பாக்கியவான்கள்–பகுதி 6 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்

Posted byTamil Editor February 6, 2024 Comments:0

(English version: “Blessed Are The Merciful”)

மத்தேயு 5:3-12 ஆகிய வசனங்கள் வரை விரவியிருக்கும் பாக்கியங்களைப் பற்றிய தொகுப்புகளின் 5 வது பதிவாகும். இந்தப் பகுதியில், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம்மைப் பின்பற்றுபவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இருக்க வேண்டிய 8 அணுகுமுறைகளை விவரிக்கிறார். இந்த பதிவில், மத்தேயு 5:7 ல் விவரிக்கப்பட்டுள்ள “இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.” என்ற ஐந்தாவது அணுகுமுறையைப் பார்ப்போம்.

*******************

 ஜான் வெஸ்லி அவர்கள் ஜார்ஜியா என்ற இடத்தில் தேவனுடைய ஊழியத்தை செய்துகொண்டிருக்கும்போது, ஆளுநர் ஜேம்ஸ் ஒக்லெத்ரோபி தன்னிடமிருந்து ஒரு கோப்பை மதுபானத்தை திருடி குடித்த ஒரு அடிமையை பிடித்து வைத்திருந்தார்.  ஒக்லெத்ரோபியிடம் அந்த அடிமைக்காக ஜான் வெஸ்லி மன்றாடினார். அதற்கு அந்த ஆளுநர் “நான் பழிவாங்க வேண்டும், ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என்று கூற அதற்கு வெஸ்லி நான் தேவனை நம்புகிறேன் ஐயா, நீங்கள் ஒருக்காலும் பாவம் செய்யவே மாட்டீர்களா?” என்றார்.

வெஸ்லியின் காலத்தில் மட்டுமல்ல, இயேசுகிறிஸ்துவின் காலத்திலும் இரக்கம் பெரும்பாலும் வெறுக்கப்பட்டது. கிரேக்கர்களும், ரோமானியர்களும் இரக்கம் காட்டுவதை பலவீனத்தின் அடையாளமாக கருதினர். ஒரு ரோமானிய தத்துவஞானி, “இரக்கம் என்பது ஆத்துமாவின் ஒருவித நோய்” என்று கூறுகிறார்.

இத்தகைய கலாச்சாரத்தைப் பார்த்து இயேசுகிறிஸ்து “இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் இரக்கம் பெறுவார்கள்” என்று இந்த அதிர்ச்சியூட்டும் வார்த்தைகளை கூறினார் [மத்தேயு 5:7]. பழிவாங்குதலையும், கசப்பையும், நம்மை புண்படுத்துகிறதலையும் நாம் காட்டும் உயர்த்திப்பிடிக்கும் நம்முடைய கலாச்சாரத்திற்கும் இவ்வார்த்தைகள் அதிர்ச்சியளிக்க கூடியதாக இருக்கின்றன. ஆனாலும் இயேசுகிறிஸ்து இரக்கம் காட்டவும்,மற்றுமொரு எதிர் கலாச்சார வாழ்கைக்கும் தம்முடைய சீஷர்களை அழைக்கின்றார்!

பாவம் என்ற நோயின் கட்டுப்பாட்டில் இருப்பதை விட, ஆத்துமாவானது இரக்கம் என்ற பலவீனத்தின் அடையாளமாக இருப்பது மேல் என்று இயேசுகிறிஸ்து கூறுகின்றார். இப்படிப்பட்ட வாழ்க்கை முறை தான் “ஆசீர்வதிக்கப்பட்ட” வாழ்க்கை–தேவனின் அங்கீகாரத்தைப் பெறும் வாழ்க்கை!

இரக்கம் விளக்கப்படுகிறது

“Mercy” [இரக்கம்] என்பது ஆங்கில மொழியில் மிக அழகான வார்த்தைகளில் ஒன்றும், விசுவாசத்தில் மிகவும் விலைமதிப்பற்ற சத்தியங்களில் ஒன்றுமாகும். ஒரு கிரேக்க அகராதி இரக்கத்தை இவ்வாறு விளக்குகிறது “இரக்கம் என்ற நல்ல பண்பு, இது மனித இரக்கத்தையும், மனிதனின் மீது தேவனின் இரக்கத்தையும் குறிக்கிறது.”

“இரக்கம்” என்ற இந்த வார்த்தையை நன்கு புரிந்துகொள்ள பின்வரும் கதை உதவியாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன்.

 மகா அலெக்சாண்டரின் இராணுவத்தில் இருந்த ஒரு சிப்பாய் அந்த இராணுவத்தை கைவிட்டப்படியால் சிறை பிடிக்கப்பட்டான். மேலும் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனவே அவனது தாயார் வந்து அலெக்சாண்டரிடம் “தயவு செய்து இரக்கம் காட்டுங்கள்” என்று தொடர்ந்து மன்றாடினாள். அதற்கு அலெக்சாண்டர் அவளிடம் “அவன் இரக்கத்திற்கு தகுதியற்றவன்” என்று பதிலளித்தான்.

 அந்த புத்திசாலியான தாய், அவன் அதற்கு தகுதியானவனாக இருந்தால் அது இரக்கமாக இருக்காது” என்று பதிலளித்தாள்.”

எனவே இரக்கம் என்பது ஒருவர் அதற்குத் தகுதியானவர் என்பதால் கொடுக்கப்பட்ட அல்லது பெறப்பட்ட ஒன்றல்ல. இரக்கம் என்பது தேவையை சந்திக்கும் ஒரு செயல் ஆகும், அது ஆவிக்குரிய, சரீர, அல்லது உணர்ச்சி ரீதியான தேவையாக இருக்கலாம். ஒரு எழுத்தாளர் இவ்விதமாக இரக்கத்தை விளக்குகிறார்: “இரக்கம் காயங்களைப் புரிந்துகொள்கிறது; காயத்தை உணர்ந்து அதை குணப்படுத்த ஏவுகிறது.” வேறுவார்த்தைகளில் கூறுவதானால், இரக்கம் மனதின் காயத்தை புரிந்துகொள்கிறது, மற்றும் அது காயத்தை குணப்படுத்தக்கூடிய சித்தத்தை செயல்படுத்துவதையும் உள்ளடக்கியது.

தேவனுடைய இரக்கம் வெளியரங்கமாக்கப்படுகிறது.

தேவன் நம்மீது இரக்கத்தை காட்டினார் அல்லவா? பாவம் நம்மை எப்படி காயப்படுத்துகிறது என்பதைப் பார்த்தார், அவர் இரக்கத்தால் தூண்டப்பட்டு நம்முடைய பாவத்தை குணமாக்க தம் குமாரனை அனுப்புவதன் மூலம் செயல்பட்டார்.  நம்முடைய பாவத்திற்கேற்ற தன்டனையை தேவன் கொடுக்கவில்லை—அது நியாயத்தீர்ப்பு—ஆனால் அவருடைய இரக்கத்தினால் அதை நம்மிடமிருந்து தடுத்து நிறுத்துகிறார். அவருடைய கிருபையினால் அவரிடம் திரும்பும் அனைவருக்கும் மறுபிறப்பை கொடுக்கின்றார். “தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.” [1 பேதுரு 1:3]. பவுல் தேவனை “இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய்” விவரிக்கின்றார் [எபேசியர் 2: 4]. எபிரெயரின் ஆசிரியர் நம்மை தைரியமாய் கிருபாசனத்தண்டையில் செல்லவும், அங்கு “நாம் இரக்கத்தைப் பெறவும் ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும்” அழைக்கின்றார் [எபிரெயர்4:16].

பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியான மீகா தேவனின் இரக்கத்தை 7:18 ல் விவரிக்கும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். “தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப்பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.” நாம் பாவிகள், நாம் தேவனின் நியாயத்தீர்ப்பைத் தவிர வேறு எதற்கும் தகுதியற்றவர்கள். ஆனாலும், தேவன் அந்த நியாயத்தீர்ப்பை நிறுத்துவது மட்டுமல்லாமல், இரக்கம் காட்டுவதிலும் மகிழ்ச்சியடைகிறார் என்று மீகா கூறுகிறார். நாம் அவரை மிகவும் மோசமாக துக்கப்படுத்தினாலும், அவர் இரக்கங்காட்டத் தயங்குவதில்லை.

நாம் இரக்கம் காட்ட வேண்டும்.

முந்தைய அதிகாரத்தில் அதே மீகா, “மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார். நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்” [மீகா 6: 8]. தேவன் தம்முடைய மக்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதை நீங்கள் கவனிப்பீர்களா? நியாயமாக நடந்துகொள்ளவும், இரக்கத்தை விரும்பவும், மனத்தாழ்மையாக நடக்கவுமே எதிர்பார்க்கிறார் . இரண்டாவதாக “இரக்கம்” காட்டுவதில் மகிழ்ச்சியடைகிற அதே தேவன் [மீகா 7:18] தம்முடைய மக்கள் இரக்கம் காட்டுவது மட்டுமல்ல, இரக்கம் காட்டுவதை நேசிக்க வேண்டும் என்றும் கோருகிறார்!

எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், தேவனின் இரக்கத்தைப் பெற்றவர்கள், அதே வகையான இரக்கத்தை மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது தேவன் வெளிப்படுத்தும் அதே அணுகுமுறையைக் காட்ட வேண்டும். மத்தேயு 5:7 மற்றும் லூக்கா 6:36 இல், “உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.” என்று இயேசுகிறிஸ்து துல்லியமாக குறிப்பிடுகிறார்.

இரக்கத்தைப் பெற்ற விசுவாசியின்—வாழ்க்கை முறையை இயேசுகிறிஸ்து இந்த பிரசங்கத்தில் விவரிக்கிறார் என்பதை நினைவில் வையுங்கள். ஆனால் தாங்கள் உண்மையில் இரக்கத்தைப் பெற்றுள்ளனர் என்பதை எப்படி அறிவார்கள்? மற்றவர்களிடம் இரக்கத்தை காட்டுவதன் மூலம் தான்! இந்த வகையான மக்கள்—இரக்கமுள்ளவர்கள்—தேவனால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். இவர்கள் தேவனின் தயவு பெற்றவர்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். மேலும் இவர்கள்தான் எதிர்காலத்தில் தேவனின் இரட்சிப்பின் முழு அனுபவத்தையும் பெறுவார்கள், இவர்கள் இந்த உலகத்தை விட்டு போகும்போது “இரக்கம் பெறுவார்கள்.”

இரக்கம் பாராட்டாத்தபோது வரும் ஆபத்து.

இரக்கங்காட்ட மறுப்பது ஆழமான தாக்கங்களைக் கொண்டுள்ளது. இரக்கமுள்ளவர்கள் மட்டுமே இரக்கம் பெறுவார்கள் என்பதை இயேசுகிறிஸ்து இங்கே குறிப்பிடுகிறார். யாக்கோபு, தனது நிருபத்தில், இந்த விஷயத்தில் கடிந்துகொள்ளும் மொழி நடையை பயன்படுத்துகிறார். யாக்கோபு 2:12-13 கூறுகிறது, சுயாதீனப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்படையப் போகிறவர்களாய் அதற்கேற்றபடி பேசி அதற்கேற்றபடி செய்யுங்கள், ஏனென்றால் இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைக்கும். நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.” இரக்கமும் நியாயத்தீர்ப்பும் எதிரெதிர் துருவங்கள். நாம் எதைப் பெறுகிறோமோ, அதைக் கொடுப்போம், எதிர்காலத்தில் அதை ஒட்டு மொத்தமாக பெறுவோம்.

நாம் தேவனின் இரக்கத்தைப் பெற்றிருந்தால், அதை இந்த வாழ்க்கையில் மற்றவர்களுக்குக் கொடுப்போம்; மேலும், எதிர்காலத்தில் தேவனின் இரக்கத்தை முழுமையாக பெறுவோம். ஆனால் நாம் தேவனின் இரக்கத்தைப்  பெறவில்லை என்றால், நாம் அதை இந்த வாழ்க்கையில் மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டோம், எதிர்காலத்திலும் அவருடைய இரக்கத்தை பெற மாட்டோம். அதற்கு மாறாக, எதிர்காலத்தில் அவருடைய நியாயத்தீர்ப்பை மட்டுமே பெறுவோம். இதுவே யாக்கோபின் கருத்து.

பழிவாங்குவதை உலகம் இனிமையாகக் காண்கிறது. எப்படி பழிவாங்குவது என்று திட்டமிட்டு இரவு முழுவதும் விழித்திருக்கிறது. ஆனால் விசுவாசிகளாகிய நாம் பழிவாங்கும் எண்ணங்களை வெறுக்க வேண்டும், தேவைப்படுபவர்களுக்கு இரக்கம் காட்டுவதில் மகிழ்ச்சியடைய வேண்டும். அவர்களின் தீய செயல்களை அங்கீகரிக்காமல் உதவுவதன் மூலம் அவர்களின் பாவத்திலிருந்து மனம் திரும்புவதற்கு நாம் அவர்களுக்கு உதவ முடியும். நிச்சயமாக, மனந்திரும்புதலில்லாமல் உண்மையான ஒப்புரவாகுதல் ஏற்படாது. ஆனால் இரக்கம் மற்றவரை மனந்திரும்பி மன்னிப்புக் கோரவும், அதன் மூலம் ஒப்புரவாகச் செய்யவும் தூண்டும் ஆற்றல் கொண்டது.

இரக்கத்தின் மேன்மை.

இரக்கம் ஒரு அழகான விஷயம். அது மட்டுமில்லாம் இருந்தால், நீங்களும் நானும் நரகத்தில் என்றென்றும் மடிந்திருப்போம். தேவன், அவருடைய இரக்கத்தின் மூலம், நித்திய ஆக்கினைக்கு பதிலாக, நீங்களும் நானும் நித்திய மகிழ்ச்சியை அனுபவிக்க கிறிஸ்துவின் மூலம் ஒரு வழியை உருவாக்கியுள்ளார். அத்தகைய இரக்க மனப்பான்மையை நாம் ஒரு வாழ்க்கை முறையாகக் காட்டும்போது, ​​தேவனின் இரட்சிப்பின் இரக்கத்தைப் பெற்றுள்ளோம் என்பதையும், எதிர்காலத்தில் அதை முழுமையாகப் பெறுவோம் என்பதையும் தெளிவாகக் காட்டுகிறோம். அதுவே நமது இரட்சிப்பின் உண்மைத்தன்மையின் உறுதி. நியாயத்தீர்ப்பளிக்கும் மனப்பான்மை, திருமணம் உட்பட எல்லா உறவுகளிலும் உள்ள நெருக்கத்தை அழிக்கிறது. வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவரோ அல்லது இருவரும் தொடர்ந்து மற்றவரை நியாயந்தீர்த்துக் கொண்டிருந்தால்,  இவரிவருக்கிடையே நெருக்கம் எவ்வாறு வளரும்? இப்படி செய்வது ஒருவர் மற்றவரிடமிருந்து வெகுதூரம் செல்ல விரும்புவதை காட்டும்.

அதனால்தான், தீர்க்கதரிசி மீகா சொன்னது போல், நாம் “இரக்கத்தை நேசிக்க வேண்டும்.” இது தேவனுடைய இருதயம், நாம் அவருடைய வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நம் வீட்டில், குறிப்பாக நம் வாழ்க்கைத் துணையுடனான உறவுகளில் அதை விட சிறந்தது எதுவுமில்லை.

மணமான ஒரு பெண், புத்தம் புதிய காரை ஓட்டும்போது விபத்தில் சிக்கினாள். தன் கணவர் என்ன சொல்வார் என்று வருத்தமும் கவலையும் அடைந்த அவள், காப்பீட்டு தாள்களை எடுக்க வேகமாக பெட்டியைத் திறந்தாள்.

அவள் அதை வெளியே எடுத்தபோது, ​​அவள் கணவன் எழுதி வைத்திருந்த ஒரு குறிப்பைக் கண்டாள், “அன்புள்ள மேரி, உனக்கு இந்த காகிதங்கள் தேவைப்படும்போது, ​​​​நினைவில் வைத்துக்கொள்; நான் உன்னை தான் நேசிக்கிறேன், காரை அல்ல!”

நம் அனைவரும் குறையுள்ள பாவிகள், நம்முடைய வாழ்க்கையும் சிக்கலில் இருக்கிறது. அதனால்தான் இரக்கம் இல்லாமல் உறவுகளை நிலைநிறுத்த முடியாது. மேலும் இரக்கம் இல்லாத இடத்தில் உண்மையான நெருக்கம் இருக்காது. ஆம், இரக்கமிருக்கும் இடத்தில்திருமணம் இன்னும் உறுதிப்படக்கூடும், மேலும் பல தசாப்தங்களாக தம்பதியினர் தொடர்ந்து ஒன்றாக இருக்கலாம். ஆனால் நெருக்கத்தை வளர்க்காத திருமணம்,  ஆரோக்கியமான திருமணம் அல்ல. 

ஒரு மனிதன் தன் மனைவியுடன் தனக்கு ஏற்பட்ட வாக்குவாதங்களைப் பற்றி ஒரு முறை தன் போதகரிடம் கூறினான். போதகர் மேலும் விவரங்களை கேட்டபோது,  அந்த மனிதன் ​​“ஒவ்வொரு முறை சண்டையிடும் போதும் என் மனைவி, முன்பு நடந்த காரியங்களை திரும்ப திரும்ப பேசுகிறாள்” “இல்லை” “20-30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பிரச்சினைகளையும் அவள் கொண்டு வருகிறாள்” என்றான்.

இந்த மாதிரியான சகல சங்கடங்களையும் மனதில் வைத்து பராமரிக்கும்பொழுது, அங்கு உண்மையான நெருக்கம் ஏற்படாது. அதனால்தான் ஆரோக்கியமான உறவுகளுக்கு இரக்கம் முக்கியமாகும். இரக்கத்தின் மூலம் நாம் தேவனுடன் உறவு கொள்ளவும், மற்றவர்களுடன் நல்உறவும் கொள்ள முடியும்.

இரக்கம் காட்டுவதில் எப்படி வளர வேண்டும்.

எனவே, நாம் எப்படி இரக்கத்தை நேசிக்க முடியும்? இரக்கம் காட்டுவதில் நாம் எப்படி மகிழ்ச்சியடையலாம்? நம்முடைய பாவங்களை உணர்ந்து, தேவகுமாரன் சிலுவையில் பாடுபட்டதன் விளைவாக நாம் பெறும் மன்னிப்பை அனுபவிப்பதின் மூலம் மட்டுமே இது சாத்தியம். இந்த சத்தியமானது: “நான் நரகத்திற்கு தகுதியானவன். ஆனாலும், தேவனே, ஒரு நரகத்திற்கு தகுதயான பயங்கரமான பாவி! ஆனாலும்,நீர் என்னிடம் இரக்கத்தை காட்டியுள்ளீர்—இயேசுகிறிஸ்துவே, நான் உம்மைக் காணும்போது, ​​கருணையின் முழுமையான உருவகத்தைக் காண்கிறேன். உம்மைப் போல் இருக்க எனக்கு உதவி செய்யும்” என்பதை இந்த சத்தியமானது நமக்கு நினைவூட்டுகிறது.

இப்படிப்பட்ட மனப்பான்மையை நாம் கடைப்பிடிக்கும்போது, ​​“என்னைப் காயப்படுத்தியவனுக்கு நான் இரக்கம் காட்டமாட்டேன்” என்று சொல்ல முடியாது.  சிலுவையில் அறையப்பட்ட இரட்சகர் இரத்தம் சிந்துவதையும், நம்முடைய பாவத்திற்காக வேதனையில் கதறி அழுவதையும் நாம் பார்த்துக்கொண்டே “என்னால் மன்னிக்க முடியாது, நான் எவ்வளவு  காயப்பட்டேன் என்பது உங்களுக்குத் தெரியாது, அவர்கள் இரக்கத்திற்கு தகுதியற்றவர்கள்” என்று கூற முடியாது. ஆனால் அவர்கள் அதற்கு தகுதியானவர்களாக இருந்தால், அது இரக்கமாக இருக்குமா? நிச்சயமாக இருக்காது. 

நம்முடைய பாவத்தை எவ்வளவு அதிகமாகப் பார்க்கிறோமோ, அவ்வளவு அதிகமாக சிலுவையில் இருக்கும் இயேசுவைப் பார்க்கின்றோம், அவ்வளவு அதிகமாக நம்முடைய கடின உள்ளங்களும் உருகும். எல்லையற்ற பரிசுத்தமான தேவனை நாம் எவ்வளவு துன்பப்படுத்தியிருக்கிறோம், ஆனாலும் அவர் நமக்கு எவ்வளவு பெரிய இரக்கத்தை காட்டினார், அவருடைய இரக்கம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு நமக்குத் தேவை என்பதை இன்னும் அதிகமாகப் பார்ப்போம். நாம் அதைக் காணும்போது, ​​நமக்கு எதிரான குற்றங்களை—அற்ப மற்றும் பெரிய குற்றங்களை-விடுவதற்கு நாம் ஆயத்தமாக இருப்போம், மேலும் மற்றவர்களுக்கு இரக்கம் காட்ட விரும்புவதில் நாம் வளருவோம்.

இறுதி சிந்தனைகள்.

உங்கள் வாழ்க்கையில் யாரிடமாவது இரக்கம் காட்ட வேண்டியிருந்தால் அவர்களிடம் இரக்கம் காட்டுங்கள். இரக்கத்தை ஒரு கடமையாக கொடுக்க வேண்டுமென்று நான் அர்த்தப்படுத்தவில்லை, ஒருவிதமான மனப்பான்மையுடன்,என்னிடம் இரக்கம் இருக்கிறது.” என்று கூறுவதற்கு பதிலாக “நான் இரக்கம் காட்டுகிறேன் என்று கூறுவதை அர்த்தப்படுத்துகிறேன். இலவசமாய் பெற்றீர்கள்; இலவசமாய் கொடுங்கள்!” ஆனால் நீங்கள் இரக்கத்தை நேசித்தால் மட்டுமே அது நடக்கும். உங்கள் சொந்த வாழ்க்கையில் தேவனின் இரக்கத்தை நீங்கள் மேலும் மேலும் சிந்தித்தால் மட்டுமே உங்களால் இரக்கத்தை நேசிக்க முடியும் [ரோமர் 12:1-2].

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், இரக்கம் காட்டுவது ஒரு வாய்ப்பு அல்ல. மீட்கப்பட்ட ஆத்துமாவிற்கு இது தெளிவான சான்று. நாம் ஆவியில் எளிமையாக இருக்கும் நிலையில், இரக்கம் பெறுவதே மறுப்பிறப்பிற்கு ஆரம்பமாக இருக்கிறது, நம்முடைய பாவங்களுக்காக துக்கமடைந்து, இரக்கத்திற்காக கிறிஸ்துவிடம் திரும்பியபோது நமது புதிய பிறப்பு தொடங்கியது. அவர் நம்மைக் இரட்சித்தவுடனேயே, பரிசுத்த ஆவியின் மூலம் நம்மில் நீதிக்கான வாஞ்சை மற்றும் தாகத்தை உண்டாக்கத் தொடங்கினார்—நமது அன்றாட வாழ்க்கையில் தேவனின் நீதியான கட்டளைகளைப் பின்பற்றும் ஒரு வாழ்க்கை—நம்மை புண்படுத்தியவர்களுக்கு இரக்கத்தை மகிழ்ச்சியோடுவழங்வதில் தேவனுடைய கட்டளையுடன் தொடங்குகிறது.

எனவே, நான் உங்களிடம் கேட்கிறேன், “நீங்கள் தனிப்பட்ட முறையில் தேவனின் இரட்சிப்பைப் பெற்றிருக்கிறீர்களா?” ஒருவேளை நீங்களே அதை பெறாததால், தேவைப்படுபவர்களிடம் இரக்கத்தை காட்ட முடியாமல் போகலாம். ஒருவேளை நீங்கள் உங்கள் பாவத்தை அசிங்கமாக பார்க்காமல் இரக்கத்திற்காக இன்னும் சிலுவையண்டை செல்லவில்லை என்றால், உங்கள் பாவங்கள் எவ்வளவு அசிங்கமானவை என்பதைப் பார்க்க உங்கள் கண்களைத் திறக்கும்படி தேவனிடம் கேளுங்கள். உங்களை சிலுவையண்டைக்கு அழைத்துச் செல்லும்படி அவரிடம் கேளுங்கள். உங்களுக்கு இரக்கம் தரும்படி அவரிடம் கேளுங்கள். அதுதான் ஆரம்பப் புள்ளி. அப்போது பிறரிடம் இரக்கம் காட்டும் ஆற்றலை பெறுவீர்கள். மேலும் அது மற்றவர்களையும் கிறிஸ்துவிடம் திரும்ப அவர்களுக்கு உதவும் ஒரு சக்திவாய்ந்த விளைவை ஏற்படுத்தும்.

மலை பிரசங்கத்தில் காணப்படும் போதனைகள், நாம் உண்மையிலேயே தேவனின் பிள்ளைகளா என்பதைப் பார்க்க இயேசு நம் முகத்தில் வைத்திருக்கும் ஒரு கண்ணாடி என்பதை நினைவில் வையுங்கள். நீங்கள் உண்மையில் தேவனின் பிள்ளைகளா? அப்படியானால், இந்த பாக்கியங்களை குறித்த இயேசுகிறிஸ்துவின் இந்த வார்த்தைகள் உங்களுக்குப் பொருந்தும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.

இரக்கமுள்ளவர்கள் உண்மையில் பாக்கியவான்கள் ஏனென்றால் அனைத்து இரக்கத்தின் உருவகமான இயேசுகிறிஸ்து  தம்முடைய இராஜ்ஜியத்தை நிறுவும் பொழுது அவர்களும், அவர்கள் மாத்திரமே இரக்கம் பெறுவார்கள்!

Category
Subscribe
Notify of
guest


0 கருத்துக்கள்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments