தேவபக்தியுள்ள சபையின் 12 அர்ப்பணிப்புகள்—பகுதி 1

(English version: “12 Commitments of a Godly Church – Part 1”)
தேவபக்தியுள்ள சபை எப்படி இருக்க வேண்டும்? அதன் அர்ப்பணிப்புகளை எவை அடையாளப்படுத்த வேண்டும்? இந்த முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்க, அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகத்தின் ஒரு மேலோட்டமான ஆய்வு சரியானதாக இருக்கும். அப்போஸ்தலருடைய நடபடிகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி, ஆரம்பகால சபையானது எல்லா வகையிலும் சரியானதாக இல்லை. என்றாலும் பொதுவாக, ஆரம்பகால சபையானது ஒரு தேவபக்தியுள்ள சபை என்பதை நாம் ஒப்புக்கொள்வோம் என்று நினைக்கிறேன். அவர்களின் செயல்களில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கிறது.
3 பதிவுகளின் மூலம், ஆரம்பகால சபையை அடையாளப்படுத்தும் 12 அர்ப்பணிப்புகளைப் பார்ப்போம். இந்த 12 அர்ப்பணிப்புகளும் தேவபக்தியுள்ள சபையாக இருக்க விரும்பும் இன்றைய சபைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
அர்ப்பணிப்பு # 1. இரட்சிக்கப்பட்ட அங்கத்தினர்கள்
சபைக்குள் அனைவரும் வரவேற்கப்பட்டாலும், இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை விசுவாசித்து ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அப்போஸ்தலர் 2:41 ஆம் வசனத்தில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது. பேதுரு, நற்செய்தியைப் பிரசங்கித்து, மனந்திரும்பும்படி அவர்களைத் தூண்டினார் என்று முந்தைய வசனங்கள் நமக்குக் கூறுகின்றன. பின்னர் 41 ஆம் வசனத்தில், “அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்” என்று வாசிக்கிறோம். சபையில் சேர்க்கப்படுவதற்கு முன்பு அவர்கள் இரட்சிக்கப்பட்டதைக் கவனியுங்கள். பரிசுத்த ஆவியானவர் அவர்கள் அனைவர் மீதும் ஊற்றப்பட்டிருந்தார். அவர்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் வாசமாயிருந்தார், இது இயேசுகிறிஸ்துவை இரட்சகராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்ளும்போது மட்டுமே நிகழ்கிறது.
உறுப்பினர் கட்டமைப்பைப் பற்றி ஒரு சபையானது எந்த சபை நடைமுறையைப் பின்பற்றினாலும், உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு அவர்கள் இரட்சிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
அர்ப்பணிப்பு # 2. வேத அறிவில் வளருதல்
இரட்சிக்கப்பட்ட மக்கள் தேவனுடைய வார்த்தையின் மீது கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பினால் அடையாளப்படுத்தப்படுவார்கள். அதைத்தான் ஆரம்பகால சபையில் பார்க்கிறோம். அப்போஸ்தலர் 2:42 ஆம் வசனம் இவ்வாறு கூறுகிறது, “அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.” “தரித்திருந்தார்கள்” என்ற வார்த்தையானது ஒரு பணியில் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் கருத்தைக் கொண்டுள்ளது—இந்த இடத்தில், அப்போஸ்தலர்கள் உபதேசித்தபடி தேவனுடைய வார்த்தையைக் கற்கும் பணியை குறிக்கிறது. அப்போஸ்தலர் 2:46 ஆம் வசனம், “தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து” என்று கூறுகிறது. அவர்கள் கூடிவந்தபோது உபதேசித்தல் நடந்திருக்கும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். அவர்கள் பசியுள்ள மக்களாக இருந்தார்கள்—தேவனின் வார்த்தைக்காகப் பசித்திருந்தார்கள்.
மேலும், அப்போஸ்தலர்களும் அவர்களுக்கு ஆரோக்கியமான உபதேசத்தை போதிப்பதில் உறுதியாக இருந்தனர். அவர்கள் மந்தையை மகிழ்விப்பதில் ஆர்வம் காட்டவில்லை, மாறாக தேவனுடைய வார்த்தையாகிய ஞானப் பாலை அவர்களுக்கு ஊட்டுவதில் ஆர்வம் காட்டினார்கள். யோவான் 17:17ல் கூறப்பட்டுள்ள இயேசுகிறிஸ்துவின் ஜெபத்தையும் அப்போஸ்தலர்கள் நன்கு அறிந்திருந்தார்கள், “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.” பரிசுத்த ஆவியானவர் ஒரு நபரை பாவத்திலிருந்து சுத்திகரிக்க தேவனுடைய வார்த்தையைப் பயன்படுத்துகிறார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர், தேவனுடைய வார்த்தையே ஒருவரைத் தொடர்ந்து பரிசுத்தமாக வைத்திருக்கும்.
வேத அறிவை வளர்த்துக்கொள்வது ஒரு தேவபக்தியுள்ள சபையின் முக்கிய அர்ப்பணிப்பாக இருக்க வேண்டும். பிரசங்க பீடத்திலிருந்து தேவ வார்த்தை பிரசங்கிக்கப்படும்போது மட்டுமல்ல, வேத ஆராய்ச்சியை கேட்பதிலும் விசுவாசிகள் உறுதியாக இருக்க வேண்டும். மேலும் தகுதியுள்ள ஆசிரியர்களும் தேவனுடைய வார்த்தையை மக்களுக்கு போதிக்க பிரயாசப்பட வேண்டும்.
அர்ப்பணிப்பு # 3. நியமங்களை கடைப்பிடித்தல்
சபைக்கு தேவன் இரண்டு நியமங்களை கொடுத்துள்ளார். ஒன்று ஞானஸ்நானம், மற்றொன்று கர்த்தருடைய பந்தியில் பங்கேற்பது, இது அப்பம் பிட்குதல் என்றும் அழைக்கப்படுகிறது.
நியமம் # 1: ஞானஸ்நானம்
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள் என்று இயேசுகிறிஸ்து தமது பிரதான கட்டளையில் சபைக்குக் கூறியிருக்கிறார் [மத்தேயு 28:18-20]. அதற்குக் கீழ்ப்படிந்து, பேதுரு பெந்தெகொஸ்தே நாளில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தது மட்டுமல்லாமல், கேட்டவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து உண்மையாக மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறும்படி வலியுறுத்தினார், “மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்” [அப்போஸ்தலர் 2:38]. மேலும் அப்போஸ்தலர் 2:41 ஆம் வசனம் இந்த அழைப்புக்கு பதிலளிக்கும் விதமாக, “அவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்” என்று கூறுகிறது.
இந்த மக்கள் முதலில் கிறிஸ்துவை தங்கள் இருதயங்களில் ஏற்றுக்கொண்டு, உடனடியாக ஞானஸ்நானத்தின் மூலம் தங்கள் விசுவாசத்தை பகிரங்கமாக சாட்சியமளித்தனர் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வேதம் ஒரு விசுவாசியின் ஞானஸ்நானம் பற்றி அதாவது, சுவிசேஷத்தைக் கேட்டு அதற்கு நேர்மறையாக பதிலளித்த பின்னர் வரும் ஞானஸ்நானத்தை பற்றி மட்டுமே கூறுகிறது.
ஒரு தேவபக்தியுள்ள சபையானது, தங்கள் பாவங்களுக்காக மனந்திரும்பி, இயேசுகிறிஸ்துவின் மீது விசுவாசம் வைப்பவர்களை, அதிக காலத்தாமதமின்றி அவரைப் பின்பற்றுவதற்கான உறுதிப்பாட்டை ஞானஸ்நானம் மூலம் பகிரங்கமாக சாட்சியமளிக்க ஊக்குவிக்க வேண்டும். உண்மையான விசுவாசம் எப்போதும் இயேசுகிறிஸ்துவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் விளைகிறது—முதல் கட்டளை ஞானஸ்நானம். இந்தக் கட்டளைக்கு கீழ்ப்படிவதற்கு ஒருவர் தாமதிக்கக்கூடாது.
நியமம் # 2: கர்த்தருடைய பந்தி
இயேசுகிறிஸ்து தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில், சபையில் நடைமுறைப்படுத்த வேண்டிய மற்றொரு கட்டளையை வழங்கினார். ஞானஸ்நானம் என்பது ஒருவருக்கு ஒரு முறை மட்டுமே நடைமுறைப்படுத்துவதற்கான நியமமாக இருந்தாலும், இயேசுகிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல், இரண்டாம் வருகை மற்றும் ஒருவருக்கொருவர் மீதான அவர்களின் அன்பையும், அர்ப்பணிப்பையும் நினைவுபடுத்தும் கர்த்தருடைய பந்தி வழக்கமான நடைமுறையாக சபையில் இருக்க வேண்டும். அப்போஸ்தலர் 2:42ல் லூக்கா நமக்கு இவ்வாறு சொல்கிறார், “அவர்கள்…அப்பம் பிட்குதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.” “அப்பம் பிட்குதல்” என்ற சொல் உணவைக் குறிக்கிறது. மேலும் கர்த்தருடைய இராப்போஜனம், பெரும்பாலும், உணவின் முடிவில் நடைபெறுகிறதாக இருந்தது.
புதிய ஏற்பாட்டில் கர்த்தருடைய இராப்போஜனத்தின் கால இடைவெளியானது வெளிப்படையாகக் கூறப்படவில்லை என்றாலும், அது தவறாமல் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று சொல்வது பாதுகாப்பானது. ஆரம்பத்தில், இது தினசரி கடைப்பிடிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது—வசனம் 46—“அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணினார்கள்.” பின்னர் அப்போஸ்தலர் 20:7 ல், அவர்கள் ஒவ்வொரு வாரமும் கர்த்தருடைய இராப்போஜனத்தை கடைப்பிடித்ததாக கூறப்பட்டுள்ளது. [இந்த பரிசுத்தமான, மகிழ்ச்சியான செயல் நமக்காக இயேசுகிறிஸ்து செய்த மாபெரும் தியாகத்தை நினைவூட்டுவதால், சபையில் வாரந்தோறும் கர்த்தருடைய இராப்போஜனம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். சபையானது ஒன்று கூடும் ஒவ்வொரு கர்த்தருடைய நாளிலும் இதை அனுசரிப்பது எவ்வளவு சிறந்தது!]
அர்ப்பணிப்பு # 4. ஐக்கியம்
அப்போஸ்தலர் 2:42 ஆம் வசனம் இவ்வாறு கூறுகிறது, “அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.” அந்நியோந்நியம் என்ற வார்த்தையானது பகிரப்பட்ட வாழ்க்கை, பொதுவான நலன்களைக் கொண்ட வாழ்க்கை என்ற கருத்தைக் கொண்டுள்ளது. அவர்கள் அனைவரும் கர்த்தராகிய இயேசுவோடு ஐக்கியப்பட்டு, அவருடன் பொதுவான வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டதால் இந்த வார்த்தை அர்த்தமுள்ளதாக இருக்கிறது. அந்த அந்நியோந்நியம் அவர்கள் ஒன்றாக நேரத்தை செலவிட வழிவகுத்தது, அப்போஸ்தலர் 2:46 ஆம் வசனம் கூறுவது போல், அவர்கள் “மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணினார்கள்.”
விசுவாசிகள் ஒருவரோடொருவர் கடைப்பிடிக்க வேண்டிய பல கட்டளைகளைப் பற்றி புதிய ஏற்பாடு பேசுகிறது, இது மக்கள் ஒருவரோடு ஒருவர் ஐக்கியம் கொள்ளும்போது மட்டுமே நடக்கும். நாம் ஒருவருக்கொருவர் நேரத்தைச் செலவிடவில்லை என்றால், அந்தக் கட்டளைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது? ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக்கு வந்து விரைவாக சபையை விட்டு வெளியேறினால், வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி நாம் ஐக்கியத்தில் உறுதிபூண்டவர்கள் என்று சொல்ல முடியாது! சபைத் தலைமையானது, விசுவாசிகள் ஒன்றுகூடி வேத வார்த்தைகளைப் படிக்கவும், ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தவும், சில சமயங்களில் ஒன்றாகச் சேர்ந்து உணவு உண்ணும் சூழ்நிலைகளை உருவாக்கப் பாடுபட வேண்டும். விசுவாசிகள் தலைமைத்துவத்துடன் ஒத்துழைத்து, பங்குக்கொள்வது மட்டுமல்லாமல், கூட்ட ஒழுங்குகளின் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
எனவே, இந்த முதல் பதிவில் உள்ள 12 அர்ப்பணிப்புகளில் முதல் 4 ஐப் பார்த்தோம், அதாவது:
(1) இரட்சிக்கப்பட்ட அங்கத்தினர்கள்
(2) வேத அறிவில் வளருதல்
(3) நியமங்களை கடைப்பிடித்தல்
(4) ஐக்கியம்
இந்த 3 பாகங்கள் கொண்ட தொடரின் பாகம் 2 ல் மேலும் 4 அர்ப்பணிப்புகளைப் பார்ப்போம். அதுவரை, உங்கள் சபை ஒரு தேவபக்தியுள்ள சபையாக இருக்க நீங்கள் எவ்வாறு உதவலாம் என்பதை ஏன் ஜெபத்துடன் சிந்திக்கக்கூடாது?