மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு—பகுதி 14 அழுகிறவர்களுடனே அழுங்கள்—பகுதி 2

(English version: The Transformed Life – Weep With Those Who Weep – Part 2)
முந்தைய பதிவில், ரோமர் 12:15 ன்படி “அழுகிறவர்களுடனே அழுங்கள்” என்ற தேவனுடைய கட்டளையை நிறைவேற்ற முற்படும்போது, “என்ன செய்யக்கூடாது” என்ற குறிப்பின் கீழ் கருத்தில் கொள்ள வேண்டிய 5 விஷயங்களை கீழ்கண்டவாறு பார்த்தோம்: (1) துன்பப்படுபவரை அதிலிருந்து விடுபடச் சொல்லாதீர்கள் (2) முழு விடுதலையை உறுதியளிக்காதீர்கள் (3) அவர்களின் துன்பத்தை மற்றவர்களின் துன்பங்களுடன் ஒப்பிடாதீர்கள் (4) அவர்களை நியாயந்தீர்க்காதீர்கள் (5) அவர்களைத் தவிர்க்காதீர்கள்.
அடுத்ததாக, வாழ்க்கையில் கடினமான சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு ஆறுதல் அளிக்க முற்படுகையில், “செய்ய வேண்டியவைகள்” என்ற குறிப்பின் கீழ் கருத்தில் கொள்ள வேண்டிய 5 விஷயங்களைப் பார்ப்போம்.
செய்யவேண்டியவைகள்
1. ஜெபமென்னும் ஆயுதத்தை பயன்படுத்துங்கள். அவர்களின் விடுதலைக்காக நாம் முதலில் தனிப்பட்ட முறையில் தவறாமல் ஜெபிக்க வேண்டும். இந்த சோதனையின் மூலம் அவர்கள் தேவனுடைய பிரசன்னத்தை அனுபவிக்க வேண்டும் என்று நாம் தேவனிடம் மன்றாடி, துன்பப்படுபவருக்கு ஆறுதல் அளிக்க நம்மை பயன்படுத்துமாறு அவரிடம் கேட்க வேண்டும். நேரிலோ அல்லது பிற வழிகளிலோ [மின்னஞ்சல், குறுஞ்செய்தி அனுப்புதல்] குணப்படுத்துதலையும் ஊக்கத்தையும் தரக்கூடிய சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கான ஞானத்தைத் தரும்படியும் நாம் தேவனிடம் கேட்க வேண்டும். “இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஔஷதமுமாகும்.” என்று நீதிமொழிகள் 16:24 கூறுகிறது,மேலும் நீதிமொழிகள் 12:18 “ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஔஷதம்” என்று கூறுகிறது. நம்முடைய வார்த்தைகள் கலக்கத்திலிருக்கும் ஆத்துமாக்களுக்குத் தேவையான சௌக்கியத்தை அளிக்கக் கூடியவையாகும்.
துன்பப்படுபவரை நேரில் சந்தித்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ நாம் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். தேவன் இடைப்பட்டு அவருடைய சித்தத்தை நிறைவேற்றும்படி நாம் மன்றாடும்போது, அது துன்பப்படுபவருக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும்.
2. முடிந்தால், அவர்களின் வசதிக்கேற்ப அவர்களை சந்தியுங்கள். நாம் மக்களை நம்முடைய வசதிக்கேற்ப பார்க்காமல், அவர்களின் வசதிக்கேற்ப பார்க்க வேண்டும்! சந்திப்பது நமது வசதிக்கேற்ப செய்யும் வேலையல்ல, துன்பப்படுபவரின் தேவைகளை நாம் உணர வேண்டும். அவர்கள் தங்களை சந்திக்க நேரம் இல்லை என்றால், அதை நாம் மதிக்க வேண்டும்.
நாம் அவர்களை சந்திக்கும்போது, அது பாதிக்கப்பட்டவருக்கு அவசரத்தில் இருப்பதாக தோன்றக்கூடாது. துக்கத்தில் இருப்பவர்களைப் பார்க்கும்போது, எப்போது கிளம்பலாம் என்று 2 நிமிடங்களுக்கு ஒருமுறை கடிகாரத்தைப் பார்ப்பது அவர்களை புண்படுத்தும் விஷயங்களில் முக்கியமான ஒன்று. மகிழ்ச்சியாக இருப்பவர்களுடன் அதிக நேரம் செலவிடுகிறோம். ஆனால் துக்கத்தில் இருப்பவர்களைச் சந்திக்கும் போது, நாம் அவர்களுடன் எல்லா சமயத்திலும் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல [அதிக நேரம் தங்கி துன்பப்படுபவருக்கு நாம் சுமையாகவும் இருக்கக்கூடாது!]. கால அளவு பாதிக்கப்பட்டவரின் தேவைகள் மற்றும் வசதியைப் பொறுத்து இருக்க வேண்டும்.
3. அவர்களுக்கு செவிகொடுங்கள். துக்கப்படுபவர்களுடன் நாம் இருக்கும்போது, நாம் குறைவாகப் பேச வேண்டும், அதிகமாக செவிகொடுக்க வேண்டும்—அவர்களின் வார்த்தைகளுக்கு மட்டும் செவிசாய்க்காமல், அவர்களின் இருதயங்களுக்கும் செவிகொடுக்க வேண்டும். ஒரு நபர் அழுவதை வார்த்தைகளால் குறிப்பிடுவதை விட உள்ளுக்குள அதிகமாக உடைந்து இருக்கலாம். எனவே, அவர்களின் உணர்வுகளை அறிய முயற்சிக்க வேண்டும். அவர்கள் சரியான வார்த்தைகளைச் சொல்லாவிட்டாலும் நாம் பொறுமையாக இருக்க வேண்டும். நாம் அவற்றை உடனே சரிசெய்ய வேண்டிய அவசியமில்லை. முதலில் அவர்களை பேச வைக்க வேண்டும். அவர்கள் மௌனமாக இருந்தால், நாமும் மௌனமாக இருப்பது நலமானது தான். சில நேரங்களில் நாம் அவர்களுடன் இருப்பதே சௌக்கியமளிக்கக்கூடியதாக இருக்கும். அவர்கள் அருகில் அமர்ந்து, என்ன பேசுவது என்று தெரியாதபோது அல்லது அமைதியாக இருப்பது நல்லது என்று உணரும் போது பேசாமல் அவர்களின் தோளில் கை வைப்பது சிறந்தது! நாம் அவர்களுடன் இருப்பதே காயத்திற்கான மருந்தாக அமையும்.
சிறுவனாக இருந்தாலும் பெரிய இருதயம் கொண்ட ஒருவனைப் பற்றி சொல்லப்படும் கதை இது. அவனது பக்கத்து வீட்டுக்காரர் ஒரு வயதான மனிதர், அவருடைய மனைவி மரித்துவிட்டார். பெரியவர் அழுவதைக் கண்ட சிறுவன், அவர் மடியில் ஏறி வெறுமனே அமர்ந்தான். பின்னர், சோகமாக இருந்த பெரியவரிடம் நீ என்ன சொன்னாய் என்று அவனுடைய தாய் சிறுவனிடம் கேட்டாள். அதற்கு அந்த சிறுவன் “ஒன்றுமில்லை”, “அவர் அழுவதற்கு நான் உதவினேன்” என்று பதிலளித்தான்.
சில சமயங்களில் ஆழ்ந்த துக்கத்தை எதிர்கொள்ளும் மக்களுக்கு நாம் செய்யக்கூடிய சிறந்த விஷயம், பெரும்பாலும், துக்கமடைந்தவர்களின் அருகில் அமர்ந்து, புத்திசாலித்தனமாகவும் உதவிகரமாகவும் ஏதாவது சொல்வதை விட, அவர்களின் கைகளைப் பிடித்து, அவர்களுடன் அழுவதாகும்.
4. வேதத்தின் மூலம் அவர்களை உற்சாகப்படுத்துங்கள். துன்பப்படுபவர்களின் தற்போதைய வலியைக் குறைப்பதற்கு முயற்சிக்காமல், நித்திய நம்பிக்கைக்காக அவர்களை ஊக்குவிப்பதற்கு நாம் பாடுபட வேண்டும். அழுகிறவர்களுடன் நாம் அழும்போது வேதத்தின் பங்கைக் குறைத்து விடக்கூடாது. ரோமர் 15:4 கூறுகிறது, “தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.” தேவனுடைய மக்கள், தேவனுடைய வார்த்தையை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் காயத்திலிருந்து மீளும் நம்பிக்கை பிறக்கிறது. தேவனுடைய வார்த்தையைப் பயன்படுத்தும்போது நாம் “நம்பிக்கையின் முகவர்களாக” இருக்க முடியும்.
அவர்களின் வலியை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்—இது அவர்களுக்கு மிகவும் அவசிமானது. அழுவதற்கு அவர்களை ஊக்குவிக்க வேண்டும். பல ஆண்டுகளாக தேவனுடைய மக்கள் அவரிடம் எப்படி மன்றாடினார்கள் என்று வேதம் அடிக்கடிக் குறிப்பிடுவதை நாம் அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும். ஒரு நாள் இந்த கண்ணீர் இருக்காது என்ற நம்பிக்கையில் அவர்களை ஊக்குவிக்கலாம். மனமுடைந்த தாவீதுக்கு யோனத்தான் செய்தது போல, துன்பப்படுபவர்கள் தேவனில் பலம் பெற உதவுவது ஒரு சிறந்த காரியமாகும். “சவுலின் மகன் யோனத்தான் தேவனுக்குள் தாவீதை திடன் கொள்ள உதவினான்” [1 சாமுவேல் 23:15-16].
5. நடைமுறை உதவியை வழங்குங்கள். தேவைப்படும் இடங்களில், நாம் நடைமுறை உதவியை வழங்க வேண்டும். அது அவர்களுக்கு உணவு அல்லது பணத்தை கொடுப்பதாக இருக்கலாம், பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வது, வீட்டிற்கு தேவையானவற்றை செய்வது போன்ற அவர்களின் தேவைகளுக்கு நாம் உணர்திறன் உள்ளவர்களாக இருக்க வேண்டும். நடைமுறையில் அவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதைக் காட்டும்படி தேவனிடம் மன்றாட வேண்டும். மக்கள் எப்பொழுதும் நம்மிடம் கேட்க மாட்டார்கள், ஆனால் நம்மால் முடிந்தவரை உதவி செய்ய நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
எனவே, நாம் செய்ய வேண்டியது: (1) ஜெபம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டும் (2) முடிந்தால், அவர்களின் வசதிக்கேற்ப அவர்களைச் சந்திக்க வேண்டும் (3) அவர்களுக்கு செவிசாய்க்க வேண்டும் (4) வேதவசனங்கள் மூலம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் (5) நடைமுறை உதவியை வழங்க வேண்டும்.
இந்த சங்கதியை பார்த்துக்கொண்டிருக்கும்போது, நாம் அழுகின்ற சூழலில் என்ன செய்ய வேண்டும் என்ற பிரச்சினையையும் நான் பேச விரும்புகிறேன். இன்றைக்கு நீங்கள் இந்த சூழலில் இருக்கலாம் அல்லது ஒருவேளை எதிர்காலத்தில் இந்த சூழலை எதிர்கொள்ளாலாம்.
அழுகிறவர்களுக்கு ஒரு வார்த்தை.
சில சமயங்களில் ஆறுதல் சொல்ல வருபவர்கள் சரியான வார்த்தைகளைப் பேசாமல் இருக்கலாம். அவர்களின் தவறுகளை கவனிக்க முயற்சி செய்யாதிருங்கள், அவர்களும் சக பாவிகளே. சில நேரங்களில், யாரும் உங்களை ஆறுதல்படுத்தாதுபோன்று உணரலாம். அந்தச் சூழ்நிலைகளில் கூட, மனக்கசப்பான இருதயத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருங்கள். கடந்த காலத்தில் அழுதுகொண்டிருந்தவர்களுடன் நீங்கள் அழாமலிருந்த சூழலாகவும் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது உங்கள் பெற்றோராகவோ அல்லது உடன்பிறந்தவர்களாகவோ கூட இருக்கலாம். அவர்கள் நீங்கள் செய்த தவறுகளை கண்டுகொள்ளாமல் இருந்தது போல், மற்றவர்களின் தவறுகளை கவனிக்காதீர்கள். கொலோசெயர் 3:13 ஆம் வசனம் ஒருவருடைய பலவீனங்களை ஒருவர் தாங்கிக்கொள்ள நம்மை அழைக்கிறது.
நீங்கள் கஷ்டப்படுவதை பிறர் அறியாத நேரங்கள் இருக்கலாம்-அதையும் மனதில் கொள்ளுங்கள்! எனவே, மற்றவர்களின் ஆதரவை நீங்கள் எதிர்பார்த்தால், துன்பத்தை நீங்கள் அனுபவிக்கிறீர்கள் என்பதை அவர்கள் அறிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பிரச்சனைகளை விளம்பரப்படுத்த வேண்டும் என்று நான் கூறவில்லை. உங்கள் பிரச்சினைகளைப் பற்றி வேறு யாருக்கும் தெரியாமல் நீங்களே மூடி வைத்திருந்தால், துன்பத்தின் போது தனியாக இருப்பதற்கு முக்கியக் காரணம் நீங்கள்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, ஓரு விசுவாசி தான் சோதனைகளைச் சந்தித்தப்போது ஒரு போதகராக நான் சென்று ஜெபிக்கவில்லை என்று வருத்தப்பட்ட சம்பவம் எனக்கு நினைவிருக்கிறது. சபை உறுப்பினர்கள் சோதனைகளைச் சந்திக்கும்போது ஜெபிப்பது மூப்பர்களின் பொறுப்பு என்று யாக்கோபு 5:14 ஐ அவர் மேற்கோள் காட்டினார். யாக்கோபு 5:14, “உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.” ஆனால், பிரச்சனை என்னவென்றால், மேற்கூறிய கூறிய சம்பவத்தில் அந்த நபர் சிரமங்களைச் சந்தித்திருந்ததை நான் அறியாமல் இருந்தேன்! அது உண்மைதான். ஆனால், அதே வசனம், சோதனைகளைச் சந்திப்பவர்கள் முதலில் மூப்பர்களை வரவழைக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது என்பதும் உண்மை. போதகர் விசுவாசிகளின் மனதைப் படிப்பவர் அல்ல, எல்லாம் அறிந்தவர் அல்ல. எனவே, இது இரு வழி பாதையாக செல்கிறது.
எனவே, நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள் என்றால், உங்கள் போதகர்களுக்கும், தேவைக்கேற்ப மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். அதனால், அவர்கள் உங்களைப் பார்க்க வரலாம். விசுவாச வாழ்க்கை ஒரு தீவில் தனியாக வாழ்வதல்ல. மாறாக, நமது மகிழ்ச்சிகளையும், துக்கங்களையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு சமூகத்தின் சூழலில் வாழ்வதாகும். நீங்கள் தனியாகவும் கஷ்டப்பட வேண்டியதில்லை! மற்றவர்களை தொந்தரவும் செய்ய வேண்டியதில்லை! உதவி கேட்பது பலவீனத்தின் அடையாளம் அல்ல. நம்முடைய பாரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற வேதத்தின் அறிவுரைகளைப் பின்பற்றுவது முதிர்ச்சியின் அடையாளமாக இருக்கிறது.
சிறந்த ஆறுதல் அளிப்பவர்களாக இருப்பதற்கு.
பிரசங்கி 7:2 ; 7:4 ஆகிய வசனங்கள் இவ்வாறு கூறுகிறது, “விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான். ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்; மூடரின் இருதயம் களிப்புவீட்டிலே இருக்கும்.” துக்க வீட்டிற்கு செல்வது வாழ்க்கையின் மீதும், நித்தியத்தின் மீதும் சரியான கண்ணோட்டத்தை நமக்கு வழங்குகிறது. மரணத்தின் மீது சரியான பிடிப்பு கிடைத்தால்தான் வாழ்வின் மீதும் நல்ல பிடிப்பு கிடைக்கும். அதுவும் அழுகிறவர்களுடன் அழும்போதுதான் கிடைக்கும்!
இந்த வசனங்களின் தெளிவு நமக்கு இருந்தபோதிலும், நாம் அவ்வாறு செயல்படுவதில்லை என்று நம் அன்றாட நிகழ்வுகள் நமக்கு எதிராக சாட்சியமளிக்கின்றன. துக்கப்படுவோரை விட, விருந்துண்டு மகிழ்பவர்களுடன் அதிக மணிநேரம் செலவிடுகிறோம்! பொதுவாக, தனிமையில், அழுதுகொண்டிருப்பவரிடம் சென்று நேரத்தை செலவிடுவதை விட, விருந்து நிகழ்வுகளில் நேரத்தை செலவிடுகிறோம்! ஆம், சந்தோஷப்படுகிறவர்களுடன் சந்தோஷப்பட வேண்டும், ஆனால் துக்கப்படுகிறவர்களுடன் துக்கப்பட வேண்டும் என்றும் நமக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. துன்பப்படுபவர்களைப் பற்றி கவலைப்படாத உலகில், அத்தகையவர்களுக்காக நாம் இன்னும் அதிக அக்கறை காட்ட வேண்டும்.
இந்த உண்மையை டாக்டர் பால் பிராண்ட் தனது Fearfully and Wonderfully Made என்ற நூலில் இவ்வாறு அழகாக வெளிப்படுத்தியுள்ளார்:
“நோயாளிகளிடமும், அவர்களது குடும்பத்தினரிடமும், துன்பத்தில் உங்களுக்கு யார் உதவினார்கள்? என்று கேட்கும்போது பெரும்பாலும் கனிவான பதில்கள் அரிதாகவே இருந்ததாக கூறினர். ஒரு சிலர் மட்டுமே அமைதியானவர்களாகவும், புரிந்துகொள்ளக்கூடியவர்களாகவும், பேசுகிறதை விட அதிகமாக செவிச்சாய்க்கிறவர்களாகவும், குற்றப்படுத்தாதவர்களாகவும் அல்லது அதிக ஆலோசனைகளை வழங்காதவர்களாகவும், பொறுமை உணர்வு மிக்கவர்களாகவும். தேவைப்படும்போது கை கொடுக்கிறவர்களாகவும், புரிதலுள்ளவர்களாகவும், அணைத்துக்கொள்கிறவர்களாகவும் இருந்தனர் என்று தழுதழுத்த குரலில் கூறினார்கள்.”
சில சமயங்களில், சரியானதைச் சொல்ல கடினமாக முயற்சிக்கும் போது, உணர்வுகளின் மொழி நம் வார்த்தைகளை விட சத்தமாக பேசுகிறது என்பதை மறந்துவிடுகிறோம்.
தங்களுக்காக அழாதவர்களுக்காகவும் அழுவதையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நான் என்ன சொல்கிறேன் என்றால், நம்முடைய அன்புக்குரியவர்களும், நண்பர்களும் பலர் தங்கள் பாவங்களுக்காக அழுது, கிறிஸ்துவிடம் திரும்பாமல், அவரை முற்றிலும் அலட்சியப்படுத்துகிறார்கள். அத்தகையவர்களுக்காக, அவர்களின் இரட்சிப்புக்காக நாம் தேவனிடம் கூக்குரலிட்டு, கண்ணீர் சிந்த கற்றுக்கொள்ள வேண்டும்.
இயேசுகிறிஸ்து தம்மை சிலுவையில் அறையப்போகும் மக்களுக்காக அழுதார் [லூக்கா 19:41]. பவுல் தன்னைத் துன்புறுத்திய யூதர்களுக்காக அழுதார் [ரோமர் 9:1-3]. பிலிப்பியர் 3:18ல் இயேசுகிறிஸ்துவை ஏற்க மறுப்பவர்களைக் குறித்து அவர் எழுதும் போது, இவ்வாறு கூறுகிறார்: “ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.”
இழந்து போனவர்களுக்காக நாம் அனைவரும் கண்ணீர் வடிப்போமாக!