மனநிறைவைப் பற்றிய மூன்று தவறான கருத்துக்கள்

(English Version: 3 Misconceptions Regarding Contentment)
ஒரு இளம் பெண் தன் தாயிடம், “இந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனனென்ன பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். ஜானிக்கு ஹாம்பர்கர் பிடிக்கும், ஜேனுக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும், வில்லிக்கு வாழைப்பழம் பிடிக்கும், அம்மாவுக்கு கோழிக்கறி பிடிக்கும்.” என்றாள். அவளுடைய பட்டியலில் தான் இல்லாததால் எரிச்சல் அடைந்த தந்தை, “என்னைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே? எனக்கு என்ன பிடிக்கும்?” என கேட்டார், அதற்கு அந்த அப்பாவி இளம் பெண், “எங்களிடம் இல்லாத அனைத்தையும் உங்களுக்கு பிடிக்கும்” என்று பதிலளித்தான். இந்தக் கூற்றைப் பார்த்து நாம் சிரிக்கலாம் என்றாலும், நாம் நேர்மையானவர்களாக இருக்கும் பட்சத்தில், விசுவாசிகளான நம்மில் பலரும் இந்த தந்தையை ஒத்திருப்போம். மனநிறைவு பிரச்சினை தொடர்பாக பல தவறான கருத்துக்களை நாம் கொண்டிருப்பதால் இந்த எண்ணோட்டம் உள்ளது. இந்த தலைப்பு தொடர்பான 3 பொதுவான தவறான கருத்துகளையும் அவை ஒவ்வொன்றிற்கும் வேதத்தின் பதில்களையும் முன்னிலைப்படுத்த இந்த பதிவு முயல்கிறது.
தவறான கருத்து # 1. மனநிறைவு அவ்வளவு பெரிய பிரச்சனையல்ல
பொதுவாக, வாழ்க்கையில் விரும்பத்தகாத சாதாரண பதில்களை கூறி அதிருப்தியை வெளிப்படுத்துகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, நானும் ஒரு மனிதன் தான். நான் அங்கும் இங்கும் அலைந்தாடுகிறவன் என எண்ணிக்கொள்கிறோம்.
வேதத்தின் பதில்: எப்படியானாலும், தேவன் இந்த அதிருப்தியை ஒரு “சாதாரணமாக” கருதியிருந்தால், மனநிறைவாக இருப்பதை பற்றி பல கட்டளைகளை அவர் ஏன் கொடுக்கிறார்? “உங்கள் சம்பளமே போதுமென்று இருங்கள்” [லூக்கா 3:14], “உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்” [எபிரேயர் 13:5], “பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்” [லூக்கா 12:15]. விசுவாசிகளாகிய நாம், தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியத் தவறுவது பாவம் என்று ஏற்றுக்கொள்கிறோம். அப்படியிருப்பதால், மனநிறைவை பின்பற்ற தவறுவதை நாம் பாவமாகக் கருத வேண்டாமா? எனவே, மனநிறைவை கொண்டிருப்பது ஒரு பெரிய விஷயமாகும், அது மறைத்து வைக்க வேண்டிய ஒன்றல்ல.
தேவன் ஏன் அதிருப்தியை பாவம் என அழைக்கிறார் என்பதை குறித்த ஆழமான பார்வை மிகவும் தெளிவாக மனதில் இரு காரணங்களை புலப்படுத்துகிறது.
a. மனநிறைவின்மை தேவனுடைய இராஜரீகத்தை குற்றம் சுமத்துகிறது. நம் வாழ்வின் சூழ்நிலைகள் மீது அதிருப்தியை வெளிப்படுத்துவது, தேவன் நமக்கு எதைச் செய்ய விரும்புகிறாரோ அதை குறித்து கேள்வி கேட்பதின் நுட்பமான வடிவமாகும். சிருஷ்டிகள் சிருஷ்டிகருடைய செயல்களை பாவம் என்று கூறுவதாகும்.
b. மனநிறைவின்மை தேவனுடைய நன்மையை குற்றம் சுமத்துகிறது. நம் வாழ்வில் ஏற்படும் சூழ்நிலைகளில் அதிருப்தியை வார்த்தைகளில் சொல்லாவிட்டாலும் அணுகுமுறையால் வெளிப்படுத்தும்போது, நாம் இப்படித்தான் கூறுகிறோம்: “தேவனே, இந்த குறிப்பிட்ட சூழ்நிலையில் நீர் எனக்கு நல்லவராக இருக்கவில்லை. நீர் நல்லவராகவும் அன்பாகவும் இருந்தால், ஏன் நான் விரும்புவதைக் கொடுக்கவில்லை அல்லது நான் விரும்பாததை என் வாழ்க்கையிலிருந்து நீக்கவில்லை?” சோதனைகளில் இருந்து விடுபட தேவனிடம் மன்றாடுவது பாவம் இல்லை என்றாலும், அவருடைய நன்மையை கேள்வி கேட்பது பாவமாகும்.
குறிப்பு: நாம் தேவன் விரும்புகிற அளவிற்கு அவருடைய பூரமாணபிள்ளைகள் என்ற நிலை இன்னும் வராததால் நமது ஆவிக்குரிய வாழ்வில் அதிருப்தி அடைவது நல்லது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்களிடம் உள்ளதைக் கொண்டு திருப்தியடையுங்கள், ஆனால் ஆவிக்குரிய வாழ்வில் ஒருபோதும் திருப்தியாக இருக்காதீர்கள். நம்மைச் சுற்றிலும் பாவம் பெருகுவதையும், இயேசு கிறிஸ்துவின் நாமம் அவமதிக்கப்படுவதையும் பார்க்கும்போது அதிருப்தி அடைவதும் நல்லது. இந்த பகுதிகளில் அதிருப்தியை அனுபவிப்பது பாவம் அல்ல, இது கிறிஸ்தவர்களுக்கு இயற்கையான பிரதிபலிப்பாக இருக்க வேண்டும்.
தவறான கருத்து # 2. மனநிறைவானது சூழ்நிலைகளை அடிப்படையாக கொண்டது.
எனது தற்போதைய சூழ்நிலைகள் மட்டும் மாறினால் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் என்று எத்தனை முறை நினைத்திருக்கிறோம்? நாம் திருமணமாகாதவர்களாக இருந்தால், திருமணம் செய்து கொள்ள விரும்புகிறோம்; திருமணமானாவர்களாக இருந்தால், நாம் இன்னும் தனியாக இருந்திருந்தால் நலமாக இருக்கும் என எண்ணுகிறோம். குழந்தை இல்லாவிட்டால் குழந்தை வேண்டும் என்றும்; நமக்கு குழந்தைகள் இருந்தால், ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழுந்தையும் வேண்டும் என விரும்புகிறோம். நாம் பெற்ற குழந்தைகள், சிறந்தவர்களாக இருக்க விரும்புகிறோம். இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. “நான் இருக்கும் தற்போதைய நிலையை விட வேறு நிலை இருந்திருந்தால் சிறப்பாக இருக்கும்” என்பது இருதயத்தின் நிலையான கூக்குரலாகத் தெரிகிறது. ஒரு சுவாரஸ்யமான மேற்கோள் இந்த உண்மையை நன்றாக வெளிப்படுத்துகிறது, “மனிதன் ஒரு முட்டாள் என்பது மாறாத பிரமாணமாக இருக்கிறது. சூடாக இருக்கும்போது, அவன் குளிர்ச்சியை விரும்புகிறான். குளிர்ச்சியாக இருக்கும்போது, அவன் சூடாக இருக்க விரும்புகிறான். எப்போதும் இல்லாததையே விரும்புகிறான்.” இந்த விளக்கம் நமக்கு நன்றாக புரிகிறதா?
தன் நண்பர்களுக்கு பெரிய மற்றும் ஆடம்பரமான வீடுகள் இருந்ததால், அவர்கள் மீது பொறாமை கொண்ட ஒரு மனிதனைப் பற்றிய கதை ஒன்று சொல்லப்படுகிறது. எனவே அவன் தனது வீட்டை ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தாரிடம் கொடுத்தான், அதை விற்றுவிட்டு அதை விட ஒரு பெரிய வீட்டை வாங்க திட்டமிட்டான். சிறிது நேரம் கழித்து, அவன் செய்தித்தாளின் ஒரு பகுதியைப் படித்துக்கொண்டிருந்தபோது, தனக்கு சரியானதாகத் தோன்றிய ஒரு வீட்டின் விளம்பரத்தைப் பார்த்தான். அவன் உடனடியாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தாரை அழைத்து, “இன்றைய செய்தித்தாளில் விவரிக்கப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு வீட்டைத் தான் நான் தேடுகிறேன். கூடிய விரைவில் அதை வாங்க விரும்புகிறேன்!” என்று கூறினான். அதற்கு அந்த முகவர் அவனிடம் அந்த வீட்டைப் பற்றி பல கேள்விகளைக் கேட்டார், பின்னர் இவ்வாறு பதிலளித்தார், “ஆனால் ஐயா, நீங்கள் விவரிக்கும் அந்த வீடு உங்களுடையது தான்!”
வேதத்தின் பதில்: ஆதாமும் ஏவாளும் நம் நினைவிலிருக்கிறார்களா? அவர்கள் கற்பனை செய்யக்கூடிய சரியான சூழ்நிலையில் வாழ்ந்தனர், ஒரு மரத்தைத் தவிர உலகத்திலுள்ள அனைத்தையும் தங்கள் வசம் வைத்திருந்தனர் [ஆதியாகமம் 1:28, 2:15-16]. தேவன் தம்முடைய அன்பினால் அவர்கள் அனுபவிப்பதற்கு மிகவும் தாராளமாக கொடுத்திருந்தார்.
ஆயினும், சாத்தான் அவர்களை எப்படி அதிருப்தி அடையச் செய்தான் என்பதைக் கவனியுங்கள், “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ?” [ஆதி 3:1]. வேதத்தில் நமக்காகப் பதிவுசெய்யப்பட்ட முதல் கேள்வி சாத்தானின் வார்த்தைகளிலிருந்து வந்தது, அது தேவனுடைய வார்த்தையை சந்தேகிக்கவும், அவருடைய நற்குணத்தை சந்தேகிக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு கேள்வி.
சாத்தான் உணர்த்துவது இதுதான்: “அப்படியானால், உலகத்தில் உங்களுக்கு அனைத்தும் கொடுக்கப்படவில்லையா? தேவன் மிகவும் கஞ்சத்தனமானவர் அல்லவா? அவர் உங்களுடைய மகிழ்ச்சியின் நிறைவை கொள்ளையடிக்கவில்லையா?” அவர்களிடம் இருப்பதை விட்டுவிட்டு [அது எல்லாமே அதிகம்], அவர்களிடம் இல்லாதவற்றின் மீது கவனம் செலுத்த வைப்பதே அவனுடைய குறிக்கோளாகும் [இது ஒரே ஒரு மரத்தின் கனி மட்டுமே]. நம்மிடம் இருப்பதை விட நம்மிடம் இல்லாதவற்றில் கவனம் செலுத்துவது தான் எல்லா அதிருப்திக்கும் அடிப்படையாக இருக்கிறது!
துரதிர்ஷ்டவசமாக, ஆதாமும் ஏவாளும் சாத்தானின் வார்த்தைகளிலிருந்து வந்த இந்தப் பொய்க்கு அடிபணிந்தனர் – உங்கள் சூழ்நிலைகள் மாறினால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என சாத்தான் கூறினதற்கு கீழ்படிந்தனர்! அதன் விளைவாக மகிழ்ச்சிக்கு பதிலாக, அவர்கள் துன்பத்தை கண்டனர்-தேவன் வாக்களித்தது போலவே நடந்தது-பாவம் மற்றும் சாத்தானால் அளிக்கப்படும் பொய்யான வாக்குறுதிகளை விட தேவனுடைய வார்த்தை எப்போதும் மேன்மையானது என்பதை இது நிரூபிக்கிறது.
இந்த முக்கியமான பாடத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம். ஆதாமும் ஏவாளும் இந்த உலகத்தில் ஏறக்குறைய எல்லாவற்றையும் பெற்றிருந்தும் திருப்தியை அனுபவிக்கவில்லை, “தற்போது என்னிடம் இல்லாதவை இருந்தால் மட்டுமே நான் திருப்தி அடைவேன்” என்ற பொய்யான வாக்குறுதியை அளிக்கும் சிந்தனையிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள். எனவேதான் நாம் கர்த்தரிடம் “மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்” என்று தொடர்ந்து மன்றாட வேண்டும் [சங் 119:37].
உண்மையான மனநிறைவு என்பது புறச் சூழ்நிலைகளில் இருந்து வருவதில்லை என்பதை நாம் உணர வேண்டும். இது தெய்வீகத்தை நமது முன்னுரிமையாகவும், நித்தியத்தை நமது முன்னோக்காகவும் கொள்வதிலிருந்து வருகிறது. “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்” என்று 1 தீமோத்தேயு 6:6 கூறுகிறது. மேலும் ஆவிக்குரியவைகள் அனைத்தும் இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுடனான உண்மையான உறவைத் தொடங்குகிறது. எனவே, நீங்கள் இன்னும் அவ்வாறு செய்யவில்லை என்றால், மனந்திரும்புதலுடனும், விசுவாசத்துடனும் கிறிஸ்துவிடம் வாருங்கள். உங்களுக்கு எல்லாவற்றிலும் போதுமானவராக அவரைத் ஏற்றுக்கொள்ளுங்கள்.
தவறான கருத்து # 3. விசுவாசிகளுக்கு மனநிறைவு இயற்கையாகவே வருகிறது.
நாம் விசுவாசிகளாக மாறும்போது, உடனடியாக உலக விஷயங்களை வெறுக்க ஆரம்பித்து, கிறிஸ்துவில் திருப்தி அடைவோம். பாவமான மாம்ச இச்சைகளுக்கு இனி நாம் அடிபணிய மாட்டோம்.
வேதத்தின் பதில்: இது உண்மையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்! ஆம், ஒரு விசுவாசியாக மாறுவது நம் மனநிலையில் ஒரு அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவருகிறது. இருப்பினும், தொடர்ந்து பரிசுத்த ஆவிக்கு அடிபணிந்து, பாவ மாம்சத்தின் பசிக்கு ‘இல்லை’ என்று சொல்வது ஒரு நிலையான போராட்டமாக இருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுலின் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ரோம சிறையிலிருந்து பிலிப்பியருக்கு எழுதுகையில், “நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்” [பிலி 4:11] என்று அவர் கூறினார். உங்களுக்கு புரிகிறதா? பவுல் திருப்தியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதே சிந்தனையை அடுத்த வசனத்தில் அவர் மீண்டும் கூறுகிறார், “தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.” [பிலி 4:12]. இரண்டு வசனங்களில் இருமுறை, திருப்தியாக இருக்கக் கற்றுக்கொள்வதைப் பற்றி பேசுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் அற்புதமாக மனமாற்றம் அடைந்திருந்தப்போதிலும் மனநிறைவு அவருக்கு இயல்பாக வரவில்லை!
இது நமக்கு சற்று நம்பிக்கையை அளிக்கிறது. மனநிறைவு இயற்கையாக வருவதில்லை – ஆனால் அது கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. இது ஒரு செயல்முறை. மேலும், பவுலைப் போலவே நாமும், தேவனுடைய வார்த்தையைப் பயன்படுத்தி, பரிசுத்த ஆவியானவரால் செயல்படுத்தப்பட்டு, நம்முடைய விடாமுயற்சியுடன் ஜெபம் செய்வதின் மூலம் திருப்தியாக இருப்பதன் ரகசியத்தைக் கற்றுக்கொள்ள தேவையான முயற்சியை மேற்கொள்ளலாம்.
பிலிப்பியர் 4:11 ல் பவுல் பயன்படுத்தும் “மனநிறைவு” என்பதற்கான கிரேக்க வார்த்தை, “தன்னிறைவு” அல்லது “திருப்தி” என்பதைக் குறிக்கிறது. அவர் “மனநிறைவாக இருக்க கற்றுக்கொண்டார்” என்று குறிப்பிடுகிறார், அவருடைய காலத்து தேவனற்ற உலகம் இந்த வார்த்தையைப் இப்படியாக பயன்படுத்தியது, எந்தவொரு வெளிப்புற ஆற்றலின் உதவியும் இல்லாமல், தனது உள் மனித வலிமையை மட்டுமே பயன்படுத்துவதன் மூலம் வாழ்க்கையின் அனைத்து அழுத்தங்களையும் அமைதியாக ஏற்றுக்கொள்ள முடியும் என்ற கருத்தை விவரிக்கிறது. இதற்கு நேர்மாறாக, எல்லா விசுவாசிகளும் எல்லா நேரங்களிலும் திருப்தியடைவதற்குத் தேவையான அனைத்தும் கிறிஸ்துவிடமிருந்து வந்ததாக பவுல் தனது மனநிறைவை அடையாளம் காட்டுகிறார்.
“எத்தகைய சூழ்நிலையை எதிர்கொண்டாலும் மனநிறைவுடன் இருக்கும் இந்த ரகசியத்தை எப்படி கற்றுக்கொண்டாய்?” என்று பவுலிடம் கேட்டால், அவருடைய பதில், “எனக்கு திருப்தியை கொடுக்கும் கிறிஸ்துவிடமிருந்து எனக்குப் போதுமானது வருகிறது.” என்று கூறுவார். இதை அடுத்த வசனம் தெளிவுபடுத்துகிறது.
பிலிப்பியர் 4:13ல் உள்ள பவுலின் வார்த்தைகளைக் கவனியுங்கள், “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.” சில மொழிபெயர்ப்புகள் அதை, “கிறிஸ்து மூலமாகவோ அல்லது என்னைப் பலப்படுத்துகிற அவர் மூலமாகவோ நான் எல்லாவற்றையும் செய்ய முடியும்” என்று பொருள்படுத்துகிறது. துரதிர்ஷ்டவசமாக, கிறிஸ்துவில் விசுவாசம் வைத்தால், தாங்கள் நினைத்த எதையும் ஒருவர் செய்ய முடியும் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட வசனங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த வசனம் அப்படி போதிக்கவே இல்லை. பிலிப்பியர் 4:10-19 ஆகிய வசனங்களின் முழுச் சூழலும் மனநிறைவைப் பற்றியது.
எந்தச் சூழ்நிலையிலும் மனநிறைவுடன் வாழ்வதற்கான அவரது ரகசியம், எல்லா நேரங்களிலும் திருப்தியாக இருப்பதற்குத் தேவையான அனைத்தையும் வழங்கும் கிறிஸ்துவிடமிருந்து வந்து, அவர் போதுமானவராக இருந்ததை அடிப்படையாகக் கொண்டது என்று பவுல் கூறுகிறார்.
எனவே, கிறிஸ்தவ புரிந்துக்கொள்ளுதலில், “திருப்தி அடைவது” என்பது கிறிஸ்துவைக் கொண்டிருப்பதால் மட்டுமே முற்றிலும் திருப்தி அடைவதாகும். நாம் மனநிறைவை அடைய விரும்பினால் அதைக் கற்றுக்கொள்ள வேண்டும். நம்மிடம் கிறிஸ்து இருக்கிறார்—இம்மைக்குரிய ஜீவனுக்கும் மறுமைக்குரிய ஜீவனுக்கும் உரிய எல்லாம் நம்மிடம் இருக்கிறது. பொருள் சார்ந்த விஷயங்கள் ஏராளமாக இருந்தாலும் கூட நம்மிடம் கிறிஸ்து இல்லையென்றால்—நமக்கு எதுவும் இல்லை.
இறுதி சிந்தனைகள்.
விசுவாசிகளாகிய நாம், நரகத்தைத் தவிர வேறு எதற்கும் தகுதியில்லாத நம்மைப் போன்ற பாவிகளை இரட்சித்தற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். இருப்பினும், இப்படிப்பட்ட ஜெபத்தை முடிப்பதற்கு முன்பே, நம் வாழ்வில் தவறு என்று நினைக்கும் விஷயங்களை அவர் எவ்வாறு சரிசெய்ய வேண்டும் என்று தேவனுக்கு நாம் கூறுகிறோம். நம் வாழ்வில் ஏதேனும் தீமை நடந்தால், “நான் தேவனுக்கு உண்மையாக இருந்தும் எனக்கு இது எப்படி நேர்ந்தது? அதிக பாவம் செய்கிற மற்றவர்கள் என்னை விட அதிக நன்மைகளை ஏன் பெறுகிறார்கள்? மேலும் நான் ஏன் பிரச்சனைகளில் அல்லது நிறைவேறாத கனவுகளில் சிக்கிக்கொள்கிறேன்?” என்று நாம் நினைக்கிறோம், எந்தவொரு நன்மையையும் பெறத் தகுதியற்ற பாவிகள் என்று நாம் கூறினாலும், சில உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒரு போக்கு இருக்கலாம். நம்மிடம் எவ்வளவு மாய்மாலம் உள்ளது என்பதை நம்மால் பார்க்க முடிகிறதா?
1 தீமோத்தேயு 6:8, இவ்வாறு கூறுகிறது, “உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.” பிலிப்பியர் 4:19, இவ்வாறு கூறுகிறது, “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் [நம்முடைய தேவைகளை அல்லது கோரிக்கைகளை அல்ல] கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.என் தேவன் கிறிஸ்து இயேசுவுக்குள் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின்படி உங்கள் தேவைகளையெல்லாம் நிறைவேற்றுவார்” என்பதை இந்த வசனங்களிலிருந்து நாம் முடிவு செய்யலாம். நாம் எந்த நன்மைக்கும் தகுதியற்றவர்களாக இருந்தாலும் தேவன் எப்போதும் நம் தேவைகள் அனைத்தையும் வழங்குகிறார் என்ற நிலையான நினைவூட்டலுடன் வாழ்க்கையைப் பார்ப்பது நாம் திருப்தியாக இருக்க உதவும். அத்தகைய பார்வை நமது பெருமையை நசுக்க உதவுகிறது [இது எப்போதும் நல்ல விஷயம்].
அன்புள்ள விசுவாசிகளே, ஒருவேளை நீங்கள் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் குணமடையாமல் இருக்கலாம். நீங்கள் பொருளாதாரத்தில் ஏழ்மையானவராக, வாழ்க்கையில் ஒருபோதும் முன்னேறாமல் இருக்கலாம். நீங்கள் திருமணமாகாமல், வாழ்நாள் முழுவதும் தனிமையில் இருக்கலாம். நீங்கள் நோய்வாய்ப்பட்ட குழந்தையின் பெற்றோராக, உங்கள் குழந்தையை வாழ்நாள் முழுவதும் பராமரிப்பதை எதிர்கொண்டிருக்கலாம். உங்கள் மனைவி மற்றும் குழந்தைகள் உங்களை ஒருபோதும் நேசிக்காத ஒரு கடினமான சூழலில் இருக்கலாம். அதையெல்லாம் மீறி, “ஆண்டவரே, நீங்கள் எனக்கு எதைக் கொடுத்தீர்களோ அல்லது எதைத் தடுத்தீர்களோ, அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு முழுமையாக திருப்தியடைய நான் ஆயத்தமாக இருக்கிறேன்” என்று நீங்கள் சொல்ல ஆயத்தமா? அதிருப்தியால் உம்மை துக்கப்படுத்த நான் விரும்பவில்லை. தயவுசெய்து எனக்கு உதவும், நீர் என்னை அன்புடன் வைத்த எல்லா சூழ்நிலைகளிலும் உம் நாமம் மகிமைப்பட்டது.” அதுவே உண்மையான மனநிறைவின் சாராம்சம்!
வாழ்வில் நமக்கு வேண்டியதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்வோம். நம் வாழ்வில் உணரப்படும் அனைத்து எதிர்மறைகளையும் தொடர்ந்து ஒத்திகை பார்ப்பது அதிருப்தியின் தீயை எரியூட்ட மட்டுமே உதவும். சில சமயங்களில் நாம் நமது ஆசீர்வாதங்களை எண்ண மறந்து பிரச்சனைகளை எண்ணிப்பார்ப்பதில் மிகவும் பிஸியாக இருக்கிறோம். அதிருப்தியின் உணர்வைக் கொன்று, மனநிறைவின் உணர்வை வளர்ப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, பிலிப்பியர் 4:8 ன் கொள்கையைப் பயன்படுத்துவதாகும்: “கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.” இயேசுகிறிஸ்துவுடனான தனது உறவையும், உண்மை, ஒழுக்கம், நீதி மற்றும் பரிசுத்தம் என வேதம் வரையறுக்கும் பண்புகளை பற்றி தொடர்ந்து சிந்திக்கும் விசுவாசி உண்மையான மனநிறைவையும் ஆத்துமாவுக்கு சமாதானத்தை வழங்கும் தேவனுடைய பிரசன்னத்தையும் அனுபவிப்பான் [பிலி 4:7, 9].
நம் வாழ்வில் வீழ்ச்சிக்காக தேவன் ஒருபோதும் எதையும் செய்யமாட்டார் அல்லது அனுமதிக்கமாட்டார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அது எப்போதும் அவருடைய மகிமைக்காகவும், நமது இறுதி நன்மைக்காகவும் செய்கிறார். ஆம், வாழ்க்கையின் இரகசியங்களை நாம் அடிக்கடி புரிந்து கொள்ள மாட்டோம், உண்மையில், நம் தேவன் நம் வாழ்வின் அனைத்து விவகாரங்களின் மீதும் இராஜரீகம் கொண்டவர் என்பதையும், அவர் மிகவும் நல்ல தேவன் என்பதையும் நாம் உணர வேண்டும், நமக்கு எது தேவையில்லை, நமக்கு எது சிறந்தது என்பதை அவர் அறிவார். நாம் வெறுமனே அவரில் இளைப்பாறினால் போதுமானது. இந்த உண்மைகளை நாம் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டால், நம் இருதயத்தின் நிலையை கற்பனை செய்து பாருங்கள் – அது எப்போதும் திருப்தி உணர்வோடு இருக்கும்!
எபேசியர் 1:3 இவ்வாறு கூறுகிறது, “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.” கொலோசெயர் 2:10 இவ்வாறு கூறுகிறது, “மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.” நாம் எப்படி இருக்கிறோம் அல்லது நம்மிடம் என்ன இருக்கிறது அல்லது இல்லை என்பதைப் பற்றி உலகம் என்ன கூறினாலும், கிறிஸ்துவுடனான நமது உறவின் விளைவாக நாம் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும் பரிபூரணமானவர்கள் என்றும் தேவன் கூறுகிறார். நம்மிடம் இப்போது எதுவும் இல்லை, ஆனால் எதிர்காலத்தில் எதற்கும் குறைவுபடாது. தேவன் “உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரை வயது மட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.” [ஏசாயா 46:4] என்று தேவன் நமக்கு வாக்களிக்கிறார். இத்தகைய அழகான உறுதிமொழிகள் மூலம், “கர்த்தர் என் மேய்ப்பராக இருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்” [சங். 23:1] என்று எப்போதும் மகிழ்ச்சியுடன் கூற வேண்டும் அல்லவா?