நமது சபைகளிலும், தனிப்பட்ட வாழ்விலும் ஜெபத்திற்கு அதிக முன்னுரிமை அளித்தல்

(English version: “Giving Prayer A Higher Priority In Our Churches And In Our Personal Lives”)
“ஞாயிற்றுக்கிழமை காலை ஆராதனைக்கு வருபவர்களை வைத்து ஒரு சபை எவ்வளவு பிரபலமானது என்பதை நீங்கள் சொல்லிவிடலாம், ஞாயிற்றுக்கிழமை இரவு ஆராதனைக்கு வருபவர்களால் ஒரு போதகர் அல்லது சுவிசேஷகர் எவ்வளவு பிரபலமானவர் என்பதை நீங்கள் கூறிவிடலாம் என்று சொல்வதுண்டு. ஆனால் இயேசு எவ்வளவு பிரபலமானவர் என்பதை நீங்கள் ஜெபக் கூட்டத்திற்கு வருகிறவர்களை வைத்து தான் கூற முடியும்.” எனவே, ஒவ்வொரு விசுவாசியின் கேள்வி இதுதான்: “நான் கலந்துகொள்ளும் சபையில் இயேசுகிறிஸ்து எவ்வளவு பிரதானமானவர்?” மேலும் நம்முடைய சபைகளில் இயேசுகிறிஸ்து பிரதானமானவராக இருக்க, அவர் முதலில் நம் சொந்த வாழ்க்கையில் பிரபலமாக இருக்க வேண்டும். வேறுவிதமாகக் கூறுவதென்றால், நம் தனிப்பட்ட ஜெப வாழ்க்கையானது சபையின் ஜெப வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஒருவேளை ஜெபத்தைப் பற்றிய இந்தக் குறிப்புகள் அனைத்தும் அப்போஸ்தலர் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது, வரும் நாட்களில் இது ஜெபத்திற்கு அதிக முன்னுரிமை கொடுத்து இயேசுகிறிஸ்துவை பிரபலப்படுத்த நம் சபைகளையும் நம்மையும் ஊக்குவிக்கும்.
அப்போஸ்தலர் 1:14 “அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.”
அப்போஸ்தலர் 1:24-25 “எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்குபெறுவதற்காக, இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி”
அப்போஸ்தலர் 2:42 “அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.”
அப்போஸ்தலர் 3:1 “ஜெபவேளையாகிய ஒன்பதாம்மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள்.”
அப்போஸ்தலர் 4:24, 29, 31 “24 அவர்கள் அதைக் கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர்.” 29 இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து, 31 அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.”
அப்போஸ்தலர் 6:3-4 “ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம். நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.”
அப்போஸ்தலர் 6:6 “அவர்களை அப்போஸ்தலருக்குமுன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்.”
அப்போஸ்தலர் 7:60 “அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்.”
அப்போஸ்தலர் 8:15-16 “இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்தஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு, அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி.”
அப்போஸ்தலர் 8:22-24 “ஆகையால் நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம். அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.”
அப்போஸ்தலர் 9:11 “அப்பொழுது கர்த்தர்: நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்.”
அப்போஸ்தலர் 9:40 “பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, பிரேதத்தின் புறமாய்த் திரும்பி: தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள்.”
அப்போஸ்தலர் 10:2 “அவன் தேவபக்தியுள்ளவனும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தான்.”
அப்போஸ்தலர் 10:9 “மறுநாளிலே அவர்கள் பிரயாணப்பட்டு, அந்தப் பட்டணத்துக்குச் சமீபித்து வருகையில், பேதுரு ஆறாம் மணிநேரத்தில் ஜெபம்பண்ணும்படி மேல் வீட்டில் ஏறினான்.”
அப்போஸ்தலர் 12:5 “அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்.”
அப்போஸ்தலர் 13:2-3 “அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார். அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்.”
அப்போஸ்தலர் 14:23 “அல்லாமலும் அந்தந்தச் சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்திவைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்.”
அப்போஸ்தலர் 16:13 “ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.”
அப்போஸ்தலர் 16:16 “நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.”
அப்போஸ்தலர் 16:25 “நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.”
அப்போஸ்தலர் 20:36 “இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்காற்படியிட்டு, அவர்களெல்லாரோடுங்கூட ஜெபம்பண்ணினான்.”
அப்போஸ்தலர் 21:5 “அந்த நாட்கள் நிறைவேறினபின்பு, நாங்கள் புறப்பட்டுப்போகையில், அவர்களெல்லாரும் மனைவிகளோடும் பிள்ளைகளோடுங்கூடப் பட்டணத்துக்குப் புறம்பே எங்களை வழிவிட்டனுப்பும்படி வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணினோம்.”
அப்போஸ்தலர் 27:29, 35 “29பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, பின்னணியத்திலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு, பொழுது எப்போது விடியுமோ என்றிருந்தார்கள். 35 இப்படிச் சொல்லி. அப்பத்தை எடுத்து, எல்லாருக்குமுன்பாகவும் தேவனை ஸ்தோத்தரித்து, அதைப் பிட்டுப் புசிக்கத்தொடங்கினான்.”
அப்போஸ்தலர் 28:8 “புபிலியுவினுடைய தகப்பன் ஜுரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டுக் கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம்பண்ணி, அவன்மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினான்.”
தனிப்பட்ட மற்றும் கூட்டு ஜெபத்தின் 25 க்கும் மேற்பட்ட குறிப்புகளை நாம் பார்த்தோம். அதன்படி, ஆதி கிறிஸ்தவர்களுக்கு ஜெபம் மிகவும் முக்கியமானதாக இருந்தது. சபையும் அதன் உறுப்பினர்களும் இவ்வளவு வல்லமையுள்ளவர்களாக இருந்ததில் ஆச்சரியமில்லை, ஏனென்றால் அவர்கள் ஜெபத்திற்கு அதிக முன்னுரிமை அளித்தனர்!
எனவே, நம்முடைய சொந்த வாழ்க்கையிலும் நமது ஸ்தலசபையிலும் எவ்வாறு தொடர்ச்சியான ஜெபத்தை முன்னுரிமையாக மாற்றுவது? பால் மில்லர் “ஒரு ஜெப வாழ்க்கை” என்ற தனது புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார், “தொடர்ந்து ஜெபிக்க உங்களுக்கு சுய கட்டாயம் தேவையில்லை; நீங்கள் ஆவியில் எளிமையாக இருக்க வேண்டும்.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜெபம் செய்ய தூண்டப்படுவதற்கு, அதிக சுய கட்டாயத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை [அதற்கு மதிப்பு இருந்தாலும்]. மாறாக, நாம் உண்மையில் எவ்வளவு தேவையில் இருக்கிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்!
நாம் ஆவியில் எவ்வளவு எளிமையாக இருக்கிறோமோ—அதாவது, நாம் எப்படி ஆவிக்குரியரீதியில் திவாலாகி இருக்கிறோமோ என்பதைப் புரிந்துகொண்டு, எல்லாவற்றுக்கும் கர்த்தர் எவ்வளவு அவசியமானவராக இருக்கிறாரோ, அவ்வளவு அதிகமாக நாம் முழங்காலில் நின்று ஜெபத்தில் அவரை நோக்கிப் பார்ப்போம். தனிப்பட்ட விதமாகவும், ஒரு சபையாகவும். தேவன் செயல்பட்டாலொழிய, நிலையான ஆவிக்குரிய தன்மைகள் எதுவும் நடக்காது. என்ற சத்தியத்தை ஆணித்தரமான உணரும்போது நமது முயற்சிகளை விடுத்து தேவனை செயல்பட அனுமதிக்கிறோம். தம்முடைய மக்களின் வாழ்வில் வல்லமையாக செயல்பட உண்மையாக முயன்றால், நமது மனித முயற்சிகள் அனைத்தும் தேவன் செய்ய நினைப்பதை ஒருபோதும் தடுக்க முடியாது.
“இயேசுவைப் போல ஜெபிக்கும் எஜமானருக்கு ஜெபிக்காத வேலையாட்கள் இருக்க முடியாது!” என்ற வார்த்தைகள் எவ்வளவு துல்லியமானவை. சுவீகார புத்திர ஆவி ஒரு நபரை எப்போதும் தேவனை பிதாவே என்று அழைக்கச் செய்யும். தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாக, எதிர்காலத்தில் ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதின் மூலம், நம்முடைய சபைகளிலும், நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் இயேசுவை பிரதானப்படுத்த உதவுவாராக.