மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு -பகுதி 7 துன்பங்களைச் சகிப்பதற்கான 6 செயல் நோக்கங்கள்

Posted byTamil Editor June 25, 2024 Comments:0

(English version: “The Transformed Life – 6 Motivations To Endure Suffering – Part 1,” “The Transformed Life – 6 Motivations To Endure Suffering – Part 2”)

ரோமர் 12:12 ஆம் வசனத்தின் பிற்பகுதி, “உபத்திரவத்தில் பொறுமையாக இருக்க” நமக்குக் கட்டளையிடுகிறதுஇதைச் செய்வது எளிதான காரியம் அல்ல. என்றாலும், இந்தக் கட்டளைக்கு அடிபணிய வேண்டும் என்று வேதம் நம்மை அழைப்பதால், தேவனுடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய நமக்கு அதிகாரம் அளிக்கும் பரிசுத்த ஆவியின் உதவியோடு மட்டும் இதைச் செய்ய கூடும்.

மதுவை தயாரிப்பதற்கு அதிக அழுத்தம் கொடுத்து திராட்சை  பழங்களை நசுக்குவதை விவரிக்க “உபத்திரவம்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. மேலும், “பொறுமை” என்ற வார்த்தையானது உறுதியான நிலை, சகிப்புத்தன்மை அல்லது விடாமுயற்சி ஆகிய பொருள்களைக் கொண்டுள்ளது. இந்த வார்த்தைகள் அதிகமான அழுத்தத்தின் போதும் அமைதியாக இருக்க வேண்டும்” என்ற கருத்தைக் கொண்டுள்ளன.

பொதுவாக, நாம் உபத்திரவத்தை எதிர்கொள்ளும்போது, ​​ கீழே கொடுக்கப்பட்ட மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு விதத்தில் எதிர்வினையாற்றுகிறோம்:

(a) முடிந்தவரை  குறுக்குவழியை தேர்ந்தெடுப்பது
(b)அதிலிருந்து வெளியேற முடியாது என்ற மனப்பான்மையுடன் சகித்துக்கொள்வது,
(c) தேவன் தமது நேரத்திலும் தமது வழியிலும் இடைப்படும் வரை பொறுமையுடன் சகித்துக்கொண்டு காத்திருப்பது.

எப்போதும், கடைசி வழிமுறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே எனது ஜெபமாக இருக்கிறது. அப்படிச் செய்வதன் மூலம், ரோமர் 12:12-ல் உள்ள இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிவது மட்டுமல்லாமல், எல்லா உபத்திரவங்களையும் பொறுமையோடும், தேவனை மகிமைப்படுத்தும் விதத்திலும் சகித்தால் இயேசுகிறிஸ்துவைப் போல நம்மை மாற்ற ஆவியானவரை அனுமதிப்போம். ஆனால், நாம் அதை எப்படி செய்வது? எல்லா வகையான உபத்திரவங்களையும் சகித்துக்கொள்ள உதவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள 6 செயல் நோக்கங்களை தியானிக்கலாம்.  

செயல் நோக்கம் #1. உபத்திரவம் நம்மை நொருக்குகிறப்படியால் நாம் ஜெபத்தில் அதிகமாக தேவனை வேண்டும்.

உபத்திரவமானது நாம் உண்மையில் எவ்வளவு பலவீனர்கள் என்றும், கர்த்தர் நமக்கு எவ்வளவு அவசியமானவர் என்பதையும் வெளிப்படுத்துகிறது. இது பெருமையையும், நம்மீது நாமே வைத்திருக்கும் நம்பிக்கையையும் நீக்கி, விடுதலைக்காக தேவனிடம் கூக்குரலிட வைக்கிறது. உண்மையில், ரோமர் 12:12ல் உள்ள இரண்டாம் சொற்றொடரானது ஜெபத்திற்கான ஓர் அழைப்பாகும். சரீரத்திலுள்ள முள் நீங்கும்படி பவுல் ஜெபத்தில் தேவனிடம் கூக்குரலிட்டார் [2 கொரிந்தியர் 12:7-8]. யோபுவின் பத்திரவம் அவரை உடைத்து, தேவனிடம் நெருங்கச் செய்தது. அதே போன்று உபத்திரவமானது நம்மை உடைத்து, ஜெபத்தில் தேவனிடம் நெருங்கச் செய்யும் திறன் கொண்டது.

இரண்டு சகோதரர்கள் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்ஆச்சரியப்படும் விதமாக, தனது காகிதப் படகை குளத்தில் மிதக்க வைத்த இளைய சகோதரன், அது வெகுதூரம் நகர்ந்து போவதைக் கண்டான். மூத்த சகோதரன் அதைப் பார்த்ததும், படகிற்கு அப்பால் விழும்படி கற்களை வீசத் தொடங்கினான், இது சிற்றலைகளை உருவாக்கியதால் அந்த படகை கரைக்கு அருகில் கொண்டு வந்தான். அதேவிதமாகவே, ஜெபத்தில் நம்மை அவரிடம் நெருங்கி வர தேவன் உபத்திரவத்தைப் பயன்படுத்துகிறார்.

தேவன் நம்மை உடைத்து இருக்கிறாரா? அப்படியானால், சோதனைக்குப் பிறகு நாம் பொறுமையாக இருக்கிறோமா? ஜெபத்தில் நாம் தேவனிடம் நெருங்கி வருகிறோமா? அப்படியில்லை என்றால், இனி ஒரு புதிய வாழ்வை ஆரம்பிக்கக்கடவோம். நம்முடைய கர்வத்தை உடைத்து, நம்மைத் தம்மிடம் நெருங்கிச் செல்வதற்காக   வழிமுறையாக நம்முடைய உபத்திரங்களைப் பார்க்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நம் உபத்திவத்தை வீணடித்து விடுகிறோம்.

செயல் நோக்கம் #2. உபத்திரவம் நம் விசுவாசத்தின் உண்மைத் தன்மையை நிரூபிக்கிறது.

1 பேதுரு 1:6-7 ம் வசனங்கள் இவ்வாறு கூறுகிறது, “6 இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். 7 அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.”  உபத்திரவங்களைச் சந்திக்கும் போது நம்முடைய பிரதிபலிப்பு நமது விசுவாசத்தின் தன்மையை வெளிப்படுத்துகிறது.

“வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே [தவறான விசுவாசிகள்] இடறலடைகிறார்கள்என்று மாற்கு 4:17ல் இயேசுகிறிஸ்து கூறுகிறார். இருப்பினும், உண்மையான விசுவாசிகள்பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்” என்றும் இயேசுகிறிஸ்து கூறினார் [லூக்கா 8:15]. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உபத்திரவத்தை எதிர்கொள்ளும் போது, விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தின் உண்மைத்தன்மையை பொறுமையுடன்  காத்திருக்கிறவர்களாய் இருக்கையில், தவறான விசுவாசிகளோ  இடறலடைகிறார்கள்.

உபத்திரவத்தை சந்திக்கும் போது நாம் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறோம்? இதில் பொறுமையான சகிப்புத்தன்மையுடன் இல்லை என்றால், நாம் புதிதாக தொடங்க வேண்டும். நம்முடைய விசுவாசம் உண்மையானதா?  உண்மையற்றதா? என்பதைச் சோதிக்க உதவும் தேவனின் வழிமுறையாக உபத்திரவப்படுவதைக் காண வேண்டும். சோதிக்கப்பட்ட விசுவாசம் மட்டுமே நம்பத்தகுந்த விசுவாசம். தேவனின் அன்பு நம்மை சோதனைகளிலிருந்து காப்பாற்றாது. ஆனால், அவருடைய பார்வையிலிருந்து  நம்மை விலக்கிவிடாது.

செயல் நோக்கம் #3. உபத்திரவப்படுத்தகிறவர்களிடம் அதிக இரக்கத்துடன் இருக்க நமக்கு உதவுகிறது

இயல்பிலேயே நாம் எப்போதும் அவசரப்படுகிறவர்களும், மற்றவர்களின் பிரச்சனைகளை கவனிக்க அதிக நேரமில்லாதவர்களுமாக இருக்கிறோம். இருப்பினும், உபத்திரவமானது மற்றவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் செவிக்கொடுக்க உதவுகிறது. மேலும், மற்றவர்களை ஆறுதல்படுத்துவதற்கும் நாம் தயாராக இருக்கிறோம். நாம் அவர்களுடைய இடத்தில் இருந்ததால் எப்படி இருக்கும் என்பதை நன்றாக அறிந்திருக்கிறோம். 

2 கொரிந்தியர் 1:3-4 ல், பவுல் தேவனைத் துதிக்க அழைப்பு விடுக்கிறார்; தேவனை இரக்கங்களின் பிதா” என்றும்எல்லா ஆறுதல்களின் தேவன்” என்றும் அழைக்கிறார். ஏனெனில், அவர்நம்முடைய எல்லா பிரச்சனைகளிலும் நம்மை ஆறுதல்படுத்துகிறவர்.” ஆனால், பவுல் அத்துடன் நிற்கவில்லை. தேவன் நம்மை ஆறுதல்படுத்துவதன் நோக்கத்தை தொடர்ந்து கூறுகிறார்: “எந்தவொரு பிரச்சனையிலும் நாம் தேவனிடமிருந்து பெறும் ஆறுதலைக் கொண்டு  பிறரை ஆறுதல்படுத்த முடியும்.” உபத்திரவத்தை அனுபவிக்கும் போது நாம் பெறும் ஆறுதலானது மற்றவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்காகும்!

பாகிஸ்தானிலிருந்த  ஒரு பெண் மிஷனரி இவ்வாறு எழுதினார்:

நானும் என் கணவர் ஃபிராங்கும் பல வருடங்களுக்கு முன் பாகிஸ்தானில் வசிக்கும் போது, எங்கள் ஆறு மாத குழந்தை மரித்து விட்டது. எங்கள் துயரத்தைக் கேள்விப்பட்ட ஒரு வயதான பஞ்சாபி இவ்வாறு ஆறுதல் கூறினார். “இது போன்ற ஒரு சோகம் கொதிக்கும் நீரில் மூழ்குவதற்கு ஒத்ததாகும்,” “நீங்கள் ஒரு முட்டையாக இருந்தால், உபத்திரவம் உங்களை கடினமானவராகவும் பதிலளிக்க கூடாதவராகவும் மாற்றும்; நீங்கள் ஒரு உருளைக்கிழங்கு என்றால், மென்மையானராகவும், நெகிழ் தன்மையுடனும், மீள்தன்மையுடனும் மாற்றியமைக்கக்கூடியவராகவும் வெளிப்படுவீர்கள்.” இது வேடிக்கையாகத் தோன்றலாம், ஆனால், “ ஆண்டவரே, நான் ஒரு உருளைக்கிழங்கு ஆகட்டும்” என்று ஜெபித்த நேரங்களும் உண்டு.

உபத்திரவங்களிலிருந்தும் அதனால் ஏற்படும் ஆறுதலிலிருந்தும், இருதயத்தில் கனிவாய் இருக்கவும், உபத்திரவப்படும் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கவும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களுக்கு உண்மையாகவே நேரம் கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு தேவனுடைய ஆறுதலின் கருவியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். தேவனின் ஆறுதலை நாம் இலவசமாகப் பெற்றுள்ளோம்; அந்த ஆறுதலை நாம் மற்றவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.

நாம் அதை செய்கிறோமா? உபத்திரவத்தில் இருக்கும் மற்றவர்களிடம் அதிக கனிவையும், கருணையும் காட்டுவதற்கு நம்முடைய உபத்திரவம் காரணமாக இருக்கிறதா? நம்மை புண்படுத்தும் மக்களுடன் இருக்க நேரம் ஒதுக்குகிறோமா? அவர்களின் தேவைகளை சந்தித்து ஊழியம் செய்கிறோமா? இல்லையென்றால், இப்போதே ஆரம்பிக்கக்கடவோம். நாம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்கு உபத்திரவங்களை தேவனின் வழிமுறையாக பார்க்க வேண்டும். இல்லாவிட்டால், நம் உபத்திரவத்தை வீணடித்து விடுகிறோம்.

செயல் நோக்கம் #4. விசுவாசத்தில் முதிர்ச்சியடைய உபத்திரவம் நமக்கு உதவுகிறது. 

ரோமர் 5:3 ஆம் வசனம்உபத்திரவம் பொறுமையை உருவாக்குகிறதுஎன்று கூறுகிறது. யாக்கோபு 1:3ம் வசனம், உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குகிறது” என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. உபத்திரவம் நம் வாழ்வில் ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கும் விஷயங்களை வெளிப்படுத்தி அவற்றை நீக்கவும் செய்கிறது. அது, விசுவாசத்தில் நம்மை பக்குவப்படுத்தும் தேவனின் வழியாக இருக்கிறது.

வெள்ளி எவ்வாறு சுத்திகரிக்கப்படுகிறது என்பதை அறிய ஒரு பெண்மணி ஒரு தட்டானை சந்தித்ததைப் பற்றி கதை ஒன்று சொல்லப்படுகிறதுஅந்த தட்டான் நெருப்பில் வெள்ளியை வைத்துப் பிடித்து, செயல்முறையை விளக்கிக் கொண்டிருந்தார். “உலையில் வெள்ளி அதிக நேரம் இருந்தால் அது உருகும், அது மிகவும் குறைவான நேரம் இருந்தால், அது அசுத்தத்தை இழக்காது” என்றார். எனவே, அந்தப் பெண்மணி, “நேரம் கனிந்துவிட்டது என்று உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டதற்கு அவரது பதில், “எனது முழு பிரதிபலிப்பையும் அதில் காணும்போது” நேரம் கனிந்துவிட்டது என்பதாக இருந்தது. அதைத்தான் தேவன் செய்கிறார், ஒவ்வொரு சோதனையிலும் நாம் எவ்வளவு அதிகமாக கிறிஸ்துவைப் போலாக வேண்டும் என்பதை அவர் அறிவார், அது முடியும் வரை, அவர் நம்மை உலையில் வைத்திருப்பார். ஆனால், அவருடைய கண் எப்போதும் நம் மீதுதான் இருக்கிறது. எனவே, கவலைப்பட வேண்டாம்.

உபத்திரவங்களை சகிப்பவர்கள் மட்டுமே ஆவிக்குரிய வாழ்வில் வளர்கிறார்கள், இதற்கு வேறு வழியில்லை. ஒவ்வொரு சோதனையிலும் நாம் விசுவாசத்தில் முதிர்ச்சி அடைகிறோமா? அப்படி இல்லையென்றால், இப்போதே  ஆரம்பிக்கக்கடவோம். ஒவ்வொரு சோதனையையும் நம்மை ஆவிக்குரிய ரீதியில் வளர்க்க தேவன் பயன்படுத்தும் ஒரு வழிமுறையாக பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும், இல்லையென்றால், அந்த உபத்திரவம் வீணாகி விடுகிறது.

செயல் நோக்கம் #5.  தேவனுடைய கட்டளைகளுக்கு அதிகமாக கீழ்ப்படிய தொடர உபத்திரவம் நமக்கு உதவுகிறது.

சங்கீதம் 119:67 ம் வசனம், நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்என்று கூறுகிறது.  நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்என்று சங்கீதம் 119:71 ல் வாசிக்கிறோம். உபத்திரவக் காலங்கள், பாவத்தைப் பற்றியும், தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாததால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது. தேவன் எவ்வளவு பரிசுத்தமானவர் என்பதையும், அவர் பாவத்தை எவ்வளவு கடுமையாக எடுத்துக்கொள்கிறார் என்பதையும், அவருடைய அனைத்து கட்டளைகளுக்கும் நாம் எவ்வளவு கீழ்ப்படிய வேண்டும் என்பதையும் இது காட்டுகிறது.

ஒரு எழுத்தாளர் வரலாற்றிலிருந்து ஒரு சம்பவத்தை எடுத்துச் சொல்லி சில கருத்துக்களை கூறுகிறார்.

தளபதி ஆன்டிகோனஸின் கீழ் பணியாற்றிய ஒரு இராணுவ வீரனின் பழைய கிரேக்க கதை இது, அவனுக்கு மிகவும் கடுமையான நோய் ஒன்று இருந்தது, அது அவனை விரைவில் கல்லறைக்கு கொண்டுப்போக்கூடும். இந்த இராணுவ வீரன் முக்கிய பொறுப்பில் இருப்பவன்.  எப்போதுமே சண்டையின் முக்கியமான பகுதியில் இருப்பவன், துணிச்சலானவர்களில் இவனும் ஒருவன். அவனுடைய வலி அவனைப் போராடத் தூண்டியது, அதனால், அவன்  தன் வலியை மறந்துவிட்டான்; அவன் மரணத்திற்கு பயப்படவில்லை, ஏனென்றால், எப்படியும் அவன் நீண்ட காலம் வாழப்போவதில்லை என்பதை அறிந்திருந்தான்.

ஆன்டிகோனஸ் தனது வீரனின் வீரத்தை பெரிதும் பாராட்டினான், அவனது நோயைக் கண்டறிந்து அன்றைய மிகச் சிறந்த மருத்துவர்களில் ஒருவர் மூலமாய் அவனை குணப்படுத்தினான். அந்த தருணத்திலிருந்து அந்த போர்வீரன் போரின் முன்னணியில் நிற்பதை தவிர்த்துவிட்டான். இப்போது அவன் இலகுவான நிலையை நாடினான்; ஏனென்றால்ஆரோக்கியம், வீடு, குடும்பம் மற்றும் பிற வசதிகளுக்காக வாழத் தகுந்ததைக் கொண்டிருந்தான். அவன் முன்பு நடந்த போர்களில் இருந்ததைப் போல இப்போது தனது உயிரைப் பணயம் வைக்க  துணியவில்லை.

அதுபோலவே, கஷ்டங்கள் அதிகமாக இருக்கும்போது, அவருடைய கிருபையினால் நம்முடைய தேவனுக்கு சேவை செய்வதில் அடிக்கடி தைரியமுள்ளவர்களாக்கப்படுகிறோம். இவ்வுலகில் நாம் வாழ்வதற்கு எதுவுமில்லை என்று உணர்கிறோம், இனி வரப்போகும் உலகத்தின் நம்பிக்கையால் நாம் உந்தப்படுகிறோம். கிறிஸ்துவுக்காக வைராக்கியம், சுய வெறுப்பு மற்றும் தைரியத்தை வெளிப்படுத்த நாம் தூண்டப்படுகிறோம். ஆனால், உபத்திரவமற்ற  காலங்களில் இது அடிக்கடி சாத்திமில்லை!

நாம் மலையின் உச்சியில் இருக்கும்போது, இவ்வுலகின் இன்பங்கள் இனி வரப்போகும் உலகத்தை நினைவில் கொள்ள கடினமாக்குகின்றன. நாம் பின்னர் இலகுவான வாழ்வில் மூழ்க முனைகிறோம். பிரியமானவர்களே, இவ்வுலகின் சுவாரஸ்யங்களும், சிலிர்ப்புகளும் உங்களை தேவனுடைய காரியங்களில் அக்கறையற்றவர்களாக்கி, உங்கள் ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடை செய்ய விடாதீர்கள்.

நம்முடைய உபத்திரவங்கள் தேவனுடைய வார்த்தைக்கு அதிகமாகக் கீழ்ப்படியச் செய்திருக்கிறதா? இல்லையென்றால்   இப்போதே ஆரம்பிக்கக்கடவோம். வாழ்வில் முன்னோக்கிச் செல்லும்போது வரும் ஒவ்வொரு சோதனையையும் நாம் தேவனுடைய கட்டளைகளை இன்னும் பொறுமையுடன் கடைப்பிடிக்க உதவும் வழிமுறையாகப் பார்க்க ஆரம்பிக்க வேண்டும்.

செயல் நோக்கம் #6.  உபத்திரவம் நமது எதிர்கால மகிமைப்படுத்துதலின் நம்பிக்கையை பலப்படுத்துகிறது. 

ரோமர் 12:12 ம் வசனத்தின் முதல் பகுதி,நம்பிக்கையில் சந்தோஷப்படுங்கள்” என்று கூறுகிறது. புதியதும், உயிர்த்தெழுதலின் சரீரங்களைப் பெறப்போகிற நமது எதிர்கால மகிமைப்படுதலே இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் நம்பிக்கையாகும். ரோமர் 5:3-4 ஆகிய வசனங்களானது நமது உபத்திரவத்தை நம்பிக்கையை வலுப்படுத்துவதோடு இணைக்கிறதுகுறிப்பாக  “தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையுடன்” [ரோமர் 5:2] ணைக்கிறது. இந்த நம்பிக்கையானது  கிறிஸ்து  மீண்டும்  வரும்போது நாம் புதிய சரீரங்களைப் பெறும்  காலத்தைப் பற்றியது

உபத்திரவப்படுகிற விசுவாசிகள் உபத்திரவம் இல்லாத மக்களை விட கிறிஸ்துவின் வருகைக்காக ஏங்குகிறார்கள். ஏன்? மகிமைப்படுத்தப்படுவதற்கான அவர்களின் நம்பிக்கை மிகவும் எதிர்ப்பார்க்கிறப்படியால், அவர்கள் எப்போதும் அதைப் பற்றி சிந்திக்கிறார்கள். கிறிஸ்து திரும்பி வரும்போது மட்டுமே அது நடக்கும் என்று தெரிந்து, அவர்கள் அதற்காக ஏங்குகிறார்கள்.

பெரும்பாலும், கிறிஸ்துவின் வருகைக்காக நாம் ஏங்குவதில்லை. ஏனென்றால், பூமியில் நாம் அனுபவிக்கிற நன்மையாகத் தோன்றும் பல விஷயங்கள், நமக்கு மகிமையைக் கொண்டு வருகிற கிறிஸ்துவின் வருகையாகிய பொக்கிஷத்திலிருந்து நம் கண்களை விலக்கிவிடுகின்றன. ஆகவே, கிறிஸ்துவின் வருகைக்காக நாம் வாஞ்சிக்க, தேவன் நமக்கு நன்மையாக தோன்றுகிற  விஷயங்களை ஒரு விதத்தில் சிதைக்கவும் உபத்திரவத்தைப் பயன்படுத்துகிறார்.

நம் வாழ்வின் சோதனைகள், கிறிஸ்துவைப் போல இருக்க வேண்டும் என்று அதிகமாக ஆசைப்படுவதையும், அவர் திரும்பி வருவதற்கு ஏங்குவதையும் உருவாக்கியிருக்கிறதா? என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளக்கடவோம். இல்லையென்றால், புதிதாகத் தொடங்குவதற்கு இன்னும் காலம் சென்றுவிடவில்லை. எதிர்கால மகிமையைப் பற்றிய நமது நம்பிக்கையை வலுப்படுத்த, நம் வாழ்வில் வரும் உபத்திரவங்களை தேவனின் வழிமுறையாக நாம் பார்க்கத் தொடங்க வேண்டும்.

இறுதி சிந்தனைகள்.

எனவே, இங்கே கூறப்பட்டுள்ள 6 செயல் நோக்கங்கள் நமக்கு உபத்திரவங்களை சகித்துக்கொள்ள உதவிகரமாக இருக்கும்.

செயல் நோக்கம் #1. நம்மை உடைக்கிறப்படியால்  ஜெபத்தில் அதிகமாக தேவனைத் தேட செய்கிறது.
செயல் நோக்கம் #2. நம் விசுவாசத்தின் உண்மைத் தன்மையை நிரூபிக்கிறது.
செயல் நோக்கம் #3. உபத்திரவப்படுத்தும் மற்றவர்களிடம் அதிக இரக்கத்துடன் இருக்க நமக்கு உதவுகிறது.
செயல் நோக்கம் #4. விசுவாசத்தில் முதிர்ச்சியடைய நமக்கு உதவுகிறது
செயல் நோக்கம் #5. தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய  நமக்கு உதவுகிறது.
செயல் நோக்கம் #6. நமது எதிர்கால மகிமைப்படுத்துதலின் நம்பிக்கையை பலப்படுத்துகிறது. 

இதனுடன் மேலும் பல குறிப்புகள் சேர்க்கப்படக்கூடும். ஆனால், இவை ஒரு நல்ல தொடக்கத்திற்கு போதுமானது. நாம் உபத்திவங்களைச் சந்திக்கும் போது இவற்றைச் சிந்தித்துப் பொறுமையுடன் சகிக்க தேவனிடம் மன்றாடக்கடவோம்பொறுமையுடன் சகிப்பவர்களுக்கு மட்டுமே இந்த நன்மைகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்குறுக்குவழிகளில் சென்று உபத்திரவத்திலிருந்து தப்பிக்க நினைக்கிறவர்களுக்கும், தேவன் மீதும், மக்கள் மீதும் வெறுப்புணர்வையும், பாவ மனப்பான்மையையும் கொண்டவர்களுக்கும் அல்ல.

வேதாகம முறையில் துன்பங்களைச் சகித்துக்கொள்ள பிரபல போதகர் ஜே.சி. ரைலின் ஊக்கமளிக்கும் வார்த்தைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

நாம் பொறுமையுடன் ஓடாவிட்டால், ஒருபோதும் இலக்கை அடைய முடியாது. நம்மால் புரிந்துகொள்ள முடியாத பல விஷயங்கள் நடக்கலாம், மாம்சம் வேறுவிதமாக விரும்பலாம். ஆனால், நாம் இறுதிவரை சகித்துக்கொண்டால், அனைத்தும் தெளிவாகப் புரியும், தேவனின் திட்டங்கள் சிறப்பாக நிரூபிக்கப்படும். பூமியிலேயே உங்கள் வெகுமதியைப் பெற வேண்டும்  என்று எண்ணாதிருங்கள், பின்வாங்காதீர்கள். ஏனென்றால், உங்களுக்கான நன்மையான விஷயங்கள் அனைத்தும் இன்னும் வரவில்லை.

இன்று சிலுவை, நாளை கிரீடம்; இன்று உழைப்பு, நாளை கூலி; இன்று விதைப்பு, நாளை அறுவடை; இன்று போர்நாளை ஓய்வு; இன்று அழுகை, நாளை மகிழ்ச்சி; நாளையுடன் ஒப்பிடும்போது தற்காலம் ஒன்றும் பெரிதல்லஇன்று எழுபது ஆண்டுகள், நாளை நித்தியம். எனவே, பொறுமையாகவும் இறுதிவரை நம்பிக்கையுடனும் இருங்கள்.

எபிரெயர் 12:1-3 ஆகிய வசனங்கள் இவ்வாறு கூறுகிறதுஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.” 

தொடர்ந்து முன்னேறக்கடவோம். உபத்திரவங்களுக்கு விலகியோடாத கடந்த கால பிரபலமான விசுவாசிகளிடமிருந்து ஊக்கமளிக்கும் சில மேற்கோள்களுடன் இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்தேவனை மகிமைப்படுத்தும் விதத்தில் உபத்திரவங்களைச் சகித்துக்கொள்ள நாம் கற்றுக்கொள்ளக்கடவோம்.

“தேவன் நம்மை கற்கள் நிறைந்த பாதையில் அனுப்பினால், அவர் வலுவான காலணிகளை அளிப்பார்.”

“உபத்திரவங்களில் வாழ்ந்து வெற்றிபெறாத எந்த விசுவாசமும் மிகவும் மதிப்புமிக்கது அல்ல. சோதிக்கப்பட்ட விசுவாசமானது சிறந்த அனுபவத்தைத் தருகிறது. நீங்கள் சோதனைகளை கடக்க வேண்டிய அவசியமில்லையென்றால் உங்கள் சொந்த பலவீனத்தை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். தேவனின் பலத்தை நீங்கள் ஒருபோதும் நம்பியிருக்கமாட்டீர்கள், உபத்திரவங்களைக் கடந்து செல்ல அவருடைய பலம் தேவைப்பட்டிருக்காது.”

“இயேசுகிறிஸ்து மட்டுமே உபத்திரவத்தில் உங்களோடு இருக்கிறார் என்று நீங்கள் அறியும் வரை,  அவர் உங்களுக்குத் தேவை என்று நீங்கள் ஒருபோதும் அறிய மாட்டீர்கள்.”

 

Category
Subscribe
Notify of
guest
0 கருத்துக்கள்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments