மறுரூபமாக்கப்பட்ட வாழ்க்கை—பகுதி 3 ஒருவருக்கொருவர் உதவி செய்ய நமது ஆவிக்குரிய வரங்களைப் பயன்படுத்துதல்

Posted byTamil Editor April 30, 2024 Comments:0

(English version: “The Transformed Life – Using Our Spiritual Gifts To Serve One Another”)

ரோமர் 12: 1-2 ல் தேவனுடைய இரக்கத்தின் வெளிச்சத்தில் அவருக்கு ஜீவனுள்ள பலிகளாக தங்கள் சரீரங்களையும் மனதையும் ஒப்புக்கொடுக்கும் விசுவாசிகளைப் பற்றி பவுல் பேசுகிறார். ரோமர் 12:3 முதல் அதிகாரத்தின் மற்ற பகுதிகள் வரை, விசுவாசிகளின் பொறுப்பை மக்களுக்கு அவர் எடுத்துரைக்கிறார்.

மேலும் ரோமர் 12:3-8 ல், உள்ளூர் சபையில் ஒருவருக்கொருவர் சேவை செய்ய நமது ஆவிக்குரிய வரங்களை பணிவுடன் பயன்படுத்துவதற்கான நமது பொறுப்பை அவர் குறிப்பிடுகிறார். இருப்பினும், இந்த வசனங்களைப் பார்ப்பதற்கு முன், 1 கொரிந்தியர் 12:7-ல் இருந்து ஆவிக்குரிய வரங்களைப் பற்றிய 4 அடிப்படை சத்தியங்களைக் கற்றுக்கொள்வோம், “ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.”

சத்தியம் # 1. ஒவ்வொரு விசுவாசிக்கும் ஆவிக்குரிய வரம்[ங்கள்]: “இப்போது  ஒவ்வொருவருக்கும் ஆவியின் வெளிப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.”

சத்தியம் # 2. ஆவிக்குரிய வரங்கள் ஒரு வெகுமதியாக “வழங்கப்படுகின்றன.” அவற்றை சம்பாதிக்கவோ, வலியுறுத்தி வாங்கவோ முடியாது. 

சத்தியம் # 3. பரிசுத்த ஆவியானவர் ஆவிக்குரிய வரங்களை அளிப்பவர்: ஆவியானவரால் வெளிப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.”

 சத்தியம் # 4. ஆவிக்குரிய வரங்கள் மற்றவர்களின் நலனுக்காக வழங்கப்படுகின்றன: பொது நன்மைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.”

எனவே, இந்த வசனத்தின் சத்தியங்களை சுருக்கமாக கூறுவதென்றால்: ஆவிக்குரிய வரம் என்பது மற்றவர்களுக்கு சேவை செய்யும் நோக்கத்திற்காக ஒவ்வொரு விசுவாசிக்கும் பரிசுத்த ஆவியானவரால் வழங்கப்படும் ஒரு சிறப்புத் திறன் ஆகும். ரோமர் 12:3-8 ன் படி, விசுவாசிகளை அடையாளப்படுத்த 3 மனப்பான்மைகள் இருக்க வேண்டும், அவை விசுவாசிகள் தங்களுக்கு தேவன் கொடுத்த ஆவிக்குரிய வரங்களின் மூலம் ஒருவருக்கொருவர் சேவை செய்ய மருரூபமாக்கப்பட்ட வாழ்க்கையை வாழ முற்படுவதைக் குறிக்க வேண்டும்.

அணுகுமுறை # 1. மனத்தாழ்மை [ரோமர் 12:3]

உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.

ஆவிக்குரிய வரங்களைப் பயன்படுத்தும்போது, மருரூபமாக்கப்பட்ட வாழ்க்கையை அடையாளப்படுத்த வேண்டிய அடிப்படை அணுகுமுறை மனத்தாழ்மையாகும்—அங்கே நம்மைப் பற்றிய உயர்ந்த கருத்தைக் கொண்டிருப்பதற்கு இடமில்லை, “தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல்.” நாம் அனைவரும் இன்றியமையாதவர்கள், என்றாலும் “தேவன் தமது வேலையாட்களை புதைத்துவிட்டுத் தம் வேலையைத் தொடர்கிறார்!” என்று ஒரு பழமொழி உண்டு. தேவனின் மக்கள் மறைந்த பிறகும் தேவனின் சபை செயல்பாட்டில் இருக்கிறது என்பதற்கு அந்த கல்லறை சான்றாக இருக்கிறது.

1 கொரிந்தியர் 4:7 ஆம் வசனம் நம் வாழ்வில் நடக்கும் அனைத்தும் தேவனுடைய கிருபையால் தான் நடக்கிறது என்று நமக்கு நினைவூட்டுகிறது, “அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?” இந்த வசனம், பெருமை பேசுவதற்கோ அல்லது நமது திறமையைப் பற்றி மேன்மை உணர்வை வளர்த்துக் கொள்வதற்கோ இடமில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. நம்மிடம் இருப்பதெல்லாம், இராஜரீகமுள்ள தேவன் மற்றவர்களின் நன்மைக்காகவும், இறுதியில் அவருடைய மகிமைக்காகவும் நமக்குப் வரங்களை வழங்கத் தேர்ந்தெடுத்ததன் விளைவாக கொடுக்கப்பட்டிருக்கிறது!

மக்கள் தங்களைப் பற்றித் தாங்கள் உயர்வாக நினைப்பதைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல், தங்களைப் பற்றி சரியான முறையில் சிந்திக்கவும் பவுல் அழைப்பு விடுக்கிறார், “அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்” தேவன் நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்த விசுவாசத்திற்கு ஏற்ப நம்மைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

நம்மைப் பற்றிய உயர்வான பார்வையை நாம் கொண்டிருக்கக் கூடாது என்றாலும், நம்மைப் பற்றிய ஆரோக்கியமற்ற கண்ணோட்டத்தையும் நாம் கொண்டிருக்க கூடாது, இது பெரும்பாலும் தவறான மனத்தாழ்மையின் அடையாளமாகும்.  ஒரு மனிதன் தனது போதகரிடம் சென்று, “போதகரே, நான் ஒன்றுமில்லை என்று உணர்கிறேன்!” என்று தனது பணிவைக் காட்ட முயலுகையில், உடனே அதைப் பிடித்துக்கொண்ட போதகர், “தம்பி, நீ ஒன்றுமில்லை தான்! என்றாலும் அதையே விசுவாசமாக எடுத்துக் கொள்!” என்று கூறினாராம்.

பவுலின் கருத்து என்னவென்றால், நம்மிடம் இருப்பதெல்லாம் தேவனிடமிருந்து கிடைக்கப்பெற்ற வரம் என்பதை அறிந்து, நம்மைப் பற்றிய சரியான மற்றும் ஆரோக்கியமான பார்வையை நாம் கொண்டிருக்க வேண்டும்! ஒவ்வொரு விசுவாசியும் தேவனின் பிள்ளையாகவும், அவரால் வரமளிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். நமது ஆவிக்குரிய வரங்களை மனத்தாழ்மையுடன் பயன்படுத்துவதே நமது பொறுப்பு. நம்முடைய வரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மற்றவர்களுக்கு உதவி செய்ய முற்படும்போது நம்மை அடையாளப்படுத்த வேண்டிய முதல் மற்றும் அடித்தளமான அணுகுமுறை இந்த தாழ்மையாகும்.

அணுகுமுறை # 2. ஒற்றுமை [ரோமர் 12:4-5]

ஏனெனில், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இராததுபோல, அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்.

தாழ்மை மட்டுமல்ல, ஒற்றுமை மனப்பான்மையும் மற்றவர்களுக்கு சேவை செய்ய முற்படும்போது நம்மை அடையாளப்படுத்த வேண்டும். கிறிஸ்துவின் சரீரத்தில் பல வேறுபாடுகள் இருந்தாலும், இறுதிப் பகுப்பாய்வில், கிறிஸ்துவுடன் ஐக்கியப்பட்டதன் விளைவாக நாம் அனைவரும் ஒரே சரீரமாகவும், ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு சொந்தமானவர்களாகவும் இருக்கிறோம். மேலும், அந்த சத்தியத்தை நாம் நினைவுகூரும்போது, நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து ஒற்றுமைக்காக பாடுபடுவோம். சரீரத்தின் ஒவ்வொரு உறுப்புக்கும் மற்ற உறுப்புகள் தேவைப்படுவது போல் நமக்கும் மற்றவர்கள் தேவை.

1 கொரிந்தியர் 12:15-26 ல், ஒவ்வொரு விசுவாசிக்கும் கிறிஸ்துவின் சரீரத்திற்குள் மற்றவர்கள் எவ்வாறு அவசியப்படுகிறார்கள் என்பதை விளக்குவதற்கு பவுல் ஒப்பனையாக சரீரத்தைப் பயன்படுத்துகிறார். இதன் விளைவாக, அவர் இந்த அழைப்பு விடுக்கிறார்: “சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்” [1 கொரிந்தியர் 12:25].

வேதாகம அடிப்படையிலான ஒற்றுமையே நமது இலக்காக இருக்க வேண்டும்.—நாம் ஒன்றாக காயப்படுகிறோம்; ஒன்றாக மகிழ்ச்சியடைகிறோம்—ஒரு மனித உடலில், ஒரு உறுப்பு வலித்தால், முழு உடலும் வலியை உணர்கிறது மற்றும் நேர்மாறாகவும் நடக்கின்றது. சரீரத்திற்குள் ஐக்கியம் மிகவும் முக்கியமானது, யோவான் 17:21 ல், இயேசுகிறிஸ்துவே நம்முடைய ஒற்றுமைக்காக ஜெபித்தார், “நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். எபேசியர் 4:3 ல், “சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள். என்ற வார்த்தைகளின் மூலம் நாம் ஒற்றுமையைத் தொடர வேண்டும் என்று பவுல் வலியுறுத்தினார். விசுவாசிகளுக்குள் ஒற்றுமையைக் காக்க முயற்சி தேவை!

அணுகுமுறை # 3. உண்மைத்தன்மை [ரோமர் 12:6-8]

நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன். ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும், புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்து கொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்

மேலே உள்ள பட்டியலானது பரிசுத்த ஆவியானவரால் கொடுக்கப்பட்ட அனைத்து ஆவிக்குரிய வரங்களின் முழுமையான பட்டியலல்ல. 1 கொரிந்தியர் 12:28-30, எபேசியர் 4:11, மற்றும் 1 பேதுரு 4:11 போன்ற பிற பகுதிகள் கூடுதல் விவரங்களை அளிக்கின்றன. இங்குள்ள அடிப்படைக் கருத்து என்னவென்றால், பரிசுத்த ஆவியானவர் கொடுத்த வரம் அல்லது வரங்கள் ஒவ்வொரு விசுவாசியாலும் உண்மையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். ஒருவர் தங்கள் வரங்களை புதைக்கவோ அல்லது அவற்றைப் பயன்படுத்தும்போது சோம்பேறியாகவோ இருக்க முடியாது. மற்றவர்களுக்கு பிரயோஜனமாக இருப்பதற்காக வரங்கள் அளிக்கப்படுகின்றன. மேலும், இந்த வசனங்களில் பவுல் கொடுக்கும் பட்டியலைப் பார்த்தால், நீங்கள் விசேஷடான ஏதாவது ஒன்றை கவனித்தீர்களா? வேதாகமத்தில் உள்ள மற்ற வசனப் பகுதிகளின்படி, பட்டியலில் உள்ள அனைத்தும் ஒவ்வொரு விசுவாசிக்கும் அவசியமானவையாகும். ஒவ்வொரு விசுவாசியும் மற்றவர்களுக்கு வேதாகமத்தைப் பற்றி சொல்ல வேண்டும், மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும், மற்றவர்களுக்கு கற்பிக்க வேண்டும், மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும், மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும், மற்றவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும். இந்த சிறப்பு வரங்களை உடையவர்கள் இன்னும் அதிகமாக செயல்பட அழைக்கப்படுகிறார்கள்!

நமக்குக் கொடுக்கப்பட்ட வரங்களை உண்மையாகப் பயன்படுத்தாமல் இருப்பதே தற்போதைய பிரச்சினையாகும். உங்களிடம் என்ன வரங்கள் உள்ளன என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், எங்கு தேவை இருக்கிறது   என்று கண்டுபிடித்து உதவி செய்யத் தொடங்குங்கள். அந்த பகுதியில் நீங்கள் திறமையானவர் என்பதை அடிக்கடி நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். இல்லாவிடில், உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் கேளுங்கள், அல்லது எந்தெந்த பகுதிகளில் சேவை செய்ய உங்கள் இருதயம் உங்களைத் தூண்டுகிறது என்பதைக் கண்டறிந்து அதைச் செய்யுங்கள். தேவன் சரீரத்தின் அவயவங்களை ஒன்றாக இணைத்துள்ளார், அதனால் ஆவிக்குரிய வரங்களை மறைக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் வெளியில் கொண்டு வந்து பயன்படுத்த வேண்டும்

 எனவே, தாழ்மை, ஒற்றுமை மற்றும் உண்மைத்தன்மை ஆகியவற்றை நாம் உடையவர்களாக இருந்து, ஒருவருக்கொருவர் நமது ஆவிக்குரிய வரங்களின் மூலம் உதவி செய்து, மருரூபமாக்கப்பட்ட வாழ்வை வாழ முயலும்பொழுது இந்த 3 அணுகுமுறைகளும்  நம்மை அடையாளப்படுத்த வேண்டும்.

 இறுதி சிந்தனைகள்

முக்கிய விஷயம் என்னவென்றால் நாம் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாழக்கூடாது. நமது ஆவிக்குரிய வரங்களை நாம் தனிமையில் பயன்படுத்த முடியாது. அவை மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும். அதனால்தான் ஒரு உள்ளூர் சபையில் இணைந்திருப்பதும், சபை கூடும் போது கலந்துகொள்வதும் அவசியம். இதன் பொருள் என்னவென்றால் ஞாயிறு காலை ஆராதனையிலும், சபை கூடும் பிற சந்தர்ப்பங்களிலும் [வேதாகம ஆய்வுகள், பிரார்த்தனை கூட்டங்கள் போன்றவை] கலந்துகொள்வதும் அவசியம். சபை கூட்டங்களுக்கு வெளியே மற்ற விசுவாசிகளை அணுகுவதும் இதில் அடங்கும். நாம் கிறிஸ்துவைப் போலாக வேண்டும் என்பதே தேவனின் குறிக்கோளாகும். சமூக வாழ்க்கையோடு இணைந்தாலொழிய அது நடக்காது. நம்முடைய ஆவிக்குரிய வரங்களை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் ஒருவருக்கொருவர் தேவனுடைய கட்டளைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பல விசுவாசிகள் தங்கள் ஆவிக்குரிய வரங்களை திறம்பட பயன்படுத்தாததற்கான சில காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • பெருமை. “நான் விரும்பும் விதமாக எல்லாரும் இருக்க வேண்டும். இல்லையென்றால், நான் உதவி செய்ய மாட்டேன்.” அல்லது “நான் அங்கீகரிக்கப்படவில்லை என்றால், உதவி செய்ய மாட்டேன்.” அல்லது தோல்வி பயமும் இதோடு கூட இணைந்து கொள்கிறது, “நான் தோல்வியடைந்தால் என்ன செய்வது? மற்றவர்கள் முன் நான் எப்படி பார்க்கப்படுவேன்?” தேவன் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார் என்பதை விட மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதில் அதிக விழிப்புணர்வு!
  • சோம்பல். உதவி செய்வதற்கு முயற்சி தேவைப்படுகிறது. தேவனின் பணிக்கு “ஆம்” என்று சொல்லும்போது சில சூழ்நிலைகளுக்கு “இல்லை” என்று சொல்ல நேரிடும். ஞாயிற்றுக்கிழமைகளில் தங்களை காட்டிக்கொள்வதே மிகச் சிறந்த காரியம் என்பதுதான் இன்று பல விசுவாசிகளின் அணுகுமுறையாக இருக்கிறது. அதிக திறமை உள்ளவர்கள் தேவையான உதவிகளை செய்யட்டும் என்று பலர் இருந்து விடுகின்றனர். வரங்களை வைத்திருப்பது மட்டுமே பயன்படுத்துவோம் என்று அர்த்தமல்ல. நாம் நமது முழு முயற்சியுடன் மேற்கொள்ள வேண்டும். சோம்பேறித்தனம் இன்று விசுவாசிகளிடையே ஒரு துன்புறுத்தும் பாவமாக காணப்படுகிறது.
  • ஊக்கமின்மை. இதற்கான காரணங்கள் ஏராளமுண்டு, “விளைவுகளை காணாமல் இருப்பதும்  அல்லது குறைந்த விளைவுகளை காண்பதும்; எனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன; அதனால், என்னால் மற்றவர்களைப் பற்றி நினைக்க முடியாது என்பதும் இதன் காரணங்களாகும்.”     
  • தவறான முன்னுரிமைகள். உலகப் பிரகாரமான காரியங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குவது. மற்றநாட்களின் காரியங்களுக்கு அனைத்து ஆற்றலும் மக்களிடம் உள்ளது. இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை காலை வந்ததும், மற்றவர்களுக்கு உதவி செய்ய மிகவும் சோர்வாக இருக்கிறது! ஏனென்றால் நான் பல உலகப் பிரகாரமான காரியங்களுள் பெரிதும் இணைந்திருக்கிறேன். பல அலுவலில் ஈடுபடுவது மட்டுமே வாழ்க்கையை நடத்துவது எப்போதும் ஆவிக்குரிய ரீதியில் பலனளிப்பதாக அர்த்தமல்ல. நாம் எதில் பிஸியாக இருக்கிறோம்? “அவை நித்திய முக்கியத்துவம் வாய்ந்தவையா?” என்பது ஒவ்வொரு விசுவாசியும் தொடர்ந்து கேட்க வேண்டிய ஒரு தேடல் கேள்வியாகும்.

ஒருவர் எப்பொழுதும் சாக்குப்போக்குகளைக் கூறலாம், அவர்கள் ஏன் தங்கள் ஆவிக்குரிய வரங்களைப் பயன்படுத்துவதில்லை என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் உண்மை இதுதான்: நம்மையே வெறுத்து, எப்பொழுதும் அவரைப் பின்பற்றும்படி கர்த்தர் நம்மை அழைக்கிறார். உங்கள் ஆவிக்குரிய வரங்களைப் பயன்படுத்தும்போது எப்போதும் ஒரு இழப்பு இருக்கும். இருப்பினும், அவருடைய பிள்ளைகள் என்ற நமது அழைப்பை நிறைவேற்றுவதிலிருந்து அது நம்மைத் தடுக்கக்கூடாது. இரட்சிக்கப்பட்ட மக்கள் மற்றவர்களுக்கு சேவை செய்கிறார்கள்! சுவாரசியமான வரங்கள் ஒருவரிடம் இல்லை என்பது ஒரு முக்கிய விஷயம் இல்லை, ஆனால் தேவன் நமக்குக் கொடுத்த வரத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்!

மத்தேயு 25:14-30 ல் உள்ள தாலந்துகளின் உவமையில் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளை நினைவில் வையுங்கள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தாலந்துகள் கொடுக்கப்பட்டன. ஒருவனுக்கு 5, ஒருவனுக்கு 2, மற்றொருவனுக்கு 1 மட்டுமே வழங்கப்பட்டது: “அவரவர் திறமைக்கேற்ப”  [வசனம் 15]. கிடைத்ததை நல்ல முறையில் பயன்படுத்தியவர்கள் பாராட்டப்பட்டனர். கொடுத்ததை பயன்படுத்தாதவன் கடிந்துக்கொள்ளப்பட்டான். இந்த மனிதனைப் பற்றிய இயேசுகிறிஸ்துவின் விளக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது, “பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே…  பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்  [மத்தேயு 25:26, 30], இந்த மனிதன் ஒரு உண்மையான விசுவாசி கூட இல்லை.

மறுபுறம், மற்றவர்களுக்கு உதவிச் செய்ய நம்மையே அர்ப்பணிக்கும்போது, நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் வார்த்தையாகிய “நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே” [மத்தேயு 25:21], என்பதை கேட்பது மட்டுமல்லாமல், நாம் நமது இரட்சிப்பின் நிச்சயத்தை நிகழ்காலத்திலும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்!

எனவே, இந்தப் பகுதியில் நமது ஆவிக்குரிய வரங்களைப் பயன்படுத்துவது குறித்து பவுல் நமக்குக் கற்பிப்பதில் கடுமையான தாக்கங்கள் உள்ளன. அதனால்தான் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். மனத்தாழ்மை, ஒற்றுமை மற்றும் உண்மைத்தன்மை மனப்பான்மையுடன் மக்களுக்கு உதவி செய்ய பரிசுத்த ஆவியானவர் கொடுத்த ஆவிக்குரிய வரத்தைப் பயன்படுத்துவது தான் இதற்கான தீர்வு. நாம் சிலுவையைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். இயேசுகிறிஸ்து தம்மை நமக்காகக் கொடுத்தார்! அது மற்றவர்களுக்குக் கொடுக்க நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும்

நாம் இரக்கத்தை பெற்றோம். இந்த இரக்கம் மற்றவர்களுக்கு நன்மை செய்ய அன்பில் நமது ஆவிக்குரிய வரங்களைப் பயன்படுத்த மீண்டும் நம்மை ஊக்குவிக்கட்டும். ரோமர் 12:3-8 ல் பவுலின் கருத்து இதுதான். இதை நடைமுறைப்படுத்த பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவுவாராக.

 

Category
Subscribe
Notify of
guest
0 கருத்துக்கள்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments