மறுரூபமாக்கப்பட்ட வாழ்க்கை—பகுதி 5 உற்சாகத்துடன் தேவனுக்கு ஊழியஞ்செய்தல்

Posted byTamil Editor May 28, 2024 Comments:0

(English version: “The Transformed Life – Serving The Lord Enthusiastically”)

உற்சாகத்துடன் தேவனுக்கு ஊழியஞசெய்தலே பரிசுத்த ஆவியானவர் மருரூபமாக்கும் ஒரு வாழ்க்கையின் சான்றாகும்.

மனம் புதிதாகுகிறதினாலே மருரூபமாகுங்கள் என்று விசுவாசிகளுக்கு பவுல் கட்டளையிட்ட பிறகு, ரோமர் 12:11-ல் இந்தக் கட்டளையை வழங்கினார்: “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.” மத்தேயு 25:26 ல் “அசதியாயிராமல்” என்ற வார்த்தை “சோம்பேறி” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, அங்கு இயேசுகிறிஸ்து ஒரே தாலந்தை [தங்கக்காசை] பெற்றுக்கொண்டு அதை ஒளித்து வைத்த மனிதனைக் கண்டிக்கிறார். பழைய ஏற்பாட்டிலும் “சோம்பேறிகளை” தேவன் கண்டிக்கிறார். உதாரணமாக, நீதிமொழிகள் 6:9-ல் சோம்பேறிகளை நோக்கிக் கடிந்துகொள்ளும் வார்த்தைகளைக் காண்கிறோம், “சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?” ஏசாயா 56:10 ல், இஸ்ரவேலின் ஆவிக்குரிய தலைவர்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றத் தவறியதற்காக தேவன் அவர்களைக் கடிந்துக்கொண்டார். மேலும் அந்த கண்டிப்பின் ஒரு அம்சம் அவர்களின் சோம்பேறித்தனத்தை குறிக்கிறது. “அவனுடைய காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாய்ப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்ளுகிறவர்கள், நித்திரைப் பிரியர்” எரேமியா 48:10 அதே எண்ணத்தை எதிரொலிக்கிறது, “கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்!” கவனக்குறைவாகவும், தளர்வான மனப்பான்மையுடனும் தமக்குச் சேவை செய்பவர்களிடம் கர்த்தர் பிரியப்படுவதில்லை.

நாம் தேவனுக்கு எவ்வாறு சேவை செய்கிறோம் என்பது அவருக்கு முக்கியம் என்று எபிரெயர் 12:28-29-ல் தெளிவாக்கப்பட்டுள்ளது, ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.  நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.” அதனால்தான் ஒவ்வொருவரும் தொடர்ந்து நம்மை நாமே கேட்டுக்கொள்வது அவசியம், “எனது வழிபாடு அல்லது தேவனுக்கான ஊழியம் பயத்துடன் செய்யப்படுகிறதா? அது உணர்வுடன் செய்யப்படுகிறதா? நன்றியுணர்வு, மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்துடன் செய்யப்படுகிறதா? இது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஊழியமா?” ஏன்? ஏனென்றால் தேவன் அதைக் வலியுருத்துகிறார்!

ரோமர் 12:11ல், பவுல் முக்கியமாகக் கூறுவது இதுதான்: “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்” என்றார். ஒருவருக்கு தேவன் கொடுத்த ஆவிக்குரிய வரங்களை மற்றவர்களுக்கு [ரோமர் 12:3-8] பயன்படுத்துவதற்கும், தேவனை மகிமைப்படுத்துவதும் இதில் அடங்கும்! “ஆவிக்குரிய உற்சாகம்” என்ற வார்த்தைகள் ஏதோ கொதிநிலை அல்லது கொப்பளிப்பு போன்ற கருத்தைக் கொண்டுள்ளன. பரிசுத்த ஆவியானவர்         தூண்டும் அந்த வகையான உற்சாகத்தை நாம் கொண்டிருக்க வேண்டும். பவுல் ஏதோ பைத்தியக்காரத்தனமான ஆவிக்குரிய வெறியைப் பற்றி பேசவில்லை. உற்சாகத்துடன் தேவனுக்கு ஊழியஞ்செய்ய முழு மனதுடன் தன்னை அர்பணிக்கும் வேதத்தை அறிந்த மனதின் விளைவான உள் மனப்பான்மையைப் பற்றி பேசுகிறார். அந்த வகையான இருதயம் தான் தேவனுக்கு முழு உரிமையுள்ளதாக இருக்கும். “ஊழியம்” என்ற வார்த்தை “அடிமை” என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. எனவே, வசனம் 11 சட்டப்பூர்வமாக உற்சாகமாக ஊழியம் செய்கிறவன் “அடிமை” என்றும் அழைக்கப்படலாம். அடிமை என்பது இங்கே எதிர்மறை அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்படக்கூடாது. மாறாக, அது இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் விலைக்கு வாங்கப்பட்டதாகவும், அதனால் தேவனுக்கு சொந்தமானதாகவும் நேர்மறையாகக் காணப்பட வேண்டும் [1 கொரிந்தியர் 6:20]. இந்த உரிமையானது முழுமையான விசுவாசத்திற்கு அழைக்கிறது.

தேவனுக்கு ஊழியஞ் செய்யும்போது நாம் செய்ய வேண்டியதை மட்டுமே செய்கிறோம். இதைத்தான் லூக்கா 17:7-10 ல் இயேசுகிறிஸ்து நமக்குக் கற்பித்தார், உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தைமேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ? நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம்பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின் நீ புசித்துக்குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா? தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே.  அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.” நாங்கள் எங்கள் கடமையை மட்டுமே செய்துள்ளோம். அதுதான் நம்மைக் குறிக்க வேண்டிய பணிவான மனப்பான்மை. “இயேசு கிறிஸ்துவின் அடிமைகள்” என்ற செழுமையான பட்டத்தை நாம் தாங்குகிறோம். அடிமைகள் தங்கள் எஜமான் கட்டளையிடுவதைச் செய்கிறார்கள். மேலும் அவருக்கு உற்சாகமாக ஊழியம் செய்யும்படி எஜமானர் கட்டளையிடுகிறார்.

தேவனுக்கு ஊழியம் செய்வதில் நமக்கு எந்த மாதிரியான மனப்பான்மை இருக்க வேண்டும் என்பதைப் பற்றி எழுதுகையில், டொனால்ட் விட்னி தனது ஆவிக்குரிய துறைகள் என்ற புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார் [பக்கம் 129]:

தேவை: தேவனின் ராஜ்யத்தை கட்டியெழுப்பக்கூடிய தாலந்து பெற்ற உள்ளூர் ஊழியர் தேவை. ஊழியம் செய்வதற்கான உந்துதல், கீழ்ப்படிதல், நன்றியுணர்வு, மகிழ்ச்சி, மன்னிப்பு, பணிவு மற்றும் அன்பு ஆகியவை இருக்க வேண்டும். ஊழியம் அரிதாகவே புகழ்பெற்றதாக இருக்கும். ஊழியம் செய்யும் இடத்தை விட்டு வெளியேறுவதற்கான தூண்டுதல் சில நேரங்களில் வலுவாக இருக்கும். தன்னார்வலர்கள் நீண்ட காலமாக இருக்க நேர்ந்தாலும் உண்மையாக இருக்க வேண்டும், விளைவுகள் சிறிதளவாகவோ இருக்கும்; புலப்படக் கூடியதாகவோ  இருக்காது,  நித்தியத்தில் தேவனிடமிருந்து தவிர வேறு எந்த அங்கீகாரமும் இருக்காது.

சாராம்சத்தில், விட்னி இவ்வாறு கூறுகிறார்: தேவனுக்கு உண்மையாக ஊழியஞ் செய்யுங்கள்-எவ்வளவு கடினமான பணியாக இருந்தாலும், உங்கள் முயற்சிகள் பயனற்றதாகத் தோன்றினாலும்! ஊழியஞ் செய்யுங்கள்.

மேலும் நாம் கர்த்தருக்கு ஊழியம் செய்வதை சபை தொடர்பான செயல்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தக்கூடாது. வேறொரு வசனத்தில், 1 கொரிந்தியர் 10:31ல், “ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.” என்று கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும், நாம் தேவனின் மகிமைக்காக வாழ வேண்டும். அவருக்காக 24/7 ஜீவ பலியாக வாழவேண்டும். வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும், நமது செயல்கள் அனைத்தும் தேவனுக்கு செய்யப்படுவது போல் செய்யப்பட வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து நினைவில் கொள்ள வேண்டும். உதாரணமாக, உலகப்பிரகாரமான வேலையைப் பற்றி எபேசியருக்கு பவுல் இவ்வாறு கூறுகிறார்.

எபேசியர் 6:5-8 வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்து;  மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள். அடிமையானவனானாலும், சுயாதீனமுள்ளவனானாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவானென்று அறிந்து, மனுஷருக்கென்று ஊழியஞ் செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள்

 எனவே, பணியிடத்தில் கூட, நாம் உற்சாகத்துடன் தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும், அது மனிதர்களுக்கு வெளிப்புறமாகச் செய்யப்படும் ஊழியமாக இருக்கலாம்.

ஒவ்வொரு நாளும் ஊழியம் என்று வரும்போது, ​​நாம் எந்த நிலையில் வைக்கப்படுகிறோம், எந்த வகையான ஊழியத்தை செய்ய அழைக்கப்படுகிறோம், எந்த மாதிரியான முடிவுகள் நம் ஊழியத்திலிருந்து வெளிப்படும் என்பதை தேவன் கட்டுப்படுத்துகிறார் என்று நினைவில் கொள்ள வேண்டும்.

“இந்த கைவிடப்பட்ட இடத்தில் நீங்கள் ஏன் உங்களை ஊழியம் செய்ய ஆர்ப்பணித்தீர்கள்?” ஒரு மனிதன் ஒரு வெளிநாட்டு மிஷனரியை பார்த்துக் கேட்டார். “நான் இங்கு மரிக்க வரவில்லை,” என்று மிஷனரி பதிலளித்தார். “நான் விதைப்படவே வந்தேன்.” அந்த வகையான அணுகுமுறை எல்லா வித்தியாசங்களையும் ஏற்படுத்துகிறது. [வாரன் வியர்ஸ்பே, வென் லைப் பால்ஸ் அபார்ட், பக்கம். 63].

தேவன் நம்மை எங்கு வைத்திருக்கிறார் என்பதை நாம் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு, அங்கு அவருக்கு உற்சாகமாக சேவை செய்ய வேண்டும். சில சமயங்களில் நாம் சோர்வடைகிறோம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். மேலும் ஊக்கமின்மை பல காரணங்களால் இருக்கலாம். தேவனுடைய தீர்க்கதரிசிகளும், அவருடைய அப்போஸ்தலர்களும் மனச்சோர்வை எதிர்கொண்டார்கள். நாமும் அப்படித்தான்! இருப்பினும், அந்தச் சமயங்களில் கூட, விசுவாசத்தினால், 2 விஷயங்களைச் செய்வதன் மூலம் தொடர்ந்து நமக்கு உதவுமாறு நாம் அவரிடம் தொடர்ந்து கேட்க வேண்டும்.

1. நாம் தேவனின் இரக்கங்களைச் சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும் [ரோமர் 12:1].

2. ஆண்டவருக்காக நாம் படுகிற பிரயாசம் வீண்போகாது என்ற தேவனின் வாக்குத்தத்தை நாம் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஊழியம் செய்யும்போது வரும் பிரச்சனைகளில் நம்மை உந்துதலாக வைத்திருக்க சில வசனங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

1 கொரிந்தியர் 15:58 ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.

கலாத்தியர் 6:9-10 நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.

எபிரெயர் 6:10-12 ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே. நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து,  உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.

தேவனின் வார்த்தைகள் நமக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். இரத்த சாட்சியாக மரித்த தேவனுடைய மக்களும் நமக்கு பெரும் ஊக்கம் தருகிறார்கள். மிகுந்த துன்பங்களுக்கு மத்தியில் கிறிஸ்துவுக்காகவும், அவருடைய மக்களுக்காகவும் அனைத்தையும் கொடுத்த விசுவாசிகளின் வாழ்க்கை வரலாற்றைப் படியுங்கள். இவர்கள் தேவனுக்கு ஊழியஞ் செய்ய முடிவு செய்ததற்காக ஒருபோதும் வருத்தப்படவில்லை. இதோ ஒரு சில உதாரணங்களை காண்போம்.

 வில்லியம் போர்டன் என்பவர் 1904ல் சிகாகோவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். அவர் போர்டன் பண்ணையாரின் வாரிசாக இருந்தார். பட்டப்படிப்புக்காக, அவர் உலகம் முழுவதும் பயணித்ததற்காக ஒரு அசாதாரண பரிசைப் பெற்றார். இந்தப் பயணம் அவருக்கு எப்படி உதவிகரமாக இருந்தது என்று அவருக்கு அதை ஏற்பாடு செய்து கொடுத்தவர்கள் உணரவில்லை.

 அந்த பயணத்தின் போது, வில்லியம் உலகெங்கிலும் சிலாக்கியமில்லாதவர்கள் மீதும், கிறிஸ்துவை அறியாதவர்கள் மீதும் ஒரு பாரத்தை உணர ஆரம்பித்தார். அவர் ஒரு மிஷனரியாக கிறிஸ்துவுக்கு சேவை செய்வதில் விருப்பம் தெரிவித்து வீட்டிற்கு எழுதினார். நண்பர்களும் உறவினர்களும் அவநம்பிக்கையுடன் நின்றாலும், போர்டன் தனது வேதத்தின் பின்புறத்தில் இரண்டு வார்த்தைகளை எழுதினார்: எந்தத் தடையுமில்லை” [No reserves].

 அவர் அமெரிக்கா திரும்பி, யேல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கே அவர் ஒரு முன்மாதிரி மாணவராக இருந்தார். கல்லூரி வாழ்க்கை வில்லியமின் தூதுப்பணி துறையில் ஆசையைத் தணிக்கும் என்று மற்றவர்கள் நினைத்திருந்தாலும், அது அதைத் தூண்டியது.

அவர் ஒரு வேதாகம படிப்பைத் தொடங்கினார், அவருடைய முதல் ஆண்டு முடிவில் 150 மாணவர்கள் வேதவசனங்களைப் படிக்கவும் ஜெபிக்கவும் வாரந்தோறும் கூடினர். அவர் மூத்தவராக இருந்த நேரத்தில், யேலில் இருந்த ஆயிரத்து முந்நூறு மாணவர்களில் ஆயிரம் பேர் வாராந்திர வேதாகம படிப்பு மற்றும் ஜெபத்திற்காக கூடிவந்த சீஷர் குழுக்களில் இருந்தனர்.

 அவர் தனது சுவிசேஷ முயற்சிகளை வெறுமனே யேலின் அழகிய வளாகத்தைச் சுற்றி மட்டுப்படுத்தவில்லை. அவரது இருதயம் அதற்கு வெளியேயும் சமமாக இருந்தது. அவர் யேல் ஹோப் மிஷனை [Yale Hope Mission] நிறுவினார். கனெக்டிகட்டின் நியூ ஹேவன் தெருக்களில் இருந்தவர்களுக்கு அவர் ஊழியம் செய்தார். அவர் கிறிஸ்துவின் ஊழியத்தை அனாதைகள், விதவைகள், வீடற்றவர்கள் மற்றும் பசியுள்ளவர்களுடன் பகிர்ந்து கொண்டார், அவர்களுக்கு நம்பிக்கையையும் அடைக்கலத்தையும் வழங்கினார்.

வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவரிடம் அவர் அமெரிக்காவில் இருந்த காலத்தில் அவரை மிகவும் கவர்ந்தது எது என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார், “இளம் கோடீஸ்வரனாகிய வில்லியம் யேல் ஹோப் மிஷனில் கையேந்தி பிச்சைக்காக மண்டியிட்ட காட்சி” தன்னை வெகுவாய் கவர்ந்தது என்றார்.

போர்டன் யேல் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றபோது, அவருக்கு பல இலாபகரமான வேலைகள் வழங்கப்பட்டன. பல உறவினர்களும் நண்பர்களும் விரக்தியடையும் வண்ணம்,  அந்த வேலைகளை ஏற்க அவர் மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக, அவர் தனது வேதத்தின் பின்புறத்தில் பின்வாங்க மாட்டேன்” என்ற  மேலும் இரண்டு வார்த்தைகளை எழுதினார். 

பின்பு அவர் பிரின்ஸ்டன் வேதாகம கல்லூரியில் நுழைந்தார், பட்டப்படிப்பு முடிந்ததும், சீனாவுக்குப் பயணம் செய்தார். முஸ்லீம் மக்களிடையே கிறிஸ்துவுக்கு சேவை செய்ய எண்ணி, அவர் அரபு மொழியைக் கற்கவும், ஆராயவும் எகிப்தில் தங்கினார். இருப்பினும், அங்கு இருந்தபோது, அவருக்கு முதுகெலும்பு மூளைக்காய்ச்சல் [Spinal Meningitis] ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் ஒரு மாதம் மட்டுமே உயிர் வாழ்ந்தார்.

இருபத்தைந்து வயதில், வில்லியம் போர்டன் மரித்துவிட்டார். கிறிஸ்துவை அறிந்துகொள்வதற்காகவும், அவரைத் தெரிந்துகொள்வதற்காகவும் போர்டன் எல்லாவற்றையும் நஷ்டமாக எண்ணினார். அவர் தனது முன்னோர்களிடமிருந்து பெறப்பட்ட ஆஸ்தியின் பயனற்ற தன்மையால் அங்கீகரிக்கப்பட மறுத்துவிட்டார், மாறாக இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் தனது மீட்கும் பொருளின் மகிமையை வாழ முயன்றார்.

அவரது மரணத்திற்குப் பிறகு அவரது வேதம் கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​பின் பக்கத்தில் வருத்தம் இல்லை என்ற மேலும் இரண்டு வார்த்தைகளைச் சேர்த்து எழுதியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

தங்களின் மீட்பின் விலையை அறிந்தவர்கள், தங்களை மீட்டவருக்காக வாழ்ந்த வாழ்வானது வருத்தமில்லாத வாழ்க்கை என்பதை அறிவார்கள்… வில்லியம் போர்டன் தன்னை மீட்டவருடன் செல்லத் தேர்ந்தெடுத்தார். 

[Anthony Carter, Blood Work, அந்தோனி கார்ட்டர், பிலட் வோர்க்.]

போர்டனைப் போன்ற ஒரு ஊழியத்திற்கு தேவன் நம் அனைவரையும் அழைக்கவில்லை என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் விஷயம் இதுதான்: அவர் எந்தப் பகுதியில் ஊழியம் செய்ய அழைத்தாலும், அதை நாம் உற்சாகத்துடன் செய்ய வேண்டும்! இறுதியில், இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தில் முழு மனதுடன் நம் வாழ்க்கையை விட்டுக்கொடுப்பது வருத்தமில்லாத ஒரு வாழ்க்கை. தேவனிடமிருந்து நாம் பெற்ற இரக்கத்தினால் நாம் கொடுக்கின்றோம். அதனால்தான் பவுல், ரோமர் 12:1 ஐ இயேசுகிறிஸ்துவுக்கு நம் அனைத்தையும் கொடுப்பதற்கான தூண்டுதலாக இரக்கத்துடன் தொடங்கினார். தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு நம்மை முழுமையாக அர்ப்பணிக்க இரக்கம் நம்மைத் தூண்ட வேண்டும், ஏனென்றால் எல்லா ஆவிக்குரிய ஊழியத்திற்கும் இரக்கம் அடிப்படையாக இருக்கிறது.

இந்த இரக்கத்தை நீங்கள் பெற்றுள்ளீர்களா? அப்படியில்லையென்றால், ஏன் தாமதிக்கிறீர்கள்? உண்மையான மனந்திரும்புதலுடனும், விசுவாசத்துடனும் இயேசுகிறிஸ்துவிடம் சென்று அவருடைய இரட்சிப்பின் இரக்கத்தை வழங்குமாறு அவரிடம் கேளுங்கள். அவர் பாவங்களுக்காக மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்தார், இதனால் அவரை நோக்கிப் பார்க்கும் அனைவரும் தங்கள் பாவங்களுக்கு முழு மன்னிப்பைப் பெற முடியும். அவருடைய இரக்கம் எவ்வளவு பெரியது!

இந்த இரக்கத்தை நீங்கள் பெற்றிருந்தால், நீங்கள் ஆர்வத்துடன் அவருக்கு ஊழியம் செய்கிறீர்களா? அப்படி இருந்தால், தொடர்ந்து செய்யுங்கள். இல்லையென்றால், உங்கள் ஆர்வமின்மைக்கு மனந்திரும்புங்கள், தேவனுடைய இரக்கத்தைப் பற்றி அதிகம் சிந்தித்துக் கொண்டே இருங்கள், மேலும் கர்த்தருக்காக நீங்கள் படும் பிரயாசம் ஒருபோதும் வீண் போகாது என்பதை அறிந்து கொள்ளுங்கள், இதனால் இன்று முதல் நீங்கள் அவருக்குச்s செய்யும் ஊழிய விதத்தை பரிசுத்த ஆவியானவர் மாற்ற அனுமதியுங்கள்.

Category
Subscribe
Notify of
guest
0 கருத்துக்கள்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments