பாக்கியவான்கள் – பகுதி 9 துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்

Posted byTamil Editor March 19, 2024 Comments:0

(English Version: Beatitudes – Part 9 – Blessed Are Those Who Are Persecuted)

மத்தேயு 5:3-12  ஆகிய வசனங்கள் வரை விரவியிருக்கும் பாக்கியங்களைப் பற்றிய தொகுப்புகளின் 9 வது பதிவாகும். இந்தப் பகுதியில், ஆண்டவராகிய இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இருக்க வேண்டிய 8 அணுகுமுறைகளை விவரிக்கிறார். இந்த அணுகுமுறைகளின் மீது நாட்டம் கொள்ளுதலானது ஒரு எதிர் கலாச்சாரமாகும். அதனால்தான், ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை முறையை “எதிர்-கலாச்சார கிறிஸ்தவம்” என்றும் விவரிக்கக்கூடும்.

இந்த பதிவில், மத்தேயு 5:10-12 ல் விவரிக்கப்பட்டுள்ள 10. நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. 11. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; 12. சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே” என்ற எட்டாவதும், இறுதியானதுமாகிய அணுகுமுறையைப் பார்ப்போம்.

******************

சில ஆண்டுகளுக்கு முன்பு விசுவாசியான அமெரிக்க இளம் பெண் ஒருத்தி ஈராக்கில் படுகொலை செய்யப்பட்டாள். அவள் செய்த குற்றமென்ன? அங்குள்ள அகதிகளுக்கு சுத்தமான தண்ணீரை கொடுத்து உதவ தான் அங்கு சென்றாள். ஆச்சரியப்படும் விதமாக, ஒருவேளை அவள் கொல்லப்பட்டால் தனது சபை படிக்கும்படி ஒரு கடிதம் எழுதியிருந்தாள். அதில் “தேவன் அழைக்கும்போது, எனக்கு எந்த வருத்தமும் இல்லை, நான் ஒரு இடத்தில் இருக்கும்படிக்கு அழைக்கப்படவில்லை, மாறாக, அவரிடம் இருக்க அழைக்கப்பட்டேன்… இதற்கு கீழ்ப்படிவதே என் நோக்கமாக இருந்தது, துன்பப்படுவது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான், அவருடைய மகிமை என் வெகுமதியாக இருந்தது. அவருடைய மகிமையே என் வெகுமதியாக இருக்கிறது.” என்று எழுதப்பட்டிருந்தது

அவள் தனது நல்லடக்கத்தைக் குறித்து தனது போதகருக்கு இந்த வார்த்தைகளை எழுதினார்: தைரியமாக இருங்கள், ஜீவனைக் காக்கும், வாழ்க்கையை மாற்றும், நித்திய நற்செய்தியை தொடர்ந்து பிரசங்கியுங்கள். நம்முடைய பிதாவுக்கு மகிமையையும் கனத்தையும் கொடுங்கள். 2 கொரிந்தியர் 15:5 ஆம் வசனம்   உட்பட, தனக்குப் பிடித்த சில வேதாகமப் பகுதிகளை அவள் பட்டியலிட்டாள், அதில், “பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்” என்று கூறுகிறது. மற்றொன்று ரோமர் 15:20, “மேலும் அவருடைய செய்தியை அறியாதிருந்தவர்கள், காண்பார்களென்றும், கேள்விப்படாதிருந்தவர்கள் உணர்ந்து கொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே”  என்று கூறுகிறது. முடிவில், “இயேசுவை அறிந்து அவருக்குச் சேவை செய்வதில் உள்ள மகிழ்ச்சியை போன்று வேறொரு மகிழ்ச்சியில்லை” என்று எழுதியிருந்தாள்.

அவருடைய மகிமையே என் வெகுமதி! இயேசுகிறிஸ்துவை அறிந்து, அவருக்கு சேவை செய்வதிலுள்ள மகிழ்ச்சியைப் போன்று, வேறு  எதிலும் மகிழ்ச்சி கிடையாது! இந்த கடைசி பாக்கியத்தின் சாராம்சத்தை இந்த பெண்மணி புரிந்துகொண்டாள் என்பதை அந்த வார்த்தைகள் வெளிப்படுத்துகிறதல்லவா? இதன் விளைவாக, இயேசுகிறிஸ்துவின் உண்மையுள்ள பல சீஷர்களைப் போலவே, அவளும் தனது பூமிக்குரிய வாழ்க்கையை இழந்தாலும், நித்திய வாழ்க்கையைப் பெற்றாள். அவள் இப்போது, தேவனோடு இருப்பதன் மகிழ்ச்சியும், அவரை நித்தியமாக வணங்குவதுமாகிய தன்னுடைய வெகுமதியைப் பெற்றிருக்கிறாள்.

துன்பத்தின் யதார்த்தம்.

இந்த வசனங்களில், கர்த்தராகிய இயேசு அவருடைய கட்டளைகளின்படி வாழும்போது நாம் துன்புறுத்தலைச் சந்திப்போம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார். இச்சூழலில், இதுவரை பாக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ள “எதிர்-கலாச்சார வாழ்க்கையை வாழ்வதால் நாம் வாழ்வதால் நிராகரிப்பை எதிர்கொள்வோம். இயேசுகிறிஸ்து “ஒருவேளை”, “துன்பப்படுவீர்களானால்”  என்று கூறவில்லை என்பதை தயவு செய்து கவனியுங்கள்.  மக்கள் “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்லும்போது” என்று கூறுகிறார் [மத்தேயு 5:11]. அவரைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் அவருடைய கட்டளைகளை நிறைவேற்றியதற்காக பின்னடைவைச் சந்திப்பதற்கான காலத்தைக் குறிக்கிறது. ஒரு மனிதன் எங்கு வாழ்கிறார் அல்லது எதிர்கொள்ளும் தனித்துவமான சூழ்நிலைகளைப் பொறுத்து பின்னடைவின் அளவு வேறுபடலாம், ஆனால் துன்புறுத்தலின் உண்மை இங்கே வலியுறுத்தப்படுகிறது.

ஆக மொத்தம், நாம் அவருடைய கட்டளைகளைப் பின்பற்றும்போது, ​​உலகமும், சாத்தானும் நம்மைப் பின்தொடர்ந்து வலியை உண்டாக்குவார்கள் என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். துன்பப்படுவது ஒரு இனிமையான தலைப்பு அல்ல. ஆனால், இயேசுகிறிஸ்துவை உண்மையாகப் பின்பற்ற முயலும் அனைவருக்கும் இது இன்னும் முக்கியமான தலைப்பாகவே இருக்கிறது. ஏன்? ஏனெனில் இயேசுகிறிஸ்து, அடிக்கடி தமது ஊழியத்தில் நேர்மையுடன், தம்மைப் பின்பற்றுபவர்கள் எதிர்கொள்ளும் துன்பப்படுதலின் யதார்த்தத்தைப் பற்றி பேசினார். அவரைப் பின்தொடர்வதற்கு என்ன விலைக்கிரயம் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார்.  அதில் இங்கே சில உதாரணங்கள் கொடுக்கப்படுகின்றது.

மத்தேயு 10:22     “என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்…”

மாற்கு 8:34       “…ஒருவன் என் பின்னே வரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.”

லூக்கா 14:27      “தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.”

யோவான் 15:20   “ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்.”

எனவே, துன்பப்படுதலைப் பற்றி இயேசுகிறிஸ்து மீண்டும் மீண்டும் எப்படிப் பேசினார் என்பதை நாம் தெளிவாகக் காண்கிறோம், ஏனெனில் அது ஒரு முக்கியமான விஷயமாகும்.

ஆனால் இந்த விஷயத்தை இயேசுகிறிஸ்து மட்டும் முக்கியமாகக் கருதவில்லை. அப்போஸ்தலர்களும்  கூட முக்கியப்படுத்தினார்கள்!

அப்போஸ்தலர் 14:22 “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்    தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.”

2 தீமோத்தேயு 3:12 “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.”

1 பேதுரு 4:12     “பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்…”

வெளிப்படுத்தல் புத்தகத்தில் கூட, அந்திக்கிறிஸ்து அதிகாரத்திற்கு வரும்போது, விசுவாசிகள் தங்கள் விசுவாசத்திற்காக மிகப்பெரிய துன்பத்தை அனுபவிப்பார்கள் என்று நமக்குச் சொல்லும் யோவானின் வார்த்தைகளைப் படிக்கிறோம்.

வெளிப்படுத்தல் 13:10    “சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்.”

துன்பத்திற்கான காரணம்.

“துன்பத்திற்கு ஆளாக நேரிடும்” என்று கர்த்தர் போதிப்பது மட்டுமின்றி, இந்த துன்பத்திற்கான காரணத்தையும் கூறுகிறார். வசனம் 10 ல் கவனிக்கவும், அவர் “நீதியின் காரணமாக துன்புறுத்தப்படுவதை” பற்றி பேசுகிறார். வசனம் 11 ன் கடைசிப் பகுதியில், “என்னால்” துன்பப்படுவதைப் பற்றி பேசுகிறார். எனவே, “நீதி” என்பது இயேசுகிறிஸ்துவுக்காக வாழ்வதையும், அவருடைய கட்டளைகளைப் பின்பற்றுவதையும் குறிக்கிறது. இது நம் பாவச் செயல்களால் வரும் துன்பம் அல்ல [1 பேதுரு 4:15], வீழ்ச்சியடைந்த உலகில் வாழ்வதால் எல்லா மக்களும் அனுபவிக்கும் பொதுவான துன்பமும் இதுவல்ல [ரோமர் 8:20-22]. இது குறிப்பாக இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றியதற்காக வரும் துன்பமாகும்.

நாம் கிறிஸ்துவுக்காக வாழும்போது, எதிரியானவன் அமைதியாக இருக்க மாட்டான். இருளின் சாம்ராஜ்யம் திருப்பி பலமாகத் தாக்கும். விசுவாசிகள் ஏன் துன்புறுத்தப்படுவார்கள் என்று யோவான் 3:19-20 ல் இயேசுகிறிஸ்து இவ்வாறு கூறுகிறார், “ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.” ஒளியின் நோக்கமானது, இரகசியங்களை அம்பலப்படுத்துவதாகும்.

எனவே, விசுவாசிகள், அவிசுவாசிகளின் செயல்களை தங்களின் வார்த்தைகளாலும், தங்களின் வாழ்க்கையாலும் வெளிப்படுத்தும்போது, அதற்கு சரியான பதிலடியை எதிர்கொள்வார்கள். அவமானங்களையும், துன்புறுத்தல்களையும், எல்லாவிதமான தீமைகளையும் சந்திப்பார்கள்! விசுவாசிகளின் வாழ்க்கையை எந்த விதத்தில் துன்பப்படுத்த முடியுமோ, அந்த அளவிற்கு வார்த்தைகளினாலும், செயல்களினாலும் செய்வார்கள்.

துன்பத்திற்கான நமது மறுமொழி.

துன்புறுத்தப்படும்போது, ​​நமது பதில் என்னவாக இருக்க வேண்டும்? வசனம் 12 ன் முதல் பகுதியில் இயேசுகிறிஸ்து தெளிவான பதிலைத் தருகிறார்: “சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்” [மத்தேயு 5:12].  மகிழ்ச்சிக்கான பாய்ச்சல் என்று இதை வேறுவிதமாகவும்  மொழிபெயர்க்கலாம். இயேசுகிறிஸ்து அமைக்கவிருக்கும் இராஜ்ஜியத்தில் திரியேக தேவனுடன் இருப்பதானது ஏராளமான மகிழ்ச்சியே பதிலாக இருக்க வேண்டும். துன்புறுத்தப்படுதலுக்கு விசுவாசியின் பதிலைப் பற்றிய புதிய ஏற்பாட்டின் ஒருங்கிணைந்த கருப்பொருள் மிகுந்த மகிழ்ச்சி என்பதில் ஆச்சரியமில்லை.

துன்புறும் விசுவாசிகளுக்கு எழுதிய கடிதத்தில், “கிறிஸ்துவின் பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்” [1 பேதுரு 4:13] என்று பேதுரு கட்டளையிட்டான். [நாம்] நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது… அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” என்று யாக்கோபு கூறுகிறான் [யாக்கோபு 1:2]. அப்போஸ்தலர்கள் இயேசுவைப் பிரசங்கித்ததற்காக மத அதிகாரிகளால் சட்டையால் அடிக்கப்பட்டபோது, “அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனை சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்…” என்ற பதிவை அப்போஸ்தலர் 5:40-41 நமக்குத் தருகிறது. துன்பங்கள் இருந்தாலும், “இயேசுவே மேசியா என்ற நற்செய்தியைப் போதிப்பதையும் அறிவிப்பதையும் அவர்கள் ஒருபோதும் நிறுத்தவில்லை” [அப்போஸ்தலர் 5:42] என்று அடுத்த வசனம் நமக்குச் சொல்கிறது. அப்போஸ்தலர் 16:23-25, பவுலும் சீலாவும் அடிக்கப்பட்டு சிறையில் இருந்தபோது,  “ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்” என்று கூறுகிறது.

மேற்கூறிய பதில்கள், ஆரம்பகால விசுவாசிகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேதனையான அனுபவங்களுக்குப் பிறகும் தங்கள் விசுவாசத்தைக் கைவிடவில்லை என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. அவர்கள் இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றும் அழைப்பில் உண்மையாக நிலைத்திருந்தார்கள். எதிர்பாராதவிதமாக , நம்முடைய பதில் பெரும்பாலும் நேர்மாறாக உள்ளது. சில சமயங்களில், கிறிஸ்துவுக்கு விசுவாசமாக இருப்பதற்காக நாம் அதிக விலைக்கிரயம் கொடுத்துவிட்டோம் என்று நினைப்பதால், மிகுந்த துக்கத்தால் படுக்கையை விட்டு எழக்கூட முடியாமல் இருந்திருக்கிறோம். இது ஒரு அவமானம் போன்ற சிறிய விஷயமாக இருந்தாலும், நாம் பல நாட்கள் இப்படி துக்கப்பட்டிருக்கிறோம். ஏன் இப்படி ஒரு பதிலை தருகிறோம்? இங்கே சில காரணங்கள் உள்ளன: உலக சிந்தை நம்மில் மிக அதிகமாக காணப்படுகிறது; இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளத் தவறிவிடுகிறோம்;  நான் என்னும் அகங்காரம்(ஈகோ) அதிகமாக காணப்படுகிறதினால்தான் “துன்புறுத்தப்படுதல்” என்ற வார்த்தையை சொல்வதற்கு கூட நாம் சரியாக விரும்புவதில்லை.

இருப்பினும், தேவனுடைய ராஜ்யத்தில் வாழ விரும்பும் அனைவருக்கும் ஏதோ ஒரு அளவு துன்புறுத்தப்படுவது தவிர்க்க முடியாதது என்பதை நினைவில் கொள்வோம் [2 தீமோத்தேயு 3:12]. அத்தகைய சந்தர்ப்பங்களில் நம்முடைய பதில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆம், அடிக்கடி கண்ணீர் வரலாம். ஆனால், நமக்காக இத்தனை அடிகள் வாங்கியவருக்காகத்தான் அடி வாங்குகிறோம் என்று அறிந்து, உள்ளுக்குள் அந்த ஆழ்ந்த மகிழ்ச்சியை அந்தக் கண்ணீர் தடுக்கக்கூடாது. மேலும், அந்தப் புரிதல், வேதனையின் ஆழ்ந்த அழுகைகளுக்கு மத்தியிலும் ஆழ்ந்ததும் நிலையானதுமான மகிழ்ச்சியைக் கொண்டுவர வேண்டும். நாம், பவுல் கூறுவது போல், “துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாக” இருக்கிறோம் [2 கொரிந்தியர் 6:10].

பாடுகளை சகிப்பதற்கான பலன்.

இத்தனை துன்பங்களையும் கடந்து செல்லும் போது ஒருவர் கேட்கக்கூடிய ஒரு தர்க்கரீதியான கேள்வி இதுதான்: இதினால் என்ன பயன்? இறுதியில் எனக்கு என்ன கிடைக்கும்? இயேசுகிறிஸ்துவைப் பின்தொடர்வதில் இவ்வளவு வலிகள் அடங்கியிருந்தால் அது மதிப்புக்குரியதா?  இதற்கு இயேசுகிறிஸ்து கொடுக்கும் பதில் மிகவும் நேரடியானது: “பரலோக ராஜ்யம் அவர்களுடையது” [மத்தேயு 5:10]. நான் வசனம் 12 யும் நம்புகிறேன், “பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்” என்று இயேசுகிறிஸ்து கூறும்போது, அவர் அதையே 10ஆம் வசனத்திலும் குறிப்பிடுகிறார்.

துன்பத்தை அனுபவிக்க விரும்புபவர்கள் மட்டுமே பரலோகராஜ்யத்தைச் சுதந்தரிப்பார்கள். அவர்கள் மட்டுமே எதிர்காலத்தில் பரலோக ராஜ்யத்தில் பிதா, குமாரன் மற்றும் ஆவியானவர் முன்னிலையில் வாழ்ந்து, கிறிஸ்துவின் இரத்தத்தால் தங்கள் பாவங்கள் கழுவப்பட்டதால் அவரை ஆராதிப்பார்கள். அதுதான் பலன்! அவர்கள் உண்மையில் “பாக்கியவான்கள்” [மத்தேயு 5:10]. அவர்கள் மீதுதான் தேவனுடைய அங்கீகாரமும் அவருடைய தயவும் தங்கியிருக்கின்றன!

உண்மையில், ஒரு வகையில், முழு பாக்கியங்களும் தேவனுடைய ராஜ்யத்தில் வாழ்வதைப் பற்றியதாகும். இயேசுகிறிஸ்து முதல் பாக்கியத்தைப் பேசிய மத்தேயு 5:3, கடைசி பாக்கியத்தைக் கூறிய மத்தேயு 5:10 ஆகிய இரண்டும் “பரலோகராஜ்யம் அவர்களுடையது” என்ற சொற்றொடருடன் முடிவடைவதைக் கவனியுங்கள். வசனங்கள் 3 மற்றும் 10 க்கு இடையிலுள்ள அனைத்து பாக்கியங்களும் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. எனவே, ராஜ்யத்தில் வாழ்வதில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த வெகுமதியைத் தொடரும்படி நம்மை ஊக்குவிக்க, இயேசுகிறிஸ்து மத்தேயு 5:12 ன் கடைசிப் பகுதியில், “உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே” என்று சேர்த்துக்கொள்கிறார். பழைய ஏற்பாட்டில் கூட தேவனுடைய மக்களுக்கு இது எப்போதும் மாதிரியாக இருந்து வந்திருக்கிறது. தனது சொந்த சகோதரன் காயீனால் துன்புறுத்தப்பட்ட ஆபேலிலிருந்து, தேவனுடைய சத்தியத்தைப் பேசிய தீர்க்கதரிசிகள் உட்பட, தேவனுடைய மக்கள் எப்போதும் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

எனவே இயேசுகிறிஸ்து சொல்வது இதுதான்: நீங்கள் இதில் தனியாக இல்லை அல்லது இந்த துன்பம் புதியது அல்ல. தேவனைப் பின்தொடர்வதற்காக துன்புறுத்தல் எப்போதும் இருந்து வருகிறது. ஆனால் அதன் பலன் மதிப்புக்குரியது: நித்தியமாக தேவனுடன் வாழ்வதே அந்த பலன். அந்தக் காரணம் மட்டுமே ஆழ்ந்த துன்பத்தின் மத்தியிலும் கூட மிகுந்த மகிழ்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்.

இறுதிச் சிந்தனைகள்.

நினைவில் கொள்வோம். மலைப்பிரசங்கம் முழுவதும் இந்த பாக்கியங்கள் உட்பட, இயேசுகிறிஸ்துவின் போதனைகள், விசுவாசிகள் என்று கூறிக்கொள்ளும் அனைவருக்கும் ஒரு கண்ணாடியாக விளங்குகிறது. ஆம், இந்தக் கட்டளைகளில் எதையும் நம்மால் முழுமையாகக் கடைப்பிடிக்க முடியாது. இயேசு மட்டுமே செய்தார்! அவருடைய கிரியைகளின் காரணமாகவே நாம் தேவனுக்கு முன் நீதிமான்களாக்கப்பட்டோம்!

எனினும், நாம் விசுவாசத்தினால் இயேசுகிறிஸ்துவோடு ஐக்கியப்பட்டிருப்பதால், பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாழ்கிறார். மேலும், நாம் தொடர்ந்து இயேசுகிறிஸ்துவைப் போல் மாற்றப்படுவதே அவருடைய பணியாக இருக்கிறது. எனவே, இந்தப் பண்புகள் நமக்குள் வெளிப்பட வேண்டும். இந்த வகையான நீதிக்கு அடிப்படை இருக்கும் இடத்தில், துன்புறுத்தல் இருக்கும். வீட்டிலோ, பணியிடத்திலோ, பள்ளியிலோ, கல்லூரியிலோ, சமூக உறவுகளிலோ அல்லது சபையிலோ கூட இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுவதினால் நிராகரிப்பைச் சந்திக்க நேரிடும். ஆனால் அது மிகுந்த மகிழ்ச்சிக்கு காரணமாக அமைய வேண்டும், ஏனென்றால் நாம் உண்மையில் இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் என்பதை இது காட்டுகிறது.

விசுவாசிகள் என்று கூறிக்கொள்ளும் பலர் எந்த துன்புறுத்தலையும் எதிர்கொள்வதில்லை, ஏனெனில் அவர்கள் அதிக நீதி காட்டவில்லை. இது உண்மையான தேவனுடைய நீதியல்ல. மாறாக, சுய நீதி மட்டுமேயாகும். அவருடன் ஐக்கியப்பட்டதால் கிடைக்கும் நீதியான வாழ்க்கை தான் இயேசுகிறிஸ்து, இங்கே பேசும் நீதியின் அழைப்பாகும். அவர் தம் பிரசங்கத்தின் முடிவில் அத்தகையவர்களை நோக்கி, “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை” [மத்தேயு 7:21] என்று கூறினார். மேலும், அன்பான வாழ்க்கை முறையைக் காட்டுபவர்கள் மட்டுமே அவருடைய ராஜ்யத்தில் இருப்பார்கள் என்பது பிதாவின் விருப்பம்.

இந்த பாக்கியங்களை இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளின்படி, வேறுவிதமாக கூறவதென்றால், ஆவியில் எளிமையானவர்கள், தங்கள் பாவங்களுக்காக வருந்துபவர்கள், சாந்தகுணமுள்ளவர்கள், நீதியின் மேல் பசி தாகமுள்ளவர்கள், இரக்கமுள்ளவர்கள், இருதயத்தில் பரிசுத்தமுள்ளவர்கள் அதாவது துன்புறுத்தப்படுதலுக்கு தயாராக இருக்கிறவர்கள் – பரலோகராஜ்யத்தில் இருப்பார்கள். எனவே, பாவ மன்னிப்புக்காக நீங்கள் உண்மையிலேயே இயேசுகிறிஸ்துவிடம் திரும்பவில்லை என்றால், இனியும் தாமதிக்க வேண்டாம். உங்கள் பாவங்களை விட்டு விலகி, அவர் அளிக்கும் மன்னிப்பைத் தழுவுங்கள், அப்போதுதான் அவருக்காக துன்பப்படும் திறன் உட்பட, இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை முறையைத் தொடர உங்களுக்கு பெலன் கிடைக்கும்.

இதன் முக்கிய அம்சம் இதுதான்: விசுவாசத்திற்காக அதிகமாக துன்பப்படுவதே உண்மையுள்ள ஒவ்வொரு விசுவாசிக்கும் அருளப்பட்டிருக்கிறது, இயேசுகிறிஸ்துவும் துன்பப்பட்டார். பழைய மற்றும் புதிய ஏற்பாட்டில் விசுவாசிகள் துன்பப்பட்டனர். நாம் இதில் எப்படி வேறுப்பட்டு இருக்க முடியும்? பெரும்பாலும், துன்புறுத்தப்படுவது தேவனுக்கு நம்மீது உள்ள அதிருப்தியின் அடையாளம் என்று நினைக்கிறோம். இந்த அடிப்படையிலேயே செழிப்பு உபதேசம் பிரபலமாகிறது!

ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் மிகவும் வித்தியாசமான ஒன்றைக் கூறுகிறான். அவன் பிலிப்பியர் 1:29ல் நமக்கு இவ்வாறு நினைவூட்டுகிறான், “ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.” “அனுமதி” என்ற சொல் “கிருபை அல்லது தயவு” என்ற பதத்திலிருந்து பெறும் வார்த்தையாகும். இது ஒரு “வரம்” என்ற கருத்தை கொண்டுள்ளது. கிறிஸ்துவின் மீதான விசுவாசம் [இந்த வசனத்தின் முதல் பகுதி] மற்றும் கிறிஸ்துவுக்காக துன்பம் அனுபவித்தல்  [இந்த வசனத்தின் இரண்டாம் பகுதி] ஆகிய இரண்டுமே தேவன் தம்முடைய கிருபையால் நமக்கு அளித்த ஒரு “வரம்” ஆகும். ஒரு வரத்தின் ஒரு பகுதிக்கு மட்டும் நன்றி சொல்லிவிட்டு, மற்றொரு பகுதிக்கு நன்றி சொல்ல மறுப்பது எப்படி சரியாகும்? கிறிஸ்துவை விசுவாசிப்பது மட்டுமல்ல, அவருக்காகப் பாடுபடுவதும் ஒரு பாக்கியம்.

எனவே, நாம் அவமானங்களையும் நிராகரிப்புகளையும் எதிர்கொள்ளும்போது பதிலடி கொடுப்பதற்கு மாறாக, துன்பத்தை எதிர்கொள்ளும் போது நம்முடைய பதில் இதுவாக இருக்க வேண்டும்: “அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.” [1 பேதுரு 2:23].

அன்பான வாசகர்களே, நாம் இந்த வாழ்க்கையை முடித்துக்கொண்டு இயேசுகிறிஸ்துவின் சந்நிதியில் சேரும்போது, அவருக்காக நாம் என்ன செய்தோம்?  அது மரணத்திற்கு வழிவகுத்தாலும் – அவர் நமக்காக அனுபவித்த  பாடுகளின் அளவிற்கு நெருங்கவில்லை என்பதை நாம் உணர்வோம். அவர் பிதாவின் பிரசன்னம், பரலோக மகிமை அனைத்தையும் விட்டு பூமிக்கு வந்தார். பூமியில் இருந்தபோது சொல்ல முடியாத துன்பங்களைச் சகித்தார், இறுதியில் நாம்  பெற தகுதியான அந்த அவமானகரமான மரணத்தை ஏற்க சிலுவைக்குச் சென்றார். நம்முடைய பாவங்களுக்காக அவர் பிதாவின் கோபத்தைச் சுமந்தார். அப்படியானால் அவருக்காக துன்பப்படுவதை நாம் ஏன் பாக்கியமாக கருத கூடாது?

எனவே, நாம் எதிர்கொள்ளும் நிராகரிப்புகள் மற்றும் அவமதிப்புகளைப் பற்றி சிந்தித்து, நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொள்வோம்: நாம் இயேசுகிறிஸ்துவுக்காக வாழ்வதால் துன்பப்படுகிறோமா? அல்லது அது நமது பாவச் செயல்களின் விளைவா? அது முந்தையதாக இருந்தால், மகிழ்ச்சியடைவோம், தொடர்ந்து விடாமுயற்சியுடன் இருப்போம், இறுதியில் அது மதிப்புக்குரியதாக இருக்கும் என்பதை அறிவோம். அது பிந்தையது என்றால், தேவனிடம் நம் பாவங்களை அறிக்கை செய்வோம், நம் செயல்களுக்கு மனந்திரும்பி, இந்த போக்குகளை சமாளிக்க உதவும்படி அவரிடம் கேட்போம்.

கையிருப்பு இல்லை, பின்வாங்கவில்லை, வருத்தம் இல்லை

வில்லியம் போர்டன் என்பவர் 1904ல் சிகாகோவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். அவர் போர்டன் பண்ணையாரின் வாரிசாக இருந்தார். பட்டப்படிப்புக்காக, அவர் உலகம் முழுவதும் பயணித்ததற்காக ஒரு அசாதாரண பரிசைப் பெற்றார். இந்தப் பயணம் அவருக்கு எப்படி உதவிகரமாக இருந்தது என்று அவருக்கு அதை ஏற்பாடு செய்து கொடுத்தவர்கள் உணரவில்லை.

அந்த பயணத்தின் போது, வில்லியம் உலகெங்கிலும் சிலாக்கியமில்லாதவர்கள் மீதும், கிறிஸ்துவை அறியாதவர்கள் மீதும் ஒரு பாரத்தை உணர ஆரம்பித்தார். அவர் ஒரு மிஷனரியாக கிறிஸ்துவுக்கு சேவை செய்வதில் விருப்பம் தெரிவித்து வீட்டிற்கு எழுதினார். நண்பர்களும் உறவினர்களும் அவநம்பிக்கையுடன் நின்றாலும், போர்டன் தனது வேதத்தின் பின்புறத்தில் இரண்டு வார்த்தைகளை எழுதினார்: ” எந்த தடையுமில்லை” (No reserves).

அவர் அமெரிக்கா திரும்பி, யேல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கே அவர் ஒரு முன்மாதிரி மாணவராக இருந்தார். கல்லூரி வாழ்க்கை வில்லியமின் தூதுப்பணி துறையில் ஆசையைத் தணிக்கும் என்று மற்றவர்கள் நினைத்திருந்தாலும், அது அதைத் தூண்டியது. அவர் ஒரு வேதாகம படிப்பைத் தொடங்கினார், அவருடைய முதல் ஆண்டு முடிவில் 150 மாணவர்கள் வேதவசனங்களைப் படிக்கவும் ஜெபிக்கவும் வாரந்தோறும் கூடினர். அவர் மூத்தவராக இருந்த நேரத்தில், யேலில் இருந்த ஆயிரத்து முந்நூறு மாணவர்களில் ஆயிரம் பேர் வாராந்திர வேதாகம படிப்பு மற்றும் ஜெபத்திற்காக கூடிவந்த சீஷர் குழுக்களில் இருந்தனர்.

அவர் தனது சுவிசேஷ முயற்சிகளை வெறுமனே யேலின் அழகிய வளாகத்தைச் சுற்றி மட்டுப்படுத்தவில்லை. அவரது இருதயம் அதற்கு வெளியேயும் சமமாக இருந்தது. அவர் யேல் ஹோப் மிஷனை (Yale Hope Mission) நிறுவினார். கனெக்டிகட்டின் நியூ ஹேவன் தெருக்களில் இருந்தவர்களுக்கு அவர் ஊழியம் செய்தார். அவர் கிறிஸ்துவின் ஊழியத்தை அனாதைகள், விதவைகள், வீடற்றவர்கள் மற்றும் பசியுள்ளவர்களுடன் பகிர்ந்து கொண்டார், அவர்களுக்கு நம்பிக்கையையும் அடைக்கலத்தையும் வழங்கினார்.

வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவரிடம் அவர் அமெரிக்காவில் இருந்த காலத்தில் அவரை மிகவும் கவர்ந்தது எது என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார், “இளம் கோடீஸ்வரனாகிய வில்லியம் யேல் ஹோப் மிஷனில் கையேந்தி பிச்சைக்காக மண்டியிட்ட காட்சி” தன்னை வெகுவாய் கவர்ந்தது என்றார்.

போர்டன் யேல் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றபோது, அவருக்கு பல இலாபகரமான வேலைகள் வழங்கப்பட்டன. பல உறவினர்களும் நண்பர்களும் விரக்தியடையும் வண்ணம்,  அந்த வேலைகளை ஏற்க அவர் மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக, அவர் தனது வேதத்தின் பின்புறத்தில் “பின்வாங்க மாட்டேன்” என்ற  மேலும் இரண்டு வார்த்தைகளை எழுதினார்:

பின்பு அவர் பிரின்ஸ்டன் வேதாகம கல்லூரியில் நுழைந்தார், பட்டப்படிப்பு முடிந்ததும், சீனாவுக்குப் பயணம் செய்தார். முஸ்லீம் மக்களிடையே கிறிஸ்துவுக்கு சேவை செய்ய எண்ணி, அவர் அரபு மொழியைக் கற்கவும், ஆராயவும் எகிப்தில் தங்கினார். இருப்பினும், அங்கு இருந்தபோது, அவருக்கு முதுகெலும்பு மூளைக்காய்ச்சல் (Spinal Meningitis) ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் ஒரு மாதம் மட்டுமே உயிர் வாழ்ந்தார்.

இருபத்தைந்து வயதில், வில்லியம் போர்டன் மரித்துவிட்டார். கிறிஸ்துவை அறிந்துகொள்வதற்காகவும், அவரைத் தெரிந்துகொள்வதற்காகவும் போர்டன் எல்லாவற்றையும் நஷ்டமாக எண்ணினார். அவர் தனது முன்னோர்களிடமிருந்து பெறப்பட்ட ஆஸ்தியின் பயனற்ற தன்மையால் அங்கீகரிக்கப்பட மறுத்துவிட்டார், மாறாக இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் தனது மீட்கும் பொருளின் மகிமையை வாழ முயன்றார்.

அவரது மரணத்திற்குப் பிறகு அவரது வேதம் கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​பின் பக்கத்தில் “வருத்தம் இல்லை” என்ற மேலும் இரண்டு வார்த்தைகளைச் சேர்த்து எழுதியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தங்களின் மீட்பின் விலையை அறிந்தவர்கள், தங்களை மீட்டவருக்காக வாழ்ந்த வாழ்வானது வருத்தமில்லாத வாழ்க்கை என்பதை அறிவார்கள்… வில்லியம் போர்டன் தன்னை மீட்டவருடன் செல்லத் தேர்ந்தெடுத்தார். நீங்கள் எப்படி?

[கார்ட்டர்; அந்தோணி (2013-03-19).  பிளட் வொர்க், (பக். 106-108). சீர்திருத்த அறக்கட்டளை வெளியீடு. கின்டெல் பதிப்பு.]

 

    

Category
Subscribe
Notify of
guest
0 கருத்துக்கள்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments