தீவிரவாதி ஒரு மிஷனரியாகிறான்

(English Version: “Terrorist Becomes A Missionary”)
ஜான் நியூட்டன், “அமேசிங் கிரேஸ்” என்ற பாடலை எழுதியவர், இளம் வயதிலிருந்தே தனது வாழ்க்கையை கடலில் கழித்தார். ஒரு மாலுமியாக, முரட்டாட்டமான, பொல்லாத வாழ்க்கை வாழ்ந்தார். அடிமைகளை விற்பனை செய்யும் கப்பல்களில் பணிபுரிந்த அவர், வேளாண்மை பணிகளுக்காக விற்பனை செய்ய அடிமைகளை கப்பல்களில் ஏற்றிக்கொண்டு வந்தார். பின்னர், அவர் அந்த அடிமைக் கப்பலின் கேப்டனானார். நீரில் மூழ்கி மரணத் தருவாயை சந்தித்த அனுபவம் உட்பட தொடர்ச்சியான நிகழ்வுகளுக்குப் பிறகு, அவர் தனது வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தார். பின்னர் அவர் ஒரு சிறந்த பிரசங்கியாகவும், அன்றைய திருச்சபையின் சிறந்த தலைவராகவும் மாறினார். நியூட்டனைப் போன்றவர்கள் பலர் பாவத்தின் பிடியில் வாழ்ந்தாலும் கிறிஸ்துவால் மாற்றப்பட்டவர்களின் உதாரணங்களால் வரலாறு நிரம்பியுள்ளது.
இருப்பினும், கீழ்காணும் எடுத்துக்காட்டானது மற்ற எடுத்துக்காட்டுகளிலிருந்து வேறுபட்டு காணப்படுகிறது. இந்த மனிதன் தன்னை பாவிகளில் “பிரதான பாவி” [1 தீமோ 1:15] என்று அழைத்தார். அவர் பல விசுவாசிகளைத் துன்புறுத்தியதோடு, அவர்களைக் கொலை செய்வதற்கும் ஆதரவாக வாக்களித்தார். அன்றைய காலத்தில் மிகவும் அஞ்சப்படும் மதப் பயங்கரவாதி என்று இவரை குறித்து சொல்லலாம். ஆனாலும், எந்த விசுவாசத்தை அழிக்க முயன்றாரோ அதே விசுவாசத்திற்காக தேவனுடைய பெரும் கிருபையால் அவர் ஒரு மிஷனரியாக மாற்றப்பட்டார்! புதிய ஏற்பாட்டு நிருபங்களில் பாதிக்கும் மேற்பட்டவை அவரால் எழுதப்பட்டவை. சுவிசேஷத்தை அறிவிப்பதில் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை எவராலும் செய்ய முடியாதவை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அடுத்தபடியாக, அவர் கிறிஸ்தவத்தில் மிகவும் பிரபலமான ஒருவர் என்று சொல்வது சரியானதாகவே இருக்கும்.
ஒரு மிஷனரியாக மாறிய இந்த பயங்கரவாதியை நான் யாரென்று உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்—அவர் அப்போஸ்தலனாகிய பவுல் என்று அழைக்கப்படும் தர்சு பட்டணத்து சவுல். அவருடைய வாழ்க்கையை ஆராயும்போது, நம் சொந்த வாழ்க்கையை பாதிக்கும் சில நடைமுறை சத்தியங்களை நாம் அறிந்து கொள்ளலாம். எவ்வாறாயினும், அப்போஸ்தலர் 22:3-11 இல் காணப்படும் அவரது சொந்த வார்த்தைகளிலிருந்து அவருடைய விசுவாச வாழ்க்கைக்கு முந்தைய காலத்தை முதலில் புரிந்துகொள்வோம்.
I. ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி [அப்போஸ்தலர் 22:3-4]
பவுல் தற்கால துருக்கியில் அமைந்துள்ள தர்சு நகரில் பிறந்தார். பவுலின் நாளில், அப்பட்டணம் ஒரு மதிப்புமிக்க துறைமுக நகரமாக இருந்தது [அப்போஸ்தலர் 21:39], அது அதன் பல்கலைக்கழகம் மற்றும் அரசியல் நிலைப்பாட்டிற்கு பிரபலமானதாகவும் இருந்தது. தர்சுவில் சுமார் ஐந்து இலட்சம் [அரை மில்லியன்] மக்கள் பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டிருந்தனர். இத்தகைய நிலைமைகளின் கீழ் வாழ்ந்த பவுல், எபிரேய மொழியோடு கிரேக்க மொழியையும் கற்றார். இந்த ஆரம்பகால பயிற்சியானது அவரது பிற்காலங்களில் யூதர்கள் அல்லாத மக்களுக்கு நற்செய்தியை திறம்பட சென்றடைய உதவியது.
பவுலின் தந்தை ஒரு மத நம்பிக்கையுள்ள பரிசேயர் [அப்போஸ்தலர் 23:6]. அவருடைய தாயைப் பற்றி எந்தத் தகவலும் கூறப்படவில்லை என்றாலும், அவருக்கு ஒரு சகோதரி இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது [அப்போஸ்தலர் 23:16]. பவுல் திருமணம் செய்து கொண்டாரா என்பதை வேதம் வெளிப்படையாகக் கூறவில்லை. ஜெப ஆலயத்தில் பவுலின் பங்கை பார்த்தால், அவர் திருமணம் செய்திருப்பார் என்றும், அவர் ஒரு விசுவாசியான நேரத்தில், அவரது மனைவி மரித்து இருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள். 1 கொரிந்தியர் 7:8-ன் மொழிநடையானது, பவுல் மனவியை இழந்தவர் என்பதைக் குறிப்பதாக இருப்பினும், இந்த கண்ணோட்டத்தில் நாம் உறுதியாக இருக்க முடியாது.
பவுல் ஒரு கூடாரத்தொழில் செய்பவராக இருந்தார் [அதாவது, விலங்குகளின் தோலில் இருந்து கூடாரங்களை உருவாக்குவது]. ஒருவேளை அவரது தந்தையிடமிருந்து இந்த தொழிலை கற்றுக்கொண்டு இருக்கக்கூடும். பவுல் ஒரு யூதராக இருந்தாலும் ரோம குடிமகனாக இருந்தார் [அப்போஸ்தலர் 22:27-28]. எல்லா ரோமர்களும் மூன்று பெயர்களை வைத்துக்கொள்வது வழக்கமாக இருந்தபடியால் இவருக்கும் மூன்று பெயர்கள் இருந்திருக்கக்கூடும். முதல் இரண்டு பெயர்கள் குடும்பத்திற்கு பொதுவானது, கடைசிப்பெயர் தனிப்பட்டது. பவுல் விஷயத்தில், முதல் இரண்டு பெயர்கள் நமக்குத் தெரியாது. அவரது பெயர் பவுலோஸ் [Paullous லத்தீன்], அதில் இருந்து நாம் பவுல் [கிரேக்கம்] என்ற பெயரை பெறுகிறோம். இருப்பினும், ஒவ்வொரு யூதருக்கும் ஒரு யூத பெயர் இருக்கும். பவுலின் யூத பெயர் சவுல், ஒருவேளை இஸ்ரவேலின் முதல் ராஜா சவுலின் பெயரால் பெயரிடப்பட்டிருக்கலாம், பவுலும் ராஜாவாகிய சவுலைப் போலவே பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர் [ரோமர் 11:1].
பவுல் யூத மதத்தைக் குறித்து, வீட்டிலும் பின்னர் எருசலேமிலும் சிறந்த யூத போதகரான கமாலியேலின் கீழ் திடமான பயிற்சி பெற்றார். அவரது சொந்த வார்த்தைகளின்படி, “அவர் [அவரது] காலத்தில் யூத மதத்தினரால் நன்கு அறியப்பட்டவராயிருந்தார்…மேலும் [அவரது] முற்பிதாக்களின் பாரம்பரியங்களில் மிகவும் ஆர்வமாக இருந்தார்” [கலாத்தியர் 1:14]. பவுலைப் பொறுத்தவரை, அவருடைய மதம் எல்லாவற்றிற்கும் மையமாக இருந்தது.
II. சபையை துன்புறுத்தல் [அப்போஸ்தலர் 22:4-5a]
கமாலியேலுடனான அவரது ஆரம்ப வருடங்களுக்குப் பிறகு, பவுலைப் பற்றிய அதிக தகவல்கள் ஏதுமில்லை. மீண்டும் நாம் அவரை வேதத்தில் சந்திக்கும் போது, அவர் திருச்சபையைத் துன்புறுத்துபவராகத் தோன்றுகிறார். கிறிஸ்துவுக்கு முதல் இரத்த சாட்சி சாட்சியாகிய ஸ்தேவானின் மரணத்தின் போது கூட்டத்துடனிருந்தார் [அப்போஸ்தலர் 7:54-8:3]. ஸ்தேவானைக் கல்லெறிந்தவர்களின் அங்கிகளை அவர் கையில் வைத்திருந்தது மட்டுமல்லாமல், “அவர்கள் அவரைக் கொல்வதற்கும் ஒப்புக்கொண்டார்” [அப்போஸ்தலர் 8:1]. ஸ்தேவானின் கொலையில் பவுல் ஒரு அப்பாவி பார்வையாளர் அல்ல—அவர் அதில் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தார். பவுலைப் பொறுத்தவரை, இது அனைத்து விசுவாசிகளையும் கொன்றகற்றுவதற்கான அவரது இலக்கின் தொடக்கச் செயலாகும்.
அச்சமயத்திலிருந்து, “சபையை அழிக்க வேண்டும்” என்ற ஒரே நோக்கத்துடன் பவுல் நடந்துகொண்டார்: [அப்போஸ்தலர் 8:3]. காட்டுப்பன்றி ஒரு திராட்சைத் தோட்டத்தை சீரழிப்பதையோ அல்லது ஒரு காட்டு விலங்கு மற்றொரு விலங்கின் உடலை பீறுவதையோ விவரிக்க “அழித்தல்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. ஒரு காட்டு விலங்கு தன் இரையைத் தாக்குவதைப் போன்ற வெறித்தனத்துடன் பவுல் விசுவாசிகளைத் தாக்கினார். அவர்கள் ஆண்களா அல்லது பெண்களா என்பது அவருக்கு முக்கியமில்லை [அப்போஸ்தலர் 8:3]—அவருடைய துன்புறுத்தலின் கீழ் அனைவரும் சமமாக துன்பப்பட்டனர்.
எல்லாவற்றிலும் ஆபத்தான பகுதி என்னவென்றால், பவுல் இதையெல்லாம் தேவனின் பெயரால் செய்தார். உண்மையில், பவுல் ஒரு மத பயங்கரவாதி அல்ல! சபையைத் துன்புறுத்தியதைப் பற்றி பவுல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை சாட்சியமளித்தார். அப்போஸ்தலர் 26:10-11 ல், அவருடைய வார்த்தைகளை நாம் இவ்வாறு வாசிக்கிறோம், “அப்படியே நான் எருசலேமிலும் செய்தேன். நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரம் பெற்று, பரிசுத்தவான்களில் அநேகரைச் சிறைச்சாலைகளில் அடைத்தேன்; அவர்கள் கொலைசெய்யப்படுகையில் நானும் சம்மதித்திருந்தேன். சகல ஜெப ஆலயங்களிலும் நான் அவர்களை அநேகந்தரம் தண்டித்து, தேவதூஷணஞ்சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள்பேரில் மூர்க்கவெறிகொண்டவனாய் அந்நியப்பட்டணங்கள்வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன்.”
III. தமஸ்கு செல்லும் வழியில் [அப்போஸ்தலர் 22:5b-11]
விசுவாசிகளைச் சிறையாக்கிக் கொண்டு வர யூதத் தலைவர்களிடமிருந்து கடிதங்களைப் பெற்ற பவுல் தமஸ்குவிற்குச் சென்றார் [அப்போஸ்தலர் 22:5 ன் பின்பகுதி]. சீரியாவிலுள்ள தமஸ்கு பட்டணமானது எருசலேமிலிருந்து 140 மைல் தொலைவில் அமைந்துள்ளது. அந்த நாட்களில் இது ஏழு நாள் பயணமாக இருந்தது, மக்கள் வழக்கமாக காலை அல்லது மாலையில் குளிர்ச்சியான நேரத்தில் பயணம் செய்து, வெப்பமான வெயிலைத் தவிர்த்தார்கள். பவுல் நண்பகல் வேளையில் சாலையில் இருந்தார் என்ற உண்மையே [அப்போஸ்தலர் 22:6] தமஸ்குவிற்குச் செல்வதற்கான அவரது தீவிரத்தைக் குறிக்கிறது.
அவர் தமஸ்குவை நெருங்கியபோது, நண்பகலில், “அப்படி நான் பிரயாணப்பட்டுத் தமஸ்குவுக்குச் சமீபமானபோது, மத்தியான வேளையிலே, சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது. நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார் ” [அப்போஸ்தலர் 22:6-8].
அதிர்ச்சியை சற்று கற்பனை செய்து பாருங்கள்—கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே தரையில் இறங்கி பவுலை எதிர்கொண்டார்! இயேசு கிறிஸ்துவைப் பற்றி ஸ்தேவானும் மற்ற கிறிஸ்தவர்களாகிய விசுவாசிகளும் சொன்னதெல்லாம் உண்மை! அவர் தேவனுக்கு எதிராக வேலை செய்தார்!
பவுலின் தோழர்கள் ஒளியைக் கண்டார்கள் ஆனால் கிறிஸ்துவின் சத்தத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை [அப்போஸ்தலர் 22:9]. கீழே தரையில் விழுந்த பவுல் கிறிஸ்துவில் ஒரு புதிய ஜீவனை பெற்றவரானார். இரட்சிப்புக்கு முன் பணிவு வருகிறது! மீட்கப்பட்ட இருதயத்தின் முதல் அழுகையானது, “நான் என்ன செய்வேண்டும், ஆண்டவரே?” என்பதாக இருந்தது [அப்போஸ்தலர் 22:10]. பவுலைப் பொறுத்தவரை, அவருடைய வாழ்க்கையில் இயேசுவே ஆண்டவர் என்பது ஒருபோதும் விவாதிக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. இது ஒரு முழுமையான உண்மை! எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசு கிறிஸ்துவின் இராஜரீகத்திற்கு அடிபணியாமல் ஒருவர் எவ்வாறு விசுவாசியாக இருக்க முடியும்? [மாற்கு 8:34-38; ரோமர் 10:9].
அவருடைய கேள்விக்கு இயேசுவின் பதிலானது நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ; நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்பதாக இருந்தது [அப்போஸ்தலர் 22:10b]. ஒளியால் குருடாக்கப்பட்டதால், அவனது தோழர்கள் அவரை தமஸ்துவிற்கு அழைத்துச் சென்றனர் [அப்போஸ்தலர் 22:11]. இரையை பின் தொடரும் சிங்கம் போல் தமஸ்குவிற்குச் செல்ல பவுல் திட்டமிட்டார். ஆனால், உண்மையில், அவர் ஒரு சாந்தகுணமுள்ள ஆட்டுக்குட்டியாக தமஸ்குவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்! அவர் பார்வையற்றவராக இருந்தார், ஆனால் உண்மையில், இப்போதுதான் அவருடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டன! ஒருவேளை ஜான் நியூட்டனுக்குப் பிறகு பவுல் பிறந்திருந்தால், “நான் ஒருமுறை தொலைந்து போனேன், ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டேன், குருடனாக இருந்தேன், ஆனால் இப்போது நான் காண்கிறேன்!” என்ற அமேசிங் கிரேஸ் பாடலில் இருந்து இந்த உற்சாகம் பொங்கும் வார்த்தைகளைப் பாடியிருப்பார்.
பவுலின் மனமாற்றம் நமது செயல்முறைக்கான மூன்று சத்தியங்களை வெளிப்படுத்துகிறது.
1. இரட்சிக்கப்படக்கூடாத அளவிற்கு யாரும் துன்மார்க்கர் இல்லை
1 தீமோத்தேயு 1:15-16 ல், பவுல் பாவிகளில் “பிரதான பாவியாக” இருந்தபோதிலும், “இரக்கத்தை” பெற்றேன் என்று கூறுகிறார், அதனால் “கிறிஸ்து இயேசு தம்முடைய அளப்பரிய இரக்கத்தையும், நித்திய ஜீவனையும் தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கு முன்மாதிரியாகக் காட்டுகிறார்.” கிறிஸ்துவுக்கும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் எதிராக மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்த ஒரு மனிதர் இங்கே இருந்தார், ஆனாலும் அவர் இரக்கம் கண்டார்.
நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு மிகவும் மோசமானவர் என்று நினைக்கிறீர்களா? இயேசுவின் இரத்தம் மன்னிக்க முடியாத அளவுக்கு எந்த பாவியும் இல்லை, எந்த பாவமும் கிடையாது என்பதை நினைவில் வையுங்கள்! உண்மையான மனந்திரும்புதலுடனும் விசுவாசத்துடனும் இயேசுவைக் கூப்பிடுங்கள்—அவர் உங்களை இரட்சிப்பார்! இயேசுவே இந்த வாக்குறுதியை அளிக்கிறார்: “என்னிடம் வருபவனை நான் ஒருபோதும் புறம்பே தள்ளுவதில்லை” [யோவான் 6:37].
நீங்கள் இந்த இரக்கத்தைப் பெற்றிருந்தால், கிறிஸ்து எல்லா வகையான பாவிகளையும் இரட்சிக்கிறார் என்ற உறுதியுடன் நற்செய்தியை அறிவியுங்கள். ஒருவேளை, உங்களுக்கு நெருக்கமான ஒருவர் நற்செய்தி அழைப்பிற்கு மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்தாலும் பதிலளிக்கவில்லை என்று நீங்கள் நினைக்கலாம். அன்புள்ள நண்பரே, சோர்ந்து விடாதேயுங்கள். அவர்களின் இரட்சிப்புக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்.
கல்லெறிந்து கொல்லப்படும் போதும் ஸ்தேவான் மனம் தளரவில்லை. ஆரம்ப கால திருச்சபைத் தலைவர் அகஸ்டின், சபையானது ஸ்தேவானுக்கு மிகவும் கடன்பட்டிருப்பதாகக் கூறினார், ஏனெனில் அவரது ஜெபமே பவுலின் மனமாற்றத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம். ஜார்ஜ் முல்லர் என்ற தேவ மனிதர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று நண்பர்களுக்காக ஜெபித்தார். இரண்டு பேர் அவரது இறப்பிற்கு சற்று முன்பு தான் கிறிஸ்துவிற்குள் வந்தார்கள், மூன்றாவது நபர் அவர் இறந்த ஒரு வருடம் கழித்து கிறிஸ்துவிடம் வந்தார். மக்களைக் இரட்சிக்கும் வல்லமை கொண்ட தேவனை ஒருபோதும் விட்டு விலகாதீர்கள்—“தேவனாலே எல்லாம் கூடும் ” [மத்தேயு 19:26].
2. நற்செயல்கள் மற்றும் வெளிப்புற ஒழுக்கம் யாரையும் இரட்சிக்காது .
மத உறுதிக்கொண்ட யூதராக, பவுல் தனது மதப் பணிகளும், வெளிப்புற ஒழுக்கமும் தேவன் தன்னை ஏற்றுக்கொள்வதற்கு போதுமானது என்று உறுதியாக நம்பினார். இருப்பினும், அவர் சுயநினைவுக்கு வந்தபோது, தேவனின் பரிபூரண நீதியின் தரத்தை மனித முயற்சிகளால் ஒருபோதும் அடைய முடியாது என்பதை அவர் உணர்ந்தார்—ஏனென்றால் இந்த பரிசுத்தமான, பரிபூரணமான தேவனுக்கு முன்பாக அனைவரும் பாவிகளாக இருக்கின்றனர் [பிலிப்பியர் 3:3-9].
உங்களின் நற்செயல்களையும், வெளிப்புற ஒழுக்கத்தையும் நீங்கள் நம்பினால், பரலோகம் செல்வதற்கு, இதோ உங்களுக்கான செய்தி: தேவனின் தரத்திற்கு 100% பரிபூரணம் தேவை—அதாவது ஒரு பாவம் கூட இல்லாத நிலை அவசியம்! மேலும், தேவனின் பார்வையில் பாவம் என்பது செயல்கள் மட்டுமல்ல, சிந்தையில் தவறான எண்ணம் கொள்வதும் கூட பாவம் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கொலை செய்வது மட்டுமே பாவமல்ல, இருதயத்தில் ஒருவரை வெறுப்பது கொலைக்கு சமம் என்று இயேசு தெளிவாகக் கூறினார் [மத்தேயு 5:21-22]. விபச்சாரம் செய்வது மட்டுமே பாவம் அல்ல. ஆனால், இருதயத்தில் ஒருவரின் மீது இச்சைக்கொள்வது விபச்சாரத்திற்குச் சமம் என்று அவர் தெளிவாகக் கூறினார் [மத்தேயு 5:27-28].
இந்த சத்தியங்களை நீங்கள் தெளிவாகப் பார்க்கும் வரை, நீங்கள் வெறுக்கப்படுவதற்குப் பதிலாக போற்றப்பட வேண்டிய மனிதராக மட்டுமே உங்களைப் பார்ப்பீர்கள். நண்பரே, நற்செயல்கள் தேவனுடன் நமக்கு ஒரு நல்ல நிலைப்பாட்டை ஏற்படுத்தாது. மாறாக, நற்செயல்கள் என்பது இயேசுவின் மூலம் அருளப்படுவதினால் வரும் தேவனோடு கொண்டுள்ள நல்ல நிலைப்பாட்டின் விளைவாகும்.
3. நீங்கள் தேவனுக்கு எதிராகப் போராடி வெற்றி பெற முடியாது.
தனது மனமாற்றக் கதையின் மற்றொரு பதிவில், பவுல், தமஸ்குவுக்குச் செல்லும் வழியில் இயேசுவிடமிருந்து கேட்ட மற்ற வார்த்தைகளையும் கூறுகிறார், “நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்” [அப்போஸ்தலர் 26:14]. முட்கள் என்பது எருதுகளின் செயல்பாட்டை தூண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கூர்மையான குச்சிகள். எருதுகள் எதிர்த்துப் போராடித் திருப்பி அடித்தால், முள்ளின் கூர்மையான விளிம்பு எருதுகளை மட்டுமே காயப்படுத்தும். எனவே, தேவனின் விருப்பத்திற்கு எதிராக போராடி இறுதியில் வெற்றி பெற முடியாது என்று கூறுவதே முள்ளில் உதைப்பது. தேவன் இந்த உண்மையை பவுலுக்கு தெளிவாகவும் உறுதியாகவும் கற்பித்தார்.
அதே போல, நீங்கள் தேவனுக்கு எதிராகப் போரிட்டால்—இறுதியில் நீங்கள் தோல்வியடைவீர்கள். உங்கள் இரட்சிப்புக்காக கிறிஸ்துவிடம் மட்டுமே திரும்ப வேண்டிய அவசியத்தை நீங்கள் எதிர்க்கிறீர்கள். உங்கள் செயல்பாட்டினால் உங்களை மட்டுமே காயப்படுத்திக் கொள்கிறீர்கள். ஒருவேளை, நீங்கள் ஒரு விசுவாசியாக இருந்தாலும் வாழ்க்கையின் சில பகுதிகளில் தேவனுடைய சித்தத்திற்கு அடிபணிய விரும்பாமல் இருக்கலாம் அல்லது நீங்கள் ஏதோ ஒரு பாவத்தை பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டிருக்கலாம் அல்லது அவர் விரும்பும் ஒன்றைச் செய்ய நீங்கள் தயங்கிக்கொண்டிருக்கலாம். எது எப்படி இருந்தாலும் தேவனுக்கு எதிராக போராடி வெற்றி பெற முடியாது. இந்தச் செயல்பாட்டில் நீங்கள் உங்களையும், மற்றவர்களையும் மட்டுமே காயப்படுத்துகிறீர்கள். போராடுவதை நிறுத்தி, தேவனுடைய தூண்டுதலுக்கு அடிபணியுங்கள்.
இறுதி சிந்தனைகள்.
பயங்கரவாதி ஒரு மிஷனரி ஆனார். துன்புறுத்தியவர் ஊழியக்காரானார்! அதைத்தான் தேவன் செய்கிறார்! அவர் கடினமான இருதயங்களை உடைத்து, அவரது விருப்பத்திற்குக் கீழ்ப்படியும் மென்மையான மற்றும் கற்பிக்கக்கூடிய விதமாக மாற்றுகிறார். ஒரு காலத்தில் விசுவாசிகளைக் கொன்ற அதே பவுல் பின்னாளில், “கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.” என்று கூறினார் [பிலிப்பியர் 1:21]. அதுவே நம் மனப்பான்மையாகவும் இருக்கக்கடவது!