உண்மையாகவே நீங்கள் விசுவாசிதானா? அல்லது விசுவாசியாக இருக்கலாமா?

(English Version: Are You A Real Christian Or An “Almost” A Christian?)
1993ம் வருடம் பிப்ரவரி 26ம் நாள், நியூயார்க் பட்டணத்தில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தின் தரைத்தளத்தில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் ஆறு பேர் மரித்து, ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.இதன் விளைவாக, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு அநேகர் கைது செய்யப்பட்டனர். இது சர்வதேச பயங்கரவாதத்தின் ஒரு அம்சமாக இருக்க வாய்ப்பு என ஒரு சில உளவுத்துறை அதிகாரிகள் புரிந்து வைத்திருந்தனர்.
2001ம் ஆண்டு, உலக வர்த்தக மையத்தின் இரண்டு கட்டிடங்கள் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டபோது, காவல் ஆணையர் ரேமண்ட் கெல்லி என்பவர் கூறியதாவது: “முதலில் நடந்த நிகழ்வு நமக்கு ஒரு விழிப்புணர்வாக இருந்திருக்க வேண்டும்” என்பதாகும்.
தாங்கள் விசுவாசிகள் என்று தங்களுக்கு தாங்களே எடைபோட்டவர்களைப் பார்த்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இதைவிடவும் ஆணித்தரமான ஒரு எச்சரிக்கை கொடுத்து, “உண்மையாகவே நீங்கள் விசுவாசிதானா? அல்லது கிட்டத்தட்ட ஒரு விசுவாசியாக இருக்கிறீர்களா?” என்ற ஆத்மார்ந்த கேள்வியை முன் வைப்பதை மத்தேயு 25:1-13 வசனங்களில் நாம் வாசிக்கிறோம். இந்தக் கேள்வியின் முக்கியத்துவத்தை நம் இதயத்தில் பதித்து, அதற்கான தெளிவு பெற இந்தப் பகுதியை நாம் தியானிப்பது அவசியமாகிறது.
1. உவமானத்தின் விளக்கம்:
ஆவிக்குரிய சத்தியங்களை கற்றுக் கொடுப்பதற்காக நடைமுறை வாழ்க்கையின் சூழலை அடிப்படையாக கையாள்வது உவமான முறையாகும். ஒரு மணவாளன் தன் மணவாட்டியை திருமணம் செய்து தன் இருப்பிடத்திற்கு அழைத்து செல்ல வரும் நிகழ்வு தான் இந்தப் பகுதியில் உவமையாக சொல்லப்பட்டுள்ளது. மணவாட்டியின் தோழிகளாகிய கன்னிகைகள் மணவாளனை வரவேற்று மணமகளின் வீட்டிற்கு அழைத்து செல்வது அந்த நாட்களில் திருமண சடங்கின் ஒரு அம்சமாகும். மணவாளன் இரவிலும் வர வாய்ப்பு உள்ளபடியால் வெளிச்சத்திற்காக இந்தக் கன்னிகைகள் தீவட்டிகளை தங்கள் கைகளில் எடுத்து செல்வது வழக்கமாகும்.
இந்த உவமையில் மணவாளன் இரவில் வந்ததாக நாம் படிக்கிறோம்.அந்த சமயம் பத்து தோழிகள் மணவாளனை எதிர்கொண்டு செல்ல காத்திருந்தார்கள். இதில், ஐந்து பேர் தீவட்டிகளோடு எண்ணையும் கொண்டு போனார்கள். மற்ற ஐந்து பேர் தீவட்டியைக் கொண்டு போனார்கள் – எண்ணெயைக் கொண்டு போகவில்லை. எண்ணை கொண்டு போனவர்கள் கலியாண வீட்டிற்குள் மணவாளனோடு செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். மற்றவர்கள் – எவ்வளவோ மன்றாடியும் – கலியாண விருந்துக்கு அனுமதிக்கப்படவில்லை.
கிறிஸ்து மணவாளனாக இந்த உவமையில் சித்தரிக்கப்படுகிறார். தங்கள் கரங்களில் எண்ணெய் எடுத்துக் கொண்டு போன புத்தியுள்ள கன்னிகைகள், கிறிஸ்துவை எதிர்கொண்டு செல்ல ஆயத்தமாய் இருக்கும் உண்மை விசுவாசிகளைப் படம் பிடித்து காட்டுகிறது. பரலோகத்திற்கு செல்ல முடியாதபடி புறம்பாக்கப்படும் ஆபத்திலுள்ள போலி கிறிஸ்தவர்கள், எண்ணை எடுத்து செல்லாத புத்தியில்லாத கன்னிகைகளை போல் இருக்கிறார்கள்.
இந்த அதிகாரத்தின் 13ம் வசனம் மிக முக்கியமான கருத்தை எடுத்தியம்புகிறது. “மனுஷகுமாரன் வரும் நாளையாவது, நாழிகையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்”. இன்னொரு வகையில் சொல்வதென்றால், இன்றைக்கே ஆண்டவரை சந்திக்க ஆயத்தமாயிருங்கள் என்பதாகும். பாவ மன்னிப்பைப் பெற முடியாத ஒரு நேரம் சீக்கிரம் வரப் போகிறது. அதாவது,இந்த உலகத்தை விட்டுச் செல்லும்போது பரலோகத்தில் பிரவேசிக்க இரண்டாம் வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்படும்.
2. உவமானம் அப்பியாசப்படுத்தல்:
இந்த உவமையிலிருந்து மூன்று நடைமுறை சத்தியங்களை நாம் பார்க்கலாம்.
சத்தியம் # 1
ஒருவர் உள்ளத்தில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டிராமல், வெளிப்பிரகாரம் அவரை அறிக்கையிட முடியும். இரண்டு கன்னியர் கூட்டத்திற்கும் அநேக ஒற்றுமை இருந்திருக்கிறது. இரு கூட்டமும் மணவாளனுக்காக தீவட்டிகளோடு காத்துக் கொண்டிருந்திருந்தவர்கள். (மத்,25:1). புத்தியில்லாத கன்னிகைகள் மணவாளனின் வருகையை எதிர்த்தவர்களல்லர். மாறாக, அவருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.
அதே வண்ணம், இன்றும் கிறிஸ்தவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள், சரியான முறையில் அவருடைய வருகையை எதிர்பார்த்திராவிட்டலும், தாங்களும் அவருக்கு காத்துக் கொண்டிருக்கிறதாக அறிக்கையிடுகிறார்கள். அதேபோல்,மணவாளனின் வருகை தாமதமான போது புத்தியுள்ளவர்களும், புத்தியில்லாதவர்களும் உறங்கிவிட்டார்கள்.
ஆனால்,புத்தியுள்ள கன்னிகைகள் ஒரு பாதுகாப்புணர்வுடன் உறங்கிக் கொண்டிருந்தனர். கிறிஸ்துவோடு உள்ள சரியான உறவால் விசுவாசிகளுக்கு கிடைக்கப்பெற்ற நேர்த்தியான பாதுகாப்பின் அடையாளம் இது எனலாம்.
புத்தியில்லாத கன்னிகைகளும் ஒருவிதமான பாதுகாப்புணர்வோடு உறங்கிக் கொண்டிருந்தது போலத் தோன்றலாம். ஆனால், வஞ்சிக்கப்பட்ட இருதயத்திலிருந்து தோன்றும் ஆபத்தான நிலையில் காணப்படும் போலி பாதுகாப்பின் அடையாளம்தான் இதுவாகும். தாங்கள் கிறிஸ்துவுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்ற பெயரில் – ஆலயத்திற்கு ஒழுங்காகச் செல்லுதல், கிறிஸ்தவ செயல்பாடுகள் மற்றும் கிறிஸ்தவர்களோடு சேர்ந்து செயல்படுவது போன்ற காரியங்களில் இவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுகிறார்கள். உண்மை என்னவென்றால், இவர்கள் ஒருக்காலும் தங்கள் பாவத்திற்காக மனந்திரும்பி, கிறிஸ்துவினால் மட்டும் அருளப்படும் மறுபிறப்பை அனுபவமாக்கியிராதவர்களாவர்.
இப்படிப்பட்ட போலி கிறிஸ்தவர்கள் பல தன்மை உடையவர்களாவர்.
அ) கடவுளைப் பற்றிய அவர்களது பார்வை முற்றிலும் தவறானது. ஒருபோதும் என்னை அவர் தள்ள முடியாது. நான் அவரை சந்திக்கும் போது எனது செயல்பாடுகளை சொல்லி சமாதானப்படுத்தி, அவர் என்னை உள்ளே அனுமதிக்க செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள். ஆண்டவரே, ஆண்டவரே, கதவைத் திறவுங்கள் என்று முறையிட்ட புத்தியில்லாக் கன்னிகைகளின் நிலைமையும் இது போன்றதுதான் (மத்.25:11).
கடவுள் அன்புள்ளவர் என்பது உண்மையெனும் அதேவேளையில், அவர் பரிசுத்தமும் நீதியும் உள்ளவர். தமது குமாரனை விசுவாசியாதவர்களை நியாயம் விசாரிப்பதாக அவர்தாமே சொல்லியுள்ளார். (யோ.3:18).தாம் சொன்னதற்கு முரணாக செய்யும் பொய்யராக ஒருபோதும் அவர் இருக்க முடியாது.
ஆ) பாவத்தை பற்றிய அவர்களது பார்வை தவறானது.
பாவத்தின் விளைவை பார்க்கும்போது தங்கள் உணர்ச்சியில் சில சமயம் வரும் தாக்கமே உண்மை மனமாற்றம் எனப் போலி கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். உண்மையான மனம் திரும்புதலிலும் பாவத்தைப் பற்றிய ஆழமான உணர்ச்சிப் பெருக்கு இருக்கும் என்ற போதிலும், உண்மையான மனமாற்றம் அடையாமலும் ஒரு மேலோட்டமான உணர்வை மட்டுமே மனிதர் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
யூதாஸ், ஃபெலிக்ஸ், மற்றும் ஏசா போன்றவர்கள், தங்களுடைய பாவத்தினால் மன அழுத்தம் பெற்றவர்களாய் இருந்த பொழுதும் அவர்கள் ஒருபோதும் இரட்சிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை (மத்தேயு 27:3-5; அப். 24:25; எபி 12:16,17). பாவத்தின் விளைவினிமித்தம் வரும் உணர்ச்சி பெருக்கம் மட்டும் உண்மையான கிறிஸ்தவனின் அடையாளம் அல்ல. பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடைவதற்கு கிறிஸ்துவின் இரக்கமுள்ள பாதத்தை தேடுவதை விட்டு, பாவத்தின் விளைவுகளால் வெறும் உணர்ச்சி அடைவது நித்திய ஆக்கினைக்குத் தான் கொண்டு செல்லும் (2 கொரி.7:9-10).
இ) உலகத்தைப் பற்றிய அவர்கள் பார்வை தவறானது.
இந்த உலகத்தின் மீதும் அதன் ஆசாபாசங்கள் மீதும் அதீத அன்பு வைத்திருப்பார்கள் என்பது போலி கிறிஸ்தவர்களின் இயல்பு, உலகத்தில் ஒருவர் இருப்பது தவிர்க்கமுடியாதது; மாறாக, உலகம் ஒருவருக்குள் இருப்பதைத்தான் கிறிஸ்து கண்டிக்கிறார் என்பதை அறியாமல் இருக்கிறார்கள்.
உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஏனென்றால், ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை என்று 1 யோவான் 2:15ல் சொல்லப்பட்ட செய்தியை அறிந்தும், இந்த உலகத்தின் இச்சையிலேயே தங்களுடைய வாழ்க்கையை செலவழிக்கிறார்கள். உலகத்தின் வழிமுறைகளையே கற்பனை செய்து கொண்டு கனவு உலகத்தில் வாழ்கிறார்கள். ஒரே நேரத்தில் ஒருவன் தேவனுக்கும், உலகப்பொருளுக்கும் ஊழியம் செய்ய முடியாது என்ற மத்தேயு 6:24ம் வசனத்தின் கற்பனைக்கு தாங்கள் மாத்திரம் விலக்கப்பட்டவர்கள் என்று நினைத்துக் கொள்வது எவ்வளவு வஞ்சனைக்குரியதாய் இருக்கிறது.
ஈ) மற்றவர்களை நேசிக்க வேண்டும் என்ற அவர்கள் பார்வை தவறானது.
தங்களை சிநேகிக்கிறவர்களை மாத்திரம் தாங்கள் சிநேகிக்க நினைக்கும் ஒருதலைப்பட்ச மனப்பான்மை போலி கிறிஸ்தவர்கள் மத்தியில் மலிந்து காணப்படும் தன்மையாகும். மற்றவர்கள் பெயரில் ஆழமான காழ்ப்புணர்ச்சியும், கசப்பும் வருடக் கணக்கில் வைத்துக் கொண்டு தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அநேகர் இன்றைக்கும் இருக்கிறார்கள். தங்கள் மனைவி/கணவனிடமும், குடும்ப நண்பர்களிடமும், சபையின் மற்ற அங்கத்தினர்களிடமும், உடன் வேலை செய்பவர்களிடமும் இப்படி நடந்து கொள்ளுகிறார்கள். நான் எல்லாரையும் பொதுவாகவே நேசிக்கிறேன் என்பது அவர்களுடைய வாதம். ஆனாலும், இந்த ஒரு குறிப்பிட்ட மனுஷனை/ மனுஷியை நான் நேசிக்க முடியாது. ஏனெனில், அவர்கள் என்னை எவ்வளவு காயப்படுத்தி இருக்கிறார்கள் என்பது முக்கியம் என்று சொல்பவர்கள் உண்டு.
தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் மற்றவர்களுக்கு விரோதமாக வைராக்கியத்தை வைத்திருக்க முடியாது என்பதை வேதம் ஆணித்தரமாக சொல்லியிருக்கிறது. 1 யோவான் 4:20, 21 வசனங்கள்: “தேவனிடத்தில் அன்பு கூறுகிறேன் என்று சொல்லியும் தன் சகோதரன்/சகோதரியை பகைக்கிறவன் பொய்யனாய் இருக்கிறான். தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராதவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு கூறுவான் ?. அவர் நமக்கு கட்டளையிட்டதாவது: தேவனிடத்தில் அன்பு கூறுகிறேன் என்று சொல்லுகிறவன் தன் சகோதரனையும் சகோதரியையும் நேசிக்க வேண்டும்.” 1 யோவான் 3:13-15 மற்றும் 4:7,8 வசனங்களும் இந்த சத்தியத்தை வலியுறுத்திக் கூறுகிறது.
எனவே, புத்தியில்லாத ஐந்து கன்னிகைகளைப் போல கிறிஸ்துவை முழுமையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், புறம்பாக அவரைப் பின்பற்றுகிறோம் என்று இவர்கள் சொல்ல வாய்ப்புகள் அதிகம். இதன் அடிப்படையில், உதட்டளவில் கிறிஸ்துவை அறிக்கையிடுகிறவர்களா? அல்லாவிட்டால் நித்தியஜீவனை மெய்யாகவே பெற்ற விசுவாசிகளா? என்று நம்மை நாமே தற்பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
சத்தியம் # 2
இரட்சிப்பைப் பங்கிடவோ, பரிமாற்றம் செய்யவோ முடியாது.
மணவாளன் வந்தபோதுதான் புத்தியில்லாத கன்னிகைகள் தங்களுடைய தீவட்டியில் எண்ணெய் இல்லாததை உணர்ந்தார்கள். உடனடியாக, புத்தியுள்ள கன்னிகைகள் நோக்கி: “ எங்களுக்கும் கொஞ்சம் எண்ணை தாருங்கள்; எங்கள் தீவட்டி அணைந்து போகிறதே என்றார்கள். அதற்கு புத்தியுள்ள கன்னிகைகள்: ‘ எங்களுக்கும் உங்களுக்கும் போதுமான அளவு எண்ணை இருக்காது. எனவே நீங்கள் அதை விற்கும் இடத்தில் போய் உங்களுக்கு தேவையான அளவு வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள். (மத்.25:8-9).
இப்படி தங்களுக்கு தேவையான எண்ணெய் வாங்கச் சென்றபோது காலம் கடந்து விட்டது. கல்யாண விருந்துக்கான வாசல் அடைபட்டு விட்டது.s (மத்.25:10). புத்தியுள்ள கன்னிகைகளின் இரக்கத்தை வைத்து புத்தியில்லாத கன்னிகைகள் கல்யாண வீட்டுக்குள் பிரவேசிக்க முடியவில்லை. தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் மணவாளனுக்கு ஆயத்தமாய் இருந்திருக்க வேண்டும். இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமானால், இரட்சிப்பு என்பது தனிப்பட்ட மனிதனுக்கும், ஆண்டவருக்கும் இடையிலான ஒரு பரிமாற்றம் என்பதாகும். இதை எந்த வகையிலும் பரிமாற்றம் செய்யவும், பகிர்ந்து கொள்ளவும் முடியாது – தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் ஆண்டவரை சந்திக்க ஆயத்தமாய் இருக்க வேண்டும்.
அநேக கிறிஸ்தவர்கள் இன்று புத்தியில்லாத கன்னிகைகளைப் போல் இருக்கிறார்கள். தாங்கள் சார்ந்திருக்கிற சபையினுடைய அடிப்படையிலும் அல்லது தங்கள் பெற்றோர் கிறிஸ்தவர்களாக இருப்பதினாலும், தங்கள் கணவரோ/மனைவியோ கிறிஸ்தவர்களாக இருப்பதினாலும் தேவன் பரலோகத்தில் தங்களை விட்டு விடுவார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி தங்களைத் தாங்களே வஞ்சித்துக் கொண்டிருந்தவர்களை பார்த்து கிறிஸ்து சொன்ன வார்த்தையாவது:’ நீங்களும் மனந்திரும்பாமற் போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப் போவீர்கள்.(லூக்.13:3) என்பதாகும். இரட்சிப்பு என்பது தனிப்பட்ட அனுபவம் என்பதை யோவான் 3:3ல் எழுதப்பட்ட கிறிஸ்துவின் வார்த்தை தெளிவாக்குகிறது. “ ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்”.
நம்முடைய வாழ்க்கையை தற்பரிசோதனை செய்வோம். பரலோகத்திற்கு செல்வதற்கு நாம் சபையோடு உள்ள உறவை நம்பியிருக்கிறோமா? நண்பர்கள், பெற்றோர்கள் போன்ற உறவுகளை சார்ந்து இருக்கிறோமா?. இது உண்மையானால், நாம் வஞ்சிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தம். தனிப்பட்ட முறையில் பாவ உணர்வு பெற்று மனந்திரும்பி, நம்முடைய இரட்சிப்புக்காக கிறிஸ்துவில் விசுவாசம் வைக்காவிட்டால் நாம் மீட்கப்பட்டவர்கள் கிடையாது.
சத்தியம் # 3
கிறிஸ்தவ விசுவாசம் இறுதிவரை அவரைப் பின் தொடர்வதில் இருக்கிறது.
மணவாளன் வரத் தாமதமானபோதும் புத்தியுள்ள கன்னிகைகள், அவர் எப்பொழுது வந்தாலும் அவருடன் செல்வதற்கு ஆயத்தமாய் இருந்தார்கள். எதிர்பாராத நேரமான நடுநிசியில் அவர் வந்தாலும் அவரை சந்திக்க ஆயத்தமாய் இருந்தார்கள். இப்படித்தான் கிறிஸ்தவர்கள் விசுவாசத்தில் இறுதி வரை தரித்திருக்க வேண்டும்.
ஏதாவது ஒரு சமயத்தில் அல்லது நமக்கு வசதி இருக்கிறபோது மாத்திரம் கீழ்ப்படியக் கூடிய விசுவாசத்திற்கு கிறிஸ்து நம்மை அழைக்கவில்லை. மாறாக, நமது வாழ்வை மரணத்திற்கு கொடுக்க நேரிடினும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவைப் பின்பற்றும் தீர்மானத்திற்கு நாம் அழைக்கப்படுகிறோம்.
ஏதோ, நரகத்திற்கு தப்பி பரலோகம் செல்வதற்கான ஒரு பயணச்சீட்டு போல் செல்வச் செழிப்பு தான் இரட்சிப்பு என்று அநேக கிறிஸ்தவர்கள் இன்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இதன் முகாந்திரமே, செழிப்பு உபதேசமானது நம் காலத்தவர் மத்தியில் ஆழமாக வேரூன்றி உள்ளது. சுயத்தை வெறுத்து, சிலுவையை எடுத்து கிறிஸ்துவை பின்பற்ற வேண்டும் என்ற செய்தி சபைகளில் இன்றைக்கு பிரபலமாக இல்லை எனலாம். ஆனால், இதுதான் கிறிஸ்துவினுடைய நிரந்தரமான செய்தியாகும்.
இடுக்கமான வாசல் வழியாக உட்பிரவேசியுங்கள். ஏனென்றால் கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமாகவும் இருக்கிறது; ஆனால் இடுக்கமான வாசலும் அதன் வழியும்தான் நித்திய ஜீவனுக்கு நேரானது.(மத்.7:13-14). இதன் வாசல் இடுக்கமானது மட்டுமல்ல; அதன் வழியும் குறுகலானது என்பது நாம் இங்கே கவனிக்க வேண்டிய அம்சம். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்ததும் இறுதிவரை பின்பற்ற வேண்டியதுமான விசுவாசம் என்பது இதிலிருந்து நமக்கு விளங்குகிறது.
கிறிஸ்துவை பின்பற்றும் சாராம்சத்தை ஒவ்வொரு விசுவாசியும் புரிந்து வைத்திருக்கிறார். எனவேதான், சாத்தானோடும், பாவத்தோடும் உலகத்தோடும் உள்ள இடைவிடாத போராட்டத்தின் மத்தியில் அவர்கள் தொடர்ந்து விசுவாசத்தில் உறுதியாய் இருக்கிறார்கள். ஒருவேளை, அவர்கள் பாவம் செய்ய நேரிட்டாலும் உடனடியாக உண்மையில் மனந்திரும்பி மறுபடியும் மன்னிப்பை தேடுகிறார்கள். தங்களுடைய பாவத்திற்காக சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து இயேசு பாவத்தைக் குறித்து வேதனைப்படுகிறார் என்பதாலேயே இந்த ஆபத்தில் அவர்கள் தங்கி இருக்க மாட்டார்கள். தங்களுடைய எந்த பாவங்களுக்காக கிறிஸ்து விலைக்கிரையம் செலுத்தினாரோ, அந்தப் பாவங்களில் தரித்திருப்பதை விரும்பாமல் அவைகளை ஆபத்தாகவே கருதுவார்கள்.
இங்கே என்னைத் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்; விசுவாசத்திலே தொடர்ந்து இருப்பதனாலேயே ஒரு மனிதன் ரட்சிக்கப்படுவான் என்று நான் சொல்லவில்லை. கிறிஸ்துவினால் மட்டுமே; கிருபையினால் மட்டுமே; விசுவாசத்தினால் மட்டுமே இரட்சிப்பு என்ற வேத சத்தியத்தை நான் முழுமையாக சார்ந்து இருக்கிறவன். (யோவான் 6:47; எபே.2:8,9; தீத்து.3:5).. எனவே விசுவாசத்தில் ஒருவர் தொடருகிறார் என்பதினாலேயே ஒருவர் இரட்சிக்கப்படுவதில்லை. ஒருவர் விசுவாசத்தில் தொடர்ந்து நிலைத்திருப்பது என்பது உண்மையான இரட்சிப்பின் விளைவு என்றுதான் சொல்ல வேண்டும்.
நம்முடைய வாழ்க்கையை நாம் ஆராய்ந்து பார்ப்போம்.சவால் விடும் கடினமான சூழ்நிலைகள் நம்மை தாக்கும்போதும் நாம் விசுவாசத்தை தரித்திருக்கிறவர்களா?
இறுதி சிந்தனைகள்:
கிறிஸ்தவனாய் இருந்து கொண்டே நான் எவ்வளவு தூரம் இந்த உலகத்தோடு நெருக்கமாக இருக்க முடியும் என்று அநேக கிறிஸ்தவர்கள் கேட்கிறார்கள். இந்த அடிப்படையில், கிறிஸ்துவை எவ்வளவு நெருக்கமாக பெற்று உண்மையான விசுவாசிகளாக இருக்க முடியும் என்பதை நாம் உணர வேண்டும். “கிட்டத்தட்ட கிறிஸ்தவர்கள்” என்னும் நிலை மிக சுலபமானது. இப்படிபட்ட ஒரு நிலைமைக்கு உலகத்தில் எந்த விலையும் கொடுக்க வேண்டியதில்லை.
ஆனால் எதிர்வரும் நித்திய ஜீவ வாழ்வில் அவர்கள் எல்லாவற்றையும் இழக்க நேரிடும். உண்மையான விசுவாசியாக இருப்பதற்கும், “கிட்டத்தட்ட கிறிஸ்தவனாய்” இருப்பதற்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை நியாயத் தீர்ப்பு நாளில் நாம் அறிய நேரிட்டால் அது எவ்வளவு பயங்கரமானது? இந்த வித்தியாசமானது பரலோகத்திற்கும் நரகத்திற்கும் உள்ள இடைவெளியை போன்றது.
நாம் எச்சரிக்கை அடைவோமாக: “நரகத்திற்குப் போகிறவனின் பாதை நல்ல எண்ணங்களால் நிறைந்திருக்கிறது” என்ற சொல் எவ்வளவு உண்மையானது. நம்மில் யாரைப் பற்றியாவது இந்த கூற்று உண்மையாக இருக்கக் கூடாது என்பது என்னுடைய வாஞ்சை.
புத்தியில்லாத கன்னிகைகள் காலம் கடந்து இதை அறிந்து கொண்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் நீங்கள் காணப்படக் கூடாது என்று நான் அன்போடு வேண்டுகிறேன். எனவே, இப்பொழுதே பாவத்திற்காக மனம் திரும்பி கிறிஸ்துவிடம் மன்னிப்பு கேட்டு பெற்று அவரைப் பின்பற்றுபவர்களாகுங்கள். இதற்கு முன் இதைச் செய்யாமல் இருந்தால் இப்போதே இப்படிச் செய்யுங்கள். உடனடியாக அவர் உங்களுடைய விண்ணப்பத்தை அங்கீகரிப்பார். தேவன் தமது பரிசுத்த ஆவியானவரை உங்களில் வாசமாக இருக்க அருள் புரிவார். உங்களது பெலத்தால் வாழ முடியாத மெய் வாழ்வை வாழ்வதற்கு பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு துணை செய்வார். இந்த விசுவாசத்தில் தொடர்வதுதான் நீங்கள் உண்மையான விசுவாசமுள்ள கிறிஸ்தவர்கள் என்பதற்கு அத்தாட்சியாகும்.