பெருமையின் ஆபத்துகள்

(English version: “Dangers of Pride”)
1715 இல், பிரான்ஸ் நாட்டின் பதினான்காம் லூயிஸ் மரித்தான். இந்த மன்னன் தன்னை “பெரியவன்” என்று அழைத்துக்கொண்டு, “நானே நாடு!” என்றான். அவன் காலத்தில், அவனது நீதிமன்றம் ஐரோப்பாவில் மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. அவனது இறுதி ஊர்வலமும் அவரது மகத்துவத்தைக் காட்ட கண்கவரும் விதமாக வடிவமைக்கப்பட்டது. அவனது உடல் ஒரு தங்க சவப்பெட்டியில் கிடந்தது. மரித்த மன்னனின் மகத்துவத்தை மேலும் கூட்டுவதற்காகவும், அவன் மீது மட்டுமே கவனத்தை ஈர்ப்பதற்காகவும், பேராலயத்தின் விளக்கு மங்கலாக ஏற்றி வைக்கவும், அவனது சவப்பெட்டியின் மேலே ஒரு சிறப்பு மெழுகுவர்த்தியை வைக்கவும் உத்தரவு வழங்கப்பட்டது. இறுதி ஊர்வலத்திற்காக திரண்டிருந்த பெருந்திரளான மக்கள் அமைதியாக காத்திருந்தனர். பின்னர் கிளேர்மாண்டின் பிஷப் ஆன மாசிலோன் [Massillon, Bishop of Claremont], மெதுவாக கீழே இறங்கி, மெழுகுவர்த்தியை அணைத்து, “தேவன் மட்டுமே பெரியவர்!” என்று கூறினார்.
இந்த எளிய உண்மையை நாம் அனைவரும் தொடர்ந்து நினைவில் வைத்திருக்க வேண்டும்: தேவன் மட்டுமே பெரியவர். அவர் ஒருவரே மேன்மைப்படுத்தப்படவும், மகத்துவத்தில் உயர்த்தப்படவும் வேண்டும். அவரே படைப்பின் காரணர். அவரை வணங்க படைக்கப்பட்டவர்கள் நாம்! இருப்பினும், மெய் தேவனை வணங்குவதற்குப் பதிலாக, பாவத்திற்கு, குறிப்பாக பெருமைக்கு பலியாவதால், நம்மையே வணங்கத் திரும்புகிறோம். மற்ற பாவங்களை விட மக்களின் ஆத்துமாவை அழித்த பாவம் ஒன்று இருக்குமென்றால், அது பெருமையின் பாவமாகும். பெருமை என்பது அதன் இயல்பில் உலகளாவியது என்பதை நாம் மறுக்க முடியாது. மேலும் உண்மை என்னவென்றால், பெருமை என்பது ஒரு புதிய விஷயம் அல்ல. இது ஏதேன் தோட்டத்தில் இருந்தே உள்ளதாகும்.
இந்த பதிவில், 5 எளிய கேள்விகளை கேட்டு பதில் சொல்வதன் மூலம், பெருமையின் ஆபத்து மற்றும் அதற்கான தீர்வைக் குறித்துப் பார்ப்போம்.
1. பெருமை என்றால் என்ன?
எளிமையாகக் கூறுவதென்றால், பெருமை என்பது தன்னைத் தானே வணங்கும் தூசி! அது தன்னைத் தானே அரியணையில் ஏற்றிக் கொள்கிறது—அந்த அரியணை, தேவனுக்கு மட்டுமே உரியது! அரியணையில் அமர்ந்த பெருமைமிக்க பாபிலோனைத் தேவன் வெகு காலத்திற்கு முன்பே எப்படிக் கடிந்துகொண்டார் என்பதைக் கவனியுங்கள்: “உன் துன்மார்க்கத்திலே நீ திடநம்பிக்கையாயிருந்து: என்னைப் பார்க்கிறவர் ஒருவரும் இல்லையென்றாய். உன் ஞானமும், உன் அறிவுமே உன்னைக் கெடுத்தது” [ஏசாயா 47:10].
2. பெருமையின் மூலதாரம் எது?
சுற்றியிருக்கும் சூழலா? கடினமான குழந்தைப் பருவம் காரணமா? இல்லை! மாற்கு 7:21-23 ல் இயேசு தெளிவான பதிலைக் கொடுக்கிறார்: “எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாதசிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.” பெருமையின் ஆதாரம் ஒருவரின் சொந்த இருதயமாகும். இது வெளிப்புறமான ஒன்று அல்ல, மாறாக உட்புறமானது—அது எப்பொழுதும் நம்மில் ஒரு பகுதியாக இருக்கும்—நமது இருதயமாகும்!
3. தேவன் பெருமையை எப்படிக் கருதுகிறார்?
சிலர் அதை அழைப்பது போல் பெருமை ஒரு நற்குணம் அல்ல. மற்றவர்கள் சொல்வது போல் இது ஒரு பலவீனமும் அல்ல. மாறாக, அது ஒரு பாவம்-ஏனென்றால் தேவன் அதை அப்படித் தான் அழைக்கிறார்! நீதிமொழிகள் 21:4 இவ்வாறு கூறுகிறது, “மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே.” எனவே, நாம் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான்: பெருமை என்பது பாவம். அது ஒரு பாவம் என்பதால்—ஒரு பரிசுத்தமான தேவன் இயல்பாகவே பாவம் அனைத்தையும் வெறுக்க வேண்டும்.
நீதிமொழிகள் 16:5 இவ்வாறு கூறுகிறது, “மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்.” “அருவருப்பு” என்ற வார்த்தையானது, கெட்டுப்போன, அழுகிய உணவு போன்ற விரும்பத்தகாத ஒன்றைக் குறிக்கிறது. உண்மையில், தேவன் வெறுக்கும் எல்லா பாவங்களிலும், இந்த பாவமானது பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாக வேதம் குறிப்பிடுகிறது. அடிக்கடி அழைக்கப்படும் ஏழு கொடிய பாவங்களின் பட்டியலில் பெருமை முன்னிலை வகிக்கிறது. நீதிமொழிகள் 6:16-19 “ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை. துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால், அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.” இந்தப் பட்டியலிலும் பெருமையை இரண்டாம் இடத்தில் வைத்துப் பார்க்க முடியாது! தேவன் பெருமையை வெறுக்கிறார் என்பதில் ஆச்சரியமில்லை!
4. உள்ளத்தில் பெருமிதம் கொள்பவர்களுக்கு தேவன் எவ்வாறு பதிலளிப்பார்?
அது பாவம் மற்றும் அவருடைய பார்வையில் மிகவும் அருவருப்பானது என்பதால், பெருமையுள்ளவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை தேவன் எடுக்கிறார். மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன் என்று கூறிய பிறகு, நீதிமொழிகள் 16:5 இந்த வார்த்தையுடன் முடிவடைகிறது, “கையோடே கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்.” யாக்கோபு 4:6, “தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்.” என்று கூறுகிறது. மேலும் இதன் பொருள் என்னவென்றால் அவர் இருதயத்தில் பெருமை கொண்ட அனைவரையும் வீழ்த்துவார் என்பதாகும். ஏதோம் என்ற பெருமைமிக்க தேசத்திற்கு தேவன் கூறினது இதுதான்: “கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம்போக்குகிறது. நீ கழுகைப்போல உயரப்போனாலும் நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.” [ஒபதியா 1:3-4]. உள்ளத்தில் பெருமையுடையவர்களுக்கு தேவன் என்ன செய்கிறார்? அவர் அவர்களை வீழ்த்துகிறார். அது மிகவும் வேதனையான வீழ்ச்சி!
5. பெருமைக்கான தீர்வு என்ன?
பெருமைக்கு ஒரே ஒரு மருந்துதான் உண்டு. இது ஒரு எளிய சிகிச்சை—தேவனால் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை: பணிவு! ஏசாயா 66:2-ல் தேவன் இந்த வார்த்தைகளை கூறுகிறார், “ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.” உண்மையிலேயே மனத்தாழ்மையுள்ள மனிதன், வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும்—அதற்கு செலுத்த வேண்டிய விலைகிரயத்தைப் பொருட்படுத்தாமல் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறான்! அப்படிப்பட்டவன் தேவனுடைய கிருபையைப் பெறுவான். அது தேவனுடைய வாக்குத்த்தம்!
கிறிஸ்தவ எழுத்தாளரும் பிரசங்கியாருமான எஸ்.டி.கார்டன் இவ்வாறு கூறினார்:
“ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஒரு அரியணை இருக்கிறது. நான் அரியணையில் இருக்கும்போது, கிறிஸ்து சிலுவையில் இருக்கிறார். ஆனால் கிறிஸ்து அரியணையில் இருக்கும்போது, நான் சிலுவையில் இருக்கிறேன்.” உங்கள் வாழ்க்கையில் அரியணையை ஆக்கிரமிப்பது எது – நீங்களா? உங்கள் குடும்பமா? உங்கள் அந்தஸ்தா? உங்கள் வீடா? உங்கள் உடைமைகளா? உங்கள் அழகா? உங்கள் திறமைகளா? நீங்கள் எதற்காக வாழ்கிறீர்கள்? உங்களுடைய உன்னதமான இலக்கை நீங்கள் அடைந்தால், அது எதைக் குறிக்கும்? அது தேவனுக்கோ அல்லது சுயத்திற்கோ மகிமையைக் கொண்டு வருமா? நாம் அனைவரும் தேவனைத் தவிர எதையாகிலும் அல்லது யாரையாகிலும் அரியணையில் அமர்த்தியிருந்தால் நாம் மன்னிப்பு கேட்க வேண்டும். நாம் உண்மையிலேயே மனந்திரும்புவதற்கும், அவரை கர்த்தராக “மறுபடியும்” அரியணையில் அமர்த்துவதற்கும் அவர் நமக்கு பலம் தருவார்.
தேவன் உன்னத ஸ்தலத்திலும் பணிந்த ஆவியுள்ளவர்களிடமும் வாசம் செய்கிறார்; அது ஏசாயா 57:15-ல் வெளிப்படுத்தப்பட்டுள்ள ஒரு பரலோக வீடு மற்றும் பூமிக்குரிய வீடு: “நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.” நாம் நமது பெருமையை விட்டு மனந்திரும்பி, மனத்தாழ்மையைத் தொடரும்போது, ஆவியானவரின் உதவியை உண்மையாக நாடுவோம். அப்படிச் செய்தால், நாம் உறுதியாக இருக்க முடியும். கர்த்தர் நம் இருதயங்களில் பூமிக்குரிய வீட்டைக் கண்டுபிடிப்பார்!