கோபமும், அது உருவாக்கும் பேரழிவும்―பகுதி 6 பாவ நோக்கிலான கோபத்தின் அழிவுகரமான விளைவுகள் யாவை?

Posted byTamil Editor April 29, 2025 Comments:0

(English Version: “Sinful Anger⎯The Havoc It Creates⎯Part 6”)

பாவ நோக்கிலான கோபம் என்ற தலைப்பில் இது ஆறாவது பகுதியாகும்.  பகுதி 1, பாவ நோக்கிலான கோபம் பற்றிய பொதுவான அறிமுகத்தையும், பகுதி 2, “கோபம் என்றால் என்ன?” என்ற முதல் கேள்வியையும், பகுதி 3, பாவ நோக்கிலான கோபத்தின் ஆதாரம் என்ன? என்ற இரண்டாம் கேள்வியையும், பகுதி 4, பாவ நோக்கிலான கோபத்தின் இலக்கு யார்?  என்ற மூன்றாம் கேள்வியையும், பகுதி 5, பாவ நோக்கிலான கோபம் வெளிப்படுத்தப்படும் பொதுவான விதங்கள் யாவை?  என்ற நான்காம் கேள்வியையும் கையாண்டது.

இந்த பதிவு கேள்வி ஐந்துடன் இடைப்படுகிறது.

பாவ நோக்கிலான கோபத்தின் அழிவுகரமான விளைவுகள் யாவை?

முதலில், நம்முடைய முற்கோபத்திற்கு ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வேதம் இந்த சத்தியத்தை மிகத் தெளிவாகப் போதிக்கிறது.கோபம் நிர்மூடனைக் கொல்லும்” என்று யோபு 5:2 கூறுகிறது. ஒரு நிர்மூடனின் கோபம் இறுதியில் அவனைக் கொன்று விடுகிறது” என்ற அர்த்தத்தை இந்த வசனம் நன்றாகப் படம்பிடிக்கிறது. (கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அடுத்தபடியாக) ஞானமுள்ள மனிதனாகிய சாலொமோன், இதை இன்னும் தெளிவாகக் கூறுகிறார்: கடுங்கோபி ஆக்கினைக்குள்ளாவான்” [நீதிமொழிகள் 19:19].

விஷயம் தெளிவாக உள்ளது: பாவ நோக்கிலான கோபத்திற்கு அடிபணிவது கீழ்காணும் 7 அழிவுகரமான விளைவுகளை உண்டாக்குகிறது:

அழிவுகரமான விளைவு # 1.   பாவ நோக்கிலான கோபம் மக்களை நம்மிடமிருந்து தூரமாக்கும். 

கோபமான நபர்களுடன் நெருங்கி பழகுவதை ஒரு எழுத்தாளர் இவ்வாறு விவரிக்கிறார், “ஒரு டைம்பாம், அதாவது வெடிகுண்டுக்கு அருகில் பதுங்கிக் கொள்வது―அது எப்போது வெடித்து உங்களைத் துண்டுத்துண்டாக்கும்  என்று உங்களுக்குத் தெரியாது.” ஒரு சிறிய விஷயம் கூட அவர்களை கோபப்படுத்தும். கோபம் கொண்டவர்கள் பகுத்தறிவின் குரலைக் கேட்பதில்லை. அவர்கள் கத்துவதிலே மிகவும் மும்முரமாக இருக்கிறார்கள், மற்றவர் என்ன சொல்ல முயற்சிக்கிறார் என்பதை அவர்களால் கேட்க முடியாது. கோபமானவர்களோடு மிகுந்த எச்சரிக்கையுடன் நடக்க வேண்டியிருக்கும். எனவேதான் கோபக்காரனிடம் பொதுவாக மக்கள் நெருங்கிப் பழக மாட்டார்கள். தாங்கள் காயப்பட விரும்பாததால் அவர்களைத் தூரத்தில் வைத்திருக்க விரும்புகிறார்கள்!

நீதிமொழிகள் 22:24-ல் சாலொமோன் இந்த எச்சரிக்கையை விடுப்பதில் ஆச்சரியமில்லை: “கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே.” சாலொமோனுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த முற்பிதாவாகிய யாக்கோபு,  தான் மரிப்பதற்கு சற்று முன்பும் அதே விதமாக பேசினார். ஆதியாகமம் 34, யாக்கோபின் மகள் தீனா, சீகேமின் ஆட்சியாளரின் மகனான சீகேமினால் கற்பழிக்கப்பட்டதை விவரிக்கிறது. இதன் விளைவாக, அவளது சகோதரர்கள், சிமியோன் மற்றும் லேவி, அந்த நகரத்தில் உள்ள எல்லா ஆண் மக்களையும் அழித்தார்கள்; இது கட்டுப்பாடற்ற மற்றும் நியாயப்படுத்த முடியாத கோபத்தின் விளைவு!

யாக்கோபு மரணப்படுக்கையில் அவர்களுக்குச் சொன்ன நியாயத்தீர்ப்பின் வார்த்தைகள் இவை:  “சிமியோனும், லேவியும் ஏக சகோதரர்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள்.  என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே: அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை நிர்மூலமாக்கினார்களே!” [ஆதியாகமம் 49:5-6].

சில சமயங்களில் ஒரு மனைவி பாவ நோக்கிலான கோபத்தால் கணவரை விட்டுப் பிரிவதால் எத்தனை திருமணங்கள் சீரழிகின்றன? மீண்டும் ஒருமுறை, சாலொமோனின் வார்த்தைகள் இந்த சத்தியத்தை நமக்கு நினைவூட்டுகின்றன, “சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்” [நீதிமொழிகள் 21:9]. இதே சத்தியம் நீதிமொழிகள் 25:24 இல் மறுபடியுமாக கூறப்பட்டுள்ளது. சண்டை போடும் மனைவியாக இருந்தாலும் சரி, கணவனாக இருந்தாலும் சரி, இந்த நீதிமொழியின் சத்தியமானது பல திருமணங்களில் உண்மையாக இருக்கிறது!

பாவ நோக்கிலான கோபத்தின் ஒரு விளைவு இதுதான்: கோபமான மனிதர் தனிமையில் வாழ்கிறார். விசுவாசிகள் தனிமையில் வாழ அழைக்கப்படாமல்,  மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இருப்பினும், பாவ நோக்கிலான கோபத்தால் நாம் கட்டுப்படுத்தப்பட்டால், தனிமைப்படுத்தப்பட்டுத் துன்பத்தை அனுபவிப்பது மட்டுமல்லாமல், நம்மைப் போலவே பிறரை நேசிக்க வேண்டும் என்று தேவன் கொடுத்த பொறுப்பையும் நிறைவேற்றத் தவறிவிடுவோம்.

சில சந்தர்ப்பங்களில், மக்கள் கோபத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, பிறரை தங்களிடமிருந்து விலக்கி வைக்கிறார்கள். இந்த விதத்தில், அவர்கள் மற்றவர்களைக் கட்டுப்படுத்துகிறார்கள். எப்படியென்றால்,  மக்களை தூரத்தில் வைத்திருப்பது என்பது மற்றவர்களுடன்-குறிப்பாக  தாங்கள் காயப்படுத்தியவர்களுடன் தொடர்புக் கொள்ள வேண்டியதில்லை! இதன் மூலம், அவர்கள் எல்லா வகையான மோதல்களையும், குற்றச்சாட்டுகளையும் தவிர்க்கலாம். மேலும் எல்லா நேரத்திலும் கடுங்கோபமாக இருப்பவர்களிடமிருந்து மக்கள் பொதுவாக விலகி இருப்பார்கள் என்பதை அவர்கள் அறிந்திருப்பதால், அவர்கள் தங்கள் கோபத்தைப் பயன்படுத்தி மக்களை தூரத்தில் வைக்கிறார்கள்.

நீங்கள் தனிமையில் இருந்தால், இந்த இரண்டு கேள்விகளைக் கேட்பது நல்லது:

  1. என் கோபம் தான் மக்களை என்னிடமிருந்து விலக்கி வைக்கிறதா? 
  2. என்னிடமிருந்து மக்களை விலக்கி வைக்க நான் என் கோபத்தைப் பயன்படுத்துகிறேனா?

பாவ நோக்கிலான கோபம் மக்களை நம்மிடமிருந்து தூரமாக்கும். எனவே, எச்சரிக்கையாக இருக்கக்கடவோம்.

அழிவுகரமான விளைவு # 2. பாவ நோக்கிலான கோபம் மற்றவர்களை எதிர்மறையாக பாதிக்கும்.

இந்த குறிப்புக்கு ஆதாரமாக நீதிமொழிகள் 22:24-25 ஆகிய வசனங்களை பார்ப்போம். “கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே. அப்படிச் செய்தால். நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய்.”

25 ஆம் வசனத்தைக் கவனியுங்கள், இது “அப்படிச் செய்தால். நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய்” என்று கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தோழனாக இருப்பதும் கூட பாவ நோக்கிலான கோபம் மற்றவர்களை எதிர்மறையாக பாதிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று சாலொமோன் கூறுகிறார்.

நீங்கள் எளிதில் கோபங்கொள்ளும் பெற்றோராக இருந்தால், பிள்ளைகள் நாள்தோறும் உங்கள் கோப மனப்பான்மையைப் பார்க்கிறார்கள் என்பதை கவனிப்பது அவசியம். அது எவ்வளவு எதிர்மறையான தாக்கத்தை உண்டுப்பண்ணும்? மற்றவர்களுக்கு―குறிப்பாக நம் குழந்தைகள் மீது நேர்மறையான தாக்கத்தை உண்டுப்பண்ண நாம் அழைக்கப்படுகிறோம்! ஆனால் பாவ நோக்கிலான கோபம் அதற்கு நேர்மாறாக செய்யும் என்பதைக் கவனியுங்கள்!

பாவ நோக்கிலான கோபம் மற்றவர்களை எதிர்மறையாக பாதிக்கும். எனவே, எச்சரிக்கையாக இருக்கக்கடவாம்.

அழிவுகரமான விளைவு # 3. பாவ நோக்கிலான கோபம் கொலை உட்பட மற்ற பெரிய பாவங்களுக்கு வழிவகுக்கும்!

நீதிமொழிகள் 29:22 இவ்வாறு கூறுகிறது, “கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன்.” காயீனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், ஆபேலின் மீது அவனுக்கு இருந்த கோபம் எப்படி ஆபேலைக் கொலை செய்ய வழிவகுத்தது [ஆதியாகமம் 4:6-8]? வேதத்தில் உள்ள முதல் கொலை, கட்டுப்பாடற்ற கோபத்தின் விளைவாக ஒரு சகோதரனைக் கொல்லப்பட்டதாகும்! அதை வலுவாக எதிர்க்க வேண்டும் என்று தேவன் காயீனை எச்சரித்திருந்தும், பாவ நோக்கிலான கோபம் அவனை ஆண்டுக்கொண்டது. “பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய்” [ஆதியாகமம் 4 :7]!

நாம் கொலையில் ஈடுபடாவிட்டாலும், நம்முடைய பாவ நோக்கிலான கோபம் நாம் நினைத்ததை விட அதிக சேதத்தை ஏற்படுத்தும். அதற்கு ஒரு உதாரணம், கட்டுப்பாடற்ற கோபத்தின் விளைவாக நாம் பேசும் கெட்ட வார்த்தைகள். நீதிமொழிகள் 12:18  இவ்வாறு கூறுகிறது, பட்டயக்குத்துகள் போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஔஷதம்.” கடுங்கோபத்தினால் நிறைந்த இருதயமானது மற்றவர்களை வார்த்தைகளால் புண்படுத்தும், அந்த வார்த்தைகள் அவர்களை நீண்ட காலத்திற்குப் பிறகும் காயப்படுத்துவதைக் கவனியுங்கள். உடல் ரீதியாக ஒருவரைக் கொல்ல முடியாமல் போகலாம் என்பதால், நம் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பலமுறை வார்த்தைகளால் கொன்று விடுகிறோம்.

ஒரு வன்முறைச் செயலானது சில நேரங்களில் “உணர்ச்சியின் குற்றம்.” என்று காவல்துறையினரால் அழைக்கப்படுகிறது, அதாவது அது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதல்ல. இத்தகைய குற்றங்கள் பொதுவாக ஒரு நபரை ஆட்கொள்ளும் திடீர் ஆத்திரத்தால் செய்யப்படுகின்றன. பெரும்பாலும் ஒரு எளிய வாக்குவாதமானது கொலையில் முடிவதில்லை என்றாலும், உடல்ரீதியான வன்முறைச் செயல்கள் உட்பட பல பாவங்களுக்கு வழிவகுக்கிறது. நம்மால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாததே எல்லாவற்றிற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது! கோபம் கொண்டவர்கள் காரியங்களை அவசரமாக செய்யும் திறன் கொண்டவர்கள். அதனால்தான், கோபம் என்ற பாவத்தை ஆரம்ப நிலையிலேயே துடைக்க நாம் முயற்சி செய்ய வேண்டும், அது வளரும் வரை காத்திருக்க கூடாது!

பாவமான கோபம் கொலை உட்பட மற்ற பெரிய பாவங்களுக்கு வழிவகுக்கும். எனவே, எச்சரிக்கையாக இருக்கடவோம்! 

அழிவுகரமான விளைவு # 4. பாவ நோக்கிலான கோபம் அப்பாவிகளைக் கூட காயப்படுத்தும்.

சில சமயங்களில், பெற்றோராக இருந்தாலும்கூட, நம்முடைய கட்டுப்பாடற்ற கோபம் சிறு குழந்தைகளுக்கு–வாய்மொழியாகவும், உடல் ரீதியாகவும் தீங்கு விளைவிக்கிறது. இந்த உண்மையை விளக்கும் ஒரு வேதனையான சிறிய கதை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

 ஒரு மனிதன் தனது புதிய காரை பாலிஷ் செய்துக்கொண்டிருந்த போது, ​​அவரது 4 வயது மகன் ஒரு கல்லை எடுத்து, வாகனத்தைக் கீறி, அதன் ஓரத்தில் கோடுகளை வரைந்தான். கோபத்தில், அந்த மனிதன், தன் கரங்களில் குறடு இருப்பதை உணராமல், குழந்தையின் கைகளில் பலமுறை அடித்தான்.

மருத்துவமனைக்கு சென்று பார்த்ததில் பல எலும்புகள் முறிந்ததின் காரணமாக குழந்தை தனது அனைத்து விரல்களையும் இழந்துவிட்டது. வலி நிறைந்த கண்களுடன் தந்தையைப் பார்த்த அந்த குழந்தை, ‘அப்பா, என் விரல்கள் எப்போது மீண்டும் வளரும்?’ என்று கேட்க, அந்த மனிதன் மனமுடைந்தவனாய் எதுவும் பேசாமல் இருந்தான்.

தனது காரிடம் திரும்பிச் சென்று அதை பலமுறை உதைத்தான். அவனால் அங்கு நிற்க முடியவில்லை. தனது செயலால் நிலைகுலைந்தவனாய், அந்த காரின் முன் அமர்ந்தபடி இருக்கையில், ‘லவ் யூ அப்பா’ என்று தன் குழந்தை எழுதிய கீறல்களைப் பார்த்தான்.

மறுநாள் அந்த மனிதன் தற்கொலை செய்துகொண்டான்.

எங்கள் குழந்தைகளை ஒருபோதும் கண்டிக்க மாட்டோம் என்று தயவு செய்து இந்தக் கதையின் மூலமாய் ஒரு தவறான முடிவை எடுக்க வேண்டாம். ஒரு பெற்றோராக நீங்கள் சரியான முறையில் [தேவைப்படும் இடங்களில்] சிட்சிக்காவிட்டால் அதை பாவம் என்றே வேதம் அழைக்கிறது. இருப்பினும், கட்டுப்பாடற்ற கோபத்தின் விளைவாக சிட்சை இருந்தால் அது பாவம் – இந்த கதை அத்தகைய சீற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. துஷ்பிரயோகம் செய்வதற்கு வேதம் எந்த உரிமத்தையும் கொடுக்கவில்லை!

 பாவ நோக்கிலான கோபம் ஒரு அப்பாவியைக் காயப்படுத்திவிடும் என்பதே இதன் பொருள். உதாரணமாக, நாம் ஒருவருடன் கோபமாக இருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். மற்றொரு நபர் நம்மிடம் வந்து, நாம் கோபமாக இருக்கும் அந்த நபரைப் பற்றி ஏதாவது ஒரு நல்ல காரியத்தைக் குறிப்பிட்டாலும், நாம் அந்த நல்ல விஷயத்தைச் சொன்ன நபருக்கு எதிராக மாறிவிடுவோம். ஏனென்றால், அவர் நம் பக்கம் இல்லை என்று நாம் உணர்கிறோம்! வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மற்றவர்கள் [நம் நண்பர்களாகவும் இருக்கலாம்] நம் கோபத்திற்கு ஆதரவளிக்காததால் அவர்கள் மீதும் நம்முடைய கோபம் பற்றியெரிகிறது!

பாவ நோக்கிலான கோபம் அப்பாவி மக்களை காயப்படுத்த நம்மை வழிநடத்தும். எனவே, எச்சரிக்கையாக இருக்கக்கடவோம்.

அழிவுகரமான விளைவு # 5. பாவ நோக்கிலான கோபம் தேவனுடைய நியாயத்தீர்ப்பைக் கொண்டுவரும். 

பாவ நோக்கிலான கோபத்தின் மற்றொரு அழிவுகரமான விளைவு இங்கே கூறப்பட்டுள்ளது. இம்முறை கர்த்தராகிய இயேசுகிறிஸ்து கூறுவதை நாம் பார்க்கப்போகிறோம்.  இது மலைப் பிரசங்கத்தில் காணப்படுகிறது.   

மத்தேயு 5:21-22 கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.”

கோபம் பாவமான பேச்சுக்கு வழிவகுக்கிறது, இது “ராகா” [raca] என்ற வார்த்தையால் சுட்டிக்காட்டப்படுகிறது, இதற்கு அவமதிப்பு என்று பொருளாகும். 21 மற்றும் 22 ஆம் வசனங்களில் இரண்டு முறை கூறப்பட்டுள்ள “நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாக இருப்பான்” என்ற சொற்றொடரும், 22 ஆம் வசனத்தில் “எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்” என்ற சொற்றொடரும், அத்தகைய செயல்கள் இறுதியில் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறது!

உண்மையாகவே தேவனுடைய பிள்ளைகளாக இருப்பவர்கள் நரகத்தின் அக்கினியை ஒருபோதும் எதிர்கொள்ள மாட்டார்கள் என்றாலும், அவர்கள் கோபத்தின் வாழ்க்கை முறையை கடைப்பிடித்தால், தேவன் தம்முடைய பிள்ளைகளை கடுமையாக சிட்சிப்பார். ரோமர் 6:17-18 ஆகிய வசனங்கள் போதிப்பதற்கு மாறாக, பாவத்திற்கு அடிமைகளாகத் தொடர்ந்து வாழ்வதால், பாவ நோக்கிலான கோபம் கொண்டவர்கள் உண்மையிலேயே தேவனுடைய பிள்ளைகளா என்று தங்களைத் தாங்களே ஆராய்ந்து பார்க்க வேண்டும்!

பாவ நோக்கிலான கோபமுடையவர்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது. ஏனெனில் கோபத்தின் ஆவியானது பெருமையும் கலகமும் நிறைந்த ஒரு ஆவியாகும். பெருமையும் கலகமுமான ஆவியை தேவன் எப்படி அங்கீகரிக்க முடியும்? மனத்தாழ்மையாக இருப்பவர்களிடம் மட்டுமே தேவன் மகிழ்ச்சியடைகிறார் [யாக்கோபு 4:6].

அழிவு விளைவு # 6. பாவ நோக்கிலான கோபம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

நீதிமொழிகள் 14:29-30 நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான். சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.” இந்த வசனங்களைக் குறித்து ஒரு எழுத்தாளர் இவ்வாறு கூறுகிறார், “எபிரேய கவிதை அமைப்பு பொறுமையானது “உடலுக்கான உயிராகவும்”  கோபமானது “எலும்புகளை அழிப்பதாகவும்” கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கோபமும் பொறாமையும் உடலை சேதப்படுத்துகிறது, அதேசமயம் பொறுமையும், சாந்தமும் ஆரோக்கியத்தை தருகிறது.

“கோபம் என்பது ஒரு அமிலம் போன்றது, அது  ஊற்றப்படும்போது ஏற்படும் சேதத்தை விட, அதை சேமித்து வைத்திருக்கும் பாத்திரத்திற்கு அதிக தீங்கை விளைவிக்கும்!” என்ற வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. (எளிதில் கோபமடைகிறவர்கள் அடிக்கடி பல உடல் பிரச்சனைகளை சந்திக்கின்றனர் [உதாரணமாக, உயர் இரத்த அழுத்தம், செரிமான பிரச்சனைகள் போன்றவை]. 

பாவ நோக்கிலான கோபம் நம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே, எச்சரிக்கையாக இருக்கக்கடவோம்.

அழிவுகரமான விளைவு # 7. பாவ நோக்கிலான கோபம் ஜெபத்தைப் பாதிக்கும்.

அப்போஸ்தலனாகிய பவுல் 1 தீமோத்தேயு 2:8 வசனத்தில் இவ்வாறு கூறுகிறார், “அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன்.” “என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்” என்று சங்கீதம் 66:1 கூறுகிறது. கோபம் உட்பட எந்தப் பாவத்தையும் விட்டு விலகாமலிருக்கும் மக்களின் ஜெபத்தை தேவன் கேட்க மாட்டார்! 1 தீமோத்தேயு 2:8 ஆம் வசனம் புருஷர்களைப் பற்றி முக்கியமாக கூறினாலும், இருதயத்தில் உள்ள கோபமானது ஒருவரின் ஜெபங்களுக்கு பதிலளிக்கப்படுவதை பாதிக்கிறது—ஜெபிக்கும் நபர் ஆணாக இருந்தாலும் அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி!

“அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்” [1 பேதுரு 3:7]. என்று பேதுரு எச்சரிக்கிறார்.  தங்கள் மனைவிகளிடம் அலட்சியமாக இருப்பதில் கோபமான மனநிலையும் அடங்கும். அது கணவனின் ஜெபங்களுக்குப் பதில் கிடைக்காமல் தடுக்கும்.

பாவ நோக்கிலான கோபம் நம் ஜெபங்களை பாதிக்கலாம். எனவே, எச்சரிக்கையாக இருக்கக்கடவோம். 

மேலே உள்ள 7 பட்டியலில் இன்னும் பல விளைவுகளைச் சேர்க்கலாம். ஆனால் பாவமான கோபத்தின் எதிர்மறையான விளைவுகள் எவ்வளவு கொடியவை என்பதைப் பார்க்கும்போது இந்தக் குறிப்புகள் நம்மை அதிகமாக அசைத்துப்பார்க்க வேண்டும்.

நமது அடுத்த பதிவில், பாவ நோக்கிலான கோபத்திலிருந்து நாம் எவ்வாறு விடுபடுவது? என்ற   கடைசியான ஆறாவது கேள்வியைப் பார்த்து இந்தத் தொடரை முடிப்போம். 

எளிதில் கோபமடைகிறவர்களிடம் தேவன் மகிழ்ச்சியடையாததற்கு மற்றொரு காரணம், அவர்கள் தேவனுடைய மகிமையைக் கொள்ளையடிப்பதே ஆகும். அந்த நபர் இறுதி நீதிபதியாக தேவனின் ஸ்தானத்தை எடுத்துக்கொள்கிறார். சிமியோனும் லேவியும் சீகேமியர்களைத் தாக்கியபோது அதைத்தான் செய்தார்கள் [ஆதியாகமம் 34:24-29]. இஸ்ரவேலர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசித்தபோது நகரங்களை அழிக்கும்படி தேவன் அவர்களுக்குக் கட்டளையிட்டார். ஆயினும், அது தேவனுடைய கட்டளைகளின்படி மட்டுமே செய்யப்பட வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது ஒரு புனிதப் போர், அங்கு தேவன் தமக்கு எதிராகப் பாவம் செய்த மக்களை பழிவாங்குவதற்கு அவர்களை தமது கருவிகளாக  மட்டுமே பயன்படுத்தினார்.

ஒரு தவறை சரிசெய்வதற்கு மக்கள் சுயமாகவே செயல்படுகிறார்கள். அந்த விதத்தில், அவர்கள் தீமைக்கு சரிக்கட்டுதல் எனும் தேவனுடைய உரிமையைத் தாங்களே எடுத்துக் கொள்கிறார்கள். ரோமர் 12:19 ஆம் வசனம் தெளிவாகக் கூறுகிறது, “பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். நாம் தேவனின் மகிமையைக் கொள்ளையடித்துவிட்டு, ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது!

பாவ நோக்கிலான கோபம் தேவனின் நியாயத் தீர்ப்பை நம்மீது கொண்டு வரும். எனவே, எச்சரிக்கையாக இருக்கக்கடவோம்.

Category
Subscribe
Notify of
guest
0 கருத்துக்கள்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments