கோபமும், அது உருவாக்கும் பேரழிவும்—பகுதி 7 பாவ நோக்கிலான கோபத்திலிருந்து நாம் எவ்வாறு விடுபடுவது?

English Version: “Sinful Anger – The Havoc It Creates (Part 7)”
பாவ நோக்கிலான கோபம் என்ற தலைப்பில் இது ஏழாவது பகுதியாகும். பகுதி 1, பாவ நோக்கிலான கோபம் பற்றிய பொதுவான அறிமுகத்தையும், பகுதி 2, கோபம் என்றால் என்ன? என்ற முதல் கேள்வியையும், பகுதி 3, பாவ நோக்கிலான கோபத்தின் ஆதாரம் என்ன? என்ற இரண்டாம் கேள்வியையும், பகுதி 4, பாவ நோக்கிலான கோபத்தின் இலக்கு யார்? என்ற மூன்றாம் கேள்வியையும், பகுதி 5, பாவ நோக்கிலான கோபம் வெளிப்படுத்தப்படும் பொதுவான விதங்கள் யாவை? என்ற நான்காம் கேள்வியையும், பகுதி 6, பாவ நோக்கிலான கோபத்தின் அழிவுகரமான விளைவுகள் யாவை? என்ற ஐந்தாம் கேள்வியையும் கையாண்டது.
இந்த பதிவு கீழ்காணும் ஆறாவது கேள்வியுடன் இடைப்படுகிறது.
பாவ நோக்கிலான கோபத்திலிருந்து நாம் எவ்வாறு விடுபடுவது?
பாவ நோக்கிலான கோபத்திலிருந்து விடுதலை தேடுவதற்கான முக்கியக் காரணம் இதுதான்: தேவன் அவ்வாறு செய்யும்படி கட்டளையிடுகிறார்! ஓரிரு வசனங்கள் இந்த சத்தியத்தை வெளிப்படுத்துகின்றன. கொலோசெயர் 3:8, “இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும்,…விட்டுவிடுங்கள்.” எபேசியர் 4:31, “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும்,…உங்களைவிட்டு நீங்கக்கடவது.”
கோபத்திலிருந்து விடுபடுவது மகிழ்ச்சியான உறவுகளுக்கு வழிவகுக்கும் அல்லது இருதயத்திற்கு அமைதியைக் கொண்டுவரும் என்ற காரணத்திற்காக விட்டு விலகக் கூடாது. மாறாக, மேற்கண்ட வசனங்கள் குறிப்பிடுவது போல், பாவ நோக்கிலான கோபத்தை விலக்கும்படி தேவன் நமக்குக் கட்டளையிட்டுள்ளார். அந்த காரணம் மட்டும் முதன்மையானதாக இருக்க வேண்டும்!
மேலும், இந்தப் பாவத்தை விட்டு விலகுமாறு வேதம் நமக்குக் கட்டளையிட்டுவதால், தேவனுடைய பிள்ளைகளாக, அவருடைய கிருபையால் நாம் இந்தப் பாவத்தை வெல்ல முடியும் என்றும் அர்த்தமாகிறது. எனவே, கேள்வி இதுதான்: இந்த பாவத்தை நாம் எவ்வாறு கையாள்வது? கீழே கொடுக்கப்பட்டுள்ள 6 பரிந்துரைகள், மரணத்திற்கு நேராக நடத்தும் இந்த பாவத்தை வெல்லும் போரில் நமக்கு உதவியாக இருக்கும்.
1. நமக்குள் கோபம் இருக்கிறதென்று ஒத்துக்கொள்ள வேண்டும்.
தான் மரித்துவிட்டதாக எல்லோரிடமும் வாக்குவாதம் செய்த ஒரு மனிதனைப் பற்றி நான் படித்தது நினைவிருக்கிறது. அவனது மனைவி அவர் சொல்வது தவறு என்று நிரூபிக்க மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள். மருத்துவர் அந்த மனிதனிடம், “மரித்தவர்களுக்கு இரத்தம் வருமா?” என்று கேட்க, அதற்கு அந்த மனிதன், “வராது” என்று பதிலளித்தான். உடனே அந்த மருத்துவர் ஒரு ஊசியை எடுத்து அந்த மனிதனின் கையில் குத்தினார், உடனே இரத்தம் வெளியேறியது. பிறகு அவனிடம், “அப்படியானால், நீ இப்போது என்ன நினைக்கிறாய்?” என்று மருத்துவர் கேட்டார். அதற்கு அந்த மனிதன், “நான் தவறாக கூறிவிட்டேன். மரித்தவர்களுக்கும் இரத்தம் கசியும்!” என்றான்.
சில சமயங்களில் நாம் அந்த மனிதனைப் போல இருக்கிறோம். நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும் கோபம் இருப்பதைப் பார்த்துவிட்டு, நமக்குள் இருப்பதை பார்க்க விரும்பவில்லை என்றால், நாம் ஒருபோதும் விடுதலையை நாட மாட்டோம். எனவே, நமக்கு கோபம் தொடர்பான பிரச்சனை இருக்கிறதா என்று கண்களைத் திறந்து, அதை ஒப்புக்கொள்ளும் மனத்தாழ்மையை தேவனிடம் கேட்க வேண்டும். தாவீதைப் போலவே நாமும் எப்பொழுதும் ஜெபிக்க வேண்டும், “தேவனே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும், என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்” [சங்கீதம் 139:23-24].
2. இந்தப் பாவத்திலிருந்து விடுதலை பெற நாம் மனதார விரும்ப வேண்டும்.
நமக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வது வேறு விஷயம், அதிலிருந்து விடுபட விரும்புவது முற்றிலும் மற்றொரு விஷயம். பாவத்திலிருந்து விடுபடுவது—அது எந்தப் பாவமாக இருந்தாலும் எளிதான பிரச்சினை அல்ல. தொடர்ந்து போராட வேண்டிய 3 வலிமையான எதிரிகள் நம்மிடம் உள்ளனர்:
(1) எளிதில் கீழ்ப்படியாத நமது மாம்சம்.
(2) நமது விசுவாசக் கப்பலை சேதப்படுத்தி, பரிசுத்தத்தை நோக்கிய நமது பயணத்தை முறியடிக்க
தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் பிசாசு.
(3) நமது விசுவாசத்தை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்ட கடவுள்-எதிர்ப்பு சிந்தனையுள்ள உலகம்.
இருப்பினும், இந்த எதிரிகளை எதிர்ப்பது எளிதானது அல்ல, அதற்கு மிகுந்த விடாமுயற்சி தேவை. இந்த பாவத்திலிருந்து விடுதலை பெற நாம் தொடர்ந்து வாஞ்சித்தால் மட்டுமே அதை பெற முடியும். தேவனின் பரிசுத்தத்தை தொடர்ந்து தியானிப்பதே அத்தகைய வேட்கையை வளர்ப்பதற்கான ஒரு வழியாக இருக்கிறது.
3. நமது சிந்தனை முறைகளை மாற்ற முயல வேண்டும்.
நம்முடைய முந்தைய பதிவுகளில் படித்தது போல், இருதயமானது பாவ நோக்கிலான கோபத்தின் ஊற்றாக இருக்கிறது [மாற்கு 7:21-23, யாக்கோபு 4:1-2]. எனவே, இந்தப் பாவத்தை வேரோடு அகற்ற விரும்பினால், சில வெளிப்புற மாற்றங்களைச் செய்வது மட்டுமல்லாமல், இந்தப் பிரச்சனைக்குக் காரணமான இருதயத்தின் தவறான ஆசைகளை நாம் நிறுத்த வேண்டும். நமது சிந்தனை முறைகளை மாற்ற முயல வேண்டும். வேறுவிதமாகக் கூறுவதென்றால், கெட்ட சிந்தனையை பரிசுத்தமான சிந்தனையாக மாற்ற வேண்டும். வேதம் இதை “களைந்துப்போடுதல்” மற்றும் “தரித்துகொள்ளுதல்” என்று அழைக்கிறது [எபேசியர் 4:22-24, கொலோசெயர் 3:9-10].
இந்தத் தொடரின் மூன்றாம் பகுதியில், பாவ நோக்கிலான கோபத்தின் மூலாதாரத்தைப் பற்றி விவாதிக்கும் போது, கடுங்கோபத்திற்கு வழிவகுக்கும் தவறான சிந்தனையை குறித்த ஒரு உதாரணத்தைப் பார்த்தோம் [படிக்கத் தொடர்வதற்கு முன் அதை விரைவாக மதிப்பாய்வு செய்வது உதவியாக இருக்கும்]. பாவ நோக்கிலான கோபத்தை கையாள்வதில், சில கிளைகளை வெட்டுவதையோ அல்லது சில இலைகளை கத்தரிப்பதையோ விட ஆழமாக ஆராய்ந்து பிரச்சனையின் வேரை அகற்றுவது அவசியம். கோபம் எப்போதும் பனிப்பாறையின் முனை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கீழே உள்ள அடிப்பரப்பைப் பார்ப்பதே சவால். நமது செயல்கள் அனைத்தும் நமது சிந்தனையின் விளைவாகும். எனவே நமது சிந்தனையை மாற்றினால், நமது செயல்கள் தானாகவே மாறும்.
ரோமர் 12:2, “உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” என்றும்; நீதிமொழிகள் 4:23, “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்” என்றும் நமக்குத் தெளிவாக நினைவூட்டுகிறது. மனமும், இருதயமும் நம் சிந்தனையை உருவாக்கும் பகுதியை அடையாளப்படுத்துகிறது. பின்னர் சிந்தனை செயலுக்கு வழிவகுக்கிறது. எனவே, ஆதாரம் [மனம்/இருதயம்] எவ்வளவு சுத்தமாக இருக்கிறதோ, செயல் [நடத்தை] அவ்வளவு தூய்மையாக இருக்கும்!
நம்மில் பலர் கோபத்துடன் தொடர்ந்து போராடுகிறோம், ஏனென்றால், ஆழமான பிரச்சினைகளை நாம் கையாள விரும்புவதில்லை. நமது உள்ளான ஆசைகளை மாற்ற விரும்புவதில்லை. இந்த பாவத்தைப் பற்றி சில சமயங்களில் குற்றவுணர்வு இருந்தாலும், நம்முடைய கோபமான அணுகுமுறையால் சௌகரியமாக உணர்கிறோம். எனவே, சில வெளிப்புற மாற்றங்களில் கவனம் செலுத்துகிறோம். இந்த பாவத்தை முற்றிலும் அகற்ற விரும்பாமல், நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாத அளவிற்கு மட்டும் மாற்றங்களை செய்துக்கொள்கிறோம்! ஆனால், அப்படி நினைப்பது பெரிய பாவங்களுக்கு வழிவகுக்கும். இந்தப் பாவத்தை செய்யாமலிருப்பதற்கான ஒரே வழி முழுமையான இருதய மாற்றத்தைத் தொடர்வதுதான். தூய்மையான எண்ணங்களையும், தூய்மையான செயல்களையும் விளைவிக்கும் [அதைப் பற்றி 5 ஆம் குறிப்பில் பார்ப்போம்] வேத சத்தியத்தால் நம் மனதை நிரப்ப வேண்டும்.
4. கோபத்தைத் தூண்டும் குறிப்புகளைப் பற்றி நாம் சிந்தித்து, அவற்றை புத்திசாலித்தனமாக கையாள வேண்டும்.
நீதிமொழிகள் 22:3 இவ்வாறு கூறுகிறது, “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்” எனவே, நாம் புத்திசாலியாக இருக்க வேண்டும், கோபமுற்ற நேரங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். இத்தகைய பிரதிபலிப்பு, காரணங்களைச் தெளிவாகக் கண்டறியவும், அவற்றை திறம்பட கையாளவும் உதவும். இது நபருக்கு நபர் மாறுபடும் என்றாலும், பல்வேறு பிரச்சனைகள் [வேலை, குடும்பம், உடல்நலம்] காரணமாக ஏற்படும் மன அழுத்தம், தூக்கமின்மை, நம்பத்தகாத எதிர்பார்ப்புகள், நம்மை புண்படுத்தியவர்களிடம் கசப்பு, பொறுமையின்மை போன்ற சில பொதுவான குறிப்புகள் இங்கே காணப்படுகின்றன. இந்த பட்டியல் இன்னும் நீண்டுக் கொண்டு போகலாம்.
நாம் ஒவ்வொருவரும் கோபப்படுவதற்கு காரணமான தூண்டுதல்களோடு தனிப்பட்ட முறையில் இடைப்பட்டு, அவைகளை அடையாளம் கண்டு, நம் இருதய நோக்கங்களை ஆழமாக ஆராய வேண்டும். உதாரணமாக, ஒருவரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறுகையில் நம் மீது நாமே கோபமடைவது, மற்றவர்களின் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற நாடுகிறோம் என்பதையே காட்டுகிறது. அப்படி ஏன் நாடுகிறோம் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். பிறர் முன் அழகாக இருப்பதே நம் பெருமையின் நோக்கமா? ஒரு தோல்வி ஏற்படும் போது நம் மீதும், பிறர் மீதும் கோபப்படுகிறோமா? என்று உண்மையான காரணத்தை நாம் கண்டறிந்தால், அதை திறம்படக் கையாளமுடியும்.
கிறிஸ்தவ வாழ்வு செயல்திறனை சார்ந்ததல்ல என்பதை தொடர்ந்து நினைவில் வைத்துக் கொள்ளுதலே மற்றவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறும் சூழ்நிலைக்கு சிறந்த தீர்வாகும். நாம் சத்துருக்களாக இருந்தபோது நம்மை நேசித்த ஒரு தேவன் நம்மோடு இருக்கிறார் [ரோமர் 5:8] அவருடைய அன்பிலிருந்து இன்றும் என்றென்றும் எதுவும் நம்மைப் பிரிக்காது [ரோமர் 8:38-39]. இந்த சத்தியத்தைப் பற்றிய அறிவு நம் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும், மற்றவர்களின் [அல்லது சுய] எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததால் கோப உணர்வுகள் எழும்பும்போது, “நான் தோல்வியடைந்தாலும் தேவன் என்னை நேசிக்கிறார், எனவே நான் சமாதானமாக இருக்க முடியும்” என்பதை நாம் பிரதிபலிக்க வேண்டும்.
இப்போது “கெட்ட சிந்தனைக்கு” பதிலாக “தூய்மையான சிந்தனை” என்று மாற்றிவிட்டப்படியால், மற்றவர்களின் உணர்வுகளைப் பற்றி நாம் கவலைப்படக்கூடாது என்று அர்த்தமல்ல. மாறாக, நாம் எப்போதும் மற்றவர்களை நேசிக்கவும், அவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கவும் வேண்டும். இந்த வகையான சிந்தனை மற்றவர்களால் அங்கீகரிக்கப்பட்டதும், மெச்சக் கூடியதுமான வாழ்க்கையைத் தொடர உதவுகிறது! இத்தகைய அணுகுமுறை மற்றவர்களுக்கு எதிரான கோபத்தின் எண்ணங்களை மட்டுமல்லாமல் நம்மீது உள்ள கோபத்தின் எண்ணங்களையும் கொல்லும்.
நமது பலவீனங்களை பகுப்பாய்வு செய்து, பாவ எண்ணத்தை தூண்டும் இருதய நோக்கங்களை கண்டறிய அவற்றை ஆழமாக ஆராய்வதே முக்கிய சவாலாக இருக்கிறது. இது ஒரு வெங்காயத்தின் பல்வேறு அடுக்குகளை உரிப்பது போன்ற ஒரு வேதனையான செயல். அடுக்குகள் ஒவ்வொன்றும் உரிக்கப்படுவதால் கண்ணீர் தான் வரும். ஆனால் அது தேவையான ஒன்று! நாம் உள்நோக்கங்களை கண்டறிந்ததும், தவறான ஆசைகளை வேதவசனங்களுக்கு ஒத்துப்போகும் ஆசைகளாக மாற்றுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.
5. நாம் வேதத்தை தவறாமல் தியானித்து மனப்பாடம் செய்ய வேண்டும்.
இயேசு தமது பிரதான ஆசாரிய ஜெபத்தில், “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்” என்று கூறுகிறார் [யோவான் 17:17]. சங்கீதம் 119:11-ல் சங்கீதக்காரன், “நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்” என்று கூறினார். பவுல் இவ்வாறு கூறுகிறார், “தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்” [எபேசியர் 6:17]. இதன் பொருள் என்னவென்றால், பரிசுத்த ஆவியானவர் நம்மை மேலும் பரிசுத்தமாக்குவதற்கு உதவும் ஆயுதமாக தேவனுடைய வார்த்தை இருக்கிறது! வேதத்தை நம் கையில் வைத்துக்கொண்டு சத்துருவையும், உலகத்தையும், மாம்சத்தையும் ஜெயித்துவிட முடியாது! அதன் சத்தியங்கள் உள்வாங்கப்பட வேண்டும், அதனால் அவை நம் சிந்தனைகளிலும் இறுதியில் நம் செயல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
துரதிர்ஷ்டவசமாக, தியானமும், வசன மனப்பாடமும் பல கிறிஸ்தவர்களுக்கு விசித்திரமான வார்த்தைகளாய் மாறி போனது. இந்த அடிப்படை வேதாகமக் கொள்கைகளைப் பின்பற்றுவதற்கு நாம் தவறி விடுகிறோம்.இதனால் நாம் பாவத்தினால் மிகவும் பாதிக்கப்படுவதில் ஆச்சரியமில்லை. ஆனால் நாம் உண்மையிலேயே தேவனின் வார்த்தைகளை உள்வாங்கி, அவற்றைப் பற்றி தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தால், அவருடைய கிருபையால் இந்த பாவத்தை திறம்பட அழிக்க முடியும்.
இங்கே ஒரு பரிந்துரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வலைப்பதிவுகளைப் பார்த்து, கோபத்தைக் கையாளும் 6 வசனங்களை எடுத்துக் கொள்ளுங்கள். வாரத்திற்கு ஒவ்வொரு வசனமாக தியானித்து, அதை மனப்பாடம் செய்யுங்கள். 6 வாரத்திற்கு 6 வசனங்களாகி விடும்! பின்னர் மற்ற தலைப்புகளையும் சேர்த்து விரிவாக்குங்கள். உங்கள் பூமிக்குரிய வாழ்நாள் முழுவதும் அதைத் தொடர்ந்து செய்யுங்கள். அது ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும்! தியானமும் வேதாகமத்தை மனப்பாடம் செய்வதும் தவிர்க்க முடியாத கருவிகளாகும், அவை பாவ சிந்தனை முறைகளையும், பாவச் செயல்களையும் அகற்ற உதவும்.
6. நாம் முழு இருதயத்தோடும் ஜெபிக்க வேண்டும்.
வேதமானது தேவன் நம்மிடம் பேசும் வார்த்தையாக இருக்கிறது. பாவ நோக்கிலான கோபத்தை வெல்லும் இந்தப் போரில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினால், நாமும் தேவனிடம் பேச வேண்டும். ஜெபம் என்பது பாவத்தை மேற்கொள்ள உதவுபவரை முழுமையாக சார்ந்திருப்பதன் தாழ்மையான சித்திரமாகும்.
நாம் ஜெபிக்கும்போது: “ஆண்டவரே, என்னால் மட்டும் இதை செய்ய முடியாது. எனக்கு நீர் மிகவும் அவசியம். இந்தப் போரில் வெற்றிபெற உமது ஆவியின் மூலம் எனக்கு உதவும். நான் உம்மைப் பிரியப்படுத்த விரும்புகிறேன், உமக்கு விரோதமாக பாவம் செய்யாதப்படிக்கு தயவுசெய்து எனக்கு உதவும்.” என்று சொல்கிறோம் “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” என்று இயேசுகிறிஸ்துவே கூறியிருக்கிறார் [யோவான் 15:5]. பாவத்தை கையாள்வது ஒரு போர். பரிசுத்த ஆவியின் மூலம் கிறிஸ்துவின் உதவி இல்லாமல், கோபத்தின் ஆவியை நாம் வெற்றிகரமாக வேரோடு அகற்ற முடியாது.
பரிசுத்தத்திற்கான இந்தப் போரில் இன்னும் தீவிரம் காட்ட தேவைப்படும் சமயத்தில் உபவாசிப்பதும் ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் இதுவரை உபவாசம் இருந்ததில்லை என்றால், மெதுவாக ஆரம்பியுங்கள் [காலை உணவைத் தவிர்க்கும் அரை நாள் கூட]. அந்த நேரத்தை ஜெபம் செய்வதற்கும், குறிப்பாக பாவ நோக்கிலான கோபத்தை அறிக்கையிடுவதற்கும், தேவனுடைய இரக்கங்களுக்காக அவரைத் துதிப்பதற்கும், வேதவசனங்களை தியானிப்பதற்கும் பயன்படுத்துங்கள். இந்த பாவத்தை கையாள்வதில் நீங்கள் மும்முரமாக இருக்கிறீர்கள் என்று தேவனுக்கு தெரியப்படுத்துங்கள். அவர் உங்களுக்கு உதவுவார்.
யாக்கோபு 4: 1-3 ல் உள்ள நமது கோபத்தின் மூலாதாரத்தை இருதயத்தின் பாவமான ஆசைகளாக சித்தரித்தப் பிறகு, அதன் ஆக்கியோன் 4: 6-10 ல் இந்தப் பிரச்சினைக்கான தீர்வை வழங்குகிறார். இதயப்பூர்வமான துக்கத்தோடும், கண்ணீரோடும் பாவ அறிக்கையிட்டு நம்மைத் தாழ்த்தி தேவனுக்கு அடிபணியுமாறு அவர் நம்மை அழைக்கிறார். தேவன் நம் அருகில் இருக்கிறார் என்பது வாக்குத்தத்தமாகும்—அதாவது அவர் நம் ஜெபங்களைக் கேட்பார்! நாம் அறிக்கையிடுதலில் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும். “ஆண்டவரே, என் பெருமை என்னை இப்படியும் அப்படியும் வசைபாட வைத்தது. நான் உமக்கு எதிராக பாவம் செய்தேன். என் செயலுக்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன். தயவுசெய்து என்னை ஏற்றுக்கொள்ளும். எனக்கு உதவும், ஆண்டவரே! நான் இந்த பாவத்திலிருந்து மனந்திரும்ப விரும்புகிறேன்.” என்ற வார்த்தைகள் நம்முடைய மனமாற்றத்தை அடையாளப்படுத்த வேண்டும்.
நம்முடைய கோப குணத்தில் அதிக மாற்றத்தைக் காணாததால் நாம் சோர்வடைகையில், “சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும்” [லூக்கா 18:1] என்ற நம் ஆண்டவரின் வார்த்தைகளை நினைவில் கொள்வோம். ஜெபம் என்பது விசுவாசத்தின் ஒரு செயலாகும், அது மீண்டும் மீண்டும் தேவனின் சிம்மாசன அறைக்குள் பிரவேசிக்கிறது. விசுவாசத்தினால், அவருடைய இரக்கத்தையும் கிருபையையும் பெறுவோம் என்று நம்புகிறோம். எபிரெய நிருபத்தின் எழுத்தாளர் “ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” [எபிரெயர் 4:16] என்று கூறுகிறார்.
ஜெபத்தில் தம்மிடம் வரும்படி தேவன் நம்மை அழைக்கிறார். கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது. இந்த அழைப்பை நாம் பயன்படுத்திக் கொள்கிறோமா? ஒரு நாளில், நம் அனைவருக்கும் 24 மணிநேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த 24 மணி நேரத்தில் 2% த்தை கணக்கிட்டால் முப்பது நிமிடங்களாகும். நமது ஜெபத்திற்கும், துதிக்கு பாத்திரருக்கு குறைந்தபட்சம் 2% த்தை ஒரு நாளில் கொடுக்கிறோமா? நாம் அழைக்கப்பட்ட வாழ்க்கையை வாழ உதவக்கூடிய ஒருவரைத் தேடுகிறோமா? பாவ நோக்கிலான கோபத்தின் மீது இந்தப் போரில் வெற்றிபெற நாம் முயன்றால், விடாமுயற்சியுடன் ஜெபிக்காமல் இருக்க முடியாது.
எனவே, இந்தப் போரில் நமக்கு உதவும் 6 பரிந்துரைகள் உள்ளன. உண்மையான விடுதலையை நாடினால் தேவன் நமக்கு உதவுவார் என்று நாம் நம்ப வேண்டும். இந்தப் பாவத்தை நாம் உடனடியாக கையாளாவிட்டால், பிசாசுக்கு நம் வாழ்வில் அதிக இடம் கொடுத்துவிடுகிறோம். எபேசியர் 4:26-27, “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.” காலப்போக்கில் உள்ளத்தில் குடியேறும் கோபம் பெரும் பேரழிவிற்கு வழிவகுக்கும். எனவே, இன்று முதல் இந்த பாவத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கான தீர்மானத்தை எடுப்போம்.
இந்த வலைப்பதிவைப் படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு கோபத்தின் வெளிப்பாடுகளும், அதனால் நீங்கள் அனுபவிக்கும் விளைவுகளைப் பற்றியும் குற்ற உணர்வும் இருப்பவர்களுக்கு, சில தனிப்பட்ட ஆறுதல் வார்த்தைகளை வழங்குகிறேன்.
உங்கள் தோல்விகளின் மத்தியிலும் கர்த்தராகிய இயேசு உங்களை நேசிக்கிறார், தம்மிடம் வரும்படி உங்களை அழைக்கிறார். அவர் உங்களை மாற்ற விரும்புகிறார். சேதமடைந்த உறவுகள் சரியாகலாம் அல்லது சரியாகாமல் போகலாம். ஆனால் இந்த விஷயத்தில் நீங்கள் கிறிஸ்துவையும் அவருடைய விருப்பத்தையும் பின்தொடருகையில்—அவர் உங்களை மாற்றி சமாதானத்தை வழங்குவார். என்று நான் உறுதியளிக்கிறேன்: இருண்ட தருணங்களிலும் அவர் மகிழ்ச்சியை உங்களுக்கு வழங்குவார். எனவே, சோர்ந்து போகாதீர்கள்.
கர்த்தராகிய இயேசு இருதயங்களை மாற்றும் பணியில் தொடந்து இருக்கிறார். பரிசுத்த ஆவியின் மூலம், பாவ கறைகள் நீண்ட காலமாக இருந்தாலும் அவற்றை நீக்க அவர் தமது வல்லமையை தருவார். விசுவாசத்தோடு அவரைத் தேடுங்கள், நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள். அவரது முகத்தைப் பார்த்து நன்றியுடன் அவரை வணங்குவதற்கு சிறிது காலம் தான் உங்கள் முன் இருக்கிறது. எனவே, இந்த நல்ல விசுவாசத்துடன் தொடர்ந்து போராடுங்கள்! மனம் தளராதிருங்கள்!