கோள் சொல்லுதல் என்னும் பாவம்

(English Version: The Sin of Gossip)
அட்லாண்டா நாட்டிலுள்ள ஒரு இதழுடைய விளையாட்டு செய்தி பிரிவின் ஆசிரியர் மோர்கன் பிளேக் கீழ் காணும் வார்த்தைகளை எழுதினார்:
“பீரங்கியிலிருந்து வரும் குண்டுகளின் சத்தத்தை விட நான் மிகவும் கொடியவன். நான் எவரையும் கொல்லாமல் வெற்றி பெறுகிறவன். நான் வீடுகளை தகர்த்து, இருதயங்களை உடைத்து, வாழ்க்கையை அழிக்கிறவன். நான் காற்றின் சிறகுகளில் பயணிக்கிறவன். குற்றமற்ற தன்மை ஒன்றும் என்னை மிரட்டுகிற அளவுக்கு பலம் வாய்ந்தது இல்லை. தூய்மையும் என்னை என்னைப் பயமுறுத்தும் அளவிற்கு தூய்மையாக இல்லை. எனக்கு சத்தியத்தை மீதும் மதிப்பில்லை, நீதியின் மீதும் மரியாதை இல்லை, பாதுகாப்பற்றவர்களின் மேலும் கருணை இல்லை. என்னால் பாதிக்கப்பட்டவர்கள் கடலின் மணலைப் போலவே ஏராளமானவர்களாகவும், பெரும்பாலும் நிரபராதிகளாகவும் இருக்கிறார்கள். என்னுடைய பெயர் ”கோள் சொல்லுதல்”.
கோள் சொல்லுதலுடைய கொடிய வல்லமையை குறித்து என்ன ஒரு தெளிவான சித்தரிப்பு! மீளமுடியாத சேதத்தைச் ஏற்படுத்தும் வல்லமையை இந்த கோள் சொல்லுதல் பெற்றுள்ளது!
கோள் சொல்லுதல் என்றால் என்ன?
“கோள் சொல்லுதல்” என்ற வார்த்தையின் [இந்த வார்த்தையானது பிற மொழிபெயர்ப்புகளில் “கிசுகிசுப்பவர்” ” whisperer ” என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது] அர்த்தமானது சுற்றிச் சென்று “விமர்சித்தல்” அல்லது யாரையாவது முதுகுக்குப் பின்னால்”அவதூறு” கூறுவது என்பதாகும். “சுற்றி ஓடி கோளுரைத்தல்” என்று ஒரு அகராதி இதை வரையறுக்கிறது.
கோள் சொல்லுதலானது ஒரு மனிதனின் குணத்தை அழிக்கவும், எதிர்மறையான வெளிச்சத்தில் அவனை கொண்டுப்போய் விடவும், விசேஷமாக வடிவமைக்கப்பட்ட பேச்சு. இது முகத்தின் முன்புறம் அல்ல, முதுகுக்குப் பின்னால் இருக்கும் பேச்சு. கோள் சொல்லுதலானது நற்குணத்தை அழிக்கிறது, நற்பெயரை கெடுக்கிறது, சமாதானத்தை முறிக்கிறது, பல உறவுகளை உடைக்கிறது. கூர்மையான பட்டயங்கள் கூட கோள்சொல்லும் நாவைப் போன்று ஆழமான காயத்தை ஏற்படுத்தாது! ஆகவே, இந்த பாவத்தைப் பற்றி வேதத்தில் அதிகம் கூறுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
கோள்சொல்லுதலால் உண்டாகும் பாதிப்புகள்:
ரோமர் 1:29 ஆம் வசனம் “வன்மத்தை அல்லது கோள்சொல்லுதலை” ஒரு அவிசுவாசியின் வாழ்க்கையில் காணப்படும் பல பாவங்களில் ஒன்றாக பட்டியலிடுகிறது. “கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்” என்று நீதிமொழிகள் 16:28 நினைவுப்படுத்துகிறது. லேவியராகமம் 19:16-ல் “உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக … நான் கர்த்தர்” என்ற இந்த வார்த்தைகளால் தேவன் தம் மக்களை ஆரம்ப காலத்திலேயே கடுமையாக எச்சரித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.
கோள் சொல்லுதலிலுள்ள அடிப்படை சிக்கல் என்னவென்றால், அது மீளமுடியாத பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டது.
மத்தியக் காலத்தை (Middle Age) சேர்ந்த ஒரு வாலிபன் ஒரு துறவியிடம் சென்றதைப் பற்றிய கதை ஒன்று சொல்லப்படுகிறது, “நான் ஒருவரைப் பற்றி அவதூறான கூற்றுக்களைக் கூறி பாவம் செய்தேன், இப்போது நான் என்ன செய்வது? என்று அந்த துறவியிடம் கூற, அதற்கு அந்த துறவி “நகரத்திலுள்ள ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு பறவையின் இறகை வை” என்று பதிலளித்தார். அந்த வாலிபன் அதைச் செய்துவிட்டு, பின்னர் தான் செய்ய வேண்டியது வேறு ஏதாவது இருக்கிறதா என்று கேட்க மீண்டும் துறவியிடம் வந்தான்.
அதற்கு அந்த துறவி, “திரும்பிச் சென்று அனைத்து இறகுகளையும் திரும்பவும் எடுத்துக் கொள்” என்றார். அந்த வாலிபன், “அது சாத்தியமற்றது! இப்போது, காற்று அவற்றையெல்லாம் கொண்டுப்போய் நகரமெங்கும் வீசியிருக்கும்” என்று பதிலளித்தான். அந்த துறவி அவனுக்கு இவ்வாறு பதிலளித்தான், “அதேபோன்றுதான், உன் அவதூறான வார்த்தைகளையும் மீட்டெடுக்க இயலாது.” கோள்சொல்லுதலின் விளைவு இப்படிப்பட்டதாகும்!
கோள் சொல்லுதலை குணமாக்குதல்:
1. கோள் சொல்லும் பிரச்சினைக்கு ஒரு தீர்வு நீதிமொழிகள் 26:20-ல் காணப்படுகிறது: “விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்”. விறகு இல்லாமல், தீயானது அணைந்து விடுவது போல, கோள்சொல்லுதல் இல்லாதபோது சண்டைகளும் ஓய்ந்து விடும். நாம் சற்று பார்ப்போமானால், கோள் சொல்லுதலானது ஊக்குவிக்கப்படும் சூழலில் மட்டுமே வளர்கின்றது. ஆகவே, கோள் சொல்லுதலுக்கு செவிக்கொடுப்பதைத் தவிர்த்தால், அதன் விளைவாக ஏற்படும் சண்டைகள், உறவுகளை முறித்துக் கொள்வது போன்றவை நடக்காது.
கோள் சொல்லுதலின் நெருப்பைத் தொடர்ந்து எரிய செய்யும் எரிபொருளாக விசுவாசிகள் ஒருபோதும் செயல்படக்கூடாது. அத்தகைய சூழலில் இருந்து நாம் விலகி நடக்க வேண்டும். ஆனால் கோள் சொல்லுதல் என்ற பாவத்திற்கு ஈர்க்கும் வல்லமை இருப்பதால் அவ்வாறு செய்வது எளிதல்ல. நீதிமொழிகள் 26:22-ல் கூறப்பட்டுள்ளபடி, “கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப் போலிருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்”. சுவையான உணவை “வேண்டாம்” என்று சொல்வது எவ்வளவு கடினமோ, சாரம் நிறைந்த செய்திகளுக்கு நம் காதுகளை மூடுவதும் அவ்வளவு கடினம்!
ஆனால் நாம் கீழ் காண்பவைகளை கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்: கோள் சொல்லுதல் ஒரு பாவம், அதைப் பற்றி இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை! நம்முடைய கர்த்தர் கோள் சொல்லுதலை வெறுக்கிறன்றவர், ஆகவே கோள் சொல்லுதலுக்கு செவிக்கொடுப்பதை நிறுத்த முயற்சிக்க வேண்டும். மற்றவர்களின் வாயிலிருந்து வெளிவருவதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் நம் காதுகளுக்குள் செல்வதை நாம் நிச்சயமாக கட்டுப்படுத்த முடியும். திறந்த காதுகள் இருக்கும் வரை திறந்த வாய் மூடாமலிருக்கும். எனவே, கோள்சொல்லுதலுக்கு மூடியிருக்கும்படிக்கு நம் காதுகளைப் பயிற்றுவிக்க வேண்டும்.
2. கோள் சொல்லுதலை நாம் அன்பாகவும் உறுதியாகவும் அணுக வேண்டும்:
(1) கோள் சொல்லி அவதூறு செய்யும் நபரிடம் சென்று பிரச்சினையை நேரடியாகத் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.
(2) எதிர்காலத்தில் கோள் சொல்லுதலுக்கு நாம் செவிகொடுக்கக்கூடாது.
மேலும், கோள் சொல்லுதலுக்கு செவிமடுக்காமலிருப்பது மட்டுமல்லாமல், அதை கையாளும் போது மற்ற 2 விஷயங்களை நினைவில் வைத்திருப்பது உதவியாக இருக்கும்.
முதலாவதாக, மற்றவர்களிடம் அன்பு காட்டாததே இந்த பாவத்திற்கு அடிப்படைக் காரணம் என்பதை நாம் உணர வேண்டும். தனிமனிதனிடம் அன்பைக் குறைக்கும்போது அல்லது நிறுத்தும்போது, நாம் அவர்களை எதிர்மறையாகப் பார்க்க முனைகிறோம், இதனால் அவதூறு செய்ய அதிக வாய்ப்புள்ளது. ஆகவே, கோள் சொல்லுதலெனும் பாவத்திலிருந்து நாம் விலகி இருக்க விரும்பினால், மற்றவர்கள் மீது வளர்ந்து வரும் கசப்புக்கு எதிராக நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் [எபே 4:29-32] மக்கள் நம்மை காயப்படுத்தியிருந்தாலும், நம்மீது அவதூறு சொல்வதை நம்முடைய அன்பை மீண்டும் பெறுவதற்கான ஒரு வழியாக நினைத்தாலும், அது பாவம் தான். பயனற்ற நம்முடைய செயல்களை நியாயப்படுத்துவதில் எந்த பயனும் கிடையாது. கோள் சொல்லுதலை தேவன் பாவம் என்று அழைக்கிறார், அவ்வளவுதான்!
இரண்டாவதாக, சிலருக்கு எதிராக ஏதோ ஒரு சில காரணங்கள் நம்மிடம் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். இந்த விஷயத்தைப் பற்றி தனிப்பட்ட முறையில் [பொதுவில் அல்ல] ஜெபத்தில் நேரம் செலவிட்ட பிறகு, அதை அந்த நபருக்கு பின்னால் பேசுவதற்குப் பதிலாக, அவரிடம் நேராகச் சென்று பேசுவது நல்லது. “உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் நீ போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து” என்று மத்தேயு 18:15 கூறுகிறது. இந்த வசனம் சபை ஒழுக்கத்தின் சூழலில் கூறப்பட்டிருந்தாலும், சபைக்கு தொடர்பில்லாதவர்களுடைய காரியங்களில் நேரடியாக அணுகும் கொள்கையானது, பின்பற்றுவதற்கு ஒரு சிறந்த நடைமுறையாக இருக்கிறது.
இப்படி செய்வது ஒரு சுலபமான காரியமல்ல என்றாலும், இந்த கட்டளைக்குக் கீழ்ப்படிய தேவையான பலத்தை கர்த்தர் நமக்குத் தருவார் என்று நாம் விசுவாசிக்க வேண்டும்! எனவே, மற்றவர்கள் மனந்திரும்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் பாவத்தை தனிப்பட்ட விதத்திலும், நேரடியாகவும் எதிர்கொள்வதன் மூலம், மக்கள் நம் முதுகுக்கு பின்னால் அவதூறு செய்வதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். மற்றவர்கள் நம் முதுகில் பின்னால் அவதூறாக பேசுவதை நம்மில் ஒருவரும் விரும்ப மாட்டோம். அது ஏற்படுத்தும் காயம் நமக்கு நன்றாகவே தெரியும். அப்படியானால் நாம் ஏன் மற்றவர்களிடம் அப்படிப்பட்ட செயலில் ஈடுபட வேண்டும்? மற்றவர்கள் நமக்கு செய்யும் ஒரு காரியம் நமக்கு பிடிக்காதபோது அதே காரியத்தை நாம் மற்றவர்களுக்கு செய்யக்கூடாது.
கோள் சொல்லும் பாவத்திலிருந்து நாம் விடுபட விரும்பினால், இந்த பாவத்தை கடுமையானதாக எடுத்துக் கொண்டு, மேற்கூறிய இந்த கோட்பாடுகளை கடைப்பிடிக்க முயல வேண்டும். மிக முக்கியமாக, இந்த பாவத்தின் குற்ற உணர்வு நமக்கிருந்தால் மனந்திரும்பி கர்த்தரிடம் செல்லக்கடவோம். பேச்சில் தூய்மையைத் தொடர நம் முயற்சிகளில் நமக்கு உதவுமாறு அவரிடம் கேட்கடவோம். “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” [1 யோவான் 1:9], என்ற வேத வசனத்தால் ஆறுதல் அடைவோமாக. “அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” [1 யோவான் 1:7] என்று தேவன் வாக்குப்பண்ணியிருக்கிறார்.
இன்று ஒரு புதிய தொடக்கமாக இருக்கட்டும். இதற்கு மேல் நம்முடைய உதடுகளை கோள் சொல்லுதலிலிருந்தும், செவிகளை அதை கேட்பதிலிருந்தும் தள்ளி வைக்க, தினமும் பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையின் மேல் சார்ந்து வாழ முயற்சி செய்வோமாக. இந்த காரியங்களில், “ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து” [1 பேதுரு 3:10] என்ற பேதுருவின் வார்த்தைகள் நம்முடைய சிந்தையை ஆளக்கடவது.