சுவிசேஷத்திற்கு பொதுவான தடைகள் – பகுதி 2

(English Version: Common Barriers To Evangelism & How To Overcome Them – Part -2)
மேற்காணும் தலைப்பின் முந்தைய பதிவின் தொடர்ச்சியாக, சுவிசேஷ ஊழியத்தில் மேலும் சில பொதுவான தடைகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளன.
11. நான் எதை விசுவாசிக்கிறேனோ அதை விசுவாசிக்கும்படி யாரையும் கட்டாயப்படுத்த விரும்பவில்லை.
உண்மையைச் சொல்வது மக்களைக் கட்டாயப்படுத்துவது அல்ல! நாம் யாரையும் விசுவாசிக்கும்படி கட்டாயப்படுத்த முடியாது.
நமக்கு ஒரு வியாதி வந்து, அதற்கு நல்ல மருந்து கிடைக்கப்பெற்றால், அதே நிலையில் உள்ளவர்களிடம் நாம் பெற்ற அந்த சிகிச்சையைப் பற்றி கூறுவோம். ஏன் அப்படி சொல்கிறோம்? ஏனென்றால் நாம் அவர்கள் மீது அக்கறை கொள்கிறோம்! அதை போலவே, அனைத்து மனிதர்களும் “பாவம்-மீறுதல்” ஆகியவற்றால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் இந்த கொடிய நோய்க்கு இயேசுகிறிஸ்து மட்டுமே மருந்தாக இருக்கிறார். இந்த நற்செய்தியை நாம் அவர்களுக்குச் சொல்ல வேண்டாமா?
“எனது விசுவாசத்தை என்னிடமே வைத்திருப்பேன்… யாராவது கேட்டால், நான் அவர்களிடம் கூறுவேன்,” போன்ற அறிக்கைகள், கலாச்சார ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தகுந்தவைகளாகத் தோன்றினாலும், இது வேதம் சார்ந்த கருத்து அல்ல. விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்—ஆனால் தங்களுக்குள் அல்ல!
2 கொரிந்தியர் 5:20 “ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்.”
கிறிஸ்துவை ஏற்க மறுப்பவர்கள் நித்தியமான ஆக்கினைக்குள் தள்ளப்படுவார்கள் என்று நாம் உண்மையாக நம்பினால், கிறிஸ்துவிடம் வரும்படி அவர்களிடம் சத்தியத்தை எடுத்துக் கூறுவோம்.
12. எனது கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே நான் சாட்சியாக இருக்க முடியும்.
நமது கலாச்சாரத்தைச் சார்ந்தவர்களைச் சென்றடைவது எளிதாக இருந்தாலும், அவர்களின் வழிகள் மற்றும் பழக்கவழக்கங்களைக் கொண்டு நாம் எளிதாக அடையாளம் காண முடியும் என்பதால், சுவிசேஷ ஊழியத்தை ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்துடன் மட்டும் மட்டுப்படுத்தக்கூடாது. சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷத்தை கொண்டுச் செல்ல வேண்டும் என்பதே கட்டளை! எனவே அனைவருக்கும் கிறிஸ்து தேவை.
லூக்கா 24:47 “அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகலதேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.”
வெவ்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களை நம் பாதைகளில் வைப்பதற்கு தேவன் ஒரு காரணத்தைக் கொண்டிருக்கிறார்—அது தற்செயலானது அல்ல. அவர்களின் கலாச்சாரப் பின்னணியைப் பொருட்படுத்தாமல், நாம் அவர்களுக்கு சத்தியத்தைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார் [எடுத்துக்காட்டு, பிலிப்பு தொடங்கி எத்தியோப்பிய மந்திரி வரை—அப்போஸ்தலர் 8:26-39].
13. பகிர்வதற்கான பெரியதொரு சாட்சி என்னிடம் இல்லை.
பவுலின் “தமஸ்கு சாலை அனுபவம்” போல தங்களுடைய சாட்சியம் இல்லை என்பதால் மற்றவர்கள் ஈர்க்கப்பட மாட்டார்கள் என்று பலர் நினைக்கிறார்கள், அது தவறான சிந்தனை. அப்படி சிந்திப்பது கிறிஸ்துவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், சுயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகும். நாம் தெரிவிக்க வேண்டிய செய்தி என்னவென்றால், “நான் பாவத்தில் மரித்திருந்தேன்.—ஆனால் இப்போது கிறிஸ்துவின் மூலம் மன்னிப்பை அனுபவிக்கிறேன்.” பரிசுத்த ஆவியானவர் மக்களை இரட்சிக்க வெவ்வேறு வழிகளில் கிரியைச் செய்கிறார்.
யோவான் 3:8 “காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.”
14. தேவன் மக்களை இரட்சிப்பிற்கு முன்குறித்திருப்பதால், சுவிசேஷத்தை அறிவிக்க ஏன் கவலைப்பட வேண்டும்?
தேவன் முடிவை மட்டுமல்ல, முடிவுக்கான வழிமுறைகளையும் விதிக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் இரட்சிப்புக்காக மக்களைத் தேர்ந்தெடுத்திருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும். அவர்கள் சுவிசேஷத்தைக் கேட்டு அதற்குப் பதிலளிப்பதினால் மட்டுமே அவர்களுக்கு இரட்சிப்படகிறார்கள். அவர்கள் நற்செய்தியைக் கேட்பதற்கும், விசுவாசத்துடன் அதற்குப் பதிலளிப்பதற்கும் நாம் வழிவகை செய்கிறோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சுவிசேஷப்பணி என்பது தேவன் தம் மக்களை இரட்சிக்கப் பயன்படுத்தும் வழிமுறையாக இருக்கிறது.
அப்போஸ்தலர் 13:48 “புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்.”
அப்போஸ்தலர் 16:14 “அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.”
2 தீமோத்தேயு 2:10 “இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்.”
தெரிந்துக்கொள்ளுதல், முன்குறிப்பு போன்ற வேதாகம சத்தியங்களைப் பற்றிய சரியான புரிதல், கிறிஸ்தவர்களை சுவிசேஷப் பணியிலிருந்து விலகி இருக்க செய்வதை விட அதை அதிகமாக செய்யும்படிக்கு வைராக்கியத்திற்கு அதிகமாக தூண்ட வேண்டும்!
15. நான் மக்களுக்குச் சாட்சி சொல்லத் தொடங்கும் முன் அவர்களோடு ஒரு ஆழமான நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
“நட்பு வழியிலான சுவிசேஷப்பணி” பல சாதகமானஅம்சங்களைக் கொண்டிருந்தாலும், இந்த அணுகுமுறையில் உள்ள ஆபத்துகளில் ஒன்று என்னவென்றால்: பல சமயங்களில், எந்த சுவிசேஷ அறிவிப்பும் நிகழாமல் வெறுமனே நட்பாகவே இது அமைந்துவிடுகிறது. எந்த சுவிசேஷ பகிர்ந்தளிப்பில்லாத நீண்ட உறவில், கிறிஸ்துவைப் பற்றி பேச வாய் திறப்பது கடினமாகிறது.
16. நான் நற்செய்தியை அறிவிக்கும்போதெல்லாம், உரையாடலை சுருக்கமாகவும் இனிமையாகவும் வைத்திருக்க விரும்புகிறேன்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சுவிசேஷ ஊழியம் என்பது “நான் பெறவேண்டியதென்ன” என்ற அணுகுமுறையைக் காட்டிலும் “நான் என்ன பெற்றேன்” என்று பார்க்கப்படுகிறது. ஆம், சுவிசேஷ ஊழியம் ஒரு கட்டளை என்பதை உணர்தல் வேண்டும். ஆனாலும், அந்த கட்டளையானது செயல்படுத்துவதற்கு அசௌகரியமாக இருப்பதால், நம்முடைய மனசாட்சியைத் திருப்திப்படுத்தும் விதமாக தெளிவாக கூறாமல், துரிதமாக எடுத்துக்கூற முனைகிறோம். நற்செய்தியை விரைவாக முன்வைத்து, அவிசுவாசியின் மனக்கசப்பு அல்லது எதிர்ப்பின் முதல் அறிகுறியை நிறுத்துவதே நமது நோக்கமாக உள்ளது. நமது எண்ணம் என்னவென்றால், “ஐயோ. அதை எப்படியோ முடித்துவிட்டால் எனக்கு மகிழ்ச்சி. குறைந்தபட்சம், நான் என் வேலையைச் செய்தேன்!” என்று திருப்தியடைவதாகும்.
அவிசுவாசியை நச்சரித்துக்கொண்டே இருக்க முடியாது , அப்படி செய்யவும் கூடாது என்றாலும், சுவிசேஷத்திற்காக நம் ஸ்தானத்தை விட்டுக்கொடுக்கும் அணுகுமுறையையும் நாம் தவிர்க்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால் அவிசுவாசியின் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் செயல்பட அனுமதிக்க வேண்டும். எனவே நற்செய்தியை அறிவிக்கும்போது சில நிமிடம் அமைதியாக இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்! சுவிசேஷம் அறிவிப்பதை விசுவாசிகள் ஒரு “வேலையாக” கருதக்கூடாது. அவர்கள் தங்கள் கர்த்தரைப் பற்றி பேசுவதில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்!
17. எனது வீடு மற்றும் பணிப் பொறுப்புகளில் நான் விசுவாசமாக இருக்கும் வரை, கிறிஸ்தவ கடமைகளை சரியாக நிறைவேற்றுகிறேன்.
ஆம், ஒருவர் தன் வீட்டிற்குள்ளும் [நல்ல கணவன், மனைவி, பெற்றோர், முதலியன], பணித் தலத்திலும் [நல்ல பணியாளராக, முதலாளியாக இருப்பதன் மூலம்] சிறந்த முன்மாதிரியாக இருப்பது அவசியம். இருப்பினும், சுவிசேஷம் அறிவிக்கத் தவறுவதற்கு அதை ஒரு சாக்காகப் பயன்படுத்த முடியாது. கிறிஸ்தவ வாழ்க்கையை சில பகுதிகளில் கீழ்ப்படிதவதற்கும், மற்ற பகுதிகளில் கீழ்ப்படியாமல் இருப்பதற்கும் நாம் வடிவமைத்துக்கொள்ள முடியாது.
18. நான் என் வேலையிலும், குடும்பத்திலும் மிகவும் மும்முரமாக இருக்கிறேன். கிறிஸ்துவை அறிவிக்க எனக்கு நேரமில்லை.
கிறிஸ்துவை சாட்சியாகும் அறிவிக்கும் வேலையில் நாம் தீவிரமாக இருந்தால் உண்மையில் மிகுந்த அலுவலில் இருக்கிறோம்! நமக்கு வேலை தருவது யார்? நமக்கு குடும்பத்தை கொடுப்பது யார்? நமக்கு பொழுதுபோக்கு நடவடிக்கைகளை வழங்குவது யார்? அருளினவரை தவிர்த்து அருளப்பட்டவைகளை முதன்மையாக வைக்கலாமா? நாம் விரும்பும் விஷயங்களைச் செய்ய நம் அனைவருக்கும் நேரம் இருக்கிறது.
அலுவலாக இருப்பது பிரச்சினை அல்ல—ஆனால் தவறான முன்னுரிமைகள் தான் பிரச்சனையாக உள்ளது. கிறிஸ்துவுக்காக வாழ்வது நமது வேலை! கிறிஸ்துவை சாட்சியாக அறிவிப்பதில் உண்மையுள்ளவர்கள் பொதுவாக குடும்பத்தின் காரியங்களிலும், பணித்தலத்திலும் உண்மையுள்ளவர்களாக இருப்பார்கள்.
19. நான் விசுவாசிகளிடையே வேத சத்தியங்களைப் பகிர்ந்துகொள்வதில் ஈடுபாடுடன் இருக்கிறேன்—ஆனால் விசுவாசிகளல்லாதவர்களிடையே அல்ல.
பரலோகத்தில், நாம் ஒருவருக்கொருவர் அதிகமாக ஐக்கியத்தைப் பகிர்ந்து கொள்ளப்போகிறோம்! இருப்பினும், பூமியில் இருக்கும் போது, நாம் சுவிசேஷப் பணியை செய்யாமல் விட்டுவிடுகிறோம். ஆம், வேதம் சார்ந்த விஷயங்களைப் பற்றி சக விசுவாசிகளுடன் விவாதிப்பது எளிதாகவும், வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இனம் இனத்தோடு சேர்ந்துக்கொள்கிறது! மற்ற விசுவாசிகளுடனான ஐக்கியம் முக்கியமானதாகவும், நாம் ஐக்கியங்கொள்ளும்படிக்கு கட்டளையிடப்பட்டிருந்தாலும் [எபிரெயர் 10:24-25], நாம் பாதுகாப்பானதும், எளிதானதும் மற்றும் வசதியானதுமான பகுதியிலிருந்து வெளியே வந்து, கிறிஸ்துவைப் பற்றி வெளி உலகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்—அதுவும் ஒரு கட்டளையாக இருக்கிறது [அப்போஸ்தலர் 1:8]!
20. நான் வேறொரு இடத்திற்குச் சென்று ஒரு மிஷனரியாக நற்செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன்.
கர்த்தர் அழைக்கும் இடத்திற்குச் செல்ல விரும்புவது அருமையானது. இருப்பினும், தற்போதைய இடத்தில் கிறிஸ்துவைக் குறித்து சாட்சிப் பகிர ஒருவர் வாய் திறக்கவில்லை என்றால், மற்றொரு பகுதியில் அவருடைய வாய் திறக்கப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
மேலும், நாம் தற்போது இருக்கும் இடத்தில் கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளோம். அப்போதுதான் நாம் இன்னொரு இடத்தில் சாட்சியாக இருப்போம் என்று உறுதியாகச் சொல்ல முடியும். நம்முடைய தற்போதையை கீழ்ப்படியாமையை வேறு இடத்திற்கு ஏன் கொண்டு செல்ல வேண்டும்?
21. நான் பாவத்தில் வாழ்கிறேன். நான் எப்படி கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருக்க முடியும்?
ஒருவர் தன் வாழ்க்கையில் பாவத்தை அறிக்கையிட்டப் பின்னரும் கிறிஸ்துவை அறிவிக்கும்போது ஒரு மாய்மாலக்காரானாக உணருவது நல்லது என்றாலும், தொடர்ந்து பாவத்தில் வாழ்வதும் நல்லதல்ல. தீங்கிழைக்கும் பாவத்தை விட்டு விலகி, சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபட வேண்டும். ஆம், இந்த மாம்சத்தில் வாழும் வரை நாம் ஒருபோதும் பரிபூரணமாக இருக்க முடியாது. இருப்பினும், பாவ வாழ்க்கை வாழ்வதற்கும், சுவிசேஷப் பணியிலிருந்து விலகி இருப்பதற்கும் அது ஒரு காரணமாக இருக்ககூடாது.
ஒருவருடைய பாவப் பட்டியல் நீண்டதாக இருக்கலாம். அப்படி இருப்பினும், இதன் முக்கிய அம்சம் இதுதான்: சுவிசேஷத்தை அறிவிக்காததற்கான காரணம் எதுவாக இருந்தாலும், கிறிஸ்துவை சாட்சியாக அறிவிக்கத் தவறினால் அது மேலும் பாவமாக அமையும்! இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ளாத வரை, நாம் சுவிசேஷ ஊழியத்தை செய்யாமல் அதற்காக ஜெபித்துக்கொண்டிருப்போம்!
எனவே, இந்த உண்மைகளைப் பற்றி சிந்திக்க சில நிமிடங்கள் ஒதுக்கி, நமது தோல்விகளை தேவனிடம் அறிக்கையிட்டு, அவற்றைக் கடந்துச்செல்ல அவருடைய உதவியைக் கேட்போமாக. அப்போதுதான் உண்மையுள்ள சாட்சியாக அவருடைய கட்டளையை நிறைவேற்ற தேவன் நமக்கு உதவுவார் என்று எதிர்பார்க்கலாம்.
நீங்கள் உண்மையாக விதைகளை விதைத்தும், பலன்களைக் காண முடியாவிட்டால், சுவிசேஷ ஊழியத்தை பற்றி மார்க் டெவரின் “நற்செய்தி மற்றும் தனிப்பட்ட சுவிசேஷம்” என்ற புத்தகத்தில் உள்ள வார்த்தைகள் உங்களுக்கு ஆறுதலாக அமையும்:
சுவிசேஷப் பணி செய்வதற்கான கிறிஸ்துவின் அழைப்பானது வெறுமனே முடிவுகளை எடுக்க மக்களை வற்புறுத்துவதற்கான அழைப்பு அல்ல, மாறாக கிறிஸ்துவிலுள்ள இரட்சிப்பின் நற்செய்தியை அவர்களுக்கு அறிவித்து, அவர்களை மனந்திரும்புவதற்கும், மறுபிறப்பு மற்றும் மாற்றத்திற்கு நேராக நடத்தி, தேவனை மகிமைப்படுத்துவதற்குமாகும். மனமாற்றம் அடையாத ஒருவருக்கு நாம் உண்மையாக நற்செய்தியைச் சொன்னால், சுவிசேஷ ஊழியத்தில் நாம் தோல்வியடைவதில்லை ; நற்செய்தியை உண்மையாகச் சொல்லாவிட்டால் மட்டுமே நாம் தோல்வியடைகிறோம்.