உண்மையான வெற்றிக்கு வழிவகுக்கும் 3 தெய்வீகப் பழக்கங்கள்

Posted byTamil Editor June 13, 2023 Comments:0

(English Version : 3 Godly habits that lead to true success)

பழைய ஏற்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ள ஒரு பக்தியுள்ள மனிதரான எஸ்றா, தேவனால்  வரையறுக்கப்பட்ட உண்மையான மற்றும் நீடித்திருக்கும் வெற்றியின் ரகசியத்தை விளக்குகிறார். தேவனுடைய வார்த்தையில் தேறினவனான எஸ்றா, 3 ஆவிக்குரிய பழக்கங்களைப் பின்பற்றியதன் விளைவாக தனது வாழ்க்கையில் [எஸ்றா 7:9] “தேவனின் கிருபையுள்ள கரத்தை” [அதாவது, உண்மையான வெற்றியை] அனுபவித்தார். மேலும் எஸ்றா 7:10 ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம், “கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.”

இந்த வசனம் எஸ்றாவின் இருதயம் 3 பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதற்காக பக்குவப்பட்டிருந்தது அல்லது அர்ப்பணிக்கப்பட்டிருந்தது என்று நமக்குக் கற்பிக்கிறது:

(1) வேத வசனத்தை ஆராய்வது

(2) வேத வசனத்தின்படி செய்வது

(3) வேத வசனத்தை உபதேசிப்பது

தேவனால் வரையறுக்கப்பட்ட உண்மையான வெற்றியை நாமும் அனுபவிக்க விரும்பினால் இவை ஒவ்வொன்றையும் கடைப்பிடிப்பது அவசியம்.

பழக்கம் # 1. எஸ்றாவைப் போலவே, நாமும் தேவனுடைய வார்த்தையை விடாமுயற்சியுடன் ஆராய நம் இருதயங்களை பக்குவப்படுத்த வேண்டும்.

“ஏனென்றால், எஸ்றா கர்ததருடைய கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.”

 தேவனுடைய வார்த்தையை  தனது சொந்த ஆத்துமாவின் ஈடேற்றத்திற்காக படிப்பதே, எஸ்றா தனது இருதயத்தில் விரும்பிய முதல் மற்றும் முக்கிய பழக்கமாக இருந்தது.  போதகராக இருந்தாலும் அவர் மாணவராகவும் இருந்தார். நாமும், எஸ்றாவைப் போலவே, நம்முடைய சொந்த ஆத்துமாக்களின் ஈடேற்றத்திற்காக  தேவனுடைய வார்த்தையை விடாமுயற்சியுடன் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அதுதான் ஆரம்பப் புள்ளி.

வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது [2 தீமோத்தேயு 3:16-17]. எல்லாவிதமான சோதனைகளையும் திறம்பட கையாளும் ஆயுதம் வேதம் என்றால் [எபேசியர் 6:17], அது நம் இருதயங்களில் பாதுகாக்கப்பட வேண்டும் [சங்கீதம் 119:11]. விசுவாசிகளின் அலமாரியில் ஒரு வேதமோ அல்லது பல வேதாகமங்களோ இருந்தால் சாத்தான் தப்பி ஓட மாட்டான். வேதத்தை கையில் எடுத்துச் சென்றாலும் ஓடமாட்டான். வேத வசனங்களை எடுத்துப் பிரயோகிக்கும் போதுதான் ஓடுவான்!

சிறுவர்களுக்கான  வேத வகுப்பை வழக்கமாக நடத்தும் போதகர் இல்லாத நிலையில், ஒரு புதிய போதகர் அந்த வகுப்பில் போதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். அவர்கள் எவ்வளவு  தெரிந்ததிருக்கிறார்கள் என்பதை சோதித்துப் பார்க்க அவர் முடிவு செய்தார், எனவே எரிகோவின் சுவர்களை இடித்தது யார் என்று அவர்களிடம் கேட்டார். எல்லா சிறுவர்களும் அதை தாங்கள் இடிக்கவில்லை என்று மறுத்தனர், போதகர் அவர்களின் அறியாமையைக் கண்டு திகைத்துப்போனார்.

அந்த வகுப்பிற்கு பின் நடந்த  மூப்பர்கள் கூட்டத்தில், தனது  இந்த அனுபவத்தைப் பற்றி இவ்வாறு பேசினார். “எரிகோவின் சுவர்களை இடித்தது யார் என்று அவர்களில் ஒருவருக்கும் தெரியவில்லை,” என்று புலம்பினார். கடைசி வரை மூப்பர்கள் குழு அமைதியாக இருந்தது, இறுதியில் சர்ச்சையில் அனுபவம் வாய்ந்த ஒரு மூத்த பிரசங்கியார் இவ்வாறு கூறினார். “பிரங்கியாரே, இது உங்களை மிகவும் தொந்தரவு செய்வதாகத் தெரிகிறது.

எப்படியானாலும், அவர்கள் பிறந்ததிலிருந்து அந்த சிறுவர்கள் அனைவரையும் நான் அறிவேன், அவர்கள் நல்ல பையன்கள். அவர்கள் தெரியாது என்று சொன்னால், நான் அவர்களை நம்புகிறேன். சபையிலுள்ள  பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு நிதியில் இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து, அந்த உடைந்த சுவர்களை சரிசெய்து விடுங்கள்.” என்று கூறினார்.

 இது விசுவாசிகள் என்று கூறிக்கொள்ளும் பலருக்கு பொருந்தக்கூடிய படமாக இருக்கிறது! இன்று திருச்சபை பலவீனமாக இருப்பதில் ஆச்சரியமில்லை! நாம் பலமாக இருக்க விரும்பினால், நம்முடைய வேதத்தை நன்றாக படிக்க வேண்டும். பயனுள்ள வேத வாசிப்பானது 3 அடிப்படைக் கொள்கைகளைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது:

(1) வசனத்தைப் படித்தல் [அது என்ன சொல்கிறது?]

(2) வசனத்தை விளக்குதல் [அதன் பொருள் என்ன?] மற்றும்

(3) வசனத்தை செயல்முறைபடுத்துதல் [இது எனது வாழ்க்கைக்கு எவ்வாறு பொருந்தும்?].

“இந்த வசனம் அல்லது வசனப்பகுதியின் அர்த்தம் என்ன?” என்று கேட்கும் போது. அதை  பெற்றுக்கொள்கிறவர்கள் யார் என்பதை மனதில் வைத்திருப்பது அவசியம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், “இது  எழுதப்பட்ட அக்காலத்தின் மக்களுக்கு என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது?”  என்பது மைய சிந்தையாக இருக்க வேண்டும். நாம் அதைச் சரியாகப் கவனிக்கவில்லை என்றால், வசனத்தின் தவறான விளக்கத்திற்கு நாம் வந்துவிடுவோம், அது வசனத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும்.

ஆய்வு வேதாகமங்கள், விளக்கவுரைகள் மற்றும் ஆரோக்கியமான பிரசங்கிமார்கள் போன்ற பயனுள்ள ஆதாரங்களை கர்த்தர் தமது திருச்சபைக்கு  கொடுத்து ஆசீர்வதித்துள்ளார். இருப்பினும், இந்த ஆய்வுரைகளைக் கலந்தாலோசிப்பதற்கு முன், நாம் முதலில் ஜெபிக்க வேண்டும். நாம் சொந்தமாக வேதத்தைப் படிக்கும்போது புரிந்துகொள்ள நம் கண்களைத் திறக்கும்படி பரிசுத்த ஆவியானவரிடம் கேட்க வேண்டும். அதற்குப் பிறகுதான் இந்த மற்ற ஆய்வுரைகளைக் கலந்தாலோசிக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நம் ஆத்துமாடன் நேரடியாக பேசும் தேவனின் வார்த்தையை விட மற்ற ஆய்வுரைகள் நம்மிடம் பேச அனுமதிப்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம், காலையில் 15 நிமிடங்களும் இரவில் 15 நிமிடங்களும் தேவனுடைய வார்த்தையை முறையாகப் படிப்பது மிகுந்த நன்மைகளை தருவதாக அமையும். தேவனுடைய வார்த்தையைப் படிக்க 24 மணி நேர நாளில் 30 நிமிடங்களை ஒருவர் எளிதாக ஒதுக்க முடியும்.  ஜெபத்திற்கு கூடுதல் நேரமும் அவசியம். பொதுவாக நமக்கு விருப்பமானதைச் செய்ய எப்போதும் நேரத்தைக் கண்டுபிடிப்போம். எனவே தேவனுடைய வார்த்தையும் ஜெபமும் விசுவாசிகளுக்கு முதன்மையான ஆர்வமாக இருக்க வேண்டாமா?

ஆனபடியால், நம் வாழ்வில் உண்மையான வெற்றியை நாம் விரும்பினால், தேவனுடைய வார்த்தையை விடாமுயற்சியுடன் படிக்க வேண்டும்.

பழக்கம் # 2. எஸ்றாவைப் போலவே, நாமும் தேவனுடைய வார்த்தையை விடாமுயற்சியுடன் செயல்முறைப்படுத்த நம் இருதயங்களை பக்குவப்படுத்த வேண்டும்.

“ஏனென்றால், எஸ்றா  கர்த்தருடைய  பிரமாணத்தைக் கடைப்பிடிப்பதில் தன்னை அர்ப்பணித்திருந்தார்.”

தேவனுடைய வார்த்தையைப் படிப்பதன் மூலம் கற்றுக்கொண்டதைத் தனது சொந்த வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதே எஸ்றா தனது இருதயத்தை பக்குவப்படுத்திய  இரண்டாவது பழக்கமாக இருந்தது. நம் இருதயங்களும் அதையே பின்தொடர வேண்டும். நாம் தேவனுடைய வார்த்தையைப் படித்து, அதை நாமே கடைப்பிடிக்காமல் இருந்தால், அது சுய ஏமாற்றமாகும். “வெறுமனே வார்த்தையைக் கேட்டு உங்களையே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்” என்று தெளிவாக நினைவூட்டப்படுகிறோம்.  “திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாயும் இருக்க வேண்டும்” [யாக்கோபு 1:22]! இயேசுவே இவ்வாறு கூறியிருக்கிறார், “தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள்” [லூக்கா 11:28]. தேவனுடைய வார்த்தையைத் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்காமல் பிறரைக் கண்டனம் செய்வது எவ்வளவு எளிது என்பதை பின்வரும் எடுத்துக்காட்டு விளக்குகிறது.

மேற்கில் ஒரு எல்லைப்புற குடியேற்ற பகுதியில் கூறப்படும் கதையொன்று இது, அதன் மக்கள் மரம் வெட்டும் தொழிலை செய்பவர்கள். அந்த  ஊருக்கு ஒரு  சபைக்கட்டிடம் தேவைபட்டது, அதனால் அவர்கள் அதைக் கட்டி முடித்து, ஒரு மந்திரியை அழைத்து அதன் திறப்பு விழாவை நடத்தி முடித்தார்கள்.  அந்த சபையின் பிரங்கியார் ஒரு குறிப்பிட்ட நாள் வரை அந்த சபையின் உறுப்பினர்கள் மீது நன்மதிப்பை வைத்திருந்தார். ஒரு நாள்  அவர் மிகவும் கவலைக்குரிய ஒன்றைக் காண நேர்ந்தது. அவருடைய சபை உறுப்பினர்கள் பலர் ஆற்றங்கரையிலிருக்கும்  சில மரக்கட்டைகளை திருடுவதை அவர் கண்டார். இவை வேறொரு கிராமத்திலிருந்து  சேகரிக்கப்பட்டு,  விற்பதற்காக வைக்கப்பட்டிருந்து மரக்கட்டைகளாகும்.    வெட்டப்பட்ட ஒவ்வொரு தண்டின் முனையிலும் அதனுடைய உரிமையாளரின் முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது.

அந்த  போதகரின் பெரும் துயரத்திற்குகாரணம் என்னவென்றால்,  தனது சபை உறுப்பினர்கள் மரத்துண்டுகளை இழுத்து, முத்திரை காணப்பட்ட முனையை அறுத்து, அதில் தங்கள் முத்திரையை பதித்து விற்பதைக் கண்டார். அடுத்த ஞாயிற்றுக்கிழமை, அவர் பத்துக் கட்டளைகளில் எட்டாவது கட்டளையான “திருடாதே என்ற வசனத்தில் ஒரு வல்லமையான பிரசங்கத்தைத் தயாரித்தார் [யாத்திராகமம் 20:15]. ஆராதனையின் முடிவில், “அற்புதமான செய்தி, வல்லமையான சிறந்த பிரசங்கம்.” என்று அவரது மக்கள் வரிசையாக நின்று அவரை வாழ்த்தினர்.

இருப்பினும், பிரங்கியார் அடுத்த வாரமும்  ஆற்றுக்கு சென்றுப் பார்த்தபோது, ​​தனது உறுப்பினர்கள் தொடர்ந்து மரக்கட்டைகளைத் திருடுவதைக் கண்டார். இது அவரை மிகவும் வருத்தமடையச் செய்தது. எனவே அவர் வீட்டிற்குச் சென்று அடுத்த வாரத்திற்கான ஒரு பிரசங்கத்தை ஆயத்தப்படுத்தினார். “உன் அண்டை வீட்டுக் கட்டைகளின் நுனியைத் துண்டிக்காதே” என்பதே அதன் தலைப்பு. அவர் பிரசங்கித்து முடித்ததும், அந்த சபை அவரை உடனடியாக பணிநீக்கம் செய்தது!

இத்தகைய போலித்தனத்திலிருந்து கர்த்தர் நம்மைக் காப்பாராக! தேவனுடைய வார்த்தையை முதலில் நம் ஆத்துமாக்களுக்குப் பதிலாக நம் அண்டை வீட்டாருக்கு மட்டுமே பயன்படுத்துவதற்காக ஒருபோதும் எடுத்துக் கொள்ளக்கூடாது. யோசுவாவுக்கு தேவன் கொடுத்த  வார்த்தையை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும், “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய் [யோசுவா. 1:8]. தேவனுடைய வார்த்தையை [இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக ” [“இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்க வேண்டும்” ]என்ற வார்த்தையின் விளைவாக மட்டுமே “அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய் “என்பதை நீங்கள் கவனிக்கிறீர்களா?!

எனவே, நம் வாழ்வில் உண்மையான வெற்றியை நாம் விரும்பினால், தேவனுடைய வார்த்தையை நம் சொந்த வாழ்க்கையில் மனதார கடைப்பிடிக்க விரும்பக்கடவோம்.

பழக்கம் # 3. எஸ்றாவைப் போலவே, நாமும் தேவனுடைய வார்த்தையை விடாமுயற்சியுடன் கற்பிக்க நம் இருதயங்களை அமைக்க வேண்டும்.

“எஸ்றா இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.”

தேவனுடைய வார்த்தையை மற்றவர்களுக்குக் கற்பிப்பதே எஸ்றா தனது இதயத்தை பக்குவப்படுத்திய மூன்றாவது பழக்கம். மத்தேயு 28:20 ஆம் வசனமானது வேதத்தில் உள்ள அனைத்தையும் மற்றவர்களுக்குக் கற்பிக்க ஒவ்வொரு விசுவாசிக்கும் கட்டளையிடுகிறது. சபையின்  போதிக்கும் பொறுப்புகளுக்கு  அதிகாரப்பூர்வமாக அனைவரும் அழைக்கப்படாவிட்டாலும், ஒவ்வொரு விசுவாசிகளும் தேவனுடைய வார்த்தையை மற்றவர்களுக்கு  அதாவது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு, முதிர்ந்த விசுவாசிகள் புதிய விசுவாசிகளுக்கு  சரியான முறையில் கற்பிக்க முடியும், கற்பிக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் நம்மை விட குறைவாக அறிந்த ஒருவரைக் கண்டுபிடித்து உருவாக்க  வேண்டும். தேவனின் வார்த்தையை அவர்களுக்கு கற்பிக்க முயற்சிக்க வேண்டும்!  அப்படிபட்ட வாய்ப்புகளுக்காக நாம் உண்மையாக ஜெபித்தால், தேவன் நமக்கு கதவுகளைத் திறப்பார்!

எஸ்றா தேவனுடைய வார்த்தையைப் படித்தார், பயிற்சி செய்தார், பின்னர் மக்களுக்குக் கற்பித்தார். இதன் விளைவாக, அவர் உண்மையான வெற்றியை அனுபவித்தார். நாமும் இந்த 3 பழக்கங்களுக்கு நம் இருதயங்களை பக்குவப்படுத்துவதன் மூலம் உண்மையான வெற்றியை அனுபவிக்க முடியும். அவ்வாறு செய்ய கர்த்தர் நமக்கு உதவுவாராக!

Category
Subscribe
Notify of
guest
0 கருத்துக்கள்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments