நீங்கள் பாடுகளை அனுபவிக்கும்போது ஆச்சரியப்பட வேண்டாம்

(English Version: Don’t Be Surprised When You Go Through Suffering)
1500 களின் நடுப்பகுதியில், வேதம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டில் வேதத்தை ஆங்கிலத்தில் கிடைக்கப் பெற்ற முதல் இடங்களில் ஹாட்லி நகரம் ஒன்றாகும். டாக்டர் ரோலண்ட் டெய்லர் அவர்கள் ஹாட்லி நகரத்தில் தேவனுடைய வார்த்தையை உண்மையாகப் பிரசங்கித்த ஒரு போதகவர். எதிர்பார்த்தபடியே, லண்டனில் உள்ள பிஷப் மற்றும் தலைமை நீதிபதி முன் ஆஜராகும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டது. அவர் ஒரு மதவெறியர் என்று குற்றம் சாட்டப்பட்டார், மேலும் வேதத்தின் மீதான தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளலாம் அல்லது தொழு மரத்தில் உயிருடன் கட்டப்பட்டு எரிக்கப்படலாம். இந்த இரண்டில் ஒரு வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
“நான் சத்தியத்தைப் பிரசங்கிப்பதில் இருந்து விலக மாட்டேன், அவருடைய வார்த்தைக்காக உபத்திரவப்படுவதற்கு தகுதியானவனாக என்னை அழைத்ததற்காக நான் தேவனுக்கு நன்றி கூறுகிறேன்” என்று தைரியமாக இவ்வாறு பதிலளித்தார். அவர் உடனடியாக ஹாட்லி நகருக்கு தொழு மரத்தில் உயிருடன் கட்டப்பட்டு எரிக்கப்படுவதற்காக திருப்பி அனுப்பப்பட்டார். வழியில், அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார், பார்க்கும் எவரும் அவர் விருந்தொன்றிற்கு அல்லது திருமணத்திற்குப் போகிறார் என்று நினைத்திருக்கக் கூடும். அவருடைய பாதுகாவலர்களிடம் அவர் சொன்ன வார்த்தைகள் அவர்களை அடிக்கடி அழவைத்தது, அவர் அவர்களுடைய தீய மற்றும் பொல்லாத வாழ்க்கையிலிருந்து மனந்திரும்பும்படி ஊக்கத்துடன் அழைத்தார். அவர் மிகவும் உறுதியானவராக, அச்சமற்றவராக, மகிழ்ச்சியானவராக,மரிப்பதில் விருப்பமுள்ளவராக இருப்பதைக் கண்டு வியந்தனர்.
அவர் எரிக்கப்படும் இடத்தை அடைந்ததும், டாக்டர் டெய்லர் அங்கு கூடியிருந்த தனது சபையினர் அனைவரிடமும் கண்ணீருடன், “தேவனின் பரிசுத்த வார்த்தையையும், அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்களையும் தவிர வேறு எதையும் நான் உங்களுக்குக் கற்பிக்கவில்லை. பரிசுத்த வேதாகமம் ஆசீர்வதிக்கப்பட்ட புத்தகம். என் இரத்தத்தால் அதை முத்திரையிட நான் இன்று இங்கு வந்திருக்கிறேன்” என கூறினார்.
அவர் முழங்காலிட்டு, ஜெபம் செய்து, தொழு மரத்திற்குச் சென்றார். அவர் அந்த நேரத்தில் தொழு மரத்தை முத்தமிட்டு, அதற்கு எதிராக நின்று, கைகளை ஒன்றாகக் குவித்து, கண்களை பரலோகத்தை நோக்கி ஏறெடுத்தார். அவர் தொடர்ந்து ஜெபித்தார். அவர்கள் அவரை சங்கிலிகளால் பிணைத்து, கட்டைகளை அந்த இடத்தில் வைத்தார்கள். அவர்கள் நெருப்பை ஏற்றியபோது, டாக்டர் டெய்லர் தனது இரு கைகளையும் உயர்த்தி, தேவனை நோக்கி, “பரலோகத்தின் இரக்கமுள்ள தந்தையே, என் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நிமித்தம், என் ஆத்துமாவை உம் கரங்களில் ஏற்றுக்கொள்ளும்” என்று கூறினார்.
அழுகையோ, அசைவுகளோ இல்லாமல், கைகளை கட்டிக் கொண்டு நெருப்பில் நின்றார். அவர் அந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து உடனே மரிக்கும்படியாக, அந்த நகரத்தைச் சேர்ந்த ஒருவர் நெருப்பை நோக்கி ஓடி வந்து, நீண்ட கைப்பிடியைக் கொண்ட கோடரியால் அவரது தலையில் ஓங்கி அடித்தார். டெய்லர் உடனடியாக மரித்தார் அவரது சடலம் தீயில் விழந்தது.
இந்த சம்பவத்தையும் இதைப் போன்ற பல வரலாற்று நிகழ்வு சம்பவங்களையும் படிக்கும்போது, டெய்லர் போன்றவர்கள் இப்படிப்பட்ட துன்பங்களைச் சகிக்க என்ன காரணம் என்று யோசிக்கிறோம். இதற்கான ஒரு காரணம் என்னவென்றால், கிறிஸ்தவ வாழ்க்கையானது உபத்திரவத்திற்கான அழைப்பு என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள், அதனால் தான் துன்பம் வந்தபோது அவர்கள் ஆச்சரியப்படவில்லை என்று நான் நம்புகிறேன். 1 பேதுரு 4:12- ல் உள்ள வார்த்தைகளை அவர்கள் மனதில் கொண்டிருந்தார்கள், “பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாதீர்கள்.”
மத்தேயு 5:11 “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.”
மத்தேயு 10:34-36 “34பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.35எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். 36ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.”
மாற்கு 10:29-30 “29ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. 30உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.”
யோவான் 15:20 “ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்.”
மற்ற புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களும் இந்த உண்மையை நமக்கு நினைவூட்டுகிறார்கள். 2 தீமோத்தேயு 3:12ல் “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.” என்று பவுல் நமக்குச் கூறுகிறார். 1 யோவான் 3:13ல் “என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள்” என்று யோவான் நமக்கு நினைவூட்டுகிறார்.
அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தையோ அல்லது எபிரேய நிருபம் 11 வது அதிகாரத்தையோ வாசிக்கும்போது, சபையின் தொடக்க ஆண்டுகளில் தேவனுடைய மக்கள் அனுபவித்த கல்லெறிதல்கள், சிறைபிடிப்புகள், சவுக்கடிகள் மற்றும் படுகொலைகள் நமக்கு இதை தெளிவாக நினைவூட்டப்படுகின்றன. 1ஆம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை தேவனுடைய மக்கள் உலகத்தின் கைகளில் பட்ட துன்பங்களுக்கு சபை வரலாறு சாட்சியமளிக்கிறது. மனித வீழ்ச்சியிலிருந்து, சாத்தானின் மக்களுக்கும் தேவனுடைய மக்களுக்கும் இடையே ஒரு நிலையான பகை உள்ளது. சாத்தான் தேவனுக்கு எதிராக நிற்பதால், தேவனையும் அவருக்காக நிற்கும் அனைவரையும் வெறுக்கும்படி அவன் தன் பிள்ளைகளைத் தூண்டுவான். எனவே, இயேசுகிறிஸ்துவும் அப்போஸ்தலர்களும் துன்பத்தின் யதார்த்தத்தைப் பற்றி நம்மை எச்சரிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
1 பேதுரு 4:12 க்குத் திரும்புவோமாக. சில சமயங்களில் நாம் சந்திக்கும் சோதனைகளை பேதுரு இவ்வசனப்பகுதியில் விவரிக்கிறார். கிறிஸ்தவர்கள் சோதனைகளை எதிர்பார்ப்பது மட்டுமல்லாமல், அவற்றைக் கண்டு ஆச்சரியப்படக்கூடாது, சில சமயங்களில், இந்த சோதனைகள் தீவிரமாக அல்லது கடுமையானதாக இருக்கும். “அக்கினி” [எரிதல்] என்ற வார்த்தையின் அர்த்தம் இதுதான். பழைய ஏற்பாட்டில் அதே வார்த்தை “சூளை” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் பேதுருவின் நிருபத்தை பெற்ற கிறிஸ்தவர்கள் அனுபவித்த உபத்திரவத்தின் கடுமையையும், நம் காலத்தில் சிலர் அனுபவிக்கும் உபத்திரவத்தையும் அது விவரிக்கிறது.
இந்தக் கட்டத்தில், “இவ்வளவு கடுமையான துன்பத்தின் பயன் என்ன?” என்று ஒருவர் கேட்கலாம். அந்தக் கேள்விக்கு பேதுரு இந்த வார்த்தைகளால் பதிலளிக்கிறார், “உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினி சோதனை வந்தது.” துன்பம் நம்மைச் சோதிக்க வரும். உண்மையான விசுவாசம் சோதனைகள் மூலமாக மட்டும் நிலைத்திருக்கும். சோதனைகளை எதிர்கொள்ளும்போது தவறான விசுவாசம் வீழ்ச்சியடைகிறது. முன்னதாக, 1 பேதுரு 1:6-7 ல், பொன்னானது நெருப்பால் சோதிக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுவதைப் போல விசுவாசியின் விசுவாசம் சோதிக்கப்பட்டு உபத்திரவத்தால் சுத்திகரிக்கப்படுவதைப் பற்றி பேதுரு கூறினார். நெருப்பு தங்கத்தின் தரத்தை வெளிப்படுத்துகிறது. அது உண்மையானதாக இருந்தால், அது நெருப்பில் போடப்படும் செயல்முறைக்குப் பிறகு இன்னும் தூய்மையாக விளங்கும். உண்மையான கிறிஸ்தவனுக்கும் அப்படியே நடக்கும். சோதனைகளுக்குப் பிறகு அவன் தூய்மையானவனாகிறான்.
விசுவாசிகளுக்கு உபத்திரவம் அவசியம் தேவை. அப்படியில்லையென்றால் வேறு எப்படி நாம் நமது குருவைப் போல் மாற முடியும்? நம் சத்துருக்களை நேசிக்கவும், நம்மை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யவும், நம்மைத் துன்புறுத்துபவர்களுக்காக ஜெபிக்கவும் வேறு எப்படி கற்றுக்கொள்வது? வேறு எப்படி நாம் மிகவும் அடக்கமாகவும், மென்மையாகவும், உடைக்கப்பட்டவர்களாகவும், மற்றவர்களின் தேவைகளுக்கு அதிக உணர்திறன் உடையவர்களாகவும் மாற முடியும்? சோதனைகள் நம்மை சுத்திகரிக்க தேவனால் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ளத் தவறும்போது, நமக்கு “புதுமையான ஒன்று நடப்பது போல் சோதனைகளுக்கு எதிர்வினையாற்றுவோம்” என்று பேதுரு கூறுகிறார்.
துரதிர்ஷ்டவசமாக, “எனக்கு புதுமையான ஒன்று நடக்கிறது” என்பது பல விசுவாசிகளின் பதிலாக இருக்கிறது. ஒருவேளை, கிறிஸ்தவ வாழ்க்கையானது ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியுடன் கூடிய பிரச்சனையற்ற ஒன்று என்று அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்குமோ என்று தெரியவில்லை, அப்படியிருந்தால் அது வேதம் கற்பிக்கும் போதனைகளுக்கு நேர் எதிரானது. அத்தகையவர்கள் சோதனைகளை எதிர்கொள்ளும் போது அதற்கு சரியான மறு உத்தரவு அளிக்கும் வழியை அறிந்திருக்க மாட்டார்கள். அதனால்தான் மக்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கு முன்பு அதற்கு செலுத்த வேண்டிய விலைக்கிரயத்தை கணக்கிடுவது முக்கியம்.
தம்மைப் பின்தொடர்வதற்கு முன் மக்கள் அதன் விலைக்கிரயத்தை கணக்கிட வேண்டும் என்று இயேசுகிறிஸ்துவே கூறியிருக்கிறார் [லூக்கா 14:26-35]. விசுவாசத்திற்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும் போது ஓடிப்போகும் அரை மனதுள்ள சீஷர்களை உருவாக்குவதில் அவர் ஒருபோதும் ஆர்வம் காட்டவில்லை. சோதனைகள் வரும்போது தப்பி ஓடுபவர்கள், கற்பாறை நிலத்தில் விழுந்த விதையைப் போல உணர்ச்சிபூர்வமான அடிப்படையில் கிறிஸ்துவுக்கு பதிலளிப்பவர்கள். அத்தகைய மக்களைப் பற்றி இயேசு பின்வருமாறு விவரிக்கிறார், “16 அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும், 17 தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்” [மாற்கு 4:16-17].
மறுபுறம், விலைக்கிரயத்தைக் கணக்கிடுபவர்கள் தங்கள் முழு பாவத்தையும். பரிதபிக்கப்பட்ட நிலையையும் உணர்ந்து, பரிசுத்த ஆவியால் செயல்படுத்தப்படும் கிறிஸ்துவின் நிபந்தனைகளின்படி அவரிடம் வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையைப் போன்றவர்கள், சோதனைகள் வரும்போது சகித்துக் கொள்வார்கள், “நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக்கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்” [லூக்கா 8:15]. அவர்கள் துன்பத்தை எதிர்பார்க்கிறார்கள், சோதனைகள் வரும்போது ஆச்சரியப்படுவதில்லை. அதனால் அவர்கள் தாங்கிக்கொள்கிறார்கள்!
துன்பத்தை எதிர்பார்த்தும், அதைக் கண்டு ஆச்சரியப்படாமலும் இருக்க, பரிசுத்த ஆவியானவர் வழியாய் கர்த்தர் நமக்கு நினைவூட்டும்படி தொடர்ந்து மன்றாடுவோம். நாம் இயேசுவுக்காக வாழும்போது பல்வேறு வடிவங்களில் நிராகரிப்பும் உபத்திரவமும் வரும். இவ்விதமான விவிலியப் புரிதலைக் கொண்டிருப்பது குறைந்தது இரண்டு காரியங்களையாவது நிறைவேற்றும்:
(1) சோதனைகளைச் சந்திக்கும்போது தேவனுக்கு எதிராக முறுமுறுப்பதை அது தடுக்கும்.
(2) பிலிப்பியர் 1:29 ல் பவுல் நமக்கு நினைவூட்டுவது போல, “இயேசுகிறிஸ்துவுக்காகப் பாடுபடுவதும் அதை ஒரு பாக்கியமாகக் கருதுவதும் நம் இருதயங்களை வலுப்படுத்தும்” [பிலிப்பியர் 1:29]!