தேவபக்தியுள்ள சபையின் 12 அர்ப்பணிப்புகள்—பகுதி 2

(English version: “12 Commitments of a Godly Church – Part 2”)
தேவபக்தியுள்ள சபையின் 12 அர்ப்பணிப்புகளை குறித்த இந்தத் தொடரின் பகுதி 1 ல் (1) இரட்சிக்கப்பட்ட அங்கத்தினர் (2) வேத அறிவில் வளர்ச்சி (3) நியமங்களை கடைப்பிடித்தல் (4) ஐக்கியம் என்ற 4 அர்ப்பணிப்புகளை பார்த்தோம். இந்த பதிவில் மேலும் 4 அர்ப்பணிப்புகளை பார்க்கப்போகிறோம்.
அர்ப்பணிப்பு # 5. ஒருவரிலொருவர் அன்பாயிருத்தல்
“நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்று யோவான் 13:35 ல் இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார். ஆரம்பகால சபையில் ஒருவருக்கொருவர் தனிசிறப்பு வாய்ந்த ஒன்றாக இருந்தது. இந்த அர்ப்பணிப்பு முந்தைய அர்ப்பணிப்பாகிய ஐக்கியத்தோடு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒருவரையொருவர் உண்மையாக நேசித்ததால் அவர்களது ஐக்கியம் வலுவாக இருந்தது என்று கூட சொல்லலாம்.
இந்த அன்பு வெறும் வார்த்தைகளில் மட்டும் அல்ல செயல்களிலும் வெளிப்பட்டது. அப்போஸ்தலர் 2:44-45 இவ்வாறு கூறுகிறது, “விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்.” மேலும், வசனம் 46 ல் “அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணினார்கள்” என்று கூறுகிறது. இதன் பொருள் மற்றவர்கள் வருவதற்காக அவர்கள் தங்கள் வீடுகளைத் திறந்தனர், அது அன்பின் செயலாக இருந்தது. அன்பு இல்லாத இடத்தில் மற்றவர்கள் உள்ளே வருவதற்கு கதவு திறந்திருக்காது!
பஸ்கா பண்டிகையை கொண்டாட எருசலேமுக்கு வந்தவர்கள் இரட்சிக்கப்பட்ட பின்னர் ஒருமனப்பட்டு தரித்திருந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். கூடுதலாக, இந்த விசுவாசிகள் யூத மக்களிடமிருந்து துண்டிக்கப்பட்டிருக்கக்கூடும், இதனால் வணிகத்திலும், வேலைவாய்ப்பிலும் இழப்புகளைச் சந்தித்திருக்கக்கூடும். இவை அனைத்தும் பலருக்கு கடுமையான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.
மேலும், பொருளுடைய விசுவாசிகள் தங்களிடம் உள்ளதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருந்தனர். மற்றவர்கள் சாப்பிட உதவுவதற்கு தங்கள் சொத்துக்களை விற்றதை கற்பனை செய்து பாருங்கள்! கிறிஸ்தவ வாழ்க்கை இதுதான் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். மேலும் இது ஒருமுறை மட்டுமே நடந்த விஷயம் அல்ல. அவர்கள் தொடர்ந்து அன்பைக் காட்டினர். அப்போஸ்தலர் 4:32-35ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம், “விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது. கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது. நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவர்களை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.”
ஒரு தேவபக்தியுள்ள சபையானது மக்களின் போராட்டங்களை அறிந்து, நடைமுறை வழிகளில் உதவும் உறுப்பினர்களால் அடையாளப்படுத்தப்பட வேண்டும், [1 யோவான் 3:16-18]. சக விசுவாசிகள் தேவையில் இருப்பதைக் கண்டவுடன், அவர்களால் முடிந்தபோதெல்லாம், உதவுவதற்கு தயங்கவில்லை என்பதை அவர்கள் காட்டினார்கள்., உலக உடைமைகள் தங்களை இயக்கவில்லை; மாறாக உறவுகள் தங்களை இயக்கியது என்று தங்கள் அன்பான செயல்களால் காட்டினார்கள்.
அர்ப்பணிப்பு # 6. ஜெபித்தல்
லூக்கா தனது நற்செய்தியிலும், அப்போஸ்தலருடைய நடபடிகளிலும் ஜெபத்திற்கு அதிக கவனம் செலுத்துகிறார் என்பது நீங்கள் அறிந்திராத ஒன்று. லூக்கா தனது நற்செய்தியில், இயேசுகிறிஸ்துவின் ஜெப வாழ்க்கையின் பெரும் பகுதியையும், ஜெபத்தைப் பற்றிய அவருடைய போதனைகளையும், தொடர்ந்து அப்போஸ்தலருடைய நடபடிகளில் சபையினுடைய ஜெப வாழ்க்கையின் பெரும் பகுதியையும் பதிவு செய்கிறார். அப்போஸ்தலர் 2:42, ஆரம்பகால சபையானது “ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்” என்று கூறுகிறது. இதில் குறிப்பிட்ட ஜெபங்களும், பொதுவான ஜெபங்களும் அடங்கும். ஒருவேளை அவர்கள் ஜெபத்திற்கென்று நேரத்தை நிர்ணயித்திருக்கலாம் [அப்போஸ்தலர் 3:1]. அல்லது அவர்கள் ஜெபம் செய்யாமல் எந்தவொரு செயலையும் செய்யாமல் இருந்திருக்கலாம். ஆரம்பகால திருச்சபையின் உறுப்பினர்களுக்கு ஜெபம் சுவாசம் போல் இருந்தது.
அப்போஸ்தலர்கள் “ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்பதற்கு” தீர்மானித்திருந்தனர் என்று அப்போஸ்தலர் 6:4 கூறுகிறது. பரிசுத்த ஆவியானவர் மக்களை இரட்சிக்க தேவ வார்த்தையைப் பயன்படுத்தாத வரையில் தாங்கள் செய்த அனைத்து பிரசங்கங்களும் பயனற்றவை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். எளிமையாகச் சொன்னால், ஆரம்பகால சபையில் ஜெபிக்கும் தலைமையும், ஜெபிக்கும் உறுப்பினர்களும் இருந்தனர்!
ஆவியானவரின் வல்லமை நம் மூலம் செயல்பட வேண்டும் என்று நாம் ஆசைப்படக்கூடும். ஆனால், நமது தனிப்பட்ட வாழ்க்கையிலும், நாம் சபையாக ஒன்றிணையும் போதும், இடைவிடாமல் ஜெபித்தால் மட்டுமே அப்படி நடக்கும்! சபையின் தலைமை உட்பட அனைவரும் ஜெபத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்கவில்லையென்றால், அந்த சபையை தேவபக்தியுள்ள சபை என்று அழைக்க முடியாது. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் வழக்கமான பிரார்த்தனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டும், அதில் உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும். வருகை குறைவாக இருந்தாலும், சரியான நேரத்தில் இந்தக் கூட்டங்கள் தொடர்ந்து நடைப்பெற வேண்டும். அப்படிப்பட்ட சபையை உருக்கமாக ஜெபிக்கும் சபையாக உருவாகக் கடவுள் அருள்செய்வார்.
அர்ப்பணிப்பு # 7.தேவனைத் துதித்தல்
மக்களை நேசிப்பதில் கிடைமட்ட அர்ப்பணிப்பு இருந்தபோதிலும், ஆரம்பகால சபையானது தேவனை நேசிப்பதிலும் ஒரு செங்குத்து அர்ப்பணிப்பைக் கொண்டிருந்தது. இந்த அன்பு தேவனைத் துதிப்பதில் வெளிப்பட்டது. அப்போஸ்தலர் 2:47 ஆம் வசனத்தின் முதல் பகுதி, அவர்கள் கூடிவந்தப்போது “தேவனைத் துதித்ததை” குறிக்கிறது. அப்போஸ்தலருடைய நடபடிகளில் நாம் பின்னர் வாசிக்கிறபடி, தேவனை நேசிக்கும் இருதயங்களிலிருந்து துதியும், நன்றியின் பாடல்களும், ஜெபமும், துன்பங்களைச் சந்தித்தபோதும், தேவனைத் துதிப்பதை நிறுத்தாத உணர்வும் மேலோங்கி இருந்தது.
ஒரு தேவபக்தியுள்ள சபை ஆராதிக்க ஒன்று கூடும்போது தேவனைத் துதிப்பதற்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும். இசை ஊழியத்தில் ஈடுபடுபவர்கள் தேவ சத்தியத்தை போதிக்கும் பாடல்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஆராதிப்பதானது மக்களை மகிழ்விப்பதற்கான ஒரு வழியாகக் கருதப்படக்கூடாது, மாறாக வேதத்தின் விலைமதிப்பற்ற சத்தியங்களால் நிறைந்த மனதுடன் தேவனைத் துதிக்க வேண்டும். தம்முடைய ஜனங்கள் தம்மைத் துதிக்க ஒன்றுகூடும்போது தேவன் மகிழ்ச்சியடைகிறார்!
அர்ப்பணிப்பு # 8. நற்செய்தியை அறிவித்தல்
நான்கு நற்செய்தி நூல்களும் உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தை வலியுறுத்துகின்றன, அவர் இவ்வுலகை விட்டுச் செல்வதற்கு முன், ஒட்டுமொத்த சபையும், தனிப்பட்ட விசுவாசிகளும் இழந்து போனவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க வேண்டுமென்று கட்டளையிட்டார் [மத்தேயு 28:18-20; மாற்கு 16:15; லூக்கா 24:46-48; யோவான் 20:21].
இழந்து போனவர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதற்காக ஆரம்பகால சபையில் ஒரு தீவிரமான வைராக்கியம் இருந்தது. இதை அப்போஸ்தலர் 2:47 ன் இறுதியில் தெளிவாகக் காணலாம், “இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.” ஒரு நபர் எவ்வாறு இரட்சிக்கப்படுவார்? நற்செய்தியை விசுவாசித்து ஏற்றுக்கொள்வதற்கு முன் அதை கேள்விப்பட்டிருக்க வேண்டும்! இரட்சிக்கப்பட்டதன் விளைவாக சபை தொடர்ந்து வளர்ந்து வந்தது என்று குறிப்பிடப்பட்டிருப்பது, சுவிசேஷத்தை அறிவிக்கும் ஊழியம் சரியாக நடந்துகொண்டிருந்ததை நமக்குச் சொல்கிறது! சபையின் தலைமையும், உறுப்பினர்களும் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதில் தீவிரமாக இருந்தனர். உபத்திரவத்தின் போதும், அவர்கள் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கித்தனர் [அப்போஸ்தலர் 8:4].
அப்போஸ்தலருடைய நடபடிகள் சாட்சிகளாக இருக்க வேண்டும் என்ற அழைப்போடு தொடங்கி [அப்போஸ்தலர் 1:8], ரோமபுரி வரையிலும் நற்செய்தி அறிவிக்கப்படுவதோடு முடிவடைகிறது [அப்போஸ்தலர் 28:30-31]. அது ஏன் அப்படி? அவர்கள் நற்செய்தி அறிவிப்பதில் உறுதியாக இருந்தார்கள்! ஒரு தேவபக்தியுள்ள சபையானது அதன் சுற்றுப்புறத்திலும், மற்ற பட்டணங்களிலும் இழந்து போனவர்களை சுவிசேஷத்தின் மூலம் சந்திக்கும் அர்ப்பணிப்பால் குறிக்கப்பட வேண்டும். [அடுத்த பதிவில் சபையின் ஊழியத்தைப் பற்றி மேலும் பார்ப்போம்.] இழந்து போன நண்பர்களையும், குடும்பத்தினரையும் நற்செய்தியைக் கேட்கும்படி அழைத்து வர மக்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். குடும்ப அங்கத்தினர்கள், நண்பர்கள், அயலவர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களுடன் தாங்களாகவே சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளவும் அவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்!
இழந்து போனவர்களுக்காக ஜெப நேரங்கள் செலவிடப்பட வேண்டும்—நற்செய்தி பகிரப்பட்ட மக்களுக்காகவும், எதிர்காலத்தில் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகளை கர்த்தர் திறப்பதற்காகவும். முன் மாதிரியாக சபையின் தலைமையானது தனிப்பட்ட முறையில் சுவிசேஷப் பணியில் ஈடுபட வேண்டும்.
முதல் பதிவில் பார்த்த 4 அர்ப்பணிப்புகளுடன், ஒரு தேவபக்தியுள்ள சபையின் அடுத்த 4 அர்ப்பணிப்புகளை இந்த பதிவில் பார்த்தோம், அதாவது:
(5) ஒருவரிலொருவர் அன்பாயிருத்தல்
(6) ஜெபித்தல்
(7) தேவனைத் துதித்தல்
(8) நற்செய்தி அறிவித்தல்.