பாக்கியவான்கள்–பகுதி 7 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்

(English Version: “Blessed Are The Pure In Heart”)
மத்தேயு 5:3-12 ஆகிய வசனங்கள் வரை விரவியிருக்கும் பாக்கியங்களைப் பற்றிய தொகுப்புகளின் 7 வது பதிவாகும். இந்தப் பகுதியில், ஆண்டவராகிய இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இருக்க வேண்டிய 8 அணுகுமுறைகளை விவரிக்கிறார். இந்த பதிவில், மத்தேயு 5:8 ல் விவரிக்கப்பட்டுள்ள “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்” என்ற ஏழாவது அணுகுமுறையைப் பார்ப்போம்.
*****************
நீங்கள் விசுவாசியல்லாதவர்களிடம் ஒரு கருத்துக் கணிப்பு எடுத்து, எந்த விஷயத்தைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்று அவர்களிடம் கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்—“நான் தேவனைப் பார்க்க வேண்டும், அவருடைய பிரசன்னத்தை அனுபவிக்க வேண்டும்” என்று பலர் சொல்வார்கள் என்று நான் நம்பவில்லை. உலகம் தேவனிடமும் அவருடைய பிரசன்னத்திற்கும் தனக்கும் ஒரு பங்கும் இல்லை என்று கூறும். மறுபுறம், ஒரு விசுவாசியிடம் அதே கேள்வியைக் கேட்கும்போது, “நான் கிறிஸ்துவின் முகத்தில் தேவனைப் பார்க்க விரும்புகிறேன், அவருடைய பிரசன்னத்தை அனுபவிக்க விரும்புகிறேன்” என்று கூறுவார்கள். இது உலக ஆசைக்கு முற்றிலும் மாறான ஆசை!
இருப்பினும், தேவனைப் பார்க்கவும், அவருடன் இருக்கவும் ஆசைப்படுவது நமது விருப்பமாக இருந்தாலும், அது நிச்சயமாக எதிர்காலத்தில் நடக்கும் என்பது வேறு விஷயம். அப்படியானால், நாம் பரலோகத்தில் இருப்போம் என்பது அதன் அர்த்தம், ஆனால் இந்த உலகத்தில் தேவனைக் காண்போம் என்று எப்படி உறுதியாக நம்புவது? கர்த்தராகிய இயேசு மத்தேயு 5:8 இல், “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்” என்று பதிலளிக்கிறார். இந்த வசனத்தை இப்படியும் கூறலாம்: இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் மட்டுமே தேவனால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள், இறுதியில் அவரை பரலோகத்தில் பார்க்கும் மகிழ்ச்சியைப் பெறுவார்கள்.
தேவனை தரிசித்தல்.
தேவன் ஆவியாயிருக்கின்றார். எனவே, அவர் கண்ணுக்கு புலப்படாதவர். நாம் அவருடைய மகிமையை மட்டுமே பார்க்க முடியும். இருப்பினும், “இவர் அவருடைய [பிதாவினுடைய] மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து” என்று இயேசுகிறிஸ்துவை குறித்து வேதாகமம் கூறுகிறது [எபிரெயர் 1:3]. எதிர்காலத்தில் இயேசுகிறிஸ்து மறுபடியும் வரும்போது, “[இயேசுவை] அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரை தரிசிப்பதினால்” என்று 1 யோவான் 3:2 கூறுகிறது. எனவே, தேவனைப் பார்ப்பது என்பது உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்துவை அவருடைய எல்லா மகிமையிலும் பார்ப்பதைக் குறிக்கிறது. “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” [யோவான் 14:9] என்று இயேசுகிறிஸ்துவே கூறினார்.
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்.
“இருதயத்தில் சுத்தம்” என்ற சொற்றொடரைப் புரிந்துகொள்வது அவசியம். “சுத்தமான” என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையின் மூலம் “Catharsis, கேதர்சிஸ்” என்ற ஆங்கில வார்த்தை கிடைக்கிறது, அதாவது இதன் அர்த்தம் சுத்திகரிப்பு அல்லது சுத்தப்படுத்துதல். இது நல்லதல்லாத ஒன்றை அகற்றுவதைக் குறிக்கிறது.
பொதுவாக, “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்” என்ற சொற்றொடர் தவறான பாலியல் ஆசைகளிலிருந்து–காமத்திலிருந்து விடுபட்ட இருதயம் என்று கூறலாம். இருதயம் காம எண்ணங்களிலிருந்து விடுபட வேண்டும். இதே அதிகாரத்தில், பாலுறவை குறித்த வசனங்களில், இச்சையின் ஆபத்துகளைப் பற்றி இயேசுகிறிஸ்து பின்னர் கூறியிருக்கிறார் [மத்தேயு 5:27-30]. இருப்பினும், தூய்மையான இருதயம் என்பது பாலியல் தூய்மையைக் குறிப்பிடுவதை விட பரந்த பொருளைக் கொண்டுள்ளது. இது அனைத்து வகையான பாவ அசுத்தங்களிலிருந்தும் விடுபட்ட இருதயத்தையும், தேவனுக்கு முழுவதும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வையும் குறிக்கின்றது–உள்நோக்கங்கள் மற்றும் துரோகங்கள் இல்லாத இருதயத்தை குறிக்கின்றது.
இந்தப் புரிதல் மத்தேயு 6:24 ல் கூறப்பட்டுள்ள இயேசுகிறிஸ்துவின் சொந்த வார்த்தைகளிலிருந்து தெளிவாகிறது, “இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனை சிநேகிப்பான் அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது.” இந்த வசனத்தில், இயேசுகிறிஸ்து சொல்வது இதுதான்: எல்லாவற்றுக்கும் மையமாக இருக்கும் இருதயம் எல்லா அசுத்தங்களிலிருந்தும் விடுபட வேண்டும். விசுவாசம் பகுக்கப்படாமலும், வேறு எதன் மீதும் சார்ந்து இல்லாமலும், முழுமையாக தேவனிடம் ஒப்புக்கொடுக்க வேண்டும். தேவனுக்கும் அவருடைய மகிமைக்கும் ஒரே மனதோடு தன்னை முழுமையாக அர்ப்பணிக்க ஆசைப்பட வேண்டும். மேலும் அந்த இருதயத்தைத் தான் தேவன் தூய்மையாகக் கருதுகிறார் என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார்.
உள்ளத் தூய்மை, இயேசுவின் காலத்து மக்கள் விரும்பியதற்கு நேர் எதிரானது-குறிப்பாக மதத் தலைவர்களுக்கு எதிரானது. உள்ளத் தூய்மையைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. அவர்கள் வெளிப்புற தூய்மை மற்றும் மனித மரபுகளுக்கு இணங்குவது பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருந்து, அதுவே ஒருவரை தூய்மையாக்குகிறது என நம்பினர்.
மறுபுறம், இயேசு ஒரு உள்ளார்ந்த, இருதயத்தின் தூய்மைக்கு அழைப்பு விடுத்தார்—ஏனெனில் இருதயமே தீமைக்கு ஆதாரமாக உள்ளது. மத்தேயு 15:19-20 லிருந்து அவருடைய சொந்த வார்த்தைகளைக் கவனியுங்கள், “இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டு வரும். இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.”
ஒரு பக்தியுள்ள யூதத் தலைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைப் பற்றிய ஒரு கதை இது. சிறையில் இருந்தபோது அவருக்கு ஒரு துண்டு அப்பமும், ஒரு கோப்பை தண்ணீரும் வழங்கப்பட்டது. அந்தத் தண்ணீரைக் குடிப்பதற்கு பதிலாக, யூத பாரம்பரியத்தின்படி கைகளைக் கழுவுவதற்குப் பயன்படுத்திய பின்னர் அப்பத்தைத் தொட்டார். இயேசுவின் காலத்தில் இருந்த மதவாதிகள் வெளிப்புற மரபுகளில் எவ்வளவு கவனம் செலுத்தினார்கள் என்பதை இந்தக் கதை காட்டுகிறது.
பிரச்சனையானது சபைக்கு செல்வதையோ, சில கிறிஸ்தவ கடமைகைகளைச் செய்வதையோ பற்றிய அல்ல. இது தேவனை நம் இருதயத்தின் மையத்தில் வைப்பதை பற்றியது. மத்தேயு 6:33-ல், “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்.” என்று இயேசுகிறிஸ்து கூறினார். “முதலாவது” என்ற வார்த்தையானது தேவனுக்கும் அவருடைய நீதியான தராதரங்களுக்கும் முழு முன்னுரிமை கொடுக்கும் கருத்தைக் கொண்டுள்ளது. அந்தத் தராதரங்களில் சிலவற்றை இயேசுகிறிஸ்து மலைப்பிரசங்கத்தில் விவரித்தார்.
எடுத்துக்காட்டாக, இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பின்வருவனவற்றை விரும்புவார்கள்.
கோபத்தை விட்டுவிட்டு, அதற்குப் பதிலாக சமரசத்தைத் தேடுவார்கள் [மத்தேயு 5:21-26]
காமத்தை விலக்கி, திருமண உடன்படிக்கையை மதிக்க முயல்வார்கள் [மத்தேயு 5:27-32]
வஞ்சகமான வார்த்தைகளை விட்டுவிட்டு எப்பொழுதும் உண்மையைப் பேச நாடுவார்கள் [மத்தேயு 5:33-37]
“கண்ணுக்குக் கண்” என்ற பழிவாங்கும் மனப்பான்மையை விலக்கிவிடுவார்கள்.
காணிக்கை கொடுப்பார்கள், ஜெபம் செய்வார்கள், உபவாசம் செய்வார்கள்— அது வெளியில் இருந்து கைதட்டலுக்காக அல்ல, தேவனின் மகிழ்ச்சிக்காக மட்டுமே அப்படி செய்வார்கள் [மத்தேயு 6:1-18]
தங்கள் பணத்தை தேவனின் மகிமைக்காக பயன்படுத்துவார்கள், பூமியில் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கமாட்டார்கள் [மத்தேயு 6:19-34]
மற்றவர்களை கடுமையான முறையில் தீர்ப்பளிக்காமல், இரக்கமுள்ள இருதயத்துடன் தீர்ப்பளிப்பார்கள் [மத்தேயு 7:1-12]
அகலமான சாலையில் வரும் இன்பங்களை அனுபவிப்பதை விட குறுகிய சாலையில் நடக்கவும் விரும்புவார்கள் [மத்தேயு 7:13-27]
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்களுடைய வாழ்க்கையானது உண்மையிலேயே உள்ளிருந்து தேவனுடைய தரத்திற்கு இணங்க விரும்பும் ஒன்றாக இருக்கும். அவர்கள் மதத்தின் வெளிப்புற நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தவில்லை. அவர்கள் தேவனை உண்மையாக நேசிக்கிறார்கள், தூய்மையான இருதயத்துடன் அவரைப் பிரியப்படுத்த உண்மையிலேயே விரும்புகிறார்கள்.
தூய்மையாக இருதயத்தை பேணுதல்.
எனவே, நாம் அதை எப்படி செய்வது? நம் இருதயங்களை எவ்வாறு தூய்மையாக வைத்திருக்க முடியும்? கருத்தில் கொள்ள வேண்டிய நான்கு கோட்பாடுகளை நாம் பார்ப்போம்.
கோட்பாடு #1: இரட்சிக்கப்படுதல்
இருதயத்தில் இந்தத் தூய்மையைப் தொடர்வதன் ஆரம்பமானது, நாம் நம் இருதயமானது பாவத்திலிருந்து கழுவப்பட வேண்டும் என்பதாகும். இதை வேறு விதத்தில் சொல்வதென்றால், நம் பாவங்களின் அழுக்கிலிருந்து மன்னிப்பை அனுபவிக்க வேண்டும். அப்போஸ்தலர் 15:9 ஆம் வசனம் இயேசுகிறிஸ்துவிலுள்ள “விசுவாசத்தால்” இருதயத்தைச் சுத்திகரிக்க அழைப்பு விடுக்கிறது.
இருப்பினும், இந்த பிரசங்கத்தில், இயேசுகிறிஸ்து விசுவாசிகளுக்கு முதன்மையாக உரையாற்றுகிறார், அதாவது, கிறிஸ்துவில் தங்கள் விசுவாசத்தை ஏற்கனவே வைத்தவர்களிடம், இருதயத்தில் தூய்மையானவர் என்ற நிலை உணர்வைக் காட்டிலும் இந்த இருதயத்தின் தூய்மையானது தொடர்ச்சியானதாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். இது கிறிஸ்தவ வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டிய இருதயத்தின் தூய்மையைக் குறிக்க வேண்டும்—எல்லா மாசுபாடுகளிலிருந்தும் விடுபட்ட இருதயம்!
கோட்பாடு #2: தேவனிடம் சுத்த இருதயத்தை தருமாறு தொடர்ந்து கேட்கவேண்டும்.
தூய்மையான இருதயத்தை நம்மால் சுயமாக பராமரிக்க இயலாது. நம் இருதயங்களைத் தொடர்ந்து தீட்டுப்படுத்துவதே நம்முடைய தன்மையாகும். அதனால்தான், சங்கீதம் 51:10-ல் தாவீது கூறியது போல “தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்; நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.” என்று நாமும் தொடர்ந்து கூக்குரலிட வேண்டும். தூய்மையான இருதயம் மற்றும் மாசுபாடுகளற்ற இருதயம் வேண்டும் என்ற கூக்குரல் அது. தேவனை மையமாக வைத்து, மற்ற அனைத்து வல்லமைகளையும் இரக்கமின்றி அகற்றும் இருதயம். பரிசுத்த ஆவியின் மூலம் தேவன் மட்டுமே அதை நம் இருதயங்களில் நிறைவேற்ற முடியும். அதனால்தான் நாம் அவரிடம் தொடர்ந்து கேட்க வேண்டும்.
இங்கே கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு கேள்வி ஒன்று இருக்கின்றது: எப்பொழுது கடைசியாக நாம் தேவனிடம் ஒரு தூய இருதயத்தைக் கொடுக்க வேண்டும் என்று மன்றாடினோம்? பல விஷயங்களுக்காக நாம் தேவனிடம் மன்றாடுகிறோம். ஆனால், தூய்மையான இருதயத்திற்காக மன்றாடுவது நம் இருதயத்திற்கான கூக்குரலாக இருப்பதில்லை. இதற்கு என்ன காரணம்? நம் இருதயங்கள் கிறிஸ்துவுக்கு விசுவாசம் அல்லது உலகத்தின் மீதான நமது அன்பு ஆகியவற்றுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளது, அதன் விளைவாக, நம் நோக்கங்களும் மாசுபட்டுள்ளன!
பொழுதுபோக்கில் மனநிறைவு கொள்ளும் கலாச்சாரத்தில் வாழ்வதால், முக்கியமான விஷயங்களில் நாம் உணர்ச்சியற்றவர்களாக இருக்கிறோம். நமது பொழுதுபோக்கு, நாம் பார்க்க விரும்பும் இடங்கள், நாம் வாங்க விரும்பும் பொருட்கள் மற்றும் நாம் விரும்பும் தொழில்கள் அனைத்தும் நம் இருதயத்தின் நிலையை வெளிப்படுத்துகின்றன.
ஆத்துமத் தேடலின் இருதயத்தை பெற வேண்டும் என்று நான் நினைக்கும் கேள்விகளை ஒரு இறையியலாளர் எழுப்புகிறார்.
யாரும் பார்க்காதப்படியால் உங்கள் மனம் நடுநிலையில் தடுமாறும்போதும் உங்கள் சிந்தனை எப்படியிருக்கிறது?
எவ்வளவு வேடிக்கையாக இருந்தாலும், அசிங்கமான நகைச்சுவை ஆகியவற்றை நீங்கள் எவ்வளவு பொறுத்துக்கொள்கிறீர்கள்?
நீங்கள் எதில் நிலையான விசுவாசத்தைச் செலுத்துகிறீர்கள்?
எல்லாவற்றிற்கும் மேலான உங்களுக்கு வேண்டியது எது? நீங்கள் எதை, யாரை விரும்புகிறீர்கள்?
உங்கள் செயல்களும் வார்த்தைகளும் எந்த அளவிற்கு உங்கள் இருதயத்தில் உள்ளதை துல்லியமாக பிரதிபலிக்கின்றன?
உங்கள் செயல்களும் வார்த்தைகளும் எந்த அளவிற்கு உங்கள் இருதயத்தில் உள்ளதை மறைக்கிறது?
இதுபோன்ற கேள்விகளை தொடர்ந்து கேட்கும்போது நம் இருதயம் தூய்மையானதா அல்லது அசுத்தமானதா என்பதை வெளிப்படுத்தும். நாம் நேர்மையாக இருந்தால், பதில்கள் பெரும்பாலும் நாம் விரும்புவது போல் இருக்காது. தேவனுக்குப் பிரியமாக வாழ்வதற்கான ஆவிக்குரிய ஆதாரங்கள் நமக்கு ஏன் இல்லை என்பதை அறிய இந்த உண்மை நம்மை கட்டாயப்படுத்தும். ஆவிக்குரிய ரீதியில் நாம் எவ்வளவு எளியவர்களாக இருக்கிறோம் என்பதைப் பார்க்க இது உதவும் [மத்தேயு 5:3]. இந்த உணர்த்துதல் நம்மை தேவனிடம் மன்னிப்பு கேட்க வழிநடத்தி, அவரை விசுவாசித்து “இயேசு கிறிஸ்துவின் இரத்தம்… சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்” [1 யோவான் 1:7].
கோட்பாடு #3: தேவனுடைய வார்த்தையை விடாமுயற்சியுடன் படிக்க வேண்டும்.
யோவான் 15:3 ல் இயேசுகிறிஸ்து இவ்வாறு கூறுகிறார், “நான் உங்களுக்கு சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.” நமது இரட்சிப்பின் சமயத்தில் ஆரம்ப சுத்திகரிப்பு கொண்டுவருவது தேவனின் வார்த்தை. ஆனால் அதே தேவனின் வார்த்தையே தொடர்ச்சியான சுத்திகரிப்பைக் கொண்டுவருகிறது. அதே நற்செய்தி நூலின் இரண்டு அதிகாரங்களுக்குப் பிறகு, இயேசுகிறிஸ்து இப்படி ஜெபித்தார், “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும், உம்முடைய வசனமே சத்தியம் ” [யோவான் 17:17]. “பரிசுத்தப்படுத்தும்” என்ற வார்த்தையின் அர்த்தம் பாவத்திலிருந்து தேவனுக்கும், பாவத்திலிருந்து பரிசுத்தத்திற்கும் பிரித்தெடுக்கப்படுதலாகும்.
ஆகவே, நாம் தேவனுடைய வார்த்தையில் நேரத்தைச் செலவழித்து, நம் இருதயங்களைச் சுத்தப்படுத்த ஆவியானவரை அனுமதிக்காத வரையில் இருதயத்தின் தூய்மை கிடைக்கப்பெறாது.
கோட்பாடு #4: நம் கண்கள் எதை பார்க்கின்றன, நம் கால்கள் எங்கு செல்கின்றன, நமது சேர்க்கை எப்படி இருக்கிறது என்பதை கவனித்திருக்க வேண்டும்.
சங்கீதம் 101:3-4 ல், “தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்க மாட்டேன். வழி விலகுகிறவர்களின் செய்கைளை வெறுக்கிறேன். அது என்னைப் பற்றாது. மாறுபாடான இருதயம் என்னை விட்டு அகல வேண்டும் பொல்லாதவனை அறியமாட்டேன்” என்று தாவீது கூறுகிறார். இந்த வகையான அர்ப்பணிப்பு தூய்மையான இருதயத்தை நாடுபவரின் உறுதியாக இருக்க வேண்டும்.
நம் கண்கள் மற்றும் காதுகள் மூலம் இருதயத்தை கறைபடுத்தும் விஷயங்களை நாம் எவ்வளவு அதிகமாக உள்வாங்குகிறோமோ, அந்தளவுக்கு தூய்மையான இருதயத்தை பராமரிப்பது கடினமாகிறது. நம் இருதயங்கள் நாம் நினைக்கிறப்படி தேவையான நேரத்தில் அணைக்கவும் இயக்கவும் கூடியதல்ல. கண்களும் காதுகளும் இருதயத்தின் நுழைவாயிலாகும். நாம் பார்ப்பது, கேட்பது மற்றும் நாம் வைத்திருக்கும் நட்பு வட்டாரமானது நம் இருதயத்தை பாதிக்கிறது. 1 கொரிந்தியர் 15:33-ல் பவுல் தெளிவாகக் கூறுகிறார், ஏனெனில் “மோசம்போகாதிருங்கள் ஆகாத சம்பாஷனைகள் நல்லொழுக்கங்களை கெடுக்கும்.” அசுத்தப்படுத்தக்கூடிய எதையும் நாம் இரக்கமற்றவர்களாக எதிர்க்க வேண்டும்.
இதுவே தூய்மையான இருதயத்தை நாடுவதில் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய 4 கோட்பாடுகள்.
இரட்சிக்கப்படுதல் இதுவே ஆரம்பம்
தொடர்ந்து தேவனிடம் சுத்த இருதயத்தை தருமாறு கேட்கவேண்டும்.
தேவனுடைய வார்த்தையை விடாமுயற்சியுடன் படிக்க வேண்டும்.
நம் கண்கள் எதை பார்க்கின்றன, நம் கால்கள் எங்கு செல்கின்றன, நமது சேர்க்கை எப்படி இருக்கிறது என்பதை கவனித்திருக்க வேண்டும்.
இதயத்தின் தூய்மை ஒரு விருப்பத் தேர்வல்ல. இயேசுகிறிஸ்து இதை குறித்து தெளிவாக இருக்கிறார். இருதயத்தில் தூய்மையானவர்கள் மட்டுமே தேவனை தரிசிப்பார்கள் [எபிரெயர் 12:14]. பரிசுத்த வார்த்தைகள் மட்டும் நம்மை பரலோகத்தில் சேர்க்காது. அந்த வார்த்தைகள் தூய்மையான வாழ்க்கையால் ஆதரிக்கப்பட வேண்டும்—அது ஒரு தூய இருதயத்திலிருந்து வருகிறது. 2 கொரிந்தியர் 7:1, “மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க நம்மை சுத்திகரித்துக் கொண்டு பரிசுத்தமாகுதலை தெய்வ பயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்” என்று நம்மை அழைக்கிறது. உள்ளே உள்ள தூய்மை [“ஆவி”] வெளிப்புறத்தில் [“மாம்சம்”] தூய்மையை விளைவிக்கிறது. இப்படிப்பட்ட தூய்மையை நம் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க தேவன் உதவுவாராக.
இதயத்தில் தூய்மையானவர்கள் உண்மையில் பாக்கியவான்கள், ஏனென்றால் அவர்கள் மட்டுமே தேவனை தரிசிப்பார்கள்.