சுவிசேஷத்திற்கு பொதுவான தடைகள் – பகுதி 1

(English Version: “Common Barriers To Evangelism & How To Overcome Them – Part 1”)
கர்த்தராகிய இயேசு பரமேறி செல்லும்போது சொன்ன கடைசி வார்த்தைகள், “பிரதான கட்டளை” என்று அழைக்கப்படுகிறது, “அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்” [மத்தேயு 28:18-20].
இயேசுவின் பிரதான கட்டளையைப் பற்றிய லூக்காவின் பதிப்பில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகலதேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்” [லூக்கா 24:46-48].
அப்போஸ்தலர் 1:8 இல் அதே லூக்கா பிரதான கட்டளையைப் பற்றிய கூடுதல் பதிவைக் கொடுக்கிறார். ஆனால் இம்முறை, பரிசுத்த ஆவியானவர் சுவிசேஷ ஊழியத்திற்கு நம்மைப் பலப்படுத்துவதைப் பற்றிய இயேசுவின் வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளது: “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.”
சாதாரண மனிதர்களின் கடைசி வார்த்தைகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றால், பிரபஞ்சத்தின் ஆண்டவரும், அரசருமான இயேசு பூமியை விட்டுப் பிரிந்து செல்லும் போது அவர் சொன்ன கடைசி வார்த்தைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? இயேசுவின் சாட்சிகளாக உலகத்திற்கு நற்செய்தி அறிவிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றய அவருடைய வார்த்தைகள் தெள்ளத்தெளிவாகத் தெரியவில்லையா? ஆனாலும், உண்மையுள்ள சாட்சிகளாக இருக்கும் பணியில் நாம் எத்தனை முறை தவறுகிறோம்! இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போனதின் கனமான குற்றத்தை நாம் எத்தனை முறை சுமக்கிறோம்!
இந்த பதிவிலும், இதற்கடுத்த பதிவிலும், சுவிசேஷ ஊழியத்திற்கான சில பொதுவான தடைகளைக் காண [அல்லது சில சந்தர்ப்பங்களில் “சாக்குப்போக்கு” என்று சொல்வதை அடையாளம் காண] பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாக நமக்கு உதவுவார். இந்த தடைகளைக் கடக்க அவர் மீது சார்ந்துக்கொள்ளவும், நம் வழிகளை மாற்றவும் அவர் காரணமாக இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அந்த வகையில், இயேசு கிறிஸ்துவின் உண்மையுள்ள சாட்சிகளாக இருக்க வேண்டும் என்ற நமது அழைப்பை நிறைவேற்ற முடியும்.
எவ்வாறாயினும், இந்த பொதுவான தடைகளைப் பார்ப்பதற்கு முன், சுவிசேஷ ஊழியத்தின் ஒரு எளிய வரையறையைப் பார்ப்போம்: சுவிசேஷ ஊழியம் என்பது பாவங்களுக்காக மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் அன்பையும், உண்மையையும் பற்றிய நற்செய்தியின் அறிவிப்பாகும், அதனால் மக்கள் தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி மன்னிப்பை பெற முடியும்.
எனவே, அந்த வரையறையை நம் மனதின் பின்புறத்தில் வைத்து, தொடர்ந்து படிப்போமாக.
1. நான் அந்த நபரை புண்படுத்திவிடுவேன் என்று பயப்படுகிறேன், அதன் விளைவாக உறவை இழக்க நேரிடும்.
நற்செய்தியின் சாராம்சமானது தேவனுடன் பகைமை கொண்டவர்களை புண்படுத்துகிறது. இருப்பினும், அன்போடு சத்தியத்தை முன்வைக்க நாம் இன்னும் முயற்சி செய்ய வேண்டும், உறவுகளை இழக்க பயப்படக்கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, நமக்கு உறவைக் கொடுப்பவர் தேவன்! அதனால்தான் தேவனுடனான நமது உறவுக்கு மேலாக மக்களுடனான நமது உறவுகளை நிலைநாட்டுவதற்கு எதிராக நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
மத்தேயு 10:37 “தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.”
2. உன் வேலையை பார் என்று எனக்கு அவர்கள் சொல்லலாம்.
மற்றவர்களின் ஆவிக்குரிய நிலை குறித்து அக்கறை காட்டுவது விசுவாசிகளின் வேலை. மற்றவர்களுடைய ஆவிக்குரிய நிலையை பற்றி அக்கறை கொள்வது நமது வேலையல்ல என்று எல்லாரும் நினைத்திருந்தால் நாம் எங்கே இருந்திருப்போம் என்று சற்று சிந்திக்க வேண்டியது அவசியம்!
ஒருமுறை டி.எல். மூடி அவர்கள் சிகாகோவில் ஒரு தெருவில் நடந்து செல்லும் போது, அவருக்கு முற்றிலும் அந்நியரான ஒரு மனிதரிடம், “ஐயா, நீங்கள் ஒரு விசுவாசியா?” என்று கேட்டார், அதற்கு அவர் “நீங்கள் உங்கள் வேலையை மட்டும் கவனியுங்கள்” என்று பதிலளித்தார். மூடி உடனடியாக “ஐயா, இது தான் எனது வேலை.” என பதிலளித்தார்.
2 கொரிந்தியர் 5:20 “ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்.”
3. எங்கு தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை.
இயேசு நமக்காக என்ன செய்தார் என்பதை எடுத்துக்கூறி நம்முடைய சொந்த சாட்சியுடன் ஆரம்பிக்கலாம். அதைத்தான் இயேசு கெதரேனே பட்டணத்தில் பிசாசின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டவனுக்கு கட்டளையிட்டார்.
லூக்கா 8:39 “இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான்.”
நம் அனுபவ சாட்சியங்கள் தனிப்பட்டவை, அவற்றை யாரும் மறுக்க முடியாது. ஆவியானவர் அவ்வாறு பகிர்ந்துக்கொள்ள அனுமதித்தால் அது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தலாம்!
4. நான் இன்னும் வேதத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். மக்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கான எல்லா பதில்களும் என்னிடம் இல்லை.
கெதரேனே பட்டணத்திலிருந்த பிசாசின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டவனுக்கு [லூக்கா 8:26-39] இயேசுகிறிஸ்துவைப் பற்றி அதிகம் தெரியாது. ஆனாலும், அவன் விடுவிக்கப்பட்ட உடனேயே சாட்சி கொடுக்க ஆரம்பித்தான் [லூக்கா 8:39]. ஒரு அவிசுவாசி கேட்கக்கூடிய எல்லா பதில்களும் நம்மிடம் இருக்காது. இருப்பினும், அது சாட்சி கொடுப்பதிலிருந்து நம்மைத் தடுக்கக்கூடாது. “எனக்கு பதில் தெரியாது. ஆனால் நான் கண்டுபிடித்து உங்களுக்கு கூறுகிறேன்” என்று சொல்வது சரியானதாக இருக்கும். ஆவிக்குரிய உதவி செய்யக்கூடிய ஒருவரைக் கலந்தாலோசித்தப்பின்னர் அந்த நபரிடம் மீண்டும் செல்லுங்கள். அதன் பின்னரும் உங்களால் பதில் கொடுக்க முடியவில்லை என்றால், நீங்கள் கேட்பது தவறுகிடையாது. “அதற்கான பதில் எனக்கு தெரியவில்லை!” சுவிசேஷ ஊழியத்தில் எல்லாவற்றிற்கும் பதில்களை கண்டுபிடிக்க முடியாது! என கூறுங்கள்.
போதகர். ஹட்சன் டெய்லர் ஒரு சீன போதகரைப் பற்றி இவ்வாறு கூறினார், அவர் புதிதாக இரட்சிக்கப்பட்டவர்களை எப்போதுமே சாட்சி கொடுக்க அறிவுறுத்தினார். ஒருமுறை, இரட்சிக்கப்பட்ட ஒரு இளைஞரைச் சந்தித்தபோது, “சகோதரரே, நீங்கள் எவ்வளவு காலமாக இரட்சிப்பின் அனுபவத்தில் இருக்கிறீர்கள்” என்று கேட்டார். அதற்கு அந்த மனிதன் இரட்சிக்கப்பட்டு சுமார் மூன்று மாதங்கள் ஆகின்றன என்று பதிலளித்தான். “இரட்சகரிடம் நீங்கள் எத்தனை பேரை சேர்த்திருக்கிறீர்கள்?” என்று ஹட்சன் கேட்டார்.
“ஓ, நான் இப்போது தான் கற்றுக்கொண்டிருக்கிறேன்” என்று அந்த மனிதன் பதிலளித்தார். அதற்கு தலையை அசைத்து மறுத்து, அந்த போதகர் இவ்வாறு சொன்னார், “இளைஞனே, நீ ஒரு முழுப் போதகனாக இருக்க வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கவில்லை, ஆனால் நீங்கள் உண்மையுள்ள சாட்சியாக இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார், சொல்லுங்கள், ஒரு மெழுகுவர்த்தி எப்போது பிரகாசிக்கத் தொடங்குகிறது? – அது ஏற்கனவே பாதி எரிந்திருக்கும் போதா?”
அதற்கு “இல்லை, அது பற்ற வைத்தவுடன் எரிய தொடங்குகிறது” என அந்த மனிதனிடமிருந்து பதில் வந்தது. “அது சரி. அதனால் உங்கள் ஒளி உடனே பிரகாசிக்கட்டும்.” என்று அந்த போதகர் கூறினார்.
5. நான் சுவிசேஷ ஊழியத்தைக் குறித்து மேலும் ஆக்கப்பூர்வமான முறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். பிறகு நான் சுவிசேஷத்தை அறிவிப்பேன்.
ஆம், நமது சுவிசேஷ ஊழியத்தில் முன்னேற்றத்திற்கான இடம் எப்போதுமுண்டு. இருப்பினும், சுவிசேஷ ஊழியத்தைப் பற்றி நமக்குத் தெரிந்த சிறிய விஷயங்களில் நாம் உண்மையாக இல்லாவிட்டால், இன்னும் அதிகமான முறைகளைக் கற்றுக்கொள்ளும்போது எப்படி உண்மையுள்ளவர்களாக இருப்போம்?
லூக்கா 16:10 “கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.”
மேற்கூறிய வசனத்தின் உடனடி வியாக்கியானம் பணத்தின் மீதான உக்கிராணத்துவத்துடன் தொடர்புடையதாக இருந்தாலும், விரிவான பயன்பாடுகளில் சுவிசேஷ ஊழியத்திற்கும் இது பொருந்தும்.
6. நான் பைத்தியம் பிடித்தவன் என்றும் மதவெறியன் என்றும் அவர்கள் நினைப்பார்கள்.
ஒரு விசுவாசியானவர் இந்த உலகத்தைச் சேர்ந்தவர் அல்ல, மாறாக வேறொரு உலகத்தைச் சேர்ந்தவர். எனவே, இவ்வுலக மக்கள் விசுவாசிகளை “வேறுபட்டவர்களாக” நினைப்பது இயல்பு. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு முந்தைய வாழ்க்கையில், விசுவாசிகளையும் பைத்தியக்காரர்கள் என்று நாம் நினைத்திருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
1 கொரிந்தியர் 1:18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.”
1 கொரிந்தியர் 4:10 “நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர்.”
7. சுவிசேஷ ஊழியமானது சபை தலைவர்களின் பொறுப்பு.
அவிசுவாசிகளை சபை ஆராதனைக்கு அல்லது சுவிசேஷ கூட்டத்திற்கு அழைப்பது சுவிசேஷ ஊழிய முறைகளில் ஒன்றாகும், இது தனியாள் ஊழியம் செய்வதற்கு செய்வதற்கு மாற்றல்ல. தம்மைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் நற்செய்தியைப் பிரசங்கிக்க வாயைத் திறக்கும்படி கர்த்தர் கட்டளையிடுகிறார். இது ஆரம்பகால திருச்சபை விசுவாசிகளின் மாதிரியாக இருந்தது.
அப்போஸ்தலர் 8:4 “சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள்.”
8. நான் சகஜமாகப்பழகக்கூடியவன் அல்ல. இயல்பிலேயே, நான் மக்களிடம் பேச மிகவும் கூச்சப்படுகிறவனும், அச்சப்படுகிறவனுமானவன்.
தேவன் பயத்தின் ஆவியை அகற்றி, அவரைப் பற்றி பேசும் வல்லமையால் நம்மை நிரப்பியிருக்கிறார்.
அப்போஸ்தலர் 1:8 “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.”
2 தீமோத்தேயு 1:7-8 “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். ஆகையால் நம்முடைய கர்த்தரைப்பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர் நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக் குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவவல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கனுபவி.”
9. மற்றவர்களிடம் பேசுவதற்குப் பதிலாக அவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன்.
சுவிசேஷ ஊழியத்திற்கு ஜெபம் இன்றியமையாததாக இருந்தாலும், நம் வாயைத் திறந்து மற்றவர்களுக்கு அவரைப் பற்றி சொல்லும்படி கர்த்தர் கட்டளையிடுகிறார்.
லூக்கா 24:47 “அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகலதேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.”
லூக்கா 8:39 “இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான்.”
இழந்துப்போனவர்களை குறித்து கர்த்தரிடம் கூற வேண்டும், அப்படி கூறினால் அது ஜெபம். ஆனால், இழந்துப்போனவர்களிடம் கர்த்தரை குறித்து பேச வேண்டும், அப்படி பேசுவது தான் சுவிசேஷ ஊழியம். இதற்கு மாற்று வேறு ஏதுவும் கிடையாது.
10. மக்கள் மிகவும் பிடிவாதமாக காணப்படுகிறார்கள். நற்செய்தியை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை.
பிரகடனப்படுத்தப்பட்ட நற்செய்தியின் மூலம் கடின இருதயங்களை உடைத்து, மென்மையான இருதயங்களாக மாற்றும் பணியில் தேவன் இருக்கிறார்.
எரேமியா 23:29 “என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்.”
அப்போஸ்தலனாகிய பவுலை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். அவர் சுவிசேஷத்தை எதிர்த்தது மட்டுமல்லாமல், விசுவாசிகள் பலரை உபத்திரவப்படுத்தி மரணத்திற்கு உட்படுத்தினார். ஆனாலும், தேவன் அவரையும் மாற்றினார் [1 தீமோ 1:12-16; அப்போஸ்தலர் 26:9-18]! தேவன் என்ன செய்ய சித்தம் கொண்டிருக்கிறார் என்பதை நாம் ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது. சத்தியத்தை சத்தியமாக முன்வைப்பதே நம் பங்கு. முடிவுகள் தேவனுடைய கரத்திலிருக்கிறது.
ஆக, சுவிசேஷ ஊழியத்திற்கான 10 பொதுவான தடைகளை நாம் கண்டோம்.
அடுத்த பதிவில், சுவிசேஷப் பணிக்கான கூடுதல் தடைகளைப் பார்ப்போம். இதற்கிடையில், இந்தத் தடைகளைத் தாண்டி அவருடைய நற்செய்தியை உண்மையாக அறிவிக்க கர்த்தர் நமக்கு உதவுவாராக!