நம் பிதாவாகிய தேவனால் சுவீகரிக்கப்பட்டதினால் வரும் 4 ஆசீர்வாதங்கள்

(English Version: “4 Blessings of Being Adopted by God Our Father”)
தேவனை “பிதா” என்று அழைக்கும் செயல்முறையை வேதம் “புத்திரசுவீகாரம்” என்று அழைக்கிறது. இது நாம் அனுபவிக்கும் மிக உயர்ந்த பாக்கியம்- நீதிமானாக்கப்படுதலை விடவும் மேலானது. நாம் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்போது, நம் குற்றத்திலிருந்து தேவன் நம்மை விடுவிக்கும் செயல்முறையே நீதிமானாக்குதல். நீதிமானாக்குதல் என்பது தேவனை ஒரு நீதிபதியாகக் கருதும் சட்டப்பூர்வமான சொல். இது தேவனின் பரிசுத்த சட்டத்தின் முன் நம் நிலைப்பாட்டுடன் தொடர்புடையது.
புத்திரசுவீகாரம் அல்லது தத்தெடுப்பு என்பது, ஒரு குடும்பம் சார்ந்த சிந்தனை. ஒரு எழுத்தாளரின் கூற்றுப்படி, “சுவீகாரம் என்பது தேவன் நம்மை தமது குடும்ப உறுப்பினர்களாக மாற்றும் செயல்முறையாகும்.” புத்திரசுவீகாரம் தேவனை ஒரு தகப்பனாக கருதுகிறது, இதனால் இவ்வார்த்தை நெருக்கம், பாசம் மற்றும் பெருந்தன்மை ஆகியவற்றைக் குறிக்கிறது. மற்றொரு எழுத்தாளர் இவ்வாறு கூறுகிறார், “நீதிபதியாகிய தேவனுடைய பார்வையில் நீதியாக இருப்பது ஒரு பெரிய காரியம், ஆனால் பிதாவாகிய தேவனால் நேசிக்கப்படுவதும் கவனிக்கப்படுவதும் அதை விட பெரிய காரியம்.” இந்த கருத்தை நன்கு புரிந்துகொள்ள பின்வரும் எடுத்துக்காட்டு உதவும்.
யாரோ ஒருவர் உங்கள் மகனைக் கொன்றதால், சிறையில் தள்ளப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்த மனிதனை மன்னித்து அவனை விடுதலை செய்கிறீர்கள் என்றால் அதுவே பெரிய விஷயமாக இருக்கும். ஆனால் நீங்கள் அத்துடன் நிற்காமல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அந்த கொலையாளியை நீங்கள் தத்தெடுத்து, அவனை உங்கள் சொந்த மகனாக்கி, உங்கள் மகனுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளையும் அவனுக்கு வழங்குங்கள்! அது எப்படி இருக்கும்? மக்கள் உங்களை பைத்தியம் என்று கூட அழைக்கலாம்! ஆனால் அது உங்கள் அன்பின் உயரத்தைக் காட்டும்! அது மட்டுமின்றி, உங்களது அருமை மகனைக் கொன்றவன் அனுபவிக்கும் ஆசீர்வாதத்தின் உச்சத்தையும் அது காட்டும்.
இது நீதிமானாக்குதலையும், சுவீகாரத்தையும் பற்றிய வேதத்தின் சித்திரமாக இருக்கிறதல்லவா? தேவன் மனிதர்களை நீதிமானாக்காமல் விட்டுவிட்டிருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. நீதிமானாக்குதலெனும் ஆசீர்வாதத்திற்கு பிறகு நமக்கு இன்னும் ஓர் சிறந்த ஆசீர்வாதமாகிய புத்திர சுவீகாரத்தைக் கொடுத்தார், அதன் மூலம் அவர் நம்மை தமது குமாரர்களாகவும், குமாரத்திகளாகவுமாக்கினார். அதனால்தான் தத்தெடுப்பது நீதிமானாக்குதலை விட கற்பனைக்கெட்டாத ஒரு ஆசீர்வாதமாக இருக்கிறது.
தேவன் நம்முடைய பிதா என்ற கருத்து பழைய ஏற்பாட்டிலும் காணப்படுகிறது [யாத்திராகமம் 4:22, சங்கீதம் 103:13, ஏசாயா 64:8]. எவ்வாறாயினும், சுவீகாரத்தைப் பற்றிய கருத்து நமக்கு இப்படி மிகவும் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டதால், புதிய ஏற்பாட்டில் தேவனின் தந்தைத்துவத்தை முழு அர்த்தத்தில் பார்க்கிறோம். சுவீகாரம் அல்லது தத்தெடுப்பு என்று மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தையானது பவுலின் கடிதங்களில் 5 முறை காணப்படுகிறது [ரோமர் 8:15, 23; 9:5, கலாத்தியர் 4:5, எபிரெயர் 1:5].
தேவன் நம்மை சுவீகாரம் செய்தது அவருக்கு ஒரு தேவை இருந்ததாலோ அல்லது நம்மில் ஏதாவது நன்மையைக் கண்டதாலோ அல்ல. நம்மிடம் அவர் கண்டதெல்லாம் அவருக்குப் புறமுதுகு காட்டிய கலக குணத்தை தான். இருப்பினும், அவர் நம்மை சுவீகாரம் செய்தார், ஏனென்றால் பரிசுத்தமான அன்பினால் அவர் அவ்வாறு செய்தார் [எபிரெயர் 1:4-5]. அத்தகைய அன்பு மனித புரிதலுக்கு அப்பாற்பட்டது!
அத்தகைய அன்பு, நமக்கு சுவீகாரத்தைக் கொண்டுவந்து, குறைந்தபட்சம் 4 நடைமுறை ஆசீர்வாதங்களை விளைவிக்கிறது.
ஆசீர்வாதம் #1. புத்திரசுவீகார செயல் தேவனை நம் பிதா என்று அழைக்க உதவுகிறது.
“அப்பா, பிதாவே” என்ற வார்த்தை, தேவனை தமது பிதா என்று அழைக்கும் போது இயேசுகிறிஸ்துவால் பயன்படுத்தப்பட்டது [மாற்கு 14:36]. பரிசுத்த ஆவியின் உள்ளார்ந்த பிரசன்னத்தின் மூலம் தேவனை “அப்பா, பிதா” [கலா 4:6] என்று நாமும் அழைக்கலாம். நித்தியத்திற்கும் நீடிக்கும் ஒரு அற்புதமான புதிய உறவு தற்போது நிறுவப்பட்டுள்ளது. நாம் நேசிக்கப்படுகிறோம், நன்கு கவனித்துக் கொள்ளப்படுகிறோம், நம்முடைய இந்த அற்புதமான பரலோகத் தகப்பனிடமிருந்து ஒருபோதும் பிரிக்கப்பட மாட்டோம்!
ஆசீர்வாதம் #2. புத்திரசுவீகார செயல் நமது ஜெப வாழ்க்கையை வளமாக்குகிறது.
நாம் ஜெபிக்கும்போது தேவனை “பரலோகத்திலுள்ள எங்கள் பிதாவே” என்று அழைக்க இயேசுகிறிஸ்து நமக்குக் கற்றுக் கொடுத்தார் [மத் 6:9]. இந்த நெருக்கம் நம் பிதாவாகிய தேவனை அணுகுவதற்கு நமக்கு உதவுகிறது, ஏனென்றால் அவர் நம்மீது அக்கறை காட்டுகிறார். நாம் கவலையிலிருந்தும், குற்ற உணர்விலிருந்தும் விடுபடலாம். நம்முடைய எல்லா பாவங்களையும் நாம் அறிக்கையிடும்போது அவர் மன்னிக்கிறார். அன்பான தகப்பன் எப்போதும் தன் பிள்ளைகளின் ஜெபங்களைக் கேட்பான்.
ஆசீர்வாதம் # 3. புத்திரசுவீகார செயல் எதிர்காலத்திற்கான நமது நம்பிக்கையை பலப்படுத்துகிறது.
ரோமர் 8:23-25 வரையுள்ள வசனங்களில் பவுல் இவ்வாறு கூறுகிறார், அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திர சுவீகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம். அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம். சாராம்சத்தில், சுவீகாரத்தின் முழுமையான அனுபவமானது, நாம் மகிமையின் சரீரங்களைப் பெறும்வரை, தற்போதைய சோதனைகளை திடமான நம்பிக்கையுடன் சகித்துக்கொள்ள உதவுவதாக பவுல் கூறுகிறார்.
2 கொரிந்தியர் 1:22-ன்படி, “அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்.” “முத்திரித்து” என்ற சொற்றொடர், எதிர்காலத்தில் என்றென்றும் நம் மகிமைப்படுத்தப்பட்ட நிலையில் தேவனுடன் இருப்பதைக் குறிக்கிறது. இந்த சத்தியம் நம் நம்பிக்கையையும் பலப்படுத்துகிறது.
ஆசீர்வாதம் # 4. புத்திரசுவீகார செயல் நம் பரலோகத் தகப்பனிடம் சிட்சையை ஏற்றுக்கொள்ள உதவுகிறது.
எபிரெயர் 12:5-6 இவ்வாறு கூறுகிறது, “அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.” மேலும் இந்த நிருபத்தின் எழுத்தாளர் 4 ஆம் வசனத்தில், “நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?” சாராம்சத்தில், நாம் தேவனின் பிள்ளைகள் என்பதால், அவர் நம்மை சிட்சிக்கிறார் என்று எபிரெயர் எழுத்தாளர் கூறுகிறார். அது ஒரு நல்ல விஷயம்! நாம் அவருடைய பிள்ளைகள் என்பதை இது காட்டுகிறது! இந்த சிட்சிக்கும் செயல்முறையின் இறுதி இலக்கு எபிரெயர் 12:10-ல் கூறப்பட்டுள்ளது, “இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.”