ஞானஸ்நானம் – 6 வினாக்களும் அதற்கான விடைகளும்

(English Version: Water Baptism – 6 Questions Asked And Answered)
இயேசு கிறிஸ்துவை தங்கள் ஆண்டவராகவும், இரட்சகராகவும் விசுவாசிக்கிற ஒவ்வொரு விசுவாசிக்கும் அடிப்படையில் இரண்டு திருநியமங்கள் உள்ளன. முதலாவது ஞானஸ்நானம். இரண்டாவது கர்த்தருடைய பந்தியில் பங்கேற்பது, இது கர்த்தருடைய இராபோஜனம் அல்லது ஐக்கிய பந்தி என்றும் குறிப்பிடப்படுகிறது. ஞானஸ்நானம் என்பது ஒரே தரம் செய்யப்படும் செயலாகும் மற்றும் கர்த்தருடைய பந்தியில் பங்கேற்பது ஒரு தொடர்ச்சியான செயல் என்பதால் ஒன்று மற்றொன்றிலிருந்து வேறுபடுகிறது. இந்த சுருக்கமான கண்ணோட்டம் ஞானஸ்நானம் என்ற முதல் திருநியமத்தைப் பற்றிய சில அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிக்கிறது.
ஞானஸ்நானம் என்பது ஒருவர் விசுவாசியான பிறகு, அதாவது அவர்களின் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்த பிறகு நிறைவேற்ற வேண்டிய முதல் மற்றும் முக்கிய கட்டளை. இந்த விஷயத்தில் வேதம் தெளிவாக இருந்தாலும், இந்த நேரடியான கட்டளைக்கு இன்னும் பலர் கீழ்ப்படியாமல் உள்ளனர், பின்வருபவை இந்த கீழ்படியாமைக்கான முதன்மைக் காரணங்களாக ஒரு வேதாகம போதகரின் கூற்றுப்படி அமைந்திருக்கிறது:
அ) அறியாமை: இந்த கட்டளையானது மக்களுக்கு தெளிவாக கற்பிக்கப்படாததால் அவர்கள் இந்த விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை.
ஆ) ஆவிக்குரியப் பெருமை: இரட்சிப்பட்டு ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிப்படையாக ஞானஸ்நானம் பெறுவதானது ஒருவருடைய புரிதலின் குறைப்பாட்டைக் குறிக்கிறது அல்லது நீண்ட காலத்தின் கீழ்ப்படியாமையைக் குறிக்கிறது. இந்த கீழ்ப்படியாமையை ஒப்புக்கொள்வது மிகவும் தாழ்வான அனுபவமாக இருப்பதால், அநேகர் அந்த காரணத்திற்காக ஞானஸ்நானம் பெற விரும்பாமல் இருக்கிறார்கள். எதிர்பாராதவிதமாக, இந்த பிரிவில் இருக்கும் மக்கள் இப்போது உலகத்திற்கு முன்பாக வெட்கப்படுவதை விட நியாயத்தீர்ப்பு நாளில் கர்த்தராகிய இயேசுவிடம் அதிகமாக வெட்கப்படுவார்கள்.
இ). சாதாரண மனப்பான்மை: பலருக்கு ஞானஸ்நானத்தை பற்றி ஒரு சாதாரண அணுகுமுறை உள்ளது. அத்தகைய மக்கள் ஞானஸ்நானத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் அதை முன்னுரிமையாக பார்ப்பதில்லை. “தற்போது சமாளிக்க வேண்டிய வேறு அழுத்தமான பல சிக்கல்கள் உள்ளன. அவற்றை முடித்தப்பின்னர் ஒருவேளை எப்போதாவது, நான் இதைப் பற்றி யோசிக்கும்போது, ஞானஸ்நானத்தை குறித்த பிரச்சினையைச் சமாளிக்கிறேன்” என்று சொல்லும் அணுகுமுறை இது.
ஈ) அறிக்கையிடுதலுக்கு பயம்: சிலர் தங்கள் வாழ்வில் பாவத்தை எதிர்கொள்வதால், பகிரங்கமாக தங்கள் விசுவாசத்தை ஒப்புக்கொள்ள பயப்படுகிறார்கள். வெளிப்படையாக அறிக்கையிடுவதன் மூலம், அவர்கள் தங்களை மாய்மாலக்காரர்களாக சித்தரிப்பதாக உணர்கிறார்கள். சிலர் “மக்கள் என்ன நினைப்பார்கள்” (குடும்பம், சமூகம் போன்றவை) என்பதற்காக பயப்படுகிறார்கள். குறிப்பாக, ஞானஸ்நானம் எடுப்பதின் காரணமாக குடும்பத்தை விட்டு விலகும் ஆபத்து இருக்கும் இடங்களில், மக்கள் பெரும்பாலும் ஞானஸ்நானத்தை தவிர்க்கிறார்கள்.
உ) ஒரு உண்மையான விசுவாசியாக இல்லாதப்படியால்: சில சந்தர்ப்பங்களில், அந்த நபர் ஒரு உண்மையான விசுவாசியாக இருப்பதில்லை, அவர்களிடம் பரிசுத்த ஆவியானவர் இருப்பதில்லை, அதனால்தான் இந்த கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டிய விசுவாசம் அல்லது நிர்பந்தம் அவர்களிடம் இல்லை. அவர்கள் சபைக்கு வரலாம் மற்றும் கர்த்தருடைய பந்தியில் கூட பங்கேற்கலாம். இருப்பினும், அவர்கள் உண்மையாகவே கிறிஸ்துவுக்கு சொந்தமானவர்கள் அல்ல.
மக்கள் ஞானஸ்நானம் பெறுவதைத் தவிர்ப்பதற்கான மற்ற காரணங்களை ஒருவர் இந்த காரணங்களுடன் சேர்த்துக்கொள்ளலாம் என்று நான் நம்புகிறேன். இருப்பினும், இந்த கட்டுரையின் முதல் காரணமாகிய –அறியாமையை மையப்படுத்தி உரையாற்றுவதே இதன் நோக்கமாகும் வேதாகமத்திலிருந்து 6 அடிப்படை கேள்விகளைக் கேட்டு பதிலளிப்பதன் மூலம், இந்த கட்டுரை இந்த விஷயத்தில் ஒரு தெளிவான வெளிச்சத்தை கொடுக்கும். இந்த சத்தியங்களை ஜெபத்துடன் கருத்தில் கொண்டு அதன்படி செயல்படுவது வாசகரின் பொறுப்பு.
முதல் கேள்வியிலிருந்து தொடங்குவோமாக:
1. நாம் ஏன் ஞானஸ்நானத்தின் கீழாக கடந்துச்செல்ல வேண்டும்?
முதலாவதாக, மத்தேயு 28:19 இல் இயேசு கிறிஸ்து சபைக்கு கட்டளையிட்ட வார்த்தைகளை நாம் வாசிக்கிறோம், “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுங்கள்.” “நாமத்திலே” என்ற சொற்றொடர் ஒற்றை அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது [“நாமங்களில்” என்று கூறப்படவில்லை). “நாமத்திலே” என்ற வார்த்தையின் ஒற்றை பயன்பாடு பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் ஒற்றுமையைக் காட்டுகிறது. இது ஞானஸ்நானத்தில் மறுபடியும் சொல்லப்பட வேண்டிய சூத்திரம் மட்டுமல்லாமல், மூன்று நபர்களில் இருக்கும் ஒரே தேவனோடு ஆவிக்குரிய ரீதியாக ஒரு விசுவாசி இணைக்கப்பட்ட அடையாளமாக காணப்படுகிறார் என்பதை பொருள்படுத்துகிறது.
இரண்டாவதாக, அப்போஸ்தலர் 2:38 இல், ஒவ்வொரு தனி நபருக்கும் பொருந்தக்கூடிய கட்டளையை நாம் வாசிக்கிறோம்: “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.” இந்த கட்டளை தெளிவாக உள்ளது: முதலில், ஒரு நபர் “தங்கள் பாவங்களுக்காக மனந்திரும்ப வேண்டும்“ [விசுவாசத்தின் மூலம் நற்செய்தியைக் கேட்டு செவிக்கொடுப்பதால்]. இரண்டாவதாக, அவர்கள் “ஞானஸ்நானம் பெற வேண்டும்.” வரிசை தெளிவாக உள்ளது: ஞானஸ்நானம் இயேசு கிறிஸ்துவிலுள்ள உண்மையான மனந்திரும்புதலையும் விசுவாசத்தையும் பின்தொடர வேண்டும். ஆகையால், நாம் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும், ஏனெனில் இது ஒரு கட்டளையாக கூறப்பட்டுள்ளதேயல்லாமல் விருப்பமாக கூறப்படவில்லை!
2. ஞானஸ்நானத்தின் முக்கியத்துவம் என்ன?
ஞானஸ்நானம் என்பது மனமாற்றத்தின் போது நிகழ்கின்ற புதிய பிறப்பின் வெளிப்புற அடையாளமாகும் ஆகும். இது ஒரு உள்ளான ஆவிக்குரிய யதார்த்தத்தின் சரீர வெளிப்பாடு. ரோமர் 6:3-5 இல், நமக்கு இந்த சத்தியங்கள் கூறப்பட்டுள்ளது, “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்”. மனமாற்றத்தின் போது நிகழும் இந்த உள்ளான ஆவிக்குரிய உண்மைகள் தண்ணீர் ஞானஸ்நானத்தின் மூலம் வெளிப்புறமாக சிறப்பாக விளக்கப்படுகின்றன.
ஞானஸ்நானம் என்பது கிறிஸ்துவின் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலுடன் நமது ஆவிக்குரிய ஒற்றுமையின் ஒரு காட்சி படம். இது நம்மிடம் உள்ள நம்பிக்கையையும் குறிக்கிறது: இயேசு மரணத்திற்குப் பிறகு உயிரோடு எழுப்பப்பட்டதைப் போலவே, அவருடன் ஐக்கியமாகி நாமும் எதிர்காலத்தில் உயிரோடு எழுப்பப்படுவோம்.
3. இயேசு கிறிஸ்துவின் தண்ணீர் ஞானஸ்நானத்தின் முக்கியத்துவம் என்ன?
இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானமானது [மத் 3:13-17] அவர் யாருக்காக சிலுவையில் மரித்தாரோ அந்த பாவிகளுடைய உயிர்தெழுதலோடு அவரை அடையாளம் காண்பதற்கான ஒரு வெளிப்படையான சித்திரமாகும். இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டுமே நம்முடைய பாவங்களுக்காக சிலுவைக்குச் சுமந்து “எல்லா நீதியையும்” நிறைவேற்றினது [மத் 3:15] மட்டுமல்லாமல், நாம் ஒருபோதும் வாழ முடியாத ஒரு பூரண கீழ்ப்படிதலான வாழ்க்கையை வாழ்ந்து நிறைவேற்றினார். நம்முடைய கிரியைகளால் நாம் இரட்சிக்கப்படாமல், நமக்காக எல்லாவற்றையும் செய்த இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் கிருபையினால் மட்டுமே இரட்சிக்கப்படுகிறோம். ஆகையால், இயேசுவின் ஞானஸ்நானம் அவரது வார்த்தைகள் நிறைவேறும் காலத்தினுடைய அடையாளமாக இருந்தது (ஆனால் இப்போது அது நிறைவேறியது): நம் சார்பாக அவரது மரணமும் மற்றும் தேவன் அவரது பலியை ஏற்றுக்கொண்டதற்கான சான்றாகவும் அவரது உயிர்த்தெழுதல் அமைந்தது.
ஞானஸ்நானம் பெறுவதன் மூலம் பிதாவின் அனைத்து கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவதன் முக்கியத்துவத்தை இயேசு கிறிஸ்து செய்துக்காட்டினார் என்பதும் சுவாரஸ்யமானது. எதை கடைபிடிக்க வேண்டும், எதை கடைபிடிக்க கூடாது என்பதை இயேசு கிறிஸ்து தேர்ந்தெடுக்கவில்லை. அவர் தமது பரிபூரண வாழ்க்கையின் ஒரு பகுதியாக பிதாவின் அனைத்து கட்டளைகளுக்கும் மனப்பூர்வமாகவும் மகிழ்ச்சியுடனும் சமர்ப்பித்தார்.
4. தண்ணீர் ஞானஸ்நானத்தின் முறை என்ன?
இந்த பகுதியில் தான் அதிகமான குழப்பங்களும் பிரிவினைகளும் நிலவுகிறது. ஞானஸ்நானம் கொடுக்கும் முறையில் நிறைய முரண்பாடுகள் உள்ளன (அதாவது, சிலர் மூழ்குவதன் மூலம் மட்டுமே என்றும், மற்றும் சிலர் தண்ணீரைதெளிப்பதின் மூலமாகவும் கொடுக்கப்படலாம் என்றும் கூறுகின்றனர்). இருப்பினும், ஞானஸ்நான முறைக்கு தெளிவான பதிலைப் பெற, மக்கள் எவ்வாறு ஞானஸ்நானம் பெற்றார்கள் என்பதற்கு வேதத்திலே பார்ப்போம்.
புதிய ஏற்பாட்டில், ஞானஸ்நானம் என்ற வார்த்தை பெரும்பாலும் பாப்டோ மற்றும் பாப்டைஸ் (bapto and baptize) என்ற இரு கிரேக்க வினைச்சொற்களால் (செயல்கள்) குறிக்கப்படுகிறது.
பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு சொற்களின் ஒரு அகராதியின்படி, பாப்டோ என்றால் “மூழ்குவது” என்று அர்த்தம், மேலும் கிரேக்கர்கள் ஒரு ஆடைக்கு சாயமிடுதல் அல்லது தண்ணீர் நிரம்பிய ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்தை அமிழ்த்தி தண்ணீர் எடுத்தல் ஆகியவற்றைக் குறிக்க பயன்படுத்தினர். மற்ற வார்த்தை பாப்டிசோ என்றால் “முழுக்காட்டுதல்” (அதாவது, முழுவதுமாக மூழ்குவது), மேலும் இப்படி மூழ்குவது புதிய ஏற்பாட்டில் இது பல முறை நிகழ்ந்துள்ளது.
ஞானஸ்நானம் என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில் “மூழ்குதல், அமிழ்வு, நீரில் அமிழ்த்து, ஆழ்த்துதல்” போன்ற அர்த்தங்களை குறிக்கிறது. மேலும், தண்ணீரை மேலே தெளித்து யாருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டதாக ஒருபோதும் கூறப்படவில்லை (நெற்றியில் தண்ணீரை தெளித்தல் அல்லது புள்ளியிடுவது போன்றவை). ஒரு நபர் எப்போதும் தண்ணீருக்குள் ஞானஸ்நானம் பெறுவதாக குறிப்புகள் இருக்கிறது. கர்த்தராகிய இயேசுவும் முழுக்கு ஞானஸ்நானத்திற்குள் கடந்துச் சென்றார்! நாம் மத்தேயு 3:16 ல் நாம் பார்க்கும்போது, “இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே” என்று கூறப்பட்டிருக்கிறது. ஜலத்திலிருந்து கரையேறினவுடனே என்ற சொற்றொடரானது அவர் மூழ்கியதன் மூலம் ஞானஸ்நானம் பெற்றார் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது, அதுவும் அவர் பெரியவராக இருந்தபோது!
யோவான் ஸ்நானகனிடம் ஞானஸ்நானம் பெற்ற மக்கள் “அவரால் யோர்தான் ஆற்றில் ஞானஸ்நானம் பெற்றார்கள்” [மத் 3:6]. யோவான் 3:23 ல் யோவான் ஸ்நானகன் மூழ்கி ஞானஸ்நானம் வழங்கினதற்கான மற்றொரு குறிப்பு காணக்கிடக்கிறது. “சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.” என்று நாம் வாசிக்கிறோம். ஞானஸ்நானம் கொடுப்பது மூழ்குவதைத் தவிர வேறு எந்த வகையிலும் இருந்தால் “நிறைய தண்ணீர்” தேவைப்பட்டிருக்காது!
ஆதி சபையினரும் நீரில் மூழ்கி நீர் ஞானஸ்நானம் எடுத்தார்கள். அப்போஸ்தலர் 8:38 இல், எத்தியோப்பிய மந்திரிக்கு ஞானஸ்நானம் கொடுக்கிற பிலிப்பை நாம் பார்க்கிறோம், மேலும் “பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள், பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங்கொடுத்தான்” என்ற வார்த்தைகளை வாசிக்கிறோம்.
சில வசனங்களைப் பார்க்கும்போது, மூழ்குதல் என்பது ஞானஸ்நானம் பெறுவதற்கான புதிய ஏற்பாட்டு எடுத்துக்காட்டுகளின் நடைமுறையாக இருந்தது என்று ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. இது இரட்சிப்பின் நேரத்தில், ஒரு விசுவாசியானவன் கிறிஸ்துவுடன் மூழ்கி, குறிப்பாக அவரது மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலில் அடையாளப்படுத்தும் ஆவிக்குரிய சத்தியத்தின் யதார்த்தத்திற்கு மட்டுமே பொருந்துகிறது, தெளிப்பதோ அல்லது நெற்றியில் தண்ணீரால் பொட்டு வைப்பதோ ஞானஸ்நானம் கொடுக்கும் வேதாகம முறையல்ல. இம்முறைகள் ரோமன் கத்தோலிக்க சபையினரால் உருவாக்கப்பட்டது. எப்படியாயினும் 13 ஆம் நூற்றாண்டு வரை ரோமன் கத்தோலிக்க சபையானது முழ்கி கொடுக்கும் ஞானஸ்நான முறையையே பின்பற்றி வந்தது. துக்ககரமாக பிற்காலத்தில் சில சீர்திருத்த சபைகள் இந்த ரோமன் கத்தோலிக்க சபையின் தெளிப்பு முறையை சுவீகரித்துக்கொண்டன (உதாரணமாக பிரிஸ்பிடேரியன், மெதடிஸ்ட் மற்றும் லூதரன், இதர பல சபைகள்)
5. தண்ணீர் ஞானஸ்நானத்திற்கும், இரட்சிப்பிற்கும் இடையிலுள்ள தொடர்பு என்ன?
இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் அவசியமானதா? புதிய ஏற்பாட்டின் ஒட்டுமொத்த போதனையைப் பார்க்கும்போது, இரட்சிப்பைப் பற்றிய ஒரு விஷயம் தெளிவாகிறது: ஒரு மனிதன் தன் பாவத்திற்கு மனந்திரும்பி, இரட்சிப்புக்காக இயேசு கிறிஸ்துவிடம் திரும்பும்போது கிருபையால் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது (மாற்கு 1:15; யோவான் 3:16; யோவான் 5:24; அப்போஸ்தலர் 20:21; ரோமர் 4:5; ரோமர் 10:9-13; எபேசியர் 2:8-9; தீத்து 3:5). கர்த்தராகவும் இரட்சகராகவும் இயேசு கிறிஸ்துவை மட்டும் நம்புவது ஒரு மனிதனை இரட்சிக்கிறது. ஞானஸ்நானம் மூலம் அறிக்கையிடுவதானது இயேசுகிறிஸ்துவை உண்மையாக விசுவாசிக்கும் சத்தியத்தை உறுதிப்படுத்துகிறது.
இருப்பினும், ஞானஸ்நானம் சில வசனப்பகுதிகளில் இரட்சிப்புடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் உண்மையான இரட்சிப்பு எப்போதும் கீழ்ப்படிதலை உருவாக்குகிறது. ஒரு கிறிஸ்தவனுக்கு கீழ்ப்படிதலின் முதல் படி ஞானஸ்நானம் பெறுவது, அதாவது, கிறிஸ்துவில் அவர்களுடைய விசுவாசத்தை அனைவரும் அறியும்படிக்கு வெளிப்படையாக அறிவிப்பது. அப்போஸ்தல நடபடிகளின் புத்தகத்தில் காணப்படுவது போல், மக்கள் தாமதமின்றி இந்த கட்டளைக்கு கீழ்ப்படிவதற்கான சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
அ) பெந்தேகோஸ்தே நாளில் சபை உருவானது:
அப்போஸ்தலர் 2:41 இவ்வாறு கூறுகிறது, “அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்”. இங்கே நீங்கள் பார்க்கிறபடி, இரட்சிப்பின் செய்தியை ஏற்றுக்கொண்ட பிறகு ஞானஸ்நானம் பெறுவதில் எந்த தாமதமும் இல்லாமல், அதே நாளில், அவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
ஆ) பிலிப்புவின் பிரசங்கத்திற்கு சமாரியர்களின் பிரதியுத்தரம்:
அப்போஸ்தலர் 8:12 இவ்வாறு கூறுகிறது, “தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக் குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம்பெற்றார்கள்.” பிலிப்பு பிரசங்கித்த தேவனுடைய ராஜ்யம் மற்றும் இயேசு கிறிஸ்துவின் நாமம் பற்றிய நற்செய்தியை அவர்கள் “விசுவாசித்த” பிறகு உடனடியாக ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது.
இ) கொர்நேலியு மற்றும் அவனுடைய குடும்பத்தாரின் ஞானஸ்நானம்:
கொர்நேலியு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பேதுரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தபோது, அவர்கள் உடனடியாக சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்றனர். அப்போஸ்தலர் 10:47-48 இவ்வாறு கூறுகிறது, “அப்பொழுது பேதுரு: நம்மைப்போல பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள்.”
ஈ) லீதியாள் மற்றும் பிலிப்பி பட்டணத்து சிறை காவலாளியின் ஞானஸ்நானமும்:
தேவன் லீதியாள் என்ற ஒரு ஸ்தீரியை எவ்வாறு இரட்சித்தார், மற்றும் அவள் எவ்வாறு ஞானஸ்நானத்திற்கு உடனடியாக கீழ்படிந்தாள் என்பதைஅப்போஸ்தலர் 16:14-15 நாம் இவ்வாறு வாசிக்கிறோம்:
“14… பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார். 15 அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: “நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால்”, என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று “எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.”
அவள் பவுலின் செய்திக்கு பதிலளித்த பிறகு அவளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது என்று வசனம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. பின்னர் அதே அதிகாரத்தில், பவுல் சிறையில் இருந்தபோது அவரைக் காக்கும் காவலாளியை தேவன் எவ்வாறு இரட்சித்தார் மற்றும் சுவிசேஷத்திற்கு செவிகொடுத்தப் பிறகு அவன் எப்படி ஞானஸ்நானம் பெற்றான் என்பதை வாசித்தோம். இந்த முழு சம்பவமும் அப்போஸ்தலர் 16:16-34 இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலில் சிறைச்சாலைக்காரன் பவுலையும் சீலாவையும் நோக்கி, “30. அவர்களை வெளியே அழைத்து வந்து: ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான். 31. அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, 32. அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள். பவுலும் சீலாவும் கர்த்தருடைய வார்த்தையை” அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாருக்கும்” போதிததார்கள் என்று தெளிவாக இந்த வசனம் கூறுகிறது.
இரண்டாவதாக கீழ் காண்பவைகளை நாம் வாசிக்கிறோம், “33 மேலும்இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனடியாக ஞானஸ்நானம் பெற்றார்கள்”.
“அவர்கள் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பு அவர்கள் விசுவாசித்ததாக வசனம் கூறவில்லை” என்று ஒருவர் கேட்கலாம். ஆனால் அடுத்த வசனத்தை நாம் கூர்ந்து கவனித்தால், அவர்கள் ஞானஸ்நானத்திற்கு முன் அவர்கள் விசுவாசித்தார்கள் என்ற பதில் நமக்குக் கிடைக்கும்.
“34 பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூட தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாக மனமகிழ்ச்சியாயிருந்தான்.” “தேவனிடத்தில் விசுவாசித்தான்” என்று வசனம் கூறுகிறப்படி சிறைச்சாலைக்காரன் மட்டுமல்லாமல், “தன் வீட்டார் அனைவரோடுங்கூட விசுவாசித்தான்” என்றும் வசனம் கூறுகிறது!
எனவே, சுவிசேஷத்தை விசுவாசித்தப் பிறகு ஞானஸ்நானம் பெற்றதற்கான ஆதாரம் நம்மிடம் மீண்டும் உள்ளது! சில வசனங்களில், இந்த நிகழ்வுகள் நடந்தபோது “நள்ளிரவு” [அப். 16:25] என்று நமக்குச் சொல்லப்பட்டிருப்பது சுவாரஸ்யமானது! அவர்கள் நள்ளிரவில் ஞானஸ்நானம் பெற்றார்கள்! ஆனால் அது பவுலுக்கும் சிறைச்சாலைக்காரனின் வீட்டாருக்கும் ஒரு பொருட்டாக இல்லை. உண்மையான விசுவாசம் எப்போதும் தேவனுடைய கட்டளைகளுக்கு தாமதிக்காமல் பதிலளிக்க விரும்புகிறது!
உ) எபேசுவில் ஞானஸ்நானம்:
அப்போஸ்தல நடபடிகளின் புத்தகத்தில் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டதின் இறுதி பதிவு அப்போஸ்தலர் 19:1-7 காணக் கிடக்கிறது. எபேசுவில், யோவான் ஸ்நானகனின் சீடர்களாக இருந்த ஒரு குழுவினருக்கு பவுல் பிரசங்கித்தார். இயேசு கிறிஸ்துவின் மூலம் வரும் இரட்சிப்பின் செய்தியை கேட்டவுடன், அவர்கள் பதிலளித்து ஞானஸ்நானத்தினால் சாட்சியமளிப்பதன் மூலம் தங்கள் கீழ்ப்படிதலைக் காட்டினர் – “இதைக் கேட்டவுடன் (அதாவது, இயேசு கிறிஸ்துவின் மூலம் வரும் இரட்சிப்பின் செய்தி), அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்” [அப்போஸ்தலர் 19:5]. அவர்கள் சுவிசேஷ செய்தியை ஏற்றுக்கொண்டதாக வசனம் வெளிப்படையாக கூறாவிட்டாலும், அவர்கள் செய்தியை சாதகமாகப் பெற்றார்கள் என்பது “இதை கேட்டவுடன்” என்ற சொற்றொடரில் மறைமுகமாக உள்ளது. எனவே, மீண்டுமாக, மக்கள் சுவிசேஷத்தைக் கேட்டு ஏற்றுக்கொண்ட பிறகு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது.
மேலே உள்ள அனைத்து 5 எடுத்துக்காட்டுகளிலிருந்தும், ஞானஸ்நானம் சுவிசேஷத்தின் உண்மையான ஏற்றுக்கொள்ளுதலுக்குப் பின்னாக வருகிறது என்பது தெளிவாகிறது. ஞானஸ்நானம் யாரையும் இரட்சிக்காது என்றாலும், அது எப்போதும் உண்மையான இரட்சிப்பின் விசுவாசத்திற்குப் பின்னாக வருகிறது! எனவே, இது தான் இரட்சிப்புக்கும் தண்ணீர் ஞானஸ்நானத்திற்குமான உறவு.
6. குழந்தை ஞானஸ்நானத்தைப் பற்றிய காரியமென்ன?
ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பு ஒருவர் தனிப்பட்ட முறையில் மனந்திரும்ப வேண்டும் மற்றும் கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும் என்பதை புதிய ஏற்பாடு தெளிவுபடுத்துவதால், குழந்தை ஞானஸ்நானத்தின் முழு செயல்முறையும் வேதத்திற்கு முரணானது. ஒரு குழந்தை எப்படி மனந்திரும்பி விசுவாசிக்க முடியும்? வேதாகமெங்கிலும் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்க ஒரு கட்டளை கூட இல்லை அல்லது குழந்தைகள் ஞானஸ்நானம் பெற்றதான ஒரு தெளிவான பதிவும் இல்லை. புதிய ஏற்பாட்டில் உள்ள குழந்தை ஞானஸ்நானத்தை பழைய ஏற்பாட்டின் குடும்பங்களிலுள்ள விருத்தசேதனம் செய்யும் உடன்படிக்கை அடையாளமாக சிலர் விளக்குகின்றனர். இது ஒருவர் பார்க்கும் பார்வையில் உள்ள பிரச்சனை: இப்படி வேதத்தில் எங்கும் கூறப்படவில்லை.
மறுபுறம், ஞானஸ்நானம் என்பது தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, தங்கள் பாவங்களை மன்னிப்பதற்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மட்டுமே விசுவாசித்து சுவிசேஷத்தைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது. மேலும் அவ்வாறு செய்தவர்கள், மூழ்கி, தண்ணீர் ஞானஸ்நானத்தை எடுக்க வேண்டும் என்பது முதல் கட்டளை. மேலும் இது தாமதமின்றி செய்யப்பட வேண்டும்! இந்த கட்டுரையில் நாம் பார்த்த வேதத்தின் மிகப்பெரிய ஆதாரம் அதுதான்.
இறுதி சிந்தனைகள்:
தண்ணீர் ஞானஸ்நானத்தின் முக்கியத்துவத்தை வாசகர்கள் காண முடியும் என்று நம்புகிறேன். சாத்தான் இந்த எளிய சத்தியத்தில் பிரச்சினையை ஏற்படுத்தி குழப்ப விரும்புகிறான். அவன் ஏன் இப்படி குழப்புகிறான்? ஏனெனில் கிறிஸ்தவ வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே, விசுவாசிகள் சத்தியத்திற்கு கீழ்ப்படியாமல் இருக்க சாத்தான் விரும்புகிறான். அவனால் ஒருவர் இரட்சிப்படைவதை தடுக்க முடியாவிட்டாலும், இந்த முதல் மற்றும் அடிப்படை கட்டளையில் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருக்க அவர்களைத் தூண்டுவதன் மூலம் அவன் விசுவாசிகளை பலவீனப்படுத்த முடியும். மேலும் அவன் இந்த சத்தியத்தில் விசுவாசிகளை கீழ்ப்படிய விடாமல் செய்துவிட்டால், மற்ற சத்தியங்களிலும் அவர்களை எளிதில் கீழ்ப்படியாமல் போகச் செய்துவிடலாம்! அது தான் அவனுடைய திட்டம்!
மேலும், ஞானஸ்நானம் என்பது ஒரு புதிய விசுவாசி இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் விலைக்கிரயத்தை கொடுக்கத் தயாராக இருக்கிறாரா என்பதைப் பார்க்க கொடுக்கப்படும் ஒரு நல்ல சோதனையாகும். ஞானஸ்நானத்தின் மூலம் “இயேசு கிறிஸ்துவை கர்த்தர்” என்று பகிரங்கமாக அறிவிக்க மறுத்தால், அந்த மனிதன் உண்மையிலேயே மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவிடம் வந்தவரல்ல என்று கூறுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகையால், ஒருவருடைய இருதயம் உண்மையாக மாற்றப்பட்டிருக்கிறதா என்பதை அறிய ஞானஸ்நானமானது ஒரு சிறந்த சோதனையாக இருக்கிறது, அதாவது, அந்த நபர் உண்மையிலேயே ஒரு கிறிஸ்தவராக இருந்தால், உண்மையிலேயே மறுபடியும் பிறந்து பாவத்திலிருந்து இயேசுவிடம் திரும்பியவரென்றால் அவரை என்பதை சோதிக்க ஞானஸ்நானம் அவசியம்.
தங்கள் வாழ்க்கையின் ஏதோ ஒரு சூழ்நிலைகளால் வெகு நாட்களுக்கு முன்பு ஞானஸ்நானம் எடுத்தவர்கள், தாங்கள் ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு இயேசு கிறிஸ்துவில் உண்மையாகவே மனந்திரும்பி விசுவாசித்திருந்தார்களா என்பதை அறிய சிலர் போராடுகிறார்கள். குறிப்பாக கிறிஸ்தவ வீடுகளில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இது ஒரு பொதுவான போராட்டமாக இருக்கிறது. ஆனால் அவர்கள் இப்போது கிறிஸ்துவை விசுவாசிக்கிறார்கள் என்பதையும், அவர் தங்கள் வாழ்க்கையின் கர்த்தர் என்பதையும் அவர்கள் அவருக்கு சொந்தமானவர்கள் என்பதையும் அவர்கள் தற்போது அறிந்திருக்கிறார்கள்.
இருப்பினும், அவர்கள் முன்பு ஞானஸ்நானம் எடுத்தப்போது அவர்களின் மனந்திரும்புதல் மற்றும் விசுவாசத்தின் உண்மைத் தன்மையை பற்றி உறுதியாக அறிந்திருக்கவில்லை. அந்த நிச்சயமின்மைக்கு பின்னால் பல வருடங்களாக அவர்கள் வாழ்ந்த பாவமான வாழ்க்கையே காரணமாக இருக்கிறது, ஆனால் இப்போது அவர்கள் இயேசுவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறார்கள். கீழ்ப்படியாத ஆண்டுகளை “பின்மாற்றம்” என்று அழைப்பதற்கு பதிலாக, அப்படிப்பட்ட மனிதருடைய முந்தைய ஞானஸ்நானத்தை மதிப்பீடு செய்ய நான் வலியுறுத்துவேன். முந்தைய ஞானஸ்நானத்திற்கு முன்பு உண்மையான இரட்சிப்பின் கிரியை இல்லை என்பது நன்றாக இருக்கலாம். குடும்பம், சபை, மற்றும் நண்பர்கள் ஞானஸ்நானம் பெறுதல் போன்றவற்றின் காரணமாக இது ஒரு உணர்ச்சிபூர்வமான முடிவாக எடுக்கப்பட்டிருக்கலாம்.
இப்படிப்பட்ட நிலைமைகளின் கேட்கப்படும் கேள்வி, நான் மறுபடியும் ஞானஸ்நானம் பெற வேண்டுமா? இதற்கு பதில் என்னவென்றால், “புதிய ஏற்பாட்டின் ஞானஸ்நானத்தின் படி நீங்கள் ஞானஸ்நானம் பெறவில்லை என்றால், இது உண்மையான மனந்திரும்புதலையும் கிறிஸ்துவில் நம்பிக்கையையும் வெளிப்படுத்திய பிறகு, அது மூழ்கி எடுத்திருந்தாலும், நீங்கள் மறுபடியும் ஞானஸ்நானம் பெற வேண்டும். 1 சாமுவேல் 16:7ல் சாமுவேலுக்கு கர்த்தர் சொன்ன வார்த்தைகளை நினைவில் கொள்வது நல்லது, “மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்.” கர்த்தர் இருதயத்தைப் பார்க்கிறார் என்பதை அறிவது மகிழ்ச்சியான சிந்தனை. அதே சமயம் நம் இருதயங்களின் நோக்கத்தை அவர் அறிவார் என்பதை தெரிந்துக்கொள்வது ஒரு அச்சுறுத்தும் சிந்தனை [வெளி 2:23].
இறுதியாக, இந்த முக்கியமான விஷயத்தைப் பற்றிய நமது பிரதிபலிப்புக்காக இயேசுகிறிஸ்துவின் நாவிலிருந்து வந்த இரண்டு வசனங்களை மேற்கோள் காட்டுகிறேன்:
லூக்கா 6:46 “என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன?”
மத்தேயு 10: 32-33 “32 மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன். 33 மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.”
இவையாவும் கர்த்தராகிய இயேசுவின் நாவிலிருந்து வந்த சக்திவாய்ந்த மற்றும் ஆழமான வார்த்தைகள். சங்கீதம் 119:60 ல் “உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதியாமல் தீவிரித்தேன்.” என்று கூறிய சங்கீதக்காரரின் வழியைப் பின்பற்றும்படி நான் அனைவரையும் ஊக்குவிக்கிறேன்.”
அன்புள்ள வாசகரே, நீங்கள் வேதாகம ரீதியாக மற்றும் சரியான விதத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்றால், தாமதிக்க வேண்டாம். புதிய ஏற்பாட்டில் எந்த விசுவாசியும் தாமதமாக அல்லது ஞானஸ்நானம் பெற ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதை உடனடியாக செய்வதை ஊக்குவிக்க வேண்டும்.
நினைவில் கொள்ளுங்கள், உண்மையான மனந்திரும்புதலுக்கான சரியான ஆதாரம் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதாகும், இது ஞானஸ்நானத்தின் காரியத்தில் மட்டுமல்லாமல், வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் செயல்படுத்தப்பட வேண்டும். கீழ்படிதலை தொடங்க ஞானஸ்நானம் ஒரு சிறந்த இடம்! நினைவில் கொள்வோம்: உண்மையான மனமாற்றத்திற்குப் பிறகு தண்ணீர் ஞானஸ்நானமானது ஒரு விருப்பமல்ல, தாமதமின்றி கீழ்ப்படிய வேண்டிய கட்டளை!
எனவே பெருமை வேண்டாம் [இவ்வளவு காலத்திற்குப் பிறகு நான் ஞானஸ்நானம் எடுத்தால் மக்கள் என்ன நினைப்பார்கள்], பயம் [என் குடும்பத்தார் என்ன சொல்லுவார்கள் அல்லது என்ன செய்வார்கள்] அல்லது வேறு எந்த காரணமும் உங்களை இயேசுவுக்குக் கீழ்ப்படிவதைத் தடுக்கிறது. கர்த்தராகிய இயேசுவை, அவரை மட்டும் மகிமைப்படுத்த இதைச் செய்யுங்கள்! நீங்கள் அவரை நேசிப்பதால் அவருக்குக் கீழ்ப்படியுங்கள். நித்திய நரகத்திலிருந்து உங்களை விடுவிப்பதற்காக சிலுவையில் உங்களுக்கு பதிலாக அந்த இடத்தைப் பிடித்தவர் அவர்தான். அவர் உங்களுடைய மகிழ்ச்சியான, முழு மனதுடன்கூடிய, உடனடி கீழ்ப்படிதலுக்கு தகுதியானவர்!
நல்ல கர்த்தர் நம் அனைவரையும் அவருடைய கட்டளைகளில் நடக்க அனுமதிப்பாராக, “கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.” [சங்கீதம் 128:1].
நமது விசுவாசம் உண்மையானதாக இருந்தால், நம் மனந்திரும்புதலும் உண்மையானதாக இருக்கும். தவறான மனந்திரும்புதல் பாவத்தின் விளைவுகளுக்கு மட்டுமே பயப்படுகிறது, அதேசமயம் உண்மையான மனந்திரும்புதலானது பாவத்திற்கு அஞ்சுகிறது. உண்மையான மனந்திரும்புதல் ஒரு பரிசுத்தமான தேவனுக்கு எதிரான குற்றமாக கருதி பாவத்தை வெறுக்கிறது. பாவம் பொல்லாதது, தேவன் அதை வெறுக்கிறார் என்பதை அறிவது உண்மையிலேயே மனந்திரும்பிய மனிதனை பாவத்தை கைவிட தூண்டுகிறது. உண்மையான மனந்திரும்புதல் பாவத்தை விட்டுவிட்டு, இயேசுகிறிஸ்துவிற்கு முழு அர்ப்பணிப்பிற்கு திரும்புகிறது.