திருமண துணையை எப்படி தேர்வு செய்வது ?

Posted byTamil Editor July 25, 2023 Comments:1

(English Version: How To Choose A Marriage Partner)

ஸ்னோ ஒயிட்டின்  (பொறாமை கொண்ட அரசி  ஒருத்தியால் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட ஒரு அழகான பெண்) கதையை முதன் முறைாக கேட்ட சிறு பெண் ஒருத்தி, அந்த விசித்திரமான கதையை தனது தாயிடம்  ஆர்வத்துடன் சொன்னாள். இளவரசர் சார்மிங் தனது அழகான வெள்ளைக் குதிரையில் வந்து ஸ்னோ ஒயிட்டை மீண்டும் உயிர்ப்பித்ததைப் பற்றிச் சொன்ன பிறகு, அவள் தன் தாயிடம், “அடுத்து என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டாள். அதற்கு அவளுடைய தாய் “ஆம்,” தெரியும்,  அதற்கு பின் “அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.”  என்று கூறினாள். உடனே அந்த சிறு பெண் சுஜி “இல்லை,  அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.” என்று ஆர்வமில்லாமல் கூறினாள்.

குழந்தை போன்ற அப்பாவித்தனத்துடன், அந்த சிறு பெண் உண்மையின் ஒரு பகுதியை பேசினாள். உலக நிழ்வுகளின் அடிப்படையில் திருமணம்  வாழ்வும் மகிழ்ச்சியும் எப்போதும் இணைந்துச் செல்வதில்லை. இருப்பினும், வேதத்தில் காணப்படும் அவருடைய போதனைகளுக்குக் கீழ்ப்படிந்தால், திருமணமும் மகிழ்ச்சியும் ஒன்றாக இணைந்துச் செல்ல முடியும் என்று  தேவன் வாக்குறுதி அளிக்கிறார்.

திருமணங்களிலுள்ள முக்கிய பிரச்சனைகளில் ஒன்று திருமணத்திற்கு முன் சரியான துணையை தேர்வு செய்யத் தவறுவதால் எழுகிறது என்பதால் ஒரு நபர் சரியான திருமண துணையைத் தேர்ந்தெடுக்க உதவும் வகையில்,  5 வேத சத்தியங்களை விளக்கி, இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. துணைவர்களைத் தேடும் விஷயத்தில் இந்த சத்தியங்களைப் பின்பற்றுவதற்கு விசுவாசிகளான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்டவும் உதவலாம்.

ஒரு அடிப்படை சத்தியத்துடன் ஆரம்பிக்கலாம்.

1. தனிமையாக இருப்பது ஒரு சாபம் அல்ல.

தனிமையில் இருப்பதை ஒரு குறைபாடாக மட்டுமல்லாது ஒரு சாபமாகவும் கூட உலகம் பார்க்கிறது! இருப்பினும், உலகம் இந்த காரியத்தில் தங்களை வழிநடத்துவதற்கு இடம் கொடுக்காமல், முதலில் திருமணம் செய்துகொள்வது கர்த்தரின் சித்தமா என்பதை விசுவாசிகள் தீர்மானிக்க வேண்டும். அனைவரும் திருமணம் செய்து கொள்ள அழைக்கப்படவில்லை [மத்தேயு19:10-12; 1 கொரிந்தியர் 7:25-38]. பவுல்  தனக்கு  மணமாகாததை தேவனின் பரிசாகக் கருதினார் [1 கொரிந்தியர் 7:7]. எனவே, தேவன் உங்களை தனிமையாக இருக்க அழைத்தால், அதை சாபமாக பார்க்காதீர்கள். மாறாக, அவருடைய மகிமைக்காக தேவனிடமிருந்து ஒரு அழைப்பாகவும், பரிசாகவும் கருதுங்கள். தனியாக இருக்க அழைக்கப்பட்டவர்களுக்கு தேவன் பொருத்தமான கிருபையையும் மகிழ்ச்சியையும் அருளுவார்.

விசுவாசிகளாக, நாம் அனைவரும் ” கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்” [எபேசியர். 1:3] மற்றும் “கிறிஸ்துவிற்குள் [நாம்] பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறோம்” [கொலோசெயர் 2:10]. ஆசீர்வதிக்கப்பட்டதும்  பூரணமானதும்  ஒவ்வொரு விசுவாசிக்கும் கிறிஸ்துவிற்குள்ளான நிலையாக இருக்கிறது. இதைவிட வேறு என்ன வேண்டும்! எனவே, தனிமையில் இருக்க தேவன் உங்களை அழைத்திருந்தால், உங்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் அவருக்கு சேவை செய்யுங்கள்.  அவர் உங்களை தனியாக இருக்க அழைக்கவில்லை என்றால், பின்வரும் 4  குறிப்புகள் உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும்.

மேலும் தொடருவதற்கு முன் சில குறிப்புகள்: 

திருமணமான  விசுவாசிகள் திருமணமாகாத மற்ற விசுவாசிகளிடம் பேசும்போது,  அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் முழுமையடையாதவர்களென்றோ, திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றோ, அதுவும் கூடிய சீக்கிரம்  செய்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கும் வார்த்தைகளைப் பேசாமல்  இருக்க வேண்டும். “கவலைப்படாதீங்க. உங்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்” போன்ற அறிவுரைகள் அல்லது “உண்மையாகவே உங்களுக்கு எல்லாம் சரியாக நடக்கிறதா?” போன்ற கேள்விகள் நல்ல உள்நோக்கத்துடன் கேட்கப்பட்டாலும்  பயனுள்ளதாக இருக்காது.

தனிமையாக இருப்பவர்கள் ஏற்கனவே போதுமான மன அழுத்தத்தை சுமக்கிறார்கள். அதனோடு மேலும் அழுத்தத்தை சேர்க்க வேண்டாம். உணர்திறன் உடையவர்களாக இருங்கள், தேவன் திருமணமானவர்களையும் திருமணமானமாகதவர்களையும் சமமாக ஏற்றுக்கொள்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். திருமணமானவராக இருந்தாலும் சரி, திருமணமாகதவராக இருந்தாலும் சரி, விசுவாசிகளாகிய நாம் கிறிஸ்துவில்  பூரணமாக இருக்கிறோம். நம்முடைய வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் அவர்களை வழநடத்துவதை விட அவர்களுக்காக ஜெபித்து, அவர்களின் கிறிஸ்தவ வாழ்வில் அவர்களை ஊக்குவிப்போமாக.

2. விசுவாசியான ஒருவரை மட்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யுங்கள். 

இந்த விஷயத்தில் வேதம் தெளிவாக உள்ளது. 1 கொரிந்தியர் 7:39 ல் ஒரு விசுவாசி தான் மணந்துக்கொள்ளப்போகும் மற்றொரு நபர் கர்த்தருக்குட்பட்டவனாயுமிருக்க வேண்டும் என்ற இந்த நிபந்தனையை நிறைவேற்றினால் மட்டும்  திருமணம் செய்து கொள்ள உரிமையுடையவராக  இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது: பழைய ஏற்பாட்டிலும் அவிசுவாசிகளைத் திருமணம் செய்துக்கொள்வதைத் தவிர்க்கும்படி தேவன் தமது பிள்ளைகளுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். உபாகமம் 7:3  இவ்வாறு கூறுகிறது, “அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளை உன் குமாரருக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக.

விசுவாசியானவர்கள், பரிசுத்த ஆவியானவர் தங்கியிருக்கும் அவர்களது சரீரத்தை, இன்னும் ஆவிக்குரிய இருளில் இருக்கின்ற, பாவங்களில் மரித்த ஒரு நபருடன் இணைக்க முடியாது [2 கொரிந்தியர் 6:14-7:1].  ஆமோஸ் 3:3மேலும் கூறுகிறது, “இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ?” விசுவாசிகளுக்கும் அவிசுவாசிக்கும் இடையே ஆவிக்குரிய உடன்பாடு இல்லை! அவர்கள் இரண்டு வெவ்வேறு உலகங்களில் வாழ்கிறார்கள். “ஒருவேளை தேவன் இந்த அவிசுவாசியை இரட்சிக்கும் கருவியாக என்னை வைத்திருக்கலாம்” என்று நினைப்பது முட்டாள்தனம் மட்டுமல்ல, ஆணவமும் ஆபத்தானதும் கூட. இன்னொருவரின் இரட்சிப்புக்கு யாரும் உத்தரவாதம் அளிக்க முடியாது [1 கொரிந்தியர் 7:16].  சுவிசேஷ டேட்டிங் வேதத்திற்கு எதிரானது! அவிசுவாசி எவ்வளவு நல்லவனாக தோன்றினாலும், ஒரு விசுவாசி அவரை மணக்க கூடாது!

தெளிவாகக் கூறுவதென்றால், ஒரு விசுவாசி விசுவாசியல்லாதவரை திருமணம் செய்து கொள்வது தேவனின் விருப்பம் அல்ல. அவருடைய தெளிவான கட்டளைகளை மீறுவது பாவம். நாம் வேண்டுமென்றே பாவம் செய்யும் போது தேவன் அவருடைய கண்களை வேறு திசையில் திருப்பிக்கொண்டு ஆசீர்வதிப்பார் மற்றும் மன்னிப்பார் என்று நம்பவது அவரை சோதனைக்கு உட்படுத்துகிறது – இது மற்றொரு பாவம் [மத்தேயு 4:7]. பாவம் எவ்வளவு எளிதில் பெருகுகிறது என்று பாருங்கள்! இந்த விஷயத்தில் தேவன் தமது சிந்தையை மாற்றிக் கொள்ளவில்லை. அதனால் தான் இந்த விஷயத்தில் பாவத்துடன் யாரும் உரையாடக்கூடாது. அப்படிச் செய்தால் நாம் வீழ்வது நிச்சயம்! தேவனால் கொடுக்கப்பட்ட எந்த தெளிவான கட்டளையையும் மீறுவதற்கு ஆசைப்படும்போது யோசேப்பு செய்ததை நாம் செய்ய வேண்டும் – விலகியோடுங்கள்! [ஆதியாகமம் 39:12].

ஒரு கூடுதல் குறிப்பாக, ஒரு விசுவாசியான துணையைத் தேடும்போது கூட, “அவர்கள் நல்ல தோற்றமுடையவர்களா? அவர்கள் பணக்காரர்களா, நன்கு குடியமர்ந்தவர்களா?” போன்ற பசையுள்ள எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, கேட்க வேண்டிய முக்கிய கேள்விகள் பின்வரும் வழிகளில் இருக்க வேண்டும்: “அவர் அல்லது அவள் உண்மையாக இரட்சிக்கப்பட்டவர்களா மற்றும் உண்மையாக இயேசுகிறிஸ்துவைப் பின்தொடர்கிறவர்களா?” “கர்த்தர் மீதும், அவருடைய வார்த்தையின் மீதும், அவருடைய பணியின் மீதும் வெளிப்படையான அன்பு அவர்களுக்கு உண்டா?” “பணிவு, பாவத்தின் மீது வெறுப்பு, தெய்வீகத்தின் மீது அன்பு மற்றும்  ஸ்தல சபையில் ஒரு அர்ப்பணிப்பு உள்ளதா?” பலர் வெளிப்புறப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதையும், விசுவாசம் தொடர்பான காரியங்களுக்கு கடைசி  இடத்துக்கு ஒப்படைப்பதையும் பார்ப்பது வருத்தமாக இருக்கிறது—மெய் கிறிஸ்தவனாக இருப்பது ஒரு போனஸ் போல! இயேசுவே முதன்மையானவராக இருக்க வேண்டும் [மத்தேயு 6:33]. அவர் முதன்மையானவராக இருக்கும்போது, மற்ற அனைத்தும் சரியாகிவிடும் என்று நாம் உறுதியாக நம்பலாம்!

 3.   கணவன், மனைவி மற்றும் பெற்றோராக இருப்பதன் விவிலியப் பொறுப்பைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஒரு கிறிஸ்தவ கணவன் அல்லது மனைவியின் பங்கை விவரிக்கும் தொடர்புடைய வசனங்களை விசுவாசிகள் படிக்க வேண்டும் [எபேசியர் 5:22-33; கொலோ 3:18-19; தீத்து 2:3-5; 1 பேதுரு 3:1-7; நீதிமொழிகள் 31:10-31]. கூடுதலாக, பிள்ளை வளர்ப்பைப் பற்றியும் படிக்க வேண்டும் [உதாரணம் நீதிமொழிகள் 6:20, 13:24, 22:6, 22:15, 29:15; எபேசியர் 6:4; கொலோ 3:21]. வேத அறிவு ஒரு மனிதனை புத்திசாலித்தனமாக ஆயத்தப்பட உதவுகிறது.

திருமணத்தில் யதார்த்தமான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இரண்டு பாவிகள், தேவனுடைய கிருபையால் இரட்சிக்கப்பட்டாலும், ஒன்றாக வாழும்போது, இன்னும் பல சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும். வேதவசனங்களைப் பின்பற்றுவதற்கு அவர்கள் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டாலும், கணவன்-மனைவி இருவரும் “பிரியும்” தருணங்களை சந்திக்கக்கூடும். அந்த நேரத்தில் மற்றவரை நேசிக்கவும் மன்னிக்கவும் தேவை அர்ப்பணிப்பு இருக்க வேண்டும். திருமண உறவை காத்துக்கொள்ள தொடர்ந்து கர்த்தரை சார்ந்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு திருமண உறவிலும் தினமும் இரண்டு இறுதி சடங்குகள் தேவை – கணவனும் மனைவியும் தங்கள் சுயநல ஆசைகளுக்கு மரிக்க வேண்டும். இந்த வகையான சுயவெறுப்பு வாழ்க்கை முறைக்கு இருவரும் உறுதியாக இருக்க வேண்டும். திருமணம் என்பது வெறும் மகிழ்ச்சி அல்ல. இது ஒரு கடமையும் கூட –  ஆம், தேவனை மகிமைப்படுத்தும் கடமை! நிச்சயமாக, திருமணம் ஒரு பெரிய மகிழ்ச்சியை உணரப்படாத நாட்களும் இருக்கும் – சிறிது காலத்திற்கு முன்னர் திருமணமான ஒரு தம்பதியரிடம் கேளுங்கள். இந்த உண்மைக்கு அவர்கள் சாட்சியமளிப்பார்கள். ஆனால் அந்த நாட்களில் கூட, திருமணம் என்பது பரிசுத்த தேவனுக்கு முன்பாக செய்யப்பட்ட ஒரு வாக்குறுதி; அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது தங்களின் கடமை என்ற சத்தியத்தை நினைவில் கொள்ள இருவரும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். மேலும் அவருடைய கிருபையால் அந்த வாக்குறுதியைக் காப்பாற்றி மகிழ்ச்சியை மீட்டெடுக்க முடியும்!

4. கர்த்தருடைய நேரத்திற்கு காத்திருங்கள்

தேவனுடைய பிள்ளைகள் “கர்த்தருக்காகக் காத்திருக்க வேண்டும்” என்று அடிக்கடி கட்டளையிடப்படுகிறார்கள் [சங். 27:14, 40:1, 130:5-6]. அவசரம் பலரின் வாழ்க்கையை நாசமாக்கியது. ஆபிரகாம் ஒரு குழந்தைக்காக கர்த்தருடைய நேரத்திற்கு காத்திருக்கத் தவறியதன் மூலம் மிகுந்த வருத்தம் உண்டானது [ஆதியாகமம் 16]. சவுல் அவசரத்தின் காரணமாக ராஜ்யத்தை இழந்தார் [1 சாமு 10:8, 13:8-14].

அதேபோல், அவசர முடிவுகளால் பல திருமணங்கள் சிதைந்துள்ளன. ஆம், வலியும் வெறுமையும் தனியாக இருப்பதிலிருந்து வரலாம், சில சமயங்களில் தாங்கிக்கொள்வதும் கடினமானதாக இருக்கும். அந்த நிலையில் இருந்து தப்பிக்க, பலர் அவசரமாக [மற்றும் துரதிர்ஷ்டவசமாக] இந்த உண்மையை மறந்து மோசமான திருமண உறவிற்குள் சென்றுவிடுகிறார்கள்: மோசமான திருமண உறவில் இருப்பதன் விளைவாக வரும் வலி மற்றும் பாரமானது, தனிமையாக இருக்கையில் வரும் பாரத்தை விட சுமப்பதற்கு அதிகமான பாரமானதாக  இருக்கும். நெருப்பு சட்டியில் இருந்து அடுப்பிற்குள் விழும் உன்னதமான காரியம் இது!

எனவே, ஜாக்கிரதை! கர்த்தருடைய நேரத்திற்காக காத்திருங்கள். “தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றம்முதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை.” [ஏசாயா 64:4]. அவர் தமக்காகக் காத்திருப்போருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார். அவருடைய பிள்ளைகள் அவருடைய நேரத்திற்கு இணங்கும்போது தேவன் செய்கிற காரியங்கள் நம்மால்  நம்பமுடியாதததாக இருக்கும்.

5. ஜெபத்தில் தரித்திருங்கள்.

கர்த்தராகிய இயேசு அவராலேயல்லாமல், நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை மிகத் தெளிவாகக் கூறினார் [யோவான் 15:5]. இந்த சத்தியத்தை உணர்ந்துகொள்வதானது, இந்த முக்கியமான விஷயம் உட்பட எல்லாவற்றிலும் விடாமுயற்சியுடன் ஜெபிக்க ஒரு விசுவாசியை தூண்ட வேண்டும். நிலைமை மாறாததாகத் தோன்றினாலும், விசுவாசி “எப்போதும் சோர்ந்துப்போகாமல் ஜெபிக்க வேண்டும்” [லூக்கா 18:1]. ஜெபத்துடன் உபவாசமும் இருக்க வேண்டும்! இந்த வாழ்க்கையை மாற்றும் நிகழ்வில் தம் விருப்பத்தைத் தேட வாஞ்சிக்கும் தமது பிள்ளைகளின் விடாப்பிடியான அழுகையை கர்த்தர் கேட்பார்!

இறுதி சிந்தனைகள்.

அன்புள்ள விசுவாசிகளே, திருமணங்களை ஏற்படுத்தியவராகிய தேவனால் கொடுக்கப்பட்ட கட்டளைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் திருமணம் செய்து கொள்ளலாம் [திருமணம் செய்வது தேவனின் விருப்பமாக இருந்தால்] மகிழ்ச்சியுடன் வாழலாம். அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியத் தவறினால், ஒரு மகிழ்ச்சியற்ற மனைவி கீழ்கண்டவாறு கூறினதைப் போல அமைந்துவிடும்,  “நான் திருமணம் செய்துகொண்டபோது, ஒரு இலட்சியத்தைத் தேடிக்கொண்டிருந்தேன், அது  இப்போதோ ஒரு சோதனையாக மாறிப்போனது, இப்போது எனக்கு ஒரு புதிய ஒப்பந்தம் தேவைப்படுகிறது.”  திருமணம் என்பது விளையாடுவதற்கான விளையாட்டு அல்ல. சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு முன்பாக கனமான ஒரு அர்ப்பணிப்பாகும்! அது முடிச்சு போடுவதற்கு முன் சரியான துணையைத் தேடுவதில் தொடங்குகிறது.

 ஒரு இறுதி நினைவூட்டல்: திருமணம் என்பது ஒரு முடிவு அல்ல. இது ஒரு முடிவிற்கு ஒரு வழிமுறையாகும்-அந்த முடிவு கடவுளின் மகிமையாக இருக்கிறது [1 கொரிந்தியர் 10:31]. அந்த நினைவூட்டல் வாழ்க்கையின் இறுதி இலக்காக திருமணத்தை வைப்பதிலிருந்து ஒருவரைப் பாதுகாக்கும்! வாழ்க்கையில் நம்முடைய ஒரே கவனம் தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருவதாக இருக்கும் போது, ​​திருமணம் தேவனை மகிமைப்படுத்தப்படுவதற்கான வழிமுறைகளில் ஒன்றாக இருக்கும்

ஒருவேளை, இந்தக் கட்டுரையைப் படிக்கும் சிலர் சில மோசமான திருமணத் தேர்வுகளைச் செய்திருக்கலாம். சோர்ந்துப்போகாதேயுங்கள். உங்கள் பாவங்களை கர்த்தரிடம் அறிக்கையிட்டு, அந்தச் சூழலைக் கடந்து செல்ல உங்களுக்கு பெலன் தருமாறு அவரிடம் கேளுங்கள். அவருக்காக வாழ தேவையான வல்லமையை உங்களுக்கு வழங்குவார். நீங்கள் திருமணத்தில் தவறான தேர்வு செய்ததாலேயே தேவனால் நிராகரிக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு நல்ல தேர்வு செய்ததாலேயோ மட்டும் நீங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இயேசு கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தின் அடிப்படையில் மட்டுமே நீங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறீர்கள். எனவே, இயேசுகிறிஸ்துவின் மூலம் உங்களை மகனாக அல்லது மகளாக மாற்றிய இந்த அற்புதமான தேவனுடைய கிருபையின் கரங்களில் இளைப்பாறுங்கள்!

Category
Subscribe
Notify of
guest
1 கருத்து தெரிவிக்கவும்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments
இம்மானுவேல் ஜேவியர்
இம்மானுவேல் ஜேவியர்
1 year ago

அருமை அருமை.அருமையான விளக்கம்.வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்.எனபதை இந்த கட்டுரை வேத அடிப்படையில் விளக்கிய விதம் சம்மட்டியால் அடித்த மாதிரி இருந்தது.நன்றி