நரகத்தைக் குறித்த உண்மைகள் மற்றும் ஆலோசனைகள் – பகுதி 2

(English Version: Hell – It’s Realities and Implications – Part 2)
இந்தப் பகுதியானது “நரகத்தைக் குறித்த உண்மைகள் மற்றும் தாக்கங்களின்” இரண்டாவதும், இறுதியானதுமான கட்டுரையாகும். பகுதி 1 இல், நரகத்தின் பின்வரும் 4 உண்மைகளைப் பார்த்தோம்:
- நரகமானது ஒரு உண்மையான இடம்
- நரகம் நித்திய வேதனையை அனுபவிக்கும் இடம்
- நரகம் என்பது கொடும் துன்மார்க்கர் மட்டுமல்லாமல் கண்ணியமானவர்களும் கூட ஒன்றாக இருக்கும் இடம்
- நரகமானது நம்பிக்கையற்ற ஒரு இடம்
இந்த கொடூரமான உண்மைகளின் வெளிச்சத்தில், விசுவாசிகளுக்கு மூன்று ஆலோசனைகளும், அவிசுவாசிகளுக்கு ஒரு ஆலோசனையும் கூறப்பட்டுள்ளது.
விசுவாசிகளுக்கான ஆலோசனை
1. நாம் எப்போதும் தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
இயேசுகிறிஸ்து, சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கையில் “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார் [மத்தேயு 27:46]. மேலும் அவர் கைவிடப்பட்டதால், தேவனுடைய கிருபையால் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும் நாம் ஒருபோதும் கைவிடப்பட மாட்டோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இயேசு கிறிஸ்து தம்முடைய பாடுகளின் மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய அனைத்து ஆக்கினைத் தீர்ப்பையும் நீக்கிப்போட்டார். நாம் நரகத்தின் கொடூரங்களை ஒரு கணம் கூட அனுபவிக்காதப்படிக்கு அவர் மரணத்தை ருசிபார்த்தார் [எபிரேயர் 2:9]. அப்போஸ்தலனாகிய பவுல் 1 தெசலோனிக்கேயர் 1:10 ல் “இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு” என்று கூறுவதில் எந்த ஆச்சரியமில்லை.
இந்த உண்மையானது நம்மை எப்போதும் நன்றி உணர்வில் பெருகச் செய்ய வேண்டாமா? உலக விஷயங்கள் நாம் நினைத்தப்படி நடக்காதபோது, அதை குறித்து முறையிட நமக்கு உரிமை இருக்கிறதா? இந்த உலகத்தில் மட்டுமே நாம் பாடுகளை அனுபவிக்க முடியும், அதுவும் ஒரு தற்காலிக காலத்திற்கு மட்டுமேயாகும். இருப்பினும், நித்தியமான பரலோகத்தின் மகிழ்ச்சியுடன் இதை ஒப்பிடுங்கள்! அவர் நம்மை நரகத்தில் நித்திய துன்பத்திலிருந்து மீட்டார். உலகத்தில் ஒரு தற்காலிக துன்பத்தை நாம் கடந்து செல்வதால் அவருக்கு நன்றி சொல்வதை ஏன் நிறுத்த வேண்டும்?
அடுத்த முறை இந்த வாழ்க்கையின் சோதனைகளால் நாம் முணுமுணுக்க அல்லது சோர்வடையத் தூண்டப்படும் போது, நரகத்தின் பயங்கரங்களையும், இயேசுகிறிஸ்து நம் சார்பாக பாடுப்பட்டு அதிலிருந்து நம்மை எவ்வாறு மீட்டார் என்பதையும் சிந்தித்துப் பார்ப்போம். அப்படி சிந்தித்தால், அந்த சோதனையின் மத்தியிலும் அதிகமான நன்றியை செலுத்துவோம்.
லண்டனில் உள்ள ஒரு மிஷனரியானவர் ஒரு பழைய கட்டிடத்தில், நோய்வாய்ப்பட்டு மரிக்கும் தருவாயில் இருந்த ஒரு பெண்மணியை பார்க்க நேர்ந்தது. அறை சிறியதாகவும் குளிராகவும் இருந்தது, அந்த பெண் தரையில் படுத்திருந்தாள். இந்த மிஷனரி இந்த பெண்ணுக்கு உதவ முயன்றார், அவளைப் பார்த்து “உனக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்டார்”, அதற்கு அவள் “எனக்கு தேவையான அனைத்தும் என்னிடம் உள்ளன, என்னிடம் இயேசு கிறிஸ்து இருக்கிறார்” என்று சொன்னாள்.
அந்த மிஷனரி அதை ஒருபோதும் மறக்கவில்லை, அவர் அங்கிருந்து வெளியே சென்று பின்னர் இவ்வாறு எழுதினார், “லண்டன் நகரத்தின் மையப்பகுதியிலிருக்கும் ஒரு ஏழைகளின் குடியிருப்பிலிருந்து இந்த பிரகாசமான, பொன்னான வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டன, “என்னுடன் கிறிஸ்து இருக்கிறார், வேறு என்ன வேண்டும் எனக்கு?” இந்த வார்த்தைகள் ஒரு தனிமையான பெண்மணி இந்த உலகத்தில் ஆறுதல் இல்லாமல் தரையில் படுத்து கிடந்து மரிக்கும் தருவாயில் சொல்லப்பட்டவை. இந்த வார்த்தைகளை கேட்ட ஒருவன், உலகிலேயே ஒரு பெரிய கடையிலிருந்து அவளுக்கு எதையாவது வாங்கி வர ஓடினான், ஆனால் அது தேவையில்லாமல் போனது, “எனக்கு கிறிஸ்து இருக்கிறார், வேறு என்ன வேண்டும் எனக்கு?” என்று கூறிவிட்டு அவள் மரித்துவிட்டாள்.
எனக்கு பிரியமானவர்களே, விசுவாசிகளாகிய நாம், உயர்ந்தவராகவோ அல்லது தாழ்ந்தவராகவோ, பணக்காரனாகவோ அல்லது ஏழையாகவோ இருந்தாலும் “எனக்கு கிறிஸ்து இருக்கிறார், வேறு என்ன வேண்டும் எனக்கு?” என்று நன்றி நிறைந்த இருதயத்துடன் கூற முடியுமா?
2. நாம் எப்பொழுதும் பரிசுத்தத்தைப் பின்பற்ற வேண்டும்.
நரகத்தைப் பற்றி அடிக்கடி சிந்திப்பது, பாவத்திலிருந்து தப்பித்து, பரிசுத்தத்தைத் தொடரும்படிக்கு ஏதுவாக இருக்க வேண்டும். மத்தேயு 5:29-30 ல் இயேசு கிறிஸ்து இவ்வாறு கூறியிருக்கிறார் “ உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.”
இயேசுகிறிஸ்து கூறுவதின் சாராம்சம் இதுதான்: கீழ்ப்படிதலுக்கான விலையானது அதிகமானதாக காணப்பட்டாலும், நரகத்திற்கு இட்டுச்செல்லும் கீழ்ப்படியாமையின் விலையுடன் ஒப்பிடும்போது, அது அவ்வளவு அதிகமாக இருக்காது. ஒரு பக்கத்தில் அகலமான பாதை- அழிவுக்கான பாதை, மறுபக்கத்தில், குறுகிய சாலை – சுய வெறுப்பின் பாதை, பாடுகளால் குறிக்கப்பட்ட சாலை, நித்திய ஜீவனுக்குப் பாதை. எனவே, அடுத்த முறை நாம் பாவம் செய்ய ஆசைப்படும் போது, நரகத்தின் உண்மைகளைப் பற்றி சிந்தித்து, பாவம் செய்வது பொருத்தமற்றது என்பதை நினைவில் கொள்வோம். பரிசுத்தத்தைப் பின்தொடர்வது என்றென்றும் பலனைத் தரும்!
3. நாம் இழந்து போனவர்களை தேடி செல்கிறவர்களாக இருக்க வேண்டும்.
ஒரு பயங்கர இடமான நரகத்தின் உண்மைகளைப் பற்றி சிந்திக்கும்போது இழந்து போனவர்கள் மீதானஅன்பினால் நம் இருதயங்களிலிருந்து இரத்தம் வடிய வேண்டும். நரகம் உண்மையானது, நித்தியமானது என்றும், கிறிஸ்து அற்றவர்கள் நித்திய துன்பத்திற்காக அங்கு செல்வார்கள் என்றும் நாம் விசுவாசித்தால், இழந்து போனவர்களுக்காக ஜெபிக்கவும், சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளவும் நம் இருதயங்களில் மிகப்பெரிய பாரம் இருக்க வேண்டாமா? நமது எண்ணங்கள் சுவிசேஷத்தை மையமாகக் கொண்டிருக்க வேண்டாமா? சுவிசேஷப் பணிகளை மென்மேலும் மேம்படுத்தும் வகையில் நமது பணத்தை அதிக முதலீடு செய்ய நாம் தயாராக இருக்க வேண்டாமா? நாம் நித்திய பிரச்சினைகளை விட தற்காலிக விஷயங்களில் ஏன் அதிக ஆற்றலுடன் கவனம் செலுத்தி வாழ்கிறோம்?லூக்கா 16:19-31 ல் உள்ள ஐசுவரியவான் உயிரோடு இருக்கும் தன் குடும்ப உறுப்பினர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும் என்று மிகுந்த ஆசை கொண்டான், ஏனென்றால் அவன் பாதாளத்தின் பயங்கரங்களை அனுபவித்துக்கொண்டிருந்தான் [லூக்கா 16:27-28]. அதன் உண்மைகளை புரிந்து கொள்ள நாம் அங்கு செல்ல வேண்டியதில்லை. நரகத்தைப் பற்றி வேதம் கூறுவதை நாம் விசுவாசித்து ஏற்றுக்கொள்கிறோம். அந்த விசுவாசமானது இழந்து போனவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி கிறிஸ்துவிடம் வருவதற்கு மன்றாட நம்மைத் தூண்ட வேண்டும். தேவன் தாமே தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலம் தம்மிடம் திரும்புவதை குறித்தும், நரகத்தின் கொடூரங்களிலிருந்து தப்பிப்பதை குறித்தும் மக்களிடம் மன்றாடுகிறார். இதற்கு பின் வரும் வசனம் ஒரு உதாரணம்:
எசேக்கியேல் 33:11 “கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார் என்று அவர்களோடே சொல்லு.”
அதேபோன்று, மக்கள் தங்கள் பாவங்களிலிருந்து திரும்பவும், புதிய இருதயத்தையும் புதிய ஆவியையும் பெற்று, நரகத்தின் நித்திய பயங்கரங்களிலிருந்து தப்பிக்கவும் தேவனின் சார்பாக நாமும் மன்றாட வேண்டும். மக்கள் நிராகரித்து விடுவார்கள் என்று நாம் பயப்பட கூடாது. நமது ஈகோ பற்றி சிந்திக்க கூடாது. மக்கள் கிறிஸ்துவை நிராகரிப்பதால் அவர்கள் நரகத்தில் சந்திக்கும் முடிவில்லாத உபத்திரவத்தை நாம் உணர வேண்டும், மேலும் அந்த உணர்தலானது கிறிஸ்துவிடம் வரும்படி அவர்களிடம் அன்புடன் அழைக்கும்படிக்கு நம்மை தூண்ட வேண்டும்.
நாம்அவர்களுக்கு நற்செய்தியை கொண்டு செல்வதற்கு நம்முடைய சந்தோஷத்தை தியாகம் செய்யவும், தியாகமாக வாழவும் தயாராக இருக்க வேண்டும். தம்மை ஒரு பெரும் ஆபத்து எதிர்நோக்கியிருந்த போதும், இயேசு கிறிஸ்து எருசலேமுக்குள் பிரவேசித்தார் [லூக்கா 19:41] ஏனெனில் அவர் அவர்களை நேசித்தார். நாமும் இழந்து போனவர்கள் மீது அத்தகைய அன்பைக் கொண்டிருக்க வேண்டும் – அவர்களுக்கு ஜெபத்தின் மூலமாகவும், நற்செய்தியை அறிவிப்பதின் மூலமாகவும் நமது அன்பைக் காட்ட வேண்டும்!
1800 களில் வாழ்ந்த ஹட்சன் டெய்லர், சீனாவின் உள்நாட்டு முதல் மிஷனரிகளில் ஒருவர். அவர் மிஷனெரியாக செல்வதற்கு முன், மருத்துவ உதவியாளராக பணியாற்றினார். கடுமையான கிருமி தொற்றால் கால்கள் அழுகிப்போன ஒரு மனிதனுக்கு சிகிச்சையளிப்பது அவரது முதல பணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வியாதிப்பட்ட மனிதன் ஒரு நாத்திகன் மட்டுமல்லாமல் ஒரு வன்முறை குணம் கொண்டவனாகவும் இருந்தான்.
யாராவது அவன் முன் வேதத்தை வாசித்தால், அந்த மனிதன் வாசிப்பவரை வெளியே சென்றுவிடும்படி சத்தமாக கட்டளையிடுவான். ஒரு போதகர் அங்கு வந்தபோது, அவர் முகத்தில் காரித் துப்பினான். ஹட்சனின் வேலை இந்த மனிதனின் கட்டுகளை ஒவ்வொரு நாளும் மாற்றுவதாகும். அவரும் இவனுடைய இரட்சிப்புக்காக தீவிரமாக ஜெபிக்க ஆரம்பித்தார். முதல் சில நாட்களில் அவர் சுவிசேஷத்தைப் பற்றி எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை, ஆனால் மனிதனின் கட்டுகளை மாற்றுவதில் கவனம் செலுத்தினார். இது அவனது வலியை வெகுவாகக் குறைத்தது, மேலும் அந்த மனிதன் ஆழமாகத் தொட்டப்பட்டான்.
இருப்பினும், ஹட்சன் டெய்லர் இந்த மனிதனின் நித்திய முடிவைப் பற்றி கவலைப்பட்டார். எனவே ஒரு நாள், கவனமாக கட்டுகளை மாற்றிய பிறகு, அவர் வித்தியாசமான ஒரு காரியத்தை செய்தார். வெளியே செல்வதற்குப் பதிலாக, அந்த மனிதனின் படுக்கையில் மண்டியிட்டு நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டார். அவர் அவனுடைய ஆத்துமா மீதான தனது அக்கறையை விளக்கினார், இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தைப் பற்றி எடுத்துக்கூறி, அவன் தனது பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படக்கூடும் என்று விளக்கினார். அந்த மனிதன் கோபமடைந்து, எதுவும் பேசாமல், ஹட்சனுக்கு முதுகை காட்டினான். எனவே, ஹட்சன் எழுந்து, தனது மருத்துவ உபகரணங்களை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.
இப்படியே சில காலம் தொடர்ந்தது. ஒவ்வொரு நாளும் ஹட்சன் அவனது கட்டுகளை மென்மையாக மாற்றி, பின்னர் அந்த மனிதனின் படுக்கையில் மண்டியிட்டு இயேசுவின் அன்பைப் பற்றி பேசுவார். ஒவ்வொரு நாளும் அந்த மனிதன் எதுவும் பேசாமல் ஹட்சனுக்கு தன் முதுகை காட்டுவான். சிறிது நேரத்திற்குப் பிறகு, தான் நன்மையை விட அதிக தீமையானதை செய்கிறேனா? தன்னுடைய வார்த்தைகள் அந்த மனிதனை மேலும் கடினப்படுத்துகிறதா? என்று ஹட்சன் டெய்லர் ஆச்சரியப்படத் தொடங்கினார்.
அதனால் மிகுந்த சோகத்துடன், ஹட்சன் டெய்லர் கிறிஸ்துவைப் பற்றி பேசுவதை நிறுத்த முடிவு செய்தார். மறுநாள் மீண்டும் அந்த மனிதனின் கட்டுகளை மாற்றினார். ஆனால், படுக்கையில் மண்டியிடுவதற்கு பதிலாக, அவர் அந்த அறையை விட்டு வெளியேற கதவை நோக்கி சென்றார். அவர் கதவைத் தாண்டி வெளியே செல்வதற்கு முன், அந்த மனிதனைத் திரும்பிப் பார்த்தார். அந்த மனிதன் அதிர்ச்சியடைந்தான் என்று நிச்சயமாக அவரால் சொல்ல முடியும். ஏனென்றால் ஹட்சன் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தது முதல், தற்போது தான் முதன் முறையாக படுக்கையில் மண்டியிட்டு இயேசுகிறிஸ்துவைப் பற்றிப் பேசவில்லை.
பின்னர், வாசலில் நின்றபோது, ஹட்சன் டெய்லரின் இருதயம் உடைந்தது. அவர் அழ ஆரம்பித்தார். மீண்டும் படுக்கைக்குச் சென்று, “என் நண்பனே, நீ கேட்கிறாயோ இல்லையோ, என் இருதயத்தில் உள்ளதை நான் உன்னிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார் – மேலும் அவர் இயேசுகிறிஸ்துவைப் பற்றி ஆர்வத்துடன் பேசினார், மீண்டும் அந்த மனிதனை தன்னுடன் சேர்ந்து ஜெபிக்கும்படி மன்றாடினார். இம்முறை அந்த மனிதர் – “உங்களுக்கு சௌகரியமாக இருந்தால், வந்து ஜெபம் செய்யுங்கள்.” என்று பதிலளித்தான். எனவே ஹட்சன் டெய்லர் மண்டியிட்டு இந்த மனிதனின் இரட்சிப்புக்காக ஜெபம் செய்தார். தேவன் அவருடைய ஜெபத்திற்கு பதிலளித்தார். அப்போதிலிருந்து, அந்த மனிதன் நற்செய்தியைக் கேட்க ஆர்வமாக காணப்பட்டான், சில நாட்களில், அவன் கிறிஸ்துவை விசுவாசித்து ஜெபிக்க தொடங்கினான்.
ஹட்சன் டெய்லரின் செயல்பாடுகள்
1. சீனாவில் எனது ஆரம்பகால ஊழியத்தின்போது, சூழ்நிலைகள் என்னை வெற்றியின் மீது நம்பிக்கையற்றதாக மாற்றியபோது, இந்த மனிதனின் மனமாற்றத்தைப் பற்றி நான் யோசித்தேன், மேலும் மனிதர்கள் கேட்கிறார்களோ இல்லையோ தேவனுடைய வார்த்தைகளை விடாமுயற்சியுடன் பேசுவதில் ஊக்கப்படுத்தப்பட்டேன்.
2. ஒருவேளை ஆத்துமாக்கள் மீதான பாரம் கண்ணீர் வடிக்கும் அளவிற்கு அதிகமாக இருந்தால், நாம் விரும்பும் முடிவுகளை அடிக்கடி எதிர்பார்க்கலாம். சில சமயங்களில் ஆதாயப்படுத்த விரும்புவோருடைய இருதயத்தின் கடினத்தன்மையை குறித்து நாம் சோர்வடைந்தால், நம்முடைய இருதயத்தின் சோர்வும் நித்தியமான விஷயங்களைப் பற்றிய நமது கவலையின்மையும் அவர்களை ஆதாயப்படுத்துவதற்கு தடையாக அமைந்துவிடக்கூடும்.
நரகத்தின் உண்மைகளைப் பற்றி நாம் எவ்வளவு அதிகமாகப் பிரதிபலிக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் இழந்து போனவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்க வேண்டும்.
விசுவாசிகளல்லாதோருக்கான ஆலோசனை
நீங்கள் ஒரு விசுவாசியாக இல்லை என்றால், உங்களுக்கு கூறுவதற்கு ஒரே ஒரு ஆலோசனை மட்டுமே உள்ளது: நீங்கள் கோபாக்கினையிலிருந்து தப்பி ஓட வேண்டும் [மத் 3:7]. நரகத்தில் செல்லும் தூரம் வெகு தொலைவில்லை. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே வாழுங்கள். இயேசுகிறிஸ்துவை நிராகரித்துக்கொண்டே இருங்கள். உங்கள் பாவங்களுக்காக வருந்த வேண்டாம். நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நரகத்தை அடைவீர்கள்.
நண்பரே, நீங்கள் உண்மையாகவே இதை விரும்புகிறீர்களா? நீங்கள் நரகத்தை நம்பாததால் அது இல்லாமல் போகாது. நரகம் ஒரு உண்மையான இடம். அதனால்தான் லூக்கா 13:3-ல் இயேசுகிறிஸ்துவே இவ்வாறு எச்சரிக்கிறார், “நீங்கள் மனந்திரும்பாவிட்டால், நீங்கள் அனைவரும் அழிந்துபோவீர்கள்.“ இந்த வாழ்க்கைக்குப் பின்னர் இரண்டாவதாக ஒரு வாய்ப்பு இல்லை., “அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது” என்று எபிரேயர் 9:27 கூறுகிறது. இயேசுகிறிஸ்து மீண்டும் வரும்போது, தம்மை ஏற்றுக்கொண்ட தம்முடையவர்களை அவர் எப்போதும் தம்முடன் இருப்பதற்காகத் எடுத்துக்கொள்வார். அந்த நேரத்தில், மனந்திரும்புவதற்கு மிகவும் தாமதமாகிவிடும். இப்போதே முடிவு செய்ய வேண்டிய நேரம் இது.
அன்புள்ள நண்பரே, இந்தக் கடினமான சத்தியங்களைச் சொல்வதில் நான் மகிழ்ச்சியடையவில்லை. ஆனால் இந்த எச்சரிக்கையின் வார்த்தைகளை நீங்கள் கேட்டாக வேண்டும். எனவே, தயவு செய்து உங்கள் பாவங்களை விட்டு விலகி, விசுவாசத்தோடு இயேசு கிறிஸ்துவிடம் திரும்புங்கள், அவர் மட்டுமே பாவங்களுக்கான விலைகிரயத்தைக் கொடுத்து உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசியுகள். இன்றே இயேசுகிறிஸ்துவிடம் ஓடி வந்து உங்களை நரகத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள். இனியும் விளையாட்டுப்போக்காய் இருக்க வேண்டாம்! இனியும் தாமதம் வேண்டாம்! மேலும் சாக்கு போக்கு சொல்ல வேண்டாம்! இன்றே அவரிடம் வாருங்கள்! உங்கள் பாவங்களுக்காக மனந்திரும்பி, இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைக்க வேண்டிய நேரம் இது.
“காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்” என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்!” [மாற்கு 1:15]. அவர் உங்களை ஏற்றுக்கொள்வார் – நீங்கள் எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் சரி. அவரிடம் மன்றாடினால் உங்களுக்கு ஒரு புதிய இதயத்தைத் தருவார். பரிசுத்த ஆவியை அனுப்புவார், உங்கள் உள்ளே வந்து வாசம் செய்யவும், விசுவாச வாழ்க்கையை வாழவும் உங்களுக்கு உதவி செய்வார். எனவே, தாமதிக்காதீர்கள்! வாருங்கள்!
நரகத்தின் கொடூரங்களைப் பற்றி இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரசங்கியாரான சார்லஸ் ஸ்பர்ஜனின் இந்த எச்சரிக்கை வார்த்தைகளுடன் முடிக்கிறேன்:
உங்களுக்கு உண்மையான ஒரு சரீரம் இருப்பதுப்போலவும், பூமியில் நீங்கள் காண்கிற அக்கினியை போன்றும் நரகத்திலும் இருக்கிறது. அது உங்களை சித்திரவதை செய்தாலும் பட்சித்துப்போடாது. உங்கள் சரீரமானது பட்சிக்கப்படாதப்படி என்றென்றும் அக்கினியில் இருக்கும் வண்ணம் தேவனால் ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது. உங்கள் நரம்புகள் பற்றி எரியும் அக்கினியில் பச்சையாக வைக்கப்படும், ஆனால் அதன் பொங்கி எழும் கோபத்திற்குள் ஒருபோதும் உணர்ச்சியற்றதாக இருக்காது, மேலும் கந்தகத்தின் கடுமையான புகை உங்கள் நுரையீரலை எரித்து, உங்கள் மூச்சைத் திணற வைக்கும், நீங்கள் மரணத்தின் கடைக்கண் பார்வைக்காக அழுவீர்கள், ஆனால் அது ஒருபோதும் கிடைக்காது.