கிறிஸ்தவர்கள் மரணத்தை ஏன் தைரியமாய் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான 3 காரணங்கள்

(English Version: 3 Reasons Why A Christian Can Confidently Face Death)
சாரா வின்செஸ்டரின் கணவர் துப்பாக்கிகள் தயாரித்து விற்பனை செய்யும் ஒரு அரிய வாய்ப்பைப் பெற்றவர். 1918 இல் சளிக்காய்ச்சலால் அவர் மரித்த பின்னர், சாரா மரித்தவர்களைத் தொடர்புகொள்வதில் ஈடுபட்ட பில்லி சூனியக்காரர்களை நாடினாள். அவர்கள் மூலமாய் மரித்த கணவரை தொடர்புக் கொண்டபோது அவர் அவளிடம், “நீ உன் வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கும் வரை, மரணத்தை ஒருபோதும் எதிர்கொள்ள மாட்டாய்” என்று சொன்னதாகக் கூறப்படுகிறது. எனவே, அந்த பில்லி சூனியத்தை நம்பி, கட்டி முடிக்கப்படாத 17 அறைகள் கொண்ட ஒரு மாளிகையை வாங்கி, அவள் அதை விரிவாக்கம் செய்ய தொடங்கினாள். தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 50 அமெரிக்க சென்ட்ஸ், (இன்றைய மதிப்பின்படி சுமார் 3700 இந்திய ரூபாய்கள்) சம்பாதிக்கும் நேரத்தில் சுமார் 5 மில்லியன் டாலர்கள் (இன்றைய மதிப்பின்படி சுமார் 372,425,000 இந்திய ரூபாய்கள்) செலவானது. இந்த திட்டம், அவள் 85 வயதில் மரிக்கும் வரை தொடர்ந்தது. இன்னும் 80 வருடங்கள் தொடர்ந்துக் கட்டக்கூடிய அளவுக்கு போதுமான பொருட்களை அவள் விட்டுச்சென்றாள். அந்த வீடு ஆயிரக்கணக்கான மக்களை மரண பயமாகிய அடிமைத்தனத்திற்கு ஒர் அமைதியான சாட்சியாக இன்றும் நிற்கிறது.
எப்படியாயினும், மக்கள் மரண பயத்தில் வாழத் தேவையில்லை என்பதற்கான காரணங்களை வேதம் தருகிறது. ஆனால் அந்த காரணங்களை விரிவாகப் பார்ப்பதற்கு முன், நமக்கு நாமே ஒரு எளிய கேள்வியைக் கேட்டு அதற்கு பதிலளித்துக்கொள்வோம்: மரணம் என்றால் என்ன? எளிய சொற்களில் கூறுவதென்றால் அது ஒரு பிரிவினை. இதுதான் அடிப்படையான பதில். இப்போது, வேதம் விவரிக்கும் மூன்று வகையான மரணங்களைக் குறித்து சற்று பார்ப்போம்.
- சரீர மரணம்: இந்த மரணம் ஆத்துமாவை சரீரத்திலிருந்து பிரிப்பதாகும். “அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது” என்று எபிரெயர் 9:27 நமக்குக் கற்பிக்கிறது. மனிதனுக்கு மறுபிறவி இல்லை என்று வேதம் தெளிவுபடுத்துகிறது. எல்லா மனிதர்களும் “ஒரு முறை மட்டுமே மரிக்கிறார்கள்” என்று வசனம் தெளிவாகக் கூறுவதை கவனியுங்கள், மரிப்பது பலமுறையல்ல.
- ஆவிக்குரிய மரணம்: இந்த மரணம் ஆத்துமாவையும் சரீரத்தையும் தேவனுடைய ஜீவனிலிருந்து பிரிப்பதாகும். எபேசியர் 2: 1 ஆம் வசனம் இயேசு கிறிஸ்து இல்லாத ஒரு நபரின் நிலையை நமக்கு நினைவூட்டுகிறது, “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்தீர்கள்”. நாம் அனைவரும் இந்த உலகத்திற்கு ஆவிக்குரிய ரீதியில் மரித்தே பிறக்கிறோம். இந்த நிலை சரீர மரணத்திற்கும் இறுதியில் நித்திய மரணத்திற்கும் வழிவகுக்கிறது – இயேசு கிறிஸ்து ஒருவருக்குக் கொடுக்கக்கூடிய ஜீவனை அவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் மரிக்க வேண்டியது அவசியம்.
- நித்திய மரணம்: பூமியில் உயிருடன் இருக்கும்போது இயேசு கிறிஸ்துவை நிராகரித்ததன் காரணமாக இந்த மரணம் ஆத்துமாவையும் சரீரத்தையும் தேவனிடமிருந்து நித்தியமாய் பிரித்து விடுகிறது. அப்படிப்பட்டவர்களின் இறுதி முடிவை “ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.” என்று வெளிப்படுத்தல் 20:15 நமக்குக் கற்பிக்கிறது. இந்த மரணத்தை அனுபவிப்பவர்கள் நித்தியமாய் நரகத்தில் வாழ்வார்கள்.
மரணத்தைப் பற்றிய இந்த அத்தியாவசிய புரிதலுடன், கிறிஸ்தவர்கள் மரணத்தை ஏன் தைரியமாய் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான 3 காரணங்களைக் காண்போம்.
காரணம் #1 உண்மையான கிறிஸ்தவர்கள் மேல் மரணத்திற்கு அதிகாரம் இல்லை.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்தபோது, அவர் மனிதனாக, மனித சரீரத்தை எடுத்துக்கொண்டு, பரிபூரண வாழ்க்கை வாழ்ந்தார், நமக்கு பதிலாக பாவத்திற்கு மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்தார். இதன் விளைவாக, தங்கள் பாவ மன்னிப்புக்காக இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் எதிர்காலத்தில் எந்த தண்டனையையும் சந்திக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ முடியும். அவர்கள் ஒருபோதும் நித்திய மரணத்தை அனுபவிக்க மாட்டார்கள். அது மட்டுமல்லாமல், இவ்வுலகில் வாழும்போதும் அவர்கள் மரண பயத்தில் வாழத் தேவையில்லை, ஏனென்றால் இயேசு கிறிஸ்து “ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுவித்துவிட்டார்” [எபிரெயர் 2:15]. நாம் இங்கே பார்ப்போமானால், சரீர மரணம் என்பது அடுத்த வாழ்க்கைக்கு கடந்து போகுதலாகும் – இது ஒரு விசுவாசி தேவனுடைய சமுகத்தில் என்றென்றும் வாழும் வாழ்க்கையாகும். இது நித்திரை செய்வது மற்றும் விழித்தெழுவது போன்றதாகும். கிறிஸ்தவரின் மரணத்தை “நித்திரை” என்று வேதம் விவரிப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை [1 கொரி 15:51; 1 தெச 4:13]. உண்மையாகவே கிறிஸ்தவர்கள் மேல் மரணத்திற்கு அதிகாரம் இல்லை, மரணத்தை நாம் ஏன் தைரியமாக எதிர்கொள்ள வேண்டுமென்பதற்கான முதல் காரணம் இதுதான்.
காரணம் #2 மரணமானது ஒரு உண்மையான கிறிஸ்தவனுக்கு கர்த்தருடைய சமுகத்தை உடனடியாக அடைய உதவுகிறது.
ஒரு உண்மையான கிறிஸ்தவன் மரிக்கையில் அவனுடைய சரீரம் கல்லறைக்கு செல்கிறது. இருப்பினும், அவனுடைய ஆத்துமா உடனடியாக கர்த்தருடைய சமுகத்திற்கு செல்கிறது. “இந்தத் தேகத்தைவிட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்” என்று பவுல் கூறினான் [2 கொரி 5: 8]. “இந்த தேகத்தை விட்டு குடிபோகுதல்” என்ற இந்த வார்த்தை சரீரத்திலிருந்து விலகும் ஆத்துமாவின் நிலையைக் குறிக்கிறது. மேலும் “கர்த்தரிடத்தில் குடியிருத்தல்” என்பது ஆத்துமா கர்த்தருடைய சமுகத்தில் இருப்பதை குறிக்கிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கும்போது மனந்திரும்பிய கள்ளனுக்கு, “இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்று அவர் தாமே வாக்குத்தத்தம் பண்ணினார் [லூக்கா 23:43]. தேவனுடைய சமுகத்தில் இருப்பதற்கான வாக்குத்தத்தமானது தொலைதூர எதிர்காலத்திற்கான ஒரு சத்தியமல்ல – மரித்த சில நாட்களுக்கு பிறகுமல்ல-மாறாக “இன்று” என்ற வார்த்தையானது தேவனுடன் உடனடியாக இருப்பதைக் குறிக்கிறது.
ஒரு கிறிஸ்தவனின் ஆத்துமா கர்த்தருடன் தங்கியிருக்கும்படி செல்வதற்கு முன் அது சில காலம் காத்திருக்க வேண்டிய அவசியமுமில்ல, அதை தற்காலிகமாக தங்க வைக்க இடமும் தேவையில்லை.
ஒரு கிறிஸ்தவனின் ஆத்துமா கர்த்தருடன் தங்கியிருக்கும்படி செல்வதற்கு முன் அது சில காலம் காத்திருக்க வேண்டிய அவசியமுமில்ல, அதை தற்காலிகமாக தங்க வைக்க இடமும் தேவையில்லை. சரீர மரணத்தைத் தொடர்ந்து உடனடியாக கர்த்தருடன் தங்கியிருக்கும்படி அது சென்றுவிடுகிறது. இதற்கு ஒரே விதிவிலக்காக, இயேசு கிறிஸ்து மீண்டும் வரும்போது, அச்சமயத்தில் உயிரோடிருந்து அவரைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் அந்த சரீர மரணத்தை அனுபவிக்காமல் அவருடன் உடனடியாக சென்றுவிடுவார்கள் [1 தெச 4: 16-17]. கிறிஸ்தவர்கள் மரணத்தை ஏன் தைரியமாய் எதிர்கொள்ள வேண்டுமென்பதற்கு இதுவே இரண்டாம் காரணம்.
காரணம் #3 மரணமானது ஒரு புதிய மற்றும் பூரணமான சரீரத்தை தரித்துக்கொள்ள உண்மையான கிறிஸ்தவனுக்கு உதவுகிறது.
நாம் இந்த உலகத்திற்கு வரும்போது கொண்டு வந்த சரீரமானது பாவத்திற்கும் வியாதிக்கும் உட்பட்டது. அதனால்தான் சரீர மரணம் நிகழ்கிறது. இருப்பினும், இயேசு கிறிஸ்து தம் மக்களுக்காக எதிர்காலத்தில் மீண்டும் வரும்போது, எல்லா உண்மையான கிறிஸ்தவர்களும் பரிபூரணமான, புதிய, பாவமற்ற மற்றும் வியாதிகளற்ற சரீரத்தைப் பெற்றுக்கொள்வார்கள். மரித்து கர்த்தருடைய சமுகத்திற்கு சென்றுவிட்ட உண்மையான கிறிஸ்தவர்களின் ஆத்துமாக்கள் அவருடைய சமுகத்தில் இருந்தாலும் கிறிஸ்துவினுடைய இரண்டாம் வருகையின்போது புதிய சரீரங்களைப் பெற்றுக்கொள்வார்கள். வேதத்தில் இந்த நிகழ்வு “மகிமைப்படுத்துதல்” என்று அழைக்கப்படுகிறது. 1 கொரிந்தியர் 15: 51-52 ஆகிய வசனங்கள் இந்த செயல்முறையை விளக்குகிறது, “51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். — 52 எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்”.
1 கொரிந்தியர் 15: 42-44 ஆகிய வசனங்கள் எதிர்காலத்தில் நாம் பெறப்போகும் இந்த புதிய சரீரத்தைப் பற்றிய கூடுதல் விவரங்களைத் தருகிறது. “42 ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு; 43 கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்; 44 ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு”. இந்த புதிய ஆவிக்குரிய சரீரம், உயிர்த்தெழுந்த சரீரம், அழியாத அல்லது மகிமையான சரீரம் என்றும் அழைக்கப்படுகிறது. அதனால்தான் கிறிஸ்தவர்களாகிய நாம் “நம் சரீர மீட்பிற்காக” ஆவலுடன் காத்திருக்கிறோம் [ரோமர் 8:23]. கிறிஸ்தவர்கள் மரணத்தை தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்மென்பதற்கான மூன்றாவது காரணம் இதுவே.
எனவே, விசுவாசிகள் ஏன் மரணத்தை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான 3 உறுதியான காரணங்களை நாம் மேலே பார்த்தோம். முதலாவதாக, மரணத்திற்கு நம்மீது அதிகாரம் இல்லை; இரண்டாவதாக, உடனடியாக கர்த்தருடைய சமுகத்திற்கு சேர மரணம் நமக்கு உதவுகிறது, இறுதியாக, மரணம் ஒரு புதிய மற்றும், பூரணமான சரீரதத்தைப் பெற உதவுகிறது.
இந்த பேருண்மைகள் கிறிஸ்தவருக்கு மரணத்தை தைரியமாக எதிர்கொள்ள உதவும். ஆனாலும், சில சமயங்களில், “எனக்கு என்ன நடக்கும்? நான் தகுதியற்றவானாகிவிடுவேனா? வியாதிகளை அனுபவிப்பேனா?”என்ற கேள்விகள் கிறிஸ்தவர்களைப் ஆட்கொள்கிறது, குறிப்பாக அவர்கள் வயதாகும்போது அல்லது ஒரு மோசமான வியாதியை எதிர்கொள்ளும்போது இப்படி சிந்திக்க வைக்கிறது. இவைகள் மிகவும் நியாயமான கவலைகள் என்றாலும், நாம் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் மற்றும் பாதுகாப்பை உணர்ந்து மேலும் இவற்றிற்கு வேதத்தின்படி பதிலளிக்கப்பட வேண்டிதாயிருக்கிறது. “உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்” என்று தேவன் வாக்குப்பண்ணியிருக்கிறார் [ஏசாயா 46:4].
ஒருவேளை சரீரப்பிரகாரமான துன்பங்களின் ஊடாக நாம் செல்ல வேண்டியது தேவனுடைய சித்தமாக இருந்தால், நம்முடைய பிதாவின் சித்தம் நமக்கு மிகச் சிறந்தது என்பதை அறிந்து, நாம் மேலும் அமைதியாகவும் அச்சமின்றி இருக்க வேண்டும். இந்த பூமிக்குரிய யாத்திரை வழியாக அவர் நம்மை பரலோகத்திலுள்ள இறுதி வீட்டிற்கு அழைத்துச் செல்வார் [பிலி 1: 6]. ஒவ்வொரு நாளும் இந்த அனுபவத்தை கடந்துச்செல்லும்போது, நாம் கர்த்தருடன் இருப்பதற்கு கிட்டிச்சேருகிறோம். கடினமான காலங்களில் உண்மையாக விடாமுயற்சியுடன் இருக்க இது நமக்கு பேருதவியாக இருக்கும்!
இவை சிறப்பான சத்தியங்கள் என்றாலும், ஒருவர் உண்மை கிறிஸ்தவராக இல்லாவிட்டால் அவருடைய எதிர்காலம் மிகவும் இருண்டதாக இருக்கும். ஒரு அவிசுவாசி மரிக்கும் போது, அவனது சரீரம் கல்லறைக்குள் செல்கிறது என்று வேதம் சொல்கிறது, ஆனால் ஆத்துமா உபத்திரவத்தின் இடமாகிய ஹேடீஸுக்கு (Hades நரகத்தைப் போன்றதொரு இடம்) செல்கிறது. [லூக் 16:23]. அவிசுவாசிகளின் ஆத்துமாக்கள் இறுதி நியாயத்தீர்ப்பு நாள் வரை அங்கே இருக்கும், அவர்கள் நரகத்திற்குள் நித்தியமாய் தள்ளப்படுவதற்கு முன்பு இறுதி நியாயத்தீர்ப்பிற்காக தேவனுக்கு முன்பாக நிற்கும்படி உயிரோடு எழுப்பப்படுவார்கள். அவிசுவாசிகள் “யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்” என்று வெளிப்படுத்துதல் 20:13 கூறுகிறது. அவர்கள் மன்னிக்கப்படாத பாவங்களால், “அக்கினிக்கடலிலே [நரகத்தில்] தள்ளப்படுவார்கள்” [வெளி 20:14]. உண்மையாகவே, இது ஒரு பயங்கரமான மற்றும் சோகமான முடிவு!
இருப்பினும், வாழ்க்கையானது அந்த நிலையில் முடிவுக்கு வர வேண்டிய அவசியமில்லை. பாவங்களிலிருந்து விலகி, இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம், ஒருவர் ஆவிக்குரிய பிறப்பை அனுபவித்து, இந்த பயங்கரமான நியாயத்தீர்ப்பைத் தவிர்க்கக்கூடும், ஏனென்றால் பாவத்திற்காக தேவனுடைய நியாயத்தீர்ப்பை இயேசுகிறிஸ்து சிலுவையில் தம்மீது சுமந்துக் கொண்டார். “மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று யோவான் 5: 25-ல் இயேசுகிறிஸ்துவே வாக்குத்தத்தம் அளித்திருக்கிறார். இந்த வசனத்தில் கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கு 3 வாக்குத்தத்தங்கள் உள்ளன:
(1) அவர்கள் இப்போது நித்திய ஜீவனை பெற்றிருக்கிறார்கள்.
(2) அவர்கள் செய்த பாவங்களுக்காக எதிர்காலத்தில் நியாயத்தீர்ப்பை எதிர்கொள்ள மாட்டார்கள்.
(3) அவர்கள் ஆவிக்குரிய மரணத்தை கடந்து ஆவிக்குரிய வாழ்வு மற்றும் நித்திய ஜீவனுக்குள் வந்துவிட்டப்படியால் நித்திய மரணம் தவிர்க்கப்படுகிறது.
இவைகள் தனித்துவமான வாக்குத்தத்தங்கள. இவற்றை விசுவாசித்தால், இவைகள் ஒரு நபரை மரண பயத்திலிருந்து விடுவிக்கும். ஆம், மரணத்துடனான நம் சந்திப்பு தவிர்க்க முடியாதது. எந்த மருத்துவ திட்டமும் மரணத்தை வெல்ல முடியாது!, “அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது” என்று எபிரெயர் 9:27 தெளிவாக கூறுகிறது. மரணம் என்பது அனைவருக்கும் நியமிக்கப்பட்ட ஒரு சந்திப்பு! ஒவ்வொரு மணி நேரத்திலும் சுமார் 10,000 பேர் மரிக்கின்றனர். சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ, நீங்கள் அந்த எண்ணிக்கையில் ஒருவராக இருப்பீர்கள்.
நீங்கள் மரிப்பதற்கு ஆயத்தமா? நிச்சயமாக, நீங்கள் ஒரு உண்மையான கிறிஸ்தவராக இருந்தால் உங்களால் ஆயத்தமாக இருக்க முடியும்! ஏனென்றால், “மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” [1 கொரிந்தியர் 15:55, 57], என்று ஒரு உண்மையான கிறிஸ்தவனால் மட்டுமே மகிழ்ச்சிப்பொங்க பாட முடியும்.