கர்த்தருடன் அர்த்தமுள்ள, தியான நேரத்தை கடைப்பிடிப்பது எப்படி?

(English version: “How To Have A Meaningful Quiet Time With The Lord”)
ஒரு நாள் மாலை, நீண்ட காலத்திற்கு பின்னர் அமெரிக்காவிற்கு வருகை தந்த ஓரு பேச்சாளர் ஒரு தொலைபேசி அழைப்பு செய்ய விரும்பினார். அவர் ஒரு தொலைபேசிச் சாவடிக்குள் நுழைந்தார், ஆனால் அது அவரது சொந்த நாட்டில் இருக்கும் தொலைபேசி சாவடியை விட வேறுபட்டு காணப்பட்டது. இருட்ட ஆரம்பித்ததால், அவரிடம் இருந்த விவரங்கள் அடங்கிய புத்தகத்திலிருந்த எண்ணைக் கண்டுபிடிப்பதில் சிரமப்பட்டார். அவர் மேற்கூரையில் ஒரு விளக்கைக் கவனித்தார், ஆனால் அதை எப்படி இயக்குவது என்று அவருக்குத் தெரியவில்லை. அந்தி சாயும் நேரத்தில் மீண்டும் அந்த எண்ணைத் தேட முற்பட்டபோது, வழிப்போக்கன் ஒருவன் அவரது அவல நிலையைக் கண்டு, “ஐயா, விளக்கைப் போட வேண்டுமானால், கதவைச் சாத்திவிட வேண்டும்” என்றான். கதவை மூடியதும் அவர் ஆச்சரியமும் திருப்தியும் அடையும் வகையில் அந்த சாவடி வெளிச்சத்தால் நிரம்பியது. விரைவில் எண்ணைக் கண்டுபிடித்து தொலைபேசியில் தன் அழைப்பை பேசி முடித்தார்.
அதுபோலவே, தேவன் நம் இருதயங்களில் ஒளியைப் பிரகாசிக்கும்படியாக, பரப்பரப்பான நமது வாழ்க்கையை சற்று நிறுத்திவிட்டு, ஒரு அமைதியான இடத்திற்குள் செல்லவேண்டும். இருப்பினும், பல விசுவாசிகள் இந்த முக்கியமான கிறிஸ்தவ ஒழுக்கத்தை அடிக்கடி புறக்கணிக்கிறார்கள். இந்த தலைப்புடன் தொடர்புடைய நான்கு கேள்விகளைக் கேட்டு பதிலளிப்பதன் மூலம் இந்த ஒழுக்கத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க இந்த பதிவானது கிறிஸ்தவர்களை ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.
இருப்பினும், கேள்விகளைப் பார்ப்பதற்கு முன், ஒரு முக்கியமான சத்தியத்தை நினைவில் கொள்வது அவசியம். தியான நேரம் என்பது கர்த்தருடைய தயவைப் பெறுவதற்கான ஒரு வழிமுறையல்ல, ஆனால் கர்த்தர் மீது நாம் கொண்ட அன்பையும், அவரில் சார்ந்திருப்பதையும் காட்டுவதற்கான சான்றாக இருக்கிறது. கிருபையை பெற்றுக்கொள்வதற்காக நாம் வேலை செய்வதில்லை, மாறாக கிருபையிலிருந்து வேலை செய்கிறோம். இதை வேறுவிதமாகக் கூறுவதென்றால், நம்முடைய பாவங்களுக்காக சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தத்தில் விசுவாசம் வைப்பதன் மூலம் மட்டுமே வருகிற, கர்த்தருக்கு முன்பாக நம்முடைய சரியான நிலைப்பாடும், பாவத்திலிருந்து மனந்திரும்புதலும், கிருபையினாலும், விசுவாசத்தின் மூலமாக மட்டுமே இரட்சிக்கப்படுகிறோம். தியான நேரம் இரட்சிப்பைப் பின்பற்றும் ஒரு ஆவிக்குரிய ஒழுக்கம், அது இரட்சிப்பிற்கான காரணமுமல்ல, தேவனிடம் நாம் தயவைப் பெறுவதற்கான வழிழுறையுமுல்ல.
மேற்சொல்லப்பட்டவைகளை சிந்தையில் கொண்டவர்களாக படிக்க தொடருங்கள்.
1. தியான நேரம் என்றால் என்ன?
வேதத்தைப் படிப்பதிலும் [கர்த்தர் நம்மிடம் பேசுவது] ஜெபத்திலும் [நாம் கர்த்தரிடம் பேசுவது] ஒரு மனிதன் தேவனுடன் தனியாக செலவிடும் தினசரி நேரமே தியான நேரம் எனப்படுகிறது.
2. தியான நேரம் யாருக்கு அவசியம்?
ஒவ்வொரு விசுவாசியும் கர்த்தருடன் அமைதியாக இருக்க வேண்டும். 1 கொரிந்தியர் 1:9 ல் இவ்வாறு வாசிக்கிறோம், “தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.” “ஐக்கியம்” என்ற வார்த்தைக்கு விஷயங்களைப் பகிர்ந்துகொள்வது அல்லது விஷயங்களைப் பொதுவாக வைத்துக்கொள்வது என்று பொருள். இது ஒரு நெருக்கமான உறவைப் பற்றி பேசுகிறது. ஆதியாகமம் 1-2 இல் காணப்படுவது போல், தேவன் தம்முடன் ஐக்கியம் கொள்வதற்காக மனிதர்களைப் படைத்தார். ஆதாமின் பாவத்தினால் தேவனுடனான நமது உறவை முறிந்துப்போனாலும், கிறிஸ்து மூலம் அந்த உடைந்த உறவை தேவன் மீட்டெடுக்கிறார். இந்த உறவானது தொடர்ச்சியான ஐக்கியத்தின் மூலம் வளர்க்கப்படுவதற்கு தியான நேரமும் ஒரு வழியாகும், இதன் மூலம் ஐக்கியத்தை வளர்க்கவும் புதுப்பிக்கவும் கூடும்.
3. ஒருவர் ஏன் அமைதியான நேரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்?
காரணங்கள் பல உள்ளன, அவற்றில் இங்கே சிலவற்றைக் காணலாம்.
1. கிறிஸ்துவைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள். பவுலுடைய வாழ்க்கையின் பிற்பகுதியிலும் அவருடைய ஏக்கம் “நான் கிறிஸ்துவை அறிய விரும்புகிறேன்” [பிலிப்பியர் 3:10] என்பதாக இருந்தது. கிறிஸ்துவைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் வெளிப்படுத்துகிற தேவனுடைய வார்த்தையைப் படிப்பதில் ஒருவர் அதிக நேரம் செலவிடும்போது கிறிஸ்துவைப் பற்றிய அறிவு அதிகரிக்கிறது.
2. வழிகாட்டுதலைத் தேடுங்கள். தாவீது இவ்வாறு கூறுகிறான், “கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, எனக்குப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்” [சங்கீதம் 25:4-5]. நல்ல மேய்ப்பனிடமிருந்து தொடர்ந்து வழிகாட்டுதல் தேவைப்படும் ஆடுகள் நாம். அவருடன் தனியாக நேரத்தை நாம் செலவிடும்போது, அவர் தம் வார்த்தையின் மூலம் நம்மை வழிநடத்துகிறார்.
3. விசுவாசத்தில் பலப்படுங்கள். விசுவாச வாழ்க்கை ரோஜாக்களின் படுக்கை அல்ல. அதில் சவால்கள் அதிகம் இருக்கிறது. “இயேசு அடிக்கடி தனிமையான இடங்களுக்குச் சென்று ஜெபித்தார்” [லூக்கா 5:16] என்பதை நாம் பார்க்கிறோம். நம் ஆண்டவரும். குருவுமானவரே பிதாவுடன் தனியாக இருக்க நேரம் ஒதுக்கினார் என்றால், இந்த ஒழுக்கத்தை நாம் புறக்கணிக்கலாமா? விசுவாசிகளின் மூன்று எதிரிகளாகிய—மாம்சம், உலகம், சாத்தான், நம் விசுவாசத்தை சீரழிக்க தொடர்ந்து அச்சுறுத்துகின்றன. தேவனுடன் தனியாக நேரத்தை செலவிட்டு, விசுவாசத்தில் நாம் பலப்படுத்தப்படுவதன் மூலம் மட்டுமே இடைவிடாமல் அச்சுறுத்துகிற இந்த பலம் வாய்ந்த எதிரிகளை எதிர்த்துப் போராட முடியும்!
மற்ற பல காரணங்களை இதனுடன் சேர்க்கலாம். ஆனால் இந்த பூமியில் நமது அன்றாட விசுவாசப் பயணத்திற்கு பலம் பெற கர்த்தருடன் தியான நேரத்தை செலவிட வேண்டியதன் அவசியத்தை நமக்கு உணர்த்த இந்த 3 காரணங்களே போதுமானவைகள்.
4. ஒருவர் எப்படி அர்த்தமுள்ள அமைதியான நேரத்தைக் கொண்டிருக்க முடியும்?
கீழ்ப்படிதல் இல்லாத அறிவு பயனற்றது என்பதால், இந்த முக்கியமான ஆவிக்குரிய ஒழுக்கமாகிய “அமைதியான நேரத்தைக் கொண்டிருக்க முடியும்?” என்பதை குறித்துப் பார்ப்போம். இதில் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள் உள்ளன.
1. ஒரு வழக்கமான நேரம். குறைந்தபட்சம், விசுவாசிகள் ஒவ்வொரு காலையிலும், ஒவ்வொரு இரவிலும் கர்த்தருடன் நேரத்தை செலவிட வழக்கமான நேரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். கர்த்தரைப் பார்க்காமல் நாம் நாளைத் தொடங்கக் கூடாது. ஹட்சன் டெய்லர் காலை ஜெபத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி, “கச்சேரி முடிந்ததும் உங்கள் கருவிகளை நீங்கள் இசைப்பதில்லை, ஆனால் அதற்கு முன்பே இசைத்து விடுகிறீர்கள்!” என்று கூறுகிறார்
காலையில் ஆராதிப்பதற்கு சரியான நேரத்தில் எழுந்திருக்க, ஒரு நியாயமான நேரத்தில் படுக்கைக்குச் செல்ல வேண்டும். காலையில் எழுந்து கர்த்தருடன் நேரத்தை செலவிட உதவுமாறு முந்தைய இரவில் நாம் ஜெபிக்க வேண்டும். மேலும் காலையில் அலாரம் அடிக்கும்போது, எழுவதைப் பற்றி யோசிப்பதை விட, நாம் உடனடியாக எழுந்திருக்க வேண்டும். எழுவதற்கான போரில் பொதுவாக முதல் ஐந்து வினாடிகளில் வெற்றி அல்லது தோல்வியடைந்துவிடுவோம் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். கர்த்தருக்கே முதல் முன்னுரிமை கொடுக்க முயல வேண்டும்.
கூடுதலாக, நாம் தொடங்கின அந்த நாளை கர்த்தருடன் முடிக்க வேண்டும். அவர் நம்மை நாள் முழுவதும் சுமந்து சென்றார். அவர் நம்முடைய நன்றிகளுக்கு உரித்தானவர்! அதனால்தான் இரவு நேர ஜெபத்தை அரைத் தூக்கத்தில் செய்வதைத் தவிர்க்க வேண்டும். கர்த்தர் நம் முழு கவனத்திற்கும் பாத்திரர்!
ஒவ்வொருவரும் தனித்தனியாக ஜெபிக்க வேண்டியிருந்தாலும், ஒவ்வொரு காலையிலும் குறைந்தது 20 நிமிடங்களும், ஒவ்வொரு இரவும் 20 நிமிடங்களும் ஒதுக்க முயற்சி செய்யலாம், பின்னர் நாட்கள் செல்லச் செல்ல அதிகரிக்கலாம். மேலும், நேரம் அனுமதித்தால், பகலில் குறைந்தபட்சம் சில நிமிடங்களாவது கர்த்தருடன் உரையாட முயற்சி செய்ய வேண்டும். கூடுதலாக, வார இறுதியில், கர்த்தருடன் செலவழிக்க அதிக நேரத்தை ஒதுக்க முயற்சி செய்யலாம்.
2. ஒரு வழக்கமான இடம். முடிந்தால், கவனச்சிதறல் இல்லாமல் கர்த்தருடன் உரையாடக்கூடிய ஒரு தனிப்பட்ட மற்றும் வசதியான இடத்தை வைத்திருப்பது நல்லது. தனியுரிமை என்பது கர்த்தருடனான நமது உறவில் பெரும் உதவியாக இருக்கும். சிலருக்கு அது வீட்டில் அல்லது காரில் கூட இடமாக இருக்கலாம். அது எந்த இடமாக இருந்தாலும், அதை நாம் “தனியான நெருக்கமான இடம்” என்று அழைக்கும் ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.
3. ஒரு வழக்கமான முறை. வேதமானது தற்செயலான எண்ணங்களின் புத்தகம் அல்ல. தேவன் தமது வெளிப்பாட்டை முற்போக்கான மற்றும் முறையான முறையில் கொடுத்துள்ளார். எனவே, முழு வேதாகமத்தையும் படிக்க உதவும் ஒரு நிலையான வேத வாசிப்பு திட்டத்தை நாம் உருவாக்கி பின்பற்ற வேண்டும். வேதவசனங்களைப் படிப்பதோடு மட்டுமல்லாமல், ஜெபத்தில் நேரத்தைச் செலவிட வேண்டும். ஜெபத்தில் தேவனைத் துதித்தல், அறிக்கையிடுதல், நன்றி கூறுதல் மற்றும் வேண்டுதல் ஆகியவை அடங்கும்.
இப்போது 4 கேள்விகளை சுருக்கமாகப் பார்த்தோம், இங்கே சில முடிவான சிந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
எந்தவொரு செயலும் ஒரு பழக்கமாக மாறுவதற்கு சுமார் 4 வாரங்கள் ஆகும். நமது அமைதியான நேரத்திற்கு நாம் இதுவரை ஒத்துப்போகவில்லை என்றால், இன்றிரவோ அல்லது நாளை காலையோ ஏன் உடனடியாக அதை தொடங்கக்கூடாது? இந்த ஒழுக்க உணர்வு வரை காத்திருந்தால், மாம்சமானது [மற்றும் பிசாசு] அந்த உணர்வு வராமலேயே தடை செய்துவிடும்.
ஆம், ஒரு விசுவாசியானவன் சில சமயங்களில் அமைதியான காலங்களில் ஆவிக்குரிய வறட்சியான சூழ்நிலையை அனுபவிக்கக்கூடும். இருப்பினும், அவை இந்த பழக்கத்தை கைவிடுவதற்கான காரணங்களாக அமைந்துவிடக்கூடாது. அந்த சமயங்களில் தான் நாம் கர்த்தரிடம் இன்னும் நெருக்கமாக இருக்க வேண்டும்! பலர் [போதகர்கள் உட்பட] பாவத்தில் விழுவதற்கு அவர்களின் குறைவான தியான நேரம் என்று சான்றளித்துள்ளனர்.
நாம் நம்முடைய சொந்த வாழ்க்கையை ஆராய்ந்து, ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்க வேண்டும்: நாம் பாவத்துடன் போராடிக் கொண்டிருந்தால் அல்லது நம் கிறிஸ்தவ வாழ்க்கையில் அதிக ஆவிக்குரிய வளர்ச்சி அல்லது மகிழ்ச்சியை அனுபவிக்கவில்லை என்றால், அது கர்த்தருடன் நிலையான தியான நேரம் இல்லாத காரணத்தினால் வந்ததாகும். அப்படியானால், நாம் இந்த பாவத்தை விட்டு மனந்திரும்பி, உடனடியாக சரிசெய்யக்கடவோம்.
ஆரம்பகால ஆபிரிக்க தேசத்தை சேர்ந்த இரட்சிக்கப்பட்டவர்கள் சத்தியத்தில் தீவிரமானவர்களாகவும், தனிப்பட்ட தொழுகைகளில் தவறாமல் பங்குக்கொள்கிறவர்களாகவும் இருந்தனர். ஒவ்வொருவருக்கும் காட்டில் தனித்தனி இடம் இருந்ததாகக் கூறப்படுகிறது, அங்கு அவர்கள் தேவனிடம் தங்களது இருதயத்தை ஊற்றி ஜெபிப்பார்கள். காலப்போக்கில் இந்த இடங்களுக்கு செல்லும் பாதைகள் பழுதடைந்துப்போயின. இதன் விளைவாக, இந்த விசுவாசிகளில் ஒருவர் ஜெபத்தைப் புறக்கணிக்கத் தொடங்கினால், அது விரைவில் மற்றவர்களுக்குத் தெரிந்துவிடும். தனிப்பட்ட ஜெப வாழ்வில் அலட்சியமாக இருப்பவருக்கு, “தம்பி, உன் பாதையில் புல் வளரும்” என்று அன்புடன் நினைவுபடுத்துவார்கள்.
நம் வாழ்க்கையை ஆராயக்கடவோம்: நம் பாதைகளில் புல் வளர்ந்திருக்கிறதா? அப்படியானால், இன்னமும் காலங்கடந்துவிடவில்லை. மனந்திரும்பி, பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம் மீண்டும் சரியான பாதையில் செல்ல உதவும்படி கர்த்தரிடம் மன்றாடுவோம். அவர் நம்முடைய உண்மையான அழு குரலைக் கேட்பார். மீண்டும் சரியான பாதையில் செல்லவும், அவருடன் நமது உறவை அனுபவிக்கவும் உதவுவார்.
இறுதியாக, தியான நேரம் என்பது மீட்கப்பட்ட இருதயத்தின் பாக்கியமும் மகிழ்ச்சியாக இருக்கிறது- இருதயம் ஏற்கனவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் ஐக்கியத்திற்குள் நுழைந்துள்ளது என்பதை நினைவில் கொள்வோமாக. எஞ்சியிருக்கும் பூமிக்குரிய வாழ்வின் எல்லா நாட்களிலும் இந்த ஐக்கியத்தை அனுபவிப்போமாக!