மறுரூபமாக்கப்பட்ட வாழ்க்கை—பகுதி 2 நம் மனதை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தல்

(English version: “The Transformed Life – Offering Our Minds To Christ”)
ரோமர் 12:1 ல் தேவனின் இரக்கத்தைப் பெற்றதன் விளைவாக, தங்கள் சரீரங்களை ஜீவ பலியாகச் செலுத்த விசுவாசிகளை அழைத்த பிறகு, பவுல் ரோமர் 12:2 ல், “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று, பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” என கூறுகிறார்.
மனதை தேவனிடம் ஒப்படைக்கவில்லை என்றால், தான் விரும்புவதை செய்யும் மனதை பரிசுத்தமான, மகிழ்ச்சியான பலியாகத் தேவனுக்குச் செலுத்த முடியாது! அதனால்தான், விசுவாசிகள் உண்மையான மறுரூபத்தை நாடினால், கிறிஸ்துவுக்கு தங்கள் மனதை அர்ப்பணிக்குமாறு பவுல் அழைக்கிறார். மருத்துவ உலகில், “நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதைப் போன்றே நீங்கள் இருக்கிறீர்கள்” சொல்லப்படுகிறது. அதுபோலவே, ஆவிக்குரிய உலகில், “நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே இருக்கிறீர்கள்” என்று வேதம் கூறுகிறது. எனவே, பவுல் நமது எண்ணங்கள் அனைத்திற்கும் ஆதாரமான மனதைக் குறிப்பிடுவது மட்டுமல்லாமல், அதை தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அப்போதுதான் சரீரத்தை மகிழ்ச்சியான பலியாக ஒப்புக்கொடுக்க முடியும்.
இந்த வசனத்தை, சாராம்சத்தில், 3 பகுதிகளாகப் பிரிக்கலாம்: இந்த மூன்று பகுதிகளில் இரண்டு பகுதிகள் கட்டளைகளாகவும் அதைத் தொடர்ந்து ஒரு பகுதி இந்த கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் விளைவாகவும் பிரிக்கப்படக்கூடும் . கட்டளை #1 எதிர்மறையில் கவனம் செலுத்துகிறது, “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரிக்க வேண்டாம்” என்ற வார்த்தைகள் நாம் என்ன செய்யக்கூடாது என்பதில் கவனம் செலுத்துகிறது. கட்டளை #2 நேர்மறையில் கவனம் செலுத்துகிறது, “உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” என்ற வார்த்தைகள் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறது, இறுதியாக, இந்த இரண்டு கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் விளைவு, “தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறிய முடியும்” இந்த ஒவ்வொரு பகுதியையும் சற்று நெருக்கமாக பார்ப்போம்.
கட்டளை #1 “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரிக்க வேண்டாம்.”
“ஒத்த வேஷந்தரித்தல்” என்ற வார்த்தையானது, ஒரு அச்சுக்குப் பிறகு இணக்கமாக, வடிவமைக்கப்பட வேண்டிய மற்றொன்றை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தையிலிருந்து வந்தது. பிசைந்த மாவை, வெவ்வேறு வடிவ ஓட்டைகள் கொண்ட தட்டில் ஊற்றினால், அது ஊற்றப்பட்ட துளையின் வடிவத்தைப் போன்ற தின்பண்டங்களை உருவாக்கும். அச்சு தட்டில் உள்ள துளை இறுதி தயாரிப்பின் வடிவத்தை கட்டுப்படுத்துகிறது. அதே போல, நம்மைக் கட்டுப்படுத்த உலகை அனுமதித்தால், உலகம் சொல்வதைப் போன்றே நாம் வாழ்ந்து விடுவோம்—அதுதான் பவுலின் கருத்து. ஜே.பி. பிலிப்ஸ் என்பவர்: “உலகம் உங்களை அதன் சொந்த அச்சுக்குள் பதிக்க விட்டுவிடாதீர்கள்” என்று கூறுகிறார்.
நாம் உலகிற்குஒத்த வேஷந்தரிக்க கூடாது என்பதற்கு குறைந்தது 4 காரணங்களை வேதம் விவரிக்கிறது.
காரணம் #1. நாம் உலகிற்கு ஒத்த வேஷந்தரிக்க கூடாது. ஏனென்றால்: அடிப்படையில், நமது மனமாற்றத்திற்கு பிறகு நாம் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.
இயேசுகிறிஸ்து, யோவான் 17:16-ல் பிதாவிடம் ஜெபித்தபோது, இந்த வார்த்தைகளை கூறினார், “நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.” எனவே, நாம் இந்த உலகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என்பதால், இந்த உலகத்திற்கு இணங்குவதற்கான அழுத்தத்தை நாம் எதிர்க்க வேண்டும்.
காரணம் #2. நாம் உலகிற்கு ஒத்த வேஷந்தரிக்க கூடாது. ஏனென்றால்: சாத்தான் இந்த உலகத்தின் தேவனாக இருக்கிறான்.
2 கொரிந்தியர் 4:4 சாத்தானை “இப்பிரபஞ்சத்தின் தேவனானவன்” என்று விவரிக்கிறது. யோவான் 14:30 இல் இயேசுகிறிஸ்து சாத்தானை “இந்த உலகத்தின் அதிபதி” என்று அழைத்தார். 1 யோவான் 5:19, “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது” என்று அறிவிக்கிறது. எனவே, நாம் இந்த உலகத்தின் வடிவங்களுக்கு இணங்கினால், நாம் இன்னும் சாத்தானின் கட்டுப்பாட்டில் இருப்பது போலவும், அவனுடைய வல்லமையிலிருந்து நாம் விடுவிக்கப்படாதது போலவும் வாழ்கிறோம்.
காரணம் #3. நாம் உலகிற்கு ஒத்த வேஷந்தரிக்க கூடாது. ஏனென்றால்: இந்த உலகம் அழிந்துப்போக கூடிய ஒன்று.
1 யோவான் 2:17, “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” என்று கூறுகிறது. அதனால்தான் 1 யோவான் 2:15 ல், இந்த கட்டளையை கொடுத்தார்: “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.” நாம் உலகத்துடன் ஒத்துப்போகும் வாழ்க்கை முறையை வெளிப்படுத்துபவர்களாக இருந்தால், நாம் பிதாவாகிய தேவனை உண்மையாக நேசிப்பதில்லை என்பது அதன் அர்த்தம் என்னவென்றால் நாம் உண்மையில் இரட்சிக்கப்படவில்லை என்பதாகும், முடிவில் உலக மக்களுடன் சேர்ந்து நாமும் அழிந்து போவோம்.
காரணம் #4. நாம் உலகிற்கு ஒத்த வேஷந்தரிக்க கூடாது. ஏனென்றால்: சாட்சியின் வாழ்வை இழந்து போவோம்.
நாம் “உலகின் ஒளி” [மத்தேயு 5:14] என்பதால் இயேசுகிறிஸ்து நம்மை அவருடைய சாட்சிகளாக அழைக்கிறார். நாம் உலகைப் போல் வாழ்ந்தால், பகிர்ந்து கொள்ள நம்மிடம் ஒளி இருக்காது. இந்த இருண்ட உலகில் தேவன் நம்மை விட்டுச் சென்ற நோக்கத்தை இது தோற்கடிக்கிறது.
எனவே, நாம் ஜீவ பலிகளாக இருக்க வேண்டுமானால், உலகத்திற்கு ஒத்த வேஷந்தரிப்பதற்கான அழுத்தத்தை தொடர்ந்து எதிர்க்க வேண்டும் என்று பவுல் வலியுறுத்துவதை இந்த 4 காரணங்களின் மூலம் நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால், அது மட்டும் போதாது, இந்த வசனத்தில் உள்ள 2வது கட்டளையாகிய நம் மனதை மறுரூபமாக்கும் தேவனிடம் “ஆம்” என்றும் சொல்ல வேண்டும். மனம் மறுரூபமாக்கப்படும்போதுதான் உண்மையானதும், நிலையானதுமான மாற்றம் ஏற்படும்.
கட்டளை #2. “உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்”
மனதை மறுரூபமாக்குவதன் மூலம் கிடைக்கப்பெறும் மாற்றமானது நம் முயற்சிகளால் கொண்டு வரக்கூடிய ஒன்றல்ல. இந்த வசனத்தில் பரிசுத்த ஆவியானவரைப் பற்றி எந்த குறிப்பும் காணக்கிடைக்காவிட்டாலும் அது பரிசுத்த ஆவியானவரால் நமக்கு செய்யப்படுகிறது. “மறுரூபம்” மற்றும் “புதுப்பித்தல்” என்ற இரண்டு வார்த்தைகளை நாம் உற்று நோக்கினால் இந்த உண்மை புலப்படும்.
மறுரூபமாக்கப்படுதல். மெட்டமார்போசிஸ் [Metamorphosis] என்ற ஆங்கிலச் சொல்லை நாம் பெறுகின்ற வார்த்தை . கம்பளிப்பூச்சி எப்படி பட்டாம்பூச்சியாக மாறுகிறது அல்லது தேரை தவளையாக மாறுகிறது என்பதை விவரிக்க இது பயன்படுத்தப்படுகிறது. இது ஒருவரின் வடிவத்தை மாற்றும் எண்ணம் கொண்டது. இது புதிய ஏற்பாட்டில் 2 முறை காணப்படுகிறது.
முதல் நிகழ்வு மத்தேயு 17:2 ல் காணப்படுகிறது, இந்த வார்த்தை இயேசு மறுரூப மலையில் பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோருக்கு முன்பாக மறுரூபமாக்கப்பட்டதை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது. இரண்டாவது நிகழ்வானது 2 கொரிந்தியர் 3:18 ல் உள்ளது, அங்கு நாம் இவ்வாறு வாசிக்கிறோம், “நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.”
விசுவாசிகள் கிறிஸ்துவின் மகிமையைப் பற்றி அதிகம் சிந்திப்பதால், பரிசுத்த ஆவியானவர் படிப்படியாக விசுவாசிகளை கிறிஸ்துவைப் போல் மாற்றுவதைப் பற்றிய விளக்கத்தை இங்கே காணலாம்.
புதுப்பித்தல். இந்த வார்த்தை புதிய ஏற்பாட்டில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே வருகிறது. முதலாவதாக தீத்து 3: 5 ல் காணப்படுகிறது, “நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.” மறுபிறப்பு மற்றும் புதுப்பித்தலுக்கு யார் காரணம் என்பதைக் கவனியுங்கள்: பரிசுத்த ஆவியானவர் தாமே மறுரூபமாக்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய இரண்டையும் செய்கிறார். ரோமர் 12:2 ன் மொழி அமைப்பைக் கருத்தில் கொண்டு, மனதை மறுரூபமாக்குவதும் புதுப்பிப்பதும் செயலாற்றும் அர்த்தத்தில் உள்ளது, பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே நமது எண்ணங்களிலும், இறுதியில் நமது செயல்களிலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
எனவே, நம் மனதை மறுரூபமாக்கும் பரிசுத்த ஆவியானவரின் பணிக்கு அடிபணியுமாறு பவுல் விசுவாசிகளை அழைக்கிறார். இப்போது, இந்த சத்தியத்தைப் புரிந்துகொள்வது இன்றியமையாதது: பரிசுத்த ஆவியானவர் மறுரூபமாக்கும் வேலையைச் செய்தாலும், அவருக்குக் கீழ்ப்படிவதில் நாம் இன்னும் நம் பங்கைச் செய்ய வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நம் மனதை மாற்ற அனுமதிக்க வேண்டும். அவர் நம் விருப்பத்திற்கு மாறாக நம்மை மாற்ற மாட்டார். இங்கும் மனிதப் பொறுப்பு உள்ளது.
நாம் ஜீவ பலியாக இருக்க விரும்பினால், நம் மனதை முழுவதுமாக கர்த்தரிடம் அர்ப்பணிப்பதன் மூலம் நமது சிந்தனையில் மாற்றத்தை நாம் விரும்ப வேண்டும். மனம் புதுப்பிக்கப்பட வேண்டும், ஏனென்றால், மனமாற்றத்திற்கு முன், மனம் சிதைந்த நிலையில் இருந்தது [எபேசியர். 4:18]. மனமாற்றத்தில், புதுப்பித்தல் செயல்முறையைத் தொடங்குகிறார். மேலும் இந்த மனதைப் புதுப்பிக்கும் செயல்முறையானது வாழ்நாள் முழுவதும் நடைபெறும் செயல்முறையாகும், அது ஒரு நாள், நாம் கிறிஸ்துவைப் போல் முழுவதுமாக ஆக்கப்படும்போது முடிவடைகிறது [1 யோவான் 3:2; பிலிப்பியர் 3:20-21]—இந்த நிகழ்வை வேதம் “மகிமைப்படுத்துதல்” என்று அழைக்கிறது [ரோமர் 8:30].
கிறிஸ்துவின் மகிமைகளைப் பதிவுசெய்யும் வேதவாக்கியங்களே இந்த மறுரூபமாக்குதலை கொண்டுவர பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தும் வழிமுறைகள் என்பதையும் புரிந்துகொள்வது முக்கியம். எனவே, நம் மனதை வெளியில் மறுரூபமாக்க பரிசுத்த ஆவியானவர் வேதாகமத்தைப் பயன்படுத்துகிறார். கூடுதலாக, அவர் வேதாகமத்தைப் புரிந்துகொள்ளும் உள்ளான ஞானவெளிச்சத்தை தருகிறார் [1 கொரிந்தியர் 2:13-14]. அதன் மூலம் கிறிஸ்துவின் மகிமையை நாம் புரிந்து கொள்ள முடியும்.
வேதத்தின் சத்தியங்கள் நம்மை மீட்கின்றதும், நம்மை தொடர்ந்து பரிசுத்தப்படுத்துகின்றதுமாக இருக்கின்றது. இயேசுகிறிஸ்து தாமே, பிதாவிடம் ஜெபிக்கும்போது, “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்” என்று கூறினார் [யோவான் 17:17]. ஒருவர் தேவனுடைய வார்த்தையைப் படிக்கும்போது அவர்களின் சிந்தனையில் வேதவசனங்கள் ஆதிக்கம் செலுத்துவதை உறுதிசெய்தாலும், சத்தியங்களை நடைமுறைப்படுத்த அவர்களுக்கு உதவ தேவனிடம் பிரார்த்தனை செய்யாவிட்டால், மனம் மறுரூபமாகாது.
பல விசுவாசிகள் குறைந்தபட்ச அளவே மறுரூபத்தை அனுபவிக்கின்றனர். காரணம், அவர்கள் உலகின் பெரும்பகுதியையும் அதன் பொழுதுபோக்கையும் வெளிப்படுத்த தங்கள் மனதை அனுமதிக்கிறார்கள். நடைமுறையில் நீங்கள் அவர்களை ஒரு அவிசுவாசியுடன் அருகருகே வைத்தால், அவர்களின் வாழ்க்கை முறை, நாட்டம் மற்றும் பேச்சு ஆகியவற்றின் அடிப்படையில் வித்தியாசத்தைக் கூறுவது கடினமாக இருக்கும். அதனால்தான், வேத வாசிப்பு, ஜெபம், ஐக்கியம், ஊழியம் செய்தல், சுவிசேஷம் அறிவித்தல் மற்றும் வேதத்தை சிறப்பாக விளக்கும் எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படிப்பது போன்ற ஆவிக்குரிய துறைகளில் தங்களை அர்ப்பணிப்பதில் விசுவாசிகள் ஆர்வத்துடன் இருக்க வேண்டும். அந்த வழியில், அவர்கள் இன்னும் குறிப்பிடத்தக்க ஆவிக்குரிய மறுரூபத்தை அனுபவிக்க முடியும்.
ஆவிக்குரிய வளர்ச்சி தானாக நடக்காது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பரிசுத்தமும் தற்செயலாக நிகழ்வதில்லை. உடல் ரீதியாக முதுமை அடைவது ஆவிக்குரிய ரீதியில் வளர்வதற்கு சமமாகாது. விசுவாசிகள் தினசரி சரியான ஆவிக்குரிய ஒழுக்கங்களுக்கு தங்கள் மனதை செலுத்துவதால் மட்டுமே ஆவிக்குரிய வளர்ச்சி ஏற்படுகிறது. உலகமும் அதன் சிந்தனையும் நம் வாழ்க்கையை கட்டுப்படுத்த அனுமதித்துக்கொண்டும், அதே நேரத்தில், ஆவிக்குரிய ஒழுக்கங்களைப் பயிற்சி செய்ய முயற்சி செய்வதும் நம்மை ஆவிக்குரிய ரீதியில் வளருவதை சமமாக்கிவிடும் என்று எண்ணுவதும் சரியல்ல.
ஒரே நேரத்தில் ஆரோக்கியமான உணவை உண்ண முயற்சிக்கும்போது நாம் கெட்டுப்போன உணவையும் சாப்பிட முடியாது! உடலுக்கு ஒத்துவராதது, ஆவிக்குரிய வாழ்வில் ஆத்துமாவுக்கும் ஒத்துவராது! பரிசுத்த ஆவியானவருக்கு ‘ஆம்’ என்றும் உலகிற்கு ‘ஆம்’ என்றும் கூறி சமநிலையைக் காக்க பலர் வீணாக முயற்சி செய்கிறார்கள். வேதம் அவர்களை “விபச்சாரம் செய்பவர்கள்” என்று அழைக்கிறது [யாக்கோபு 4:4]. உலகிற்கு ‘இல்லை’ என்று சொல்லாமல் பரிசுத்த ஆவியானவருக்கு ‘ஆம்’ என்று சொல்வது மிகப்பெரிய ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும்.
எனவே, பரிசுத்த ஆவியானவரின் மறுரூபமாக்கும் வேலைக்கு நம் மனதைக் கொடுக்கும்போது, தெய்வ பக்தியை பயிற்றுவிக்க நம்மை இந்த நாளிலிருந்து நாம் தீர்மானிக்க வேண்டும். பிலிப்பியர் 4:8-ன் சத்தியங்களை நாம் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்: “கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.” நாமே நமது சிந்தனையின் விளைபொருள்! நமது மனதை சரியான எண்ணங்களால் நிரப்புவது அவசியம்.
இருப்பினும், வெளிப்புறமாக தீமை செய்யாத பலர், காமம், வெறுப்பு, பிறருக்கு தீமை செய்ய விரும்புவது, பேராசை, உலக வெற்றி, அதிகாரம், பொறாமை போன்ற உள்நிலைகளில் பாவம் செய்கின்றனர். செயல்படுத்தாமல், சிந்திப்பதில் பெரிய பிரச்சினை இல்லை என நினைத்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளலாம். தேவன் சிந்தனைகளையும் நியாயந்தீர்க்கிறார் என்பதையும், ஜீவ பலியானது சுத்தமான மனதையும் உள்ளடக்கியது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்! மேலும், விரைவிலோ அல்லது பின்னரோ, நம் எண்ணங்களைச் செயல்படுத்தும் ஆபத்து எப்போதும் உள்ளது. நம் எண்ணங்களைப் போன்றே நாம் இருக்கிறோம்!
எனவே, இங்கு காணப்படும் அழுத்தமானது, பரிசுத்த ஆவியானவரால் தொடர்ந்து மறுரூபமாக்கப்பட்டு புதுப்பிக்கப்படுவதற்கு நம் மனதைக் கொடுப்பதாகும். அப்படி கொடுப்பதற்கான விளைவை பற்றி இந்த வசனத்தின் 3வது பகுதி தெளிவாகக் கூறுகிறது.
# 1 மற்றும் # 2 கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் விளைவானது. “தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறிய முடியும்” என்பதாகும்.
“பகுத்தறிதல்” என்ற வார்த்தையானது உலோகங்களின் மதிப்பை தீர்மானிக்க சோதனை செய்யும் செயல்முறையை விவரிக்க பயன்படுத்தப்பட்டது. பவுல் இங்கு கூறுவது அடிப்படையில் இதுதான்: தேவனின் சத்தியத்தால் புதுப்பிக்கப்படுவதற்கு நம் மனதைக் கொடுக்கும்போது, நம் வாழ்க்கைக்கான “நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று” தீர்மானிக்க முடியும். இங்கே தேவனின் சித்தம் என்பது வேதத்தின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தப்பட்ட சித்தத்தைப் பற்றிய அதிக புரிதலையும், அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளில் தேவனுடைய சித்தத்தைப் பற்றிய தெளிவான புரிதலையும் உள்ளடக்கியது.
அவசரமாக வேதத்தைப் படிப்பதும், ஒரு வசனத்தையோ அல்லது ஒரு பகுதியையோ தியானிக்க மிகவும் அரிதாகவே நேரம் ஒதுக்குவதும், உடல் களைப்போடும், கண்கள் பாதித் தூக்கத்தில் இருக்கும் போதும் சில நிமிட ஜெபமும் மனம் புதிதாக்குதலை நாடினால் பயனில்லை. அப்படிப்பட்ட வாழ்க்கை முறையில் நாம் இருந்தால், அதற்காக வருந்த வேண்டும். வேதவசனங்களை முறையாக வாசிப்பதற்கும் ஜெபிப்பதற்கும் நேரம் கொடுப்பதன் முக்கியத்துவத்தை நம்மில் தூண்டும்படி நாம் தேவனிடம் கேட்க வேண்டும். நேரமில்லை என்ற கேள்விக்கே இடமில்லை. நாம் விரும்புவதை அல்லது முக்கியமாகக் கருதுவதைச் செய்ய எப்போதும் நேரத்தைக் கண்டுபிடித்துவிடுவோம். பரிசுத்த ஆவியானவரால் நம் மனதை மறுரூபமாக்குவதை விட முக்கியமானது வேறு ஏதாவது இருக்க முடியுமா?
மக்கள், பெரும்பாலும் தங்கள் வாழ்க்கையில் தேவனின் சித்தத்தை அறிய முற்படுகிறார்கள், அதே நேரத்தில் தங்கள் சரீரத்தையும் மனதையும் ஜீவ பலியாக கொடுக்க மறுக்கிறார்கள். தெளிவாக வெளிப்படுத்தப்பட்ட கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய அப்பட்டமாக மறுக்கும் போது, வாழ்க்கைப் பிரச்சினைகளில் தேவன் அவர்களை எப்படி வழிநடத்துவார்? எனவே, நம் வாழ்வில் தேவனின் சித்தத்தை அனுபவிக்க விரும்பினால், 24∕7 மணிநேரமும் தேவனுக்கு நம் சரீரத்தையும் மனதையும் அர்ப்பணிப்பது இன்றியமையாதது. ஆனால் அது அந்த நோக்கத்திற்காக மட்டுமல்ல. அவரைப் பிரியப்படுத்தும் விதமான ஆராதனை செய்வதற்குமான ஒரே வழி இதுதான். அவருடைய இரக்கங்களையும்-குறிப்பாக சிலுவையில் காட்டப்படும் அவருடைய இரக்கத்தை ருசிப்பதற்கு அதுவே சிறந்த ஒரே பதிலாக இருக்கிறது. ஏனென்றால், நாம் நரகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருடன் பரலோகத்தில் நித்திய ஜீவனை அனுபவிக்கும்படி, தேவ குமாரன் நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை சிலுவையில் சுமந்தார்.