மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு—பகுதி 6 நம்பிக்கையில் மகிழ்தல்

(English version: “The Transformed Life – Rejoicing In Hope”)
மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு மனிதன் மரணத்தை எதிர்பார்த்திருந்த நிலையில், தனது நண்பருக்கு இவ்வாறு எழுதினான்: “இது ஒரு மோசமான, நம்பமுடியாத உலகம். ஆனால் இவற்றின் மத்தியில் நான் அமைதியாகவும், தூய்மையாகவும் வாழும் மக்களைக் கண்டுபிடித்தேன். அவர்கள் பாவ சிற்றின்பத்தின் மகிழ்ச்சியை விட ஆயிரம் மடங்கு மேலான மகிழ்ச்சியின் பெரும் ரகசியத்தைக் கற்றுக்கொண்டவர்கள். இகழப்பட்டு துன்புறுத்தப்பட்டாலும், அதை குறித்து கவலைப்படாதவர்கள், அவர்கள் தங்கள் ஆத்துமாவின் எஜமானர்கள், இந்த உலகத்தை வென்றவர்கள், அவர்கள் தான் கிறிஸ்தவர்கள்—அவர்களில் நானும் ஒருவன்.”
இந்த வார்த்தைகளின்படி பார்ப்போமென்றால் விசுவாசிகள் இந்த உலகின் இன்பங்களுக்கும், கஷ்டங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு அளவற்ற மகிழ்ச்சியைக் கொண்டவர்கள். அது தான் இந்த பதிவின் தலைப்பு.
மகிழ்ச்சியின் பொருளானது நன்மை பயக்குவதாகவும், மிகவும் தேவையான நினைவூட்டலாகவும் இருக்க வேண்டும், ஏனென்றால், நாம் அனைவரும் அவ்வப்போது வாழ்வின் போராட்டம் எதிர்கொள்கிறோம். அது கவனிக்கப்படாமல் விடப்பட்டால், மனச்சோர்வின் நிரந்தர நிலைக்கு வழிவகுத்துவிடும். அந்த நிலையானது பயம் மற்றும் சோர்வு போன்ற உணர்வுகளின் அனுபவமாக முடியும். மனச்சோர்வுடன் போராடுபவர்களுக்கு அது நாள் முழுவதும் ஒரு போராகும். பகல் முடிந்ததும், இரவு மற்றொரு போர் தொடங்கும். தூக்கமின்மை ஒரு நாள்பட்ட பிரச்சினையாக மாறும். இரவு முடிந்து காலை வரும்போது, சுழற்சி மீண்டும் தொடங்கிவிடும்.
ஒருவர் ஆழ்ந்த மனச்சோர்வை எதிர்கொண்டால், ரோமர் 12:12-ன் முதல் பகுதியில் அதற்கான சிகிச்சை உள்ளது. இதோ: “நம்பிக்கையில் சந்தோஷமாக இருங்கள்” என்ற வார்த்தைகளில் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய அவசியமில்லாத ஒரு உண்மையான சிகிச்சையை நாம் அனைவரும் பெற முடியும். அங்கு வெறும் “சந்தோஷமாயிருங்கள்” என்று பவுல் கூறாமல், “நம்பிக்கையில் சந்தோஷமாயிருங்கள்” என்று கூறுவதைக் கவனியுங்கள். அது, நம்மிடம் இருக்கும் நம்பிக்கையின் காரணமாக வரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. நம்பிக்கை என்ற வார்த்தையானது தற்போது நம்மிடம் இல்லாத ஒன்றைக் குறிப்பிடுகிறது. இது எதிர்காலத்தில் நாம் பெறக்கூடிய ஒன்று. எனவே, இந்த வசனத்தில் பவுல் குறிப்பிடும் மகிழ்ச்சிக்கு அடிப்படையான நம்பிக்கை எது?
விசுவாசிகள் தங்களது மனமாற்றத்தின் இறுதியான நன்மைகளை அனுபவிக்கும் காலத்தை இது குறிக்கிறது என்று நான் நம்புகிறேன். இந்த நிகழ்வை நாம் கிறிஸ்துவைப் போலாக்கப்படுதல் அல்லது மகிமைப்படுத்தப்படுதல் என்று வேதம் அழைக்கிறது. இதைத்தான் பவுல் தனது மனதில் வைத்திருந்தார் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், ரோமர் 5:1-2 ல் “இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். அவர் மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்” என்று பவுல் இந்த நம்பிக்கையை முன்னரே குறிப்பிடுவதால் நான் அப்படிச் சொல்கிறேன். “தேவ மகிமையடைவோமென்கிற நம்பிக்கை” என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்றால் “தேவனின் மகிமையைப் பகிர்ந்து கொள்வதில் நம்பிக்கை” என்பதாகும். கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தின் காரணமாக, நாம் நீதிமான்களாக்கப்பட்டோம் [அதாவது, தேவனுடைய பார்வையில் அவருக்குச் சரியானவர்களாக்கப்பட்டோம்]. தேவனுக்கும் நமக்கும் இடையேயான போர் முடிந்துவிட்டது, அதனால்தான் நாம் தேவனுடன் சமாதானமாக இருக்கிறோம், இது நமது இரட்சிப்பின் முதல் நிலை.
இதன் விளைவாக, நாம் இப்போது நம்முடைய இரட்சிப்பின் இறுதிக் கட்டத்தை எதிர்நோக்குகிறோம், அங்கு நாம் தேவனின் மகிமையை பகிர்ந்து கொள்வோம், அதாவது, கிறிஸ்துவைப் போலவே மறுரூபமாக்கப்படுவோம். ரோமர் 8:30 ல் பவுல் இந்தக் கருத்தைத் தெளிவுபடுத்துகிறார், “எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.” நாம் இன்னும் மகிமைப்படுத்தப்படவில்லை என்றாலும், “அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்” என்ற சொற்றொடர் கடந்த காலத்தில் எழுதப்பட்டுள்ளது. பவுல் ஏன் அப்படி எழுதினார்? ஏனென்றால், அது ஒரு முழுமையான உறுதி! நாம் மகிமைப்படுத்தப்படுவோம், அதாவது, இயேசுகிறிஸ்துவின் வருகையின்போது நாம் புதிய சரீரங்களைப் பெற்று, கிறிஸ்துவைப் போலாக்கப்படுவோம் [ரோமர் 8:22-25]. நாம் புதிய சரீரங்களைப் பெறுவோம் என்ற இந்த நம்பிக்கையைத்தான் நாம் எதிர்பார்க்க வேண்டும் என்று பவுல் கூறுகிறார்.
ரோமர் 12:12 ல், அத்தகைய நம்பிக்கை நம் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவின் மகிமையான சரீரத்திற்கொத்த புதிய சரீரங்களைப் பெறும்போது, எதிர்காலத்தில் நமக்காக வைக்கப்பட்டிருக்கும் மகிமையைக் குறித்து நாம் நம்பிக்கையில் சந்தோஷப்படுகிறோம். இயேசுகிறிஸ்துவைப் போல புதிதாக்கப்படும் இந்த நம்பிக்கை நம்மை மகிழ்ச்சியில் பெருகச் செய்ய வேண்டும், ஏனெனில், இனி துக்கமும், கண்ணீரும், வலியும் இருக்காது, நம் தேவனை தொழுதுக்கொள்வதில் முடிவில்லா மகிழ்ச்சி மட்டுமே இருக்கும். ஆனால், இதற்கிடையில் நாம் இந்த பாவத்தால் பாதிக்கப்பட்ட சரீரத்தில் வாழ்ந்தாலும், இன்னும் மகிழ்ச்சியாக இருக்க அழைக்கப்படுகிறோம், துக்கத்தின் மத்தியிலும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வெளிப்படுத்தக் கட்டளையிடப்படுகிறோம். பவுல் 2 கொரிந்தியர் 6:10-ல் தானும் மற்ற அப்போஸ்தலர்களும் “துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும்” இருந்தோம் என்று குறிப்பிட்டார். இவை இரண்டையும் எப்படி ஒருவர் செய்ய முடியும்?
நாம் வாழும் இந்த பாவமான, சபிக்கப்பட்ட உலகத்தில் துக்கம் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளும்போது, அதே பவுல் பின்னர் ரோமர் 12:15 ல் “அழுகிறவர்களுடனே அழுங்கள்” என்று கூறியதன் மூலம் இது நிரூபணமாகிறது. துக்கத்தின் யதார்த்தம் இருக்கும்போது, நமக்குள் அடக்க முடியாத மகிழ்ச்சியை உருவாக்கும் எதிர்கால ஆசீர்வாதங்களின் உறுதியும் இருக்கிறது. நாட்கள் கடந்து செல்கையில், கிறிஸ்து மீண்டும் வருகிறார் என்ற நம்பிக்கை உணரப்படும்போது, இந்த எதிர்கால யதார்த்தத்திற்கு நாம் நெருக்கமாக இருக்கிறோம். மேலும் அது நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அதுதான் பவுலின் கருத்து.
இந்தக் கட்டளையை நாம் ஆர்வமாகவும், சந்தோஷமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருப்பதால், இதை நம்முடைய உடைமைகளிலும், சமூக அந்தஸ்திலும் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று எண்ணிக்கொள்ளக்கூடாது. மாறாக, கிறிஸ்துவின் வருகையின் நம்பிக்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கிறது, அவ்வாறு செய்யத் தவறுவது ஒரு பாவமாகும். பலர், “எனக்கு மிகுந்த மகிழ்ச்சி இருக்கிறது, நான் மனச்சோர்வடையவில்லை” என்று கூறக்கூடும். ஒருவேளை நீங்கள் அவர்களில் ஒருவராக இருக்கலாம். அப்படியென்றால் நான் உங்களிடம் ஒன்றை கேட்கிறேன்: உங்கள் மகிழ்ச்சி எதை அடிப்படையாகக் கொண்டது? பாதுகாப்பையும், நல்ல ஊதியம் பெறும் வேலையையும் அடிப்படையாகக் கொண்டதா? உறவுகள், நண்பர்களைப் பெறுதல், நல் ஆரோக்கியத்தை அனுபவிப்பது, வங்கிக் கணக்கில் அதிக வரவு வைத்திருப்பது மற்றும் பலவிதமான பிரச்சனைகளை அனுபவிக்காமல் இருப்பது போன்றவற்றின் அடிப்படையாகக் கொண்டதா? அப்படியானால், இங்கே பவுல் கூறும் மகிழ்ச்சியின் அடிப்படை அதுவல்ல என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். உலகப்பிரகாரமான மனிதர்களும் இந்த விஷயங்களைக் கொண்டிருந்தால், மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள். ஆனால், இவற்றில் ஒன்றை பிடுங்கி விட்டால், அவர்களின் மகிழ்ச்சி மறைந்துவிடும், மேலும் ஏமாற்றம் வந்துவிடும்.
யோசித்துப் பாருங்கள். நாம் நம்முடைய வேலையையும் பொருளையும், பணத்தையும் இழக்க நேரிடலாம். “தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்” என்று நீதிமொழிகள் 11:28 கூறுகிறது. நாம் நம்பும் மனிதர்கள் நம்மை கைவிட்டுவிடலாம் அல்லது மரித்துப்போகலாம். நீதிமொழிகள் 11:7 இந்த உண்மையை நன்றாகப் படம்பிடித்துக் காட்டுகிறது: “துன்மார்க்கன் மரிக்கும்போது அவன் நம்பிக்கை அழியும்; அக்கிரமக்காரரின் அபேட்சை கெட்டுப்போகும்.” நம் உடலும் கூட ஒரே இரவில் செயலிழந்து போகலாம். இந்த பட்டியல் இப்படியே நீண்டு கொண்டேப்போகும். இப்போது, உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் முக்கிய விஷயம் எது? அதை உங்களிடமிருந்து எடுத்துவிட்டால், நீங்கள் இன்னும் மகிழ்ச்சியாக இருப்பீர்களா? உங்களை நீங்களே கேட்டு பதில் சொல்லுங்கள்.
அப்படியானால், இந்த மகிழ்ச்சியை நாம் எப்படி அனுபவிக்க முடியும்? இந்த செயல்முறையின் மூலம் நான் உங்களை வழிநடத்த விரும்புகிறேன்.
கலாத்தியர் 5:22-23ல், “ஆவியின் கனியின்” குணாதிசயங்களில் “சந்தோஷமும்” ஒன்று என்று நமக்குக் கூறப்பட்டுள்ளது. எனவே, பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே நம் இருதயங்களில் மகிழ்ச்சியை உற்பத்தி செய்ய முடியும். அவர் அதை எப்படி செய்கிறார்? அவர் நமக்கு அருளிய வேதத்தின் மூலம் செய்கிறார். எனவே, நாம் தேவனுடைய வார்த்தைக்கு அடிபணியும்போது, பரிசுத்த ஆவியானவர் நம் இருதயங்களில் மகிழ்ச்சியை உண்டாக்குகிறார். இந்த மகிழ்ச்சிக்கு மனிதர்கள் செய்ய வேண்டிய காரியமும் இருக்கிறது. தியானம் செய்வதற்கும், குறிப்பாக தேவனுடைய வார்த்தையில் மகிழ்ச்சி அடைவதற்கும் நாம் நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும், இதன் மூலம் பரிசுத்த ஆவியானவர் நம்மை மாற்ற அனுமதிக்க வேண்டும், நம் இருதயங்களில் மகிழ்ச்சியை உருவாக்குவதும் இதில் அடங்கும்.
தேவனுடைய வார்த்தையைத் தியானிக்கவும், அதை விசுவாசிக்கவும், அதைப் பின்பற்றவும் நாம் எவ்வளவு நேரம் செலவிடுகிறோமோ, அவ்வளவு மகிழ்ச்சி நமக்கு கிடைக்கும். அதே போல கிறிஸ்துவின் வருகையைப் பற்றியும், கிறிஸ்துவைப் போல நாம் மறுரூபமாக்கப்படுவதைப் பற்றியும் நாம் எவ்வளவு அதிகமாகப் படிக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக அது நிறைவேற வேண்டும் என்று நாம் விரும்புகிறோம், அது நம் நம்பிக்கையைப் பலப்படுத்தும், மேலும் அதிக மகிழ்ச்சியை அனுபவிப்போம். நாம் எவ்வளவு மகிழ்ச்சியை அனுபவிக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக உபத்திரவத்தின் போது பொறுமையாக சகித்துக்கொள்வோம். எரேமியா 15:16 ம் வசனமானது எரேமியாவின் அனுபவத்தைப் பற்றிய பதிவைத் தருகிறது, “உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.” நம்பிக்கை மற்றும் தியானத்தை வாழ்க்கை முறையாகக் கொண்ட உண்மையுள்ள ஒரு மனிதனை எனக்குக் காட்டுங்கள், எதிர்காலத்தைப் பற்றிய தேவனுடைய வார்த்தையைத் தியானித்து, அதன்படி கீழ்படியும்போது, வலுவான நம்பிக்கையின் விளைவாக மனசோர்வற்ற, மகிழ்ச்சியுள்ள மனிதனாக நான் அவனை உங்களுக்குக் காண்பிப்பேன்.
மறுபுறம், எதிர்காலத்தைப் பற்றிய தேவனின் வாக்குறுதிகளில் கவனம் செலுத்தாத ஒரு மனிதனை எனக்குக் காட்டுங்கள், வேதாகமம் கூறும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அர்ப்பணிக்கப்படாத பூமிக்குரிய சூழ்நிலைகளை மட்டுமே சார்ந்து இருக்கும் ஒரு மனிதனை நான் உங்களுக்குக் காண்பிப்பேன். காரியங்கள் நன்றாக நடக்கும்போது அவன் மகிழ்ச்சியாக இருப்பான். அவனுடைய உலக சுகபோகங்களில் ஒரு சிறிய மாற்றம் ஏற்படும்போது சோர்ந்து விடுவான். அப்படிப்பட்டவனைப் போல் இருக்க வேண்டாம். மாறாக, நம் எதிர்காலத்தைப் பற்றிய தேவனின் வாக்குறுதிகளை நம்பி, மகிழ்ச்சியாக, செயல்படுவதன் மூலம் அவருடைய இரக்கங்களைப் பெற்று வேதம் கூறும் உண்மையான மகிழ்ச்சியைத் தொடரலாம் [ரோமர் 12:1]. தேவனுடைய வார்த்தையால் நம் மனம் புதுப்பிக்கப்படுவதால், ஆவியானவர் நம்மை உண்மையாக மறுரூபப்படுத்துகிறார்.