மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு—பகுதி 12 சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்

Posted byTamil Editor September 3, 2024 Comments:0

(English version: The Transformed Life – Rejoice With Those Who Rejoice)

ரோமர் 12:15 ஆம் வசனம் “சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்” என்று நமக்குக் கட்டளையிடுகிறது. மற்ற விசுவாசிகள் தங்கள் வாழ்க்கையில் தேவனின் ஆசீர்வாதத்தில் மகிழ்வதை, நாம் தனிப்பட்ட முறையில் அனுபவிப்பது போல உணர வேண்டும் என்பதே இதன் பொருள். இந்த மகிழ்ச்சியை வெளியில் போலியாகக் காட்டாமல், நம் இருதயத்தின் ஆழத்திலிருந்து உண்மையாக வெளிக்காட்ட வேண்டும். அதுதான் உண்மையான ஐக்கியத்தை  பகிருதலின் அர்த்தம்.

மேலோட்டமாக பார்க்கையில், மகிழ்ச்சியடைபவர்களுடன் மகிழ்ச்சியடைவது எளிதாகத் தோன்றலாம். ஆனால், அதைத் தொடர்ந்து கடைப்படிப்பது பலருக்கு கடினமாக இருக்கும். உண்மையில், சில சமயங்களில் சந்தோஷப்படுபவர்களுடன் சந்தோஷப்படுவதை விட அழுகிறவர்களுடன் அழுவது எளிது. இதற்கு காரணம் என்ன? ஒரு முக்கிய காரணம் வன்மம் அல்லது பொறாமையாகும். சக கிறிஸ்தவர்கள் மத்தியிலும் கூட, இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படியத் தவறுவதற்கு பொறாமையே முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது.

பெரும்பாலும், நம்மிடம் இல்லாததையும்,  நாம்  அடைய விரும்புவதையும், அல்லது நம்மிடம் இருப்பதையும் மற்றவர்கள் பெற்றிருந்தால் அவர்களுடன் நாம் மகிழ்ச்சியடைய முடியாது. அது நம்மை மிகவும் சாதாரணமானவர்களாக உணர வைத்து சோகமாக்கிவிடுகிறது. பல கிறிஸ்தவர்கள், சோகமாகக் காணப்படும் நம்மைப் போன்றவர்கள் தான். நமக்கு ஏதாவது கெட்டது ஏற்பட்டால், அல்லது நெருக்கமான ஒருவருக்கு ஏதாவது நல்லது ஏற்பட்டால் பொறாமை வந்துவிடுகிறது. 

பொறாமை பல்வேறு வழிகளில் தன்னை வெளிப்படுத்துகிறது. 

  • தன்னைச் சுற்றியுள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளும்போது மகிழ்ச்சியடைய முடியாத மணமாகாத நபராக இருக்கலாம்: மணமாகாமல் வயதாகும் ஒருவள் இவ்வாறு கூறுகிறாள் “எனது தோழிகளின் திருமணங்களில் கலந்துகொள்வதில் நான் சோர்வடைகிறேன், சில சமயங்களில் மணப்பெண்ணின் தோழியாக கூட இருந்திருக்கிறேன். அடுத்த திருமணம் என்னுடையதாக இல்லாவிட்டால் என்னால் இனி அடுத்த ஒரு திருமண நிகழ்விற்கு போக முடியாது!”
  • கருத்தரிக்க முடியாத மனைவியாக இருக்கலாம்: இதன் விளைவாக, மற்றொரு பெண்ணின் கர்ப்பம் அல்லது பிரசவம் குறித்து அவளால் மகிழ்ச்சியடைய முடியாது.
  • தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும் தந்தை அல்லது தாயாக இருக்கலாம்: என் குழந்தை ஏன் மற்ற குழந்தைகளைப் போல் புத்திசாலியாக இல்லை? என்னுடைய குழந்தைகள் சாதாரணமாக இருக்கும்போது மற்ற குழந்தைகள் வெற்றி பெறுவதை பார்த்து நான் எப்படி மகிழ்ச்சியடைவது?
  • உங்கள் பணியிடத்தில் அல்லது தொழிலில் நீங்கள் அங்கீகரிக்கப்படாதவராக இருக்கலாம்: “நான் கடினமாக உழைக்கிறேன். நான் மிகவும் நேர்மையானவன். ஆனாலும், எனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனக்கு வர வேண்டிய பதவி உயர்வு எனக்குக் கீழ் உள்ள ஒருவருக்குப் போய்விட்டது. நான் எப்படி மகிழ்ச்சியடைவது?”
  • ஒருவரின் வீட்டின் அளவுடன் தொடர்புடையதாக இருக்கலாம்: “நான் இன்னும் புறாக் கூண்டுப்போல இருக்கும்  சிறிய வீட்டில் இருக்கிறேன், மற்றவர்கள் பெரிய வீடுகளைக் கொண்டுள்ளனர். அவர்களின் ஆசீர்வாதத்தில் நான் எப்படி மகிழ்ச்சியடைவது?”
  • உங்கள் செயல்திறனை யாரும் கவனிக்காமல், ​​ஒரு சக தோழன் எல்லா பெருமைகளையும் பெறும்போது மகிழ்ச்சியடைய இயலாமல் இருக்கலாம்!
  • ஒருவருடைய சபையின் அளவாகக் கூட இருக்கலாம்: நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் மற்ற ஊழியங்கள் செழிக்கும்போது, ஊழியத்தில் இருப்பவர்களுக்கும் சந்தோஷப்படுவதில் சிக்கல் உள்ளது. “என்னுடைய சபை வளராமல், வேறு சபைகள் வளரும்போது நான் எப்படி மகிழ்ச்சியடைவது?” மூடி சபையின் போதகரான எர்வின் லுட்ஸர், “தவறான சபையின் மீது தேவன் தமது ஆசீர்வாதத்தின் கரங்களை வைப்பதாக தெரிகிறது!” எனக் கூறிய வார்த்தைகள் இத்தகைய உணர்வுக்கு பொருத்தமாக இருக்கிறது.  

இந்தப் பட்டியல் இன்னும் நீண்டு கொண்டுப்போகலாம். பொறாமை என்பது பெரும் பிரச்சனை. அது உண்மையிலேயே மகிழ்ச்சியைக் கொல்லும். வெளிப்புறமாக, புன்னகைத்துக்கொண்டு, மற்றவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பது போல் காட்டினாலும், உள்ளத்தில் பொறாமை உணர்வுகள் இருக்கவே செய்யும். அப்படிப்பட்ட மனப்பான்மையானது, மற்றவர்களிடம் மனப்பூர்வமாகவும், உண்மையாகவும் சந்தோஷப்படுவதைத் தடுக்கும். ஆனால் விரைவிலேயே அந்த பொறாமை உணர்வுகள் செயல்களில் வெளிப்படும். நம்மிடம் இல்லாத ஒன்று மற்றவர்களிடம் இருக்கும்போது நேசிப்பது மிகவும் கடினமாக இருக்கும். அது பின்னாளில் வாய்மொழியாகவோ அல்லது உடல்ரீதியாகவோ அவர்களைத் தாக்கும் அளவுக்கு வெறுப்பை ஏற்படுத்திவிடும்!

வேதம் முழுவதும் அத்தகைய உதாரணங்களால் நிறைந்துள்ளது. தாவீதின் வெற்றிகளில் மகிழ்ச்சியடையாத சவுல், அவனை அவதூறாகப் பேசி, இறுதியில் கொல்ல முயன்றான். திரளான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து, அவரை தூஷணம் செய்து, இறுதியில் அவரைக் கொன்றுபின்பும் பரிசேயர் மகிழ்ச்சியடைய முடியவில்லை. நீதிமொழிகள் 27:4  ஆம் வசனம் இப்படிச் சொல்வதில் ஆச்சரியமில்லை, “உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?” பொறாமை கொண்ட மனிதனை விட கோபக்காரனை எதிர்கொள்வது நல்லது  என்பதே இவ்வசனத்தின் சாராம்சம்!

இரண்டு கடைக்காரர்கள் கடும் போட்டியாளர்களாக இருந்தனர். அவர்களின் கடைகள் நேரெதிர் தெருவில் இருந்தன, மேலும் அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் வணிகத்தைக் கண்காணிப்பதில் நேரத்தைச் செலவிடுவார்கள். ஒருவருக்கு ஒரு வாடிக்கையாளர் கிடைத்துவிட்டால், அவர் தனது போட்டியாளரைப் பார்த்து வெற்றியில் புன்னகைப்பார்.

ஒரு நாள் இரவு ஒரு தேவதூதன் கடைக்காரர் ஒருவருக்கு கனவில் தோன்றி, “நீ எதைக் கேட்டாலும் தருகிறேன், ஆனால் நீ எதைப் பெற்றாலும், உன் போட்டியாளன் இரண்டு மடங்கு அதிகமாகப் பெற்றுக்கொள்வான். நீ பணக்காரனாக இருக்க விரும்பினால், அவன் உன்னை விட இரு மடங்கு பணக்காரனாக இருப்பான். நீ நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமான வாழ்க்கையை விரும்பினால், அவனுக்கு இரட்டத்தனையாக கொடுக்கப்படும். உன் ஆசை என்ன?  இப்போது சொல்” என்று கேட்டான்.

அந்த மனிதன் சிறிது நேரம் யோசித்துவிட்டு, “என் ஒரு கண் குருடாக வேண்டுமென்று வேண்டினான்.” 

அதுதான் பொறாமையின் ஆற்றல்! யார் அதற்கு முன் நிற்க முடியும்? தன் சகோதரர்களின் பொறாமைக்கு முன்னால் நிற்க முடியாமல், இறுதியில்  விற்கப்பட்ட யோசேப்பிற்கும் அப்படித்தான் நடந்தது [ஆதியாகமம் 37:12-36].

நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பொறாமை என்பது ஒரு ஆற்றலமிக்க பாவம், அது மற்றவர்களைத் துன்புறுத்துவதைத் தாண்டி தேவனைக் காயப்படுத்தும் திறனுடையது.  அது எப்படி? பொறாமை கட்டுப்படுத்தப்படாமல் விடப்பட்டால், சீக்கிரத்திலோ அல்லது பின்னொரு நாளிலோ, நமக்கு ஆசீர்வாதங்களை கொடுக்காமல் மற்றவர்களுக்குக் கொடுத்தால், தேவன் மீது வெறுப்பை வெளிப்படுத்த ஆரம்பித்துவிடுவோம்! “தேவனே, நான் மிகவும் விசுவாசமாக இருந்தேன், நீண்ட காலமாக காத்திருக்கிறேன், நீர் என்னை மறந்துவிட்டீர், நீர் நியாயமானவர் அல்ல” என்ற மனப்பான்மைக்கு மாறிவிடுவோம். ஊதாரி மகன் [லூக்கா 15:29-30] உவமையில் கூறப்பட்டுள்ள மூத்த மகனை நினைவில் வையுங்கள்! நாம் அதை வாய்மொழியாக வெளிப்படுத்தாவிட்டாலும், எப்படியாவது தேவனின் வழிகள் சரியல்ல என்று நினைக்கக்கூடும். அந்த மாதிரியான மனநிலை தேவனை துக்கப்படுத்துகிறது!

எனவே, வேதம் சொல்வது போல் நாம் மகிழ்ச்சியடைய வேண்டுமானால், பொறாமை என்னும் பாவத்தை விட்டு விலக  வேண்டும், இது மகிழ்ச்சியாக இருப்பவர்களுடன் மகிழ்ச்சியடைவதைத் தடுக்கிறது. இந்த பாவத்தை விட்டு விலகுவதெப்படி? அதற்கு 2 விஷயங்களைப் பரிந்துரைக்க விரும்புகிறேன்.

1. தேவன் இராஜரீகமுள்ளவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

தேவனின் இராஜரீகம் என்பது அவர் தாம் செய்வதை, தமது சொந்த விருப்பத்திற்கும், மகிமைக்கும், தன்மைக்கும் ஏற்றபடி செய்கிறார்.  அவரது திட்டங்கள் ஒருவருக்கு இருப்பது போல் மற்றவர்களுக்கு இருக்காது. அவர் வேறொருவருக்கு ஒரு குறிப்பிட்ட ஆசீர்வாதத்தை அளித்து, அதையே நமக்கு கொடுக்காமலிருந்தால், அந்த  ஆசீர்வாதத்தைக் காட்டிலும் அவருடன் திருப்தியாக இருப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர் சிருஷ்டிகர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், நாம் சிருஷ்டிகள்! மண்பாண்டங்கள் தன்னை உருவாக்கும் சிருஷ்டிகரை எதிர்த்து கேள்விகளை கேட்க முடியாது!

யோவான் ஸ்நான்கன் இதற்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறார். மக்கள் இயேசுவைப் பின்தொடருவதற்காக தன்னை விட்டு சென்றபோது, பொறாமை கொள்ளாமல் அதற்கு, “மறுமொழியாக: பரலோகத்தில் இருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அன்றி, அவன் ஒன்றையும் பெற்றுக் கொள்ளமாட்டான்” என்று கூறினார் [யோவான் 3:27]! அது தேவனின் திட்டம் என்று அவர் ஏற்றுக்கொண்டதால் மகிழ்ச்சியடைந்தார்.

எனவே, தேவன் இராஜரீகமுள்ளவர் என்பதை நாம் நினைவில் கொண்டிருந்தால், ​​மற்றவர்கள் ஆசீர்வாதங்களைப் பெறும்போது நாம் பொறாமைப்பட மாட்டோம், அவர்களுடன் உண்மையாக மகிழ்ச்சியடைவோம்.

 2. எல்லா சமயத்திலும் நன்றியுள்ளவர்களாக இருங்கள்.

“எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது” என்று 1 தெசலோனிக்கேயர் 5:18 நமக்குச் சொல்கிறது. நம்மிடம் உள்ளவைகளுக்காக எப்போதும் நன்றியுணர்வுடன் இருக்கும்போது, ​​​​நம்மிடம் இல்லாதவற்றைக் குறித்து முக்கியப்படுத்த மாட்டோம். அத்தகைய ஆவி நம்மிடம் இருக்கும்போது, ​​நாம் மற்றவர்களுடனான ஒப்பீட்டு விளையாட்டை விளையாட மாட்டோம், ஆனால், நம் ஆசைகள் இன்னும் நிறைவேறாமல் இருந்தாலும் கூட மற்றவர்கள் ஆசீர்வதிக்கப்படும்போது நாம் உண்மையிலேயே மகிழ்ச்சியடையவோம்.

பவர் ஆஃப் தேங்க்ஸ்கிவிங் [எவர்கிரீன் பிரஸ், 2001] என்ற புத்தகத்தில், ​​ராபர்ட் ஸ்ட்ராண்ட் என்பவர் இவ்வாறு கூறுகிறார்:

“ஆப்பிரிக்காவில், சுவை பெர்ரி என்ற [ஒரு வகையான கொட்டையில்லா] பழுங்களுண்டு. ஒரு மனிதன் இதனை சாப்பிட்ட பிறகும், தொடர்ந்து அதன் சுவை நாவில் இனிமையாக இருக்கும் என்பதால் இது இவ்வாறு அழைக்கப்படுகிறது. 

நன்றி செலுத்துவது கிறிஸ்தவத்தின் “சுவை பெர்ரி.” நம் இருதயங்கள் நன்றியால் நிறைந்திருக்கும் போது, நம் வழியில் வரும் எதுவும் நமக்கு விரும்பத்தகாததாக இருக்காது. எவருடைய வாழ்க்கை முறை நன்றியறிதல் உள்ளதாக இருக்கிறதோ, அவர்கள் வேறு எதற்கும் இணையற்ற இனிமையை அனுபவிப்பார்கள்.”

நன்றியுணர்வு, முறுமுறுப்பையும் மற்றும் அதிருப்தியையும் கொல்லும். நாம் பாத்திரவான்களாக இல்லாதப்போதிலும், தினமும் அனுபவிக்கும் ஆசீர்வாதங்களுக்காக தேவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டே இருந்தால், நம்மிடம் இல்லாதவற்றில் நாம் கவனம் செலுத்த மாட்டோம். நம்மிடம் இருப்பதைப் பற்றி நாம் மகிழ்ச்சியடைவோம். அந்த வகை மகிழ்ச்சியான மனப்பான்மையானது, மற்றவர்கள் ஆசீர்வதிக்கப்படும்போது பொறாமைக்கு ஆளாகாமல் நம்மைப் பாதுகாத்து, அவர்களுடன் சேர்ந்து மகிழ்வதற்கு நமக்கு உதவியாக இருக்கும்! 

எனவே, பொறாமையை சமாளிக்க 2 வழிமுறைகள்: தேவன் இராஜரீகமுள்ளவர் என்பதைத் தொடர்ந்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், எல்லா நேரங்களிலும் நன்றியுடன் இருக்க வேண்டும்.

எச்சரிக்கையின் வார்த்தை. 

சந்தோஷப்படுகிறவர்களுடன் சந்தோஷப்படுங்கள் என்ற கட்டளையைக் குறித்து நான் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இது குறிப்பாக மகிழ்ச்சியின் போது விவேகத்தைப் பயன்படுத்துவதைப் பற்றியது; அதாவது மகிழ்ச்சியடைபவர்களுடன் நாம் கண்மூடித்தனமாக மகிழ்ச்சியடைய கூடாது. வேதம் அனுமதிக்கும் காரியங்களைக் குறித்து மட்டுமே நாம் மகிழ்ச்சியடைவதை உறுதி செய்ய வேண்டுமேயொழிய அதில் தடைசெய்யப்பட்டுள்ள காரியங்களைக் குறித்து அல்ல.

1 கொரிந்தியர் 13:6ல், அன்பு, “அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்” என்று வாசிக்கிறோம். இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மற்றவர்கள் மீதான நமது அன்பு, வேதத்தின் சத்தியங்களுக்கு நம்மைக் குருடாக்கி விடக்கூடாது; வேதவாக்கியங்களுக்கு அப்பாற்பட்டவைகளை ஆசீர்வாதங்கள் என்று அழைத்து, அதை மகிழ்ச்சியாக அனுபவிப்பவரோடு கூட நாம் மகிழ்ச்சியடையக் கூடாது. நாம் மகிழ்ச்சியடைவது நம் இருதயத்தின் உண்மையான நிலையை வெளிப்படுத்துகிறது. நாம் கர்த்தரையும் அவருடைய சத்தியத்தையும் நேசிப்போமானால், அவருக்குத் துக்கத்தைத் தருகிற எதிலும் நாம் மகிழ்ச்சியடைய மாட்டோம். ஆனால் காரியங்கள் வேதாகமத்திற்கு இணங்கியிருக்கையில், சந்தோஷப்படுவதற்கு முகாந்திரம் இருக்கிறது.

நான் முடிப்பதற்கு முன், மகிழ்ச்சியடைபவர்களுடன் மகிழ்ச்சியடைவதற்கான சிறந்த உந்துதலை உங்களுக்குத் தருகிறேன். இந்த உண்மையை நாம் நினைவில் கொள்ள வேண்டும்: தேவன் நம் பேரில் சந்தோஷமாக இருக்க விரும்புகிறவர். எனவே மகிழ்ச்சியடையும் மற்றவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க அது நம்மைத் தூண்ட வேண்டும். இந்த உண்மையை லூக்கா 15 ஆம் அதிகாரத்திலுள்ள காணாமற்போன செம்மறியாடு, காணாமற்போன காசு, காணாமற்போன மகன் ஆகிய 3 உவமைகளின் மூலம் இயேசுகிறிஸ்து எடுத்துரைக்கிறார். லூக்கா 15:10  இவ்வாறு கூறுகிறது, “அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதர்களுக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” தேவதூதர்களின் முன்பாக இருப்பவர் யார்?  கர்த்தர்! அவர் தேவதூதர்களுடனும், இரட்சிப்பை அனுபவிக்கும் பாவிகளுடனும் சேர்ந்து மகிழ்ச்சியடைகிறார்! மன்னிப்பை அனுபவிக்கும் பாவிகளுடன் தேவனுடைய இருதயம் மகிழ்ச்சியடைகிறது!

யோனாவின் மனப்பான்மையை ஆண்டவர் ஏற்கவில்லை, நினிவே மக்கள் மனந்திரும்பியபோது யோனா தேவனுடன்  மகிழ்ச்சியடைய முடியவில்லை [யோனா 4:1] ஏனெனில் யோனா அவர்களை வெறுத்தார்! எந்த பொறாமையோ, வெறுப்போ இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க அழைக்கப்பட்டுள்ளோம். அப்படிச் செய்ய தவறினால் அது பாவம்! எனவே, நாம் இயேசுகிறிஸ்துவைப் போல் மறுரூபமாக்கப்பட்டு வரும் நிலையில், இந்தக் கட்டளையை நடைமுறைப்படுத்த உதவுமாறு கர்த்தரிடம் மன்றாடுவோமாக!

அன்பான வாசகரே, உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டதன் மகிழ்ச்சியை இதுவரை அனுபவிக்கவில்லை என்றால், இன்றே உங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்புங்கள். சிலுவையில் பாவங்களுக்கு விலைகிரயம் கொடுத்து மீண்டும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவிடம் திரும்புங்கள். தம்மிடம் வருவோர் எந்நிலையில் இருந்தாலும் அவர்களை மன்னிப்பதில் அவர் மகிழ்ச்சியடைகிறார்.  நீங்கள் அவ்வாறு செய்தால், அந்த மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.  தேவனும், பரலோக சேனையும் உங்களுடன் மகிழ்ச்சியடைவார்கள்! உங்களை அறிந்த மற்ற கிறிஸ்தவர்களும் உங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எனவே, இயேசுகிறிஸ்துவிடம் வாருங்கள்! ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்ற வேதாகம கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டியிருந்தால், தாமதிக்காமல் கீழ்ப்படியுங்கள் [சங். 119:60]. இது உங்கள் இருதயத்திற்கும் தேவனின் இருதயத்திற்கும் மகிழ்ச்சியைத் தரும். மற்ற விசுவாசிகளும் உங்களுடன் இணைந்து மகிழ்ச்சி அடைவார்கள்!

Category
Subscribe
Notify of
guest
0 கருத்துக்கள்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments