மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு—பகுதி 11 உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்

Posted byTamil Editor August 20, 2024 Comments:0

(English version: “The Transformed Life – Bless Your Persecutors”)

ரோமர் 12:14 ம் வசனமானது கீழ் காணும் வார்த்தைகள் மூலம் தங்களைத் துன்புறுத்துபவர்களுக்கு இப்படிப்பட்ட பதிலளிக்கும்படி அனைத்து விசுவாசிகளையும் அழைக்கிறது: உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்.”

நம்மைத் துன்புறுத்துபவர்களை ஆசீர்வதிப்பதானது, உலகம் நமக்குக் கற்பிக்கும் கலாச்சாரத்திற்கு எதிரானதும், உள்ளுணர்வு நம்மைச் செய்யும்படி அழைக்கும் இயல்பிற்கும் எதிரானதுமாகும். என்றாலும், மேலே காணும் வசனமானது அப்படிச் செய்ய நம்மை அழைக்கிறது. தேவனுடைய இரட்சிக்கும் இரக்கமானது, இயேசுகிறிஸ்து செய்ததைப் போலவே துன்புறுத்துபவர்களை ஆசீர்வதிக்கும்படி மக்களை மாற்றுகின்றது. இந்த தலைப்பு மிகவும் முக்கியமானது, ரோமர் 12:17-21 ல் உள்ள இந்த வசனங்களில் பவுல் இந்த கருப்பொருளைப் பற்றி மேலும் விரிவாக கூறுகிறார்.

உங்களைத் துன்புறுத்துபவர்களை ஆசீர்வதியுங்கள் என கூறியிருப்பதானது விசுவாசிகள் துன்புறுத்தலை எதிர்கொள்வார்கள் என்பதைக் குறிக்கிறது. சிலர் குறைந்த அளவிலும் மற்றும் சிலர் அதிக அளவிலும் இதை எதிர்கொள்ளக்கூடும். 2 தீமோத்தேயு 3:12 ஆம் வசனம் இவ்வாறு கூறுகிறது, “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.” இந்த வார்த்தைகள் மூலம் துன்புறுத்தலின் யதார்த்தத்தை கூறி இயேசுகிறிஸ்து எச்சரித்தார், “ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்” [யோவான் 15:20]. விசுவாசிகளுக்கு துன்பமில்லாத வாழ்க்கையை வேதம் போதிக்கவில்லை!

உலகம் நம்மை வெறுக்கிறது, ஏனென்றால் நாம் உலகத்திலிருந்து வேறுபிரிக்கப்பட்டவர்கள், நாம் இனி அதற்கு சொந்தமானவர்கள் அல்ல. மேலும், உலகம் இயேசுகிறிஸ்துவை வெறுத்தது, அவரை துன்புறுத்தியது, ரோமர் 8:7 ஆம் வசனம் இவ்வாறு கூறுகிறது, எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை.”  இந்த உலகில் சரீரப்பிரகாரமாக, இருக்கும் நாம் இயேசுகிறிஸ்துவையும் அவருடைய போதனைகளையும் அடையாளப்படுத்துவதால் துன்புறுத்தப்படுகிறோம். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்” என்று இயேசுகிறிஸ்து கூறுவதில் ஆச்சரியமில்லை. அவர்கள் நம்மைத் தாக்குவதன் மூலம் கிறிஸ்துவைத் தாக்குகிறார்கள். அவர்கள் நம்மைத் துன்புறுத்துவது நமது கெட்ட காரியங்களின் நிமித்தமல்ல. மாறாக, உண்மையான கடவுளை வெறுப்பதால்—நாம் நல்ல காரியங்களைச் செய்தாலும் கூட அவர்கள் நம்மைத் துன்புறுத்துவார்கள். ஒரு எழுத்தாளரின் கூற்றுப்படி:

உலகம் தன்னைக் கண்டிக்கும் மக்களைக் கடுமையாக வெறுக்கிறது. நல்லவனாக இருப்பது உண்மையில் ஆபத்தானது. அத்தேனே பட்டணத்தில் அரிஸ்டைட்ஸ் என்பவருக்கு நேர்ந்தது தான் இத்தகைய நிகழ்வு. அவர் நீதிமானாகிய அரிஸ்டைட்ஸ் என்று அழைக்கப்பட்டார்; ஆனாலும் அவர் நாடு கடத்தப்பட்டார். அவர் நாடு கடத்தப்படுவதை ஏன் ஆதரிக்கிறீர்கள் என்று குடிமக்களில் என்று கேட்டபோது, அவர் “ஏனென்றால் அவரை நீதிமான் என்று எப்போதும் அழைப்பதைக் கேட்டு நான் சலித்துப்போய்விட்டேன்” என்று பதில் அளித்தார்.

இந்த உலகத்திடமிருந்து வேறுபட்ட ஒரு மனிதனுக்கு அதின் விரோதமான எதிர்வினை என்றால், அவர்கள் அவிசுவாசிகளானப்படியால், அவர்களின் சிந்தனையையும், செயலையும் கண்டிக்கும் எதற்கும் எவ்வளவு எதிர்வினை காட்டுவார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். எனவே, விசுவாசிகள் துன்புறுத்தப்படுவது எதிர்பார்க்கப்படுகிறது. நாம் உண்மையிலேயே விசுவாச வாழ்க்கையை வாழும்போது துன்புறுத்துபவர்கள் இருப்பார்கள். அப்படியானால், இந்தத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நாம் எவ்வாறு பதிலளிக்க வேண்டும்? சுருக்கமாக, நாம் அவர்களை ஆசீர்வதிக்க அழைக்கப்படுகிறோமேயொழிய; அவர்களை சபிக்க அல்ல.

நம்மை துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதிப்பதென்றால் என்ன பொருள்?

ஒரு விளக்கவுரையாளரின் கூற்றுப்படி, “ஆசீர்வதிப்பதற்கு வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. நாம் தேவனை ஸ்தோத்தரிக்கும்போது, அவருக்குரிய துதியை அவருக்குக் கூறுகிறோம் [லூக்கா 1:64, 68, 2:24, 24:53; யாக்கோபு 3:9]. தேவன் நமக்கு ஆசீர்வாதத்தை அளிக்கிறார் [மத்தேயு 25:34; அப்போஸ்தலர் 3:26; கலாத்தியர் 3:9; எபேசியர்1:3]. நாம் மனிதர்களையோ பொருட்களையோ ஆசீர்வதிக்கும்போது அவர்கள் மீது தேவனின் ஆசீர்வாதங்களை கூறுகிறோம் [லூக்கா 2:34; 1 கொரிந்தியர் 10:16; எபிரெயர் 11:20]. இந்த கடைசி அர்த்தமே இந்த உரையின் உபதேசத்திற்கும், பல நிகழ்வுகளுக்கும் பொருந்தும்.”

எனவே, விசுவாசிகள் தங்களைத் துன்புறுத்துபவர்களுக்கு—இரக்கமின்றி மிகுந்த வேதனையைத் தருபவர்களுக்கு—தேவன் தம் தயவைக் காட்டும்படி அவரிடம் ஜெபிக்க வேண்டிய அழைப்பு இது. “ஆசீர்வாதம்” என்ற வார்த்தை நிகழ்காலத்தில் உள்ளது, இதன் பொருள் நாம் எல்லா நேரங்களிலும் இதைச் செய்ய வேண்டும். இந்த வசனத்தின் இரண்டாம் பகுதியில், பவுல் முதல் கட்டளையுடன் மற்றொரு கட்டளையையும் சேர்க்கிறார், அது நம்மை ஆசீர்வதிக்க வேண்டும் என்று அழைக்கிறது. நாம் என்ன செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்று கூறுகிறது.   “ஆசீர்வாதம்” என்பதை இரண்டு முறை வலியுறுத்துவதன் மூலமும், “சபிக்கக்கூடாது” என்று கூறுவதன் மூலமும், நம்மைத் துன்புறுத்துபவர்களிடம் ஆசீர்வாதத்தில் சாபமும் கலந்திருக்கக் கூடாது என்று பவுல் கூறுகிறார். இது நமது ஜெபங்களில், நமது எதிரிகளை அழிவுக்கு ஒப்புக்கொடுப்பதை விட, எல்லா நேரங்களிலும் ஆசீர்வாதமாக இருக்க வேண்டும்; அவர்களின் வாழ்க்கையில் அவருடைய தெய்வீக தயவைக் காட்டும்படி தேவனிடம் கேட்க வேண்டும்.

நம்மை காயப்படுத்துபவர்களுக்கு எதிரான இந்த அணுகுமுறை நமது அடிப்படை மனித இயல்புக்கு எதிரானது. நம்மை உடல்ரீதியாகவோ அல்லது வாய்மொழியாகவோ காயப்படுத்துகிறவர்களின் மீது நியாயத் தீர்ப்பை விரும்புவதே இயல்பானது. “சரி, அவர்கள் மீது சாபத்தை உச்சரிக்க வேண்டிய சூழலில்”, பழிவாங்குவதை நான் விரும்பவில்லை என்று கூறுவது கடினமாக இருந்தாலும், அப்படிச் செய்தால் குறைந்தபட்சம், நாம் கொஞ்சம் சிறப்பானவர்களாக இருப்போம். ஆனால் நாம் பழிவாங்காமல் செயலற்றவர்களாக இருக்கக்கூடாது, நன்மையைச் செய்ய முயற்சி செய்ய வேண்டும்—இந்தச் சூழலில், நன்மை என்பது தேவனின் தயவுக்காகவும், நம்மைக் காயப்படுத்துபவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்பது என்று அவருடைய வார்த்தை நமக்குச் சொல்கிறது.

அத்தகைய அழைப்பை பவுல் மட்டுமே விடுக்கவில்லை. லூக்கா 6:28 ல் இயேசு அதே அழைப்பை விடுத்தார், “உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்.” நம்மைத் துன்புறுத்துபவர்கள் மீது தேவனின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்பது உண்மையில் அவருடைய பிள்ளைகளாக  இருப்பதற்கான அடையாளமாகும் என்பதை இயேசுகிறிஸ்து தெளிவாகக் கூறினார். ஒரு எழுத்தாளர் இவ்வாறு கூறுகிறார், “தேவனின் பிள்ளைகள், தங்கள் பரலோகத் தகப்பனைப் பின்பற்ற அழைக்கப்படுகிறார்கள் என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். நாம் அவருடைய வார்த்தையின் வடிவங்களாக இருக்க வேண்டும்.”

இயேசுகிறிஸ்துவும் பவுலும் மட்டுமல்ல, துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு எழுதும் கடிதத்தில், பேதுருவும் அதே பதிலைத் தீமையால் தீமையை பழிவாங்காமல், நம்மைத் துன்புறுத்துபவர்களுக்கு தேவனுடையஆசீர்வாதத்தைத் தேட வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார், 1 பேதுரு 3:9, “தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.” அப்படியானால், நம் எதிரிகள் மீது தேவனின் ஆசீர்வாதத்திற்காக நாம் ஜெபிக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. இப்போது கேள்வி என்னவென்றால், நாம் எந்த ஆசீர்வாதத்திற்காக குறிப்பாக ஜெபிக்க வேண்டும்? முக்கியமாக அவர்களின் இரட்சிப்புக்காக—அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்பதற்காக நாம் ஜெபிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அதுவே மற்றவர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய நன்மை. நம் சத்துருக்களை ஆசீர்வதிக்க தேவனிடம் ஜெபிக்கும்போது, மனந்திரும்புவதற்கும் கிறிஸ்துவை விசுவாசித்து பாவ  மன்னிப்பை பெறுவதற்கும், அவர்களுக்கு நித்திய ஜீவனை அருளுமாறு நாம் அவரிடம் கேட்கிறோம். அதுதான் ஜெபம்! அது அவர்கள் நம்மைத் துன்புறுத்துவதற்குக் காரணமான தேவனோடுள்ள பகையைத் தடுக்கும். 

இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைந்து, மக்கள் அவரை ஏளனம் செய்து கொண்டிருந்தபோது, அவர் தம் எதிரிகளுக்காகச் செய்த காரியமானது: அவர்களுக்காக ஜெபித்தார். மேலும், அதன் சாராம்சம் என்ன? “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்பதே அதன் உள்ளடக்கம் [லூக்கா 23:34]. தேவனிடமிருந்து நாம் பெறக்கூடிய மிகப்பெரிய ஆசீர்வாதம் பாவ மன்னிப்பாகும். எனவே, இயேசுகிறிஸ்து மிகச் சிறந்த ஆசீர்வாதமாகிய பாவமன்னிப்பை தம் மூலமாக வழங்குமாறு தேவனிடம் கேட்கிறார். அவர்கள் மீது ஒரு சாபத்தை கூறுவதை விட, அவர் அவர்களின் நல்வாழ்வுக்காக ஜெபம் செய்தார். நூற்றுக்கு அதிபதியின் மனமாற்றம் (“நிச்சயமாக அவர் தேவனுடைய குமாரன்” [மத்தேயு 27:54] என்று கூறியவர்) சந்தேகத்திற்கு இடமின்றி இயேசுகிறிஸ்துவின் இந்த ஜெபத்தின் விளைவாகும்!

முதல் இரத்தச்சாட்சியாக மரித்த ஸ்தேவான் இதையே செய்தார். அப்போஸ்தலர் 7:59-60 ஆகிய வசனங்கள் இவ்வாறு கூறுகிறது, அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள். அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்.” ஸ்தேவானைக் கொன்றவர்களில் பவுல் என்று அழைக்கப்படும் சவுல் என்ற பெயருடைய ஒரு மனிதனும் இருந்தான் – பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் ரோமர்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதியவரும் இவரே தான். ஸ்தேவானின் ஜெபமானது, பவுலின் மனமாற்றத்தில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யாருக்குத் தெரியும்? 

அதே பவுல் தனது சொந்த வாழ்க்கையில் நம்மை துன்புறுத்துபவர்களுக்காக ஜெபிக்கும் இந்த அழைப்பை முன்மாதிரியாகக் கொண்டார். 2 கொரிந்தியர் 11:24ல், “யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்” என்று எழுதினார். அது மொத்தம் 195 கசையடிகள்! இருப்பினும், ரோமர் 10:1ல், “இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது” என்று எழுதினார். சபிப்பதை விட, இரட்சிப்பின் மூலம் வரும் அவர்களின் நல்வாழ்வுக்காக அவர் ஜெபித்தார். தன்னைத் துன்புறுத்தியவர்களுக்கு ஆசீர்வாதத்தைத் தேடுவதற்காக ரோமர் 12:14 ல் பிரசங்கித்ததை அவர் நடைமுறைப்படுத்தினார்!

அது நமக்கும் அவசியம். நம்மைத் துன்புறுத்துபவர்களுக்கு ஆசீர்வாதத்துடன் பதிலளிக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். நம்மை துன்புறுத்துபவர்களின் இரட்சிப்புக்காக தேவனிடம் மன்றாட வேண்டும். கோபத்தில் நம் நாக்குகள் படபடக்கக்கூடாது. மாறாக, ஆசீர்வாத வார்த்தைகளைக் கூறி ஜெபிக்க வேண்டும். நாம் முழங்காலில் நிற்கவும், நம்மை காயப்படுத்துபவர்களுக்காக இருதயத்திலிருந்து நேர்மையாக பரிந்து பேசி, அவர்களுக்கு ஒரு புதிய இருதயத்தைக் கொடுக்கும்படி நாம் தேவனிடம் கேட்க வேண்டும், மேலும் நம் இருதயங்களில் மறைந்திருக்கும் பழிவாங்கும் மனநிலையை விட்டுவிட தயாராக இருக்க வேண்டும். சில சந்தர்ப்பங்களில், நம்மை காயப்படுத்துபவர்கள் விசுவாசிகளாக இருந்தால், மற்றவர்களைப் புண்படுத்தும் பாவப் போக்குகளிலிருந்து விலக நாம் ஜெபிக்க வேண்டும். அவர்கள் விசுவாசிகளாக இருந்தாலும் சரி, அவிசுவாசிகளாக இருந்தாலும் சரி, பழிவாங்கக் கூடாது. அவர்களின் ஆவிக்குரிய நிலையைப் பொறுத்து நமது ஜெபங்கள் பொருத்தமானதாக இருக்க வேண்டும். 

நம்மை துன்புறுத்துபவர்களை ஆசீர்வதிக்க தேவனிடம் ஜெபிப்பதில் நமக்கு ஒரு சிக்கல் உள்ளது, ஏனென்றால், நாம் துன்பப்படுத்தியதற்காக உடனடியாக பழிவாங்க வேண்டும் என்று விரும்புகிறோம். துன்புறுத்துபவர்கள் நம்மை காயப்படுத்தியதற்கான “விலை கொடுக்காமலிருப்பதையும்”, தண்டனையின் வலியிலிருந்து “தப்பிப்பதையும்” நாம் ஏற்க மறுக்கிறோம். நம்மைத் துன்பப்படுத்தியவர்கள் நமக்கு ஏற்படுத்திய அதே வலியை எப்படியாவது அவர்கள் உணர வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். எனவே, நாம் தீமைக்குத் தீமையைத் திருப்பித் தருகிறோம். இது நமது இயல்பான பதில்.

ஆனால், வேதாகமத்தின் பதில் இதுதான்: “நீங்கள் எத்தனை பாவங்களைச் செய்தீர்கள் என்று பாருங்கள். தேவன் உங்களை பழிவாங்கினாரா? நீங்கள் பெற்றுக்கொண்ட அதே மன்னிப்பின் ஆசீர்வாதத்தையே உங்கள் எதிரிகளும் பெற்றுக்கொள்ள வேண்டும். இயேசுகிறிஸ்து செய்தது போல் எல்லா நியாயத்தீர்ப்பையும் தேவனின் கரங்களில் விட்டுவிடுங்கள்.” நீதியுள்ள நியாயாதிபதியான தேவனை விசுவாசம் நம்ப வைக்கிறது. “சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ?” என்று ஆதியாகமம் 18:25ல் ஆபிரகாம் கேட்டார். இயேசுகிறிஸ்து அப்படிப்பட்ட சிந்தையுடையவராக இருந்தார், அதனால்தான் அவர் எல்லா நியாயத்தீர்ப்பையும் தேவனின் கரங்களில் ஒப்படைத்தார் [1 பேதுரு 2:23]. இதற்கிடையில், தம்மைத் துன்புறுத்தியவர்களை மன்னிக்கும்படி தேவனிடம் தொடர்ந்து ஜெபித்தார் [லூக்கா 23:34].

“நன்மைக்கு பதிலாக தீமை செய்வது பேய்த்தனம்; நன்மைக்கு பதிலாக நன்மையை செய்வது மனிதம்; ஆனால் தீமைக்கு பதிலாக நன்மை செய்வது தெய்வீகம்.” எனவே, நாம் தீமைக்கு பதிலாக நன்மை செய்யும்போது:

1. தேவனுடைய பிள்ளைகள் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறோம்.

2. நம் மூலம் செயல்படும் தெய்வீக வல்லமையின் யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறோம்.

3. தேவனுடைய இரக்கம் நம்மை மறுரூபமாக்குகிறது என்பதை வெளிப்படுத்துகிறோம்.

உங்களை காயப்படுத்தி இருக்கிறார்களா? அவர்களின் தீமைக்கு ஆசீர்வாதத்துடன் பதிலளிக்க நீங்கள் போராடுகிறீர்களா? பழிவாங்கும் எண்ணங்கள் உங்கள் இருதயத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றனவா? அப்படியானால், அத்தகைய அணுகுமுறைக்கு வருந்துங்கள். இயேசுகிறிஸ்துவை நோக்கி உங்கள் கண்களைத் திருப்புங்கள். அவர்தான் நமக்கு முன்மாதிரி. நாம் பின்பற்ற அழைக்கப்பட்ட முன்மாதிரி அவர்தான் [1 பேதுரு 2:21]. அவர் உங்களுக்காக என்ன செய்தார் என்று பாருங்கள்! கடந்த காலத்தில் எத்தனை பாவங்களை அவர் மன்னித்துள்ளார் என்றும், அவர் உங்களை எவ்வாறு தொடர்ந்து மன்னித்துக்கொண்டிருக்கிறார் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். அவருடைய இரக்கத்தைப் பற்றி நீங்கள் சிந்திக்கும்போது, உங்களைப் புண்படுத்தியவர்களுக்கும் அதே இரக்கத்தை அளிக்க அவரிடம் பலத்தைக் கேளுங்கள்.

உங்களைத் துன்புறுத்துபவர்களுக்காக ஜெபிக்க மனதாரத் தீர்மானியுங்கள். அவர்கள் அவிசுவாசிகளாக இருந்தால், அவர்களை இரட்சிக்கும்படி தேவனிடம் மன்றாடுங்கள். தயவு செய்து அவர்கள் சந்திக்கப்போகும் நித்திய துன்பங்களைப் பற்றி சிந்தித்து, இரக்கத்துடன், அவர்களின் ஆத்துமாக்களுக்காக மன்றாடுங்கள். அவர்கள் விசுவாசிகளாக இருந்தால், தங்கள் அழைப்பில் நிலைத்திருக்க தேவனிடம் மன்றாடுங்கள். ரோமர் 12:14 கட்டளையிடுவதைச் செய்து தேவனின் ஆசீர்வாதத்தை அனுபவியுங்கள்!

துன்புறுத்தல் அனைத்து அளவுகளிலும் வடிவங்களிலும் வருகிறது, எல்லா வயதினரையும், நிலைகளையும் தாக்குகிறது. கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு தாக்குதல் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றில் நமது பிரதிபலிப்பு அதிகமாக பேசும் வாய்ப்புள்ளது.

பார்பரா ராபிடோக்ஸ் என்பவள் தனது அண்டை வீட்டாரில் ஒருவரான மிச்செல் என்ற விசுவாசியால் ஈர்க்கப்பட்டாள், மிச்செலை அவருடைய அண்டை வீட்டார் “வேத ஆர்வலர்” என்று கேலியாக அழைத்தனர். மிச்செல் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திக்கொண்டிருந்தாள், அது தெருவை பிரகாசமாக்கியது. ஒவ்வொரு கோடை காலத்திலும் குழந்தைகளை பராமரிக்க கடினமான பெற்றோர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் நிவாரணமாக தன்னுடைய வேனில் குழந்தைகளை விடுமுறை வேதாகம பள்ளிக்கு அழைத்துச்செல்வாள்.

பார்பரா, மிக்செலினை விமர்சிப்பதற்காக அவளுடைய நடக்கையை ஆராய்ந்தாள், குறைபாடுகளைத் தேடினாள், அவளை எது இப்படி செய்ய வைத்தது என்று  கண்டறிய முயன்றாள்.  அவளிடம் இரக்கம், பணிவு, மென்மை மற்றும் பொறுமை ஆகியவற்றைக் கண்டாள். இதனிடையே, ஒரு பிற்பகல், மிக்செலின் மகன் அண்டை வீட்டாரால் தாக்கப்பட்டான். மிச்செல் அமைதியாக தன் மகனுக்கு ஆறுதல் கூறுவதையும், கொடுமைப்படுத்தியவர்களின் ஆத்துமாக்களுக்காக பிரார்த்தனை செய்வதையும் அவளுடைய வீட்டு கதவின் வழியாய் பார்பரா பார்த்தாள். பார்பரா இப்படிப்பட்ட சூழலில் உன்னால் எப்படி அமைதியாக இருக்க முடிகிறது என்று கேட்டபோது, மிச்செல் இவ்வறு பதிலளித்தாள், “நான் மிகவும் கோபமாக இருக்கிறேன், ஆனால் ரோமர் 12:14 ஆம் வசனம் சொல்கிறது, “உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்.” என்பதனால் என்னால் எதுவும் பேச முடியாது என்றாள்.

அந்த சம்பவம் பார்பராவை பல நாட்களாக உறுத்திக்கொண்டேயிருந்தது, காலம் செல்ல செல்ல மிக்செலிடம் அவளது விசுவாசத்தைக் குறித்து கேள்விகளை எழுப்பி, அவளது பதில்களை கவனமாகக் கேட்டாள். “மிக்செலின் நடத்தையால் அக்கம் பக்கத்திலுள்ள குழந்தைகள் யாராவது கிறிஸ்துவைக் கண்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் இயேசுகிறிஸ்துவை கண்டுக்கொண்டேன் என்று எனக்குத் தெரியும்.” ஒரு குடும்பம் என் சுற்றுப்புறத்தில் வசித்ததால் நான் அவரைக் கண்டுபிடித்தேன், அதை தினமும் அனுபவிக்கிறேன்” என்று பார்பரா கூறினாள்.

தேவனின் கட்டளைகளை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் தாக்கத்தை, அதிக விலைக்கிரயம் கொடுக்க வேண்டியிருந்தாலும் ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்!

Category
Subscribe
Notify of
guest
0 கருத்துக்கள்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments