மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு—பகுதி 13 அழுகிறவர்களுடனே அழுங்கள்—பகுதி 1

Posted byTamil Editor September 17, 2024 Comments:0

(English version: The Transformed Life – Weep With Those Who Weep – Part 1)

ரோமர் 12:15 ன் பிற்பகுதி, “அழுகிறவர்களுடனே அழுங்கள்”  அல்லது “துக்கப்படுகிறவர்களுடன் துக்கப்படுங்கள்” என்று கட்டளையிடுகிறது. துக்கம் போன்ற சில விஷயங்கள் நம்மை நெருங்கிய நட்பில் இணைக்கின்றன. உங்கள் கடந்த காலத்தைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள், குறிப்பாக, நீங்கள் மகிழ்ச்சியின் உச்சத்தை அனுபவித்த அந்த தருணங்களையும், இருளின் ஆழமான பள்ளத்தாக்கில் நடந்த அந்த தருணங்களையும் பற்றி சிந்தியுங்கள். இப்போது, அந்த இரண்டு நேரங்களிலும் உங்களுடன் இருந்தவர்களை நினைத்துப் பாருங்கள். எந்த தருணம் உங்களுக்கு அதிகம் நினைவில் உள்ளது? அநேகமாக என்னைப் போல, பெரும்பாலும் அது இரண்டாவது தருணமாகத் தான் இருக்கும். அந்த இருண்ட பள்ளத்தாக்கு அனுபவங்களின் போது நமக்கு அருகில் இருந்தவர்களையும், இரவும் பகலும் கண்ணீர் நம் உணவாக இருந்த போது நம்முடன் இருந்தவர்களையும் நாம் அதிகம் நினைவில் கொள்கிறோம்; பின்வரும் கதை இந்த உண்மையை எடுத்துக்காட்டுகிறது.

ஒரு பெண் பக்கத்து வீட்டு வேலைக்காரனை சந்தித்து, “உங்கள் அத்தையின் மரணத்தைக் கேட்டு நான் வருந்துகிறேன், நீங்கள் அவளை இழந்து தவிக்கிறீர்கள். உங்கள் அத்தையுடன் அவ்வளவு நெருக்கமாக இருந்தீர்கள்” என்று கூறினாள். அதற்கு அந்த வேலைக்காரன் “ஆம், அவள் மரித்துப்போனது வருத்தம் தான். ஆனால், நாங்கள் அவ்வளவு நெருக்கமானவர்களாக இருக்கவில்லை.” என்று கூற, அதற்கு அந்த பெண், ஏன்? என்று வினவினாள். அவன் “நீங்கள் என் அத்தையுடன் ஒன்றாகச் சிரித்துப் பேசுவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.” என்று கூறினான்.

“ஆம், நாங்கள் அப்படித்தான் இருந்தோம் “நாங்கள் அறிமுகமானவர்கள், ஒன்றாகச் சிரித்தோம், ஒன்றாகப் பேசினோம், ஆனால். நாங்கள் ஒன்றாக கண்ணீர் சிந்தவில்லை. நண்பர்கள் ஆவதற்கு முன் எல்லோரும் ஒன்றாக அழுதிருக்க  வேண்டும்” என்று அவளிடமிருந்து பதில் வந்தது. 

அந்த கடைசி வார்த்தை சற்று கடினமானதாக தோன்றினாலும், அவைகள் சரியான வார்த்தைகளாக இருக்கிறது. கண்ணீர் மக்களை நெருங்கிய நட்பில் இணைக்கும் ஒரு பிணைப்பு, அது உடைக்க முடியாத இறுக்கமான பிணைப்பு! சக கிறிஸ்தவர்களாகிய நாம் ஒருவரோடு ஒருவர் ஐக்கியங்கொள்ள அழைக்கப்பட்டிருந்தாலும், அதாவது, நமது வாழ்வின் மகிழ்ச்சியையும், துக்கத்தையும் ஒன்றாகப் பகிர்ந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டிருந்தாலும், நம்முடைய துக்கங்களைப் பகிர்ந்து கொள்வதில் நாம் தோல்வியடைந்துவிட்டோம் என்பது வருத்தமான உண்மை. மற்றவர்களின் துன்பங்களில் பங்கு கொண்டு நெருங்கி பழகுவது அரிதாகக் காணப்படுகிறது.

உண்மையை கூறுவதென்றால், மற்றவர்களின் துன்பத்தைக் குறித்து ரகசியமாக மகிழ்ச்சியடைவதில் நாம் குற்றவாளிகளாக இருந்திருக்கலாம்-குறிப்பாக அவர்கள் ஏதேனும் ஒரு வகையில் நம்மையும் புண்படுத்தியிருந்தால் அப்படி செய்திருக்கலாம். இது “அவர்கள் தகுதியானவற்றை பெற்றிருக்கிறார்கள்” என்ற அணுகுமுறையாகும். இப்படிப்பட்ட அணுகுமுறையை தேவன் எப்படி கருதுகிறார் தெரியுமா? நீதிமொழிகள் 17:5 ஆம் வசனம் இதற்கு பதில் தருகிறது: “ஆபத்தைக் குறித்துக் களிக்கிறவன் தண்டனைக்குத் தப்பான்.”

மற்றவர்களின் துன்பங்களில் பங்கு கொள்ள தேவன் நம்மை அழைக்கிறார். சந்தோஷப்படுகிறவர்களுடன் சந்தோஷப்படுவதற்கு நாம் அழைக்கப்படுவது போலவே, அழுபவர்களுடன் அழுவதற்கும் சமமாக அழைக்கப்படுகிறோம். துக்கம் அல்லது அழுகை என்பது ஒரு சக விசுவாசி அனுபவிக்கும் துக்கத்தையும் வலியையும் நம்முடையது போல் உணர்வதாகும். பிறரையும் நேசிப்பது என்பது அவர்களின் இன்ப துன்பங்களை நமக்குச் சொந்தமானது போல் பகிர்ந்து கொள்வதை உள்ளடக்குகிறது! அதுதான் ஐக்கியங்கொள்வது அல்லது நம் வாழ்க்கையை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வதாகும்.

நம் தேவன் கண்ணீர் விடுகிறவர்.

சந்தோஷப்படுகிறவர்களோடு தேவன் சந்தோஷப்படுவது போல, அழுகிறவர்களோடும் அழுகிறார். ஏசாயா 63:9ல், “அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்” என்று வாசிக்கிறோம். அந்தக் காலத்தில் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலர் அனுபவித்த வேதனைகளைக் கண்டு தேவன் வேதனைப்பட்டார். லாசருவின் கல்லறையில் அழுததன் மூலம் [யோவான் 11:35], இயேசுகிறிஸ்து தாம் மிகவும் நேசித்த மரியாள் மற்றும் மார்த்தாளின் துக்கத்துடன் தம்மை அடையாளப்படுத்தியது மட்டுமல்லாமல், பாவம் இந்த உலகத்திற்கு கொண்டு வந்த துக்கத்தையும் அடையாளம் காட்டினார்.

லூக்கா 19:41ல், “அவர் [இயேசு] சமீபமாய் வந்தபோது நகரத்தைப் [எருசலேமை] பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுதார்” என்றும் கூறப்பட்டுள்ளது. தம்மைக் கொல்லப்போகும் நகரத்தை நினைத்து அழுதார்! இயேசுகிறிஸ்துவின் இந்த உணர்ச்சி எசேக்கியேல் 18:32  ல் கூறப்பட்டுள்ள தேவனுடைய இருதயத்திற்கு மிகவும் பொருந்துகிறது, “மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புவதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்!” தம்மை நிராகரித்து அழிந்துபோகிற தம்முடைய எதிரிகளின் மரணத்தைக் கண்டு துக்கப்படுகிறவர். நம் தேவன் கண்ணீர் விடுகிறவர் என்று சொல்வதில் தவறில்லை. துக்கமே தெரியாத கடவுள்கள் என்று அழைக்கப்படுகிற உலகத்தில் அவர் முற்றிலும் மாறுபட்டவர்!

நம் கண்ணீரை தேவன் எப்படி பார்க்கிறார் தெரியுமா? இதற்கு சங்கீதம் 56:8 நமக்கு ஒரு குறிப்பைக் கொடுக்கிறது: “என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது.” இங்கு கூறப்பட்டுள்ள துருத்தியானது வழக்கமாக திராட்ச ரசத்தை சேமித்து வைப்பதற்கு பயன்படுத்தப்படுகிற ஒன்றை குறிப்பிடாமல் அந்தக் காலத்தில் மக்கள் விலைமதிப்பற்ற பொருட்களை வைக்க பயன்படுத்தும் ஒன்றை குறிப்பிடுகிறது.  எனவே, சாராம்சத்தில், அவரது கண்ணீர் தேவனுக்கு மிகவும் விலைமதிப்பற்றது, அவர் அவற்றை அவ்வகையான ஒரு துருத்தியில் வைப்பார் என்று தாவீது கூறுகிறார். தேவன் நம் கண்ணீரை அப்படித்தான் பார்க்கிறார்!

நம் தேவன் அக்கறையுள்ளவர். ஒரு பாவி மனந்திரும்பும்போது மகிழ்ச்சியடைவது போல, தம் சிருஷ்டி அழும்போது அவரும் அழுகிறார். அவர் தூரத்திற்கு தேவனல்ல. மாறாக,  நம் வலியை உணரும் தேவன்! நாம் இந்த தேவனைப் பின்பற்றுவதற்கு அழைக்கப்பட்டிருப்பதாலும் [எபேசியர். 5:1] அவருடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் போல் மறுரூபமாக்கப்படுவதாலும் [ரோமர் 12:2; 2 கொரிந்தியர் 3:18], அழுபவர்களுடன் அழுவதும் நமது கிறிஸ்தவ வாழ்வின் ஒரு பகுதியாக மாற வேண்டும்! இதை நன்றாகச் செய்ய, ரோமர் 12:15 ன் பிற்பகுதியிலுள்ள இந்தக் கட்டளையை நம் அன்றாட வாழ்வில் எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பார்க்க விரும்புகிறேன்.

அழுகிறவர்களுடனே அழுவது எப்படி.

கருத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 5 குறிப்புகள் என்ன செய்யக்கூடாது என்ற பிரிவின் கீழும், மற்ற 5 குறிப்புகள் அழுகிறவர்களுடன் அழும்போது என்ன செய்ய வேண்டும் என்ற பிரிவின் கீழும் வருகின்றன. 

 செய்யக் கூடாதைவை

1. துன்பப்படுபவரை அதிலிருந்து விடுபடச் சொல்லாதீர்கள்.  அழவே கூடாது என்று சொல்ல வேண்டாம். சில சமயங்களில், உறுதியாக இருக்க வேண்டும் என்று நாம் மக்களிடம் சொல்ல வேண்டும். மேலும், நேர்மறையானவர்களாகவும், தேவனுடைய பலத்திலும் அவருடைய வாக்குறுதிகளிலும் அதிகச் சார்புடையவர்களாகவும் இருக்கும்படி நாம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர்களுடன் ஒரிரு கண்ணீர் துளிகளை சிந்திய பிறகே நாம் அத்தகைய செயல்களைச் செய்ய வேண்டும்.

நம்மை புண்படுத்துபவர்களிடம் நம் வார்த்தைகளில் தடித்த உணர்வுகளைக் காட்டக்கூடாது. நீதிமொழிகள் 25:20 இவ்வாறு  கூறுகிறது, “மனதுக்கமுள்ளவனுக்குப் பாட்டுகளைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் வார்த்த காடியைப்போலவும் இருப்பான்.” ஒருவர் ஆழ்ந்த வேதனையை அனுபவிக்கும் போது, அவர்களின் காயங்களோடு காயத்தைக் கூட்டாமல் இருக்க நாம் கவனமாக இருக்க வேண்டும். அதுதான் விஷயம்!

சில சமயங்களில், அந்த துன்பத்தால் எரிச்சல் அடைவது எளிது. அந்த எரிச்சலானது வார்த்தைகளில் அடிக்கடி வெளி வரும். ஏற்கனவே துன்பத்திலிருப்பவர்கள் மேலும் காயப்படுத்தைத் தாங்குவது எவ்வளவு கடினம் என்று கற்பனை செய்து பாருங்கள். யோபின் நண்பர்களை நினைவிருக்கிறதா? ஏற்கனவே மிகுந்த வேதனையில் இருந்தவனுக்கு அவர்கள் தங்கள் வார்த்தைகளின் மூலம் எவ்வளவு வேதனை கூறினார்கள்?

2. முழு விடுதலையை உறுதியளிக்காதீர்கள்.  தேவன் உங்களை முழுமையாக குணப்படுத்துவார்; நல்ல வேலை கிடைக்கும்; நீங்கள் இழந்தக் குழுந்தைக்குப் பதிலாக இன்னொரு குழந்தை பிறக்கும்; வாழ்க்கைத்துணையைப் பெறுவீர்கள் என்பது போன்ற தேவன் கொடுக்காத வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். மேற்கூறிய அனைத்தையும் தேவனால் செய்ய முடியுமா என்று கேட்டால், ஆம் அவரால் செய்ய முடியும்! ஆனால் எல்லா சூழ்நிலையிலும் தேவன் அவ்வாறு செய்வதாக வாக்களித்திருக்கிறாரா  என்றால்  அப்படி அவர் கூறவில்லை.! நாம் எல்லாம் அறிந்தவர்கள் அல்ல. நாம் தேவனோடு விளையாட முடியாது, அதற்கான தைரியமும் நம்மிடம் இல்லை!

துன்பப்படுபவர்களை இதமாக உணர வைக்க முயற்சிப்பது ஒரு சிறந்த நோக்கமாக இருந்தாலும், அதை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளும் முக்கியமானது. வேதாகமத்தில்   கூறப்படாத  பொய்யான வாக்குறுதிகளை வழங்குவது சரியான வழிமுறையல்ல. மேலும், தேவன் முழுமையான குணப்படுத்துதலையோ அல்லது இதமான சூழலையோ கொண்டு வரவில்லை என்றால், துன்பப்படுபவர் இன்னும் அதிக ஏமாற்றத்தைத் தாங்க வேண்டியிருக்கும். இது பாதிக்கப்பட்டவருக்கு எந்தவிதத்திலும் உதவாது!

ஆம், முழுமையான விடுதலை கிடைக்கப்போகிறது. ஆனால், அது எதிர்காலத்தில் வரக் கூடிய ஒன்று.  இயேசுகிறிஸ்து மீண்டும்  வந்து தம்முடைய ராஜ்யத்தை அமைக்கும் போது தான்  முழுமையான விடுதலை கிடைக்கும் ஆனால் அதுவரை, துன்பத்தை உள்ளடக்கியிருந்தாலும், அவர்களின் தற்போதைய வாழ்க்கைக்காக தேவனுடைய சித்தத்தை சார்ந்திருப்பதற்கு நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். அந்தத் துன்பத்தின்போதும் தேவனுடைய பிரசன்னத்தை நாம் அவர்களுக்கு நினைவூட்டி, அவரைத் தொடர்ந்து நோக்கும்படி ஊக்குவிக்கலாம்.

3. அவர்களின் துன்பத்தை மற்றவர்களின் துன்பங்களுடன் ஒப்பிடாதீர்கள். இங்குதான், பாதிக்கப்பட்டவர்களை இதமாக உணரச் செய்வதற்காக, அவர்களை விட அதிகம் துன்பப்படுபவர்களைப் பற்றி நாம் சுட்டிக்காட்ட முனைகிறோம். உன் கணுக்காலில் வலி மட்டும் தான் இருக்கிறது. கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட ஒருவரை எனக்குத் தெரியும். நல்லவேளை கணுக்கால் உடையவில்லை, அதற்காக மகிழ்ச்சியடைய வேண்டும் என்று கூறுதல் பொருத்தமானதல்ல. ஒரு மனிதனின் துன்பம் அந்த நேரத்தில் அவர்களுக்கு ஒரு சாதாரண விஷயம் அல்ல. “நீங்கள் இந்த துன்பத்தை அனுபவிக்கிறீர்கள் என்று நான் மிகவும் வருந்துகிறேன்” என்று சொல்வது தான் சிறந்தது.

4. அவர்களை நியாயந்தீர்க்காதீர்கள். மறுபடியும், யோபின் நண்பர்கள் நினைவுக்கு வருகிறார்கள். “உம் பாவங்களால் நீர் துன்பப்படுகிறீர்” என்று கூறும் கூற்றுகள் சில சமயங்களில் உண்மையாக இருந்தாலும் கூட, அது முற்றிலும் உண்மையல்ல. நாம் தேவனாக செயல்படக் கூடாது அப்படி செயல்படுவது தான் பெருமை. ஆம், சில சமயங்களில்,  அவர்களுடைய பாவத்தை உணர்த்தி, மனந்திரும்பும்படி ஊக்குவிக்க ஓரிரு வார்த்தைகளைக் கூறுவது பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால் அதுவும் நாம் அவர்களுடன் உண்மையாக துக்கத்தை பகிர்ந்து கொண்டு, அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற பின்னரே அப்படிச் செய்ய வேண்டும். நீதிமொழிகள் 12:18 ஆம் வசனம்  இவ்வாறு  எச்சரிக்கிறது, “பட்டயக்குத்துகள் போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஒளஷதம்.” நமது வார்த்தைகள் வலியை தரக்கூடாது மாறாக, சௌக்கியத்தைத் தர வேண்டும்!

5. அவர்களைத் தவிர்க்காதீர்கள்.  சில சமயம் காயப்பட்டவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாதபடியாலும், நாம் ஏதாவது கூறினால் அது அவர்களைப் புண்படுத்துமோ என்ற பயத்திலும் அவர்களை முற்றிலும் தவிர்க்கிறோம். அல்லது துன்பப்படுகிறவர்களுடன் இருப்பதை விரும்புவதில்லை. துன்பங்கள் மிகவும் மனச்சோர்வை ஏற்படுத்தி விடுகிறபடியால். இதுபோன்ற உணர்வுகளுக்குள் நாம் செல்ல விரும்புவதில்லை. டிவி பார்க்கும் போது கூட, சில சோகமான செய்திகள் வந்தால், சேனலை உடனடியாக மாற்றி விடுகிறோம். நல்ல சமாரியன் உவமையில் வரும் ஆசாரியனையும், லேவியனையும்  போல [லூக்கா 10:31-32], காயப்பட்ட மனிதனின் துன்பத்தைப் பார்க்கும்போது நாமும் அப்படியே செய்கிறோம். அப்படிச் செய்வதை நாம் நிறுத்த வேண்டும்.

எனவே, அழுகிறவர்களுடனே அழுங்கள் என்ற தேவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிய முற்படும்போது என்ன செய்யக்கூடாது என்று கருத்தில் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்: (1) துன்பப்படுபவரை அதிலிருந்து விடுபடச் சொல்லாதீர்கள் (2) முழு விடுதலையை உறுதியளிக்காதீர்கள் (3) அவர்களின் துன்பத்தை மற்றவர்களின் துன்பங்களுடன் ஒப்பிடாதீர்கள் (4) அவர்களை நியாயந்தீர்க்காதீர்கள், (5) அவர்களைத் தவிர்க்காதீர்கள்.

அழுகிறவர்களுடனே அழுங்கள் என்ற கட்டளை வரும்போது என்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

Category
Subscribe
Notify of
guest
0 கருத்துக்கள்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments