எல்லா உறவுகளையும் அச்சுறுத்தும் ஒரு விஷயம்

(English Version: The One Thing That Threatens All Relationships)
எல்லா உறவுகளையும் அச்சுறுத்தும் ஒரு விஷயம் எதுவென்று உங்களால் யூகிக்க முடிகிறதா? அது கசப்பு! இது திருமணங்கள், சபைகள் மற்றும் எல்லா உறவுகளையும் பாதிக்கிறது. கசப்பானது ஆரோக்கியமான கிறிஸ்தவ வாழ்க்கைக்கு மிகவும் ஆபத்தான வாதைகளில் ஒன்றாகும். இது சாதாரண ஜலதோஷத்தை விட வேகமாக பரவக்கூடியது, இது ஒருவரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் உயிர்ச்சக்தியை தின்றுவிடுகிறது. இது “ஆத்துமாவின் புற்றுநோய்”, ஆகவே ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானவர்கள் இதனால் பாதிக்கப்படைவதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த வாதைக்கு ஒரு சிகிச்சையுண்டு. தமிழில் மன்னிப்பு என்ற அழகான ஒரு வார்த்தை இருக்கிறது, இதை ஆங்கிலத்தில் “forgive” என்று அழைக்கின்றனர். இது ஒரு சாதாரணமான வார்த்தையாக இருந்தாலும், இதனுடைய உண்மையான சாராம்சம், இதன் கடைசி பாகமாகிய “give” என்பதில் அடங்கியுள்ளது. For-GIVE என்ற வார்த்தையானது உங்களுக்கு தவறிழைத்தவர்களை அதிலிருந்து விடுவிப்பது என்ற பொருளைத் தருகிறது. பதிலடி கொடுப்பதற்கு அனைத்து உரிமைகள் இருந்தும் அவற்றையெல்லாம் கைவிடுவது மற்றும் இருதயத்தில் ஒருவர் மீதான கசப்புணர்வு தவிர்ப்பது என்பதையும் இது பொருள்படுத்துகிறது.
வேதம் மன்னிப்பதை எதிர்பார்ப்பது மட்டுமல்லாமல், விசுவாசிகளான கிறிஸ்தவர்கள் மன்னிக்கும் மக்களாக வாழவும் கட்டளையிடுகிறது. வேதமானது வேறு எந்த ஆரோக்கியமான விருப்பத்தையும் ஊக்குவிப்பது கிடையாது. மன்னிக்கும் விஷயத்தில் மிக உயர்ந்த தரத்தை கடைப்பிடிக்க விசுவாசிகள் அழைக்கப்படுகிறார்கள். தேவன் மன்னிப்பதைப் போல மன்னிக்க நாம் அழைக்கப்படுகிறோம், “ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (எபேசியர் 4:32; கொலோசெயர் 3:13). ஆம், மன்னிப்பது எளிதான செயல் அல்ல., “மன்னிப்பதில் பயனில்லை. அவர்கள் என்னை மீண்டும் காயப்படுத்துவார்கள். முதலில் நான் அவர்களை ஒருபோதும் மன்னித்திருக்கக்கூடாது. அவர்கள் ஒருபோதும் மாறமாட்டார்கள்” என்று சில சமயங்களில் எண்ணத்தோன்றும். எனினும் இத்தகைய பாவ சிந்தனையை குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும்! “தேவனால் கூடாதது ஒன்றுமில்லை” [எபிரெயர் 6:18]. எனவே, நாம் சோர்ந்துப்போக தேவையில்லை. தேவன் நம் இருதயங்களில் செயல்படுகிறார், இந்த சோதனைகள் மூலம் நம்மை பலப்படுத்துகிறார் என்று நாம் கண்டிப்பாக விசுவாசிக்க வேண்டும். அவர் நம்மை உடைத்து எரியாமல் கட்டியெழுப்ப விரும்புகிறார். இருப்பினும், சில நேரங்களில், கட்டிடம் உடைக்கப்படுவது அவசியம். பரிசுத்த ஆவியின் வல்லமையில் சார்ந்துக்கொண்டு, விடாமுயற்சியுடன் இருந்தால் நமக்கு வெற்றி கிடைக்கும்.
நம் இருதயத்தில் கசப்பை வளர்த்துக் கொண்டிருப்போமானால் தேவனுடைய மன்னிப்பைப் பெற நாம் முயற்சிக்க வேண்டும். அதுவே இந்த பாவத்தை வெல்வதற்கான முதல் படியாகும். நம்மை காயப்படுத்தியவர்களை மன்னிக்க நாம் தேவனிடம் பெலனை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் மற்றவர்களின் பாவங்கள் நம் நினைவில் வரும்போது கசப்பான சிந்தனை வரும்போது, நம்முடைய சொந்த பாவங்களைப் பற்றி ஆழமாக மற்றும் உறுதியாக சிந்திக்க வேண்டும்.
யாரோ ஒருவர் இப்படியாக எழுதியிருக்கிறார், “மன்னிக்கும் இருதயமுள்ளவர்கள் தங்கள் பாவத்தைப் பற்றி ஆழ்ந்த நினைவுக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் மற்றவர்களின் பாவங்களைப் பற்றி ஒரு மேலோட்டமான நினைவுக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் சொந்த பாவத்தை நீண்டகாலத்திற்கு நினைவில் வைத்திருப்பது துக்ககரமானது, ஆனால் இயேசு கிறிஸ்துவிற்குள் மன்னிக்கப்பட்ட புதிய சுதந்திரத்தை அவர்களின் இருதயங்கள் பிரதிபலிப்பதால் அப்படி நினைவுகூருதல் மகிழ்ச்சியைத் தருகிறது. தங்களுக்கு எதிராக பாவம் செய்த மற்றவர்களுக்கும் அதே மன்னிப்பை வழங்கினால் சம மகிழ்ச்சி அவர்களின் இதயங்களை நிரப்பும்”.
தன் கணவா் ஆபாசப் படங்களை பார்க்கும் பாவ பழக்கத்தைப் பற்றி சொல்ல தன் போதகரிடம் சென்ற ஒரு மனைவியைப் பற்றிய ஒரு கட்டுரையை படித்தது எனக்கு நினைவிருக்கிறது. இதைப் பற்றி தான் தன்னுடைய கணவனுடன் வாதம் செய்ததாகவும், அதனிமித்தம் அந்த கணவன் மனந்திரும்பி அவளிடம் மன்னிப்பு கோரினதாக என்னிடம் கூறினாள். ஆனாலும், அவளால் அந்த பாவத்தை மேம்போக்காக எடுத்துக்கொள்ள முடியவில்லை, எனவே இந்த பாதகத்தைச் செய்ததால் அவர் எவ்வளவு கேடு கெட்டவர் என்பதையும், அவரை விட்டு விலகுவது பற்றி யோசித்தக்கொண்டிருப்பதைப் பற்றியும் அந்த போதகரிடம் விவரித்தாள்.
அவளுடைய கணவருக்கு எதிராக அவளது இருதயம் மிகவும் கசப்பு உணர்வை கொண்டிருந்தது. அவளுடைய கணவர் தனது செயலுக்காக வருத்தப்பட்டு மனந்திரும்பிவிட்ட நிலையிலும், அவள் தன் இருதயத்தின் கசப்பின் தன்மைய உணராமல் தனது சொந்த பாவத்தைக் காணத் தவறிவிட்டாள். அதுவே பாவத்தின் ஆபத்து என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
மற்றவர்களின் பாவங்களை [அவர்கள் மனந்திரும்பிய பிறகும்] குறித்த தெளிவான பார்வையும்,ஞாபகமும் நம்மிடம் உள்ளது, ஆனால், நம்முடைய பாவங்களை குருடர்களாக மறந்துவிடுகிறோம்! எனவே மற்றவர்களின் பாவங்களுக்குப் பதிலாக நம் பாவங்களை பிரதிபலிப்பதை உணர்வுபூர்வமான ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். பெருமைமிக்க, சுயநீதியுள்ள, மன்னிக்காத இருதயத்திற்கு வேறு எந்த சிகிச்சையும் இல்லை! உண்மையில், மன்னிப்பு என்பது நமக்குத் தேவைப்படும்போது ஒரு அழகான சொல்லாக இருக்கிறது, ஆனால் அதே சமயம் நாம் அதை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டியிருக்கும் போது ஒரு அசிங்கமான சொல்லாகிவிடுகிறது. அதேபோல் இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால், “நாம் கெட்ட குமாரன்களை மிக சீக்கிரமாக மன்னித்துவிட்ட, சுயநீதியுள்ள மூத்த குமரானாக இருக்கிறோம்” [கெய்த் மதிசன், Keith Mathison]!
மன்னிக்காமலிருப்பது அவிசுவாசிகளின் பண்பு [ரோமர் 1:31, 2 தீமோத்தேயு 3: 3]. இரக்கமுள்ள மற்றும் மன்னிக்கும் ஆவியானது விசுவாசியான ஒரு கிறிஸ்தவரை வேறுபடுத்தி வேதம் மீண்டும் மீண்டும் கூறுகிறது [1 யோவான் 3:10, 14-15]. நம் வாழ்க்கை முறை கசப்பான மற்றும் மன்னிக்காத தன்மையை வெளிப்படுத்துகிறது என்றால், பாவங்கள் மன்னிக்கப்பட்ட அனுபவத்தை நாம் தனிப்பட்ட முறையில் ருசித்திருக்கிறோமா என்று நம் வாழ்க்கையை நேர்மையாக ஆராய வேண்டியது அவசியமாகிறது. தாமஸ் வாட்சன் இவ்வாறு கூறினார்,
“நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை அறிய, பரலோகத்திற்கு போய் பார்க்க வேண்டியதில்லை. நம்முடைய இருதயங்களைப் பார்த்து, மற்றவர்களை மன்னிக்க முடியுமா என்று கேட்டுப்பார்த்தால் போதுமானது. அப்படி நம்மால் முடிந்தால், தேவன் நம்மை மன்னித்துவிட்டார் என்பதில் சந்தேகமில்லை”.
சிந்தப்பட்ட இரத்தத்தோடும், காயங்களோடும் மற்றும் நம்முடைய பாவங்களுக்காகத் துளைக்கப்பட்ட கரங்களோடும், “பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” [லூக்கா 23:34] என்று கூறின கல்வாரி மலையில் சிலுவையில் தொங்கும் இயேசுவை பார்த்தப்பிறகும் அல்லது ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாதிரும்!” [அப்போஸ்தலர் 7:60] என்று கூறி கல்லெறியப்பட்டு இரத்தச்சாட்சியாக ஸ்தேவானை பார்த்தப்பிறகும், நாம் இன்னும் கசப்பைப் பிடித்து கொண்டிருக்கிறோமா?
“நான் அந்த நபரை மன்னிக்க மாட்டேன்” என்று நாம் இன்னமும் கூறிக்கொண்டிருக்கிறோமா? தேவனுடைய மன்னிப்பை அவ்வளவு மதியற்றவர்களாக எடுத்துக் கொள்கிறோமா, அதை துஷ்பிரயோகம் செய்து, அதிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைக்கிறோமா? தேவனுக்கு முன் தாழ்மைப்படக்கடவோம், உண்மையாக மனந்திரும்புக்கடவோம், மற்றவர்களை மன்னிக்க தேவனுடைய கிருபைக்காக கண்ணீர் விடக்கடவோம். அப்படி இல்லையென்றால், தேவனிடமிருந்து கடுமையான தண்டனையை நிச்சயமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஒருவேளை நீங்கள் இப்படி கேட்கலாம், “ஜனங்கள் தங்கள் செயல்களுக்காக மனந்திரும்பாவிட்டால் என்ன செய்வது? நான் இன்னும் அவர்களை மன்னிக்க வேண்டுமா? ”என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம் அதற்கான பதில் இதுதான்: ஜனங்கள் மனந்திரும்பாவிட்டால், அது நம் கரத்தில் இல்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் கசப்பை வளர்த்துக்கொள்வதிலிருந்து நம்மைப் பாதுக்காத்து, மன்னிக்க விரும்பும் இருதயத்தை எப்போதும் வளர்த்துக் கொள்வதுதான். ஜனங்கள் ஒருவருக்கொருவர் மனந்திரும்பாவிட்டால், ஆரோக்கியமான உறவு இருக்க முடியாது.
தேவனுடனான நமது உறவில், ஒரு பாவி மனந்திரும்பாவிட்டால், அவன் அல்லது அவள் அவருடன் உறவு கொள்ள முடியாது. மற்றவர் மனந்திரும்பாவிட்டாலும் நாம் கசப்புக்கு ஆளாகாமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்து. தேவனே அவர்களுடைய பாவங்களோடு இடைப்படட்டும் ― அவர் நீதியுள்ள நியாயாதிபதி. எனவே, நியாயத்தீர்ப்பை நம் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது. அதே சமயம், ரோமர் 12:17-21 மற்றும் லூக்கா 6: 27-28 ஆகியவற்றின் போதனைகளுக்கு ஏற்ப நம்மைத் துன்புறுத்துபவர்களுக்கு முடிந்தவரை நன்மையைச் செய்ய வேண்டும்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மன்னிக்க விரும்பாத நபர் யாராவது இருக்கிறார்களா? ஒருவேளை, கணவனாகவோ அல்லது மனைவியாகவோ அல்லது பெற்றோர் அல்லது சபைஉறுப்பினராகவோ இருக்காலம், அது யாராக இருந்தாலும், அவர்களை மன்னிக்க உங்களுக்கு உதவும்படி தேவனிடம் இப்போதே ஏன் நீங்கள் உண்மையாக கேட்கக்கூடாது? அவர்களுக்கு எதிராக கசப்பு உணர்வை கொண்டிருப்பதற்கு நீங்கள் உண்மையிலேயே வருந்துகிறீர்கள் என்று தேவனிடம் கூறுங்கள். அவர் உங்களுக்கு உதவுவார்.
நினைவில் வைத்து கொள்ளுங்கள், நீங்கள் அந்த நபரை மன்னிக்கும்போது, அதை “கிறிஸ்துவின் நிமித்தம்” செய்கிறீர்கள் – கிறிஸ்துவை மகிழ்விக்கும் ஒரே நோக்கத்திற்காக செய்கிறீர்கள். மன்னிப்பு என்பது ஒருபோதும் பழிவாங்குவதில்லை, கடந்தகால பாவங்களை – அதிலும் குறிப்பாக ஒரு மனந்திரும்பிய குற்றவாளியை பாவங்களுக்காக பழிவாங்க முடியாது. மன்னிப்பானது உள் கொந்தளிப்பின் வலியிலிருந்து விலகிச் செல்ல உங்களுக்கு உதவும்.
மன்னிப்புக்கு மாற்று – முடிவற்ற செயல்களான காயம், கோபம், மனக்கசப்பு மற்றும் சுய அழிவு ஆகியவையாகும். ஆகவே ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கிறதா? நாம் சற்று சிந்திக்க வேண்டியது அவசியம்.