பண ஆசையின் நான்கு ஆபத்துகள்

(English Version: 4 Dangers of Loving Money)
எல்லாவற்றையும் விட பணம் நமக்கு எப்படி முக்கியமானது என்பதை ஒரு பழம் பெரும் நகைச்சுவை நடிகர் தன் நாடகத்தில் இவ்வாறு விளக்குகிறார். அந்த நடிகர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு ஆயுதமேந்திய கொள்ளையன் அவரை அணுகி, “உன் பணம் அல்லது உன் உயிர்” எது வேண்டும் என்று கட்டளையிட்டான். ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகும் அந்த நகைச்சுவை நடிகர் எதுவும் சொல்லவில்லை. கொள்ளைக்காரன் பொறுமையிழந்து, “என்ன?” என்று கேட்டான். அதற்கு அந்த நகைச்சுவை நடிகர், “என்னை அவசரப்படுத்தாதே. நான் அதைப் பற்றி யோசித்து கொண்டிருக்கிறேன்” என்று பதிலளித்தார்.
ஒருவேளை இதைப் பார்த்து நாம் சிரிக்கலாம், என்றாலும் பணம் நம்மீது இந்த வகையான பிடிப்பை கொண்டிருக்கிறது என்பது உண்மையல்லவா? அதனால்தான் ஐசுவரியத்தின் ஆபத்துகளைப் பற்றி வேதம் பல எச்சரிக்கைகளை விடுக்கிறது. அந்த எச்சரிக்கைகளில் பல கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளிலிருந்து வந்தவை. அவைகளிலிருந்து கீழே இரண்டு எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன:
மத்தேயு 6:24 “தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.”
லூக்கா 12:15 “பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல”
எபிரெய நிருபத்தின் ஆசிரியரும் “நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்” என்று நமக்கு நினைவூட்டுகிறார், [எபிரெயர் 13:5].
நிச்சயமாக, பணத்தின் மீது ஆசைக்கொள்வதைப் பற்றிய எச்சரிக்கைகள் புதிய ஏற்பாட்டு போதனைகளில் மட்டுமல்லாமல், பழைய ஏற்பாட்டில் பத்தாவது கட்டளையிலும் போதிக்கிறது, “இச்சியாதிருப்பாயாக” [யாத்திராகமம் 20:17].
பண ஆசை பல ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது. அவற்றில் நான்கு ஆபத்துகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
ஆபத்து # 1. தேவனுக்கு பதிலாக அதன் மீது நம்பிக்கையை வைக்க செய்துவிடும்.
நித்திய ஜீவனுக்காக இயேசு கிறிஸ்துவிடம் வந்த ஐசுவரியவானான ஒருவன் இதற்கு ஒரு சிறந்த உதாரணம் [மாற்கு 10:17-22]. அவன் தனது ஐசுவரியத்தின் மீது ஆழ்ந்த பாசம் கொண்டிருந்தான், அதை விட்டு விட அவனுக்கு மனமில்லை. இறுதியில் அவன் நித்திய ஜீவனைக் கொடுப்பவரிடமிருந்து மரண தண்டனையை பெற்று துக்கத்துடன் சென்றான். அந்த ஐசுவரியவான் நியாயதிபதியாகிய இயேசு கிறிஸ்துவின் முன் நிற்கும் போது, அவரை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்ததால் அவனுடைய ஐசுவரியம் அவனை காப்பாற்ற முடியவில்லை.
இன்றைய காலத்திலும், பங்குச் சந்தை வீழ்ச்சிகள், பொருளாதார மந்தநிலைகள், திடீர் வேலை இழப்புகள் அல்லது வணிகத் தோல்விகள் இருந்தபோதிலும், உறுதியான தேவன் மேல் நம்பிக்கை வைப்பதற்கு மாறாக உறுதியற்ற செல்வங்களில் மக்கள் தங்கள் நம்பிக்கையை வைக்கிறார்கள், [1 தீமோ 6:17]. நீதிமொழிகள் 11:4, “கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.” என்று சரியான நேரத்தில் எச்சரிப்பதில் ஆச்சரியமில்லை.
ஆபத்து #2 இந்த உலகத்தில் வாழும்போதே துயரங்களை கொண்டு வரும்.
ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள் [1 தீமோ 6:9]. என்று வேதம் தெளிவுப்பட கூறுகிறது. அதிக பணம் சம்பாதிப்பதற்கான தூண்டுதல் மக்களை நீண்ட நேரம் வேலை செய்யவும், தேவனையும், குடும்பத்தையும் புறக்கணிக்கவும், மற்றும் பாவமான வழிகளில் பணம் சம்பாதிக்கவும் வழிவகுக்கிறது.
பணம் என்பது மகிழ்ச்சியைத் தவிர மற்ற எல்லாவற்றையும் தரக்கூடிய உலகளாவிய ஒரு பொருளாக பயன்படுத்தப்பட கூடும் என்று சரியாகச் சொல்லப்பட்டிருக்கிறது! இதுவரை வாழ்ந்த பணக்காரர்களில் ஒருவரான ராக்ஃபெல்லர், “நான் பல மில்லியன்களை சம்பாதித்தேன், ஆனால் அது எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை“ என்று கூறினார். பணக்காரரான ஹென்றி ஃபோர்டு [ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் நிறுவனர்] ஒருமுறை இவ்வாறு கூறினார், “நான் மெக்கானிக்காக இருந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.” வேதத்தில் காணப்படும் ஐவுசுவரியவானான சாலொமோனும் “வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும், அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது.” [பிரசங்கி 5:12], என்று கூறியிருக்கிறார்.
ஆபத்து # 3. அது சுய நலத்திற்கு நம்மை வழிநடத்தும்.
நம்மிடம் இருக்கும் ஒன்றை நாம் அதிகமாக விரும்பும்போது, இயற்கையாகவே அதை விட்டுவிட தயக்கம் காட்டுவோம், அதனால் அதைப் பிடித்து வைக்க முயற்சி செய்வோம். இப்படி செய்வது கர்த்தருடைய பணிக்குக் கொடுப்பதில் சுயநலம் [ஆகாய் 1] மற்றும் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சுயநலம் [1 யோவான் 3:16-18] போன்ற சுயநலத்தின் மேலாதிக்கத்தை விளைவிக்கிறது.
நாம் ஞானஸ்நானம் எடுத்தபோது, நமது வங்கிக் கணக்கும் சேர்ந்து ஞானஸ்நானம் பெற்றதை மறந்து விடுகிறோம்! நம்முடைய எல்லாப் பணமும் தேவனுக்குச் சொந்தமானது என்பதை ஏற்க மறுக்கிறோம். அவர் நம்முடைய பராமரிப்பில் ஒப்படைத்தவைகளின் மேல் நாம் உக்கிராணக்கார்களாக இருக்கிறோம். தேவன் நம்மைச் செழிக்கச் செய்யும்போது, நம்முடைய கொடுக்கும் தரத்தை நாம் உயர்த்த வேண்டும் என்று அவர் விரும்பக் கூடும். ஆனால் நமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறோம். எனினும் நாம் ஒரு சவாலான சூழ்நிலையில் வாழ்கையில், தேவன் நம்மைச் செழிக்கச் செய்யும்போது, நம் வாழ்க்கை நிலைமைகளை நாம் சரியான முறையில் மேம்படுத்தக்கூடாது என்பதை நான் குறிப்பிடவில்லை. இதன் மூலம் கொடுக்கப்படும் எச்சரிக்கை என்னவென்றால், “என்னிடம் இருப்பதெல்லாம் என் மகிழ்ச்சிக்காக மட்டுமே கொடுக்கப்பட்டது” என்று நினைக்கும் மனப்பான்மைக்கு எதிராக நாம் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.
“எவனிடத்தில் அதிகங்கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங்கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்” [லூக்கா 12:48], என்று இயேசு கிறிஸ்து எச்சரித்திருக்கிறார். இந்த வசனத்தின் சத்தியத்தை பொருளாதாரத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் அது உண்மையாகவே நமது பொருளாதாரப் பகுதிக்கும் பொருந்திப்போகிறது!
ஆபத்து # 4. அது நம்மை தற்காலிகமாக கட்டுண்டவர்களாக்கி, நித்தியத்திலிருந்து நம்மை குருடர்களாக்கி விடும்.
பண ஆசை நம் கண்களை மறைத்துவிடும். மாற்கு 10:17-22ல் குறிப்பிடப்பட்டுள்ள ஐசுவரியவான் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறான். இயேசுவுடனான அவனது சந்திப்பு, மிகவும் தற்காலிகமான விஷயமாகிய ஐசுவரியமானது, இயேசுகிறிஸ்துவிடம் மட்டுமே காணப்படும் நித்திய ஐசுவரியவங்களைக் காணாதப்படிக்கு ஒரு நபரைக் குருடாக்கும் ஆற்றலை எவ்வாறு கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.
ஒரு தொழிலதிபனை சந்திக்க ஒரு தேவதூதன் வந்து அவனிடம் ஒரு கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்த கதையிது. எதிர்காலத்தில் ஒரு வருடத்திற்கான பங்குச் சந்தை மேற்கோள்களின் நகலை அந்த மனிதன் கோரினான். அவன் பல்வேறு பங்குச் சந்தைகளில் எதிர்கால நிலைகளைப் படித்தபோது, தனது திட்டங்களைப் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றிய இந்த “உள்” பார்வையின் காரணமாக அவனுக்கு அதிகரிக்கப்போகும் செல்வங்களைப் பற்றியும் பெருமையாகக் கூறினான்.
இறுதியில்அவன் செய்தித்தாள் பக்கம் முழுவதும் ஒரு பார்வை பார்க்கும்போது, அந்த செய்தி தாளின் இரங்கல் செய்தி பத்தியில் தனது சொந்த படத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. அவனது தவிர்க்க முடியாத இந்த மரணத்தின் வெளிச்சத்தில், அவனுடைய ஐசுவரியம் முக்கியமானதாக இருக்கவில்லை என்பதை உணர முடிகிறதா?
லூக்கா 12:13-21ல் உள்ள உவமையின் மூலம் இயேசு கிறிஸ்து இந்த சத்தியதை கொண்டு தான் எச்சரித்திருக்கிறார். இந்த உவமையானது உலகின் தற்காலிக செல்வங்களுக்குக் கட்டுப்பட்டு, தேவனுக்குப் பதிலாக செல்வங்களைப் பின்தொடர்ந்ததால் நித்திய ஜீவனுக்கு குருடனாக இருந்த ஒரு மனிதனைப் பற்றியதாகும். “தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.” (லூக் 12:20-21).
எனவே, பணத்தை நேசிப்பதில் தொடர்புடைய நான்கு தெளிவான ஆபத்துகளும் தற்காலிக மற்றும் நித்திய விளைவுகளைக் கொண்ட ஆபத்துகளாகும்.
அப்படியானால், பண ஆசையிலிருந்து நாம் விடுபடுவதை எப்படி உறுதி செய்வது? அது எளிமையானது. நாம் பணத்தை விட இயேசுகிறிஸ்துவை நேசிக்க வேண்டும். இயேசு கிறிஸ்து பரலோகத்தின் மகிமையை விட்டு நம்மோடு நம் நடுவில் வாசம் செய்யும்படியாகவும், நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படும்படிக்கு நமக்குப் பதிலாக மரித்தார் என்பதை நாம் தொடர்ந்து நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அவருக்கும் நமக்கும் இடையே எதுவும் வந்துவிடக் கூடாது, அதில் பணமும் அடங்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வாழ்விற்கு அப்பால் எந்த மதிப்பும் இல்லாத, அனைத்து பூமிக்குரிய பொக்கிஷங்களுக்கும் மேலாக நாம் அவரை பெரும் பொக்கிஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். நம் வாழ்வின் எல்லா பகுதிகளிலும் அவருடைய இராஜரீகத்திற்கு தலைவணங்க வேண்டும். நம் மீது பணம் கொண்டுள்ள பிடிப்பிலிருந்து ஜெயம் பெற நாம் அவரிடம் அழுது ஜெபிக்க வேண்டும்.
நாம் அப்படிச் செய்யும்போது, பணம் நம்மை கட்டுப்படுத்தி நம்முடைய எஜமானாக இருப்பதற்கு பதிலாக அதை ஒரு அடிமையாகக் கருதுவதற்கு இயேசுகிறிஸ்து, பரிசுத்த ஆவியின் மூலம் நமக்கு அதிகாரத்தைக் கொடுப்பார். நாம் தேவனை நேசிக்கவும், அவருடைய சாயலில் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கவும் அவர் நம்மை பண ஆசையிலிருந்து விடுவிப்பார்!
நீதிமொழிகள் புத்தகத்திலிருந்து தினமும் இந்த ஜெபத்தை மனப்பாடம் செய்து, அதை செயல்முறைப்படுத்துவதற்கு தீர்மானிப்பது எப்படி?
நீதிமொழிகள் 30:8 “மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக.”
சுவாரஸ்யமாக, நீதிமொழிகள் புத்தகத்தில் உள்ள ஒரே ஜெபம் இதுதான். இது அவ்வளவு நடைமுறை ஜெபமாக இல்லை அப்படித்தானே?