கோபமும், அது உருவாக்கும் பேரழிவும் – பகுதி 3 பாவ நோக்கிலான கோபத்தின் மூலாதாரம் எது?

Posted byTamil Editor January 21, 2025 Comments:0

(English version: “Sinful Anger – The Havoc It Creates (Part 3)”)

பாவ நோக்கிலான கோபம் என்ற தொடரின் வலைப்பதிவில் இது பகுதி 3 ஆகும். பகுதி 1, பாவ நோக்கிலான கோபம் பற்றிய பொதுவான அறிமுகமாகவும், பகுதி 2, “கோபம் என்றால் என்ன?” என்ற முதல் கேள்வியின் ஆய்வாகவும் இருந்தது. இந்தப் பதிவு பாவ நோக்கிலான  கோபத்தின் ஆதாரம் என்ன? என்ற இரண்டாம் கேள்வியை ஆராய்கிறது. 

II. பாவ நோக்கிலான கோபத்தின் மூலாதாரம் எது?

பிரச்சனைக்கான ஆழமான காரணம் கோபமல்ல. மாறாக, பாவம் நிறைந்த இருதயம் தான் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்! பாவ நோக்கிலான கோபத்தின் ஊற்று என்று இயேசுகிறிஸ்து கூறுவதைக் கவனியுங்கள்:

மாற்கு 7:21-23 எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாதசிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.”

பாவ நோக்கிலான கோபம் உட்பட அனைத்து தீய செயல்களின் மூலாதாரத்தையும் இருதயத்தில் காணலாம். வேதத்தின்படி, இருதயம் என்பது நம் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும், விருப்பத்தையும் உள்ளடக்கிய ஒரு பகுதியாகும். இருதயம் தவறான ஆசைகளால் நிறைந்து காணப்பட்டு, அந்த ஆசைகள் நிறைவேறாமல் போனால், பாவ நோக்கிலான கோபம்தான் அதற்கு பதிலாக இருக்கும். யாக்கோபு இந்தக் கருத்தை இன்னும் தெளிவாக்குகிறார்.

யாக்கோபு 4:1-3 உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களிலே போர்செய்கிற இச்சைகளினாலல்லவா? நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம்பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை. நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.”

மற்றவர்களோ அல்லது பிசாசுகளோ நம் கோபத்திற்குக் காரணம் அல்ல – அவர்கள் அதைத் தூண்டுகிறார்கள்! நம்முடைய கோபத்திற்கு அவர்களைக் குறை சொல்லக்கூடாது என்றாலும், அதை ஊக்குவிப்பதில் அவர்களின் பங்கை [சில நேரங்களில்] அறியாமல் இருப்பதும் முட்டாள்தனமாக இருக்கும். அதனால்தான் நாம் பிசாசை எதிர்க்க வேண்டும், இந்தப் பாவத்தை வெல்ல நாம் முயன்றால் மற்றவர்களால் தூண்டப்படுவதை அனுமதிக்கக்கூடாது. ஆனால் கையாள வேண்டிய முக்கியமான பிரச்சனை நம் இருதயமாகும் – இது பாவ நோக்கிலான கோபத்தின் வேர். துக்ககரமான விஷயம் என்னவென்றால், இங்கே தான் நாம் அடிக்கடி தோல்வியடைகிறோம். நாம் அறிகுறிக்கு [பாவமான கோபத்திற்கு] சிகிச்சை செய்ய முனைகிறோமேயொழிய காரணத்திற்கு [இருதயத்தின் ஆசைகளுக்கு] அல்ல.

உதாரணமாக, நம் மனைவி அல்லது நெருங்கிய நண்பர்கள் நம்மை மிகவும் நேசிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதில் நாம் போராடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நம்மிடம் ஒரு வகையான 11 வது கட்டளை உள்ளது, “நான் விரும்பும் விதத்தில், உங்கள் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும் மற்றும் வலிமையோடும் நீங்கள் என்னை நேசிக்க வேண்டும்.” நாம் அப்படி நேசிக்கப்படவில்லை என்று உணரும்போது, ​​ கோபங்கொள்கிறோம். எதிர்பார்ப்புகள் விரைவாக கோரிக்கைகளாக-கட்டளைகளாக மாறக்கூடும்! அத்தகைய மனநிலை நம்மை கடுங்கோபத்தில் கொந்தளிக்க வைக்கிறது.  

இருப்பினும், இந்த கடுங்கோபத்தை நாம் விரும்பாமல், அதை சகித்துக்கொள்ள விரும்புகிறோம். எனவே பொதுவாக இப்படிச் செய்ய நாம் தீர்மானிக்கிறோம்: “மற்றவர்கள் என் மீது அன்பை காட்டவில்லை என்றால் எனக்கு கோபம் வராது. புறக்கணிக்கப்பட்டதற்காக நான் கோபப்பட மாட்டேன்.” அத்தகைய தீர்மானத்தின் ஆபத்து இதுதான்: உண்மையான பிரச்சனை இன்னும் கவனிக்கப்படாமல் உள்ளது! கோபத்தின் ஆதாரம் இன்னும் சரிசெய்யப்படவில்லை. நாம் கையாண்ட தீர்வெல்லாம் அறிகுறி மட்டுமேயொழிய, மூல காரணத்திற்கு அல்ல!

மேலும் காரணத்தைக் கண்டறிய, நாம் ஆராய்ந்து, “நான் ஏன் மற்றவர்களிடம் அன்பைத் தேடுகிறேன்?” என்ற ஆழமான கேள்வியைக் கேட்க வேண்டும். நாம் அதைச் செய்யும்போது, ​​நேசிக்கப்பட வேண்டும் என்ற ஆசை சுயநல மனோபாவத்திலிருந்து—ஆரோக்கியமற்ற சுய அன்பிலிருந்து உருவாகிறது என்று நாம் முடிவு செய்ய முடியும்! ஆனால், தேவன் நம்மை நேசித்திருக்கிறார், இன்னும் நம்மை நேசிக்கிறார் என்ற வேத சத்தியத்தை நாம் புரிந்து கொள்ளும்போது, ​​நாம் கிறிஸ்துவில் முழுமையாகவும், எப்போதும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாகவும் இருக்கிறோம், மற்றவர்களிடமிருந்து இந்த வகையான அன்பைத் தேடுவதன் பாவத்தை இதன் மூலம் நாம் காண்போம்.

பிரச்சனையை முழுமையாக அணுக, அத்தகைய சுயநல ஆசைக்கு பதிலாக, தேவன் நம்மீது வைத்திருக்கும் நிலையான அன்பை நன்றியுணர்வாக பிரதிபலிக்க முயற்சிக்கடவோம். அப்போது கெட்ட சிந்தனை பரிசுத்த சிந்தனையாக மாறிவிடும். இந்த வழியில், கோபத்தை அதன் வேர்களில் இருந்து அழிப்பதன் மூலம் அதை சரியாக கையாள்வோம். பாவ நோக்கிலான கோபத்தை நமக்குள் எழச் செய்யும் மற்ற விஷயங்களுக்கும் இதே கோட்பாட்டைப் பயன்படுத்தலாம்.  நாம் அடிக்கடி கோபப்படும் சூழல் இதோ:

  • நம்முடைய மின்னஞ்சல் அல்லது தொலைபேசி அழைப்புக்கு மற்றவர்கள் உடனடியாக பதிலளிக்கவில்லையெனில் “எனது தொலைபேசி அழைப்பிற்கும் மின்னஞ்சலிற்கும் உடனடியாக பதிலளிக்ககடவாயாக” என்ற 12வது கட்டளை நம்மிடம் உள்ளது.
  • நாம் புறக்கணிக்கப்படுகையில், அவமதிக்கப்படுகையில், அல்லது அநியாயமாக நடத்தப்படுகையில் [நிராகரிக்கப்படுவோம் என்று வேதம் கூறியிருக்கிறப்படியால், மன்னிக்கும் இருதயத்தை உடையவர்களாக இருக்க வேண்டும்].
  • நம் கனவுகள் நசுக்கப்படுகையில் [நம்மை வெறுக்கும்படி வேதம் அழைப்புவிடுக்கிறது].

விஷயம் இதுதான்: பாவ நோக்கிலான கோபத்தை சமாளிக்க, சில இலைகளை கத்தரிப்பதையோ அல்லது கிளைகளை வெட்டுவதையோ விட ஆழமாக ஆராய்ந்து பிரச்சனையின் வேரை அடைவது அவசியம். கோபம் எப்போதும் பனிப்பாறையின் முனை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கீழே உள்ள அடிப்பரப்பைப் பார்ப்பதே சவால். ஆழமான பிரச்சினைகளைக் கையாளாததால் பலர் தொடர்ந்து கோபத்துடன் போராடுகிறார்கள். சரி, அது ஏன் அப்படி? ஏனென்றால் அவர்கள் தங்கள் உள் ஆசைகளை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. அவர்கள் சில வெளிப்புற மாற்றங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.

நீரேற்றும் இயந்திரத்திற்கு வெள்ளை நிறம் பூசுவதால் தண்ணீரின் நிறம் மாறாது என்பதை நாம் உணர வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வெளிப்புற நடத்தையின் மாற்றத்தால் மூலாதார சிக்கலைத் தீர்க்க முடியாது. உள்ளான இருதய மாற்றத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும் [ரோமர் 12:2]. வெளிப்புறத்தை மாற்றுவதற்கு மட்டுமே உலகம் நமக்குக் கற்பிக்க முடியும்―உள்ளே மாற்றுவதற்கான வளங்களும் சக்தியும் அதற்கு இல்லை. தேவன் மட்டுமே, அவருடைய ஆவியானவர் மூலமும், வார்த்தையின் மூலமும், நம்மை உள்ளே இருந்து மாற்றுகிறார்! உள்ளத்தை மாற்றுவதானது, வெறுமனே தவறான நோக்கங்களையும் ஆசைகளையும் தள்ளி வைப்பது அல்ல, மாறாக அவற்றை தெய்வீக ஆசைகளாலும், நோக்கங்களாலும் மாற்றுவதாகும். அது முடிந்தவுடன், வெளிப்புறம் தன்னை கவனித்துக் கொள்ளும்.

நீதிமொழிகள் 4:23 இவ்வாறு கூறுகிறது, “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவவூற்று புறப்படும்.” இருதயம் முழு சரீரத்தையும் எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதைக் கவனியுங்கள் [நீதிமொழிகள் 4:20-22, 24-26ஐயும் பார்க்கவும்]. எல்லா செயல்களும் இதயத்திலிருந்து புறப்படுகின்றன. எனவே, இருதயம் பாவ நோக்கிலான கோபத்தின் ஊற்று என்பதை புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது, அதை அகற்ற விரும்பினால் இருதயத்தின் ஆசைகளில் மாற்றத்தைத் தேட வேண்டும்.  நம் அடுத்த பதிவில் “பாவ நோக்கிலான கோபத்தின் இலக்குகள் யார்?” என்ற கேள்வியைப் பார்ப்போம். 

Category
Subscribe
Notify of
guest
0 கருத்துக்கள்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments