதிக்கப்பட்டவரின் கைகளை விட்டகலாது. 3வது ஆணி இரண்டு கால்களிலும் [பாதம் மற்றும் கால்களுக்கு இடையே உள்ள சந்திப்பில்] அடிக்கப்படும். அந்த வழியில், பாதங்கள் செங்குத்து கற்றைக்கு இணைக்கப்படும். குற்றஞ்சாட்டப்பட்ட மனிதனின் குறிப்பிட்ட குற்றம் ஒரு பலகையில் எழுதப்பட்டு சிலுவையில் இணைக்கப்படும். அவ்வகையில் அந்த நபர் என்ன குற்றம் செய்தார் என்பது அந்த வழியாக செல்லும் அனைவருக்கும் தெரியப்படுத்தப்படும்.
வீரர்கள் சிலுவையைத் தூக்கி, செங்குத்தாக இருக்க ஆழமான குழிக்குள் விடுவார்கள். சிலுவை கீழே விழும் போது ஏற்படும் சலசலப்பு, தலை வெடித்துச் சிதறுவது போன்ற வலியைக் கொண்டுவரும். பின்னர் கற்பனை செய்ய முடியாத மற்றும் பயங்கரமான வலியின் மணிநேரங்களும் நாட்களும் கூட தொடங்கும்! முன்கைகள் மரத்துப் போகும், தோள்கள் தங்கள் இணைப்பிலிருந்து இழுக்கப்படுவதைப் போல உணரும். மார்பு குழி மேல்நோக்கியும் வெளிப்புறமாகவும் இழுக்கப்படும், இது சுவாசிப்பதை கடினமாக்கும்.
மேலும் ஒரு மூச்சை இழுக்க, குற்றவாளி உள்ளுணர்வாக தனது கால்களால் தன்னை மேலே இழுப்பார். இது குற்றவாளிக்கு மற்றொரு சுவாசத்தைப் பெற உதவும் அதே வேளையில், மிகவும் வேதனையாகவும் இருக்கும். இது எப்படியென்றால், இந்த முயற்சிக்கு உடலின் எடையை கால்களை வைத்திருக்கும் ஆணிகளின் மீது போடுவது, முழங்கைகளை வளைப்பது மற்றும் மணிக்கட்டு வழியாக இயக்கப்படும் ஆணிகளை மேல்நோக்கி இழுப்பது தேவைப்படும். இது நரம்புகளில் மிகப்பெரிய வலியை ஏற்படுத்தும்—ஒருவர் நெருப்பில் செல்வது போன்ற வலி இது.
மேலும் ஒவ்வொரு மூச்சிலும், கிழிந்த குற்றவாளியின் முதுகு மரச் சிலுவையில் உராய்வதால் மிகுந்த வலியை ஏற்படுத்தும். கால்கள் வலுவிழந்து, தசைப்பிடிப்பும் நடுக்கமும் ஏற்படும் போது, குற்றவாளி நிவாரணத்திற்காக தனது முதுகை வளைப்பார். கைகள், மார்பு, முதுகு மற்றும் கால்களில் ஏற்படும் வலியை சமாளிப்பதற்கான ஒரே வழி இந்த நிலை மாற்றமாகும். இதற்கிடையில், உயிர்வாழுவதற்கான விருப்பம் குற்றவாளியை வலியால் அழ வைக்கும். சிலுவையில் அறைப்பட்டவர் மிகவும் சோர்வடைந்து, அதிக நீரிழப்பையும் மற்றொரு மூச்சை இழுக்க முடியாத அளவுக்கு உடல் ரீதியாக பலவீனமாகும் வரை அது தொடரும். இறுதியில் சில மணிநேரங்களுக்குப் பிறகு அல்லது சில நாட்களுக்குப் பிறகு மரணம் நிகழும், இது பொதுவாக இரத்த இழப்பினால் வந்ததல்ல; மூச்சுத் திணறலால் வந்ததாகும்.
எனவே, இது உங்களுடைய பாவங்களுக்காகவும் என்னுடைய பாவங்களுக்காகவும் நமது கர்த்தர் அனுபவித்த சரீர ரீதியான உபத்திரவங்களின் ஒரு பார்வையாகும். இயேசுவின் சரீர ரீதியான, உபத்திரவத்தின் இரண்டாவது அம்சத்தைப் பார்ப்போம்.
2. ஆவிக்குரிய உபத்திரவம்
சரீரரீதியான துன்பங்கள் எவ்வளவு பயங்கரமானதோ [உண்மையிலேயே பயங்கரமானது], இந்த ஆவிக்குரிய உபத்திரவமும் நம் கர்த்தருக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஏனென்றால், ஒரு எழுத்தாளர் கூறியது போல், சிலுவையில் இயேசு “நம்முடைய எல்லா பாவங்களுக்காகவும் குற்றத்தை சுமக்கும் உளவியல் வேதனையை” அனுபவித்தார்.
சில சமயங்களில் நாம் பாவம் செய்தோம் என்பதை உணரும் போது மிகப்பெரிய குற்ற உணர்வை அனுபவிக்கிறோம். குற்ற உணர்வின் பாரம் நம் இருதயத்தை கனக்க செய்கிறது. நாம் பாவிகளாக இருக்கிறோம், முதலில், அத்தகைய வலியை நாமே உணர்ந்தால், ஒருபோதும் பாவம் செய்யாத நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவுக்கு எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! அவர் இந்த பூமியில் வாழும் போது பரிபூரண பரிசுத்தமாக இருந்தார். பாவமான வார்த்தைகளோ, செயல்களோ இல்லை. ஒரு கெட்ட எண்ணம் கூட இல்லை! அவர் பாவத்தை வெறுத்தார், மேலும் பாவத்தின் எண்ணத்தைக் கூட அவர் எதிர்த்தார். ஆனாலும், அவர் வெறுத்த அனைத்தும், அவருடையதல்லாத அனைத்தும் அவர் மீது முழுவதுமாக ஊற்றப்பட்டன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நம்முடைய பாவங்கள் அனைத்தும் அவர் மீது முழுமையாக ஊற்றப்பட்டன. வேதம் இதை மிகத் தெளிவாகக் கூறுகிறது.
ஏசாயா 53:6 “கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.”
ஏசாயா 53:12 “அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து…”
யோவான் 1:29 “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி”
2 கொரிந்தியர் 5:21 “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்”
எபிரெயர் 9:28 “கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு…”
1 பேதுரு 2:24 “அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்”
இந்த வசனங்கள் கிறிஸ்து சிலுவையின் மீது ஒரு பாவி ஆனார் என்று அர்த்தப்படுத்துவதில்லை. அவர் எந்தப் பாவத்தையும் செய்ததற்காக சிலுவையில் அறையப்படவில்லை, அவர் ஒருபோதும் குற்றமற்றவர் [யோவான் 8:46; 1 பேதுரு 2:22]. அவர் அந்த பாவங்களைச் செய்ததைப் போல நடத்தப்பட்டார், இதனால் தண்டனையைத் தாங்கினார். அதன் விளைவாக, அவர் மீது விசுவாசம் வைக்கும் அனைவரும் தங்கள் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக்கொள்ள முடியும். எப்படியென்றால், இயேசுகிறிஸ்து ஏற்கனவே அவர்களுக்குப் பதிலாகப் பாடுபட்டு, அவர்களுடைய விடுதலைக்கான விலையைத் தம் இரத்தத்தால் செலுத்தினார்.
“அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்” என்று இயேசுவே கூறியிருக்கிறார் [மத்தேயு 20:28]. மீண்டும், மீட்கும்பொருள் என்பது நம் பாவங்களுக்காக அவருடைய இரத்தத்தின் மூலம் விலைக்கிரயம் செலுத்தப்பட்டத்தைக் குறிக்கிறது. அது மீட்புச் சொற்கள். சிலுவையில் இரத்தத்தைச் சிந்தியதன் மூலம், இயேசு நம்முடைய பாவத்திற்கான குற்றத்தை மட்டும் சுமக்கவில்லை, மாறாக நமக்கு பதிலாக, பாவத்திற்கு எதிரான தேவனுடைய கோபம் அனைத்தையும் தம் மீது சுமந்துக்கொண்டார்.
1 யோவான் 2:2 “நமது பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே.”
ரோமர் 3:25 “கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்”
சிலுவையில் பாவங்களுக்காக தேவனுடைய கோபத்தை உள்வாங்குவதன் மூலம், இயேசு தம்மை விசுவாசிப்பவர்கள், தங்கள் பாவங்களுக்காக ஒருபோதும் தேவனுடைய கோபத்தை அனுபவிக்க கூடாது என்ற ஏற்பாட்டைச் செய்தார். எனவே, இது உங்களுடைய பாவங்களுக்காகவும், என் பாவங்களுக்காகவும் இயேசு சிலுவையில் அனுபவித்த ஆவிக்குரிய உபத்திரவத்தின் ஒரு பார்வையாகும்.
இயேசுகிறிஸ்துவினுடைய சரீரபிரகாரமான மற்றும் ஆவிக்குரிய அம்சத்தைப் பார்த்த பிறகு, சிலுவையில் அவர் அனுபவித்த உபத்திரவத்தின் 3வது மற்றும் இறுதி அம்சத்தை—உணர்ச்சிரீதியான உபத்திரவத்தை சுருக்கமாகப் பார்ப்போம்.
3. உணர்ச்சிரீதியான உபத்திரவம்
உணர்ச்சிரீதியான உபத்திரவம் எனும்போது, சிலுவையில் இயேசு அனுபவித்த கைவிடப்பட்ட உணர்வை நான் குறிப்பிடுகிறேன். அனைவரும் அவரை கைவிட்டனர். நீங்கள் வாழ்க்கையில் ஒரு கடினமான நேரத்தை கடந்து செல்கிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் மனைவி, குழந்தைகள் மற்றும் நண்பர்களால் கைவிடப்பட்ட நீங்கள் தனியாக இருக்க விரும்புகிறீர்களா? அல்லது நீங்கள் யாரையாவது உடன் வைத்திருக்க விரும்புகிறீர்களா? இதற்கான பதில் வெளிப்படையானது. நெருங்கிய ஒருவர் கூட இருந்தால் அத்தகைய பெரும் சோதனையின் போது உதவிகரமாக இருக்கும். எனினும், யாரும் அனுபவிக்க முடியாத மிகப் பெரிய உபத்திரவத்தின் போது இயேசு தனியாக இருந்தார்!
முதலாவதாக, அவர் தமது நெருங்கிய 11 நண்பர்களால் கைவிடப்பட்டார். யூதாஸின் துரோகத்தின் வலியை அவர் ஏற்கனவே உணர்ந்திருக்க வேண்டும். மேலும் அவருடன் இருப்பதாக உறுதியளித்த 11 பேரும் அவர் கைது செய்யப்பட்டபோது அவரைக் கைவிட்டனர். இரண்டாவதாக, எவரும் எதிர்கொள்ளக்கூடிய மிகப்பெரிய உணர்ச்சிகரமான வலியை பிதாவாகிய தேவன் அவரைக் கைவிட்டபோது எதிர்கொண்டார். சிலுவையில், இயேசுகிறிஸ்து நம்முடைய பாவங்களைச் சுமந்தபோது, பிதாவிற்கும் குமாரனுக்கும் இடையிலான பரிபூரண ஐக்கியம் [உறவு அல்ல]—இந்த நேரத்திற்கு முன்பு நித்தியமாக இருந்த ஒரு ஐக்கியம் தற்காலிகமாக முறிக்கப்பட்டது—குறிப்பாக மதியம் மற்றும் 3 மணி வரை. அதைத் தனியே தாங்கிய தம் குமாரன் மீது தேவன் கோபத்தைக் கொட்டிக்கொண்டிருந்த நேரம் அது.
உண்மையில், உணர்ச்சிகரமான துன்பம் மிகவும் அதிகமாக இருந்தது, இது இயேசுகிறிஸ்து மிகவும் பரிச்சயமான “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?” [மத்தேயு 27:46]. என்ற இந்த கூக்குரலின் வார்த்தைகளைப் படிக்கும்போது, உங்களுடைய பாவங்களுக்காகவும் என்னுடைய பாவங்களுக்காகவும் அவர் எவ்வளவு ஆழமான வலியையும் உணர்ச்சிகரமான வேதனையையும் அனுபவித்தார் என்பதை நாம் ஒரு சிறிய பார்வையைப் பெறலாம்.
ஆகவே, நம்மை மீட்பதற்காக இயேசு சிலுவையில் அனுபவித்த சரீர, ஆவிக்குரிய மற்றும் உணர்ச்சி ரீதியான உபத்திரவங்களை நாம் பார்த்தோம்.
சிந்தனைக்காக.
அடுத்த முறை, நாம் பாவம் செய்வதற்கான சோதனையை எதிர்கொள்ளும்போது, நம்மை மீட்பதற்காக தம்முடைய இரத்தத்தைச் சிந்தியபோது, நம்முடைய கர்த்தர் சிலுவையில் அனுபவித்த பல்வேறு வகையான உபத்திரவங்களைப் பற்றி சிந்தித்துப் பார்ப்போம். பாவத்தின் சோதனைக்கு ‘இல்லை’ என்று சொல்ல அந்த பிரதிபலிப்பு நம்மை கட்டாயப்படுத்தட்டும்.
நம்முடைய இரட்சகர் வானத்திற்கும் பூமிக்கும் இடையில் தொங்கிக் கொண்டிருப்பதை அறிந்து, ஆழ்ந்த வேதனையில் கூக்குரலிடுவதையும் அறிந்து, அதே நேரத்தில் நாம் இவ்வளவு காலமாக நேசித்த பாவங்கள் உட்பட, பாவங்களையும் போற்றுவதையும், விட்டு விட்டு சிலுவையைப் பார்க்க முடியுமா?
இது சிந்தனைக்கு அப்பாற்பட்டது!
நம்முடைய இரட்சகருக்கு என்ன செய்யப்பட்டதென்று அறிந்து, பாவங்கள் மீதான வெறுப்பு, அதாவது அவைகளை விலக்கி வைக்க நம்மைத் தூண்டும் ஒரு வெறுப்பில் வளர இந்த நாளிலிருந்து நம் இருதயங்கள் ஒரு பரிசுத்தமான தீர்மானத்துடன் நகர்த்தப்படட்டும். மேலும், நம் அருமை ஆண்டவராகிய இயேசுவை இன்னும் அதிகமாக நேசிக்கவும், பொக்கிஷமாகக் கருதவும் நம் இருதயங்களும் தூண்டப்படட்டும்.