பாக்கியவான்கள்—பகுதி 8 சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்

Posted byTamil Editor March 5, 2024 Comments:0

(English version: Blessed Are The Peacemakers)

 மத்தேயு 5:3-12 ஆகிய வசனங்கள் வரை விரவியிருக்கும் பாக்கியங்களைப் பற்றிய தொகுப்புகளின் 8 வது பதிவாகும். இந்தப் பகுதியில், ஆண்டவராகிய இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இருக்க வேண்டிய 8 அணுகுமுறைகளை விவரிக்கிறார். இந்த பதிவில், மத்தேயு 5:9 ல் விவரிக்கப்பட்டுள்ள “சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்” என்ற எட்டாவது அணுகுமுறையைப் பார்ப்போம்.

******************

பல வன்முறைச் செயல்களாலும், போர்களாலும் நிறைந்த உலகில் சமாதானம் என்பது எவ்வளவு மழுப்பலான விஷயமாகத் தெரிகிறது. நாடுகள் ஒன்றோடொன்று போரிடுகின்றன; சமூகங்கள் ஒன்றோடொன்று போரிடுகின்றன; சபைகள் ஒன்றோடொன்று போரிடுகின்றன; வாழ்க்கைத் துணைவர்கள் போராட்டத்தில் உள்ளனர், பெற்றோர்களும் குழந்தைகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போர், போர், எங்கும் போர்!

எனினும், இந்த குழப்பங்களுக்கு மத்தியில், இயேசுகிறிஸ்து தமது பிள்ளைகளை சமாதானம் செய்பவர்களாக இந்த உலகத்திற்குள் அனுப்புகிறார். சமாதானத்தை நேசிப்பவர்கள் தான், அதை விரும்புபவர்கள், அவர்கள் சமாதானத்தை எதிர்பார்ப்பவர்கள் மட்டுமல்ல, சமாதானத்தை ஏற்படுத்துபவர்களும் கூட! அவர்கள் தேவனுக்கும் மனிதர்களுக்கும் இடையே உண்மையான சமாதானத்தையும், மக்களுக்கு இடையே சமாதானத்தை நிலைநிறுத்துவதற்கான வழிகளையும் கொண்டவர்கள்.

“சமாதானம் செய்பவர்” என்பது சமாதானம் மற்றும் உருவாக்குபவர் என்ற இரு வார்த்தைகளின் கலவையாகும். சமாதானம்” என்ற சொல் மோதல் இல்லாத போக்கை விட மேலானதொன்றை குறிக்கிறது. இது ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட உணர்வைக் கொண்டுள்ளது. “உருவாக்குபவர்” என்ற வார்த்தையானது, இந்த சூழலில்—சமாதானத்தை உருவாக்கும் அல்லது உற்பத்தி செய்யும் யோசனையுடன் தொடர்புடையது. எனவே, இந்த இரண்டு வார்த்தைகளையும் ஒன்றாகச் சேர்த்து, சமாதானம் செய்பவர்” என்ற வார்த்தையானது விசுவாசிகள் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு உழைப்பவர்கள் என்ற கருத்தைக் கொண்டுள்ளது.

எந்த விலை கொடுத்தாகிலும் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டியதில்லை.

சமாதானம் செய்பவராக இருக்க பாடுபடுவது என்பது, நாம் எந்த விலையை கொடுத்தாகிலும்—குறிப்பாக தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதை விட்டுவிட்டு சமாதானத்தைக் கொண்டுவர வேண்டும் என்று அர்த்தமல்ல. முந்தைய ஆசீர்வாதம் இருதயத்தின் தூய்மைக்கு அழைப்பு விடுகிறது—தேவனை மையமாக வைக்கும் இருதயம், தேவனைப் பின்பற்ற விரும்பும் இருதயம். மேலும், தூய்மையை தவிர்த்து தேவன் சமாதானத்தைக் கொண்டுவராததால், நாமும் அதையே செய்ய முயல வேண்டும். தூய்மையை விட்டு விட்டு நாம் சமாதானத்திற்காக பாடுபட முடியாது. தூய்மை எப்போதும் சமாதானத்தை கொண்டுவருகிறது!

மேலும், சமாதானம் செய்பவராக இருக்க வேண்டுமென்பது, நம் வாழ்வில் ஒருபோதும் மோதல்கள் இருக்காது என்றோ அல்லது எல்லா மக்களும் நம்மை விரும்புவார்கள் என்றோ, பிரச்சினைகளை நாம் மூடிமறைக்க முடியும் என்றோ அர்த்தப்படுத்துவதில்லை. இருப்பினும், விஷயங்கள் சிக்கலானதாகத் தோன்றினாலும், சமாதானத்தைக் கொண்டுவருவதற்கு தேவனுடைய முகவர்களாகச் செயல்பட நாம் இந்த பாவமான உலகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறோம்.

சமாதானம் செய்பவர்களான இந்த மக்கள்தான் “தேவனின் புத்திரர் என்று அழைக்கப்படுவார்கள் என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். நிச்சயமாக, சமாதானம் செய்பவர்களாக இருப்பதன் மூலம் நாம் தேவனின்  பிள்ளைகளாக மாறுகிறோம் என்று இயேசுகிறிஸ்து சொல்லவில்லை. அப்படியானால், யாரும் தேவனின் பிள்ளைகளாக மாற முடியாது, ஏனென்றால் தேவனின் கட்டளைகளுக்கு இணங்குவதில் நாம் அனைவரும் அவ்வப்போது தோல்வியடைகிறோம்.

 தேவனின் பிள்ளைகளாவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பாக்கியங்கள் விவரிக்கவில்லை. மாறாக தேவனின் பிள்ளைகளாக ஏற்கனவே இருப்பவர்களின் மாதிரியையும், நாட்டத்தையும் விவரிக்கிறது. நாம் இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் தேவனின் பிள்ளைகளாக மாறுகிறோம். யோவான் 1:12 இவ்வாறு கூறுகிறது, “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் [அதாவது, இயேசுகிறிஸ்துவை] அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.” தேவனின் பிள்ளையாக மாறுவது என்பது இயேசுகிறிஸ்துவை மட்டுமே விசுவாசிப்பதை உள்ளடக்கியது.

இருப்பினும், சமாதான அழைப்பில் வாழ்ந்து கொண்டிருப்பது, இயேசு கிறிஸ்துவில் கொண்டுள்ள விசுவாசம் உண்மையானது என்பதை நிரூபிக்கிறது. உண்மையிலேயே தேவனின்  அங்கீகாரமும் அவருடைய தயவும் தங்கியிருக்கும் தேவனின் பிள்ளைகள்  இவர்கள்தாம் “ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.” பின்வரும் கேள்வி இயற்கையாகவே வரக்கூடியதுதான்: ஒருவரின் விசுவாசம் உண்மையானது என்பதை நிரூபிக்கும் சமாதானம் செய்பவரின் பண்புகள் என்ன?  அதை கீழ்காணும் 8 குறிப்புகளில் சிந்திக்க முடியும்.

சமாதானம் பண்ணுகிறவர்களின் 8 பண்புகள். 

பண்பு #1 சமாதானம் பண்ணுகிறவர்கள் தேவனிடம் சமாதானமாயிருப்பார்கள்.

எல்லா சமாதானத்துக்கும் அடித்தளம் தேவனுடன் சமாதானமாக இருப்பதுதான். இந்த பரிசுத்த தேவனுடன் சமாதானத்திற்கான ஒரே வழி அவருடைய குமாரனும், கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் மூலமேயாகும். ரோமர் 5:1 இதைத் தெளிவாக்குகிறது: “இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.” இயேசுகிறிஸ்துவின் இரத்தமே நம் எல்லா பாவங்களையும் கழுவும். பரிசுத்த தேவனுடன் நாம் உறவைப் பெறுவதற்கான வழிமுறையாக இயேசுகிறிஸ்து இருப்பதால், ஒருவர் அங்கிருந்து தான்  சமாதானத்திற்கான காரியங்களைத் தொடங்க வேண்டும்.

பண்பு #2. சமாதானம் பண்ணுகிறவர்கள் இயேசுகிறிஸ்து கொடுக்கும் சமாதானத்தை அனுபவிக்கிறவர்கள்.

தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியில், யோவான் 14:27 ல் தம் சீஷர்களிடம் இயேசுகிறிஸ்து இந்த வார்த்தைகளைச் கூறினார், “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குத் தருகின்றேன்.” உலகம் கொடுப்பது போல் நான் உங்களுக்கு கொடுக்கவில்லை. உங்கள் இருதயங்கள் கலங்க வேண்டாம், பயப்பட வேண்டாம். விரக்தியின் மத்தியில், இயேசுகிறிஸ்து தம் சீஷர்களுக்கு சமாதானத்தை அளித்தார். அதே சமாதானம் நமக்கும் அளிக்கப்படுகிறது. வாழ்க்கையில் நாம் எதைச் சந்தித்தாலும், இயேசுகிறிஸ்துவின் மீது நம் கண்களை வைத்திருக்கும் வரை, அவர் வழங்கும் அந்த சமாதானத்தை நாமும் அனுபவிக்க முடியும்.

பண்பு #3. சமாதானம் பண்ணுகிறவர்கள் மற்றவர்களும் தேவனுடன் சமாதானத்தைப் பெற முடியும் என்ற சத்தியத்தை கூறுகின்றனர்.

சமாதானம் செய்பவர்கள் கிறிஸ்துவின் மூலம் பெற்ற அதே சமாதானத்தை மற்றவர்களும் பெற விரும்புகிறார்கள்—இது இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் பாவங்கள் கழுவப்படுவதால் வரும் சமாதானம். எனவே, இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் ஏசாயா 52:7—ஐ தங்கள் இருதயத்தில் வைத்துக்கொள்கிறார்கள், “சமாதானத்தைக் கூறி நற்காரியங்களை சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின் மேல் எவ்வளவு அழகாயிருக்கிறது”  இயேசுகிறிஸ்துவை விட்டு தூரம் போனவர்களைக் காணும்போது, ​​“நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து தேவனுடன் ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” என்ற 2 கொரிந்தியர் 5:20—ல் உள்ள பவுலின் வார்த்தைகளை கூறுகிறார்கள்.

பண்பு #4. சமாதானம் பண்ணுகிறவர்கள் எல்லா மனிதரோடும் சமாதானமாக இருக்க முயற்சி செய்வார்கள்.

சமாதானம் செய்பவர்கள் என்று வர்ணிக்கப்படும் அனைத்து விசுவாசிகளும் மற்றவர்களுடன் சமாதானத்தை தொடரும்படி வேதம் திரும்பத் திரும்ப அழைப்பு விடுக்கிறது. மத்தேயு 5:23-24—ல் இயேசுகிறிஸ்து நமக்கு இவ்வாறு கட்டளையிடுகிறார், ஆகையால் நீ பலிபீடத்தின் இடத்தில் காணிக்கையைச் செலுத்த வந்து உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின்மேல் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி பின்பு வந்து உன் காணிக்கையை செலுத்து. ரோமர் 14:19 ல் பவுல் நமக்கு இவ்வாறு சொல்கிறார், “ஆனபடியால், சமாதானத்துக்கடுத்தவைகளையும் அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம்.” எபிரெயர் எழுத்தாளர் எல்லோருடனும் சமாதானமாக வாழ்வதற்கு எல்லா முயற்சிகளையும் செய்யுங்கள்.” என கூறுகிறார். எனவே இந்த வசனங்களின் அடிப்படையில், சமாதானத்தைப் பின்தொடர்வது ஒரு விருப்பத் தேர்வல்ல என்பது தெளிவாகிறது.

பண்பு #5. சமாதானம் பண்ணுகிறவர்கள் ஒரு உறவு எப்பொழுதும் சமாதானமாக இருக்காது எனத் தெரிந்தும் சமாதானமாக இருக்க பிரயாசப்படுவார்கள்.

உண்மையை எதிர்கொள்வோம், பரிபூரண சமாதானம் செய்பவரான இயேசுகிறிஸ்து கூட எல்லோருடனும் சமாதானமான உறவைக் கொண்டிருக்கவில்லை. அப்போஸ்தலர்களும் அப்படி செய்யவில்லை! இது நமக்கும் அதே நிலை தான். நாம் இங்கே சற்று கவனித்து பார்த்தால், சுவிசேஷத்திற்கு உண்மையாக இருப்பது அடிக்கடி மோதல்களைக் கொண்டுவருகிறது. சமாதானத்தையல்ல பட்டயத்தையே அனுப்ப வந்தேன். என்றும், ஒரு மனுஷனுக்கு சத்துருக்கள் அவன் வீட்டாரே” என்றும் இயேசுகிறிஸ்துவே கூறினார் [மத்தேயு 10:34-36].

ஆகையால்தான் அப்போஸ்தலனாகிய பவுல் ஞானமாக ரோமர் 12:18 ல் இந்த வார்த்தைகளை எழுதினார், கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். நம் பங்கிற்கு, மற்றவர்களுடன் சமாதானத்தைத் தொடர நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். சமாதானத்திற்காக பாடுபடுவதில் நாம் கூடுதல் தூரம் செல்ல வேண்டும்-எப்போதும் சண்டையைத் தேடும் சிலரை நாம் சந்திக்க நேரிடும், ஏனெனில் அவர்கள் சமாதானத்தை விரும்புபவர்கள் அல்ல.

பண்பு #6. சமாதானம் பண்ணுகிறவர்கள் எப்பொழுதும் மனிதர்களிடையே சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிசெய்கிறார்கள்.

இதை வேறுவிதமாகக் கூறுவதென்றால், மனிதர்களிடையே சமாதானத்தை நிலைநாட்ட முடிந்த இடங்களில் ஈடுபடுவதற்கு விசுவாசிகள் போதுமான அக்கறை காட்ட வேண்டும். ஆம், ஒருவரோடொருவர் சமாதானமாக இருக்க மக்களை ஊக்குவிக்கும்போது குறிப்பிடத்தக்க ஆபத்து உள்ளது. நாம் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம், இழிவுபடுத்தப்படலாம், நட்பை இழக்க நேரிடலாம். ஆனால், சமாதானம் செய்பவர்களாக நாம் எப்போழுதும் மக்களிடையே சமாதானத்தை காண முயல வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுலும் அப்படிப்பட்ட ஒரு மனிதனாவே இருந்தார்.

உதாரணமாக பிலிப்பியர் 4:2 ல் அங்கு பவுல் இரண்டு பெண்களுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்த முயன்றார், “கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்தி சொல்லுகின்றேன்.” மற்றொரு உதாரணமாக பிலேமோனுக்கும் அவனுடைய அடிமை ஒனேசிமுவிற்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த அவர் எடுத்த முயற்சியை கூறலாம். விசுவாசியாவதற்கு முன்பு, ஒனேசிமு பிலேமோனிடமிருந்து பெரும்பாலும் அவரிடமிருந்து திருடிய பிறகு தப்பி ஓடிவிட்டார். அதனால்தான், பவுல் சமாதான முயற்சியில், பிலேமோனுக்கு ஒனேசிமு செலுத்த வேண்டியதைக் கொடுக்க முன்வந்தார், “17 ஆதலால், நீர் என்னை உம்மோடே ஐக்கியமானவனென்று எண்ணினால், என்னை ஏற்றுக்கொள்வது போல அவனையும் ஏற்றுக்கொள்ளும். 18 அவன் உமக்கு யாதொரு அநியாயஞ் செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும் [பிலேமோன் 1:17-18]. அந்தளவுக்கு அவர் மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான தனது முயற்சிகளில் ஈடுபடத் தயாராக இருந்தார்!

பண்பு #7. சமாதானம் பண்ணுகிறவர்கள் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான விலைக்கிரயம் கொடுக்க தயாராக இருப்பர்.

சமாதானத்திற்கு ஒரு விலைகிரயம் கொடுக்க வேண்டியிருக்கிறது. நாம் இனியும் தேவனோடு போரிடாதப்படி நம்மைத் தம்முடன் ஒப்புரவாக்குவதற்கு, பிதா அவருடைய குமாரனை விலைக்கிரயமாக கொடுக்க வேண்டியிருந்தது. அந்த சமாதானத்தை நமக்கு கொடுக்க குமாரன் தம் உயிரையே கொடுத்தார். உலகிற்கு சமாதானத்தின் நற்செய்தியைக் கொண்டு சென்ற ஆரம்பகால அப்போஸ்தலர்கள் [சில சமயங்களில், அவர்களின் வாழ்க்கையும் கூட] விலைக்கிரயமாக கொடுக்க வேண்டியிருந்தது.

அதேபோல, சமாதானத்தை மேம்படுத்துவதற்கு நாம் முயற்சி செய்யும்போது, ​​ அதில் நமக்கு ஏதாவது இழப்பு ஏற்படும் தருணங்களும் வரும். அதனால்தான், இயேசுகிறிஸ்து, அடுத்த பாக்கியத்தில் [மத்தேயு 5:10-12], நாம் பாக்கியங்களுக்காக வாழும்போது ஏற்படும் துன்பங்களைப் பற்றி பேசுகிறார். நாம் எவ்வளவு மென்மையாகச் சொன்னாலும், உண்மை வலிக்கத்தான் செய்யும், பெருமையுள்ளவர்கள் தாங்கள் பாவிகள் என்பதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஒரு அவிசுவாசிகள் மட்டுமல்ல; விசுவாசிகளும் தங்கள் வீடுகளிலும், சபை அல்லது பணியிடத்திலும் கூட கோபத்தை வெளிப்படுத்தலாம். எவ்வாறாயினும், விலைக்கிரயம் கொடுக்க பயந்து சமாதானத்தை ஏற்படுத்துவதில் இருந்து நாம் பின்வாங்க கூடாது. சமாதானத்தை மேம்படுத்த தேவன் நமக்குக் கட்டளையிடுகிறார், நாம் கீழ்ப்படிய வேண்டும்.

பண்பு #8. சமாதானம் பண்ணுகிறவர்கள் உறவில் சமாதானமின்மை உருவாக காரணமாயிருக்கமாட்டார்கள்.

நாம் சமாதானம் செய்பவர்களாக இருக்க அழைக்கப்பட்டாலும், சமாதானத்தை முறிப்பவர்கள் என்று வர்ணிக்கக்கூடிய வழிகளில் நாம் அடிக்கடி செயல்படுகிறோம்! நமது மனப்பான்மையிலும், வார்த்தைகளிலும், செயல்களிலும் சமாதானத்தைப் ஏற்படுத்துவதில் குறைவு உள்ளது. நாம் எப்பொழுதும் சரியானவர்கள் என்று நிரூபிக்க விரும்புகிறோம். நம் தவறுகளை யாராவது சுட்டிக் காட்டினால் அவர்களை  தேவன் தடைசெய்வாராக என்று சொல்கிறோம். திருமண பந்தங்கள், பெற்றோர் உறவுகள், பிற விசுவாசிகளுடனான உறவுகள் மற்றும் நமது பணியிடங்களில் உள்ளவர்களிடமும் கூட இப்படிப்பட்ட நிலை காணப்படுகிறது. நமது வாய் மிகவும் வசைபாடுகிறது, பொறுமையின்மையும், மன்னிக்காத மனப்பான்மையும் நம்மிடம் குறைவாக இருப்பதனால்  சிறிய காரணங்களுக்காகவும். கோபம் நமது குணமாக மாறுகிறது.

அகந்தை ஆட்சி செய்யும் இடத்தில் சமாதானத்தை இழப்பதைத் தவிர வேறொன்றும் இருக்க முடியாது. நாம் சமாதானத்தை முறிப்பவர்களாக வாழ்ந்தால் சமாதானம் செய்பவர்களாக இருக்க முடியாது! அதனால்தான் யாக்கோபு ஞானமாக தெய்வீக ஞானத்தைப் பின்தொடரக் கற்றுக்கொடுக்கிறார், வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு. பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது” [யாக்கோபு 3:16-18].

இந்த பாக்கியத்தில் வாழ்ந்தால்.

சமாதானம் செய்பவர்களாக நமது அழைப்பில் எப்படி வாழ்வது? பரிசுத்த ஆவியானவரை தொடர்ந்து சார்ந்திருப்பதன் மூலம் மட்டுமே இது சாத்தியம். இந்த வாழ்க்கைமுறையை நாம் சொந்த முயற்சியால் பின்பற்ற முடியாது. அதனால்தான் இயேசுகிறிஸ்து இந்த பாக்கியத்தை நமக்காக பரிபூரணமாக வாழ்ந்து காட்டியது மட்டுமல்லாமல், இதை வாழ உதவும் பரிசுத்த ஆவியானவரையும் நமக்குத் தந்திருக்கிறார். கலாத்தியர் 5:22 இவ்வாறு கூறுகிறது, “ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், சமாதானம்…” பரிசுத்த ஆவியானவரின் வல்லமை நம்மில் கிரியை செய்வதால் நாம் சமாதானம் செய்பவராக இருக்க முடியும். மேலும் பரிசுத்த ஆவியானவர் வேதத்தின் மூலம் செயல்படுகிறார். ஜெபத்தின் மூலம், ஐக்கியத்தின் மூலம், மற்றும் வாழ்க்கை சூழ்நிலைகள் மூலம் [முக்கியமாக சோதனைகள்] இந்த மனப்பான்மையை நம்மில் உருவாக்குகிறார்.

ஆகையால்தான், பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாழ்கிறார் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். மேலும், அவர் நமக்குள் வாழ ஒரே வழி, பாவ மன்னிப்புக்காக கிறிஸ்துவில் மட்டுமே நம்பிக்கை வைப்பதாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் தேவனுடன் சமாதானமாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படைத் தேவை [பண்பு # 1 ஐப் பார்க்கவும்]. அப்போதுதான், பரிசுத்த ஆவியானவர் இந்த அற்புதமான சமாதானமாகிய பண்பை நம் வாழ்வில் உருவாக்க முடியும்.

பணிவாகவும், மன்னிப்பவராகவும், பொறுமையாகவும் இருக்கும்படி வேதம் தொடர்ந்து நம்மை அழைக்கிறது. அவமானங்களையும் நிராகரிப்புகளையும் புறக்கணித்து, நம் ஆற்றலுக்குள் இருக்கும் சமாதானத்தை ஏற்படுத்த நாம் இயேசுகிறிஸ்துவைப் போலவே ஆயத்தமாக இருக்க வேண்டும்! நாம் “இரக்கம், அன்பு, பணிவு, சாந்தம் மற்றும் பொறுமை ஆகியவற்றை அணிந்து கொள்ள வேண்டும்.” நாம் “ஒருவரையொருவர் சகித்துக்கொண்டு ஒருவரையொருவர் மன்னிக்க வேண்டும்.” “இயேசு கிறிஸ்து மன்னித்தது போல” நாமும் மன்னிக்க வேண்டும். நாம் எப்போதும் “அன்பை அணிந்துகொள்ள வேண்டும்.” “கிறிஸ்துவின் சமாதானம் [நம்] இருதயங்களில் ஆளுகை செய்யட்டும், ஏனென்றால் ஒரே சரீரத்தின் அவயவங்களாக [நாம்] சமாதானத்திற்கு அழைக்கப்பட்டோம்.” இறுதியாக, நாம் எப்போதும் “நன்றியுடன்” இருக்க வேண்டும் [கொலோசெயர் 3:12-17]!

இப்படிப்பட்ட வாழ்க்கை முறையை நாம் பின்பற்றும்போது, ​​அவருடைய கிருபையினாலும், பரிசுத்த ஆவியானவரின் செயல்படுத்தும் வல்லமையினாலும், சமாதானம் செய்பவர்களாக நம்முடைய அழைப்பில் வாழ்வோம்!

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்!

Category
Subscribe
Notify of
guest
0 கருத்துக்கள்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments