மகிழ்ச்சியான திருமணத்திற்கு தேவனுடைய சூத்திரம்

Posted byTamil Editor April 18, 2023 Comments:0

(English Version: God’s Formula For A Happy Marriage: 1+1=1)

வேதத்தின் அடிப்படையில்  திருமண உறவை விட்டு விலகுவது சரியானது அல்ல! ஆதியாகமம் 2:24 கூறுகையில், ஒரு ஆணும் பெண்ணும் “ஐக்கியமாக” [இணைந்திருக்க வேண்டும் அல்லது ஒட்டிக்கொள்ள வேண்டும்] திருமணத்தின் மூலம் “ஒரே மாம்சமாக” மாற வேண்டும். ஒன்றாக, “ஒரு மாம்சம்” மற்றும் “ஒன்றுபட்ட” போன்ற வார்த்தைகள் ஒரு வெற்றிகரமான திருமணத்திற்கு தேவனுடைய மனதில் இருக்கும் அற்புதமான சித்திரத்தை நமக்குத் தருகின்றன. “விவாகரத்து தவறு இல்லை” எனும் காலத்தில், இதுவே திருமணத்தைப் பற்றிய தேவனுடைய பார்வையாக இருக்கிறது. கிறிஸ்துவுக்கும் அவருடைய சபைக்கும் இடையிலான ஆவிக்குரிய உறவை ஒரு கணவன் மனைவிக்கு இடையிலான திருமண உறவு சித்தரிக்கிறது என்பதையும் வேதத்திலிருந்து நாம் நினைவூட்டப்படுகிறோம் [எபேசியர் 5:32].

எனவே, திருமணம் என்பது ஒரு உடல் ரீதியான உறவை விட மேலானது. கிறிஸ்து மற்றும் அவரது சபையின் மூலம் தேவன், மகிமைப்படுத்தப்படுவது போல் [எபேசியர் 3:21], அவர் ஒரு தெய்வீக திருமணத்தின் மூலமும் மகிமைப்படுத்தப்பட வேண்டும்! கணவன் -மனைவி இருவரும் தங்கள் வாழ்வின் திருமணம் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்திற்கு முழு மனதுடன் கீழ்ப்படிந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். கணவனும் மனைவியும் தங்களுடைய நோக்கத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும், உடன் வேலையாட்களாக, தங்கள் வாழ்வில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்த முயல வேண்டும். இருப்பினும், பாவமானது இப்படி நிகழாமல் தடுக்கிறது. விபச்சாரம், பெருமை, மன்னிக்காதத்தன்மை, கடந்தக் கால தோல்விகளின் பதிவுகளை வைத்திருத்தல், சுயநல நோக்கங்கள், பணத்தின் மீதான அன்பு போன்ற பாவங்கள், தற்போது முறிந்துக்கொண்டிருக்கிற திருமணங்களுக்கு முக்கிய காரணங்களாக இருக்கிறது. உலகம் வலுவான திருமணங்களுக்கு நண்பனாக இல்லை. “அது ஒத்துவரவில்லை என்றால், அதை விட்டு கடந்துச் செல்லுங்கள்” அல்லது “நீங்கள் விவாகரத்து செய்து விட்டு மறுமணம் செய்துக்கொள்ளுங்கள் அல்லது மறுமணம் செய்துக்கொள்ள விவாகரத்து செய்யுங்கள்.”  அல்லது “உங்கள்  சுய திருப்தியை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்” என்று உலகம் சொல்கிறது. கிறிஸ்துவைப் பின்பற்றுவதாகிய சுய வெறுப்பையோ, சுயமரியாதையை மையமாகக் கொண்ட வேதத்தின் அடிப்படையில்லாத போதனைகளுக்கோ சபையானது  பெரிதும் ஆதரவாக இருப்பதாக  காணப்படவில்லை.

எனவே, இந்த தாக்குதல்களுக்கு மத்தியில், இந்த கட்டுரையானது, 10 குறிப்புகளை பரிசீலனைக்குக் கொடுத்து, திருமணம் பற்றிய தேவனுடைய போதனைகளுக்குக் கீழ்ப்படிய விரும்புவோருக்கு உதவ முற்படுகிறது. நம் வாழ்வில் தேவனுக்கு முதலிடம் கொடுக்க முயற்சி செய்தால், கடினமான திருமண வாழ்வில் கூட விடாமுயற்சியுடன் இருப்பதற்கு அவர் நமக்கு பலத்தை தருவார்.

1. வார்த்தையில் மூழ்கியிருங்கள்

கொலோசெயர் 3:16 “கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே(நமக்குள்ளே) சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதற்கு” நம்மை அழைக்கிறது. “பிரியமாயிருப்பவர்கள்” மற்றும் “அவருடைய வேதத்தை இரவும் பகலும் தியானிப்பவர்கள்” மீதான தேவனுடைய ஆசீர்வாதத்தை சங்கீதம் 1:1-2 நமக்கு நினைவூட்டுகிறது. அதனால்தான் நாம் வேதத்தில் போதுமான நேரத்தை அன்றாடம் செலவிட வேண்டும்.  நாம் தேவனை மதிக்கும் திருமண வாழ்வை நடத்த முற்படுவோமென்றால், மாம்சம், பிசாசு மற்றும் உலகத்திலிருந்து நாம் கேட்கும் குரல்களை எதிர்கொள்ள தேவனுடைய வார்த்தைகளை தொடர்ந்து கேட்க வேண்டும். எபேசியர் 5:21-32 மற்றும் 1 கொரிந்தியர் 13 போன்ற வசனங்களை அடிக்கடி தியானிப்பது ஆரோக்கியமான திருமணத்திற்கு இன்றியமையாதது.

2. உங்கள் மனைவியை உண்மையாக நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்

எபேசியர் 5:25 ல் “கிறிஸ்து சபையில் அன்புகூர்ந்து அதற்காக தம்மை ஒப்புக்கொடுத்தது போல, “மனைவிகளை நேசிக்கும்படி” கணவன்களுக்கு கட்டளையிடுகிறது. தீத்து 2: 4 ஆம் வசனம் “தங்கள் புருஷரிடத்தில் அன்புகூர” மனைவிகளுக்கு கட்டளையிடுகிறது. “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” என்ற கட்டளையைப் பிரதிபலிக்கும் போது கூட [மத் 22:39], ஒருவருடைய நெருங்கிய பிறன் தன்னுடைய   சொந்த துணை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!  ஆமாம், நம் துணைவர்கள் உலகில் சரியான நபராக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாமும் சரியானவர்கள் அல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம்! நாம் அனைவரும் மீட்கப்பட்ட பாவிகளாக இருக்கிறோம், இந்த பாவமுள்ள மாம்சத்தில் இயேசு கிறிஸ்துவை பார்க்கும் வரை இந்த வாழ்நாள் முழுவதும் பாவத்துடன் போராடுகிறோம். எனவே, இது நமக்கு ஒரு போராட்டமாக இருப்பதுப் போல், நம் வாழ்க்கைத் துணைவர்களுக்கும் ஒரு போராட்டம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இருப்பினும், தேவன் பூரணமற்ற மனிதர்களை நேசிக்கிறார் என்பதை அறிவது ஆறுதலளிக்கிறது, மேலும் பூரணமற்ற மக்களை நேசிக்க மனிதர்களுக்கு பெலன் தருவதாக உறுதியளிக்கிறார் [1 தெச 4:9].

3. பாலியல் தூய்மையை பின்பற்றவும்

எபிரேயர் 13: 4 இந்த கட்டளையை தெளிவாக எடுத்துரைக்கிறது: “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக, வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.” அதனால்தான் கண்கள் பார்ப்பது மற்றும் இருதயம் இரகசியமாக விரும்புவது ஆகியவற்றில் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் [மத் 5:28-30]. பாவ எண்ணங்கள்  சீக்கிரத்திலோ  அல்லது சுயஇச்சைகளிலோ அல்லது தவறான வார்த்தைகளினால் சாதாரணமாக பேசுவதோ பாவச் செயல்களுக்கு நேராக வழிநடத்தும். “தேவன் கொடுத்த வாழ்க்கைத் துணையைத் தவிர மற்றவர்களை விரும்புவது பாவம்”. அதனால்தான் ஒரு விசுவாசி மற்றவர்களுக்கு தவறான என்னத்தை கொடுக்கும் வகையில் பேசவோ, செயல்படவோ, உடை அணியவோ கூடாது. இது தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. “பாலியல் ஒழுக்கக்கேட்டைத் தவிர்க்க” நாம் எப்போதும் முயற்சி செய்ய வேண்டும், ஏனென்றால் “நாம் பரிசுத்தமாக வாழ வேண்டும்” என்பது தேவனுடைய சித்தம் [1 தெச 4:3]. தேவன் கொடுத்த வாழ்க்கைத் துணையைத் தவிர மற்றவர்களை விரும்புவது பாவம்.

4. பாலியல் நெருக்கத்தை தொடரவும்

பாலியல் தூய்மையைப் பின்பற்றுவது அவசியம் என்றாலும், பாலியல் நெருக்கத்தைத் தொடருவதும் அவசியம். 1 கொரிந்தியர் 7: 1-5 இல், பவுல் திருமணமான தம்பதிகளுக்கு பாலியல் நெருக்கம் தொடர்பான சில சத்தியங்களை நினைவுபடுத்துகிறார். 2 வது வசனத்தில், “ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்.” இந்த வசனத்தின் மூலம் அவர் பாலியல் நெருக்கத்தை ஊக்குவிக்கிறார் என்பது தெளிவாகிறது. அவர் 3-5 வசனங்களில் தொடர்ந்து இவ்வாறு கூறுகிறார், “புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள். மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி. உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடிவாழுங்கள்.”

கணவனோ மனைவியோ மற்றவரிடமிருந்து பாலியல் உறவைக் வற்புறுத்திக் கோரக்கூடாது என்றாலும், சுயநலமற்ற அன்பின் சூழலில் பாலியல் நெருக்கத்தை நாட இந்த வசனங்கள் வலியுறுத்துகின்றன! பல திருமண பந்தங்களில், கணவனோ அல்லது மனைவியோ அலுவலாக இருப்பதாலோ அல்லது கசப்புணர்வோடு இருப்பதாலோ  தங்கள் சரீரங்களை தங்கள் துணையிடமிருந்து விலக்கி வைத்துக்கொள்கிறார்கள்! ஆரோக்கியமான திருமண வாழ்விற்கான தேவனுடைய வடிவமைப்பு அதுவல்ல. வலுவான திருமண உறவுகள் பாலியல் தூய்மையால் மட்டுமல்ல, பாலியல் நெருக்கத்தாலும் அறியப்படுகின்றன. அதனால்தான் திருமணத்தின் பிணைப்பிற்குள் பாலியல் நெருக்கத்தின் நற்பண்புகளை உயர்த்துவதற்காக தேவன் சாலொமோனின் உன்னதப்பாட்டு என்ற முழு புத்தகத்தையும் வேதத்தில் வைத்திருக்கிறார்.

5. மன்னிக்கும் இருதயத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்

எபேசியர்4:32 இவ்வாறு நமக்கு போதிக்கிறது, “ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” விசுவாசிகளாகிய நாம், எந்தக் குற்றமாக இருந்தாலும் நம் இருதயத்தில் கசப்புணர்வை ஒருபோதும் வைத்திருக்கக்கூடாது, எப்போதும் மன்னிக்க ஆயத்தமாக இருக்க வேண்டும். கடந்தகால தவறுகளை தொடர்ச்சியாக ஒத்திகைப்பார்த்துக்கொண்டிருப்பது பல திருமண உறவுகளை அழித்துவிடுகிறது. 1 கொரிந்தியர் 13:5 ல் “தீங்கு நினையாது” என்று சொல்லப்பட்டிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. கசப்புணர்வு மக்களை அடிமைத்தனமாக மாற்றுகிறது, அதே நேரத்தில் மன்னிக்கும் மனப்பான்மை விடுதலையை வெளிப்படுத்துகிறது. தொடர்ச்சியாக ஒத்திகைப்பார்க்கப்படும் நம் பாவங்கள் கிறிஸ்துவினால் மன்னிக்கப்பட்டு கசப்புணர்வை வெல்வதற்கும் மற்றும் மன்னிக்கும் இருதயத்தைப் பயிற்சி செய்வதற்குமான திறவுகோலாகும்.

6. திருப்தியாக இருங்கள்

எபிரெயர் 13:5 இவ்வாறு கூறுகிறது, “நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவன் சொல்லியிருக்கிறாரே.” இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், விவாக மஞ்சத்தை தூய்மையாக வைத்திருக்க கொடுக்கப்பட்ட கட்டளையைப் பின்தொடர்ந்து [எபிரேயர் 13:4], எபிரேயர் 13:5, போதுமென்ற எண்ணத்தை  தொடர்வதைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது,  பாலியல் பாவங்கள் மற்றும் பணத்தின் மீதான பேராவல் ஆகியவைகள் திருமண உறவுகளை அழிக்கும் இரண்டு முக்கியமான பிரச்சினைகளாகும்.  பணம், தொழில் மற்றும் பிற ஆரோக்கியமற்ற ஆசைகளைப் பின்தொடர்வது புற்றுநோய் விரைவாக பரவி திருமண உறவுகளை அழிப்பது போன்றது [1 தீமோ 6: 6-10]. தவறான நோக்கங்களின் விளைவாக கணவன் மனைவிக்குள் பல கருத்து வேறுபாடுகள் எழுகின்றன என்று யாக்கோபு 4: 1-3 ல் நாம் காண்கிறோம் எல்லா வகையான சண்டைகளுக்கும் சரியான அடிப்படை ஆதாரத்தை இந்த வசனங்கள் நமக்கு கொடுக்கிறது “உங்களுக்குள்ளே யுத்தங்களும் சந்தைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களிலே போர்செய்கிற இச்சைகளினாலல்லவா?  நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம்பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.  நீங்கள் விண்ணப்பிக்கண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.” எனவே, ஒருவர் பேராசைக்கு எதிராக இருதயத்தைக் காத்து, மனநிறைவைத் தொடர்ந்தால், அது திருமண உறவை வலுப்படுத்த உதவும்.

7. இருவரும் இணைந்து கர்த்தரை சேவியுங்கள்

ஆண்டவருக்குச் சேவை செய்த பல வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய  வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் கூட யோசுவாஆண்டவருக்குச் சேவை செய்யும் ஆர்வத்தை  இழக்கவில்லை. யோசுவா 24:15 இல், அவருடைய பரிசுத்த தீர்மானத்தைப் பற்றி நாம் வாசிக்கிறோம்:  “கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்.”  தன்னைச் சுற்றியுள்ள மற்றவர்கள் எதைப் பின்தொடர்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், யோசுவா கர்த்தருக்கு சேவை செய்வதற்கான உன்னத இலக்கைத் தொடர முடிவு செய்தார். “யார் சேவை செய்தாலும் அல்லது விலகினாலும், நாங்கள் ஒன்றாக கர்த்தருக்கு சேவை செய்வோம்” என்பது ஒவ்வொரு கிறிஸ்தவ தம்பதியினரின் குறிக்கோளாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவனும் சேவை செய்வதற்காக இரட்சிக்கப்பட்டான் என்பதை நினைவில் கொள்வது அவசியம். ஒருமித்த இருதயத்துடன் கர்த்தருக்கு சேவை செய்ய முயலும் ஒரு குடும்பமும் உண்மையிலேயே திருமண வாழ்வின் மகிழ்ச்சியை அனுபவிக்கும்.

8. தாழ்மையாயிருங்கள்

நீதிமொழிகள் 16:5 இவ்வாறு கூறுகிறது, “மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோத்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்.”  திருமண உறவில் பெருமை இருக்கும் இடத்தில் சமாதானம் இருக்காது. அதனால்தான் மனத்தாழ்மையைக் கடைப்பிடிப்பது கணவன் மனைவி இருவருக்கும் தொடர்ந்து முன்னுரிமையாக இருக்க வேண்டும். உண்மையில் “தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிராக நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லப்படுகிறது” [யாக்கோபு 4:6]. மகிழ்ச்சியான திருமணம்  வாழ்வு வேண்டுமா?  அப்படியென்றால் இதற்கான பதில் மனத்தாழ்மையை அன்றாடம் முயற்சிப்பதில் காணப்படுகிறது! தேவன் எப்பொழுதும் தாழ்மையானவர்களை ஆசீர்வதிப்பார், ஏனென்றால் தாழ்மையே கிறிஸ்து நடந்த பாதை, அதுதான் நாம் நடக்க அழைக்கப்படும் பாதை!

9. உங்கள் இருதயத்தை காத்துக்கொள்ளுங்கள்

நீதிமொழிகள் 4:23 இவ்வாறு கூறுகிறது, “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவவூற்று புறப்படும்.” அதனால்தான் இருதயமானது ஆரம்ப கட்டத்திலேயே அனைத்து வகையான தவறான எண்ணங்களையும் சாகடிக்க வேண்டும், அவற்றை வளர விடாமல், மேற்கொள்ள  முயற்சிக்க வேண்டும்.  இல்லாவிட்டால் இது மிகவும் தாமதமாகிவிடும். யாக்கோபு 1:14-15 இந்த உபதேசத்தை தெளிவான சொற்களில் நமக்குக் கற்பிக்கிறது, “அவனவன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.”  பிலிப்பியர் 4:8 தியானம் (மனப்பாடம் கூட) செய்ய ஒரு சிறந்த வசனம் ஆகும் தீய எண்ணங்களுக்கு பதிலாக நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள விரும்பும் தம்பதிகள் தவறாமல் இந்த வசனத்தைப்  பயிற்சி செய்ய வேண்டும்: “கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ அவைகளையே சிந்தித்திக்கொண்டிருங்கள்.”

10. அடிக்கடி ஜெபியுங்கள்

நாம் சுயமாக, நம்முடைய திருமண பந்தத்தை வலுவாக வைத்திருக்கவோ இந்த யுத்தத்தை நாம் நம் சொந்த பலத்தில் போராடவோ முடியாது. நிச்சயமாக நம்மால் முடியாது – ஆனால் நம் திருமண பந்தத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள துணிந்துவிட வேண்டாம். “ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” என்று  எபேசியர் 6:12 நமக்கு நினைவூட்டுகிறது. நாம் கடுமையான,  இடைவிடாத ஆவிக்குரிய யுத்தத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம் என்பதை  புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த அறிவு நம்மை தினமும் மண்டியிடச் செய்து, கர்த்தருடைய பாதுகாப்பிற்காக அவரிடம் அழுது கொண்டே இருக்கச் செய்ய வேண்டும்.

“எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனவுறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்” என்று எபேசியர் 6:18 நமக்கு கட்டளையிடுகிறது. ஆவியானாலே ஜெபிப்பது   என்பது ஆவியானவரால் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையின்படியும் மற்றும் ஆவியானவருக்கு அடிபணிந்தும் ஜெபிக்க வேண்டும். கர்த்தருடைய உதவியின்றி, நம் திருமண உறவு சிதைந்துவிடும். “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” என்று இயேசு கிறிஸ்து மிகவும் தெளிவாக கூறியுள்ளார் [யோவான் 15:5]. எனவே, தெய்வீக திருமண உறவுகளை வளர்ப்பதற்கான 10 எளிய நம்பிக்கைக்குரிய போதனைகளை நாம் பார்த்தோம்.

கர்த்தருடைய ஆவியின் மூலமும் அவருடைய வார்த்தையின் மூலமும் அவருடைய உதவியால், ஒவ்வொரு திருமண வாழ்வும் தெய்வீக திருமண வாழ்வாக மாற வேண்டும். இன்றிலிருந்து ஒரு புதிய வாழ்க்கையை தொடங்குவதற்கு இன்னமும் காலம் சென்றுவிடவில்லை. சோதனைகளால் விசுவாசிகள் தொடர்ந்து தாக்கப்படும் இந்த உலகத்தில், தம்மை உண்மையாகப் பின்பற்ற ஆயத்தமாக இருப்பவர்களுக்கு தேவன் தமது கிருபையை தருவதாகஉறுதியளித்திருக்கிறார். சோதனையில் வீழ்ந்துவிடுவது  எளிதான காரியம், ஆனால் நம்முடைய மணவாழ்வின் பயணத்தில் தேவன் தம்மோடு  விடாமுயற்சியுடன் நிலைத்திருக்கும்படி இருக்கும்படி நம்மை தெளிவாக அழைக்கிறார். இந்த அழைப்பு திருமண வாழ்விலும் பொருந்தும்.

இந்த கட்டுரையைப் படிக்கும் சிலர் சவாலான திருமண பந்தத்தில் இருக்கலாம். என் இருதயம் உண்மையாகவே உங்கள் மீது கரிசனைக்கொள்கிறது. ஒருவேளை இது உங்கள் சொந்த மோசமான தெரிவுகளின் விளைவாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும், மேற்கண்ட இந்த சிந்தைனைகளை படித்து நீங்கள் ஆறுதலடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்: சர்வ வல்லமைப் பொருந்திய  மற்றும் இறையாண்மைமிக்க  கர்த்தர் அனைத்தையும் அடக்கியாள்கிறார்.

எரேமியா 32:27 இல் தேவன் இப்படியாக கூறுவதை நாம் வாசிக்கிறோம், “இதோ, நான் மாம்சமான யாருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?” அவர் விரும்பினால் இந்த மணிநேரத்தில் அவர் உங்களை விடுவிக்க முடியும். இருப்பினும், நீங்கள் இன்னும் சில காலம் இதைச் சகித்துக்கொள்ள வேண்டும் என்பது தேவனுடைய சித்தமாக இருந்தால், அவரை எதிர்க்காதீர்கள். அவருடைய திட்டங்களுக்கு அடிபணிந்து, இந்த சூழ்நிலையிலிருந்து உங்களை அழைத்துச் செல்ல அவருடைய கிருபையில் நம்பிக்கை வையுங்கள் [2 கொரி 12:9]. உங்கள் துணையை தொடர்ந்து நேசியுங்கள். உங்களை வற்புறுத்தும் பாவமான மாம்சத்திற்கு அடிபணிய வேண்டாம்.

மனதுருக்கமுள்ள தேவன் சில சந்தர்ப்பங்களில் விவாகரத்துக்கான  சில  அடிப்படை சத்தியங்களை வேதாகமத்தின் வழியாய் வழங்கியிருந்தாலும், அது கடைசியான விருப்ப தெரிவாக இருக்க வேண்டும் [மத் 5:1-32; மத் 19:9; 1 கொரி 7:15-16]. ஒரு விசுவாசியாக, பெலவீனமான தன்  துணைவரை உண்மையான மனந்திரும்புதலுக்கு கொண்டு வர முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். விபச்சார காரியங்களில் கூட விருப்பமிருந்தால் மன்னிக்கலாம். ஆம், விவாகரத்து பெறுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாத சூழ்நிலைகளும் எதிர்பாராத விதமாக உருவாகலாம். இருப்பினும், இத்தகைய சூழ்நிலைகளில் விசுவாசிகள் தங்கள் திருமண வாழ்வை ஐக்கியமாக வைத்துக்கொள்வதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளனர் என்பதை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் ஆவியானவரிடம் கேட்டால் அவர் உங்களுக்கு உதவிச்செய்வார்! நீங்கள் அவரை நம்பியிருக்கும்போது சகித்துக்கொள்ளும் பெலனை தருவார்! கிறிஸ்துவை விடாமுயற்சியுடன் பின்பற்றியதற்காக நம்மில் யாரும் பரலோகத்தில் வருத்தப்பட மாட்டோம், மாறாக, நாம் நிலைத்திருக்க வேண்டிய அளவுக்கு  நிலைத்திருக்கவில்லை என்பதற்காகவே வருத்தப்பட வேண்டியிருக்கும்! எனவே, நித்தியத்தை நாம் தொடர்ந்து சிந்தித்தால், பூமியில் இந்த தற்காலிக யாத்திரையின் கஷ்டங்களை தாங்கிக்கொள்ள அது உதவியாக இருக்கும்.

இறுதி குறிப்பாக, அனைத்து விசுவாசிகளுக்கும் ஒரு வார்த்தையை கூற விரும்புகிறேன். விவாகரத்து செய்தவர்களிடமும் அல்லது விபச்சாரம் செய்தவர்களிடமும் சுய-நீதி மற்றும் மென்மையான மனப்பான்மையை வளர்க்காமல் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். திருமண வாழ்வில் தோல்வியுற்றவர்கள் மீது கல் எறிவதற்குப் பதிலாக, அவர்கள் மீட்கப்படுவதைக் காணும் உண்மையான விருப்பத்துடன் நாம் அவர்களை நோக்கி அன்பு செலுத்த வேண்டும் [கலா 6:1].

“நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று” என்று இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார் [மத் 5:28]. இந்த பகுதியில் நாம் குற்றவாளி இல்லை என்று நம்மில் யார் சொல்ல முடியும்? இந்த எண்ணம் மட்டுமே திருமணத்தில் தடுமாறிய மற்றவர்களிடம் மென்மையாக இருக்க நம்மைத் தூண்டிவிட வேண்டும்.

Category
Subscribe
Notify of
guest
0 கருத்துக்கள்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments