நீங்கள் கர்த்தரால் கைவிடப்பட்டதாக உணரும்போதும் அவர் உங்களை நினைவுகூருகிறார்

Posted byTamil Editor June 6, 2023 Comments:0

(English Version : The Lord Remembers You Even When You Feel Abandoned by Him)

தொடர்ச்சியான கடின சூழ்நிலைகளின் மத்தியில் தேவனால் கைவிடப்பட்டதாக நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? ஒருவேளை அது பொருளாதாரச் சிக்கல்களிலா, உடல்நலப் பிரச்சினைகளிலா அல்லது குடும்பப் போராட்டங்களிலா? துன்பத்தின் தன்மை எதுவாக இருந்தாலும், இப்படி உணரும்போது உங்கள் பதில் என்னவாக இருந்தது?

(1) தேவன் மீது ஏமாற்றம்

(2) அவர் மீது கோபம்

(3) மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம்

(4) ஏற்ற காலத்தில் விடுதலை தருவார் என்று பொறுமையாக காத்திருப்பது.

ஆனால் இதை செய்வதை விட சொல்வது எளிதானது. சோதனைகளில் இருந்து நாம் விடுபடவில்லை எனத் தோன்றும்போது, அத்தகைய தெய்வீகப் பிரதிபலிப்பை எவ்வாறு வளர்த்துக்கொள்ள முடியும்? இந்த வேதாகம உண்மையை ஏற்றுக்கொள்வதில் பதில் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்:

தேவன் தம் பிள்ளைகளை மறப்பதில்லை. அவர்கள் தம்மால் கைவிடப்பட்டதாகஉணர்ந்தாலும்அவர் அவர்களை நினைவில் கொள்கிறார்!

தேவன் தம்முடைய ஜனங்களை நினைவுக் கூர்ந்ததின் உதாரணங்கள்.

நோவா. தேவன் நோவாவை… நினைத்தருளினார்” ஆதியாகமம் 8:1ல், கர்த்தர் தம்முடையவர்களை நினைவுகூருவதை நாம் முதன்முதலில் வாசிக்கிறோம்.

இந்த வார்த்தையானது மிகவும் இருண்ட பின்னணியில் பிரகாசிக்கும் ஒளியாக நிற்கிறது.இதற்கு முந்தின வசனம் “ஜலம் பூமியின்மேல் நூற்றைம்பது நாள் மிகவும் பிரவாகித்துக்கொண்டிருந்தது.” [ஆதியாகமம் 7:24] என்று நமக்கு கூறுகிறது. முழு உலகமும் வெள்ளத்தால் அழிந்துப்போனது. நோவாவும் பேழையில் இருந்த அனைவரும் வெளியே வரமுடியாமல் இன்னும் உள்ளே அடைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் பேழையில் அடைக்கப்பட்டதிலிருந்து, குறிப்பாக அவர்கள் பேழையில் எவ்வளவு நேரம் இருந்தார்கள் என்பதை ஒருவர் உணரும்போது அவர்களின் மனதில் ஓடிய எண்ணோட்டமென்ன என்பதை கற்பனை செய்து பார்க்க முடியும். பூமியில் ஜலப்பிரளயம் வந்து நோவா பேழையில் பிரவேசித்த ஒரு வாரத்திற்கு பின்னர் நோவாவுக்கு 600 வயது என்று ஆதியாகமம் 7:6, 11 கூறுகிறது, மற்றும் ஆதியாகமம் 8:13-15 வசனங்கள் அவன் 601 வயது சென்ற சில காலம் கழித்து  பேழையை விட்டு வெளியே வந்தான் என்று கூறுகிறது. எனவே, அவர்கள் பேழைக்குள் இருந்த மொத்த காலமும் ஒரு வருடத்திற்கு சற்று அதிகமாகவே இருந்தது! சுற்றியுள்ள அனைத்தும் மரித்துக்கொண்டிருந்ததால், அது ஒரு நீண்டதொரு காலமாகவே இருந்தது!

இருப்பினும்  தேவன்  நோவாவை நினைவு கூர்ந்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. “நினைவு கூர்ந்தார்” என்ற வார்த்தை நோவாவை குறித்து நினைவாற்றல் இழந்ததைப் போல தேவன் மறந்துவிட்டார் என்று அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக இது “இரக்கத்துடன் நினைவு கூருதல், விண்ணப்பங்களை நிறைவேற்றுதல், பாதுகாத்தல், விடுவித்தல்” ஆகியவற்றைக் குறிக்கிறது. இங்கு நினைவுக் கூர்ந்தார் என்று கூறப்பட்டிருப்பது நோவாவை ஜலப்பிரளயத்திலிருந்து விடுவிப்பதாகக் தேவன் வாக்குத்தத்தம் அளித்ததைக் குறிக்கிறது [ஆதியாகமம் 6:17-18]. இப்போது, தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை நடைமுறைப்படுத்தினார்.

ஆபிரகாம். தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, ஆபிரகாமை நினைத்து, “லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப்போடுகையில், லோத்தை அந்தச் சமபூமியின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பிவிட்டார்” [ஆதி19:29]. ஆபிரகாம் தன் உறவினன் லோத்துக்காக (ஆதியாகமம் 18:16-33) செய்த வேண்டுக்கோளைக் கேட்ட தேவன், சோதோம் மற்றும் கொமோரா ஆகிய இரண்டு நகரங்களை அழித்தபோது, லோத்தை தம்முடைய தயவிரக்கத்தால்  காப்பாற்றினார்.

எகிப்தில் இஸ்ரவேலர்கள். யாத்திராகமத்தில், தேவனுடைய  ஜனங்கள் அடிமைகளாக எகிப்து தேசத்தில் உபத்திரவப்படுகையில், அவர்கள்  “அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டியது. தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார் [யாத்திராகமம் 2:23-25]. மேலும் தேவன், தம்முடைய தயவிரக்கத்தால், ஜனங்களை  எகிப்திலிருந்து வெளியே கொண்டுவரும்படியாக மோசேயை எழுப்பினார்.

அன்னாள். 1 சாமுவேல் 1:11 ல், அன்னாள் என்ற பக்தியுள்ள பெண்ணைப் பற்றி வாசிக்கிறோம், ஆனால் அவள் குழந்தை இல்லாதவள், “சர்வவல்லமையுள்ள கர்த்தரிடம்” தன்னுடைய “துன்பத்தை” “பார்த்து” “ஒரு குமாரனைக்” கொடுத்து தன்னை நினைவுகூரும்படி மன்றாடுவதைப் பற்றி வாசிக்கிறோம்.  பின்னர் அதே அதிகாரத்தில், “கர்த்தர் அவளை நினைந்தருளினார்” [1 சாமு 1:19] மற்றும் “அவள் கர்ப்பவதியாகி”, “ஒரு குமாரனைப் பெற்று”, “கர்த்தரிடம் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள்.” [1 சாமு 1:20] என்பதைக் காண்கிறோம்.

சங்கீதம். தேவன் தம்முடைய மக்கள் துன்பத்தில் இருந்தபோது அவர்களை நினைவுகூர்ந்து அவர்களை விடுவித்தார் அல்லது சில சமயங்களில் தம்முடைய மக்களை அவர்களுடைய பாவங்களுக்காக தண்டிப்பதிலிருந்து மனந்திரும்பினார் என்பதை சங்கீதங்கள் மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றன.

சங்கீதம் 98:3 “அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்.”

சங்கீதம் 105:42 “அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய தாசனாகிய ஆபிரகாமையும் நினைத்தார்.

சங்கீதம் 106:45 “அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து, தமது மிகுந்த கிருபையின்படி மனஸ்தாபப்பட்டார்.”

ஜனங்கள் அடிக்கடி தேவனைப் புகழ்ந்துப்பாடியதில் ஆச்சரியமில்லை – இது போன்ற ஒரு உதாரணத்தை சங்கீதம் 136:23 நாம் பார்க்கலாம். “நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சிலுவையில் மனந்திருந்திய கள்ளன். சிலுவையில் மனந்திரும்பிய கள்ளனுக்கு இயேசுகிறிஸ்து அளித்த பதிலானது, தேவன் மக்களைக் இரக்கத்துடன் நினைவுகூர்ந்தற்கான வேதத்திலுள்ள உள்ள அனைத்து எடுத்துக்காட்டுகளிலும் இருதயத்தை மிகவும் தூண்டக்கூடிய சித்திரமாகும். இதில் வரும் காட்சியானது இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கி, நம் பாவங்களைச் சுமந்து, மிகுந்த வேதனையில் தவிக்கும் பின்னணியாகும்.

அந்தச் சூழ்நிலையில், சிலுவையில் அறையப்பட்ட இரண்டு கள்ளர்களில் ஒருவன், “இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்” (லூக் 23:42). அங்கே இயேசுகிறிஸ்துவின் அதிர்ச்சியூட்டும் பதிலை நீங்கள் கவனியுங்கள். “இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.” (லூக் 23:43). நாளையல்ல, அடுத்த மாதம் அல்ல, இன்னும் சில வருடங்கள் அல்ல, ஆனால் இயேசு மனந்திரும்பியவனிடம்  “இன்று” தன்னுடன் “பரதீசியில்” இருப்பாயென்று வாக்குறுதி அளித்தார்.

மனந்திரும்பிய கள்ளன் அந்த வார்த்தைகளைக் கேட்டபோது எவ்வளவு சந்தோஷத்தை அனுபவித்திருப்பான் என்று கற்பனை செய்து பாருங்கள்! மேலும், சில மணிநேரங்களுக்குப் பிறகு அவன் மரித்து  பரலோகத்திற்குச் சென்றபோது, இயேசுகிறிஸ்து ஏற்கனவே அவனுக்காகக் காத்திருந்த இடத்தில் அவன் அனுபவித்த சொல்ல முடியாத மகிழ்ச்சியைக் கற்பனை செய்து பாருங்கள்! சகோதர சகோதரிகளே, விடுதலைக்காக தம்மை நோக்கிப் பார்ப்பவர்களை தேவன் இப்படித்தான் நினைவுகூருகிறார்!

தேவன் எதை நினைவுகூருவதில்லை.

தேவன் தம்முடைய மக்களை நினைவுகூருவதற்கு மேற்கூறிய எடுத்துக்காட்டுகள் போதாது என்றால்,  கீழே கூறப்படும் சில காரியங்கள் கலங்கிய இருதயங்களுக்கு நம்பமுடியாத ஆறுதலைத் தருகிறது. தம்முடைய மக்களை “நினைவில்” வைத்திருக்கும் அதே தேவன், தம்முடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவைத் தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டு, மன்னிப்புக்காகத் தம்மிடம் திரும்பும் அனைவரின் பாவங்களையும் ஒருபோதும் நினைவுகூரமாட்டார் என்று உறுதியளிக்கிறார்.

எபிரெயர் 10:17 “அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார்.” என்ற இந்த வாக்குத்தத்தத்தை பதிவு செய்கிறது, மேலும் நம்முடைய பாவங்களை இனி ஒருபோதும் நினைவுகூரமாட்டேன் என்று தேவன் வாக்குத்தத்தம் அளித்ததன் அடிப்படை இதுதான்: இயேசு கிறிஸ்து “பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி என்றென்றைக்கும் ஒரே பலியாக [தம்மை] ஒப்புக்கொடுத்தார்” [எபி 10:12].

நம்முடைய பாவங்கள் அனைத்தும் இயேசுவின் இரத்தத்தின் கீழ் அடக்கம்பண்ணப்பட்டுள்ளன. எபிரேயர் 10:18 ல் “இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்தினிமித்தம் பலிசெலுத்தப்படுவதில்லையே.” என்று மிகத் தெளிவாகக் கூறுவதினால், நாம் நியாயத்தீர்ப்புக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை, அதுவே நம் அனைவருக்கும், குறிப்பாக நாம் தேவனால் கைவிடப்பட்டதாக உணரும் காலங்களில் ஊக்கமளிக்கும் மிக முக்கியமான ஆதாரம்! தம்முடைய பிரசன்னத்திலிருந்து நம்மைத் துண்டித்துவிடும் விதத்தில் நம்முடைய பாவங்களை ஒருபோதும் “நினைவில்” கொள்ளமாட்டேன் என்று தேவன் வாக்குத்தத்தம் அளித்திருக்கிறார். என்ன ஒரு மகிழ்ச்சி! என்ன ஒரு ஆறுதல்!

தேவன் எதை நினைவுகூருகிறார்.

இருப்பினும், இந்த மகிழ்ச்சியையும் ஆறுதலையும் இயேசுகிறிஸ்துவை நிராகரிப்பவர்களால் அனுபவிக்க முடியாது. அவர்கள் தங்கள் பாவங்கள் மன்னிக்கப்படாமல் மரித்துவிடுவதால், எதிர்காலத்தில் தேவனுடைய நியாயத் தீர்ப்பை எதிர்கொள்ள நேரிடும். அந்த நேரத்தில், தேவன் அவர்களின் எல்லா பாவங்களையும் நினைவில் கொண்டு, அக்கினிக் கடலில் அவர்களை நித்திய தண்டனைக்கு அடிப்படையாக கொண்டு வருவார், அக்கினிக் கடல் என்பது நரகத்தை விவரிக்கும் மற்றொரு சொல்லாகும். வெளிப்படுத்தல் 20:11-15 இதை குறித்த விவரங்கள் கொடுக்கிறது.

11 – பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.12 – மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.13 – சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.14 – அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.15 – ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.

 

வசனம் 13-ன் முடிவில், யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்” என்ற கூற்று ஒரு முக்கியமான சத்தியத்தை நமக்குக் கற்பிக்கிறது. இன்று ஒரு மனிதன் செய்யும் பாவங்கள் மறக்கப்படாது, ஆனால் அவன் மன்னிக்கப்படாமல் மரித்தால் அந்த பாவங்கள் எதிர்காலத்தில் தண்டனைக்கு அடிப்படையாக கொண்டுவரப்படும்.

 

இதன் பொருள் என்னவென்றால். ஒவ்வொரு பாவ சிந்தனையும், வார்த்தையும், செய்த செயலும் நியாயத்தீர்ப்பில்கொண்டு வரப்படும். மேலும், 100% சரியான விஷயங்களைச் செய்யத் தவறியதும் இதில் அடங்கும்! அவைகள், மறுமை நாளில் ஒருவர் தாங்களாகவே சுமக்க வேண்டிய பெரும் பாவங்கள்! உண்மை என்னவென்றால், யாரும் தங்கள் பாவங்களுக்கான முழு விலைக்கிரையத்தையும் தாங்களாகவே செலுத்த முடியாது, ஏனென்றால் யாரும் சரியானவர்கள் அல்ல. அதனால்தான் இயேசுகிறிஸ்துவை நிராகரிப்பவர்கள் நித்திய நித்தியத்திற்கும் அக்கினி கடலில் விலை கொடுக்கிறார்கள்.

 

எனவே, தெரிவு தெளிவாக உள்ளது.

மனந்திரும்புதல் மற்றும் விசுவாசத்தில், ஒருவர் இன்னும் இந்த உலகில் உயிருடன் இருக்கும்போதே இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவிடம் வந்துவிட்டால், அவர்களின் பாவங்களின் முழு விலைக்கிரயமும் செலுத்தப்படும், மேலும் எதிர்காலத்தில் இயேசுகிறிஸ்து அவர்களின் பாவங்களை நினைவில் கொள்ள மாட்டார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். அந்த வழியில், அவர்கள் பரலோகத்தில் இயேசுகிறிஸ்துவோடு நித்தியத்தை கழிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கலாம்.

அல்லது ஒருவர் இந்த உலக வாழ்வில் இயேசுகிறிஸ்துவை நிராகரித்து, தங்கள் எல்லா பாவங்களையும் சுமந்துகொண்டு, எதிர் வரும் நியாயத்தீர்ப்பு நாளில் கிறிஸ்துவை நீதிபதியாக எதிர்கொள்ளலாம். அந்த நாளில், நரகம் என்றும் அழைக்கப்படும் அக்கினிக் கடலுக்கு அவர்களைக் கண்டனம் செய்யும் போது, இயேசு ஒவ்வொரு பாவத்தையும் நினைவுகூருவார். அங்கே, நித்திய காலத்திற்கும் தேவனால் கைவிடப்படுவதன் அர்த்தம் என்ன என்பதை அவர்கள் அனுபவிப்பார்கள்.

நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? இயேசுகிறிஸ்து உங்கள் இரட்சகராக உங்களை இரக்கத்துடன் நினைவுகூருகிறாரா அல்லது உங்கள் பாவங்களை உங்கள் நீதிபதியாக இயேசுகிறிஸ்து நினைவுகூருவாரா?

Category
Subscribe
Notify of
guest
0 கருத்துக்கள்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments