சோர்வை தோற்கடித்தல்

Posted byTamil Editor July 4, 2023 Comments:0

(English Version: Defeating Discouragement)

நித்தியம் என்று தலைப்பிடப்பட்ட  ஒரு புத்தகத்தில், எழுத்தாளர் ஜோ ஸ்டோவெல் ஒரு உண்மைக் கதையை விவரிக்கிறார். டுவான் ஸ்காட் மற்றும் ஜேனட் வில்லிஸ் தம்பதியினர் ஒன்பது குழந்தைகளின் பெற்றோர். சிகாகோவின் தெற்குப் பகுதியில் உள்ள மவுண்ட் கிரீன்வுட் பகுதியில் பள்ளி ஆசிரியராகவும் பகுதி நேர ஊழியராகவும் டுவான் இருந்தார். அவர்கள் கர்த்தருக்கும் தங்கள் குடும்பத்துக்கும் மிகவும் அர்ப்பணிப்பு மிக்க தம்பதிகள். சுற்றியுள்ள உலகின் பேராசையால் தங்களை கெடுத்துக்கொள்ளாமல், குடும்பத்தை வளர்ப்பது மற்றும் சபையில் மந்தையை மேய்ப்பது போன்ற சில விஷயங்களுக்கு அவர்கள் மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் தங்களை அர்ப்பணித்தார்கள்.

ஒரு நாள், ஸ்காட், ஜேனட் தம்பதியினர் தங்களுடைய ஆறு பிள்ளைகளுடன்  வடக்கே மில்வாக்கிலிருந்த தங்கள் பிள்ளைகளில் ஒன்றை பார்ப்பதற்காக புதிய வேனில் ஏறினர். அவர்கள் மாநிலங்களுக்கு இடையே வடக்கு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தப்போது, முன்னால் சென்றுக்கொண்டிருந்த  ஒரு டிரக்கிலிருந்து பெரிய உலோகத் துண்டொன்று விழுந்து, அவர்களின் எரிபொருள் தொட்டியின் அடிப்பகுதியைத் துளைத்து, வாயுவைப் பற்றவைத்தது. உடனே தீ மளமளவென அவர்களின் வேனில் பரவியது. ஸ்காட்டும் ஜேனட்டும் மட்டுமே உயிர் பிழைத்தனர்; தீயானது மற்ற ஆறு குழந்தைகளையும் விழுங்கிவிட்டது.

இது போன்ற நிகழ்வுகள் நம்மை கேள்விகளைக் கேட்க வைக்கின்றன: அவை ஏன்? எதற்கு? தேவன் ஏன் அவர்களுக்கு குழந்தைகளைக் கொடுத்தார், பின்னர் திடீரென்று அவர்களைப் பறித்தார்? ஏன், பொறுப்பற்ற  மற்றும் தவறான பெற்றோர்கள் நிறைந்த உலகில், அத்தகைய தெய்வீக பெற்றோரைக் கொண்ட ஒரு குடும்பத்தில் இது நடக்க தேவன் எப்படி அனுமதித்தார்? வெளிப்படையாகச் சொல்வதென்றால், தேவன் இப்படி நடக்க ஏன் அனுமதிக்கிறார் என்று நாம் ஆச்சரியப்படுகிறோம். இது போன்ற ஒரு நிகழ்வு தேவன் மீது நமக்குள்ள நம்பிக்கையை சிதைத்துவிடுவதுமல்லாமல்,  நமது நம்பிக்கையின் அடித்தளத்தையே உலுக்குகிறது.

ஆயினும்கூட, இந்த ஒத்திசைவற்ற உலகத்தின் சூழ்நிலைகள் மத்தியிலும், பல விசுவாசிகள் தேவன் இருக்கிறார் என்றும்  அவருடைய வல்லமையின் மீது அசைக்க முடியாத விசுவாசத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். தேவன் இதற்கு அப்பாற்பட்ட ஒரு  ஆசீர்வதிக்கப்பட்ட உலகத்தை அவர்களுக்கு வாக்களித்துள்ளார். அதுதான் ஸ்காட் மற்றும் ஜேனட்டின் முன்னோக்குப் பார்வையாக இருந்தது. ஜேனட் வில்லிஸ் எரிந்து கொண்டிருந்த மினிவேனைத் திரும்பிப் பார்த்து, வருத்தத்துடன் கத்தினாள். அவளது கணவரின் தொடுதல் சற்று ஆறுதலாக  இருந்தது. இந்த நிகழ்விற்கு அப்பாற்பட்ட ஒரு முன்னோக்குப்பார்வை அவருக்கு இருந்தது-உண்மையில் அது நாம் காணும் இந்த உலகத்திற்கு அப்பாற்பட்டது. ஸ்காட் அவளது தோளைத் தொட்டு இவ்வாறு கூறினார், “ஜேனட், இதற்குத்தான் நாம் ஆயத்தப்படுத்தப்பட்டோம்., ஆனால் அது சற்று சீக்கிரமாக நடந்திருக்கிறது, அவர்கள் கர்த்தருடன் இருக்கிறார்கள்.”

சிகாகோ ட்ரிப்யூன்  என்ற செய்திதாளின் முதல் பக்க செய்தியில், “மில்வாக்கி பகுதியில் உள்ள மருத்துவமனையில் தீக்காயங்களுடனும், கட்டுகளுடனும், அதிக உடல் வலியுடனும், புதன்கிழமையன்று நிருபர் கூட்டத்தில் பேசிய இந்த தம்பதியினர், அவர்களின் ஒன்பது குழந்தைகளில் ஆறு பேருடைய இழப்பின் மூலம் தங்களுடைய சந்தேகத்திற்கு இடமில்லாத விசுவாசம் எவ்வாறு அவர்களைத் தாங்கினது என்பதை குறித்து அசாதாரண கருணையையும் தைரியத்தையும் வெளிப்படுத்தினர்.” நிருபர்கள் கூட்டத்தில், ஸ்காட்  அவர்கள்  இவ்வாறு கூறினார், “தேவனுக்கு நோக்கங்கள் உள்ளன, அவருக்கு காரணங்கள் உள்ளன என்று எனக்குத் தெரியும்… அவர் எங்கள் மீதும் எங்கள் குடும்பத்தின் மீதும் தம்முடைய அன்பை வெளிப்படுத்தியுள்ளார். கர்த்தர் நல்லவர் என்பதில் எங்கள் மனதில் எந்த சந்தேகமும் இல்லை, எல்லாவற்றிலும் அவரை துதிக்கிறோம்.” நாம் காணும்  இந்த உலகத்திற்கு அப்பாற்பட்ட ஏதோவொன்றுடன் ஸ்காட்  அவர்கள் ஒரு தெளிவான தொடர்பில் இருந்தார்.

ரோமர் 8:18 ஆம் வசனத்தில் பார்க்கும்போது இதேபோன்ற கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ள அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு உதவுகிறார், “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.” “எண்ணுகிறேன்” என்ற வார்த்தையின் அர்த்தம் “கணக்கில் எடுத்துக்கொள்வது” அல்லது “ஒரு பதிவேட்டில் வைத்துக்கொள்வது” என்பதாகும். “பாடுகள்” என்ற சொல், இவ்வுலகில் கிறிஸ்துவுக்காக வாழ்வதால் ஒருவர் அனுபவிக்கும் உள்ளான மற்றும் வெளிப்புற பிரச்சனைகளைக் குறிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பவுல் “சிந்தித்து” இந்த முடிவுக்கு வந்தார்:

எதிர்கால மகிமையின் உறுதியானது தற்போதைய சோர்வுகளிலிருந்து நம்மை விடுவிக்கிறது.

பவுலுக்கு பாடுகள் ஒன்றும் புதிதல்ல. சராசரி விசுவாசிகள் ஒருபோதும் சந்திக்காத கடுமையான பாடுகளை அவர் அனுபவித்தார். அவரது சொந்த வார்த்தைகளின்படி, ஒரு சிறிய பட்டியலை கவனிக்கவும்:

“அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம்; புத்தியீனமாய்ப் பேசுகிறேன்; நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்து தரம் அடிபட்டேன்; மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; பிரயாசத்திலும், வருத்தத்திலும் அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன். இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது. ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ?” [2 கொரிந்தியர் 11:23-29].

என்ன ஒரு பட்டியல்! ஆனாலும், அவர் முறுமுறுத்ததில்லை அல்லது குறை கூறினதில்லை. எனவே, அடுத்த முறை விசுவாச வாழ்க்கை சோதனைகள் இல்லாததாக அமைய  வேண்டும் என்று நினைக்கும் போது, பவுலின் பாடுகளின் பட்டியலையும் அதற்கு அவர் பதிலளித்ததையும் நினைவு கூர்வோம்.

யோபுவை ஞாபகம் இருக்கிறதா? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிற மனிதனாக யோபுவை தேவன் கூறினார் [யோபு 1:1]. ஆனாலும், யோபு சொல்ல முடியாத அளவு பாடுகளை அனுபவித்தார். சாத்தான் கூறினதுப் போன்று அவர் ஒருபோதும் தன் விசுவாசத்தை இழக்கவுமில்லை தன்னுடைய துன்பங்களுக்காக தேவனை சபிக்கவுமில்லை. பவுலைப் போலவே தன் விசுவாசத்தை கைவிடவுமில்லை [யோபு 1:11].

சோதனைகளின் நடுவில் இப்படி ஒரு நேர்மறையான பதிலைக் கொண்டிருப்பதன் ரகசியம் என்ன? இந்த நிகழ்கால வாழ்க்கையைத் தாண்டிய ஒரு கண்ணோட்டம் அவர்களிடம் இருந்தது. யோபு, தனது பாடுகளின் தீவிரமான தருணங்களில் கூட, தன்னம்பிக்கையுடன் சொல்ல முடியும், “25 என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். 26 இந்த என் தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். 27அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்துபோகின்றன!” [யோபு 19:25-27].

“ பவுலே, நீ இதையெல்லாம் கடந்து செல்கிறாய்? இந்த பாடுகளும் கூட மதிப்புள்ளதா?” என்று நாம் கேட்டால்,  இப்படியாகத்தான் அவர் கூறுவார்: “நமக்கு வெளிப்படுத்தப்படவிருக்கும் மகிமையின் மீது நான் என் கண்களை வைத்திருக்கிறேன். அதனால்தான் இப்போது வரும் பாடுகளை மனம் தளராமல் சகித்துக்கொள்கிறேன்.” பவுல் பேசும் எதிர்கால மகிமை யாது? வரவிருக்கும் மகிமையின் ஒரு பகுதியாக வேதம் இரண்டு எதிர்கால உறுதிகளை வெளிப்படுத்துகிறது.

1. நாம் இயேசுவைப் போல் மாற்றப்படுவோம்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிறிஸ்துவின் மகிமையான சரீரத்தைப் போன்ற புதிய மகிமையான சரீரம் நமக்கு இருக்கும். பவுல் பிலிப்பியர் 3:20-21 இல் இவ்வாறு எழுதுகிறார், “20 நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். 21. அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.”

ஒரு நாள், இந்த அழியக்கூடிய, பாவத்தால் பாதிக்கப்பட்ட, நோய்வாய்ப்பட்ட நமது சரீரம், ஒரு புதிய, அழியாத முழுமையான மற்றும் பாவமற்ற சரீரமாக மாற்றப்படும். கிறிஸ்து தம் மக்களுக்காக மீண்டும் வரும்போது அது நடக்கும். அந்த நேரத்தில், நாம் இனி பாவம் செய்ய முடியாது, எந்த நோயையும் அனுபவிக்க முடியாது. இந்த நிகழ்வை விசுவாசிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இறுதி மீட்பு என்று வேதம் அழைக்கிறது! ஆகவே தான், தற்காலிக பூமிக்குரிய பாடுகளின் பாதிப்பினால் விசுவாசிகள் சோர்வடைய வேண்டியதில்லை.

2. முழு பிரபஞ்சமும் மாறும்.

விசுவாசிகள் மட்டுமல்ல, இந்த முழு பிரபஞ்சமும் எதிர்காலத்தில் மாற்றப்படும். “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின” என்று வெளிப்படுத்தல் 21:1 கூறுகிறது. அந்த நேரத்தில், இனி துன்பமோ துக்கமோ இருக்காது. இதற்கு அடுத்த சில வசனங்களுக்குப் பிறகு கூறப்பட்டிருக்கும் ஆறுதல் வார்த்தைகளைக் கவனியுங்கள், “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”  [வெளிப்படுத்தல் 21:4].

அந்த மகிமையான எதிர்காலத்தில் மட்டுமே விசுவாசியானவர்கள் நோய், துன்பம், துக்கம் மற்றும் மரணம் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் விடுபடுவார்கள். அந்த புதிய உலகில் அநீதி இருக்காது, ஏனென்றால் அது “நீதி வாசமாக இருக்கும் இடமாகும்” [2 பேதுரு 3:13]. இந்த தற்போதைய பிரபஞ்சம் தற்காலிகமானதால் தேவன் அதை அழித்து புதிய உலகமாக மாற்றும்போது, நாம் காணும்  இந்த உலகம் ஒரு நாள் அக்கினிக்கு இரையாகும் [2 பேதுரு 3:7, 10].

ஆகவே, எதிர்கால மகிமை என்பது கிறிஸ்துவைப் போல உருவாக்கப்படுவதும், அவரை ஆராதிப்பதும், ஒரு புதிய பிரபஞ்சத்தில் ஐக்கியம் கொள்வதும் அடங்கும், அங்கு இனி பாவம், துன்பம் மற்றும் துக்கம் இருக்காது. நித்திய மகிழ்ச்சி மட்டுமே இருக்கும்.

இறுதி சிந்தனைகள்.

பிரபல நாத்திகர் ஜீன்-பால் சார்த் , தான் மரிப்பதற்கு சற்று முன்பு, விரக்தியின் உணர்வுகளை கடுமையாக எதிர்த்ததாகவும், “நான் நம்பிக்கையுடன் இறப்பேன் என்று எனக்குத் தெரியும்” என்று தனக்குத்தானே கூறிக்கொள்வதாகவும் அறிவித்தார். பின்னர் ஆழ்ந்த சோகத்தில், “ஆனால் நம்பிக்கைக்கு ஒரு விரக்த்தின் அடித்தளம் தேவை” என்று கூறினார்.

இதற்கு நேர்மாறாக, கிறிஸ்தவ நம்பிக்கைக்கு தேவனுடைய வார்த்தையாகிய கன்மலை போன்ற உறுதியான அடித்தளம் உள்ளது. கிறிஸ்தவ நம்பிக்கை என்பது “லாட்டரியை வெல்வேன் என்று நம்புகிறேன்” என்பது போன்ற நம்பிக்கை அல்ல. இது  “எனக்கு நிச்சயமாக தெரியும்” என்ற வகையை சேர்ந்த நம்பிக்கை. இது  “இருக்கலாம் என்று கூறுவதல்ல”, ஆனால் “இருக்கும்” வகையான நம்பிக்கை.

பவுலுக்கும், யோபுக்கும், ஸ்காட் மற்றும் ஜேனட்க்கும் அந்த மாதிரியான நம்பிக்கை இருந்தது. அப்படிப்பட்ட நம்பிக்கை உங்களுக்கும் எனக்கும் இருக்க வேண்டும். நாம் கிறிஸ்துவைப் போல உருவாக்கப்படுவோம் என்றும், அவர் ஒரு புதிய பிரபஞ்சத்தைக் கொண்டு வருவார் என்றும் தேவன் வாக்குறுதி அளிக்கிறார். இந்த சத்தியங்களை நாம் தொடர்ந்து தியானிக்கும்போது, நமது விசுவாசம் பலப்படுத்தப்படுகிறது [ரோமர் 15:4], இதனால் நாமும் இந்த தற்போதைய வாழ்க்கையின் சோர்வை வெற்றிகரமாக வெல்ல முடியும்.

ஆனபடியால், ஒருவர் தன்னை “விசுவாசியாக” காட்டிக் கொண்டாலோ அல்லது கிறிஸ்தவ விசுவாசத்தை நிராகரித்தாலோ அவர்களின் எதிர்காலம் பயங்கரமானது. தேவனுடைய  உண்மையான பிள்ளைகளுக்கு மகிமை காத்திருக்கும் அதேவேளையில், மற்றவர்கள் அல்லது கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு நித்திய துன்பம் காத்திருக்கிறது [எபேசியர். 5:6]. அக்கினிக் கடலில் தேவனின் கடுமையான, இறுதியான நித்திய நியாயத்தீர்ப்பை எதிர்கொள்ள அவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் [வெளிப்படுத்தல் 20:11-15]. அதனால்தான், அத்தகைய மனிதர்கள் தங்கள் பாவங்களை விட்டு இப்போதே கிறிஸ்துவிடம் வந்து விட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்திற்கான உறுதியான மற்றும் பிரகாசமான நம்பிக்கை இருக்க முடியும், இது தற்போதைய துன்பங்களைச் சரியாகச் சமாளிக்க ஒருவருக்கு உதவுகிறது.

விசுவாசிகள் என்று கூறிக்கொள்ளும் நாம் ஏன் இவ்வுலகில் பாடுகளில்லாத வாழ்க்கையை நாட வேண்டும்? ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை ஒவ்வொரு விசுவாசியின் உரிமைகளாக ஊக்குவிக்கும் தவறான போதனைகளுக்கு ஏன் பலியாக வேண்டும்? இத்தகைய தவறான போதனைகள் வேதத்தின் தெளிவான போதனைகளுக்கு முரணாக இல்லையா?

“அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.”  [2 தீமோத்தேயு. 3:12] என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தம் நாமத்தின் நிமித்தம் அவமானங்கள், நிராகரிப்புகள் மற்றும் பிற வகையான துன்பங்களை அனுபவிப்பவர்களை “பாக்கியவான்கள்” என்று இயேசு அழைத்தார் [மத்தேயு 5:10-12]. எபிரேயர் 11:35-39 இல் பட்டியலிடப்பட்டுள்ள பவுலும், யோபுவும் பிற அறியப்படாத விசுவாசிகளும், தங்கள் விசுவாசத்திற்காக மெச்சப்பட்டிருந்தும், இத்தகைய துன்பங்களைச் சந்தித்திருக்கையில், பாடுகளுக்கு  விதிவிலக்கானவர்கள் என்று எது நம்மை நினைக்க செய்கிறது? வெறுமனே நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கின்றோமா?

சோதனைகளுக்காக ஜெபிக்குமாறு நான் பரிந்துரைக்கவில்லை. ஆனால் பாடுகள் தவிர்க்க முடியாதது என்பதை நாம் உண்மையாக ஏற்றுக்கொள்ள வேண்டும், ஏனென்றால் நாம் பிரச்சனைகள் நிறைந்த உலகில் வாழ்கிறோம் [யோபு 5:7; யோவான் 16:33]. தேவனுடைய பிரசன்னம் தம்முடைய பிள்ளைகளுடன் இருக்கும் அவர் தம்முடைய பிள்ளைகளுக்கு வாக்களிக்கிறார், [எபிரேயர் 13:5-6]. இனிமேல் இந்த உண்மைகளை நினைவில் வைத்துக் கொள்வோம்:

பாடுகள் தவிர்க்க முடியாதது, அவைகள் எதிர்காலத்தில் நமக்குக் காத்திருக்கும் கற்பனைக்கெட்டாததும் கிருபையுள்ளதுமான நன்மைகளுக்கு செலுத்த வேண்டிய ஒரு சிறிய விலையாக இருக்கிறது. நமது தற்போதைய பாடுகள் கடல் போன்ற எதிர்கால மகிமையுடன் ஒப்பிடும்போது ஒரு துளி நீர் போன்றது. இந்த உண்மைகளைத் தழுவி மகிழ்ச்சியுடன் முன்னேறுவோம்! இல்லையெனில், ஏமாற்றமும், துக்கமும் அடைவோம்.  தேவனோடும் , மற்றவர்களோடும்  மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கையின் மீதும் கசப்பால் நிரப்பப்படுவோம்.

இன்றும் கூட சில விசுவாசிகள் ஏன் இத்தகைய நேர்மறையான சிந்தையை உடையவர்களாக இருக்கிறார்கள்? ஏனென்றால், அவர்களுக்கு பரலோகம் உண்மையானது, விசுவாசிகளுக்கு எதிர்கால மகிமையும் உண்மையானது. அதுவே அவர்களை இவ்வுலகப் பொருட்களால் மயங்கிவிடாதப்படி தடுக்கிறது. இது போன்ற ஒரு பார்வையே ஸ்காட் வில்லிஸை  இப்படி அறிவிக்கத் தூண்டியது, “ஜேனட்டும், நானும் வாழ்க்கையைப் பற்றிய குறுகிய பார்வையை கொண்டிருக்கவில்லை என்பதை உணருங்கள். நாங்கள் நெடிய பார்வையை கொண்டுள்ளோம், அதில் நித்திய ஜீவனும் அடங்கும்.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் தற்காலிகத்தை நித்தியத்தின் கண்ணாடிகள் மூலம் பார்த்தார்கள், அதனால்தான் அவர்கள் ஏமாற்றத்தால் நசுக்கப்படவில்லை.

ட்ரிப்யூன்  செய்திதாளின் தலையங்கம் இந்த வார்த்தைகளுடன் முடித்ததில் ஆச்சரியமில்லை:

கடந்த வாரம் ஸ்காட்,  ஜேனட் வில்லிஸ் தம்பதியினர் சந்தித்த இழப்புக்கு இரண்டு சாத்தியமான பதில்கள் மட்டுமே உள்ளன; ஒன்று முழுமையான விரக்தி;   மற்றொன்று கேள்விக்கு இடமில்லாத நம்பிக்கை. வில்லிசைப் பொறுத்தவரை, விரக்தி ஒரு விருப்பமாக இருக்கவில்லை.

அதுவே நமது கண்ணோட்டமாகவும் இருக்க வேண்டாமா?

Category
Subscribe
Notify of
guest
0 கருத்துக்கள்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments