கர்த்தருடைய நாளில் சபைக்குச் செல்வதைத் தடுக்கும் பொதுவான பிரச்சனைகள்
(English Version: “Common Problems That Hinder Going To Church on the Lord’s Day”)
முந்தைய பதிவில், “விசுவாசிகள் கர்த்தருடைய நாளைக் கடைப்பிடிக்க வேண்டுமா?” என்று கேட்கப்பட்டு, அதற்கு இவ்வாறு பதில் அளிக்கப்பட்டது: விசுவாசிகள் கர்த்தருடைய நாளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், குறிப்பிட்ட சட்டத்திற்குக் கீழ்ப்படிகிற உணர்வினால் அல்லாமல், தேவன் மீதும் அவருடைய மக்கள் மீதும் உள்ள அன்பினால் அனுசரிக்கிறார்கள். கர்த்தருடைய நாளில் கர்த்தரை ஆராதிக்கிற விசுவாசிகள் சக மக்களுடன் அன்பினால் தூண்டப்பட வேண்டுமேயொழிய சட்டத்தினாலல்ல.
இருப்பினும், கர்த்தருடைய நாளன்று சபைக்குச் செல்லுதலை ஒரு நிலையான பழக்கமாக வைத்துக்கொள்வது நல்லது என்று சொல்லலாம். அவ்வாறு செய்வதிலிருந்து மக்களைத் தடுக்கும் சில பொதுவான பிரச்சனைகளை இந்த பதிவு எடுத்துரைக்கிறது. விசுவாசிகள் கர்த்தருடைய நாளைத் தேவனை கனப்படுத்தும் விதத்தில் கடைபிடிப்பதற்கு உதவும் நடைமுறை ஆலோசனைகளை அடுத்த பதிவு எடுத்துரைக்கும்.
கர்த்தருடைய நாளன்று சபைக்கு ஒழுங்காக வராததின் பிரச்சனை என்ன என்பதைப் பார்க்க இந்த வருகைப் புள்ளி விவரத்தைக் கவனியுங்கள். ஒரு வருடத்தில் 52 ஞாயிறுகள் உள்ளன. சபைக்கு வருவதை ஒருவர் மாதத்திற்கு 1 ஞாயிற்றுக்கிழமை தவறவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம்; இது ஆண்டிற்கு 12 ஞாயிற்றுக்கிழமைகளை, அதாவது வருடத்திற்கு 23% தவறவிடுதலுக்கு வழிவகுக்கிறது. ஒரு நபர் மாதத்திற்கு 2 ஞாயிற்றுக்கிழமைகளைத் தவறவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இது வருடத்திற்கு 24 ஞாயிற்றுக்கிழமைகளை, அதாவது 46% தவறவிடுதலுக்கு வழிவகுக்கும்.
பிரச்சனையைப் பார்த்தீர்களா? சில கணக்குகளை நாம் உற்று நோக்கும் வரை அவற்றை ஒரு பெரிய விஷயமாக பார்க்க மாட்டோம். வாசகர்கள் மேலும் சங்கடப்படுவதைத் தடுப்பதற்காக நான் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன் [இது ஒரு வகையில் மோசமான விஷயமாக இருக்காது!]. சரியான வருகை என்பது உண்மையான ஆவிக்குரிய வாழ்வின் குறிக்கோள் அல்லது அடையாளம் அல்ல என்பதையும் நான் முழுமையாக புரிந்துகொள்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, பரிசேயர்கள் தேவாலயத்திற்கு வருவதில் சரியானவர்களாக இருந்தனர், ஆனால் அவர்களின் இருதயங்கள் தேவனிடமிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆகவே, கர்த்தருடைய நாளில் சபைக்கு வருதலானது நமது முன்னுரிமைகள் பற்றியும், கர்த்தருடைய நாளை நாம் அவருடைய நாளாகக் கருதுகிறோமா என்பதைப் பற்றியும் எடுத்துச் சொல்கிறது!
இந்த அறிமுக எண்ணங்களை மனதில் கொண்டு, ஒரு நபர் தொடர்ந்து சபைக்கு வருவதைத் தடுக்கும் பொதுவான பிரச்சனைகளைப் பார்ப்போம். வாசிப்பதற்கு எளிமையாக இருக்க, நான் அவற்றை லாபம் மற்றும் மகிழ்ச்சி என்று 2 பரந்த பிரிவுகளாக தொகுத்துள்ளேன்.
நான் இதை தொடர்வதற்கு முன், தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் சபைக்குச் செல்ல முடியாதவர்களுக்கு இந்த பதிவு பொருந்தாது என்று கூற விரும்புகிறேன் [உதாரணமாக, உடல்நலம்]
1. லாபம்
ஒரு சீன புராணக்கதை இவ்வாறு கூறுகிறது: ஒரு நாள் சந்தைக்குச் சென்ற மனிதனிடம் ஏழு காசுகள் இருந்தன. அவன் ஒரு பிச்சைக்காரனைப் பார்த்தான்; அந்த பிச்சைக்காரனிடம் ஆறு காசுகளைக் கொடுத்து, ஏழாவது காசைத் தன் சட்டைப் பையில் வைத்தான். இருப்பினும், அந்த பிச்சைக்காரன் ஒரு ஜேப்படி திருடன், ஏழாவது நாணயத்தையும் தனக்காக எடுத்துக் கொண்டான். நமது நவீன காலத்தில் இது எவ்வளவு பொருத்தமான உவமையாக இருக்கிறது! நம் வேலையைச் செய்ய நம் ஆண்டவர் ஆறு நாட்களைக் கொடுத்திருக்கிறார், ஆனால் பலர், “ஆம், ஏழாவது நாளையும் திருடி எனக்கே பயன்படுத்துவேன்” என்று கூறுகிறார்கள்.
கர்த்தருடைய நாள் என்பது விசுவாசிகள் என்று கூறிக்கொள்ளும் பலருக்கு உலகியல் வேலையின் மற்றொரு நாளாக இருக்கிறது. ஒருவர் அத்தியாவசிய வேலை செய்ய வேண்டிய சூழ்நிலைகளை நான் இப்போது குறிப்பிடவில்லை. ஆதித்திருச்சபையில் கூட, அடிமைகளாக இருந்த பல விசுவாசிகள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உறுதியான விசுவாசிகள் கூட சில ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்ய வேண்டிய நேரங்கள் உள்ளன என்பதை நான் முழுமையாக புரிந்துகொள்கிறேன், ஏனென்றால் அது அவர்களின் வேலையின் இயல்பு. (அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் கூட, ஒருவர் ஜெபித்து, சூழ்நிலைகளை மாற்ற கர்த்தரிடம் கேட்கலாம். தேவனுக்கு தக்க நேரத்தில் நிலைமையை மாற்றும் வல்லமை உள்ளது)
ஒருவருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை இல்லாமல் இருக்கும்போதும், வேலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, சபைக்கூடுதலை தவறவிடும் காலங்களை மட்டுமே நான் குறிப்பிடுகிறேன். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சபைக் கூடுதலைத் தவிர்ப்பதற்கு வழிவகுக்கும் சோதனையை வெல்ல உதவும்படி கர்த்தரிடம் மன்றாடலாம். அவருடைய நாளில் அவரைக் கனப்படுத்துவதற்கு நமது நோக்கங்கள் அமைந்தால், நிச்சயமாக கர்த்தர் உதவுவார். கர்த்தரைக் கனப்படுத்தும் வழிகளை “ஆம்” என்று நாம் தேர்வுசெய்தால், ஒரு நிறுவனத்தில் அடிப்படை மட்டத்திலிருந்து உயர்மட்டத்திற்கு முன்னேற முடியாமல் பொருளாதார பற்றாக்குறையோ அல்லது வேறொரு செலவோ கூட ஏற்படலாம். இருப்பினும், நமக்காகத் தம்முடைய அனைத்தையும் கொடுத்த இயேசுகிறிஸ்துவைக் கனம்பண்ணும்போது, அத்தகைய செலவைக் கணக்கில் கொள்ள வேண்டாமா?
பரீட்சைக்குப் படிப்பதால் ஞாயிறு ஆராதனையைத் தவறவிடும் மாணவர்களும் கர்த்தரை அவமதிக்கும் செயலைச் செய்கிறார்கள். அது எப்படி? கர்த்தராகிய இயேசுவை விட குடும்பத்தையும் கூட உயர்வாக வைக்கக்கூடாது எனும்போது [லூக்கா 14:26], அந்தத் தேர்வுக்குப் படிக்கவும், எழுதவும் வாய்ப்பளிக்கும் அவரை விட மேலாக அதை வைக்கலாமா? சபைக் கூடுதலைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, விசுவாசத்தினால், அவருடைய நாளில் அவருடைய மக்களுடன் வந்து ஆராதித்து கர்த்தருக்குக் கீழ்ப்படிய வேண்டும். இரண்டு மணிநேரங்களை ஜெபத்துடனும், மற்ற நேரங்களில் படித்தும் இதை ஈடுசெய்யலாம். கர்த்தரை ஆராதிப்பதற்காக சபைக்கு வருவது மதிப்பெண்கள் சற்று குறைவதற்கு வழிவகுக்கிறது என்றால், அப்படியே ஆகட்டும்! அதுதான் கீழ்ப்படிதலுக்கான விலைகிரயம்! சிறு வயதிலிருந்தே எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுகிறிஸ்துவை வைக்க கற்றுக்கொள்வது நல்லது மற்றும் சரியானது!
இந்த விஷயத்தில், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும். உயர் கல்வி சாதனையோ அடைவதும் அல்லது வேலைக்காக அவர்களை நெருக்குவதோ அவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது—அது கர்த்தருடைய நாளில் சபைக்கு வருவதைத் தடுக்கிறது. குழந்தைகள் இந்த பழக்கத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள். பெற்றோர்களே, அவர்களுள் நாம் என்ன முன்மாதிரிகளை உருவாக்குகிறோம்? நம்மை நாமே மதியற்றவர்களாக்கிக் கொள்ள வேண்டாம்: இன்று நாம் எதை விதைக்கிறோமோ அதையே பிற்காலத்தில் அறுவடை செய்து முடிப்போம்! தவிர, பெற்றோர்களாகிய நாம் கர்த்தருடைய நாளில் ஆராதனை செய்வதை விட வேலை செய்வதற்கு முன்னுரிமை கொடுத்தால், நாம் நம் பிள்ளைகளுக்கு என்ன செய்தியை கூறுகிறோம்?
ஞாயிற்றுக்கிழமைகளில் விசுவாசிகள் சபைக்கு வருவதைத் தடுக்கும் முதல் பிரச்சனை லாபமாகும். இதைப் பார்த்துவிட்டோம், இப்போது 2 வது பிரச்சனைக்கு செல்லலாம்.
2. மகிழ்ச்சி
கர்த்தருடைய நாளன்று மக்கள் சபைக்கு வருவதைத் தடுக்கும் இரண்டாவது பெரிய பிரச்சனை, மகிழ்ச்சியில்-குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் விளையாட்டு மற்றும் பிற கேளிக்கை செயல்களில் ஈடுபடுவதாகும். நீண்ட கால விளையாட்டு நடவடிக்கைகளுக்கு பிள்ளைகளை பதிவுசெய்வதும் இதில் அடங்கும், இப்படிச் செய்வதால் நீண்ட காலத்திற்கு சபைக்கு வர இயலாமல் போய்விடும், அதுவும் ஆண்டு முழுவதும்! இப்படி முடிவு செய்வது எப்படி கர்த்தருக்குப் பிரியமாகவும், கனமாகவும் இருக்கும்?
ஆம், நாம் பிரமாணத்திற்குட்பட்டவர்கள் அல்ல, தேவன் உண்மையாகவே “சகல கிருபையும் பொருந்தியவர்” [1 பேதுரு 5:10]. நாம் “நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவர்களல்ல, மாறாக கிருபையின் கீழ்” இருக்கிறோம் [ரோமர் 6:14]. இருப்பினும், கர்த்தருடைய நாளில் வேலையிலிருந்து விலகி, இன்பத்தில் மூழ்கி இருப்பவர்களின் சோகமான விஷயம் இதுதான்: அவர்கள் ஒரு விக்கிரகத்திற்கு பதிலாக மற்றொரு விக்கிரகத்திற்கு (அதாவது, வேலை செய்வதில் இன்பம்) மாறியுள்ளனர், ஏனெனில், இவற்றின் இறுதி முடிவு கர்த்தருடைய நாளில் அவருடைய மக்களுடன் அவரைத் தொழுது கொள்ளாமல் இருப்பதேயாகும்!
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைச் செய்ய விரும்புகிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நானும் ஒரு பெற்றோர் தான்! ஆனால் நமக்குள் நேர்மை இருக்க வேண்டும்: ஆண்டவரைக் கனப்படுத்துவதை விட களியாட்டுகளைத் தேர்ந்தெடுப்பது, ஈவுகளை [பிள்ளைகளை] கொடுத்தவருக்கு மேலாக வைப்பது அல்லவா? நாம் அவரை #2 ஆம் நிலையில் வைத்தால் அது சரியாக இருக்குமா? நம் வார்த்தைகளால் என்ன சொன்னாலும், முடிவில், நம் இருதயத்தில் #1 யார் என்பதை நமது செயல்கள் உரக்கப் பேசுகின்றன!
பூங்காவிற்கு செல்லுதல், மீன்பிடித்தல், முகாம்களுக்கு செல்லுதல் போன்ற பலவற்றைப் பற்றியும் இவ்வாறே கூறலாம், இவைகள் கர்த்தருடைய நாளன்று, தமது மக்களுடன் அவரை தொழுது கொள்வதைத் தவறவிடுவதற்கு ஒருவரை தொடர்ச்சியாக வழிநடத்துகிறது. நாம் பூங்காவிற்குச் செல்ல கூடாது, ஒன்றாக வெளியே செல்ல கூடாது, விடுமுறை எடுக்கக் கூடாது என்று இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லவே இல்லை! ஒருவர் நியாயமான வரம்புகளுக்குள் இவை எல்லாவற்றையும் செய்யலாம். ஆனால், கர்த்தருடைய நாளில் அவரது வீட்டிற்கு வருவதன் மூலமே கர்த்தரை கனப்படுத்த முடியும்! தவிர்க்க முடியாத பிரயாண சமயங்களில் கூட, உள்ளூர் சபைக்குச் சென்று மற்ற விசுவாசிகளுடன் இணைந்து கர்த்தரை ஆராதிக்க நேர்மையான முயற்சியை மேற்கொள்ளலாம். விடுமுறையில் செல்ல வேண்டிய இடங்களை நாம் முன்பே தேடுகிறோம். அருகிலுள்ள வேதத்தை பிரசங்கிக்கும் சபையைப் பார்க்க எத்தனை முறை முயற்சி செய்கிறோம்?
கோடை காலத்தில் அடிக்கடி சபைக் கூடுதலை தவறவிட்ட சபையின் அங்கத்தினரை ஒரு போதகர் ஒருமுறை சந்தித்து, அவரிடம் அதற்கான காரணத்தை கேட்டார். கோல்ப் விளையாட்டில் ஆர்வமுள்ள அந்த நபர், “பாஸ்டர், ஞாயிற்றுக்கிழமைகளில் நான் சபைக்கு வரவில்லையே என்று கவலைப்பட வேண்டாம். நான் கோல்ஃப் மைதானத்தில் இருக்கும்போது, கர்த்தரை ஆராதிக்கிறேன்” என்று பதிலளித்தார். அதற்கு அந்த போதகர் அமைதியாக இவ்வாறு பதிலளித்தார், “நீங்கள் கோல்ஃப் மைதானத்தில் கர்த்தரை ஆராதிக்கவில்லை. மாறாக, கர்த்தருடைய மைதானத்தில் கோல்ஃப் விளையாட்டை ஆராதிக்கிறீர்கள்.” நாம் நமக்குள் என்ன சொன்னாலும், தேவனுக்கு பதிலாக நமக்கோ அல்லது நம் பிள்ளைகளுக்கோ மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கும்போது, உண்மையில், நாம் நம்மையும் நம் பிள்ளைகளையும் ஆராதிக்கிறோம்—தேவனை அல்ல!
தேவன் உண்மையாவே நமக்கு பல நல்ல விஷயங்களை “நம் மகிழ்ச்சிக்காக” கொடுத்திருக்கிறார் [1 தீமோத்தேயு 6:17]. இருப்பினும், இத்தகைய நன்மைகள் அதை கொடுத்தவருக்குப் பதிலாக, உருவ வழிபாடாக மாறிவிடுகிறது. கர்த்தருடைய நாளில் கர்த்தரை ஆராதிப்பதைத் தடுப்பதற்கு மகிழ்ச்சியின் காரியங்கள் குறுக்கிடும்போது, அது ஒரு முட்டுக்கட்டையாதலால், அது இரக்கமின்றி துண்டிக்கப்பட வேண்டும்! ஞாயிற்றுக்கிழமை கர்த்தருடைய நாள், ஒரு விசுவாசி கர்த்தருடைய நாளில் கர்த்தருடைய வீட்டில் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
விசுவாசிகள் என்று கூறிக்கொள்பவர்கள் கர்த்தருடைய நாளை தவறவிடுவதில் வருத்தப்படுவதில்லை என்பது வருத்தமளிக்கிறது. உண்மையாகவே, பலர் கர்த்தருடைய நாளை மிகவும் கடினமான காரியமாக கருதுகின்றனர். அவர்கள், “சபைக்கு வருவது மிகவும் கடினம். இதற்கு அதிக முயற்சி தேவை, இது ஒரு சுமை” என்று கருதுகிறார்கள்! தங்கள் பாவங்களுக்காக மரித்தவரை வணங்குவதற்கு சபைக்குச் செல்வது கடினம் என்ற பொய்யை திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்! இத்தகைய மனப்பான்மை, மல்கியாவின் காலத்து ஆசாரியர்களை நினைவூட்டுகிறது [மல்கியா 1:6-14].
மற்ற நாட்களோடு ஒப்பிடும்போது-நோய் போன்ற ஏதாவது சூழ்நிலைகள் வந்தாலும், கர்த்தருடைய நாளை நாம் எப்படி கடைப்பிடிக்கிறோம் என்பதும் மனவேதனை அளிக்கிறது. நம்மால் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு உண்மையில் நோய்வாய்ப்பட்டிருக்கும் அந்த நேரங்களை நான் குறிப்பிடவில்லை. அத்தகைய சந்தர்ப்பங்களில், வீட்டில் தங்கி ஓய்வெடுப்பது மட்டுமே பொருத்தமானது – நான் ஒரளவிற்கு சமாளிக்கக்கூடிய நோயுறும் சந்தர்ப்பங்களை மட்டுமே இங்கு குறிப்பிடுகிறேன், அப்படிப்பட்ட நேரங்களிலும் நாம் வீட்டிலேயே இருக்க விரும்புகிறோம். ஆனால், அத்தகைய சந்தர்ப்பங்கள் நம்மை வேலைக்குச் செல்வதைத் தடுப்பதில்லையே. சில நேரங்களில், வெள்ளிக்கிழமை நோய் வரலாம், அப்படியென்றால் ஞாயிற்றுக்கிழமை சபைக்கு செல்ல முடியாது என்று நாம் ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம்! அத்தகைய தீர்க்கதரிசன வரங்கள் நமக்கு இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது! ஆயினும்கூட, விருந்துகள் உட்பட பிற வேடிக்கையான செயல்களில் பங்கேற்கும் ஆற்றல் மட்டுமே உள்ளது. அதிக ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் சனிக்கிழமை இரவுகளில் தாமதமாகத் தூங்குவோம்! இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை நாம் சபைக்கு செல்ல முடியாத அளவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். நமது முன்னுரிமைகள் பற்றி இவை என்ன சொல்கிறது?
பல ஆண்டுகளுக்கு முன்பு, உள்ளூர் செய்தித்தாளுக்கு ஒரு போதகர் எழுதிய கடிதம் இந்த உணர்வைப் படம்பிடிக்கிறது. இதோ அந்த வார்த்தைகள்:
பெரியம்மை நோயை விட கொடிய நோய் ஒன்று உள்ளது. இது பெரும்பாலான சபை மக்களை பாதிக்கும் ஒரு நோய். அறிகுறிகள் மாறுபடும் ஆனால் பசியை ஒருபோதும் பாதிக்காது. இது இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு மேல் நீடிக்காது. இதற்கு மருத்துவம் பார்க்க எந்த மருத்துவரும் அழைக்கப்படுவதில்லை. இது எப்போதும் ஆத்துமாவிற்கு ஆபத்தானதாக இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானவர்களை அழிக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையும் திடீரென்று அவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.
சனிக்கிழமை இரவு எந்த அறிகுறியும் காணப்படாது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணியளவில் தாக்குதல் நடக்கும். வழக்கமாக, பாதிக்கப்பட்டவர் நல்ல இரவு தூக்கத்தை அனுபவித்து, காலை உணவை உண்டிருப்பார், ஆனால் சபை கூடும் நேரத்திற்கு முன்பு, தாக்குதல் திடீரென தீவிரத்துடன் அவர் மீது வருகிறது. காலை ஆராதனை முடியும் வரை அது தொடர்கிறது, பின்னர் அவர் ஒரு நல்ல உணவை உண்ணும் நேரத்தில் தாக்கம் குறைந்து, பிற்பகலில், மிகவும் நன்றாக இருப்பதாகத் தெரிகிறது. பின்னர் அவர் மோட்டார் சவாரி, கோல்ஃப் விளையாட்டு அல்லது வேறு சில உடற்பயிற்சிகளுக்கு வெளியே செல்கிறார்.
இந்த நோய் கண்களை ஒருபோதும் பாதிக்காது, ஏனென்றால் இந்த நோயாளி ஞாயிற்றுக்கிழமை செய்தித் தாளையும், கைப்பேசியையும் முழுமையாக அனுபவிக்க முடியும். இவைகள் முடிந்தவுடன் அவர் மற்றொரு தாக்குதலைப் பெறுகிறார், அது [மாலை] சபை ஆராதனை முடியும் வரை நீடிக்கும். திங்கட்கிழமை, அவர் புத்துணர்ச்சியுடன் எழுந்துவிடுகிறார், அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை அவருக்கு எந்தவொரு தாக்குதலும் இருக்காது.
இதற்கு “ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்” (எபேசியர். 5:14) என்ற வசனமே அருமருந்து.
ஒரு எழுத்தாளர் பிரச்சனையை மிகச் சிறப்பாகவும், சுருக்கமாகவும் கூறுகிறார்: “பெரும்பான்மையான மக்களுக்கு, சபை உறுப்பினர்களுக்கும் கூட, சபைக் கூடிவருதல் அவர்களின் வாரத்தின் முதல் முன்னுரிமை அல்ல. பெரும்பாலும் பள்ளி, வேலை, விளையாட்டு மற்றும் பிற செயல்பாடுகள் சபைக்குச் செல்வதை விட முன்னுரிமை பெறுகின்றன. வார இறுதி நாட்களை ஓய்வெடுப்பதற்கும், விளையாடுவதற்கும், தாமதமாகத் தூங்குவதற்கும் தகுந்த நேரமாக கருதும் உலகம், தங்களின் நேரத்தை ஒழுங்கமைக்காமல் தவறு செய்கிறது. விசுவாசிகளுக்கு, ஞாயிற்றுக்கிழமை வாரத்தின் மிக முக்கியமான நாளாக இருக்க வேண்டும். சபை அட்டவணையைச் சுற்றி உங்கள் வேலை, செயல்பாடுகள், குடும்ப கூடுகைகள் மற்றும் விடுமுறைகளை திட்டமிட முயற்சிக்க வேண்டும்.”
கர்த்தருடைய நாளை சரியான முறையில் அணுகுவதன் மூலம், அந்த நாளை நாம் எவ்வாறு அனுசரிக்க வேண்டும் என்பதை உலகம் நமக்கு கட்டளையிடவில்லை என்றும், அவருடைய நாளை நாம் எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதை கர்த்தர் கட்டளையிடுகிறார் என்றும் உலகுக்கு வெளிப்படுத்துகிறோம். அது கர்த்தருடைய நாள் என்று நாம் நினைவில் கொள்ள வேண்டும்;. கர்த்தருடைய அரைநாள் அல்ல! “எனது 2 மணிநேரத்தை கர்த்தருக்குக் கொடுத்துவிட்டேன். போதும்! இனி, என் சொந்த விஷயத்திற்குச் செல்லுவேன்” என்ற மனப்பான்மை இருக்கக்கூடாது. இத்தகைய மனப்பான்மையுடன்—குறிப்பாக கண் எப்போதும் கடிகாரத்தில் இருக்கும் போது கர்த்தரை எப்படி முழு மனதுடன் ஆராதிக்க முடியும்? நாம் முழு நாளையும் கர்த்தருடைய நாளாகக் கருதி, அவரைக் கனப்படுத்தப் பாடுபட வேண்டும்.
கர்த்தருடைய நாள் பல செயல்களால் நிறைந்துக் காணப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால், ஒரு சபையாக, வேதத்தைப் படிப்பது, ஒரு நல்ல கிறிஸ்தவ புத்தகத்தைப் படிப்பது / ஜெபம் செய்வது / கர்த்தரை தியானிப்பது போன்ற செயல்கள் இல்லாமல் போகும். ஆனால் கர்த்தருடைய நாளில் குடும்பங்கள் ஒன்றாக நேரத்தை செலவிடுவதை கற்பனை செய்து பாருங்கள், கர்த்தருடைய விஷயங்களை ஐக்கியமாக வாசிப்பதில் / ஜெபிப்பதில் / தியானிப்பதில் சில நிமிடங்கள் செலவழித்து, குடும்பமாக சபையில் கலந்து கொண்டால், அது என்ன ஒரு ஆசீர்வாதமாக இருக்கும்! (இந்தப் பதிவைப் படிக்கும் சிலர், சபைக்கு வரவோ அல்லது வேதத்தைப் படிக்கவோ மறுக்கும் இரட்சிக்கப்படாத வாழ்க்கைத் துணைவர்களை அல்லது வயது வந்த பிள்ளைகளைக் கொண்டிருக்கலாம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அது எவ்வளவு கடினமாக இருந்தாலும், விசுவாசிகள் தேவனுக்குரிய விஷயங்களுக்கு அதிக நேரத்தை ஒதுக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்).
நீண்ட காலத்திற்கு முன்பு ட்வைட் ஹில்லிஸ் என்ற போதகர், கர்த்தருடைய நாளன்று, இன்ப சுற்றுலாவுக்கு சென்று வாகன விபத்தில் மரித்த தன் அழகான பெண்ணின் இறுதிச் சடங்குகளை நடத்தினார். ஒரு தகப்பனாக, அன்பான அந்த பெண்ணிற்கு விடைக்கொடுக்கும்போது, அவர் தனது நண்பர்களிடம் தழுதழுத்த குரலில் இவ்வாறு கூறினார்: “நாங்கள் ஞாயிற்றுக்கிழமை கோல்ஃப் விளையாடுவோம் அல்லது பிற வேடிக்கையான செயல்களில் ஈடுபட்டு வந்தோம். எங்கள் பிள்ளைகள் எங்களை முன்மாதிரியாகப் பின்பற்றி எங்களை விஞ்சிவிட்டனர். மகன் என்னை அவமானப்படுத்தி விட்டான், என் மகள் இறந்துவிட்டாள்.” குடும்பத்தை நன்றாக நடத்த ஒரே ஒரு வழி இருக்கிறது என்று நான் உங்களுக்கு சொல்கிறேன், அது ஞாயிறு பள்ளியிலும், சபையிலும் இருக்கிறது.
நான் மீண்டும் சொல்கிறேன்: பெற்றோர்களே, நம் பிள்ளைகளுக்கு நாம் என்ன விதமான மாதிரிகளை கற்றுத் தருகிறோம்? லாபம் மற்றும் மகிழ்ச்சி என்ற இரட்டை பலிபீடங்களில் கர்த்தருடைய நாளை பலியிட வேண்டாம். மாறாக, கர்த்தர் மீதும், அவருடைய மக்கள் மீதும் நமக்குள்ள அன்பு, கர்த்தருடைய நாளை அவருடைய நாளாகக் கொண்டாட நம்மைத் தூண்ட வேண்டும்.
ஆகையால், அடுத்த பதிவில், கர்த்தருடைய நாளைக் கனப்படுத்த வேண்டிய விதத்தில் அனுசரிக்க உதவும் சில நடைமுறை ஆலோசனைகளைப் பார்ப்போம்.
இந்த இலாபம் மற்றும் மகிழ்ச்சி என்ற எதிரிகளை [பாவங்களை?] கொல்வதற்கு ஒரு தூய்மையான தீர்மானம் இல்லாவிட்டால், எந்த நடைமுறை ஆலோசனைகளும் உதவ முடியாது. அந்த நாளில் கர்த்தரை ஆராதிப்பதற்கு வருவதென்பது ஒருவரின் உள்ளத்தைப் பற்றிக்கொள்ளும் ஒரு நம்பிக்கையாக மாறாத வரை அது நடக்காது. அப்படியென்றால், அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையை நீங்கள் இன்னும் பெறவில்லையென்றால், அதற்காக ஏன் ஊக்கமாக ஜெபிக்கக்கூடாது?
