மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு—பகுதி 16 நம்மை காயப்படுத்துகிறவர்களுக்கு பதிலளித்தல்

Posted byTamil Editor October 29, 2024 Comments:0

(English version: The Transformed Life – How To Respond To Those Who Hurt Us)

ரோமர் 12 ஆம் அதிகாரம் இந்த வசனங்களுடன் நிறைவு பெறுகிறது, ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய். நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.”

ரோமர் 12 அதிகாரத்திற்கு இது என்ன ஒரு பொருத்தமான முடிவு! அதன் மையக் கருப்பொருளானது, பரிசுத்த ஆவியானவருடைய மறுரூபமாக்கும்  செயலின் காரணமாக, இயேசு கிறிஸ்துவைப் போல வாழும் ஒரு வாழ்க்கை முறைக்கு விசுவாசிகள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்ற அழைப்பாகும் [ரோமர் 12:1-2]. நம்மைக் காயப்படுத்துபவர்களுக்கு கிறிஸ்துவைப் போல பதிலளிப்பதை விட வேறு எதுவும் சிறந்தாக இருக்க முடியாது!

எல்லா நியாயத்தீர்ப்புகளையும் தேவனின் கரங்களில் நாம் விட்டுவிடும் அதே வேளையில், இயேசுகிறிஸ்துவின் பூமிக்குரிய முழு வாழ்க்கையும் அவரைக் காயப்படுத்தியவர்களுக்கு நன்மையை செய்வதாகவே இருந்ததேயொழிய வேறு எதுவும் இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். நம்மை காயப்படுத்துபவர்களைப் பழிவாங்குவதைத் தவிர்க்கும், அதே நேரத்தில், எல்லா தீர்ப்பையும் தேவனின் கரங்களில் விட்டு, அவர்களுக்கு நன்மை செய்யும்படியாக இவ்வசனங்களில் துல்லியமாக நாம் அழைக்கப்படுகிறோம்.

இந்த வசனங்களில், யாராவது நம்மை காயப்படுத்தினால், 1. பழிவாங்க வேண்டாம். 2. அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும், 3. எல்லா நியாயத்தீர்ப்புகளையும் தேவனின் கரங்களில் விட்டுவிட வேண்டும். என்று காண்கிறோம். இவை ஒவ்வொன்றையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இதை நாம்  வசன வசனமாகப் பார்க்காமல், ஒவ்வொரு குறிப்பின் கீழ் வசனப் பகுதிகளை தொகுத்துப் பார்க்கப்போகிறோம். மேலும், ஒரே சத்தியங்கள் மறுபடியும், மறுபடியும் வருகிறபடியால், அவற்றை ஒழுங்கமைத்துப் பார்ப்பது மிகவும் உதவியாக இருக்கும்.

1. பழிவாங்க வேண்டாம்.

இந்த கட்டளை பின்வரும் வசனங்களின் மூலம் தெளிவாகிறது, “தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள். நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். தீமையை நன்மையினாலே வெல்லுங்கள் ” [ரோமர் 12:17, 19, 21]. பவுல் இந்த சத்தியத்தை போதிப்பது மட்டுமல்லாமல், அப்போஸ்தலனாகிய பேதுருவும், “தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாதிருங்கள்” என்று கூறுகிறார் [1 பேதுரு 3:9].

பழிவாங்கக்கூடாது என்ற சத்தியமானது பழைய ஏற்பாட்டிலும் காணப்படுகிறது. உதாரணமாக, லேவியராகமம்19:18-ல் இவ்வாறு நாம் வாசிக்கிறோம், “பழிக்குப்பழி வாங்காமலும் உன் ஜனப்புத்திரர் மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்.” கீழ்க்காணும் வார்த்தைகளின் மூலம் பழிவாங்கும் மனப்பான்மையைக் காட்டக்கூடாதென சாலொமோன் நம்மை எச்சரிக்கிறார், அவன் எனக்குச் செய்தபிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே” [நீதிமொழிகள் 24:29].

இந்த அனைத்து வசனங்களிலும், நம்மை காயப்படுத்துபவர்களுக்கு எதிராக பழிவாங்குவதைத் தேவன் தடைசெய்கிறார் என்பது தெளிவாகிறது—அவர்கள் விசுவாசிகளாக இருந்தாலும் சரி அல்லது அவிசுவாசிகளாக இருந்தாலும் சரி; வீடு, சபை அல்லது வேறு எந்த இடத்திலும், யாரையும் பழிவாங்கக் கூடாது.  நம்முடைய பாவ இயல்புகள் பழிவாங்கும்படி நம்மைத் தூண்டினாலும், அவை யாவற்றையும் தேவன் தடைசெய்கிறார். மனரீதியாக பழிக்குப்பழி வாங்குதல் கூடாது. கிண்டலான, கோபமான பேச்சு, மென்மையான நிராகரிப்பு, கதவுகளை அடித்தல், வதந்தி பரப்புதல், அவதூறுகள் போன்ற வன்முறையான அல்லது வன்முறையற்ற பழிவாங்கும் செயல்களும் இருக்கக்கூடாது. நாம் எவ்வளவு கடுமையாக காயப்படுத்தப்பட்டிருந்தாலும், கட்டளை மிகத் தெளிவாக உள்ளது: கொஞ்சம் கூட பழிவாங்கும்போக்கு காணப்படக்கூடாது!

ஆனால், தேவனுடைய வார்த்தை இந்தக் கட்டளையோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. நாம் பழிவாங்கக் கூடாது, அதாவது செயலற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், நம்மைக் காயப்படுத்தியவர்களுக்கு நன்மை செய்து பதிலளிப்பதில் முனைப்புடன் இருக்கவும் அழைக்கப்படுகிறோம். 

 

2. அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும்.

 “எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்” பவுல் கூறுகிறார் [ரோமர் 12:17b]. மனிதர்கள் முன்பாக யோக்கியமானவர்களாகக் காணப்படுவதற்கு தேவனின் தார்மீக சட்டங்களை நாம் மீறலாம் என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. நாம் அனைவரின் பார்வையிலும் மரியாதைக்குரியதைச் செய்ய வேண்டும். பெரும்பாலும், தீமைக்கு பதில் நன்மை செய்வது அவிசுவாசிகளின் பார்வையில் கூட அங்கீகாரம் பெறுகிறது என்பது பவுலின் கருத்து.

பின்னர் அவர் இவ்வாறு கூறுகிறார், கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” [ரோமர் 12:18]. விசுவாசிகள் வேதாகமக் கட்டளைகளை சமரசம் செய்யாமல், முடிந்தவரை சமாதானத்தைத் தேட முயற்சிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, நம் ஆண்டவர் சமாதானப்பிரபு என்று அழைக்கப்படுகிறார் [ஏசாயா 9:6], நாமும் சமாதானம் செய்பவர்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ளோம் [மத்தேயு 5:9]. எனவே, முடிந்தவரை சமாதானத்தைத் தேடுவது மட்டுமே பொருத்தமானது.

இருப்பினும், பவுல் ஒரு யதார்த்தவாதி. சிலருடன் சமாதானமாக இருக்க முடியாத சந்தர்ப்பங்கள் வரக்கூடும் என்பது அவருக்குத் தெரியும். இயேசுகிறிஸ்துவாலும் கூட பரிசேயர்களுடன் இணக்கமாக இருக்க முடியவில்லை! அதனால்தான், “கூடுமானால் உங்களாலான மட்டும்” என்ற சொற்றொடரை பவுல் சேர்க்கிறார். பின்னர், “அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்” [ரோமர் 12:20] என்று நீதிமொழிகள் 25:21-22-லிருந்து மேற்கோள் காட்டுகிறார். நம்மைத் துன்புறுத்துபவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற தெளிவான கட்டளை இங்கே உள்ளது. உணவும், பானமும் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படையான விஷயங்கள். எனவே, உங்களைத் துன்புறுத்துபவர்களுக்குத் தேவையானதை வழங்குங்கள் என்பதே இங்கு கூறப்படும் யோசனை. “அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்” என்ற சொற்றொடர், நம்மைத் துன்புறுத்துபவர்கள் மீதான நமது அன்பானது, அவர்கள் செயல்களின் மீது கடுமையான அவமானத்தை உணரச் செய்து, அவர்களை தேவனிடம் திரும்பச் செய்யும் ஆற்றலைக் குறிக்கிறது.

இறுதியாக, பிறருடைய தீமை நம்மை ஆள்வதற்கு அனுமதிக்கக் கூடாது, ஆனால், தீமையை நன்மையால் வெல்லுங்கள்” [ரோமர் 12:21] என்ற கட்டளையின் மூலம் நமது நன்மை அவர்களின் தீமையை வெல்ல வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தப்படுகிறோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பழிவாங்காமல், நம்மை காயப்படுத்துபவர்களுக்கு நன்மை செய்வதற்கான வழிகளை நடைமுறையில் தேட வேண்டும்.

லூக்கா 6:27-28 ல் இயேசுகிறிஸ்து இவ்வாறு கூறுகிறார், எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்.” 1 தெசலோனிக்கேயர் 5:15 மற்றும் 1 பேதுரு 3:9 போன்ற பிற வசனப் பகுதிகளும் இதே கருத்தை வலியுறுத்துகின்றன.

பழைய ஏற்பாட்டு புத்தகமான ஆதியாகமத்தில் உள்ள யோசேப்பு இங்கு நினைவுக்கு வருகிறார். அவர் தன்னை அடிமையாக விற்ற தனது சகோதரர்களுக்கு எதிராகப் பழிவாங்கவில்லை, ஆனால் பின்னர் வந்த பஞ்சத்தின் ஆண்டுகளில் அவர்களுக்கு நன்மை செய்ய தீவிரமாக முயன்றார். நாமும் அவ்வாறு செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். பழிவாங்கும் நம் போக்குகளை கைவிட்டு, நம்மை காயப்படுத்துபவர்களுக்கு நன்மை செய்ய தீவிரமாக முயற்சி செய்யக்கடவோம்.

நாம் இன்னும் செய்தியை முடிக்கவில்லை. இந்த இரண்டு குறிப்புகள் மட்டும் போதுமானது என்று நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால், பவுல் மற்றொரு கடினமான விஷயத்தையும் கூற நினைக்கிறார்.

3. எல்லா நியாயத்தீர்ப்புகளையும் தேவனின் கரங்களில் விட்டுவிட வேண்டும்.

ரோமர் 12:19 வசனத்தின் முற்பகுதியில் நாம் பழிவாங்கக் கூடாது என்று கூறிய பிறகு, அவ்வசனத்தின் பிற்பகுதியில் பவுல்  “நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்” என்று  உபாகமம் 32:35ஐ மேற்கோள் காட்டி கூறுகிறார்.  அவ்வசனத்தில்  தேவன்,  இஸ்ரவேலர்களை இளைப்பாறவும், தங்களைத் துன்புறுத்துபவர்களுக்கு  உகந்தக் காலத்தில் தேவன் நீதியை நிறைவேற்றுவார் என்ற சத்தியத்தில் மகிழ்ச்சியடையவும் அவர்களை மோசே ஊக்குவித்தார். நீதிமொழிகள் 20:22 ல் சாலொமோனும் இவ்வாறே கூறுகிறார், “தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்.”

இதன் பொருள் என்னவென்றால் நியாயத்தீர்ப்பை நம் கரங்களில் எடுத்துக்கொள்ளக்கூடாது. அவருடைய நேரத்திலும், அவருடைய வழியிலும் நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற தேவன் மீது நாம் முழு மனதுடன் நம்பிக்கை வைக்க வேண்டும். நியாயந்தீர்ப்பது தேவனுக்கு மட்டுமே சொந்தமானது, அவருக்கு சொந்தமானதை நாம் எடுத்துக்கொள்ள துணிந்துவிடக்கூடாது., நம்மைக் காயப்படுத்தியவர்களை நாம் நியாயந்தீர்க்கும்போது, “தேவனே, நீர் சரியாகத் தீர்ப்பளிப்பீர் என்று நான் உறுதியாக நம்பவில்லை” என்று கூறுகிறோம். இத்தகைய நடத்தை தேவனைப் பிரியப்படுத்தாது. அப்படி செய்வது, பழிவாங்குதல் எனக்குரியது என்று சொன்ன தேவன் மீதான அவிசுவாசத்தின் அடையாளமாகும். உண்மையான விசுவாசம் தேவனை, அவருடைய வார்த்தையின்படி ஏற்றுக்கொள்கிறது. மேலும், நம்மை காயப்படுத்துபவர்களை தேவன் சந்திக்கும் வரை காத்திருக்கச் செய்கிறது.

இதற்கிடையில், நம்மைக் காயப்படுத்தியவர் மனந்திரும்பினால், நாம் உடனடியாக அவர்களை மன்னிக்க வேண்டும். லூக்கா 17:3 ஆம்  வசனத்தில் நம் ஆண்டவர் தெளிவாகக் கூறுகிறார் “உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக.” இந்த வசனங்களின்படி நமக்கு எதிராக பாவம் செய்பவர்களை நாம் எதிர்கொள்ள வேண்டும், அவர்கள் உண்மையாக மனந்திரும்பினால், அவர்களை மன்னிக்க வேண்டும் என்று தேவனின் வார்த்தை தெளிவாகக் கூறுகிறது.

மேலும், நாம் முழுமையான ஒப்புரவாகுதலை நாட வேண்டும். பெரும்பாலும், நாம் மன்னித்துவிட்டு, அதன் பிறகு இடைவெளியைக் கடைப்பிடிப்பதால் குற்றவாளிகளாக மாறுகிறோம். அது ஒப்புரவாக்கும் மன்னிப்பின் நோக்கத்தை தோற்கடிக்கிறது. தேவன் மன்னிக்கும்போது, அவர் எப்போதும் நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்குகிறார் [கொலோசெயர் 1:22; 2 கொரிந்தியர் 5:17-19]. மற்றவர் ஒப்புரவாகுதலை நாடாவிட்டாலும் நாம் அதை தொடர வேண்டும்!

மன்னிப்புக் கேட்பவர்களுக்கு ஒரு வார்த்தை: நாம் மற்றவர்களைக் காயப்படுத்தியவர்களாக இருந்தால், “நான் செய்ததற்கு வருந்துகிறேன்” என்று மன்னிப்பு கேட்பது மட்டுமல்லாமல், காயமடைந்தவர்களிடம் ஒப்புரவாகவும்  முயற்சிக்க வேண்டும். சில சமயங்களில் நாம் காயப்படுத்தியதற்கு “மன்னித்துவிடுங்கள்” என்று கூறுகிறோம்.  நம்மை திருப்திப்படுத்திக்கொள்ளவும், அவர்களை விட்டு ஒதுங்கி இருக்கவுமே அப்படி செய்கிறோம்! அது தவறான அணுகுமுறை.

மன்னிப்பு கேட்டல் மற்றும் மன்னிப்பை வழங்குதலுக்கான இறுதி இலக்கு ஒப்புரவாகுதலாகும்.ற்றவர் அதைத் தொடர விரும்புகிறாரா இல்லையா என்பது நம் கரத்தில் இல்லை. ஆனால் முழுமையான ஒப்பரவாகுதலைத் தேடுவதற்கு நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும்—நாம் மன்னிப்பு தேடுபவர்களாக இருந்தாலும் சரி அல்லது கேட்பவர்களுக்கு அதை கொடுப்பவர்களாக இருந்தாலும் சரி.

நம்மைக் காயப்படுத்தியவர் மனந்திரும்பவில்லை என்றால் எப்படி பதிலளிப்பது?

நம்மைக் காயப்படுத்தியவர் மனந்திரும்பாமல் இருந்தால் என்ன செய்வது? தங்களின் செயல்கள் தவறு என்று அவர்கள் உணரவில்லை என்றால் என்ன செய்வது? அப்படியானால், அவர்களையும் நாம் மன்னிக்க வேண்டுமா? எல்லாவற்றிற்கும் மேலாக, சிலுவையில் தொங்கியப்போது இயேசுகிறிஸ்து தம் எதிரிகளை மன்னிக்கவில்லையா? எனவே இந்தக் கேள்விகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

குற்றமிழைத்தவர் மனம் வருந்தினாலும் சரி, வருந்தாவிட்டாலும் சரி, நாம் ஒருபோதும் பழிவாங்காமல், நன்மை செய்ய முயல வேண்டும் என்பதை முதலில் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். இருப்பினும், மன்னிப்பு என்று வரும்போது, அது வேறு பிரச்சினை.

இங்கே பவுல், உபாகமத்தை மேற்கோள் காட்டி, நியாயத்தீர்ப்பை  தேவனின் கரங்களில் விட்டுவிடுவோம் என்று சொல்வதன் மூலம், மனந்திரும்பாதவர்கள் நியாயத்தீர்ப்பை எதிர்கொள்கிறார்கள் என்று நமக்குச் சொல்கிறார். கிறிஸ்துவைப் போல மாறவும், தேவனைப் பின்பற்றவும் வேண்டுமென்றால் தேவன் மன்னிப்பது போல நாமும் மன்னிக்க வேண்டும். எனவே, நாம் நிதானித்து இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும்: 

தேவன் அனைவரையும் மன்னிப்பாரா அல்லது மனந்திரும்புபவர்களை மட்டும் மன்னிப்பாரா?

அவர் அனைவரையும் நிபந்தனையின்றி மன்னிக்கிறார் என்று சொன்னால், அனைவரும் பரலோகம் செல்ல வேண்டும். அதுதான் உலகளாவியவாதம் என்ற  துர்உபதேசத்தின் சாராம்சம். அப்படி வேதம் போதிப்பதில்லை.

லூக்கா 13:3, 5 ல் நாம் மனந்திரும்பாவிட்டால், மன்னிப்பில்லாமல் கெட்டுப் போவோம் என்று இயேசுகிறிஸ்து இந்த இரு வசனங்களிலும் கூறியிருக்கிறார். உண்மையில், பாவத்திலிருந்து மனந்திரும்புதல் என்பது பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் முழுவதிலும் விடப்பட்ட அழைப்பாகும். மனம் வருந்தாதவர்கள் நித்திய ஜீவனை அடையமாட்டார்கள். மனந்திரும்பி, விசுவாசத்துடன் தம்முடைய குமாரனிடம் திரும்புகிறவர்களை மட்டுமே தேவன் மன்னிப்பார் என்பது முடிவு.

சிலுவையில்  மனந்திரும்பிய கள்ளனுக்கு மன்னிப்பை அருளிய இயேசுகிறிஸ்து மற்றவர்களுக்கும் அதே மன்னிப்பை விரைவாக அருளியிருக்கலாம். நினைவில் கொள்ளுங்கள், பூமியில் இயேசுகிறிஸ்து பாவங்களை மன்னிக்க அதிகாரம் பெற்றிருந்தார் [மத்தேயு 9:6] மேலும் பலருக்கு மன்னிப்பை அருளினார். ஆனால் சிலுவையில், “பிதாவே, இவர்களை மன்னியும்” [லூக்கா 23:34] என்ற அவருடைய வார்த்தைகள், அனைவரையும் மன்னிக்கும் செயல் அல்ல. அதாவது அவர்கள் தேவனிடம் மனந்திரும்பவும், தங்கள் பாவங்களை அறிக்கையிடவும், கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதினால் மன்னிப்பை அனுபவிக்கவும் தூண்டப்படலாம். மனந்திரும்பாதவர்களை இயேசுகிறிஸ்து மன்னிப்பதில்லை. அவர் சிலுவையில் உண்மையாக மனந்திரும்பிய கள்ளனை மட்டுமே மன்னித்தார் [லூக்கா 23:42]! கல்லெறியப்படும்போது, “ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும்”  [அப்போஸ்தலர் 7:60] என்று ஜெபித்த ஸ்தேவானின் ஜெபமும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று.  இயேசுகிறிஸ்து அவர்களுடைய பாவங்களை மன்னிக்கும்படி ஜெபித்தார். அவரைத் துன்புறுத்தியவர்களில் ஒருவரான சவுல் [அதாவது பவுல்] கூட, தமஸ்கு பட்டணத்திற்கு  செல்லும் வழியில் மனந்திரும்பும் வரை மன்னிக்கப்படாதிருந்தார்!

ரோம நிருபத்தை எழுதிய அதே பவுல் மற்ற நிருபங்களிலும் இந்த கட்டளைகளை எழுதினார்:

ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” [எபேசியர் 4:32].

“ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” [கொலோசேயர் 3:13]. 

மேலே உள்ள அனைத்து சொற்றொடர்களிலும் உள்ள பொதுவான இணைப்பு என்னவென்றால் கர்த்தர் மன்னிப்பது போல் மன்னிப்பதாகும். மனந்திரும்புதலின் மூலமேயல்லாமல் வேறு வழிகளில் கர்த்தர் மன்னிப்பதில்லை!

எனவே, மன்னிப்பு விஷயத்தில் நாம் தேவனைப் பின்பற்ற வேண்டுமானால், உண்மையான மனந்திரும்புதல் இருக்கும்போதுதான் நாமும் மன்னிக்க முடியும். ஆனால், நாம் எப்போதும் மன்னிக்க தயாராக இருக்க வேண்டும், இதனால் ஒப்புரவிற்கான கதவு திறந்தே இருக்கும். ஆனால் மனந்திரும்புதல் இல்லாத போது நாம் மன்னிப்பை அளிக்க முடியாது. அப்படி மன்னித்தால், இந்த விஷயத்தில் தேவனைப் பின்பற்றத் தவறி,  அவருடைய நீதியைப் பற்றியும், மனந்திரும்புதலின் அவசியத்தைப் பற்றியும் உணர்த்துவிக்கத் தவறுகிறோம்.

கசப்பும், வெறுப்பும் நம்மைக் கட்டுப்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல மனந்திரும்புதல் இல்லாத இடத்தில் மன்னிப்பு வழங்குவதும் வேதத்திற்கு எதிரானது என்பது உண்மை. பழிவாங்காமல் இருப்பதையும், நம்மைக் காயப்படுத்தியவருக்கு நன்மை செய்வதையும், அந்த நபரை தேவனின் கையில் ஒப்படைப்பதையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. அவை தனித்தனியான பிரச்சினைகள்.

மன்னிக்காவிட்டால் அடுத்திருக்கும் ஒரே வழி கசப்புணர்வு என்ற கருத்தோடு நாம் குழப்பமடையக்கூடாது. ஒன்று நாம் மன்னிக்க வேண்டும் அல்லது நான் கசப்போடு இருக்க வேண்டும் என்பது உண்மை இல்லை. ஒருவர் மனந்திரும்பாதபோதும், அதே சமயம் நாம் கசப்பாக இருக்கும்போதும் மன்னிக்க முடியாது. நாம் எப்போதும் மன்னிக்க தயாராக இருக்க வேண்டும், அதுதான் அழைப்பு.  அதைத்தான் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆம், மனந்திரும்புதல் இல்லாத இடத்தில், நம் இருதயங்களில் கசப்பு ஏற்படாமல் பாதுகாப்பது ஒரு போராட்டமாகும். ஆனால், பரிசுத்த ஆவியின் பலத்துடன், நம்முடைய இருதயங்களை கசப்பிலிருந்து பாதுகாக்க நாம் ஜெபத்தின் மூலமும், வேதவசனங்களை தியானிப்பதன் மூலமும் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். இது ஒரு போர்- சில சந்தர்ப்பங்களில் வாழ்நாள் முழுவதும் கூட நடக்கலாம். ஆனாலும், நியாயத்தீர்ப்பை நம் கையில் எடுக்க மறுக்க வேண்டும். நீதியுள்ள தேவனின் கரங்களில் நாம் அதை விட்டுவிட வேண்டும் [உபாகமம் 32:4]! அதே சமயம், நம்மைக் காயப்படுத்தியவர்களுக்கு முடிந்தவரை நன்மையைச் செய்துக் கொண்டே இருக்க வேண்டும்.

மக்கள் நமக்கு எதிராக செய்யும் ஒவ்வொரு சிறிய பாவத்திற்கும் அவர்கள் மனந்திரும்ப வேண்டும் என்று நான் கூறவில்லை. மற்றவர்களின் பலவீனங்களை சகித்துக்கொள்வது போன்ற சில சிறிய விஷயங்களை கண்டுக்கொள்ளாமல் இருக்க முற்பட வேண்டும். இது விசுவாச முதிர்ச்சியின் ஒரு பகுதியாகும்.  நாமும் பல தோல்விகளுக்கு ஆளாகி இருக்கிறோம். பாவத்தின் அளவு கடுமையானதாக இருக்கும்போது, அதைச் செய்தவர் மனந்திரும்புவதற்காக நாம் அன்புடன்  எதிர்கொள்ள வேண்டும்.

எனவே, எல்லா நியாயத்தீர்ப்புகளையும் தேவனின் கரங்களில் விட்டுவிடும்போது, நாம் மன்னிக்கத் தயாராக இருக்க வேண்டும், கசப்புணர்வுடன் இருக்கக்கூடாது. இந்த பகுதியில் நாம் செய்ய வேண்டும் என்று பவுல் விரும்பும் இந்த 3 வது விஷயத்தின் கருத்து இதுதான்.

இந்த பதிவை முடிக்கும்போது, ​​நம்மை காயப்படுத்தியவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் நாம் செய்ய வேண்டிய 3 விஷயங்களை நினைவில் கொள்ளக்கடவோம்:

1. பழிவாங்காமல் இருக்க வேண்டும்.

2. அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும்.

3. எல்லா நியாயத்தீர்ப்புகளையும் தேவனின் கரங்களில் விட்டுவிட வேண்டும்.

இறுதியாக கிறிஸ்துவைப் போல் இருப்பதன் அர்த்தம் இதுதான், ஏனென்றால் இயேசுகிறிஸ்துவே அதைத்தான் செய்தார், “அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்” [1 பேதுரு 2:23]. இயேசுகிறிஸ்து எல்லா நேரங்களிலும் தம்முடைய எதிரிகளுக்கு மிகுந்த நன்மையைச் செய்து கொண்டிருந்தார்—அவர்களின் பாவங்களுக்கு விலைகிரயம் கொடுக்கிறார்! கிறிஸ்துவின் சாயலாக நம்மை மாற்றக்கூடிய பரிசுத்த ஆவியானவரை விசுவாசித்து அவரைப் பின்பற்ற முற்படுவோமாக.

Category
Subscribe
Notify of
guest
0 கருத்துக்கள்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments