தேவபக்தியுள்ள சபையின் 12 அர்ப்பணிப்புகள்—பகுதி 3

(English version: “12 Commitments of a Godly Church – Part 3”)
இந்த தொடரின் பாகங்கள் 1 மற்றும் 2 ல், ஒரு தேவபக்தியுள்ள சபையின் 12 அர்ப்பணிப்புகளில் முதல் எட்டைப் பார்த்தோம், அதாவது: (1) இரட்சிக்கப்பட்ட அங்கத்தினர் (2) தேவ அறிவில் வளருதல் (3) நியமங்களை கடைப்பிடித்தல் (4) ஐக்கியம் (5) ஒருவரிலொருவர் அன்பாக இருத்தல் (6) ஜெபித்தல் (7) தேவனைத் துதித்தல் (8) நற்செய்தி அறிவித்தல் என்பவைகளாகும். இந்த இறுதி பதிவில், கடைசி 4 அர்ப்பணிப்புகளைப் பார்ப்போம்.
அர்ப்பணிப்பு # 9. தூய்மை
பரிசுத்தரான கிறிஸ்து பரிசுத்தமடைகிற சபையைத் தேடுகிறார். வெளிப்படுத்தல் 2 மற்றும் 3 ஆம் அதிகாரங்கள் தூய்மை பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய, சபைகளில் கிறிஸ்து உலாவுகிற சித்திரத்தை நமக்கு தருகிறது. இது ஆரம்பகால சபையிலேயே தேவன் தொடங்கிய ஒன்று.
அப்போஸ்தலர் 5 ல், பேதுருவிடம் பொய் சொன்ன அனனியா மற்றும் சப்பீராளின் சம்பவம் கூறப்பட்டுள்ளது, மேலும் அவர்கள் கொடுத்தது பரிசுத்த ஆவியானவரோடு தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது. பொய்யையும், மாய்மாலத்தையும் தேவன் எவ்வாறு கண்ணோக்கினார்? என்பதைக் குறித்து அப்போஸ்தலர் 5:3-11 ஆகிய வசனங்கள் விவரிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவை மரணத்தை விவரிக்கிறது! தேவன் மிகவும் கடுமையானவர் அல்லவா? என்று நாம் கேட்கக்கூடும். எல்லாவற்றிற்கும் மேலாக, அது சொற்ப பணத்தைப் பற்றிய ஒரு பொய்யாக இருந்தது. ஆனால் இங்குதான் நம்முடைய தேவன் மிகவும் பரிசுத்தமானவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், அவர் பாவத்தை இரக்கத்துடன் பார்க்க மாட்டார்—அதிலும் குறிப்பாக அவர் தமது குமாரனின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் கொள்ளப்பட்ட சபையில் பாவத்தை இரக்கத்துடன் பார்க்க மாட்டார் [அப்போஸ்தலர் 20:28].
ஒரு தெய்வீகத்தன்மை கொண்டவரால், பாவத்தை ஒரு நாள் அல்லது ஒரு காலத்தினுடைய பிரச்சனை என்று எடுத்துக்கொள்ள முடியாது. உள்ளூர் சபைக்குள் பாவத்தை எவ்வாறு கையாள்வது என்பது மத்தேயு 18:15-20 வசனங்களின் அடிப்படையில் இயேசு கிறிஸ்துவே கோடிட்டுக் காட்டிய செயல்முறையை பின்பற்றப்பட வேண்டும் [1 கொரிந்தியர் 5 மற்றும் 2 தெசலோனிக்கேயர் 3:10-15 ஐயும் பார்க்கவும்]. மனந்திரும்பாதவர்களை சபையிலிருந்து வெளியேற்றும் வேதனையான அனுபவத்தை ஒரு தேவபக்தியுள்ள சபை எதிர்கொள்ளும் நேரங்கள் வரலாம். நான் “வேதனை” என்று சொல்வதற்கு காரணமென்னவென்றால், உணர்வடையாத பாவத்தை கையாளும் போது மகிழ்ச்சி இருக்கமுடியாது. இருப்பினும், தூய்மையைப் பேணுவதற்கு கர்த்தர் நமக்குக் கட்டளையிடுவதைச் செய்வதில் நாம் ஒருபோதும் வருத்தமடைய கூடாது, ஏனென்றால் அவருடைய சபைக்கு எது சிறந்தது என்பதை அவர் அறிந்திருக்கிறார். கிறிஸ்துவைக் கேள்வி கேட்பது அல்ல, அவருடைய கட்டளைகளுக்கு முழு மனதுடன் அடிபணிவதுதான் நமது பங்கு.
அர்ப்பணிப்பு # 10. தேவபக்தியுள்ள தலைமைத்துவம்
ஆரம்பகால சபைக்கு அப்போஸ்தலர்கள் தலைவர்களாக இருந்தனர்—அவர்களில் 11 பேர் இயேசுகிறிஸ்துவால் நேரடியாகவும் 12 வதாக மத்தியா என்பவர் ஜெபத்தின் மூலமாயும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் [அப்போஸ்தலர் 1:23-26]. எனவே, இவர்கள் தலைமைக்கு தகுதியானவர்கள். சபை வளர வளர, தலைமைக்கான தேவையும் வளர்ந்தது. பவுல் சபைகளை நிறுவுகையில், அப்போஸ்தலர் 14:23 ல் கூறுகிறபடி , தலைவர்களை வளர்ப்பதில் உறுதியாக இருந்தார், “பவுலும் பர்னபாவும் அந்தந்தச் சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்திவைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்.”
ஏழைகளுக்கும், விதவைகளுக்கும் உணவு விநியோகம் போன்ற பல்வேறு ஊழியங்களில் இணைந்து செயல்படுவோரும் கூட, தகுதியானவர்களாக இருக்க வேண்டும் என்று பன்னிரு சீடர்களும் வலியுறுத்தியுள்ளனர். அப்போஸ்தலர் 6:3 ஆம் வசனம் இவ்வாறு நமக்குச் சொல்கிறது, “ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்.” பொறுப்புகள் எல்லாருக்கும் வழங்கப்படாமல் “ஆவியால் நிறைந்த” மனிதர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. மூப்பர்கள் என்று பின்னர் அறியப்படும் பொறுப்பின் ஆரம்ப நிலைகள் இங்கே காணப்படுகிறது. ஒரு சபையானது அதன் தலைமையைவிட மேலானதாக இருக்கமுடியாது. எனவே, ஒரு ஸ்தல சபையானது தேவபக்தியுள்ள மனிதர்களால் வழிநடத்தப்பட வேண்டும்.
கண்காணிகளுக்கான தகுதிகள் 1 தீமோத்தேயு 3:1-7, தீத்து 1:6-9 மற்றும் 1 பேதுரு 5:1-3 ஆகிய வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. மூப்பர்களுக்கான தகுதிகள் 1 தீமோத்தேயு 3:8-13 ல் விவரிக்கப்பட்டுள்ளன. ஒரு தேவபக்தியுள்ள சபையானது, தேவனால் அழைக்கப்பட்ட, அர்ப்பணிப்புடன் தயாராக இருக்கும் (போதகர்கள் என்றும் அழைக்கப்படுபவர்கள்) மனிதர்களை கர்த்தர் எழுப்ப விரும்ப வேண்டும். மந்தையை வழிநடத்துதல், போஷித்தல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகளுக்கு அவர்கள் தங்களைக் கொடுக்க தயாராக இருக்க வேண்டும். ஒரு தேவபக்தியுள்ள சபை போதகர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற ஆதரிக்கும் மூப்பர்களை வளர்க்க முயல வேண்டும். கர்த்தர் தமது விருப்பப்படி, தம் காலத்தில் இந்த பொறுப்புகளுக்குத் தகுந்த ஆட்களை எழுப்புவார்.
அர்ப்பணிப்பு # 11. தூதுபணிகள்
“பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” என்று தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு இயேசுகிறிஸ்து கட்டளையிட்டதை அப்போஸ்தலர் 1:8 ஆம் வசனம் பதிவு செய்கிறது. அதுதான் துல்லியமாக நடந்தது! ஆரம்பகால சபையானது தங்கள் ஊரில் நற்செய்தி அறிவிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் மற்ற இடங்களுக்கும் கொண்டு செல்வதில் கவனம் செலுத்தியது. நற்செய்தி சமாரியாவுக்கு கொண்டு வரப்பட்டதற்கான பதிவை அப்போஸ்தலர் 8 ஆம் அதிகாரம் தருகிறது. இது உபத்திரவத்தின் காரணமாக நடந்தது என்பது ஒப்புக்கொள்ளத்தக்கது என்றாலும், சிதறிப்போனவர்கள் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொண்டனர் [அப்போஸ்தலர் 8:4].
பின்னர் அப்போஸ்தலர் 10 அதிகாரத்தில், பேதுரு ஒரு புறஜாதியான கொர்நேலியுவுக்கு நற்செய்தி அறிவிக்க செல்கிறார்; இவ்வாறு, புறஜாதி சபை பிறந்தது. அப்போஸ்தலர் 13 அதிகாரம் உலகளாவிய தூதுபணிகளின் அதிகாரப்பூர்வ தொடக்கத்தை பதிவு செய்கிறது. அப்போஸ்தலர் 13:1-3 ஆகிய வசனங்கள் இவ்வாறு கூறுகிறது, “அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள். அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியினவர் திருவுளம்பற்றினார். அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்.” அப்போஸ்தலர் புத்தகம் முடியும் தருவாயில் நற்செய்தியானது ரோமாபுரி வரை சென்றடைந்தது [அப்போஸ்தலர் 28], இது தற்செயலாக நடந்ததல்ல. பூமியின் எல்லா முனைகளுக்கும் நற்செய்தியை எடுத்துச் செல்லும் கட்டளையை மிகத் தீவிரமாக, வைராக்கியமாக கொண்ட ஆரம்பகால விசுவாசிகளின் மூலம் தேவனுடைய கிருபையால் இது நடந்தது [அப்போஸ்தலர் 1:8].
ஒரு தேவபக்தியுள்ள சபையானது சபைகளை நிறுவுதல், வேதாகம மொழிபெயர்ப்புப் பணிகள் போன்ற அருட்பணியை தாங்குவதற்கு நிதியை ஆர்வத்துடன் ஒதுக்க வேண்டும்—முடிந்தால் தாராளமாக! கிறிஸ்தவ அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் அருட்பணியாளர்களுக்கு ஆதரவளிப்பதின் மூலம் சிறு குழந்தைகளுக்கு நற்செய்தி அறிவிக்க உதவ முடியும். ஒரு தேவபக்தியுள்ள சபையானது மற்ற இடங்களுக்கு நற்செய்தியை எடுத்துச் செல்ல விருப்பமும், அழைப்புமுள்ள அருட்பணியாளர்களை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பிரசங்கங்களும் ஊக்கமான ஜெபமும், தூதுபணிகளுக்கு தேவன் எவ்வளவு அதிக முன்னுரிமை அளிக்கிறார் என்பதை மக்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதன் மூலம் கடவுளின் விருப்பத்தை சபையின் தலைமை நிறைவேற்ற முடியும்.
அர்ப்பணிப்பு #12. தேவனுக்கு பயப்படுதல்
இந்த 12 அர்ப்பணிப்புகளில் ஆரம்பகால சபை வெளிப்படுத்திய தேவ பயமானது கடைசியானதாக இருந்தாலும், அது எந்த வகையிலும் குறைவானது அல்ல. தேவ பயம்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. ஆனால், ஸ்தல சபையென்று வரும்போது அது ஏன் மாறுபட்டிருக்க வேண்டும்?
ஆரம்பகால சபையை மிகவும் உபத்திரவப்படுத்தியவர்களில் ஒருவரான பவுலின் மனமாற்றத்தைத் தொடர்ந்து, அப்போஸ்தலர் 9:31-ல் இவ்வாறு நாம் வாசிக்கிறோம்: “அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின.” அனனியா மற்றும் சப்பீராள் ஆகியோரின் பாவத்தோடு தேவன் இடைப்பட்டதை விளக்கும் அப்போஸ்தலர் 5:11 லும் “சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று” என்று வாசிக்கிறோம்.
சபையானது பயபக்தியோடும் பிரமிப்போடும் தேவன் முன் நடுங்காவிட்டால், அவர் பயப்படத்தக்கவர் என்றும், மக்கள் அவரிடம் திரும்ப வேண்டும் என்று உலகத்திற்கு எவ்வாறு எடுத்துரைக்கும்? தேவனுக்குப் பயப்படுதல் என்பது வழக்கொழிந்ததும், காலாவதியான விஷயமாகவும் பார்க்கப்படும் இந்த நாட்களில், சபையானது தேவனுக்கு பயந்து நடக்க வேண்டியது அவசியம். அவர் பரிசுத்தமானவர், அவருடைய கோபம் அஞ்சப்படத்தக்கது. பாவம், குறிப்பாக சபைக்குள் இருக்கும் பாவமானது தேவனின் பார்வையில் மிகவும் அருவருப்பானது. தேவன் பாவத்தை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார். 2000 ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் பாவத்தைக் குறித்து தமது பார்வையை மாற்றிக்கொள்ளவில்லை.
அனனியாவும் சப்பீராளும் நினைவிலிருக்கிறார்களா? 1 கொரிந்தியர் 11ல் உள்ள கொரிந்திய சபையை நினைவில் கொள்ளுங்கள், அங்கு மனந்திரும்பாமல், பாவத்துடன் கர்த்தருடைய இராப்போஜனத்தில் பங்குகொண்ட விசுவாசிகள் மரித்தனர் [11:30]. இந்த செயல்கள் தேவனுக்கு பயந்து நடக்க நமக்கு உதவ வேண்டும். தேவ பயம் எப்போதாவது ஒருமுறை மட்டும் இருக்கக் கூடாது, அது சபையின் தொடர்ச்சியான அணுகுமுறையாக இருக்க வேண்டும். சபையின் அங்கத்தினர்கள் என்ன பேசுகிறார்கள், என்ன பார்க்கிறார்கள், எதைப் பின்தொடர்கிறார்கள், தங்கள் இருதயங்களில் என்ன நினைக்கிறார்கள் என்பதில் சாட்சியாக இருக்க வேண்டும். இது தனிப்பட்ட நபருக்கும், தேவனுக்கும் மட்டுமே தெரியும். நீதிமொழிகள் 28:14 ஆம் வசனம் இவ்வாறு கூறுகிறது, “எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்.” எல்லா நேரங்களிலும் ஒரு தேவபக்தியுள்ள சபையின் ஒவ்வொரு உறுப்பினரின் மனப்பான்மையும் அதுவாக இருக்க வேண்டும்—அது அதன் தலைமைத்துவத்தில் தொடங்கப்பட வேண்டும்.
எனவே, ஒரு தேவபக்தியுள்ள சபையின் 12 அர்ப்பணிப்புகளை நாம் பார்த்தோம்:
(1) இரட்சிக்கப்பட்ட அங்கத்தினர்
(2) தேவ அறிவில் வளர்தல்
(3) நியமங்களைப் கடைப்பிடித்தல்
(4) ஐக்கியம்
(5) ஒருவரிலொருவர் அன்பாக இருத்தல்
(6) ஜெபித்தல்
(7) தேவனைத் துதித்தல்
(8) நற்செய்தி அறிவித்தல்
(9) தூய்மை
(10) தேவ பக்தியுள்ள தலைமை
(11) பணிகள் மற்றும்
(12) தேவனுக்குப் பயப்படுதல்.
“என் இயேசுவே நான் உம்மை நேசிக்கிறேன்” [My Jesus, I love Thee] என்ற ஒரு பழமையான ஆங்கிலப் பாடல் ஒன்று உண்டு. அது எனக்கு தனிப்பட்டவிதத்தில் விருப்பமான பாடல். “நாம் இயேசுகிறிஸ்துவை நேசிக்கிறோம்” என்று சொல்லும்போது, அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தால் கிரயத்திற்கு கொள்ளப்பட்ட சபையையும் நேசிக்க வேண்டும். இயேசுகிறிஸ்து தமது சபையைக் கட்டுவதாக வாக்களித்துள்ளார் [மத்தேயு 16:18]. பாதாளத்தின் வாசல்கள் ஒருபோதும் மேற்கொள்ள முடியாது. அன்புள்ள வாசகரே, வேதத்தை விசுவாசிக்கிற, வேதத்தை பிரசங்கிக்கிற உங்கள் ஸ்தல சபைக்கான உங்கள் அர்ப்பணிப்பை எதிர்காலத்தில் இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்வீர்களா? நீங்கள் தலைமைப் பொறுப்பில் இருந்தால், இயேசு கிறிஸ்து மூலம் தேவன் உங்களை [எபிரெயர் 3:20-21] அமர்த்தியுள்ள சபையில் அவர் மகிமைப்படும்படி வழிநடத்த உதவுமாறு தேவனிடம் மன்றாடுவீர்களா? உங்கள் முயற்சிகளை கைவிடாதீர்கள். அவர் எல்லா கனத்திற்கும் பாத்திரர்!