இரட்சகராகிய இயேசு ஜனங்களை இரட்சிப்பதற்காக உடைத்த நான்கு தடைகள்

(English Version: Jesus The Savior Breaks Down 4 Barriers To Save People)
கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய யூதரான மார்வின் ரோசென்டல், மத்தேயு 1:1-17 இல் கொடுக்கப்பட்டுள்ள இயேசுகிறிஸ்துவின் வம்சாவளியை, இயேசுவே மேசியா என்பதை தன்னை நம்பவைத்தஆதாரங்களில் ஒன்று என்று கூறினார். தொலைதூரத்தில் இருந்து இலக்குகளை நோக்கி துல்லியமாக சுடும் அமெரிக்க கடற்படையின் அனுபவத்திலிருந்து வரும் ரோசென்டல், மத்தேயுவின் வம்சாவளியானது இலக்கின் மையத்தை 10 க்கு 10 முறை துல்லியமாக தாக்குகிறது என்று யூதருக்கு கூறுகிறார்!
வம்சவரலாறுகள் என்று வரும்போது, அது நிலத்தை வாங்குவது விற்பதிலும் சரி அல்லது ஆசாரியர்களை நியமிப்பதிலும் சரி, அல்லது அது ராஜாக்களை ஏற்படுத்துவதிலும் சரி, பழைய ஏற்பாட்டின் காலத்திலிருந்தே யூதர்கள் எப்பொழுதும் குறிப்பிட்டத்தக்கவர்களாக இருந்தார்கள். இயேசுவே மேசியா என்றும் அவர் “தாவீதின் குமாரன்” மற்றும் “ஆபிரகாமின் குமாரன்” [மத்தேயு 1:1] என்றும் மகத்தான கூற்றை மத்தேயு முன்வைத்து, மக்களை விசுவாசிக்கும்படி அழைப்பு விடுக்கும்போது அவர் அந்த கூற்றை நிரூபிக்க வேண்டியிருந்தது. அதனால்தான் அவன் இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாற்றை தாவீது தொடங்கி ஆபிரகாம் வரையிலும் கொடுக்கிறான். மத்தேயு கிறிஸ்துவை பின்பற்றுவதற்கு முன் வரி வசூலிப்பவனாக இருந்தப்படியால், குடும்ப உறுப்பினர்களின் அடிப்படையில் சரியான வரி தொகைகள் சேகரிக்கப்படுவதை உறுதி செய்வது அவனது வழக்கமான வேலையாக இருந்தது, எனவே வம்சாவளியை பட்டியலிடுவதற்கு மத்தேயு நன்கு தகுதி பெற்றிருந்திருக்கக் கூடும்.
இருப்பினும், வேதத்தில் உள்ள வம்சவரலாறுகள், அவை தேவனால் ஏவப்பட்ட வார்த்தையின் ஒரு பகுதியாக இருந்தாலும், யூதர்கள் அல்லாத நம்மில் பெரும்பாலோருக்கு மிகவும் சுவாரசியமானவை அல்ல [2 தீமோ 3:16-17]. இந்த கட்டுரையில், பெயர்கள் நிறைந்த இந்த வசனப் பகுதியும் கூட நமக்கு நன்மைத் தரக்கூடியது என்பதைக் காட்ட விரும்புகிறேன், ஏனெனில் இந்த பட்டியல் மக்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிக்க இயேசுகிறிஸ்து தகர்த்தெறியும் நான்கு தடைகளை விவரிக்கிறது. விசுவாசத்துடன் அவரிடம் செல்லவும், அவரைப் பற்றி மற்றவர்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளவும் அது நம்மைத் தூண்டக் கூடியதாக இருக்க வேண்டும்.
முதலில் மத்தேயு 1:1-17ல் உள்ள முழுப் பகுதியையும் படித்துவிட்டு, ஜனங்களை இரட்சிக்க இயேசுகிறிஸ்து வெற்றி சிறந்த நான்கு தடைகளைப் பார்ப்பது உதவியாக இருக்கும்.
- ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:
- ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;
- யூதா பாரேசையும் சேராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;
- ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;
- சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
- ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;
- சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்;
- ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;
- உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாசைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;
- எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;
- பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.
- பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போனபின்பு எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்;
- சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;
- ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்;
- எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;
- யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார்.
- இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம் முதல் தாவீதுவரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்துவரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.
1. இரட்சகராகிய இயேசு அனைத்து இன தடைகளையும் உடைக்கிறவர்
இந்தப் பட்டியலில் யூதப் பெயர்கள் மட்டுமல்லாது புறஜாதிகளின் பெயர்களும் உள்ளன. “பாரேஸ்” மற்றும் “சேரா” என்ற இரண்டு குமாரர்களைப் பெற்ற முதல் பெயர், “தாமார்” [மத் 1:3], யூதர் அல்லாதவள், ஒரு கானானியப் பெண். இரண்டாவது பெயர் “ராகாப்” [மத் 1:5], இஸ்ரவேலின் இரண்டு உளவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பெண் [யோசு 2:4], ஒரு கானானியப் பெண்ணாகவும் இருக்கலாம். மூன்றாவது பெயர் “ரூத்” [மத் 1:5], மோவாபைச் சேர்ந்த ஒரு பெண். அடுத்து “உரியாவின் மனைவி” [மத்தேயு 1:6] என்று இப்போது விவரிக்கப்படும் பத்சேபாள் ஒரு ஏத்திய பெண் அல்லது தாவீதின் மனைவியாக மாறுவதற்கு முன்பு ஏத்தியனாக இருந்த உரியாவை மணந்துக்கொண்டதற்கு பின்னர் ஏத்திய பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடும்.
ஒருவர் காண்கிறபடி, இயேசு, யூதரல்லாத மக்களையும் உள்ளடக்கிய ஒரு வம்ச வழியாக வருவதன் மூலம், அவரில் இனத் தடைகள் உடைக்கப்பட்டுள்ளன என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. அவர் எல்லாப் பின்னணியிலிருந்தும் மக்களை இரட்சிப்பவர். ஒருவரின் தோல் நிறம் என்ன, எங்கு பிறந்தார், எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. கர்த்தராகிய இயேசு எல்லாப் பின்னணியிலும் உள்ளவர்களைத் தம் குடும்பத்தில் வரவேற்கிறார். இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் மக்களை அவர்களின் பின்னணியின் அடிப்படையில் பாகுபாடு காட்டாமல் அனைவரையும் வரவேற்க வேண்டும் என்பதும் இதன் பொருள்.
2. இரட்சகராகிய இயேசு அனைத்து பாலினத் தடைகளையும் உடைக்கிறவர்
இயேசுகிறிஸ்து உடைக்கும் இரண்டாவது தடை பாலினத் தடையாகும். வம்சவரலாற்றில் பெண்களை பட்டியலிடுவது அசாதாரணமானது, என்றாலும், இந்த வசனப்பகுதியில் தாமார், ராகாப், ரூத், பத்சேபாள் மற்றும் மரியாள் ஆகிய 5 பெண்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் மிகவும் கேள்விக்குரிய பின்னணியில் உடையவர்கள் [தாமார், ராகாப் மற்றும் பத்சேபாள்]. பெண்கள் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லக்கூட முடியாத காலத்தில், இயேசுகிறிஸ்து அவர்களை சமூகத்தில் உயர்த்தினார். எருசலேமில் உள்ள மேல் மாடியில் தம்மை மேசியாவாக வெளிப்படுத்தாமல், ஒரு சமாரியப் பெண்ணிடம் தான் முதன்முதலில் வெளிப்படுத்தினார் [யோவான் 4], உயிர்த்தெழுந்தப் பிறகு முதன்முதலில் 11 அப்போஸ்தலர்களுக்கு காட்சியளிக்காமல், மகதலேனா மரியாள் என்ற ஒரு பெண்ணுக்குத்தான் இயேசு காட்சியளித்தார் [யோவான் 20:16-18]!
இரட்சகராகிய இயேசுவுக்குள், அனைத்து பாலின தடைகளும் முறிக்கப்பட்டுள்ளன. ஆவிக்குரிய ரீதியாக நாம் அனைவரும் இயேசுகிறிஸ்துவில் சமமானவர்கள் என்றாலும், செயல்பாட்டு ரீதியாக, தனித்துவமான பாத்திரங்கள் உள்ளனர். அவருடைய ராஜ்ஜியத்தில் ஆண்களும் பெண்களும் வரவேற்கப்படுகிறார்கள். இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் மக்களுடன் பழகும் போது இதை நினைவில் கொள்ள வேண்டும்.
3. மீட்பர் இயேசு அனைத்து சமூக தடைகளையும் உடைக்கிறவர்
மத்தேயுவில் உள்ள பட்டியலில் ராஜாக்கள், மேய்ப்பர்கள், தச்சர்கள் மற்றும் பிற அறியப்படாதவர்களின் பெயர்கள் உள்ளன. உண்மையில், இயேசுகிறிஸ்துவின் 12 அப்போஸ்தலர்களில் 11 பேர் கலிலேயாவைச் சேர்ந்தவர்கள்—அதாவது அவர்கள் அதிக கல்வியறிவு இல்லாதவர்கள்—மீனவர்கள், வரி வசூலிப்பவர்கள் மற்றும் கலகக்காரர்கள். ஆனாலும், உலகத்தை கலக்கும்படியாக அவரால் அனைவரும் பயன்படுத்தப்பட்டனர். முதல் நூற்றாண்டு சபையானது முக்கியமாக சமூகத்தில் குறைந்த அந்தஸ்திலிருந்த விசுவாசிகளாகிய அடிமைகளை கொண்டிருந்தது [1 கொரி 1:26-31]. தேவன் அவர்களை இரட்சித்தது மட்டுமல்லாமல், சுவிசேஷத்தின் விரிவாக்கத்திலும் அவர்களை வல்லமையுடன் பயன்படுத்தினார். இரட்கராகிய இயேசு சமுதாயத்தின் உயரடுக்கு மக்களுக்கு மட்டுமல்ல; அவர் அனைத்து மக்களுக்கும் இரட்சகர் என்பதை இது தெளிவாக நமக்குக் கற்பிக்கிறது. இயேசுகிறிஸ்துவில், அனைத்து சமூக மற்றும் பொருளாதார தடைகளும் உடைக்கப்படுகின்றன. அவரை பின்பற்றுபவர்களுக்கு இது ஒரு நினைவூட்டலாகும்: சமூக மற்றும் பொருளாதார நிலையின் அடிப்படையில் நாம் யாருக்கும் பாகுபாடு காட்டாமல் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்.
4. இரட்சகராகிய இயேசு அனைத்து பாவத் தடைகளையும் உடைக்கிறவர்
இயேசுகிறிஸ்து உடைக்கும் அனைத்து தடைகளிலும், இது மிகப்பெரியது! இந்த உலகில் மரணம் உட்பட அனைத்து துன்பங்களுக்கும் பாவமே காரணம்! இயேசுகிறிஸ்துவின் இந்த வம்சாவளி பட்டியலின் மூலம், அவர் பாவத் தடையையும் உடைக்கிறார் என்பதை மத்தேயு நமக்குக் காட்டுகிறார். அது எப்படி? இயேசுவின் வம்சாவளியில் உள்ள சில பெயர்களோடு எதிர்மறையான பண்புகளை சுருக்கமாகப் பார்ப்போம்.
ஆபிரகாம் – ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் பொய் சொன்ன குற்றவாளி [ஆதி 12:10-20; ஆதி 20:1-18].
ஈசாக்கு—தேவன் யாக்கோபைத் தேர்ந்தெடுத்த போதிலும், உணவின் மீதுள்ள ஆசையின் காரணமாக சேஷ்ட புத்திர பாகத்தை தருவதற்காக யாக்கோபுக்கு பதில் ஏசாவைத் தேர்ந்தெடுத்து, பொய் சொன்ன குற்றவாளி [ஆதியாகமம் 26:1-11; ஆதி 25:21-23; ஆதி 27:1-4].
யாக்கோபு – ஒரு ஏமாற்றுக்காரன் மற்றும் பொய்யன் என்ற குற்றவாளி [ஆதியாகமம் 27:1-29].
யூதா – யோசேப்பை இஸ்மவேலருக்கு விற்கும் திட்டத்தைக் கொண்டு வந்து, ஒரு கானானியப் பெண்ணை மணந்து பின்னர் ஒரு விபச்சாரி என்று நினைத்தவளுடன் உடலுறவு கொண்டவன் [ஆதி 37:26-27; ஆதி 38:1-2; ஆதி 38:11-19].
தாமார்— யூதாவின் மருமகள்—ஒரு விபச்சாரியாக பாவனை செய்து அவனுடன் உடலுறவு கொண்டவள் [ஆதியாகமம் 38:11-19].
ராகாப்— விபச்சாரத்தின் குற்றவாளி [யோஷ் 2:1].
தாவீது– இஸ்ரவேலின் மிகப் பெரிய ராஜா-இருப்பினும் விபச்சாரம் மற்றும் கொலைக் குற்றவாளி [2 சாமு 11:1-27].
சாலொமோன் – பலதார மணம், சிலை வழிபாடு மற்றும் உலக இன்பம் ஆகியவற்றில் குற்றவாளி.
ரெகோபெயாம் – பெருமை மற்றும் துன்மார்க்கத்தின் குற்றவாளி [1 இரா. 12:1-15].
ஆகாஸ்—நர பலியை செலுத்துவது உட்பட ஒட்டு மொத்த சிலை வழிபாட்டின் குற்றவாளி [2 இரா. 16:1-4].
பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால் இந்த பட்டியலில் துன்மார்க்கத்துக்கான கடைசி பரிசு யாருக்கு கிடைக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? அவன் எசேக்கியாவின் தகப்பனாகிய மனாசே. 2 இராஜா 21:10, “கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே, அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்” என்று கூறுகிறது. 2 நாளாகமம் 33 இது போன்ற தீமைகளையும் உள்ளடக்கிய அவனது அக்கிரமத்தைப் பற்றிய கூடுதல் விவரங்களைத் தருகிறது: “அவன் இன்னோம் குமாரரின் பள்ளத்தாக்கிலே தன் குமாரரைத் தீமிதிக்கப்பண்ணி, நாளும் நிமித்தமும் பார்த்து, பில்லிசூனியங்களை அநுசரித்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவன் மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தான்” (2 நாளாகமம் 33:6).
அதிர்ச்சியாக இருக்கிறது அல்லவா? இந்தப் பட்டியலில் பொல்லாத பாவிகளும், ஆபிரகாம் போன்ற தெய்வீக மனிதர்களும் அடங்குவர், தேவன் கட்டளையிட்டபோது ஆபிரகாம் தன்னுடைய குமாரன் ஈசாக்கைப் பலி செலுத்தினான் [ஆதியாகமம் 22]. இருப்பினும், ஆபிரகாம் அல்லது தாவீது போன்ற சிறந்த மனிதர்கள், பாவியான மனிதர்களாக இருந்ததையும் இந்தப் பட்டியல் காட்டுகிறது! என்ன ஒரு பாவிகளின் தொகுப்பு – பொய்யர்கள், சூழ்ச்சிக்காரர்கள், விபச்சாரிகள், விபச்சாரிகள், கொலைகாரர்கள், விக்கிரக ஆாதனைக்காரர்கள், மற்றும் பல. அவர்களின் பாவம் அடிப்படையில் சாதாரணமானது மற்றும் அசாதாரணமானது.
ஆனாலும், அனைவரும் மனந்திரும்பியதன் மூலம் கிருபையை பெற்றனர். இதற்கு ஒரு நல்ல உதாரணம் மனாசே. அவனிடம் எல்லா அக்கிரமங்களும் இருந்தபோதிலும், 2 நாளாகமம் 33:12-13-ல் நாம் இப்படி தான் படிக்கிறோம்: “அவன் துன்பத்தில் தன் தேவனாகிய கர்த்தருடைய தயவைத் தேடி, தன் மூதாதையரின் தேவனுக்கு முன்பாக தன்னை மிகவும் தாழ்த்தினான். இப்படி அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான். அவரை நோக்கி, அவன் விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவன் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்; கர்த்தரே தேவன் என்று மனசே அறிந்தான்”.
இந்த பெயர்களை மத்தேயு பட்டியலிடுவதன் மூலம், தேவன், தம்முடைய எல்லையற்ற கிருபையால், எல்லாத் தடைகளையும் தகர்க்க இயேசுகிறிஸ்துவை இரட்சகராக அனுப்பினார், அதில் மிகப்பெரிய ஒன்று-பாவம் , தாழ்மையுடன் தம்மிடம் வரும் மக்களைக் இரட்சிப்பது.
பல வருடங்கள் பாவத்தில் இருந்த ஒரு மிஷனரி மூலம் ஒரு முதிய அமெரிக்க இந்தியன் கிறிஸ்துவிடம் வழிநடத்தப்பட்ட கதை இது. அவனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குமாறு நண்பர்கள் அவனிடம் கேட்டார்கள். ஒரு சிறிய புழுவை எடுத்து இலைகளின் குவியலில் வைத்தான். பின்னர், அவன் இலைகளில் ஒரு தீக்குச்சியை வைத்து பற்ற வைத்தான். தீப்பிழம்புகள் புழு கிடந்த மையத்திற்குச் சென்றபோது, முதியவன் திடீரென்று எரியும் நெருப்பின் நடுவில் கையை விட்டு, புழுவை எடுத்தான். புழுவைக் கையில் மெதுவாகப் பிடித்துக் கொண்டு, “நான் தான்…அந்தப் புழு என்று தேவனுடைய கிருபைக்கு இந்தச் சாட்சியம் அளித்தான்.
இறுதி சிந்தனைகள்
எனவே, வேதத்திலுள்ள உள்ள பெயர்களின் பட்டியல் நமக்கு நன்மையானது என்பதை நீங்கள் இப்போது உணருவீர்கள் என்று நம்புகிறேன். இயேசுகிறிஸ்து மக்களைக் இரட்சிக்க அனைத்து தடைகளையும் உடைத்துள்ளார் என்பதை இந்த பகுதிகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. இனம், பாலினம், சமூக அந்தஸ்து, அல்லது ஒருவர் எவ்வளவு பாவம் செய்திருந்தாலும், அவர்களுடைய பாவங்களை மன்னித்து, புதிய வாழ்க்கையை வழங்குவதன் மூலம் இயேசுகிறிஸ்து அந்த தடைகளை எல்லாம் உடைத்தார்.
இயேசுகிறிஸ்து உண்மையில் பாவிகளுக்கும் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் நண்பர். அவர்களுடன் பழகுவதற்கு அவர் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை. அவர் குழப்பமடைந்த மக்களைத் தேடி இரட்சிக்க வந்தார். தங்கள் குற்றத்தை அறிக்கையிட்டு உண்மையான மனந்திரும்புதலுடனும் விசுவாசத்துடனும் இயேசுகிறிஸ்துவிடம் வருபவர்களை ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும் அளவுக்கு மோசமான பாவம் எதுவும் இல்லை. அவரை ராஜாவாக ஏற்றுக்கொள்ளும் அனைவரையும் அவர் வரவேற்கிறார். இவைகள் ஒருவரை எந்தத் தயக்கமுமின்றி இயேசுவிடம் வர தூண்ட வேண்டும்.
அன்புள்ள வாசகரே நீங்கள் இன்னும் அவரிடம் வரவில்லை என்றால் இதில் நீங்களும் அடங்குகிறீர்கள்! பயப்படாதேயுங்கள். அவரை சந்தேகிக்காதேயுங்கள். அவரிடம் வந்து அவர் உங்களுக்கு வழங்கக்கூடிய புதிய வாழ்க்கையை அனுபவியுங்கள். உங்கள் பாவங்களையும், துக்கங்களையும், தோல்விகளையும், மனவேதனைகளையும் அவரிடம் கொடுத்து விடுங்கள். அவர் உங்களைக் குணப்படுத்துவார். உங்கள் பூமிக்குரிய பயணத்தின் எஞ்சிய காலத்திலும்-அதன் எல்லா சவால்களிலும் அவர் உங்களுக்கு உதவுவார். அவரிடம் வருவதற்கு தாமதம் செய்ய வேண்டாம்! வாழ்க்கை மிகவும் நிலையற்றது. மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். எனவே, தாமதிக்க வேண்டாம். இன்றே அவரிடம் வாருங்கள்!
இங்கிலாந்தின் ராணி முதலாம் எலிசபெத்தை கொலைச் செய்ய முயற்சித்த கதையை ஒரு போதகர் கூறுகிறார். அவ்வாறு செய்ய முற்பட்ட பெண், ஒரு ஆணைப் போல் உடையணிந்து ராணியின் உடலில் இரத்தம் சொட்ட சொட்ட, அவரைக் குத்திக் கொல்ல வசதியாகக் காத்திருந்தாள். மகாராணி ஓய்வு எடுப்பதற்கு முன், ராணியின் உதவியாளர்கள் அறைகளை சுத்தம் செய்வதில் மிகவும் கவனமாக இருப்பார்கள் என்பதை அவள் உணரவில்லை. அங்கு கவுன்களுக்கு இடையே மறைந்து நின்றுக்கொண்டிருந்த அந்த பெண்ணை கண்டுபிடித்தனர். ராணியைக் கொல்ல அவள் பயன்படுத்த நினைத்த கத்தியை வாங்கின பிறகு அவள் ராணியின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டாள்.
மனிதாபிமான அடிப்படையில் அவள் வழக்கு நம்பிக்கையற்றது என்பதை கொலையாளி உணர்ந்தாள். அவள் முழங்காலில் மண்டியிட்டு, ராணியிடம் ஒரு பெண்ணாக, இரக்கத்தைக் காட்டும்படி கெஞ்சினாள். ராணி எலிசபெத் அவளை கனிவாக பார்த்தாள், அமைதியாக, “நான் உனக்கு கிருபை காட்டினால், எதிர்காலத்தைக் குறித்து நீ என்ன உறுதிமொழிக் கொடுப்பாய்.” என்று கேட்டாள். அந்தப் பெண் நிமிர்ந்து பார்த்து, “நிபந்தனைகளைக் கொண்ட கிருபை, முன்னெச்சரிக்கைகளால் கட்டப்பட்ட கிருபை, கிருபையே இல்லை” என்றாள். ராணி எலிசபெத் ஒரு கணத்தில் யோசனையைப் புரிந்துகொண்டு, “நீ சொல்வது சரிதான்; என் கிருபையால் நான் மன்னிக்கிறேன்.” அவர்கள் அவளை ஒரு சுதந்திரமான பெண்ணாக அழைத்துச் சென்றனர்.
அந்த தருணத்திலிருந்து, எலிசபெத் மகாராணிக்கு அவரது உயிரைப் பறிக்க நினைத்த அந்தப் பெண்ணை விட விசுவாசமான, அர்ப்பணிப்புள்ள வேலைக்காரர் யாரும் இல்லை என்று வரலாறு நமக்குச் சொல்கிறது. பாவ மன்னிப்பை அனுபவித்தவர்களை, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் நிலைத்திருக்க இந்த உண்மைகள் கட்டாயப்படுத்த வேண்டும். இயேசுகிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க வேண்டியவர்களுக்கு உண்மையாகப் பகிர்ந்துகொள்வதும் அந்த கீழ்ப்படிதலில் அடங்கும்! நித்தியமான பாடுகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் நம்மை இரட்சித்த அவருக்கு நாம் கடமைப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது.
ஒரு தனிநபரின் வாழ்க்கையில் தேவனுடைய கிருபை செயல்படும் விதம் இதுதான் – அவர் அல்லது அவள் தேவனுடைய உண்மையுள்ள ஊழியராக மாறுகிறார். இயேசு ராஜாவின் அற்புதமான கிருபையால் நமக்குப் புது வாழ்வைக் கொடுத்த அவருடைய உண்மையுள்ள ஊழியர்களாக இருக்க முயற்சிப்போமாக!