மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு—பகுதி 9 தேவையுள்ள மற்றவர்களுடன் பகிர்தல்

(English version: “The Transformed Life – Sharing With Others In Need”)
ரோமர் 12:13ம் வசனத்தின் முதல் பகுதி, “பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்” என்று நமக்கு அழைப்புவிடுக்கிறது. “உதவிசெய்யுங்கள்” என்று கூறப்பட்டிருக்கும் வாா்த்தையானது “Share,” “பகிர்தல்” என்று பொருள்படும் கிரேக்க வார்த்தையாகிய “Koinonia,” “கொயினோனியா” என்ற வார்த்தையிலிருந்து வந்தது, இதிலிருந்து நாம் “ஐக்கியம்” என்ற வார்த்தையைப் பெறுகிறோம். இது கிறிஸ்தவ வட்டாரங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தை. புதிய ஏற்பாடு இந்த வார்த்தையை சூழலைப் பொறுத்து பங்கேற்பு, கூட்டாண்மை, பகிர்வு மற்றும் ஐக்கியம் என்று பல்வேறு வழிகளில் மொழிபெயர்க்கிறது. ஒரு பொதுவான வாழ்க்கை மற்றும் ஐக்கியமாக இருப்பதுதான் இதன் அடிப்படை யோசனை.
தேவனுடனான நமது ஐக்கியமே மற்ற அனைத்து ஐக்கியத்திற்கும் அடித்தளம் என்பதை வேதம் நமக்கு நினைவூட்டுகிறது. 1 கொரிந்தியர் 1:9 ம் வசனம், “தேவன் உண்மையுள்ளவர், அவர் தம்முடைய குமாரனாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு ஐக்கியப்பட உங்களை அழைத்தார்” என கூறுகிறது. மேலும் குமாரனாகிய கிறிஸ்துவின் மூலம் தேவனுடன் ஐக்கியம் உள்ளவர்கள் தானாகவே மற்ற விசுவாசிகளுடன் ஐக்கியம் கொள்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் அனைவரும் ஒரே சரீரத்தின் அவயவங்கள், அதில் கிறிஸ்து தலையாக இருக்கிறார். இந்த ஐக்கியத்தின் முக்கிய அம்சமானது குறைவிலுள்ள விசுவாசிகளுக்கு பொருள் சார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஓர் அழைப்பாகும். ரோமர் 12:13-ன் கருத்து இதுதான்.
விசுவாசிகள் தங்கள் பொருள் வளங்களை குறைச்சலிலுள்ள மற்ற விசுவாசிகளுடன் பகிர்ந்து கொள்ள அழைக்கும் புதிய ஏற்பாட்டின் வேறு சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
1 தீமோத்தேயு 6:18 “நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்.”
எபிரெயர் 13:16 “அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.”
எனவே, குறைவிலுள்ளவர்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பது ஒரு யோசனையாக கொடுக்கப்படாமல், அது ஒரு வெளிப்படையான கட்டளையாக விசுவாசிகளுக்கு கொடுக்கப்பட்டிருப்பதை காணக்கூடும். நாம் அனைவரும் ஒரு சரீரத்தின் அவயவங்கள். ஆகவே, நாம் ஒருவருக்கொருவர் அக்கறையுடனும், கரிசனத்துடனும் விசுவாச வாழ்க்கை வாழ வேண்டும்.
இறையியல் அறிஞராகிய ஜான் முர்ரே என்பவர் “நாம் பரிசுத்தவான்களின் தேவைகளுடன் நம்மை அடையாளப்படுத்தி, அவர்களை நமக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். அதுவே ஆரம்பகால திருச்சபையின் அணுகுமுறையாக இருந்தென்று” கூறினார். அப்போஸ்தலர் 2:44-45 ஆகிய வசனங்கள் இவ்வாறு கூறுகிறது, “விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள்.” எல்லா விசுவாசிகளும் ஒன்றாக இருந்தார்கள், எல்லாவற்றையும் பொதுவாகக் கொண்டிருந்தார்கள். இது பொதுவுடமை [கம்யூனிசம்] அல்ல. ஆனால், அடிப்படை கிறிஸ்தவம்! பின்னர், அப்போஸ்தலர் 4:32-35 ஆகிய வசனங்கள் இது விசுவாசிகளின் தொடர்ச்சியான அணுகுமுறையாக இருந்ததென்று விவரிக்கிறது.
எனவே, அந்த எண்ணங்களுடன், 2 கேள்விகளைக் கேட்டு பதிலளிப்பதன் மூலம் இந்த கட்டளையை நடைமுறையில் பயன்படுத்துவோம்.
கேள்வி #1. நாம் கொடுக்க வேண்டிய மனிதர்கள் யார்?
அவிசுவாசிகளுக்கு உதவ வேண்டுமென்று விசுவாசிகளுக்கு அறிவுறுத்தும் பல வசனங்கள் வேதத்தில் இருந்தாலும், இங்கே, நமக்கு தெரிந்த, தெரியாத விசுவாசிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்பதே கட்டளை. வேதத்தில் இவை இரண்டிற்கும் உதாரணங்கள் உண்டு. அப்போஸ்தலர் 2:44-45 ஆகிய வசனங்கள் விசுவாசிகள் தங்களுக்குத் தெரிந்த மற்ற விசுவாசிகளுக்குக் கொடுப்பதைக் குறிக்கிறது. ரோமர் 15:26-27 ஆகிய வசனங்கள், கொரிந்து, தெசலோனிக்கா மற்றும் பிலிப்பியில் உள்ள சபைகளைச் சேர்ந்த விசுவாசிகள், எருசலேமில் உள்ள தங்களுக்குத் தெரியாத மற்ற விசுவாசிகளுக்குக் கொடுத்ததைக் குறிக்கிறது.
எனவே, குறைவிலுள்ள தெரிந்த, தெரியாத விசுவாசிகளுக்கு நாம் கொடுக்க வேண்டும்.
கேள்வி #2. நாம் கொடுப்பதை அடையாளப்படுத்த வேண்டிய அணுகுமுறைகள் எவை?
கீழ்காணும் 3 அணுகுமுறைகள் நம்முடைய கொடுத்தலை அடையாளப்படுத்த வேண்டும்.
#1. நாம் ஆர்வத்துடன் கொடுக்க வேண்டும். மக்கெதோனிய விசுவாசிகளின் கொடுக்கும் குணத்தை விவரிக்கையில், பவுல் இவ்வாறு கூறுகிறார், “மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு, நான் சாட்சியாயிருக்கிறேன். தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின்பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள்” [2 கொரிந்தியர் 8:3-4]. மக்கெதோனிய விசுவாசிகளுக்கு கொடுத்தலைப் பற்றிய உந்துதல் அளவுக்கு அதிகமாக இருந்தது, அவர்கள் மற்ற விசுவாசிகளின் தேவையை அறிந்து, கொடுக்க ஆர்வமாக இருந்தனர். பரிசுத்த ஆவியின் கீழ் வாழும் விசுவாசிகள் கொடுக்க விரும்புவார்கள், ஒரு தேவையைக் கேட்டவுடன் அவர்களின் இருதயங்களும், பணப்பைகளும் உடனடியாகத் திறந்துக்கொள்ளும்! கொடுக்க வேண்டும் என்று எவரும் வற்புறுத்த தேவையில்லை.
#2. தாராள மனப்பான்மையுடன் கொடுக்க வேண்டும். நாம் கொடுக்கும்போது, வெறுப்பு மனப்பான்மையுடன் கொடுக்காமல், மகிழ்ச்சியான மற்றும் தாராள மனதுடன் கொடுக்க வேண்டும். பணம் கொடுக்கும் இயந்திரமாக நினைத்துக்கொண்டும், கொடுத்தால் பலமடங்கு திரும்ப பெறலாம் என்ற மனப்பான்மையுடனும் தேவனுக்கு லஞ்சம் கொடுக்கக்கூடாது. மாறாக, எதையும் எதிர்பார்க்காமல் தாராளமாகக் கொடுக்க வேண்டும்.
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலர் பிரவேசிக்கத் தயாராக இருந்தபோது, கொடுப்பதைக் குறித்து மோசே இவ்வாறு கூறுகிறார்: “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரரில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும், 8அவனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக. 10அவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதினிமித்தமாக உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார். 11தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்” [உபாகமம் 15:7-8, 10-11].
தாராளமாகக் கொடுக்கும்படி இயேசுகிறிஸ்து கட்டளையிட்டிருக்கிறார் [லூக்கா 6:38]. தாராளமாக கொடுப்பது விசுவாசத்தின் செயல். எனது வளங்களைக் கொண்டு மற்றவர்களின் தேவைகளை நான் பூர்த்தி செய்தால், தேவன் என் தேவைகளை கவனித்துக்கொள்வார் என்ற அடிப்படையில் விசுவாசித்து செயல்படுவதாகும்.
#3. தேவனின் மகிமையை இலக்காகக் கொண்டு நாம் கொடுக்க வேண்டும். இறுதியில் மற்றவர்களுக்குக் கொடுப்பது, நாம் சுய திருப்தியாக உணர வேண்டும் என்பதற்காகவோ; மற்றவர்கள் பார்க்கும்படியாகவோ [சில சமயங்களில் இது தவிர்க்க முடியாதது]; மற்றவர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காகவோ அல்ல [அது நடக்கும்]. ஆனால், இலக்கு எப்போதும் தேவனின் மகிமைக்காக இருக்க வேண்டும்.
2 கொரிந்தியர் 9:12-15ல் பவுல் இவ்வாறு எழுதுகிறார்: “இந்தத் தர்மசகாயமாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரணபலனுள்ளதாயும் இருக்கும். அவர்கள் இந்தத் தர்மசகாயத்தினாலாகிய நன்மையை அநுபவித்து, நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கீழ்ப்படிதலோடே அறிக்கையிட்டிருக்கிறதினிமித்தமும், தங்களுக்கும் மற்ற அனைவருக்கும் நீங்கள் உதாரத்துவமாய்த் தர்மஞ்செய்கிறதினிமித்தமும், அவர்கள் தேவனை மகிமைப்படுத்தி; உங்களுக்காக வேண்டுதல்செய்து, தேவன் உங்களுக்கு அளித்த மிகவும் விசேஷித்த கிருபையினிமித்தம் உங்கள்மேல் வாஞ்சையாயிருக்கிறார்கள். தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்”
தேவன் ஸ்தோத்திரிக்கப்படுவார், [வ. 12]; மகிமைப்படுவார் [வ. 13]. அதுதான் இறுதி இலக்கு. கொடுப்பது உட்பட வாழ்க்கையில் நாம் செய்யும் அனைத்திலும் அவருடைய மகிமையே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
எனவே, ஆர்வம், தாராள மனப்பான்மை மற்றும் தேவனின் மகிமை ஆகிய 3 மனப்பான்மைகள் நாம் கொடுப்பதை அடையாளப்படுத்த வேண்டும்.
சரியான மனப்பான்மையின் திறவுகோல் இதுதான்: முதலில் நாம் கர்த்தருக்கு நம்மைக் கொடுக்க வேண்டும். 2 கொரிந்தியர் 8:5 ம் வசனத்தை அடிப்படையாகக் கொண்டு நான் இதைச் சொல்கிறேன், “மேலும் நாங்கள் நினைத்தபடிமாத்திரம் கொடாமல், தேவனுடைய சித்தத்தினாலே முன்பு தங்களைத்தாமே கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள்.” தேவனிடம் நாம் எவ்வளவு அதிகமாக சரணடைந்து ஒப்புக்கொடுக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது சரியான இந்த அணுகுமுறையைப் பெறுவோம். நமக்காக மரிப்பதற்குத் தம்முடைய குமாரனைக் கொடுத்த தேவனை எவ்வளவு தாராளமானவராக பார்க்கிறோமோ, நமக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்த இரட்சகரிடம் நாம் எவ்வளவு அன்பு செலுத்துகிறோமோ, அந்தளவுக்கு மற்றவர்களுடன் நமது வளங்களை பகிர்ந்து சரியான வளர்ச்சியை அனுபவிப்போம்.
கொடுக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எந்த ஒரு நல்ல செயலிலும் துஷ்பிரயோகம் வர கூடிய வாய்ப்புகளுண்டு அதை போலவே, கொடுப்பதிலும் துஷ்பிரயோகம் ஏற்படுவது எளிது. நான் சொல்வது என்னவென்றால், விசுவாசிகள் என்று கூறும் சிலர் மற்றவர்களை தங்களுக்கு சாதாகமாக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இதற்கு ஒர் உதாரணமாக 2தெசலோனிக்கேயர் 3:10 ல் இவ்வாறு வாசிக்கிறோம், “ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.” பிரச்சினை தெசலோனிக்கேயிலுள்ள சில வேலை செய்ய முடியாத, வேலை செய்ய விரும்பாத சோம்பேறிகள் அல்ல! வளங்களை தங்களிடம் பகிர்ந்து கொண்ட மற்ற விசுவாசிகளை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். எனவே, பவுல் இந்த சோம்பேறி விசுவாசிகளை எச்சரித்தார், மேலும் அப்படிப்பட்ட விசுவாசிகளை ஆதரிக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார்.
அதே போல நாமும் கவனமாக இருக்க வேண்டும். இந்த வார்த்தைகளுடன் இதையும் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன்: ஒரு சில கசப்பான அனுபவங்கள் இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிவதிலிருந்து நம்மை தடுக்கக்கூடாது. இந்தக் கட்டளையை உண்மையுடன் கடைப்பிடிக்க உதவும்படி நாம் தேவனிடம் ஜெபிக்கவேண்டும்.
தேவையிலுள்ள விசுவாசிகளுக்கு உதவுவது ஒரு முறை மட்டுமே அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செய்யக்கூடியதல்ல. நம்மால் முடிந்தவரை, போராடும் விசுவாசிகளுக்கு உதவ வேண்டும். கலாத்தியர் 6:10 இவ்வாறு கூறுகிறது, “ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.”
நினைவில் கொள்ளுங்கள், நம்மிடம் இல்லாததைக் கொடுக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கவில்லை. நம்மிடம் இருப்பதில் இருந்து மட்டுமே கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார். நமது பொருளாதாரத்தில் எவ்வளவு புத்திசாலித்தனமாக இருக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நம்மால் கொடுக்க முடியும். விசுவாசிகளின் தேவைகளுக்கு கொடுப்பது நமது மாதாந்திர வரவு செலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். அவசரத் தேவை எப்போது வரும் என்று நமக்குத் தெரியாது. தீத்து 3:14 இவ்வாறு கூறுகிறது, “நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக நற்கிரியைகளைச் செய்யப்பழகட்டும்.”
தேவன் நமக்கு செல்வத்தை அதிகமாக கொடுப்பது, நம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்வதற்காக அல்ல. ஆனால், கொடுக்கும் தரத்தை அதிகரிக்கவே கொடுத்திருக்கிறார். தேவையிலுள்ள மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது, நாம் உண்மையாக இரட்சிக்கப்பட்டுள்ளோமா என்பதை ஆராயக்கூடிய ஒரு வழியாகும். யாக்கோபு 1:27 ம் வசனம் இவ்வாறு கூறுகிறது, “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.” அவ்வாறு செய்யத் தவறினால் அது தேவன் நிராகரிக்கும் பக்தியாகும். இயேசு கிறிஸ்து இவ்வாறு கூறுகிறார், “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை” [மத்தேயு 7:21]. மேலும் நாம் மற்றவர்களுடன் தராளமாகப் பகிர்ந்து கொள்வது தேவனுடைய நோக்கங்களில் ஒன்றாகும்.
நாம் கொடுப்பதில் உண்மையுள்ளவர்களாக இருக்கிறோமா? சேமித்து வைப்பதை விட நம்முடைய கொடுத்தல் அதிகமாக இருக்கிறதா? வங்கிக் கணக்குகள் பொய் சொல்லாது. அவைகள் நமது உண்மையான பொக்கிஷம் எங்கே இருக்கிறதென கூறுகின்றன. நம் உண்மையான எஜமானர் யார் என்று அவைகள் தெரிவிக்கின்றன: இயேசுகிறிஸ்துவா அல்லது பணமா? இந்த கேள்வியைக் கேட்டு நம் வாழ்க்கையைத் தொடர்ந்து ஆராய்வது முக்கியம். ஏனென்றால், மறுரூபமாக்கப்பட்ட வாழ்க்கை படிப்படியாக இயேசுகிறிஸ்துவே உண்மையான ஆண்டவர் என்பதற்கான ஆதாரங்களைக் காண்பிக்கும், அது நம் பொருளாரதார பகுதியிலும் சரியாக இருக்க வேண்டும்!
கொடுக்கும்போது நாம் தேவனைப் போன்றவர்கள் என்பதைக் காட்டுகிறோம் என்ற ஒரு முதுமொழியுண்டு. இவைகள் எவ்வளவு உண்மையான வார்த்தைகள்! தேவன் மிகப்பெரும் கொடையாளியாக இருக்கிறார். அவரது பிள்ளைகளும் அதே மனநிலையை பின்பற்ற வேண்டும். “ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே” என்று இந்த கட்டளை உண்மையாக மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்பவர்களுக்கு தேவனிடமிருந்து ஒரு வாக்குறுதியாக கொடுக்கப்பட்டுள்ளது [எபிரெயர் 6:10].