நரகத்தைக் குறித்த உண்மைகள் மற்றும் ஆலோசனைகள் – பகுதி 1

(English Version: Hell – Its Realities and Implications – Part 1)
சபைகளில் இன்றைக்கு நரகமானது ஒரு பிரபலமான பிரசங்க குறிப்பாக காணப்படுவது கிடையாது. இருப்பினும், இது ஒரு முக்கியமான பிரசங்க தலைப்பு, ஏனென்றால் வேதமானது நரகத்தைப் பற்றி அதிகம் கூறுகிறது. ஒரு தலைப்பு நமக்கு வசதியாக இருக்கிறதா அல்லது சங்கடமாக இருக்கிறதா என்பது பிரச்சனையல்ல, ஆனால் நம்முடைய நித்திய நன்மைக்காக தொடர்ந்து சிந்திக்க வேண்டிய கடினமான உண்மைகளைப் பற்றியதான பிரச்சனையாகும்.
நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிரசங்கியாராகிய ஜே.சி. ரைல் என்பவர், நரகத்தைப் பற்றி இப்படி எழுதுகிறார், “அக்கினியை பார்த்துக்கொண்டு அமைதி காக்கும் காவல்காரன் அதை அலட்சியப்படுத்திய குற்றத்திற்கு ஆளாவான். ஒருவர் மரித்துக்கொண்டிருக்கையில் சுகமாகிவிடுவீர்கள் என்று கூறும் மருத்துவர் ஒரு சரியான மருத்துவர் அல்ல, மாறாக அவர் ஒரு பொய்யர். தனது பிரசங்கங்களில் விசுவாசிகளுக்கு நரகத்தைப் பற்றி எடுத்துரைக்காத ஒரு ஊழியன் ஒரு உண்மையான ஊழியனோ அல்லது சேவை செய்யும் மனிதனோ அல்ல.”
நான் உண்மையுள்ளவனாகவும், ஊழியம் செய்பவனாகவும் [அன்பானவனாகவும்] இருக்க விரும்புவதால், நரகத்தின் 4 உண்மைகளையும், இந்த உண்மைகளின் விளைவாக ஏற்பட்ட குறிப்பிட்ட தாக்கங்களை விவரிப்பதன் மூலம் நரகத்தின் விஷயத்தைப் பற்றி பேச விரும்புகிறேன்.
உண்மை#1. நரகம் ஒரு உண்மையான இடம்.
ஒருவர் நரகத்தை நம்பாததால், அது இல்லாமல் போய்விடாது. அது ஒரு உண்மையான இடம். அப்படி ஒரு உண்மையான இடம் இல்லையென்றால், இயேசு கிறிஸ்து நம்மை எச்சரிப்பது மட்டுமல்லாமல், நாம் அங்கு செல்லாதபடி நமக்காக மரிக்க ஏன் இந்த உலகிற்கு வந்தார்? மத்தேயு 10:28ல், இயேசு இவ்வாறு நம்மை எச்சரிக்கிறார், “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.” நரகம் என்ற ஒன்றில்லை என்றால் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். நாம் பரலோகத்தை விசுவாசித்தால், நரகத்தையும் விசுவாசிக்க வேண்டும்—தேவனின் பரிசுத்தமான மற்றும் நீதியான இயல்பு, பாவமானது சிலுவையின் மூலமாகவோ அல்லது ஒரு தனிமனிதன் மூலமாகவோ தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
மரிக்கும் போது, நாம் உடனடியாக இரண்டு இடத்தில் ஒரு இடத்திற்குச் செல்கிறோம்: விசுவாசி பரலோகம் செல்கிறார். அவிசுவாசி முதலில் ஹதீஸ் [துன்பத்தின் இடம்] என்று அழைக்கப்படும் இடத்திற்குச் செல்கிறார், பின்னர் நியாயத்தீர்ப்பு நாளில் நரகத்தில் தள்ளப்படுவார். பரலோகம் எப்படி ஒரு உண்மையான இடமோ, அதே போன்று நரகமும் ஒரு உண்மையான இடமாகும்.
உண்மை #2. நரகம் நித்தியமான வேதனையின் இடம்.
1. இது ஒரு நித்தியமான இடம்.
மத்தேயு 25:46 ல், இயேசு இவ்வாறு கூறுகிறார், “அந்தப்படி, இவர்கள் [அதாவது, பொல்லாதவர்கள்] நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள்.” பரலோகம் மற்றும் நரகம் இரண்டும் நித்தியமானவை, ஏனெனில் இரண்டு இடங்களையும் விவரிக்க ஒரே வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. “நித்தியம்” என்று கூறுகையில் பரலோகத்திற்கு “என்றென்றும்” என்றும், நரகத்திற்கு ”தற்காலிகமானது” என்றும் சொல்ல முடியாது.
2. இது வேதனைக்குரிய இடம்.
நரகம் ஒரு அக்கினி சூளை என்று விவரிக்கப்படுகிறது, மத்தேயு 3:12 இல் யோவான் ஸ்நானகன், நரகத்தை “அவியாத அக்கினி” என்று விவரிக்கிறார். மாற்கு 9:43-ல் இயேசுகிறிஸ்து, “உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.” என்று கூறுகிறார்.
மாற்கு 9:47-48-ல், இயேசுகிறிஸ்து இவ்வாறு கூறுகிறார், “47 உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய், நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். 48 அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்.”
2 தெசலோனிக்கேயர் 1:7-8 ஆகிய வசனங்களில் பவுல் இவ்வாறு எழுதுகிறார், “7 தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, 8கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜூவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.”
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நிராகரித்த அனைவரின் இறுதி முடிவை வேதத்தின் கடைசி புத்தகம் இவ்வாறு விவரிக்கிறது – இது வேதனைக்குரிய இடம்: “14 அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். 15 ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.“ [வெளிப்படுத்தல் 20:14-15].
இந்த வசனங்கள் அனைத்தும் நரகத்தை வேதனைக்குரிய இடம் என்று தெளிவாக விவரிக்கிறது.
3. மக்கள் வேதனைகளை உணரும் இடம்.
நரகம் என்பது வேதனையை உணரும் இடம். ஒருவருக்கு நரகத்தில் உணர்வுகள் இருக்கும். இருப்பினும், அவை நிலையான முடிவில்லா வேதனையின் உணர்வுகளாக மட்டுமே இருக்கும் – எந்த ஒரு தளர்வும் இருக்காது. வேதனைக்கு விடுமுறை இல்லை. மத்தேயு 25:30 ல் இயேசுகிறிஸ்து இவ்வறு கூறியிருக்கிறார், “பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.” “அழுகையும் பற்கடிப்பும்” என்ற சொற்களின் மூலம் நரகத்தில் தொடர்ச்சியான துன்பங்களை இயேசுகிறிஸ்து எவ்வாறு விவரிக்கிறார் என்பதைக் கவனியுங்கள். அதுமட்டுமல்லாமல், அவர் அதை “இருள்” என்று அழைக்கிறார், இது முழு விரக்தியின் அடையாளமாகும்.
ஐசுவரியவான் மற்றும் லாசருவைப் பற்றிய சம்பவத்திலும் இயேசுகிறிஸ்து இவ்வாறு கூறுகிறார், அந்த ஐசுவரியவான் பாதாளத்தில் பட்ட வேதனையின் திகிலூட்டும் அனுபவத்தை எப்படி உணர்ந்தான் என்று லூக்கா 16:23-24-ல் வாசிக்கிறோம்: “பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணிரீல் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினி ஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.” ஐசுவரியவான் தனது வேதனையை தெளிவாக உணர்ந்தான்.
வேதனையின் அளவு நபருக்கு நபர் மாறுபடும் [அதாவது, மிகவும் பொல்லாதவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்], ஒவ்வொருவரும் நிலையான வேதனையை அனுபவிப்பார்கள். பியூரிட்டன் (Puritan) பிரிவை சேர்ந்து வேத விளக்கவுரையாளராகிய மேத்யு ஹென்றி இவ்வாறு எழுதுகிறார்: “ஒரு மனிதன் மெத்தூசலாவைப் போல நீண்ட காலம் வாழ்ந்து, பாவம் அளிக்கக்கூடிய சந்தோஷத்தில் தனது நாட்களை கழித்தால், பின்தொடர வேண்டிய வேதனையும், இன்னல்களின் மணிநேரமும் அந்த நீண்ட காலத்தை விட அதிகமாக இருக்கும்.” இதை வேறுவிதமாக கூறுவதென்றால், பூமியில் ஒருவர் அனுபவிக்கும் மிக மோசமான துன்பத்தை கற்பனை செய்வோம். இப்போது அந்த வேதனையை 1000 ஆல் அல்லது 10,0000 ஆல், அல்லது ஒரு மில்லியனால் பெருக்கினாலும், அந்த அளவு வேதனை கூட நித்தியமாக நரகத்தில் இருக்கும் வேதனைக்கு சமமாக இருக்காது!
நரகத்தில் இருக்கும் போது தேவன் மனதை அகற்றிப்போட மாட்டார் என்பதால் உடல் ரீதியான சித்திரவதைகளுடன், மன சித்திரவதையும் இங்கு இருக்கும். ஒரு எழுத்தாளர் நரகத்தில் ஒரு மனிதன் எதிர்கொள்ளும் மன சித்திரவதைகளை இவ்வாறு விவரிக்கிறார்:
ஒரு மனிதனின் மனதை நரகத்தில் கொண்டு செல்வது தேவனுடைய இரக்கம் என்று கூட கூறலாம், ஆனால் அது நிச்சயமாக நரகத்தின் வேதனையாக இருக்குமு். இரக்கமானது உலகத்தில் வாழும் காலத்திற்கு கொடுக்கப்பட்டு இருந்தது, இப்போது மிக நீண்ட காலத்திற்கு கொடுக்கப்படுகிறது. ஒரு மனிதன் மாய்மாலமாகவும் போலியான அழகும் இல்லாமல் தான் எப்படி இருக்கிறானோ அப்படியே வாழவதற்கு மீண்டும் ஒரு முறை இரக்கம் நித்தியக்காலத்திற்கு கொடுக்கப்படுகிறது. உடலுக்குள் எவ்வளவு வேதனைகள் இருந்தாலும், அவனது மனமே மிகவும் சித்திரவதைக்குரிய பகுதியாக இருக்கும். “அவனுடைய புழு சாகாது” என்ற வார்த்தையின் அர்த்தம் நிச்சயமாக இதுதான்.
அவனது மனதிற்குள்ளும் வெளியேயும் புழுக்கள் ஊர்ந்து செல்லுதலானது, அவன் என்றென்றும் இப்படி தான் இருப்பான், இனி அவனால் மாற முடியாது, இனி எந்த நம்பிக்கையும், நிம்மதியும், மகிழ்ச்சியும் மற்றும் அன்பும் இருக்காது. அவன் என்றென்றைக்கும் தன்னை வெறுக்க விரும்புவான், இனி ஒருபோதும் அன்பு கூர விரும்ப மாட்டான், இப்படியொரு எண்ணத்தில் அவன் ஏங்குகிறான், இந்த சூழலில் தேவன் மீதான வெறுப்பு மிக அதிகமாக மாறி தன்னையே வெறுத்துக்கொள்வான்.
“இப்படி நிரந்தரமாக கஷ்டப்படுவது அநியாயம் இல்லையா?” என்று ஒருவர் கூறலாம். ஆனால் பிரச்சனை இதுதான்: நரகத்தில் இருக்கும்போது கூட மக்கள் தங்கள் பாவங்களுக்காக வருந்த மாட்டார்கள், ஏனெனில் மனந்திரும்புவதற்கான நேரம் மரணமடையும் போதே முடிவடைந்து விடுகிறது. எனவே, அவர்கள் தங்கள் பாவங்களைச் சேர்த்துக்கொள்ளும் முயற்சியை தொடர்ந்து செய்வார்கள். எனவே தான் அவர்கள் தொடர்ந்து நித்திய வேதனையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது.
உண்மை #3. நரகம் என்பது துன்மார்க்கரும் கண்ணியமானவர்களும் ஒன்றாக இருக்கும் இடம்.
1 கொரிந்தியர் 6:9-10 ல் பவுல் இவ்வாறு எழுதுகிறார் “அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடனும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.” தேவனுடைய இராஜ்ஜியத்தைச் சுதந்தரிக்காத பாவிகளின் பரந்த வகையை பவுல் பட்டியலிடுகிறார். திருடர்கள் மற்றும் அவதூறு செய்பவர்கள், குடிகாரர்களுடன் பாலியல் ஒழுக்கக்கேடானவர்கள் அனைவரும் நரகத்தில் வசிப்பார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மிகுந்த ஆஸ்தியுள்ள ஒரு வாலிபன் [மத் 19:16-22] போன்ற ஒழுக்க ரீதியில் நல்லவர் போன்றோரும் அங்கே இருப்பார்கள்!
உண்மை #4. நரகம் ஒரு நம்பிக்கையற்ற இடம்.
நரகத்தில் உள்ளவர்களுக்கு விரக்தி உணர்வு மட்டுமே இருக்கும். அதிலிருந்து வெளியே வரும் நம்பிக்கை இல்லை. லூக்கா 16:24-28 ல் இவ்வாறு நாம் வாசிக்கிறோம், “24அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணிரீல் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான். 25அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங்காலத்தில் உன் நன்மைகளை அநுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய். 26அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான். 27அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு, 28நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.”
ஆபிரகாமிடம் ஐசுவரியவான் தன்னுடைய குடும்பத்தார் தான் இருக்கும் இடத்திற்கு வராமல் இருக்க வேண்டும் என்று கெஞ்சி மன்றாடுவதை கவனியுங்கள். அவன் எதற்கு இப்படி கெஞ்சுகிறான்? ஏனென்றால், ஒருவர் தான் இருக்கும் இடத்திற்கு உள்ளே நுழைந்தால் என்றென்றும் வேதனையிலிருந்து தப்பிக்க முடியாது என்பது அவனுக்கு நன்றாக தெரியும். விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை! ஒரு நிமிடம் கூட மகிழ்ச்சியோ நிம்மதியோ இருக்காது! அது எவ்வளவு பயங்கரமாக இருக்க வேண்டும்! சொல்லப்போனால், பேய்கள் கூட அங்கு செல்ல விரும்பாத அளவுக்கு கொடுமையான இடம். அதனால்தான் அந்த ஆவிகள் தங்களை அதலபாதாளத்திற்குள் அனுப்பாமல் பன்றிகளுக்குள் அனுப்ப இயேசுகிறிஸ்துவிடம் கூறினது [லூக்கா 8:28, 31]!
ஆக (1) இது ஒரு உண்மையான இடம்; (2) இது நித்திய உணர்வுள்ள வேதனையின் இடம்; (3) இது கொடும் துன்மார்க்கரும் மிகவும் ஒழுக்கமான மக்களும் ஒன்றாக இருக்கும் இடம் மற்றும் (4) இது நம்பிக்கையற்ற இடம் ஆகிய நரகத்தின் 4 உண்மைகளை நாம் பார்த்தோம்.
நரகத்தைப் பற்றிய விவரிப்புகளில் எவை உண்மையானவை அல்லது எவை அடையாளப்பூர்வமானவை என்பதில் விடாப்பிடியாக இருப்பது கடினம் என்றாலும், இந்த உண்மைகளானது என்றும் மாறாதது: நரகம் என்பது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பயங்கரமான வேதனை நிறைந்த இடம்! இந்த உண்மைகளுக்கு விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகள் இருவரும் எவ்வாறு பதிலளிக்க வேண்டும்? இந்தக் கட்டுரையின் 2வது பாகத்தில் இதற்கான விடை உள்ளது.