பாக்கியவான்கள்—பகுதி 3 துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்

(English version: “The Beatitudes – Blessed Are Those Who Mourn”)
இந்த பதிவானது மத்தேயு 5:3-12 ஆகிய வசனங்கள் வரை விரவியிருக்கும் பாக்கியங்களைப் பற்றிய தொகுப்புகளின் தொடரின் 3வது பதிவாகும். இந்த பகுதியில், ஆண்டவராகிய இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இருக்க வேண்டிய 8 அணுகுமுறைகளை விவரிக்கிறார். எனினும், இந்த பதிவில், மத்தேயு 5:4 இல் விவரிக்கப்பட்டுள்ள “துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் ஆறுதலடைவார்கள்.” என்ற இரண்டாவது அணுகுமுறையைப் பார்ப்போம்.
*******************
நான் வேலைக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மதுக்கடையில் வைக்கப்பட்ட விளம்பரப் பலகையில், “ஒவ்வொரு மணிநேரமும் மகிழ்ச்சியான நேரம்!” என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது. உலகெங்கிலும் உள்ள மக்கள் எதைப் பின்பற்றுகிறார்கள் என்பதன் சாராம்சத்தை அந்த அறிக்கை உண்மையிலேயே மீண்டும் மீண்டும் படம் பிடித்துக்காட்டியது. வாழ்க்கை என்பது ஒரு நல்ல நேரத்தைப் பெறுவதற்கே என்று அந்த அறிக்கையில் நமக்குச் சொல்லப்படுகிறது. இதில் எனக்கு என்ன பயன்? இது எனக்கு மகிழ்ச்சியைத் தருமா? என சிலர் கேட்கக்கூடும். உலகின் நிலவும் மனநிலையை ஒரு எழுத்தாளர் இவ்வாறு சரியாகப் படம்பிடித்துள்ளார்: “பெரும்பாலான மக்கள் கல்லறையில் உள்ள கல்வெட்டில் அவருக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை இருந்தது.” என எழுதுவதில் திருப்தியடைகின்றனர்.
இருப்பினும், இயேசுகிறிஸ்து இதை மத்தேயு 5:4 இல் இவ்வாறு கூறுகிறார், “துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் ஆறுதலடைவார்கள்.” இது முற்றிலும் ஓர் எதிர் கலாச்சாரம்! இயேசுவைப் பின்பற்றுபவர்கள் வித்தியாசமான மேளத்தாளத்திற்கு அணிவகுத்துச் செல்கிறார்கள். ஒரு விமர்சகர் இப்படி சரியாகச் சொல்கிறார், “உலகம் துக்கப்படுபவர்களை விரும்புவதில்லை; அவர்கள் சலிப்பாக அல்லது சோகமாக இருப்பதால் மற்றவர்களின் மகிழ்ச்சியைக் கெடுக்கிறவர்கள்.” ஆனாலும் துயரப்படுபவர்களுக்கு தேவனுடைய ஆசீர்வாதம் உண்டு என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். அவர்கள் மட்டுமே தேவனுடைய அங்கீகாரத்தை அல்லது தயவைப் பெறுகிறார்கள்.
ஆக மொத்தத்தில், கிறிஸ்தவர்கள் ஒருபோதும் சிரிக்கவோ மகிழ்ச்சியாகவோ இருக்கக்கூடாது என்று இது அர்த்தப்படுத்துவதில்லை என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். பல வசனங்கள் நம்மை மகிழ்ச்சியாக இருக்கும்படி கட்டளையிடுகின்றன [பிலிப்பியர் 4:4; 1 தெசலோனிக்கேயர் 5:16]. நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சி கூட துயர மனப்பான்மைக்கு அப்பாற்பட்டதாக இருக்கக்கூடாது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமானது.
இங்கே இயேசுகிறிஸ்து பயன்படுத்திய “துயரம்” என்ற வார்த்தையானது கிரேக்க மொழியில் கடுமையானதும், ஆழ்ந்ததுமான துக்கத்தை விவரிக்கும் வலிமையான வார்த்தையாகும். உதாரணமாக, இயேசுகிறிஸ்து மரித்தபோது சீஷர்களின் துயரத்தை விவரிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது [மாற்கு 16:10]. இயேசுகிறிஸ்து, அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த வார்த்தையின் அர்த்தத்தை நாம் மென்மையாக்க முடியாது என்று நமக்குக் கற்பிக்கிறார்.
மேலும் இவ்வார்த்தையானது நிகழ்காலத்திலும் உள்ளது, இதனால் “துயரத்தில் தொடர்ந்து இருப்பவர்கள் பாக்கியவான்கள்” என்று வசனத்தை குறிப்பிடக்கூடும். எனவே, துயர வாழ்க்கைக்கு இயேசு நம்மை அழைக்கிறார் என்பது தெளிவாகிறது. ஆனால் அவர் என்ன வகையான துயரத்தை இங்கே விவரிக்கிறார்? அந்த கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன், அவர் எந்த வகையான துயரத்தை இங்கு விவரிக்கவில்லை என்று பார்ப்போம்.
இந்த துயரம் எதை குறிப்பிடவில்லை.
இந்த துயரமானது, நேசிப்பவர் மரித்துவிட்டால் அல்லது ஒரு நபர் அவர்கள் விரும்பியதைப் பெறாதபோது ஏற்படும் துயரத்தைக் குறிப்பிடுவதில்லை [எடுத்துக்காட்டு, 2 சாமுவேல் 13:2; 1 இராஜாக்கள் 21:4]. அன்றாட வாழ்வின் பல்வேறு சவால்களால் வாழ்க்கை ஒரு போராட்டமாக மாறும் போது ஏற்படும் துயரத்தையும் இது குறிக்கவில்லை. இறுதியாக, இது மகிழ்ச்சியற்று, தொங்கிப்போன முகத்துடன் சுற்றி வருவதற்கான அடையாளக்குறிப்பும் அல்ல.
விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகள் ஆகிய இருவரும் மேலே குறிப்பிட்ட இந்த வகையான துயரங்களை அனுபவிக்கிறார்கள். இருப்பினும், இயேசுகிறிஸ்து தமது மலைப்பிரசங்கத்தில் விவரிக்கும் துக்கம், விசுவாசிகள் மட்டுமே-அவருடைய உண்மையுள்ள சீஷர்கள் மட்டுமே வெளிப்படுத்தக்கூடிய ஒரு அணுகுமுறையாகும்.
இந்த துயரம் எதை குறிப்பிடுகிறது.
இங்கே இயேசுகிறிஸ்து விவரிக்கும் துயரமானது பாவத்தை நினைத்து புலம்புவதாகும். “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்” [மத்தேயு 5:3] என்ற முதல் ஆசீர்வாதத்தை நினைவில் வையுங்கள், இதன் பொருள் வறுமையை விட ஆவிக்குரிய எளிமையைக் குறிக்கிறது. அதேபோல், இயேசு இங்கு விவரிக்கும் துயரமானது ஆவிக்குரிய துயரம்—இருதயத்தின் ஆழத்தில் இருந்து பாவத்தை நினைத்து புலம்புதல்—கடுமையான துக்கம்! விசுவாசிகள் மட்டுமே அத்தகைய அணுகுமுறையை ஒரு வாழ்க்கைமுறையாகக் காட்ட முடியும்.
நீங்கள் இங்கே பார்க்கிற, முதலாவது பாக்கியமான ஆவியில் எளிமையானது, பாவத்தைப் பற்றிய நமது புரிதலின் அறிவுசார் பக்கத்தை விவரிக்கிறது. மேலும் 2 வது பாக்கியமாகிய துயரமானது, பாவத்தைப் பற்றிய நமது புரிதலின் உணர்ச்சிப் பக்கத்தை விவரிக்கிறது. இவைகள் இரண்டும் ஒன்றாக இணைந்துச் செல்கிறது. ஒரு நபர் குற்ற உணர்ச்சிக்கு உட்பட்டு, அவர்கள் ஆவிக்குரியரீதியில் திவாலாகிவிட்டதாக உணர்ந்தால் [அதாவது, ஆவியின் வறுமை], அதற்காக வருந்துகிறதாகும் [அதாவது, பாவத்திற்காக துக்கம் கொள்வதாகும்]. “பாவம் எப்பொழுதுமே கண்ணீரை வரவைக்கும்” என்று முதுபெரும் எழுத்தாளர் ஒருவர் சொன்னார். பாவத்தைப் பற்றிய துக்கம் மனமாற்றத்தின் போது மட்டும் இருக்க வேண்டும், ஆனால் நாம் தொடர்ந்து பாவம் செய்வதால் தொடர்ந்து இருக்க வேண்டும்.
யாக்கோபு 4:9—ஆம் வசனமும் இந்த சத்தியத்தை ஆதரிக்கின்றது, “நீங்கள் துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள்; உங்கள் நகைப்பு துக்கிப்பாகவும், உங்கள் சந்தோஷம் சஞ்சலமாகவும் மாறக்கடவது.” சுவாரஸ்யமாக இந்த வசனத்தில் காணப்படுகின்ற “துயரம்” என்ற வார்த்தை மத்தேயு 5:4 இல் இயேசுகிறிஸ்து பயன்படுத்தும் அதே கிரேக்க வார்த்தையாகும். யாக்கோபின் உடனடி சூழல், அங்குள்ள துயரம் ஆவிக்குரிய துக்கம்-பாவத்திற்கான துக்கம் என்பதை தெளிவுபடுத்துகிறது.
2 கொரிந்தியர் 7:10 ல் உள்ள வேத வசனம் இரண்டு விதமான துயரம் அல்லது பாவத்தின் மீதான துக்கத்தை விவரிக்கிறது. ஒன்று தெய்வீக துக்கம், மற்றொன்று லௌகீக துக்கம்: “தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.” தெய்வீக துக்கம் [அல்லது துயரம்] தேவனை மையமாகக் கொண்டதும், பாவத்திலிருந்து மனந்திரும்பி ஒருவரை தேவனிடம் திரும்பச் செலுத்துகிறதுமாய் இருக்கிறது. உலக துக்கம் சுயநலம் கொண்டது, அது தேவனிடம் திரும்பிச் செல்லாது உதவாது.
பேதுருவும், யூதாசும் இதற்கு சிறந்த உதாரணமாக இருக்கின்றனர். இயேசுவைக் காட்டிக் கொடுத்ததற்காக இருவரும் துக்கம் அனுசரித்தனர். பேதுருவின் துக்கம் அவனை மீண்டும் கிறிஸ்துவிடம் அழைத்துச் சென்றது—இது தேவனை மையமாகக் கொண்ட துக்கம். யூதாஸின் துக்கம் அவனை கிறிஸ்துவிடம் கொண்டு செல்லவில்லை, ஏனென்றால் அது சுயநலமான உலக துக்கம்! இந்த ஆசீர்வாதத்தில், தேவனை மையமாகக் கொண்ட துக்கத்திற்கு அழைப்பு இயேசுகிறிஸ்து விடுக்கிறார்—இது மனந்திரும்பி தேவனிடம் கிட்டிச் சேரவும், கிறிஸ்துவிடம் ஆறுதலை பெறவும் கொண்டு செல்லும்!
ஆழ்ந்த துக்கமின்மை.
ஒரு துக்கரமான காரியம் என்னவென்றால், பல விசுவாசிகளின் துக்கம் உலக துக்கத்தை ஒத்திருக்கிறது. துக்கம் என்பது பெரும்பாலும் ஆசைகள் நிறைவேறாதது, பிரபலமாகாதது, முன்னேற்றம் இல்லாதது போன்றவற்றைச் சுற்றியே சுழல்கிறது. நாம் இதை குறித்து ஒரு கணம் சிந்திப்பது அவசியம்.
நமது பெருமை, சுயநலம், உயர்ந்த பதவியை எதிர்நோக்குதல், மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவதற்கான நுட்பமான முயற்சிகள், மற்றவர்களை வார்த்தைகளால் காயப்படுத்துதல் ஆகியவற்றைப் பற்றி நாம் கடைசியாக எப்போது வருத்தப்பட்டோம்? ஒரு பரிசுத்த தேவனை துக்கப்படுத்தியதற்காக, அவருடைய கட்டளைகளை மீறியதற்காக நாம் கடைசியாக எப்போது கடுமையான வலியை உணர்ந்தோம்? நாம் செய்த பாவங்களுக்காக கடைசியாக கண்ணீர் சிந்தியது எப்போது?
ஒரு குறும்புக்கார இளைஞன் ஒரு போதகரிடம், “இரட்சிக்கப்படாதவர்கள் பாவத்தின் பாரத்தை சுமக்கிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். நான் ஒன்றும் உணரவில்லை. பாவம் எவ்வளவு கனமானது? பத்து பவுண்டுகளா? அல்லது எண்பது பவுண்டுகள்” என்று கேட்டார். அதற்கு அந்த போதகர், “நானூறு பவுன் எடையை ஒரு பிணத்தின் மீது வைத்தால், அது சுமையை உணருமா?” என்று இளைஞர்களிடம் கேட்டார். அதற்கு அந்த இளைஞன், “அது மரித்துவிட்டதால் எதுவும் உணராது” என்று பதிலளித்தான்.
அந்த போதகர் இவ்வாறு கூறி முடித்தார், “அந்த ஆவியும் உண்மையில் மரித்துவிட்டது, அது எந்த பாவச் சுமையையும் உணராது அல்லது அதன் பாரத்தைப் பற்றி அலட்சியமாக இருக்கிறது, அதன் இருப்பைப் பற்றி புரட்டுகிறது.”
விசுவாசிகள், ஆவிக்குரிய ரீதியில் மரித்தவர்கள் அல்ல என்பதை நாம் பார்க்க வேண்டியது அவசியம். அவர்கள் ஆவியானவரால் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளனர் [எபிரேயர் 2:4-5]. அவர்கள் மீண்டும் பிறந்தவர்கள். புதிய பிறப்பின் ஒரு தெளிவான ஆதாரம் பாவத்தின் கனத்தை உணர வேண்டும்! பாவத்தின் கனம் இல்லாத இடத்தில், துக்கம் இல்லாத இடத்தில், “புதிய பிறப்பு உண்மையில் நிகழ்ந்ததா?” என்ற நியாயமான கேள்வியை கேட்பது அவசியம்.
கிருபையால் நாம் இரட்சிக்கப்படுவதால், நம்முடைய பாவங்களுக்காக அழ வேண்டிய அவசியமில்லை என்று அடிக்கடி நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்கிறோம். நாம் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, இயேசுகிறிஸ்து அளிக்கும் மன்னிப்பைப் பெற்று, முன் செல்ல வேண்டும். நாம் அதை விரைவாக செய்து முடித்துவிட விரும்புகிறோம். அல்லது, சில சந்தர்ப்பங்களில், நாம் நமது பாவங்களை விட்டுவிட விரும்புவதில்லை. இன்னும் அதை சிறிது காலம் அதை வைத்திருக்க விரும்புகிறப்படியால், அதற்காக வருத்தப்படுவதை விட்டு விலகி இருக்கிறோம். ஏனென்றால் நாம் துக்கப்பட்டால் நாம் விட்டுக்கொடுக்க வேண்டியதாக இருக்கும்! மேலும் நாம் துக்கம் அனுசரிக்கும்போது, பெரும்பாலும் அந்த பாவங்களுக்குத் தான் நம் மேல் அதிகாரம் இல்லாமல் போய்விடும்!
ஆனால் தம்மைப் பின்பற்றுபவர்கள் தங்கள் எல்லா பாவங்களுக்காகவும் ஆழ்ந்து வருத்தப்பட வேண்டும் என்று இயேசு தெளிவாகக் கூறுகிறார். சிறிய பாவம் கூட அவர்களைத் தொந்தரவு செய்கிறது! அதிலிருந்து விடுபடுமாறு அழுகிறார்கள். நிச்சயமாக அது நம்பிக்கையற்ற விரக்தியின் அழுகை அல்ல, ஆனால் உள்ளிழுக்கும் பரிசுத்த ஆவியானவர் தூண்டும் ஒரு தீவிர அழுகை—இது செயலைக் குறித்து வருத்தப்படுவது மட்டுமல்லாமல் விடுதலையையும் விரும்புகிறது.
ஜான் ஸ்டாட் என்ற ஒரு விளக்கவுரையாளர் இவ்வாறு கூறுகிறார்: “சில கிறிஸ்தவர்கள், குறிப்பாக அவர்கள் ஆவியால் நிரப்பப்பட்டிருந்தால், தங்கள் முகத்தில் நிரந்தரமான புன்னகையை அணிந்துகொண்டு, தொடர்ந்து கொந்தளிப்பாகவும் குமிழியாகவும் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்வது போல் தெரிகிறது. ஒருவர் எவ்வளவு வேத சத்தியத்திற்கு மாறானவராக இருக்க முடியும்?” வேதத்தின்படி, அவர் சொல்வது சரிதான், ஏனென்றால் பாவத்தைப் பற்றிய இந்த வகையான லேசான மனப்பான்மையை தெய்வீக மக்களின் பிரதிபலிப்பாக நாம் பார்க்கவில்லை.
தாவீது பாவம் செய்தபோது அத்தகைய பதிலை வெளிப்படுத்தினான். அவனுடைய வார்த்தைகளைக் கவனியுங்கள்: “என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று.” [சங்கீதம். 38:4]. “என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்தினிமித்தம் விசாரப்படுகிறேன்.” [சங்கீதம் 38:18]. “என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.” [சங்கீதம் 51:3]. உலகம் சொல்லும், அவனை பார்த்து “தாவீதே, என்ன ஒரு எதிர்மறையான அணுகுமுறை . இது ஒரு மகிழ்ச்சிக்கான செய்முறை அல்ல!” என கூறக்கூடும். ஆனாலும், தேவன் கூறுகிறார், “ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்” [அப்போஸ்தலர் 13:22]. எனவே, ஒருவரின் பாவத்திற்காக புலம்புவது தெய்வபக்தியுடன் ஒத்துப்போகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டியது அவசியம்.
மற்றவர்களின் பாவங்களுக்காக துக்கித்தல்.
வேதமானது, விசுவாசிகளை தங்கள் பாவங்களுக்காக துக்கப்படுவதற்கு அழைப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களின் பாவங்களுக்காக துக்கப்படுவதற்கும் அழைக்கிறது. பாலியல் ஒழுக்கக்கேட்டைப் பொறுத்துக் கொண்டதற்கு பிரசித்தமான கொரிந்திய சபைக்கு, பவுல் அவர்கள் மற்றவர்களின் பாவங்களுக்காக துக்கம் அனுசரிக்கத் தவறியதை குறித்து இவ்வாறு கண்டிக்கிறார்: “இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்நீங்கள் துக்கத்திற்குச் சென்றிருக்க வேண்டாமா?” [1 கொரிந்தியர் 5:1-2].
நாம் சற்று பார்ப்போம் என்றால், உலகம் மற்றவர்களின் பாவங்களை கண்டிக்கிறது அல்லது மன்னிக்கிறது. ஆனால் நாம் முதலில் மற்றவர்களின் பாவங்களுக்காக வருத்தப்பட வேண்டும். அதுவே வேதத்தில் காணப்பட்ட விசுவாசிகளின் மாதிரியாக இருந்தது [சங்கீதம் 119:36; எரேமியா 13:17; பிலிப்பியர் 3:18].
இந்த பாக்கியத்தைப் பற்றி பேசிய இயேசுகிறிஸ்துவும் மற்றவர்களின் பாவங்களுக்காக வருந்தினார். லூக்கா 19:41 கூறுகிறது, “அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுதார்,” ஒரு சில நாட்களில் தம்மைக் கொன்றுவிடும் பெரும் பாவத்தை செய்யப்போகிற அந்த நகரத்தைப் பார்த்து அவர் அழுதார்! இயேசுகிறிஸ்துவை துக்கங்கள் [அல்லது துயரங்கள்] கொண்டவர் என்று வேதம் விவரிப்பதில் ஆச்சரியமில்லை [ஏசாயா 53:3]. அவர், மற்றவர்களின் பாவங்கள் தம்மைத் துன்புறுத்துகின்றன என்ற பொருளில் துக்கமுள்ள மனிதர். அவர் தம்முடைய பாவங்களுக்காக அல்லாமல் மற்றவர்களின் பாவங்களுக்காக மிகவும் வருந்தினார். ஏனென்றால் அவர் “ஒரு பாவமும் செய்யவில்லை” [1 பேதுரு 2:22].
அதன் வெளிச்சத்தில், இயேசுவைப் பின்பற்றுபவர்களாகிய நாம், சக விசுவாசிகளின் பாவங்கள் உட்பட நம்மைச் சுற்றியுள்ள மக்களின் பாவங்களால் பாதிக்கப்படாமல் இருப்பது எப்படி? நம்மைச் சுற்றிலும் பெருகிக் கிடக்கும் பாவத்தைப் பார்த்து நாம் எப்படி சிரித்துக்கொண்டே இருக்க முடியும்?
கிறிஸ்துவ வாழ்வு எல்லாமே புன்னகைத் தான் என்ற பொய்யை பலர் பின்பற்றுகின்றனர். ஆம், தேவன் “நாம் அநுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிறார்” [1 தீமோத்தேயு 6:17]. மேலும் “மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்” என்று சாலொமோன் கூறுகிறான் [நீதிமொழிகள் 17:22]. ஆனால், நல்ல விஷயங்களை அனுபவிப்பது மட்டும்தானா வாழ்க்கை? சோகத்தை எல்லாம் தவிர்க்க எதை வேண்டுமானாலும் செய்ய முயற்சிக்கலாமா? எல்லா துக்கத்தையும் மழுங்கடிக்கும் அளவுக்கு நம்மை மகிழ்வித்துக்கொள்ளலாமா?
நமக்கு நாமே நேர்மையாக சிந்திப்போமானால், இந்த வாழ்க்கையின் இன்பத்தை அளவுக்கு அதிகமாக அனுபவிப்பதில் நாம் குற்றவாளிகளாக இருக்கிறோம் அல்லவா? இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்வது முட்டாள்தனமானது மட்டுமல்ல ஆவிக்குரிய ரீதியில் ஆபத்தானதும் கூட என்பதை நாம் உணர வேண்டும். இன்ப ஆதிக்க வாழ்க்கையின் வெறித்தனமான நாட்டத்திற்கு எதிராக நம்மை எச்சரிக்கும் சாலமோனின் புத்திசாலித்தனமான வார்த்தைகளை சற்று கவனிப்போம்: “விருந்து வீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான். நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம்; முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும். ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்; மூடரின் இருதயம் களிப்பு வீட்டிலே இருக்கும்” [பிரசங்கி 7 :2-4].
துக்கத்தைத் தொடருங்கள் என்று சாலொமோன் கூறுகிறான், துக்கத்தைத் தொடருங்கள் என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். நம் இருதயங்களில் நாம் பின்னியிருக்கும் வஞ்சக வலையிலிருந்து நம்மை அசைக்க வடிவமைக்கப்பட்ட நேரடியான வார்த்தைகள் இவை. நாம் அழுவதும் சிரிப்பதும் நம் இருதயத்தின் உண்மை நிலையை வெளிப்படுத்துகிறது. நாம் நமக்கு நேர்மையாக சிந்திப்போமானால், நாம் அழ வேண்டிய விஷயங்களைப் பார்த்து சிரிக்கவும், சிரிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி அழவதும் குற்றமாக காணப்படிவில்லையா?
இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகள் தெளிவாக உள்ளன: தங்கள் பாவங்களுக்காகவும் மற்றவர்களின் பாவங்களுக்காகவும் தொடர்ந்து துக்கப்படுகிறவர்களை மட்டுமே தேவன் ஆசீர்வதிப்பார். அப்படிப்பட்டவர்களைத்தான் அவர் அங்கீகரிக்கிறார்.
ஆறுதல் வாக்குத்தத்தம்
மேலும்,ஆறுதலானது துக்க மனப்பான்மையைப் பின்தொடர்வதன் வெகுமதியா? “அவர்கள் ஆறுதலடைவார்கள்” என்ற மத்தேயு 5:4—ன் கடைசிப் பகுதியைப் பாருங்கள். அவர்கள் மட்டுமே ஆறுதலடைவார்கள்—இந்த நிகழ்கால வாழ்க்கையிலும், எதிர்காலத்திலும் எல்லா பரிபூரணத்திலும் இயேசு தம்முடைய ராஜ்யத்தை அமைப்பதற்குத் மறுபடியும்போது, தேவன் நம் கண்ணீரையெல்லாம் துடைத்துவிடுவார். இது இயேசுகிறிஸ்துவின் வாக்குத்தத்தம்.
“ஆறுதல்” என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது, அதாவது ஆறுதல், ஊக்கம் மற்றும் பலப்படுத்த உடன் வரும் ஒருவர் என்பவைகள் இதன் பொருள். தேவன் “சகலவிதமான ஆறுதலின் தேவன்” என்று அழைக்கப்படுகிறார் [2 கொரிந்தியர் 1:3]. இயேசு ஆறுதல் அளிப்பவர் என்று அழைக்கப்படுகிறார் [1 யோவான் 2:1], அதே வார்த்தை பரிந்துப்பேசுகிறவர் என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பரிசுத்த ஆவியானவர் ஆறுதல் அளிப்பவர், ஊக்குவிப்பவர் அல்லது பலப்படுத்துபவர் என்றும் அழைக்கப்படுகிறார் [யோவான் 14:16].
பரிசுத்த ஆவியானவரின் மூலம், பாவத்திற்காக வருந்தும்போது, வேதத்தை வாசிப்பதன் மூலமாகவும், ஒரு பிரசங்கத்தைக் கேட்பதன் மூலமாகவும், மற்ற விசுவாசிகளின் ஐக்கியத்தின் மூலமாகவும் பிதாவும் குமாரனும் நமக்கு ஆறுதலையும் ஊக்கத்தையும் தருகிறார்கள்.
துக்கமடைந்த இருதயங்களுக்கு தேவன் ஆறுதல் அளிப்பார் என்ற நம்பிக்கை தாவீதுக்கு இருந்தது, அது அவரை, “நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்” [சங்கீதம் 34:18; சங்கீதம் 51:17]. நாம் பாவங்களுக்காக வருந்தி, உண்மையான மனந்திரும்புதலுடன் கிறிஸ்துவிடம் வரும்போது, நம் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று பரிசுத்த ஆவியானவர் நமக்கு உறுதியளிக்கிறார். 1 யோவான் 1:9 இவ்வாறு கூறுகிறது, “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.”
வெளிப்படுத்தல் 21:4 இவ்வாறு கூறுகிறது, தேவன் எதிர்காலத்தில் “[நம்] அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.” ஆம், பாவத்திற்காக துக்கத்தின் வாழ்க்கை முறையைத் தொடரும் அனைவருக்கும் காத்திருக்கும் எதிர்காலம் இதுதான்! இந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அந்த மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் ஆறுதலும் மற்றும் வரவிருக்கும் ராஜ்யத்தில் என்றென்றும் அந்த ஆறுதலின் முழு அனுபவமும் உள்ளது.
ஆனால் நீங்கள் தற்போதைய வாழ்நாள் முழுவதும் சிரித்துக்கொண்டே இருக்க விரும்பினால், இந்த துக்க எண்ணத்தைத் தவிர்க்க விரும்பினால், லூக்கா 6:25 இலிருந்து இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளதை சற்று வாசியுங்கள், “திருப்தியுள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு ஐயோ; பசியாயிருப்பீர்கள். இப்பொழுது நகைக்கிற உங்களுக்கு ஐயோ; இனித் துக்கப்பட்டு அழுவீர்கள்.” எதிர் வரவிருக்கும் காலம் தலைகீழாக உள்ளது. பாவத்திற்காக இப்போது அழுங்கள்—என்றென்றும் ஆறுதலோடு இருங்கள். பாவத்தைப் பற்றி இப்போது சிரித்துக்கொண்டே இருங்கள்—என்றென்றும் அழுதுகொண்டே இருங்கள்! இயேசு மிகவும் கடுமையானவர் என்று நான் நம்புகிறேன். இங்கு அவர் கூறிய வார்த்தைகள் நமது தகவலுக்காக மட்டும் அல்ல. அவை நம் மனமாற்றத்திற்கானவை. இவ்வாறான துக்கத்தைத் தொடர்வதை நாம் இலக்காகக் கொள்ள வேண்டும்.
எனவே, நாம் அதை எப்படி செய்வது? நம்முடைய பாவங்களுக்காகவும் மற்றவர்களின் பாவங்களுக்காகவும் துக்கம் அனுசரிக்கும் வாழ்க்கை முறையை நாம் எவ்வாறு பின்பற்றுவது? இதற்கு உதவியாக இருக்கும் 2 வார்த்தைகளின் வடிவத்தில் 2 பரிந்துரைகள் கொடுக்கப்பட்டுள்ளது, அவை: பிரதிபலியுங்கள், ஓடுங்கள் என்பதாகும்.
1. பிரதிபலியுங்கள்.
நமது ஆவிக்குரிய நிலையைப் பற்றி சிந்திக்க நாம் தவறாமல் நேரம் ஒதுக்க வேண்டும். அந்த சமயங்களில், இதுபோன்ற முக்கியமான கேள்விகளை நாம் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்:
நான் ஏன் அடிக்கடி பாவத்தை குறித்து சிந்திக்கிறேன்? நான் விரும்புவதை அடையாதப்போது நான் ஏன் மோசமாக நடந்துகொள்கிறேன்? யாராவது என்னைத் தூண்டினால் நான் ஏன் கோபத்தில் பதில் சொல்கிறேன்? மற்றவர்கள் செழிக்கும்போது நான் ஏன் பொறாமைப்படுகிறேன்? நான் ஏன் அந்த காம எண்ணத்தை விட்டு விலகாமல் அதை தொடர்கிறேன்? நான் ஏன் இப்படிப்பட்ட சுயமரியாதை மனப்பான்மையுடன் மற்றவர்களை மதிப்பிடுகிறேன்? நான் ஏன் தொடர்ந்து என்னை மற்றவர்களுடன் ஒப்பிடுகிறேன்? தேவன் கொடுத்ததில் நான் திருப்தியடையாமல் ஏன் இவ்வளவு குறை கூறுகிறேன்? நான் ஏன் போகக்கூடாத இடங்களுக்குச் சென்று பார்க்கக்கூடாதவற்றைப் பார்க்கிறேன்? பிறரை காயப்படுத்த நான் ஏன் என் வாயைப் பயன்படுத்துகிறேன்?
நாம் நம்மை நிலைநிறுத்தி, நம்மை நாமே குறுக்கு விசாரணை செய்து கொள்ள வேண்டும். இந்த பிரச்சினைகளை நாம் நேர்மையான இருதயத்துடன் கையாள வேண்டும். நம் இருதயங்களை [சங்கீதம் 139:23-24] ஆராய்ந்து, நாம் அறியாத பாவங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும்படி நாம் தேவனிடம் கேட்க வேண்டும்.
எனவே, பரிசுத்த ஆவியானவர் நம் கவனத்திற்குக் கொண்டுவரும் அனைத்து பாவங்களையும் சிந்திக்க நேரம் ஒதுக்குவோம். நம்முடைய பாவங்களின் பாரமானது உண்மையான நம்பிக்கையை உருவாக்கும். பிறகு, நாம் நம்முடைய பாவங்களுக்காக புலம்பத் தொடங்குவோம்—இயேசுவின் மீது எச்சில் துப்பப்பட்டது, சவுக்கால் அவரது முதுகைக் கிழித்து, அவரது கைகளிலும், கால்களிலும் ஆணிகள் அடிக்கப்பட்டன, அவருடைய நெற்றியில் முட்கள் அடிக்கப்பட்டன. “நான் எவ்வளவு பயங்கரமான பாவி! நான் பாவம் செய்கிறேன் என்பது மட்டுமல்ல, நான் செய்ய வேண்டிய பாவத்திற்கு நான் பதிலளிக்கவில்லை என்பதை நான் உணராமலிருந்தால் என் மனந்திரும்புதல் மிகவும் ஆழமற்றது.”
நாம் இந்த நிலைக்கு வரும்போது, இரண்டாவது யோசனைக்கு வருகிறோம்.
2. ஓடுங்கள்.
பிரதிபலிப்பின் நோக்கம் ஆறுதலுக்காக கிறிஸ்துவிடம் ஓடுவதாகும். அவரது வரவேற்கும் கரங்களுக்குள் ஓடுவது—துக்கப்பட்டு, மனந்திரும்பும் பாவியை ஒருபோதும் மறுக்காத கரங்ளுக்குள் ஓடுவது. நாம் துன்பத்தில் மூழ்கி இருக்க வேண்டிய அவசியமில்லை. நாம் பாவம் செய்துவிட்டோம் என்று அவரிடம் சொல்லி, நம்மைத் தூய்மைப்படுத்தும்படி அவரிடம் கேட்கலாம். தயக்கமின்றி, இரக்கமுள்ள இயேசுகிறிஸ்து மன்னிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், துயரத்தில் இருக்கும் நம் ஆத்துமாக்களுக்கு சமாதானத்தையையும் ஆறுதலையும் தருவார்.
கல்லூரியில் புதிய மாணவன் ஒருவன் தனது அழுக்குத் துணிகளை பழையதான ஒரு துணியில் கட்டிக் கொண்டு விடுதி சலவை அறைக்குச் சென்றார். ஆனால் அவன் தனது ஆடைகள் மிகவும் அழுக்காக இருந்ததைக் கண்டு மிகவும் வெட்கப்பட்டான், அவன் அந்த மூட்டையைத் திறக்காமல், அதை ஒரு சலவை இயந்திரத்தில் தள்ளினார். இயந்திரம் நின்றதும், அந்தக் குவியலை ஒரு உலர்த்திக்குள் தள்ளி, கடைசியாக இன்னும் திறக்கப்படாத மூட்டையைத் தன் அறைக்கு எடுத்துச் சென்றான். நிச்சயமாக, ஆடைகள் ஈரமாகி, பின்னர் உலர்ந்திருந்தன, ஆனால் சுத்தமாக இல்லை என்பதை அவன் கண்டுபிடித்தான்.
“உங்கள் பாவங்களை ஒரு சிறிய மூட்டையில் வைக்க வேண்டாம். நான் உங்கள் வாழ்க்கையின் அனைத்து அழுக்கு சலவைகளையும் ஒரு முழுமையான சுத்திகரிப்பு செய்ய விரும்புகிறேன்.” என்று தேவன் கூறுகிறார்.
“அவருடைய [தேவனுடைய] குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” [1 யோவான் 1:7] என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. எனவே, சிந்தித்து செயல்படுவோம். நம் அன்றாட வாழ்வில் இந்த பாக்கியங்களோடு வாழ முற்பட்டால், நாம் அனைவரும் தினமும் பயிற்சி செய்ய பரிந்துரைக்கும் இரண்டு விஷயங்கள் இவை.
நாம் விரக்தியில் விழுவதைத் தடுக்க, இயேசு இந்த பாக்கியங்களை நமக்காக பாதுக்காத்தார் என்பதை நினைவில் கொள்வோம். எனவே, தேவனுடன் ஒப்புரவாவதற்கு முன் அல்லது தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்றால் இந்த துக்க மனப்பான்மையை நாம் கச்சிதமாக வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் வலையில் விழ வேண்டாம். அதற்குப் பதிலாக, நாம் இந்தப் பந்தயத்தில் ஓடும்போது, பரிசுத்த ஆவியானவர் உள்ளிருந்து செயல்படுவதால், இயேசுவைப் போல நம்மை மாற்றுவதற்கு [2 கொரிந்தியர் 3:18]. அவரை நம் முன்மாதிரியாகப் பார்க்கக்கடவோம்.
கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும். இன்று ஒரு புதிய நாளை தொடங்குவோம். இந்த பேருண்மையை நம்பி செயல்படுவதன் மூலம் நாம் மீண்டும் ஒரு புதிய வாழ்வை தொடங்கலாம்: தங்கள் சொந்த பாவங்களுக்காகவும் மற்றவர்களின் பாவங்களுக்காகவும் துயரப்படுபவர்கள் உண்மையில் பாக்கியவான்கள்—அவர்கள் மட்டுமே ஆறுதல் பெறுவார்கள்!