மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு—பகுதி 8 ஜெபத்தில் தரித்திருத்தல்

(English version: “The Transformed Life – Faithful Praying”)
ஜெபமானது மறுரூபமாக்கப்பட்ட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். ரோமர் 12 ஆம் அதிகாரம் மறுரூபமாக்கப்பட்ட வாழ்க்கையை குறித்து விவரிப்பதில் ஆச்சரியமில்லை, இங்கு விசுவாசிகளை “ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருக்குமாறு” பவுல் அழைப்பு விடுக்கிறார் [ரோமர் 12:12]. ஜெபத்தில் ஆழ்ந்து ஈடுபடும் வாழ்க்கைக்கான ஓர்அழைப்பு இது. இந்த அழைப்பு நமக்கு ஆச்சரியமாக இருக்கக்கூடாது. ஏனெனில், கிறிஸ்துவைப் போல முழுமையாக மாறுவதே நமது மறுரூபமாக்கப்படுதலின் இறுதி இலக்கு என்பதால், கிறிஸ்து ஜெபத்தால் அடையாளப்பட்டிருப்பதைப் போல நாமும் ஜெபத்தால் அடையாளப்படுத்தப்பட வேண்டும்.
ஜெபம் செய்ய வேண்டிய அவசியமில்லாத ஒருவர் இருப்பாரென்றால் அது இயேசுகிறிஸ்து மட்டும் தான். ஆனாலும், இடைவிடாத ஜெபத்தை முன்மாதிரியாகக் கொண்ட ஒருவர் அவர்தான் என்பதை சுவிசேஷ நூல்களின் பதிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. ஜெபத்தின் பின்னணியில் இயேசு ஊழியம் செய்தார். அவர் ஊழியக்களத்தில் 3+ ஆண்டுகள் மட்டுமே இருந்தபோதிலும், ஜெபத்தில் நேரத்தை செலவிட அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. கெத்செமனேவில் கைது செய்யப்படுவதற்கு முன்பும், சிலுவையில் அறையப்பட்டப்போதும் அவர் ஜெபித்தார். கடைசி மூச்சு வரை ஜெபம் செய்தார். இயேசுகிறிஸ்துவைப் பொறுத்தவரை, ஜெபம் செய்யாமல் எந்த ஒரு நாளையும் தொடங்கியதுமில்லை, முடித்ததுமில்லை.
அவரை உன்னிப்பாகக் கவனித்த அவருடைய சீஷர்கள், ஜெபிக்கக் கற்றுக்கொடுக்கும்படி கேட்டது மட்டுமல்லாமல், பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்ட பிறகு தங்கள் சொந்த வாழ்க்கையில் ஜெபத்தை முதன்மையாகப் பின்பற்றியதில் ஆச்சரியமில்லை. அப்போஸ்தலர் 2:42 ல் காணப்படுவது போல், ஜெபத்திற்கான அர்ப்பணிப்பே ஆரம்பகால திருச்சபையை அடையாளப்படுத்தியது. சபை தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது, அப்போஸ்தலர்கள் ஜெபிப்பதற்கும், பிரசங்கிப்பதற்குமான தங்கள் முதன்மை அழைப்பிலிருந்து விலகவில்லை [அப்போஸ்தலர் 6:4].
ஆரம்பகால திருச்சபை எவ்வாறு ஜெப வாழ்விற்கு தன்னை அர்ப்பணித்திருந்தது என்பதை அப்போஸ்தலருடைய நடபடிகள் மீண்டும் மீண்டும் காட்டுகிறது. உண்மையில், ஒருவர் அப்போஸ்தலருடைய நடபடிகளுக்குள் சென்றால், ஜெபத்தைப் பற்றிய குறைந்தபட்சம் 20 குறிப்புகளைக் காணக்கூடும் [அப்போஸ்தலர் 1:13-14, 1:24-25, 2:42, 3:1, 4:24, 29, 31, 6 :3-4, 6, 7:60, 8:15-17, 9:11, 40, 10:2, 9, 12:5, 12, 13:3, 14:23, 16:25, 20:36, 21:5, 27:35-36, 28:8]. நாம் பார்க்கிறபடி, ஆதி திருச்சபை விசுவாசிகளுக்கு ஜெபம் மிகவும் முக்கியமானதாக இருந்தது. எனவே, ஆதித்திருச்சபை வல்லமை நிறைந்ததாக காணப்பட்டதில் ஆச்சரியமில்லை!
ரோம நிருபத்தின் இந்த வசனத்தைப் போலவே, பவுல் தனது மற்ற நிருபங்களிலும் ஜெபத்தில் தரித்திருப்பதின் அவசியத்தை வலியுறுத்துகிறார். இங்கே சில உதாரணங்கள்:
எபேசியர் 6: 18 “எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனவுறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.”
பிலிப்பியர் 4:6 “நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.”
கொலோசெயர் 4:2 “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.”
1தெசலோனிக்கேயர் 5:16 “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.”
ஜெபத்தில் தரித்திருப்பவராக இயேசுகிறிஸ்து அடையாளப்படுத்தப்படுவதால், நாமும் ஜெபத்தில் தரித்திருக்க வேண்டும்! ஆதித்திருச்சபை அவருடைய முறையைப் பின்பற்றியது. எனவே, நாமும் பின்பற்ற வேண்டும்! ஒரு ஜெபிக்கும் எஜமானர் ஜெபம் செய்யும் ஊழியர்களைக் கொண்டிருப்பது தான் பொருத்தமானது. ஆனால், நம்முடைய மாம்ச இயல்பால், வாழ்க்கையின் பிரச்சினைகளைத் தீர்க்க முதலில் தேவனிடம் செல்லாமல், நம்முடைய பலத்தை நம்பியிருக்கிறோம்.
தனது புற்றுநோய்க்காக பல்வேறு சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்ட மனிதனைப் பற்றிய கதை இது. பலகட்ட சிகிச்சைகளுக்கு பின்னர் இறுதியாக அவனது மருத்துவரால், “நாங்கள் எல்லா சிகிச்சை முறைகளையும் கையாண்டு விட்டோம், ஒருவேளை நீங்கள் ஜெபிக்க வேண்டிய நேரம் இது” என்று கூறினார். அதற்கு அந்த மனிதன், “எனவே, ஜெபமானது இறுதி வாய்ப்பாகத்தான் வந்துவிட்டது!” என்று பதிலளித்தான்.
ஜெபம் என்பது இறுதி ஆயுதமாக அமைந்துவிடுகிறது! “மற்ற வாய்ப்புகள் அனைத்தும் தோல்வியுறுகையில், ஜெபம் செய்து முயற்சிக்கிறோம்.” என்பது தான் உலகின் மனநிலையாகும்! இது வேதம் கற்பிப்பதற்கு எவ்வளவு நேர்மாறானதாக இருக்கிறது! ஜெபமானது நமது முதலாம், இரண்டாம், மற்றும் இறுதி விருப்பத்தேர்வாக இருக்க வேண்டும். நாம் செய்யும் மற்ற அனைத்து நடவடிக்கைகளும் ஜெபத்தின் வளிமண்டலத்திலிருந்து பாய வேண்டும். நாம் ஜெபிக்காதபோது, தேவ சார்புநிலையை விட சுய-சார்புநிலையை அறிவிக்கிறோம். இதை நாம் வார்த்தைகளின் மூலம் சொல்லாவிட்டாலும், நம் செயல்கள் வெளிப்படையாக அறிவிக்கின்றன.
நமது ஊழியக்களத்திலும் ஜெபமானது மேலாதிக்க செயலாக இருக்க வேண்டும். ஜெபமில்லாமல் ஊழியம் இல்லை. நாம் எல்லா ஊழியத்தையும் ஜெபத்தின் பின்னணியில் செய்ய வேண்டும்! ஜெபத்தில் செலவழித்த நேரத்திலிருந்து ஊழியமானது வெளிப்பட வேண்டும். இயேசு 12 சீஷர்களைத் தேர்ந்தெடுத்தபோது, முதலில் “அவருடன் இருக்க” அவர்களைத் தேர்ந்தெடுத்தார், பின்னர் “பிரசங்கம் செய்ய” அனுப்பினார் [மாற்கு 3:14]. முதலில் அவருடன் இருங்கள், பிறகு ஊழியம் செய்ய வெளியே செல்லுங்கள்!
இயேசுகிறிஸ்து பிதாவுடன் நேரத்தை செலவிட்டார், பின்னர் ஊழியம் செய்தார். அப்போஸ்தலர்கள் இயேசுகிறிஸ்துவோடு நேரம் செலவழித்து பின்னர் ஊழியம் செய்தார்கள். முதல் மிஷனரி பயணம் ஜெபத்தோடும், உபவாசத்தின் பின்னணியிலும் தொடங்கப்பட்டது [அப்போஸ்தலர் 13:1-3]. எனவே, நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஜெபமானது நமது மற்ற எல்லா செயல்களுக்கும் எரிபொருளாக இருக்க வேண்டும். விசுவாசிகள் என்று சொல்லிக்கொள்ளும் பலர் உபத்திரவத்தின்போது மட்டுமே ஜெபம் செய்கிறார்கள். ஆனால், விசுவாசிகளல்லாதவர்களும் அப்படித்தான் செய்கிறார்கள். இருப்பினும், விசுவாசிகளாகிய நாம் ஊக்கத்துடன் ஜெபிக்க சோதனைகள் வருகிற வரை காத்திருக்கக்கூடாது. நாம் எப்போதும் விடாமுயற்சியுடன் ஜெபிக்க வேண்டும்.
ஏமி கார்மைக்கேலின் வார்த்தைகள் இந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றன:
போர்க் காயங்களிலிருந்து பாதுகாப்பு, அழிவிலிருந்து விடுதலை, வலியிலிருந்து ஓய்வு ஆகியவற்றை பெறுதல் ஆகியவற்றைக் காட்டிலும் ஆவிக்குரிய வெற்றிக்காக நாம் அதிகம் ஜெபிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த வெற்றியானது விடுதலை அல்ல; ஆனால் பாடுகளின் மேல் வெற்றி, அது தற்காலிகமானதல்ல; ஆனால் நிரந்தரமானது.
“விசுவாசிகள் முறுமுறுப்பதில் எவ்வளவு நேரம் செலவிட்டார்களோ, அவ்வளவு நேரம் ஜெபித்திருந்தால் முறுமுறுக்க வேண்டிய அவசியமேற்பட்டிருக்காது” என்று யாரோ ஒருவர் கூறியிருக்கிறார்.
ஆகையால், ஜெபத்தில் தரித்திருங்கள் என்ற இந்தக் கட்டளையை எப்படி நடைமுறைக்குப்படுத்துக்கூடும்? ஜெபத்தில் தரித்திருப்பதற்கு 10 நினைவூட்டல்கள் அல்லது 10 உதவிக்குறிப்புகளை வழங்குவதன் மூலம் உங்களுக்கு உதவ விரும்புகிறேன்.
1. அமைதியான இடத்திற்கு செல்லுங்கள்.
நம் வீடுகளிலோ, வெளியிலோ கவனச்சிதறல் இல்லாமல் ஜெபிக்க ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். அதுவே நமது ஜெபக்கூடமாக இருக்கட்டும்.
2. குறிப்பிட்ட நேரத்தை வைத்துக்கொள்ளுங்கள்.
தனிப்பட்ட முறையில் தேவனுடன் குறிப்பிட்ட நேரத்தைச் செலவிடுவதற்கும்,, அவரை சந்திப்பதற்கும் நாம் நம்மை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். அந்த மேன்மையான நேரத்தை எந்த விலை கொடுத்தாகிலும் காக்க வேண்டும். குறிப்பிட்ட நேரங்களில் ஜெபிப்பது மற்ற நேரங்களிலும் அதிகமாக ஜெபிக்க உதவும்.
3. ஜெபிக்கும்போது வேதத்தை பயன்படுத்துங்கள்.
வேதத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நம்முடைய ஜெபங்கள் தேவனுடைய வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி அவருடைய சித்தத்திற்கு இசைவாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. வேதவசனங்களை ஜெபமாக மாற்ற நாம் கற்றுக்கொள்ள வேண்டும். வேதவசனங்களை சத்தமாக சொல்லி ஜெபிக்க வேண்டும். இது நம் மனதை ஒருமுகப்படுத்த உதவுகிறது!
4. தாழ்மையுடன் ஜெபியுங்கள்.
தேவன் படைத்தவர்; நாம் படைக்கப்பட்டவர்கள். நமக்கும் தேவனுக்கும் ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. இந்த யதார்த்தமானது மனத்தாழ்மையுடன் அவரை அணுக உதவும். நாம் அவருடைய பிள்ளைகளாக இருந்தாலும், நாம் இன்னும் மனத்தாழ்மையுடன் செல்ல வேண்டும், அதில் அறிக்கையிடுதல், பாவத்திலிருந்து மனந்திரும்புதல் ஆகியவை அடங்கும். நம்முடைய ஜெபங்கள், “என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது!” என்று கூறும் தாழ்மையான இருதயத்திலிருந்து வர வேண்டும் [லூக்கா 22:42].
5. நேர்மையாக ஜெபியுங்கள்.
நாம் தேவனுக்கு முன்பாக நேர்மையாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். எனவே, நம்முடைய அழுகையைக் கேட்கிறவரிடத்தில் பயபக்தியோடும் தடையின்றியும் நம் இருதயங்களை வெளிப்படுத்த தயங்கக்கூடாது.
6. உங்கள் மன்றாட்டை குறிப்பிட்டுக் கூறுங்கள்.
ஆம், நம்முடைய தேவைகளை நாம் தேவனிடம் சொல்வதற்கு முன்பே அவர் அறிந்திருக்கிறார். ஆனால், குறிப்பிட்டு கேட்பதன் மூலம், நாம் அவரைச் சார்ந்திருப்பதைக் காட்டுகிறோம். மேலும் நமது நோக்கங்கள் சுத்தமாக இருக்கிறதா என்பதைப் பார்க்கவும் உதவுகிறது.
7. கவனச்சிதறல்களை அகற்றுங்கள்.
ஜெபிக்கும் போது நாம் நமது ஊடகக்கருவிகளை ஒதுக்கி வைக்க வேண்டும். ஃபோன் அல்லது டேப்லெட்டிலிருந்து ஒரு அறிவிப்பு சத்தம் நம்மை விரைவாக திசைதிருப்பலாம். ஒரு சாதனத்தை அருகில் வைத்திருப்பதும் சில சமயங்களில் கூட அடிக்கடி பார்க்க நம்மைத் தூண்டும், இதனால் ஜெபம் செய்வதிலிருந்து திசைதிருப்பப்படக்கூடும். இயேசுகிறிஸ்து நம் முழு கவனத்திற்கும் தகுதியானவர். ஜெபம் செய்யும் போது நம் மனைவி அல்லது குழந்தைகளுடன் கூட பேசக்கூடாது. இது கவனத்தை மிகவும் சிதறடிக்கும். அதனால்தான் உங்களுக்கு அமைதியான இடம் தேவையாக இருக்கிறது.
8. மற்றவர்களுடன் சேர்ந்து ஜெபியுங்கள்.
தனிப்பட்ட ஜெபத்துடன், நம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக விசுவாசிகளுடன் இணைந்து ஜெபிக்க வேண்டும். சபையின் ஜெபக்கூட்டங்களில் நாம் கலந்து கொள்ள வேண்டும். ஒன்றாக ஜெபிப்பதன் மூலம், நாம் மற்றவர்களை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், இன்னும் நாம் ஜெபத்தில் தரித்திருக்க ஊக்குவிக்கப்படுகிறோம்.
9. மற்றவர்களுக்காக ஜெபியுங்கள்.
பரிந்துபேசும் ஜெபம் என்பது நமது ஜெபத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கான நமது ஜெபங்கள் அவர்களின் சரீர, பொருளாதார தேவைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்; அவர்களின் ஆவிக்குரிய தேவைகள் அதில் ஆதிக்கம் செலுத்த வேண்டும். இழந்துபோனவர்களின் இரட்சிப்புக்காகவும், சக விசுவாசிகள் ஆவிக்குரிய பலன்களை அதிகமாக பெறுவதற்காகவும் ஜெபிப்பது இதில் அடங்கும்.
10. தேவனின் கரத்தைத் தேடுவதற்கு மட்டுமல்ல, அவருடைய முகத்தைத் தேடுவதற்கும் ஜெபியுங்கள்.
பெரும்பாலும் நம்முடைய ஜெபங்கள் தேவனின் கரத்திலிருந்து நாம் எதைப் பெறமுடியும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. அவருடைய முகத்தை நாம் அதிகம் தேட கற்றுக்கொள்ள வேண்டும். அவருடன் இன்னும் நெருக்கமாக இருக்கவும், அவருடைய பிரசன்னத்தை அனுபவிக்கவும் நாம் முயற்சி செய்ய வேண்டும். 1 நாளாகமம் 16:11வசனம் இவ்வாறு கூறுகிறது, “கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.” சங்கீதம் 27:8-ன்படி, தாவீதின் தீர்மானம் இதுவாகத்தான் இருந்தது: “என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று.”
இந்தப்பட்டியலில் நாம் மேலும் பல குறிப்புகளை சேர்க்கலாம் [விசுவாசத்துடன் ஜெபித்தல், விடாமுயற்சியுடன் ஜெபித்தல் போன்றவை]. ஆனால், இந்த சில குறிப்புகள் இன்னும் ஜெபத்தில் தரித்திருக்க நம்மை ஊக்குவிக்க வேண்டும்.
மத்தேயு 26:40 ல் “நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா?” என்று இயேசு கூறினார். நம்மில் எத்தனை பேர் தினமும் அந்த ஒரு மணி நேரத்தை கொடுக்கிறோம்? சராசரி விசுவாசிகளால் அதிகபட்சம் 10-15 நிமிடங்கள் கொடுக்கப்படுகிறது. நாம் அவருக்குக் குறைந்த நேரத்தைக் கொடுக்கும்போது, தேவன் நாம் சொல்வதைக் கேட்பார் என்று நாம் எப்படி எதிர்பார்க்கலாம்? ஒரு மணிநேரம் என்பது 24 மணிநேர நாளின் 4% ஆகும். அது 5%க்கும் குறைவு! நாம் டிவி மற்றும் சமூக ஊடகங்களை பார்ப்பதில் பல அத்தியாவசியமற்ற விஷயங்களுக்கு அதிக நேரம் கொடுக்கிறோம். சிந்தியுங்கள்! பிரச்சனை நேரமின்மை அல்ல, ஜெபிக்க வேண்டிய அவசியத்தின் தீவிரத்தை புரிந்து கொள்ளாதது ஜெபத்தில் தரித்திருப்பதைத் தடுக்கிறது.
ஜெபிக்கும் ஒரு எஜமானருக்கு ஜெபிக்கும் வேலைக்காரர்கள் இருக்க வேண்டும்! எனவே, ஜெபத்தில் தரித்திருக்கும் வாழ்க்கைக்கு நம்மை ஒப்புக் கொடுப்போம், இதனால், கிறிஸ்துவின் சாயலாக இன்னும் அதிகமாக மாற்றப்படுவோம்!